Tuesday, October 11, 2016

உனக்காகவே வாழ்கிறேன் 37 - 38

அத்தியாயம் - 37

விளையாட்டாக ஆரம்பித்து, விபரீதமாகச் சென்றுகொண்டிருக்கும் விஷயத்தை நினைத்து ராஜேஷிற்கு ஆயாசமாக இருந்தது.

சுந்தரமூர்த்தி, அவர்களது திருமணநாளை விமர்சையாக நடத்தவேண்டும் என்றதும், அதை மறுத்துப் பேசினான். ஆனால், அனு அதைத் தவறாகப் புரிந்து கொண்டதும் உடனே அவளுக்குப் புரியவைத்திருக்க வேண்டும்.

என்னவோ வெகுநாள்களுக்குப் பிறகு, அவளைச் சீண்டிப் பார்க்கவேண்டும் என்று நினைத்து, அவளுக்கு ஏட்டிக்குப் போட்டியாகப் பேசியது தான் இத்தனைப் பிரச்சனைக்கும் காரணமாகிப் போனது.

அவள் ஆற்றாமையுடன் பேச ஆரம்பித்ததுமே, அவனும் சற்று அமைதியாகப் பேசியிருக்கலாம். ஆனால், தன்மீது அளவிடமுடியா நேசத்தை அவள் வெளிப்படுத்தினாலும், ஆழ்மனத்தில் தந்தையின் மீதிருக்கும் பாசமே எஞ்சி நிற்பதை அவனால் சமயங்களில் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

எப்போதும் அப்பா, அப்பா என்று உருகிக்கொண்டிருப்பவளைச் சற்று கடுப்படிக்க நினைத்துப் பேசினான். ஆனால், அவனது தன்மானத்தைச் சீண்டிப் பார்க்கும் விஷயங்களையே அவள் தொடர்ந்து பேச உண்மையிலேயே எரிச்சலானான்.

அவளது வாயை அடைக்கவே, ‘நீ சி.இ.ஓவின் மகள் அல்ல; ஒரு ஜி.எம்மின் மனைவி’ என்று காட்டமாகக் கூறினான்.

தான் சொல்வது அபாண்டம் என்பது அவனுக்குமே நன்றாகத் தெரியும். ஏனெனில் அவர்கள் புதுவீட்டிற்கு வந்த அன்று இரவு அவளிடம் பேசியதெல்லாம், இப்போதும் பசுமரத்தாணி போல நினைவில் நின்றது.

‘எனக்குத் தன்மானமும், சுயகௌரவமும் ரொம்ப முக்கியம். யாருக்காகவும் அதில் காம்ப்ரமைஸ் செய்துக்கமாட்டேன். அதேபோல என்னோட மனைவிக்கும் அதில் சரிபாதி பங்கு இருக்கு.

மாமா இந்த வீட்டை நம்ம ரெண்டு பேர் பேரிலும் எழுதிவைத்திருந்தாலும், இது உன்னுடைய பிறந்தவீட்டு சீதனம். இதை நான் முழுமனதோடு ஏத்துக்கலைன்னாலும் உனக்காகவும், மாமா மேலிருக்கும் மரியாதைக்காகவும் மறுக்கல.

என்னோட சுயசம்பாத்தியத்தில், என் குடும்பத்தை எந்தக் குறையும் இல்லாம பார்த்துக்க முடியும். எனக்கும் உன்கிட்ட சில எதிர்பார்ப்புகள் இருக்கு அனு! என் மனைவி என்னைக்கும் என்னோட மனைவியா நடந்துக்கணும்.

அதாவது, நீ இனி ராஜலக்‌ஷ்மி குரூப் ஆஃப் கம்பெனீஸோட சி.இ.ஓ பொண்ணா இல்ல… அந்தக் கம்பெனி ஜி.எம்மோட மனைவி. நான் சொல்றது புரியுதா? இந்தக் குடும்பம் நம்ம ரெண்டுபேரோட சம்பளத்தில் மட்டும்தான் நடக்கணும். மாமாகிட்டயிருந்து எதுவும் வரக்கூடாது. நீ வாங்கவும் கூடாது” என்று உறுதியானக் குரலில் சொன்னான்.

இது அனைத்தையும் கேட்டுவிட்டு சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவள், “சரி” என்று சம்மதமும் சொன்னாள்.

முழு நம்பிக்கையின்றிதான் அவனும் இருந்தான். ஆனால், பின்வந்த நாள்களில் அவனது வார்த்தைகளை, அவள் பிறவாமல் செய்தபோது அவனுமே கொஞ்சம் அயர்ந்துதான் போனான்.

எத்தனையோ முறை சுந்தரமூர்த்தி இருவருக்கும் உடைகள் எடுக்க அழைத்தால், கல்யாணத்துக்கு எடுத்ததே இன்னும் நிறைய உடுத்தாமல் இருக்கு டாட்!” என்று அவரது மனம்கோணாமல் சொல்லுவாள்.

அவருமே அதை இயல்பாக எடுத்துக்கொண்டார்.

ஒருநாள் டைமண்ட் செட் ஒன்றிற்கு ஆர்டர் கொடுத்திருப்பதாக அவர் சொல்ல, “இருக்கறதையே போடாம வச்சிருக்கேன் டாட்!” என்று சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டாள்.

எப்போதும் போலச் சுந்தரமூர்த்தி விட்டுவிட்டாலும், ஏதோ விஷயமிருக்கிறது என்று அவருக்குப் புரியாமல் இல்லை.

அடுத்த மாதமே கம்பெனியில் அனைவருக்கும் கேட்காமலேயே சம்பள உயர்வு வந்ததற்கு, இதுதான் காரணம் என்று ராஜேஷுமே புரிந்துகொண்டான்.

அலுவலகத்திலேயே அனுவை அழைத்து, ‘உன் அப்பாவிடம் என்ன சொன்னாய்?’ என்று கோபத்துடன் கேட்டதற்கு, ‘உங்களுக்குப் பிடிக்காததை நான் எப்பவும் செய்யமாட்டேன் பாஸ்!’ என்று நிதானமாகச் சொன்னாள்.

அவளது கண்களிலும், வார்த்தையிலும் இருந்த உண்மை, அவனைச் சாந்தமாக்கியது.

இவற்றையெல்லாம் யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தவன், எழுந்து அறைக்குள்ளேயே நடந்தான்.

‘என்னுடைய சந்தோஷத்திற்காக, தன்னுடைய ஆசைகளைக் குறுக்கிக் கொண்டவள் அவள். நானும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போயிருக்கலாமோ!’ என மனத்திற்குள் நினைத்தான்.

அதேவேகத்தில், ‘அதற்காக அவளது விருப்பத்தை முழுதாகப் பூர்த்தி செய்ய இயலாவிட்டாலும், திருமண நாளன்று அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் திட்டத்துடன் தானே இருந்தேன். தந்தையின் மீதிருந்த பாசத்தால் அவளாகத் தானே பேச்சில் வலிமையைக் கூட்டிவிட்டாள். அந்த எரிச்சலில் தானே என்னுடைய ஈகோவைத் தட்டியெழுப்பிவிட்டாள்’ என்ற கோபமும் எழுந்தது.

அடுத்த நொடியே, ‘ராஜேஷ்! இது அர்த்தமற்றது. ஆணாக உனக்கிருக்கும் அதே உணர்வுகள் தானே, ஒரு பெண்ணாக அவளுக்கும் இருக்கும். ஆணுக்கொரு நியதி; பெண்ணுக்கொரு நியதியா? உனக்காக எத்தனை விஷயங்களில் அவள் விட்டுக்கொடுத்துச் செல்கிறாள். அவளுக்காக நீயும் விட்டுக்கொடுத்துத் தானே பாரேன்.’

அவனது இதயக்கருவறையில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அவனது காதல் மனைவிக்காக பரிந்துகொண்டு வந்தது.

மனம் சற்று ஆசுவாசத்திற்கு வந்திருக்க, கைகளைத் தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு இலகுவாக இருக்கையில் அமர்ந்தான்.

கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த அவனது செயலாளர், “சார்! கஸ்டமர் மீட்டுக்கு டைம் ஆகுது” என்று நினைவு படுத்தினான்.

“ஆஹ்! வரேன்” என்றவன், ‘மீட்டிங்கை சீக்கிரம் முடிச்சிட்டு வீட்டுக்குப் போய் இன்னைக்கு நம்ம மகாராணியை சமாதானப்படுத்திடணும்’ என நினைத்துக்கொண்டே எழுந்தான்.

**************

“சோ… சோ… சோ… என் செல்லக்குட்டி! பட்டுக்குட்டி! ஏண்டா அழறீங்க?”

விடாமல் அழுதுகொண்டிருந்த மகளை எப்படிச் சமாதானப்படுத்துவதெனத் தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள் அனு.

“என்னடா கண்ணம்மா! இப்படி அழுதா நான் என்னன்னு நினைக்கறது?” குழந்தையை கைகளிலேயே தாலாட்டியபடி இங்கும் அங்குமாக அலைந்துகொண்டிருந்தாள்.

மணி பத்தாகப் போகிறது. இன்னும் மாமியார் வரவில்லையே என்ற எண்ணம், குழந்தையின் அழுகையால் எரிச்சலாக மாறிக்கொண்டிருந்தது.

ஒரு கரத்தில் குழந்தையைப் பற்றிக்கொண்டு, மறுகையில் மொபைலில் மாமியாருக்கு அழைத்தாள். அவர் போனை எடுக்காததில் எரிச்சல், கடுப்பாக மாறியது.

“இப்போ நீ வாயை மூடப்போறியா இல்லையா… எனக்கு வர்ற கோபத்துக்கு…” என்றவள் குழந்தையை கட்டில்மீது கிடத்தினாள்.

குழந்தையின் அழுகை அதிகமாகியதே தவிர குறையவில்லை.

மகளின் அழுகைக்குக் காரணம் தெரியாத ஆற்றாமையும், கணவனின் மீதிருந்த கோபமும் அவளுக்குப் பலவீனத்தைக் கொடுக்க கண்ணீர் மல்கியது.

“குழந்தையை அழவிட்டுட்டு, என்ன யோசிச்சிட்டு உட்கார்ந்திருக்க? அவளைச் சமாதானப்படுத்தக்கூடாதா?”

அதட்டலாகக் கேட்டுக்கொண்டே பேத்தியைத் தூக்கித் தோளில் போட்டுத் தட்டிக்கொடுத்தார் அபிராமி.

அவளோ, பதிலேதும் சொல்லாமல் கடினமான முகத்துடன் அமர்ந்திருந்தாள்.

சிறிதுநேரம் முயன்றவர் குழந்தை விடாமல் அழவும், போட்டிருந்த உடையை ஆராய்ந்தார்.

உடையின் கழுத்துப் பகுதியில் தொங்கிக் கொண்டிருந்த விலைப்பட்டியலை கத்தரித்தபோது அதைலிருந்த பிளாஸ்டிக் வயரின் சிறுதுணுக்கு குழந்தையின் பின்னங்கழுத்தில் குத்தி அந்த இடமே கண்ணிப்போயிருந்தது.

“அச்சச்சோ!” என்றவர் பேத்திக்கு உடையை மாற்றினார்.

அனு குற்ற உணர்வுடன் கைகளைப் பிசைந்தபடி இருக்க, அவளைக் கண்டுகொள்ளாமல் குழந்தைத், தட்டித் தூங்க வைத்தார்.

“நான் உண்மைலயே கவனிக்கல அத்தை!” என்றாள் பரிதாபமாக.

அவளை ஊன்றிப் பார்த்தவர், “அவள் சின்னக்குழந்தை அனு! எதையும் வாயைத்திறந்து சொல்லத் தெரியாது. நாமதான் கவனமா செய்யணும்” என்றார்.

“ஆமாம். வாயைத் திறந்து பேசறவங்களுக்கு மட்டும் எல்லாமே சரியா நடந்துடுதா?” என்று மெல்லியக் குரலில் சினந்தாள்.

சிலநொடிகள் அமைதியாக இருந்தவர், “இன்னும் நீ சாப்பிடலையாமே. முதல்ல வந்து சாப்பிடு. உன் கோபத்தை எதுக்கு சாப்பாட்டு மேல காட்ற?” எனப் பரிவுடன் சொன்னார்.

“ம்க்கும். வேளாவேளைக்கு சாப்பிடுறது மட்டும்தான் கரெக்டா நடக்குது…” என்று ஆற்றாமையில் புலம்பியவளைப் பரிவுடன் பார்த்தார்.

“பச்ச உடம்புக்காரி… நீ நல்லா ஹெல்தியா இருந்தாதான், குழந்தையும் ஆரோக்கியமா வளரும். பிரச்சனை பிரச்சனைன்னு மனசுக்குள்ளயே புழுங்கிட்டு இருந்தா சரியாகிடுமா? இதுக்கு மேலயும் நான் புத்திசொல்ற அளவுக்கு சின்னக் குழந்தையில்ல நீ. எழுந்து வா முகத்தைக் கழுவிகிட்டுச் சாப்பிடு” எனக் கண்டிப்பான குரலில் சொன்னார்.

அவரது வார்த்தைக்குப் பலன் இருக்கவே செய்தது.

அருகிலேயே இருந்து அவளுக்குப் பரிமாறினார், அபிராமி.

தனக்கு இவ்வளவு அழகானச் சொந்தங்களைக் கொடுத்த கடவுளுக்கு நன்றியைச் சொன்னாள்.

இதற்குக் காரணகர்த்தாவான கணவனின்மீது இழுத்துப்பிடித்துப் பிடிவாதத்தைக் காட்டியவள், அதை உதறித் தள்ளினாள்.

‘ராஜ் பத்தித் தெரியாதா? அவரோட இந்தக் குணமும் பிடிச்சதால தானே அவரைக் காதலிக்கவே தொடங்கினேன். அவர்தான் ஒரு பெரிய லெக்சரே நடத்தினாரே… எதையும் அவர் திடீர்னு முடிவு செய்யல இல்ல… எல்லாத்துக்கும் சரி சரின்னு சொல்லிட்டு இப்போ திடீர்னு அதிலிருந்து இறங்கிவான்னு சொன்னா எப்படி நடக்கும்? இப்படியொரு அருமையான குடும்பத்தைக் கொடுத்தவனுக்காக, விட்டுக்கொடுத்துப் போனால் தப்பில்லை’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

மனம் இறகைப் போல லேசானது போலிருக்க, புன்னகைத் ததும்ப உண்டுவிட்டு எழுந்தாள்.

மருமகளின் முகத்தில் தெரிந்த மாற்றம் திருப்தியாக இருக்க, அபிராமி நிம்மதியுடன் தொலைபேசியை நோக்கிச் சென்றார்.

மறுமுனையில், “அம்மா! நான் கஸ்டமர் மீட்டுக்குக் கிளம்பிட்டு இருக்கேன். மதியம் வந்து பேசறேன்” என அவசரமாகச் சொன்னான் ராஜேஷ்.

“கொஞ்சம் இருடா! எனக்கு உடம்பு சரியில்லன்னு போன் செய்தாலும், விஷயத்தைக்  காதிலேயே வாங்காம இப்படித்தான் பேசுவியா?” என்றார் அதிகாரமாக.
அவரது பேச்சிலேயே அவருக்கு எதுவுமில்லை என்று புரிய, “சரிம்மா! தப்புத்தான் சொல்லுங்க” என்றான் சிரிப்புடன்.

“நீ கஸ்டமர் மீட்டுக்காவது போய்ட்டு வா… உன் கம்பெனிக்காக செக்குமாடா வேணும்னாலும் சுத்து. ஆனா, நீ செய்ற எதுவும் எனக்குச் சரியா படல. அன்னைக்கு நீ பேசிட்டுப் போனப்பவே நினைச்சேன் ஏதோ ஏடாகூடம் செய்யப்போறன்னு.

அம்மா இல்லாத பொண்ணுடா. இந்த நேரத்துல அந்த ஏக்கம் தெரியாம அவளைப் பார்த்துக்கன்னு படிச்சிப் படிச்சிச் சொன்னேன். என்ன செய்வியோ ஏது செய்வியோ… இனி, இப்படி ஒரு பிரச்சனை வரக்கூடாது” என்றார் கறாராக.

சில நொடிகள் மௌனம் சாதித்தவன் ஆழமூச்செடுத்துக் கொண்டு, “பிரச்சனை பிரச்சனைன்னு சொல்றீங்களே… அது என்ன பிரச்சனைம்மா” என்று கிண்டலாகக் கேட்டான் அவன்.

“நான் எதைப் பத்திப் பேசறேன்னு உனக்குச் சுத்தமா புரியல இல்ல… அப்படியே இருந்துட்டுப் போகட்டும். நான் என் மருமக பக்கம் தாண்டா. நாலு நாளைக்கு சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டாதான் உனக்குத் தெரியும்” என்றார் எரிச்சலுடன்.

மனத்திற்குள் சிரித்துக்கொண்டவன், “சாரிம்மா நீங்க ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க. கிட்டதட்ட ஆறு வருஷம் பேச்சுலர் லைஃப் வாழ்ந்திருக்கேன்” என்றான்.

“அது அப்போ… ஒரு வருஷமா வீட்டுச் சாப்பாடு பழகிப்போச்சு இல்ல… இனி இருந்து பாரு, நாலு நாள்ல நாக்குச் செத்துடும்...” நானும் உனக்குச் சளைத்தவள் அல்ல, என்பதை நிரூபித்தார் அபிராமி.

வாய்விட்டுச் சிரித்தவன், “என் பொண்டாட்டியே மேலு போலயிருக்கே… எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா, பதறிப் போயிடுவாளே” என்றான்.
மகனின் வார்த்தைகளில் நிம்மதி பிறக்க, “அப்புறம் ஏன்டா?” என்றார் கவலையுடன்.

“ஸ்வீட் மெமரிஸ்மா… எல்லார் வீட்லயும் நடக்கறது தானே. ஓபனா ஒண்ணு சொல்லிடட்டா…” என்றவன் இரகசிய குரலில், “நீங்களும் அப்பாவும் சண்டை போட்டதே இல்லையா?” என்றான்.

“டேய்!” என்று அதட்டலாக அழைத்த அபிராமி சிரிப்பை அடக்கியபடி, “கஸ்டமர் மீட்டுக்குப் போகணும்னு சொன்னியே கிளம்பு” என்றவர் போனை வைக்க, ராஜேஷ் சிரிப்புடன் மொபைலை அணைத்தான்.


அத்தியாயம் - 38


“குட்டிம்மா! இது நீங்க தூங்கற நேரம். இன்னைக்கென்ன இவ்ளோ தெம்பா விளையாடிட்டு இருக்கீங்க. சுஜு சித்தி வர்றாங்களாம். ரெண்டு நாளா உங்களைப் பார்க்காம கஷ்டமா இருக்காம். சித்தி வர்ற நேரத்துக்கு, நீங்க தூங்கினா… பாவம்ல அவங்க. இப்போ தூங்குவீங்களாம். சித்தி வந்ததும் முழிச்சிகிட்டு அவங்களோட விளையாடுவீங்களாம்” குழந்தையிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக்கொண்டிருந்தாள் அனன்யா.

அவள் பேசப்பேச, புரிந்ததுபோல இமைக்காமல் பார்த்த மகளை அள்ளியெடுத்துக் கொஞ்சினாள்.

“அம்மா சொல்றது உங்களுக்குப் புரியுதா? தங்கக்கட்டி இப்படிப் பார்க்கறீங்க…” என்றதும், அன்னையின் கேள்விக்குப் பதில் சொல்வதைப் போல, “ம்…” என்றது அந்த மழலை.

பூரிப்புடன் குழந்தையின் பூம்பாதத்தில் அவள் முத்தமிட, கூச்சத்தில் அழகாக குறுநகையுடன் நெளிந்தது அந்தப் பூஞ்சிட்டு.

“அச்சோ… உன்னோட சிரிப்பைப் பார்க்க வீட்ல யாருமே இல்லை பாரேன் தங்கம்!” என்றவளுக்குப் பதிலளிப்பதைப் போல, “ஏன் நான் இல்லையா?” என ஒலித்தக் குரலில் விழிகள் மின்ன நிமிர்ந்து பார்த்தாள் அனு.

இரு கைகளிலும் ஆளுயர கரடி பொம்மையைச் சுமந்தபடி, “ஹாய் ஜுனியர் டார்லிங்!” என்றவனைப் பார்த்து, “ஆரி!” என்று குதூகலித்தாள்.

“கங்கிராஜுலேஷன்ஸ் அனு டியர்!” என்றபடி அவளருகில் வந்தான்.

“தேங்க்யூ!” என்றவள், “நீ வர்றன்னு ஒரு வார்த்தைக்கூட சொல்லல. எனக்குக் கையும் ஓடல காலும் ஓடல…” எனச் சந்தோஷித்தாள்.

“காலுதான் ஓடும்… கை எப்படி ஓடும்?” என்றவனது முதுகிலேயே ஒன்று போட்டவள், “இப்படித்தான் ஓடும்” என்றாள்.

“சரி சரி. நம்ம சண்டையை அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல ஜுனியர் மேடமைக் கொடு” என்று குழந்தையை வாங்கிக்கொண்டான்.

அவன் வாங்கி வந்திருந்த பொம்மைகள் இரண்டும் கட்டிலின் அருகில் சமர்த்தாக அமர்ந்திருந்தன.

“சோ கியூட்! ஆனா, என் குழந்தை இந்தப் பொம்மையைத் தூக்கி விளையாட, இன்னும் நாலு வருஷமாவது ஆகும்” எனச் சிரித்தாள்.

குழந்தையின் முகத்திற்கு நேராக விரலைச் சொடுக்கியவன், “அதுக்காக, நீ எடுத்துவச்சி விளையாட உட்கார்ந்துடாத” என்றான் கிண்டலாக.

“ஆமாம் நான் சின்னக்குழந்தைப் பாரு…” என்றவள், குழந்தை அவனையே வெறித்துப் பார்ப்பதைக் கண்டு, “சீ ஆரி! உன்னை ஐடெண்டிஃபை பண்ண ட்ரை பண்றா போல…” ஆர்வத்துடன் சொன்னாள்.

ஹா ஹாவெனச் சிரித்தவன், “அறிவுஜீவி! குழந்தைகளுக்கு மூணு மாசம் வரைக்கும் எந்த உருவமும் தெளிவா தெரியாது. அம்மாவை மட்டும்தான் ஐடெண்டிஃபை பண்ண முடியும். கலர்ஸும் தெரியாது. கலர் பிளைண்ட் தான். மெதுவாதான் இதையெல்லாம் ரெக்ககனைஸ் பண்ணும். என்னத்த படிச்சியோ நீ” என்றான்.

“ஓஹ்! முன்னெல்லாம் ஐந்து மாதம் வரைக்கும், குழந்தைங்க அழுதா கண்ணுல தண்ணி வராதுன்னு சொல்வாங்க. ஆனா, இந்தம்மா அழுதா கண்ணுல நிக்காம அருவியா கொட்டுதே அதுக்கென்ன சொல்ற?” என்று அவனை மடக்கிவிட்ட மமதையுடன் கேட்டாள்.

சிரித்துக்கொண்டே, “அனுவோட பொண்ணா கொக்கா!” என்றபடி பிரியத்துடன் குழந்தையின் கன்னத்தை வருடினான்.

அந்தக் கூச்சத்தில் மெல்ல பொக்கை வாயைத் திறந்து புன்னகைத்தாள் அவர்களது இளவரசி.

“என்னைக் கிண்டல் பண்ணாம உன்னால இருக்கமுடியாதே…” என்றாள்.

“பரவாயில்லையே ஜூனியர்! உங்கம்மா வளர்ந்துட்டாங்க போல… பாஸோட ட்ரெயினிங் சூப்பரு…” என்றவனை முறைத்தாள்.

“உங்க அம்மாவுக்குக் கோபம் வருது டார்லிங்!” எனக் குழந்தையிடன் பேசியவன்,  “ஹே அனு! ஜுனியரோட கண்ணு அப்படியே உன்னை மாதிரி. மூக்கு ராஜேஷ் மாதிரி…” என்றான்.

அவனது தோளில் முழங்கையை ஊன்றியபடி, “அப்போ வாய்?” எனக் கேட்டவள் ஆவலுடன் அவனது முகத்தைப் பார்த்தாள்.

“நான் சும்மா இருந்தாலும், நீயா வாண்டடா வந்து மாட்ற…” என்றவன், “அது உன்னை மாதிரி இல்லாத வரைக்கும் சந்தோஷம்” என்றான்.

“அடப்பாவி!” என்று அவனது தோளிலேயே பட்டுப் பட்டென அடித்தாள்.
“ஹேய் லூசே! அடிக்காத... குழந்தையைக் கீழே போட்டுடப் போறேன்” என்றான் வேண்டுமென்றே.

“கொன்னுடுவேன் உன்னை…” என்று மிரட்டலாகச் சொன்னவள், “சரி இதையெல்லாம் விடு… நீ எப்போ இந்தியா வந்த? ஏன் என்கிட்ட எதுவும் சொல்லல? புது வேலைல ஜாயின் பண்ணிட்டியா? அம்ருவோட கல்யாண விஷயம் என்ன ஆச்சு? போன வாரம்கூட நான் ஆன்ட்டிகிட்ட பேசின போதுகூட, நீ வர்றதைப் பத்தி அவங்க எதுவுமே சொல்லலையே…” வரிசையாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.

“மெதுவா மெதுவா… ஒரு ஒரு கேள்வியாக் கேளு. பதில் சொல்றேன். அதுக்கு முன்னால நான் கொஞ்சம் ரிஃப்ரெஷ் பண்ணிக்கணும்” என்றான்.

“சாரி சாரி… நீ உன்னோட ரூமுக்குப் போய் ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வா. நான் பத்து நிமிஷத்தில் வந்திடுறேன்” என்றவள், குழந்தையை வாங்கித் தொட்டிலில் கிடத்தினாள்.

“பாப்பாவைத் தனியாவா விட்டுட்டுப் போற?”

“ஒண்ணும் பயமில்ல… இந்த ரைம்ஸ் போட்டுவிட்டுட்டா அவ கேட்டுகிட்டே படுத்துட்டிருப்பா” என்றவள் ஐ பாட்டை ஒலிக்கவிட்டாள்.

“ஒரு மாசக் குழந்தையிலேயே உனக்கு ரைம்ஸா பாப்பா? இந்தத் தொல்லையெல்லாம் இல்லாம வளர்ந்த கடைசி தலைமுறை, நாங்கதான் போல…” என்றவன், தான் எப்போதும் தங்கும் அறைக்குச் சென்றான்.

ஒரு குளியல் போட்டுவிட்டு அவன் திரும்பி வருவதற்குள் குழந்தை உறங்கியிருந்தாள்.

டிஃபன் ட்ரேயுடன் உள்ளே நுழைந்த அனு, “தூங்கிட்டாளா?” எனக் கேட்டுக்கொண்டே தொட்டிலை எட்டிப் பார்த்தாள்.

“தாலாட்டு கேட்டுத் தூங்கற குழந்தைங்களைப் பார்த்திருக்கேன். ரைம்ஸ் கேட்டுத் தூங்கற குழந்தையை இப்போதான் பார்க்கிறேன். பார்த்து அனு, ஸ்கூலுக்குப் போனது ரைம்ஸ் சொல்லிக்கொடுத்தா உன் பொண்ணு தூங்கிடப்போறா” என்று கேலி செய்தான்.

“போதும் போதும் உன்னோட கேலி. முதல்ல வந்து சாப்பிடு” என்றாள்.

அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள், “நீ வர்றன்னு முதல்லயே தெரிஞ்சிருந்தா ஸ்பெஷலா ஏதாவது செய்யச் சொல்லியிருப்பேன்” என்றாள் வருத்தத்துடன்.

“வந்துட்டேன் இல்ல… நைட் டின்னரைப் பிரமாதமா பண்ணிடு” என்றான்.

“தாராளமா செய்துடுறேன்…” என்றவள் மீண்டும் தனது கேள்விக் கணைகளை ஆரம்பித்தாள்.

“வெயிட். நானே ஒவ்வொன்னா சொல்லிடுறேன். ஆக்சுவலி, நான் இந்தியா வர்றது அம்மாவுக்கே தெரியாது. அந்த ஆஃபிஸ்லயிருந்து என்னை ரிலீவ் பண்ண மாட்டேங்கறாங்க. என்னோட சேவை அந்த வெள்ளைக்காரனுக்குத் தேவை” என்றவன், கையிலிருந்த ஸ்பூனால் கிச்சடியைக் கிளறினான்.

“எங்க கம்பெனியோட ஒரு பிராஞ்ச் ஹைதராபாத்ல இருக்குன்னு தெரியும்ல… இப்போ இன்னொரு பிராஞ்ச் இங்கே கோயமுத்தூர்ல ஆரம்பிச்சிருக்காங்க…” என்றவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“ஆமாம். இதைப் பத்திக்கூட நாம பேசி ஒரு ஆறுமாசம் இருக்குமில்ல” என்றாள்.

“ம், இப்போதைக்கு ஒரு ஒன் இயர் இங்கே வொர்க் பண்ணுங்க. இங்கே கொடுக்கும் சம்பளத்தை அப்படியே இந்தியன் மணியா கொடுத்திடுறோம்னு சொல்லி என்னை அனுப்பிவச்சிட்டாங்க” என்றான்.

“வாவ்! ஆரி கங்கிராஜுலேஷன்ஸ்… இவ்ளோ நல்ல விஷயத்தை எங்ககிட்ட மறைச்சிட்ட பார்த்தியா…”

“நீதான் மெச்சிக்கணும். சிக்கிட்டாண்டா ஒருத்தன்னு அவனுங்க அனுப்பி விட்டுட்டானுங்க. கம்பெனில எரக்‌ஷன் டைம். வேலை முதுகு ஒடியும்” என்றான் கடுப்புடன்.

“ஒரே ஆறுதலா கம்பெனியிலேயே வீடும், காரும் கொடுத்துட்டாங்க…” என்றான்.

“ஓஹ் அப்போ ஆன்ட்டி இங்கே வந்திடுவாங்க…”

“ஆனா, இப்போ இல்ல. அம்ருவோட கல்யாணம் ஃபைனலைஸ் பண்ற ஸ்டேஜ்ல இருக்கு. அதனால, அவளோட கல்யாணம் முடியும்வரை அம்மா இங்கே வர்றது கஷ்டம்.”

“அப்போ தனியாவா இருக்கப்போற. பேசாம நம்ம வீட்லயே தங்கிக்கோயேன் ஆரி!

“உனக்காக ரெண்டு நாளைக்குத் தங்கறேன். அப்புறம்…”

“அப்புறமும் இல்ல; எப்புறமும் இல்ல. ஆன்ட்டி இங்கே வந்து உன்னோட தங்கறவரைக்கும் நீ இங்கேதான் இருக்கணும்.”

“இல்ல அனு அது சரியா வராது” என்றவனுக்கு எப்படி அவளுக்குப் புரிய வைப்பதெனத் தெரியவில்லை.

அவனை ஊன்றிப் பார்த்தவள், “ஹேய்! நீ அத்தைக்காக யோசிக்கிறன்னு நினைக்கிறேன். ரைட்” என்றாள்.

அவன் மௌனமாகவே இருக்க, “நீ நினைக்கிற மாதிரி அவங்க கிடையாது” என்றவளுக்குச் சட்டென ஏதோ தோன்ற, “ஆரி! நீ சுஜுவுக்காக யோசிக்கிறன்னு நினைக்கிறேன்” என்றாள்.

தான் சொல்லமுடியாமல் தவித்ததை அவள் புரிந்துகொண்டது பெருத்த நிம்மதியாக இருந்தது. மௌனமாகப் புன்னகைத்தான்.

“ரொம்ப யோசிக்காதேப்பா… இருக்கற மூளையும் சூடாகி உருகிடப்போகுது. சுஜு எங்க வீட்ல இருக்கா. நீ அப்பா வீட்ல இருக்கப் போற… என் வீட்ல இருக்கவங்க ஒண்ணும் அவ்ளோ குறுகின மனசோட இருக்கவங்க இல்ல. ”

 “டோண்ட் மிஸ்டேக்கன் அனு! நான் அப்படியெல்லாம் அனுமானம் பண்ணல.”

 “எதுக்குத் தொந்தரவுன்னு நினைச்சியா?” எனப் புன்னகைத்தாள்.

“ஏய் அதெல்லாம் இல்ல. எனக்கு ஆஃபிஸ் பக்கமா இருக்கும்” என்றான்.

“இதெல்லாம் ஒரு சாக்கு… எங்க ஊருக்கு வந்திருக்க, உன்னை பத்திரமா ஆண்ட்டிகிட்ட ஒப்படைக்கவேண்டியது எங்களோட கடமை” என்றாள் தீவிரமாக.

அவள் ஏதேதோ பேச அவனும் அரைமனத்துடன் ஒப்புக்கொண்டான்.

“தட்ஸ் குட்!” என்றவளது மொபைல் ஒலிக்க, “நீ சாப்பிடு ஆரி வரேன். இங்கே சிக்னல் கொஞ்சம் வீக்கா இருக்கும்” என்றவள் போனுடன் பால்கனிக்குச் சென்றாள்.

அவன் சாப்பிட்டு முடித்து தட்டுகளை அடுக்கி ஓரமாக இருந்த மேஜை மீது வைத்துவிட்டு கையைக் கழுவிக்கொண்டு வந்தான்.

அனு இன்னமும் போனில் யாரிடமோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்க, கோழித் தூக்கம் ஒன்றைப் போட்டுவிட்ட திருப்தியுடன், கைக்கால்களை உதைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் குழந்தை.

இரண்டு நிமிடம் குழந்தையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன் ஐபாடை ஆன் செய்துவிட்டு, அறையின் மூலையிலிருந்த புக் ஷெல்ஃபை ஆராய்ந்தான்.

ஒரு ஆங்கில நாவலைப் புரட்டிக்கொண்டிருந்தவன், “ஹாய் ஷின்சூ பேபி!” என்ற குரலைக் கேட்டதும் வெடுக்கென நிமிர்ந்து பார்த்தான்.

ஓட்டமும் நடையுமாக தொட்டிலின் அருகில் வந்து நின்றவள், அந்த அறையின் ஒரு பக்கத்தில் நின்றிருந்த ஆர்யாவைக் கவனிக்கவில்லை.

“ஷின்சூ டார்லிங்! சித்தி உங்களைப் பார்க்க வந்துட்டேன்” என்றவளைக் குழந்தை வைத்தகண் வாங்காமல் பார்த்தது.

“சித்தி ரெண்டு நாளா உங்களைப் பார்க்க வரலைன்னு, கோபமாடி செல்லம்?” எனக் கேட்டுக் கொண்டே குழந்தையைத் தூக்கினாள்.

அவளது ஸ்பரிசத்தை உணர்ந்தோ அன்றி; குரலை அடையாளம் கண்டு கொண்டதோ, “ஹும்… ஊ…” என்று குரல் கொடுத்தபடி அவளுடைய கன்னத்தை வருடிக் கொடுக்க, அந்தப் பிஞ்சு கரத்தில் கணக்கிலடங்காமல் முத்தமிட்டாள்.

ஒரு கரத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு, புத்தகத்தைப் பிடித்திருந்த மறுகரத்தின் முழங்கையை ஷெல்ஃபில் ஊன்றியபடி புன்னகையுடன், அவளது செய்கைகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான் ஆர்யா.

குழந்தையை கட்டில் மீது படுக்கவைத்தவள், அப்போது தான் ஆர்யா வாங்கிவந்திருந்த ஆளுயர டெட்டிபியரைப் பார்த்தாள்.

“ஹாங்… குட்டிம்மாக்கு விளையாட இவ்ளோ பெரிய பொம்மையா?” என்றவள், அந்தப் பொம்மையைத் தூக்கிப் பார்த்தாள்.

அதேநேரம் ஐபாடில் டெட்டி பியர் டெட்டி பியர் டர்ன் அரௌண்ட்! பாடல் ஒலிக்க, அவளும் உடன்சேர்ந்து பாடிக் கொண்டே நிமிர்ந்தவள் அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும் திகைத்துப் போனாள்.

சிரிப்பை அடக்கிக்கொண்டு, “ஹாய்!” என்று விரல்களை அசைத்தான்.

வெட்கத்துடன் கையிலிருந்த கரடி பொம்மையை அணைத்துப் பிடித்துக்கொண்டு, “ஹா…ய்!” என்றாள்.

அதேநேரம் போன் பேசிவிட்டு உள்ளே வந்த அனு, “வந்துட்டியா சுஜு!” என்றவள், “ஆரி திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்து சர்ப்ப்ரைஸ் கொடுத்துட்டான். இதோ இந்த டெட்டி கூட அவந்தான் வாங்கிட்டு வந்தான். என்னமோ இன்னைக்கே சின்னமேடம் அதோட விளையாடப் போறதுமாதிரி” என்று சிரித்தாள்.

அப்போதுதான் தான் அணைத்துக்கொண்டு நின்றிருந்த பொம்மையின் நினைவுவர, சட்டெனக் கீழே வைத்தாள்.

“உட்காரு சுஜு!” என்றாள்.

“இல்லக்கா! நான் பாப்பாவைப் பார்க்க வந்தேன். கிளம்பறேன்க்கா!” என்றபடி கைப்பையை எடுத்தாள்.

“ரெண்டு நாள் கழிச்சி வந்திருக்க. கொஞ்சநேரம் இரு. அத்தை கோவில் வரைக்கும் போயிருக்காங்க. அவங்க வந்ததும் கிளம்பு” என்று அவளது கரத்தைப் பிடித்து தன்னருகில் அமரவைத்துக் கொண்டாள்.

“சுஜு வேலைக்குப் போறா தெரியுமில்ல…” எனக் கேட்டாள் அனு.

“ம்… நீ சொன்னா மாதிரிதான் ஞாபகம்…” என்றான்.
“ஆமாம். உனக்குச் சொல்றதெல்லாம் எப்படி ஞாபகம் இருக்கும்? உனக்குச் சிக்னல் கொடுக்கவும், அதைப் பத்தி யோசிக்கவுமே உனக்கு நேரம் சரியாயிருக்கும்” என்றாள் கேலியுடன்.

உணர்வுகளைக் களைந்த புன்னகையை உதிர்த்தவன், எதுவும் சொல்லாமல் மௌனமாக இருக்க, அனு புரியாமல் பார்த்தாள்.

“என்னப்பா! நான் என்னென்னவோ ரியாக்‌ஷனை எதிர்பார்த்தா, நீ இப்படியொரு ரியாக்‌ஷன் கொடுக்கற?” எனத் திகைப்புடன் கேட்டாள்.

“விடு அனு! நமக்கெல்லாம் சரிவராது…” விட்டேத்தியாகச் சொன்னான்.

“விடுறதா…?” அதிர்ந்து முகத்துடன் பார்த்தாள்.

ஆர்யாவைப் பற்றி அவளறியாததா? எந்த விஷயத்தையும் யோசிக்காமல் முடிவெடுக்கமாட்டான். அப்படி முடிவெடுத்துவிட்டால் அதை முடிக்கும்வரை தளரமாட்டான். அப்படிப்பட்டவன் இப்படிப் பேசவும், அவளால் நம்ப முடியவில்லை.

“அப்போ உன்னோட லவ்?”

“ஆரம்பிக்காமலேயே அது முடிஞ்சிபோச்சு” என்றவன் தலையைக் குனிந்து கொண்டான்.

“ஆரி!” என்று அவனது தோளில் கைவைத்தாள் அனு.

முகத்தைத் துடைத்துக் கொண்டு“ஹேய்! நீ ஃபீல் பண்ணாத. அவளை விரும்பினேன்… அவளுக்கு என்னைப் பிடிக்கல. பிடிக்கலைன்னு சொல்றவளை கட்டாயப்படுத்த முடியுமா? பத்து நாள் கஷ்டமாத்தான் இருந்தது. அதுக்கப்புறமும் அதையே நினைச்சிட்டு இருக்கமுடியுமா? வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்கே…” என்றவன் கசப்புடன் புன்னகைத்தான்.

அவனது காதலைப் பற்றி அறிந்து சிறுதிடுக்கிடலுடன் பார்த்த சுஜாவிற்கு, அவன் அமர்ந்திருந்த தோற்றம் ஏதோ செய்ய, சட்டென அங்கிருந்து எழுந்துகொண்டாள்.

“என்ன சுஜு?”

“நா..ன்.. இதோ வரேங்க்கா!” என்றவள் வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

ஓரக்கண்ணால் அவள் செல்வதையே பார்த்தவன், இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

எதையோ பறிகொடுத்ததைப் போல அமர்ந்திருந்த அனுவைப் பார்த்தான்.

வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டவன், “உனக்கு இந்த மூஞ்சி நல்லாவேயில்ல. முதல்ல அதை மாத்து” என்றான்.

“எப்படி ஆரி…?” என ஆரம்பித்தவளை கைநீட்டித் தடுத்தான்.

“போதும் அனு! ஒருத்தி நம்மளைப் பிடிக்கலைன்னு ஆனதும் அவளையே நினைச்சி என் வாழ்க்கையைக் கெடுத்துக்க நான் தயாரா இல்ல. பீ பிராக்டிகல்” என்றான்.
நீண்ட பெருமூச்சை வெளியிட்டவள், “ம்ம்” என்றாள்.

“சரி, உன்னோட லைஃப் எப்படி இருக்கு?”

அதுவரையிருந்த கவலை மறைந்துபோக, “மகாராணி மாதிரி இருக்கேன் ஆரி!” என்றவளது முகம் பூரிப்பில் மலர்ந்திருந்தது.

அந்த வாக்கியத்தை அவள் உச்சரித்த விதமும், அவளது கண்கள் வெளிப்படுத்திய பாவமுமே, அது ஆத்மார்த்தமான வார்த்தை என்பதை அவனுக்குச் சொல்லாமல் சொல்ல, சந்தோஷத்துடன் அவளைப் பார்த்தான்.