Wednesday, November 27, 2019

நெருஞ்சி முள்

நெருஞ்சி முள் - ஷெண்பா



“அம்மா புரிஞ்சிக்கோங்க. போன வருஷம் தான் ஊருக்கு வந்துட்டு வந்தேன். புதுவீடு வேற வாங்கியிருக்கேன். ஏகப்பட்டச் செலவு. எல்லா லோனும் வாங்கியாச்சு. இதுல திடீர்ன்னு அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. உடனே, கிளம்பி வான்னு சொன்னா எப்படி வர்றது? அப்படியும், அப்பாவோட ஆப்பரேஷனுக்குக் கடன் வாங்கி மூணு இலட்சம் அனுப்பியிருக்கேன்.

திரும்ப வா வான்னு அதே பாட்டைப் பாடினா என்ன சொல்றது? என்னால முடிஞ்சது இவ்வளவுதான்” எரிச்சல் பொங்கும் குரலில் உரைத்துவிட்டுப் போனை வைத்த மகனை, எதுவும் சொல்லத் தோன்றாமல் மௌனமாக மருத்துவமனை வராண்டாவில் அமர்ந்தார் வசுமதி.


இளையவனும், இதைப் போன்ற ஒரு காரணத்தைத் தான் முன்தினம் சொல்லியிருந்தான். தன்னுடைய முப்பது வருட திருமண வாழ்க்கையில், இப்படியொரு ஏமாற்றத்தைச் சந்தித்ததே இல்லை. ராஜசேகரை தனது இருபத்தி இரண்டாம் வயதில் மணமுடித்தது முதல் நிறைவானதொரு வாழ்க்கையையே வாழ்ந்தார் எனலாம். 


அடுத்த ஆண்டே முதல் குழந்தை, இரண்டாண்டு இடைவெளியில் இளையவன். இரண்டும் ஆண் குழந்தைகள் என்று பாராட்டிச் சீராட்டி வளர்த்து, நல்லப் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்து, வெளிநாட்டில் வேலை கிடைத்ததும், அவர்கள் விரும்பிய பெண்களையே மணமுடித்து வைத்தார். 


கணவன் அவ்வப்போது சொல்லும் அறிவுரைகளையோ, யோசனைகளையோ மகன்களின் விஷயத்தில் அவர் கேட்டதே இல்லை. தங்களின் கடைசிக் காலத்தில் துணையிருப்பார்கள் என்று கட்டிய மணல் கோட்டையெல்லாம், மண்மேடாகப் போனதில் துக்கம் தொண்டையை அடைத்தது. 


எப்போதும், எதிலும் துணையிருக்கும் கணவன் கண்விழிப்பாரா மாட்டாரா என்ற பயம். தனது முகத்தைப் பார்த்தே அவர் நினைப்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படும் துணை, எத்தனைப் பேருக்கு வாய்த்து விடும்? வசுமதிக்கு அது கை கூடியிருந்தது.


“எப்படித்தான் என் முகத்தைப் பார்த்தே எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுறீங்களோ!” என்று கணவரிடமே பலமுறை கூறியிருக்கிறார். அதில் ஒரு பெருமையும் அவருக்கு உண்டு. இன்று அந்தத் துணை சொச்சக் காலத்திற்கும் உடன்வருமா? என்ற சந்தேகமும், அச்சமும் அவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. 


ஐம்பத்தைந்து வயதில், எல்லோரும் இருந்தும் தான் அநாதையாக உணரும் நேரம் வரும் என்று கணப்பொழுதும் சிந்தித்ததில்லை. சொல்லவொண்ணா துக்கத்தில் மனம் குமுறிக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் அதே நினைவில் உழன்று கொண்டிருந்தவருக்கு திடீரென நெஞ்சில் முள் தைத்ததைப் போன்று இருந்தது. கண்களில் பொலபொலவெனக் கண்ணீர் பெருகி வழிந்தது.


வீட்டின் நடுவில் வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டு அசைவின்றி படுத்திருக்கும் தந்தையையும், சோர்ந்த விழிகளுடன் சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்த அன்னையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு தனது பாட்டியின் மடியில் அமர்ந்திருந்தாள் நான்கு வயது வசுமதி. 


“இருபத்தி மூணு வயசுல மொத்தமா வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்கிறாளே என் பொண்ணு!” என்று கதறி அழுதார் வசுமதியின் பாட்டி வள்ளி.

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த அவரது உறவுகள், “ஒரே பொண்ணு. நல்லா படிச்சா. அவ நேரமோ என்னவோ இந்தக் குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டா. அடி உதைன்னு கொஞ்சமா கஷ்டப்பட்டா? அப்பவே அவளோட வாழ்க்கைப் போச்சு. சீக்கிரமா விடிவு வந்ததுன்னு சந்தோஷப்பட்டுக்கணும்” இரண்டு பெண்கள் பேசிக்கொண்டனர். 


ஆனால், இது எதற்குமே வசுமதியின் அன்னை சுலோச்சனா எவ்வித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் மௌனமாக இருந்தார். நாட்கள் நகர்ந்தன. பெற்றவளை தன்னுடனேயே வைத்துக்கொண்ட சுலோச்சனா, தனது படிப்புச் சான்றிதழ்களை தூசுத் தட்டி எடுத்தார். 

இளம் பெண், கைம்பெண் அதனாலேயே சில இடங்களில் வேலை மறுக்கப்பட்டது. சில இடங்களில் அதற்காகவே வேலை கொடுக்கபட்டது. ஆறுமாத காலத் தேடுதலுக்குப் பின்பே, அவருக்கு ஓரளவு பிடித்தமான வேலை கிடைத்தது.


மூன்று பெண்களும் கௌரவமாக வாழ, அவரது மாதச் சம்பளம் போதுமானதாக இருந்தது. ‘மகள்தான் தனது வாழ்க்கை என்று’ அவளது சந்தோஷத்திற்காகவே வாழ்ந்தார். வசுமதிக்கு ஏழு வயதாகும் வரை, எல்லாம் அவர்களது வாழ்க்கை எளிமையாக இருந்தாலும், அமைதியாகவும் சந்தோஷமுமாகவே சென்று கொண்டிருந்தது.


அவர்களின் எதிர் வீட்டிற்குப் புதிதாகக் குடிவந்தார் ஒரு கல்லூரிப் பேராசிரியர். அவரே தன்னை அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். வசுமதியிடமும், அவரது பாட்டியிடமும் இயல்பாகப் பழகினார். 


“பாவம் அந்தப் பிள்ளை. கல்யாணமாகி ஒரே வருஷத்துல பொண்டாட்டியும், புள்ளையையும் பிரசவத்துல பறிகொடுத்துடுச்சி” என்று அலுவலகத்திலிருந்து வந்த மகளிடம் புலம்பித் தீர்ப்பார் வள்ளி.


“அம்மா! நான் இந்த முறை மேத்ஸ்ல எழுபது மார்க் வாங்கியிருக்கேன். பிரகாஷ் அங்கிள் தான் காரணம்” என்று மகளும் அவரிடம் மாற்றி மாற்றி அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பர்.


ஆனால், சுலோச்சனா ஒரு முறைகூட அவருடன் நின்று பேசியதில்லை. இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டாலும், தலை குனிந்தபடி அவரைக் கடந்து சென்றுவிடுவாள். அவள் வீட்டிலிருக்கும் நேரத்தில், பிரகாஷும் அவர்கள் வீட்டிற்குச் செல்லமாட்டார். 


சுலோச்சனாவின் அமைதியான சுபாவமும், தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவள் மீது, மனைவியின் மறைவிற்குப் பின் எந்தப் பற்றும் இல்லாதிருக்கும் அவருக்கு ஈர்ப்பு வந்ததில் எந்த அதிசயமும் இல்லை. மறைக்காமல் வள்ளியிடமும் அவரது விருப்பத்தைக் கூறினார். மகளுக்கு ஒரு வளமான வாழ்க்கை அமைவதில், எந்தத் தாய்க்கு விருப்பம் இருக்காது? மகளிடம் கலந்து பேசினார். சிறு குழப்பத்திலும், முதல் வாழ்க்கை கொடுத்த பயமும் அவளுக்குத் தயக்கத்தைக் கொடுத்தது. 


அதேநேரம் அவர் குடிவந்த இந்த ஒன்றரை வருடத்தில் அவளிடம் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடந்து கொண்ட மனிதன் நிச்சயம் தனக்கும், தனது மகளுக்கும் துணையாக இருப்பார் என்று அவளது மனம் எடுத்துச் சொன்னது. தயக்கத்திற்கும், தடுமாற்றத்திற்கும் பிறகு, அன்னையிடம் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னார். இந்தச் சந்தோஷத்தில் இரண்டு பெண்களும் ஒன்றை மறந்துவிட்டனர். அங்கிள் அங்கிள் என்று அவரைச் சுற்றி வரும் வசுமதி, நிச்சயம் சம்மதிப்பாள் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டனர்.


பிரகாஷிடம் வள்ளி பேச, அவரும் வீட்டுப் பெரியவர்களுடன் வந்து தாம்பூலமும் மாற்றி, திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. மெல்ல மெல்ல விஷயத்தைப் புரிந்துகொண்ட வசுமதி யாருடனும் பேசாமல், உணவருந்தாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். 


பிரகாஷ் வந்து அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லியும், அவள் நிதானத்திற்கு வரவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு, மீண்டும் பிரகாஷ் வந்து பேசியபோது, “நீங்க எனக்கு அங்கிளாவே இருங்க. அப்பாவா வேண்டாம்” என்று அவள் கதறி அழுதபோது, பெரியவர்கள் மூவரும் வெகுவாக அதிர்ந்து போயினர்.


“குழந்தை தானே. எல்லாம் போகப் போகச் சரியாகிடும்” என்று இருவரையும் சமாதானப்படுத்தினார் வள்ளி.


பிரகாஷும் ஒப்புக்கொள்ள, சுலோச்சனா மட்டும் திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருந்தார். மகள் எதையும் சொல்லாவிடினும், தந்தையுடன் இருந்த காலம் அவளது நினைவிலிருந்து அழியாதது ஒன்று. மற்றொன்று யாரோ ஏதோ சொல்லியிருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டார்.

மகளுக்காக, தனக்கான நல்வாழ்க்கையை உதறித் தள்ளினார். பிரகாஷ் சில போராட்டத்திற்குப் பின்பும் மனம் மாறாத சுலோச்சனாவின் மேல் கொண்ட அதிருப்தி காரணமாக வீட்டைக் காலி செய்துவிட்டார். வள்ளியும் அவ்வப்போது சொல்லிச் சொல்லி ஆற்றுப்படுத்திக் கொண்டார். 


ஆனாலும், மகளின் பார்வையில் அவர் மரியாதை இழந்து போனார். தாயின் பேச்சை கேட்பதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தாள் வசுமதி. எந்த ஒரு விஷயத்திலும், அம்மாவை கலந்து கொள்வதில்லை. 

ஏதேனும் சொன்னால், “என்னைப் பத்தி நினைக்காம உனக்கொரு வாழ்க்கை அமைச்சிக்கத் தானே நினைச்ச” என்ற அவளது குத்தல் பேச்சும், சுலோச்சனாவின் இதயத்தைக் கிழித்துக் கூறுபோட்டுக் கொண்டிருந்தது.  


உரிய வயதில் வசுமதிக்குத் திருமணம் முடித்துவைத்தார். சுலோசனாவின் வாழ்க்கையில் அதுவரை கோபத்துடன் இருந்த கடவுள் சிறு ஆறுதலாக ராஜசேகரை அவளது மாப்பிள்ளையாக்கி இருந்தார். அத்தை என்று அன்புடன் அவரை அழைப்பதுடன் ஒரு தாயைப் போல அவளைக் கவனித்துக் கொண்டார்.


அன்னையின் மறைவிற்குப் பிறகு, மாப்பிள்ளையின் வற்புறுத்தலால் மகள் வீட்டுடன் வந்துவிட்டார் சுலோ. மகளைவிட, மருமகனிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு இருவருக்குள்ளும் புரிதலும், அன்பும் இருந்தது. 


இதுவே வசுமதிக்கு அன்னையின் மீது மேலும் கோபமும், வெறுப்பும் வரக் காரணமாக இருந்தது. அந்த நேரங்களில் வார்த்தைகளால் அன்னையை வதைப்பதில் திருப்தி பட்டுக்கொள்வாள். 


“ஏன் வசு அத்தையை இப்படிப் பேசற?” என்று பரிந்து வருபவனிடம், “எங்க விஷயத்துல நீங்க தலையிடாதீங்க” என்று நிர்தாட்சண்யமாக பேசுபவளைக் கவலையுடன் பார்ப்பான். 


“அவங்களோட அருமை இப்போ உனக்குப் புரியாது. உனக்காகவே வாழறவங்க அவங்க. நீ ஆறுதலா பேசலனாலும், அவங்களைக் கரிச்சிக் கொட்டாதே” என்பான்.


அவன் சொன்னதைப் போல அப்போது அன்னையின் பாசமும், விட்டுக் கொடுத்தலும், தனக்காகவே வாழ்ந்துகொண்டிருப்பவரின் மனதும் புரியாமலே இருந்துவிட்டாள். வீட்டைப் பராமரிக்கவும், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும், வேலைகளுக்காகவுமே தனது அன்னையை பயன்படுத்திக் கொண்டவளுக்கு, அவருக்கென்று ஒரு மனம் இருப்பதை உணரவே இல்லை.

நாற்பத்தி எட்டே வயதில் சுலோச்சனா இறந்தபோதுகூட அவளால் இரக்கப்பட முடியவில்லை. அவ்வப்போது மனம் தாயின் இறப்பை எண்ணிக் கவலை கொண்டாலும், அதற்காகப் பெரிதும் வருந்தியதில்லை. தனது கடமை முடிந்தது என்றே கருதினாள். 


ஆனால், இத்தனை வருடங்களாக உணராத அன்னையின் தனிமையை, அச்சத்தை, தியாகத்தை, மனவருத்தத்தை இந்தப் பத்து நாட்கள் அவருக்கு உணர்த்தியது. தனது குத்தல் பேச்சும், உதாசீனமும் தான் அன்னையின் இறப்பிற்குக் காரணம் என்று உள்ளுக்குள் எழுந்த எண்ணம் அவரது இதயத்தை நொறுக்கியது. மானசீகமாக தனது அன்னையிடம் மன்னிப்பு வேண்டிக்கொண்டார். தனது கணவனை மீட்டுக் கொடுத்துவிடும்படி அந்தத் தாயிடம் கண்ணீருடன் மன்றாடினார்.


தெய்வம் துணை நின்றதோ; அன்றி, மகளின் கண்ணீருக்காக தெய்வமாகிவிட்ட அந்தத் தாய் துணை வந்தாளோ, அடுத்த இரண்டு நாட்களில் ராஜசேகர் கண் விழித்தார். டாக்டர்கள் வந்து பார்த்துவிட்டு, வசுமதியை பார்க்க அனுமதித்தனர்.


நைந்த உடலுடன் கட்டிலில் கிடந்த கணவனைக் கண்டதும் நெஞ்சம் விம்ம, வாயைப் பொத்திக் கொண்டார். சலைன் ஏறிக்கொண்டிருந்த கரத்தை அன்புடன் தடவிக்கொடுக்க, மெல்லக் கண்களைத் திறந்தார் ராஜசேகர். 


மனைவியின் கண்ணீரைத் துடைத்துவிட்டவரின் விழிகளில் கண்ணீர் வழிந்தது. நடுங்கிய கரத்தால் வசுமதி துடைத்துவிட, “அழாதே வசு! உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன்” என்றவர் மனைவியின் விழிகளை ஆழ்ந்து பார்த்தபடி மெலிந்த குரலில், “அத்தை உன்னை எப்பவும் தப்பா நினைக்க மாட்டாங்கம்மா!” என்றதும், கணவனின் கைகளில் தலைசாய்த்து அழுதவளை ஆறுதலுடன் தட்டிக்கொடுத்தார்.


 

6 comments:

  1. You're story is awesome👌👌👌👍👍👍👏👏👏🌺🌺🌺🌺

    ReplyDelete
  2. அருமையான வாழ்க்கை பாடம்.

    ReplyDelete
  3. வாழ்க்கையின் யதார்த்தம் குட்டி கதையில். 👍👍

    ReplyDelete