Monday, December 22, 2014

முதல் நட்பு

நல்ல வாழ்க்கைத் துணையும், நல்ல தோழமையும் ஒருவருக்கு அமைவது வரம். எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை நட்பு. நல்ல நட்பு வாழ்வில் நம்மை நிச்சயம் முன்னேற்றும்.

ஒவ்வொருவருக்கும் எத்தனையோ தோழிகள் இருந்தாலும் யாராவது ஒருவர் தான் நம் மனதுக்கு மிக நெருக்கமாக இருப்பார்கள்.
அப்படி எனக்கு நெருக்கமான ஒருத்தி தான் ஸ்ரீ லக்‌ஷ்மி ப்ரியா.

இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

புதிய பள்ளி. புதிய ஆசிரியைகள், புதிய சூழல்...
கண்களில் மிரட்சியுடன், தோளில் மாட்டிய ஜோல்னா பையுமாக வகுப்பறையின் வாயிலில் நின்றிருந்தேன்.
ஹே! நீயும் இன்னைக்குத் தான் சேர்ந்தியா?” என்ற கேள்வியுடன் என் தோளைத் தொட்டாள் ஒரு சிறுமி.

“ஆமாம்...” என்றேன் பயத்துடன்.

“நானும்தான் வா” என எனது கரத்தைப் பற்றி அழைத்தாள் அவள்.

அன்று பற்றிய நட்புக் கரத்தை எங்கள் பள்ளி இறுதி வகுப்பு வரை விடவில்லை. இருவரும் அடித்துக்கொள்ளாத அளவிற்குச் சண்டை போடுவோம். ஆனால், அதில் நிச்சயம் அன்பு இருக்கும்.

அவளுக்குப் பெற்றோர் இல்லை என்று கேள்விப்பட்ட போது, அப்போது பெரிதாக ஒன்றும் தோன்றியதில்லை. பெற்றோரின் அருமை தெரிந்த பின்பு அவளுக்காக பெரிதும் வருந்தியிருக்கிறேன்.

ஆனால், அவளோ அதை ஒருபோதும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை.
அதேநேரம் தங்களது பிள்ளைகளுக்கு ஈடாக, அவளை வளர்த்த அத்தை, மாமாவைப் பார்த்து வியந்தும் இருக்கிறேன்.

சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள், யாரையும் வார்த்தைகளால் காயப்படுத்த மாட்டாள். தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில் திறமைசாலி. படிப்பில் முதலிடத்தை மட்டும் யாருக்கும் விட்டுக்கொடுக்காதவள்.

என் எழுத்துக்களுக்கு முதல் ரசிகை. இறுதியில் என் எழுத்து வேட்கைக்கு உயிரெழுத்தாய் அமைந்தவளும் அவளே. 

No comments:

Post a Comment