Saturday, June 20, 2015

உறவெனும் புதிய வானில்



ஹாய் ப்ரெண்ட்ஸ்,

உறவெனும் புதிய வானில் என்று நான் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலை, பிளாகில் முதல் தொடராக பதிவிடுகிறேன். 

முடிந்தவரை கதையைப் படிக்கும் தோழிகள், உங்களது மேலான கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இதோ உங்களுக்காக கதையின் முதல் இரண்டு அத்தியாயங்கள்.  

 

உறவெனும் புதிய வானில் 



 அத்தியாயம் - 1


பொண்ணு, மாப்பிள்ளைக்குக் கொடுக்க பால், பழம் எடுத்து வச்சியா சுகுணா?”

வச்சிட்டேன் அண்ணி!”

ஏன்டீ வர்ஷாஆரத்தி கரைச்சி வைக்கச் சொன்னேனே வச்சியா?”

வச்சிட்டேன் அத்தை!”

இந்த ஸ்ரீ ராம் எங்கே போனான்? மாப்பிள்ள வரும்போது அவன் இருக்கணும்னு தெரியாதா? பிரபா! மாடி ரூமை அலங்காரம் பண்ணிட்டியா?” 

வீட்டிலிருக்கும் அத்தனைப் பேரையும் தமது வெண்கலக் குரலில் அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்த தமக்கையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் கணேசன்.

அவருக்கு மட்டுமல்ல, அந்த வீட்டிலிருந்த அத்தனைப் பேருக்குமே, பரிமளத்தின் குணம் பழகிப் போன ஒன்று

ஏண்டா தம்பி! போனோமா வந்தோமான்னு இருக்கறதில்லவீட்ல போட்டது போட்டபடியிருக்குநான் ஒருத்தி இல்லைனா இந்த வீட்ல யாருக்கும் எதையெதை எப்பப்போ செய்யணுங்கறது கூடத் தெரியமாட்டேங்குது…”

வீட்டிற்குள் நுழைந்த தம்பியையும் ஒரு அதட்டல் போட்டுவிட்டு, முடியாமல் சோஃபாவில் அமர்ந்தார் பரிமளம்.

சும்மா உன்னை வருத்திக்காதேக்கா! எது எது நடக்கணுமோ சரியாதான் நடந்துட்டு இருக்குஎன்றார்.

அவ்வளவுதான்பரிமளத்திற்கு வந்ததே கோபம்.

அப்போ நான் வேணும்னே கத்திட்டு இருக்கேனா? ஆம்பிள்ள உனக்கு என்ன தெரியும் வீட்ல இருக்க வேலையைப் பத்தி. பொண்ணும், மாப்பிள்ளையும் மருவீட்டுக்கு வராங்களேங்கற நினைப்பு கொஞ்சம் கூட இல்லாம, நீ ஒரு பக்கம் வெளியே போயிட்ட. உன் புள்ள அவன் எங்கேயோ கிளம்பிப் போயிட்டான். இருக்கற வேலையை யார் பாக்கறது?” 

கணேசனுக்குக் கண்ணைக் கட்டியது

தான் வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இருந்திருக்கலாம்என்று தமக்கையின் விஷயத்தில் எப்போதும் போல இப்போதும் அவருக்கு ஞானோதயம் கடைசியில் தான் வந்தது.

என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

அப்பா! அவர் உங்களை கொஞ்சம் மேலே வரச்சொன்னார்சொல்லிவிட்டு தந்தையைப் பார்த்து ரகசியச் சிரிப்பு சிரித்தாள் வர்ஷா.

இதோ போறேம்மாஎன்றவர், வேட்டியை மடித்துக் கட்டியபடி மாடியை நோக்கி நடந்தார்.
அத்தை! அம்மா உங்களை வந்து ஒருமுறை எல்லாம் சரியாஇருக்கான்னு கொஞ்சம் பார்க்கச் சொன்னாங்கஎன்றாள்.

இதுக்கும் நான்தான் வரணுமா…” நொடித்துக்கொண்டே எழுந்தாலும், பரிமளத்தின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.

ம், எல்லாம் சரியாயிருக்கு. ஆரத்தி தட்டையும் தேங்காவையும் இப்படி முன்னால கொண்டு வந்துவை. அப்படியே கணேசனை இந்தப் பூசணிக்காயைச் சுத்தி உடைச்சிடச் சொல்லு. ஊர் கண்ணெல்லாம் என் குழந்தை மேலதான். ரெண்டு நாள் ஆகிடுச்சி அவளைப் பார்த்து. அத்தை அத்தைன்னு இதோ, இந்த முந்தானையைப் பிடிச்சிட்டே சுத்தி வருவா. இனி யாரு இப்படில்லாம்என் கண்ணுலயே நிக்கிறா…”

கலங்கிய விழிகளைத் துடைத்துக் கொண்டே தனது அறைக்குள் சென்று அமர்ந்து கொள்ள, சுகுணா அவரைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

மேடிட்டிருந்த வயிற்றைப் பிடித்தபடி, ஆயாசத்துடன் சோஃபாவில் சாய்ந்தாள் வர்ஷா.
இரண்டு வீட்டிற்கு முன்பாகவே பைக்கின் எஞ்சினை நிறுத்தி, சப்தமில்லாமல் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தினான் ஸ்ரீ ராம்.

பூனை போல அடிமேல் அடிவைத்து வந்தவன், தலையை மட்டும் உள்ளே நுழைத்து வீட்டைச் சுற்றி ஒரு பார்வை பார்த்தான். பரிமளத்தின் புலம்பல் ஒலி மட்டுமே அவனுக்குக் கேட்டது

சோஃபாவில் கண்களை மூடி அமர்ந்திருந்ததங்கையை, “ஸ்.. வர்ஷி!” என்றழைத்தான்.

திரும்பிப் பார்த்தவள், “என்னண்ணா நீ? காலைல வெளியே போனஇந்த நேரத்துக்குத் திரும்பி வர. அத்தை உன்னைப் பார்த்தாங்க, நீ அவ்வளவுதான்என்றாள்.

ஆஹ்ஹ்ஓயாம ரேடியோ ஜாக்கி மாதிரி பேசாதே. ஹிட்லர் எங்கே?” என்று இரகசியக் குரலில் கேட்டான்.

அவங்க ரூம்ல இருக்காங்க…”

ஹப்பா!” என்று நிம்மதி பெருமூச்சு விட்டவன், உள்ளே வந்தான்.

ரெண்டு நாளா கல்யாண வீட்டையே கதிகலங்க வச்ச ஹிட்லர் எதுக்கு அழறாங்க?”

அவங்களோட செல்லப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி மாப்பிள்ளை வீட்ல விட்டுட்டு வந்து ரெண்டுநாள் ஆகிடுச்சாம்…”

இருக்கற இடம் தெரியாமல் இருக்கும் உனக்காக அழுதாலும் பரவாயில்ல, இந்த மாதிரி பத்து அத்தையை ஒண்ணா சமாளிப்பா அவள். அவளுக்காகவாஅழறாங்க?

சின்னதுலயிருந்தே அவங்களோட செல்லமாச்சேஅதான்தோளைக் குலுக்கினாள் வர்ஷா.

உண்மைதான். நான்கூட இனிமே யார்கூடச் சண்டை போடுறதுன்னு தெரியாமல் தவிச்சிட்டு இருக்கேன். ஆஃபிஸ்லயிருந்து வந்தா எவ்ளோ எண்டர்டெயின்மெண்டா இருக்கும் தெரியுமா?பரிதாபமாகச் சொன்னான்.

சீக்கிரமா நீயும் கல்யாணம் பண்ணிக்கோண்ணா! அண்ணி வந்துட்டா நீ சண்டை போட வெளியே ஆள் தேட வேணாம்என்று சிரித்தாள் வர்ஷா.

ஹுக்கும். சஹானா கல்யாணத்துல கூட, என்னடா ஸ்ரீராம் ரூட் கிளியரா? ஜமாய்ன்னு ஆளாளுக்குச் சொன்னாங்க. இதுல யாருன்னே தெரியாத ரெண்டு மாமிங்க ஜாதகத்தையே கொண்டு வந்து நீட்டினாங்க.  

ஆனா, உன்னைத் தவிர யாருக்குமே எனக்குக் கல்யாணம் பண்ணணும்ங்கற ஐடியா இல்ல போலிருக்கே…” என்று கவலையும், சலிப்புமாகத் தாடையைத் தடவிக் கொண்டான்.

உனக்கென்னடா இருபத்தெட்டு வயசுதானே ஆகுது. இன்னும் ஒரு வருஷம் போகட்டும். வர்ஷா குழந்தைக்கும் ஒரு ஆறேழு மாசமாகிடும். சஹானாவும் ஒரு குழந்தையை பெத்துட்டானா, நானும் கொஞ்சம் ஃப்ரீ ஆகிக்குவேன்…” மகனுக்குப் பதில் சொன்னார் அங்கு வந்த சுகுணா.

இதென்ன அநியாயமா இருக்கு? எனக்குக் கல்யாணம் செய்றதுக்கும். இவங்களோட வம்சவிருத்திக்கும் என்ன கனெக்ஷன்? ஒண்ணுமே புரியலையேடா நாராயணா!” புலம்பினான் ஸ்ரீராம்.

எனக்குத் தான் இருபத்தேழு வயசுலயே கல்யாணத்தைப் பண்ணிட்டாங்க. நீயாவது கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இரேன்டா.
 
மைத்துனனுக்கு இலவச ஆலோசனையை அள்ளி வழங்கியபடி அங்கே வந்தான் பிரபாகர்.
அந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை. அத்தை பரிமளத்தின் ஒரே தவப்புதல்வன்ஸ்ரீராமின் உற்ற நண்பன் என்று பிரபாகருக்குப் பல அவதாரங்கள்.

ஏன் இப்போ சீக்கிரம் கல்யாணம் செய்ததுல நீங்க எதுல குறைஞ்சிட்டீங்களாம்?” 

அதானேவிடாதே வர்ஷா கேளு…” என்று தங்கையை மேலும் தூண்டிவிட்டான் ஸ்ரீ ராம்.

ஏன்டா டேய்!’ என்பது போலஅவனை முறைத்தபிரபா, “அதுக்கில்ல வர்ஷி! சீக்கிரம் கல்யாணம் செய்துகிட்டா நிறைய பொறுப்புகள் வந்திடும்னு சொல்றேம்மா. இவனுக்கு ஏற்கெனவே விளையாட்டுப் புத்தி ஜாஸ்தி இல்லயாஅதுக்குத்தான் சொன்னேன்சமாளிப்பாகச் சொன்னான் அவன்.

ம்ம்..” என்று உதட்டைச் சுழித்த மனைவியை, ஆசையுடன் பார்த்தான் பிரபாகர்.

இருவரையும் மாறி மாறிப் பார்த்த ஸ்ரீராம், “டேய்! அடங்குங்கடா! ஒரு வயசுப் பையனைப் பக்கத்துல வச்சிகிட்டு, இதுங்கஅடிக்கிற கூத்து இருக்கே தாங்கலடா சாமி!” என்று சப்தமாகப் புலம்பினான்.

டேய் ஸ்ரீராம்! இதான் நீ ஒருமணி நேரத்தில்வர்ற இலட்சணமா?” கேட்டுக் கொண்டே அங்கு வந்த அத்தையைப் பார்த்ததும், ஐயைய்யோ!என்று ஒரே தாவாக தாவிக் குதித்து மாடிக்கு ஓடினான் அவன்.

நான் மாடிக்கு ஏறி வரமாட்டேங்கற தைரியமாநல்ல நாளாச்சேன்னு பாக்கறேன்உனக்கு இருக்கு ஒரு நாளைக்குப் பாரு…”

பரிமளம் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்க, சுகுணா சிரிப்புடன் அங்கிருந்து சென்றார்.

அண்ணனின் அவஸ்தையைப் பார்த்து வர்ஷா கிளுக்கிச் சிரிக்க, பிரபா தலையைத் தடவிக்கொண்டு சிரித்தான்.

என்னடி சிரிப்பு வேண்டியிருக்கு? வேலையெல்லாம் முடிஞ்சிதில்லகொஞ்ச நேரம் போய்ப் படு. சஹானா வரும்போது, நீ எழுந்து வந்தா போதும்மருமகளிடம் அதட்டலாகக் கூறியவர், “ஏண்டா! அவள் முகம் சோர்ந்து போயிருக்கேபார்த்து என்னன்னு கவனிக்கக் கூடாதா? எப்பப் பாரு பேச்சு, சிரிப்புஅவளை ரூமுக்குக் கூட்டிட்டுப் போஎன்று கட்டளையிட்டார்.

சரிம்மா!என்றவன், வாவா என்பது போல மனைவியிடம் செய்கை செய்து, புன்னகையுடன் அவளை அழைத்துச் சென்றான்

சோஃபாவில் அமர்ந்தவரது பார்வை, ஹாலில் மாட்டியிருந்த சஹானாவின் போட்டோவில் பதிய, அவரது உதடுகள் இறுக்கம் தளர்ந்து மெல்லப் புன்னகைத்தன

 

அத்தியாயம்– 2





தென்காசியை நோக்கிச் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த அந்தக் காரின் தோற்றமே சொல்லிவிடும், அதன் விலை லட்சக்கணக்கில் என்று

புஷ்பக விமானத்தில் செல்வது போல சாலையில் மிதந்து கொண்டிருந்தது அந்த வாகனம். அதில் பயணித்துக் கொண்டிருந்த சஹானாவின் மனமோ, இறக்கை இல்லாமல் பறந்து கொண்டிருந்தது.

இன்னும் பத்தே நிமிடங்கள்தனது பிறந்த வீட்டு மனிதர்களுடன் அவள் இருக்கப் போகிறாள்நினைவே தித்தித்தது அவளுக்கு

மனத்தின் பரபரப்பு அவளது முகத்திலேயே தெரிந்தது. அருகிலிருந்த அவளது கணவன் பிரபு புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.

விட்டா காருக்கு முன்னாடி நீ பறந்து போயிடுவ போல…” என்றான் கேலியாக

திரும்பிப் பார்த்து நாணத்துடன் புன்னகைத்தவள், “சொன்னா உங்களுக்குப் புரியாது. கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்குப் போன பிறகு முதன்முதல்ல அம்மா விட்டுக்கு வரும் பெண்களுக்கு மட்டும் தான் இது புரியும்என்றாள்.

டிரைவர் அண்ணா! கார் ஏசியை நிறுத்திட்டு, கண்ணாடியை இறக்கி விட்டுடுங்க. எங்க ஊர் க்ளைமேட்டுக்கு ஏசியே தேவையில்லைஎன்றாள்.

சரிங்கம்மா…” என்றார் டிரைவர்.

அடேங்கப்பா ஊர் பெருமை தாங்கலையே…” கிண்டலாகச் சொன்னான் பிரபு.

இதையும் சொன்னா புரியாது. அனுபவிங்கநீங்க திரும்பி சென்னைப் போகவே யோசிப்பீங்க…”

அதுமட்டும் நடக்காது. இந்த ஊர் வேணா எனக்குப் பிடிச்சிப் போகலாம்சென்னையை விட்டு நானாவது வர்றதாவது. என் உயிரே அங்கே தான் இருக்கு…”

அதான் தெரியுமே. கல்யாணம் ஆன மறுநாளே ஆஃபிஸுக்குப் போன ஆள்தானே நீங்க. அத்தை சரியாத் தான் சொன்னாங்க. அவனை எந்த அளவுக்கு வீட்ல கட்டிப் போட்டு வைக்க முடியுதோ அதைச்செய். இல்லனா இவன் வீடு தங்கமாட்டான்னு சொன்னது சரியா இருக்குஎன்றாள்.

அத்தையும், மருமகளும் கூட்டணி அமைக்கறீங்களா? இது எனக்கு நல்லதில்லயே…”

உங்களுக்கு எல்லாமே வேடிக்கைதான்என்றவள், “இதோ இதுதான் நாங்க படிச்ச ஸ்கூல். இந்தப் பக்கம் போய் லெஃப்ட்ல திரும்பினா அப்பாவோட ஆஃபிஸ்இதுதான் காசிவிஸ்வநாதர் கோயில் அப்படியே ஒரு கும்பிடு போட்டுக்கோங்கதனது இயல்பை மீறி படபடத்துக் கொண்டே வந்தாள் சஹானா.

இரண்டு நாட்களாக அளந்து அளந்து பேசியவள், இன்று இத்தனைக் குதூகலத்துடன் வாய் ஓயாமல் பேசுகிறாளே!’ என்று எண்ணிக் கொண்ட பிரபுவிற்கு புன்னகை அரும்பியது.

*************

சுகுணா! ஆரத்தியை இப்படிவை. அவங்க எந்த நேரமும் வரலாம். பிரபாகரும், ஸ்ரீராமும் வந்தாங்களா?” 

வந்தாச்சு அத்தை! வந்தாச்சுஎன்றபடி ஓடி வந்தான் ஸ்ரீராம்.

இங்கே பாருபிரபாகரை பேர் சொல்லிக் கூப்பிடுறா மாதிரி, சின்னவரையும் கூப்பிடாதே புரியுதா?”

முதல்ல அவர் இருக்கும் போது நீங்க இவனைப் பேர் சொல்லிக் கூப்பிடாதீங்க. சஹி வீட்டுக்காரர் தப்பா நினைச்சிக்கப் போறார்என்று அத்தையை மடக்கினான் ஸ்ரீராம்.

அதென்னடா சஹி வீட்டுக்காரர். மாப்பிள்ளன்னு சொல்லுடா. கழுதைக்கு ஆகறா மாதிரி வயசாகுது இன்னும் எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கணுமா உனக்கு?”

வயசாகுதுன்னு தெரியுதுஎனக்குக் கல்யாணம் பண்ணனும்னு மட்டும் தோணல உனக்கு…” வேண்டுமென்றே தனது கல்யாணப் பேச்சை துவக்கினான் அவன்.

அவனுக்குத் தெரியும் தனது திருமணப் பேச்சை எடுத்தால் அத்தை எப்படி ரியாக்ஷன் கொடுப்பார் என்று. மொத்த வீட்டையும் அடக்கியாளும் தனது ஹிட்லர் அத்தையை உசுப்பேத்திப் பார்ப்பதில் அவனுக்குத் தனிச் சந்தோஷம்.

இருடா! சஹானா ஊருக்குக் கிளம்பிப் போகட்டும் அப்புறம் இருக்கு உனக்கு…”என்றார் எரிச்சலுடன்

அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்று அவனுக்கு மட்டுமல்ல அந்தக் குடும்பத்துக்கே தெரியுமாதலால் அனைவரும் சப்தமில்லாமல் சிரித்துக்கொண்டனர்.

அதேநேரம் வாசலில் கார் வந்து நிற்கவும், சுகுணாவும், வர்ஷாவும் ஆரத்தியுடன் அங்கு விரைய, பரிமளம் கதவருகில் நின்று கண்ணீர் மல்க எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சம்பிரதாயங்கள் முடிந்து உள்ளே வந்த மணமக்கள் பூஜையறைக்குச் சென்று வணங்கிவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தனர்.

அதுவரை தனது கண்களில் படாத அத்தையைத் தேடினாள் சஹானா.

அத்தை எங்கேம்மா?”

அவங்க ரூம்ல இருக்காங்கடா. நீ கொஞ்ச நேரம் உட்கார்ந்திரு வருவாங்கஎன்றார்.

என்னம்மா இதெல்லாம்…” சலித்துக் கொண்டவள், “ஏங்க என்னோடு கொஞ்சம் வாங்ளேன்என்று கணவனையும் சேர்த்து அழைத்துக் கொண்டு அத்தையின் அறைக்குச் சென்றாள்.

அத்தை! திஸ் இஸ் டூ மச். உங்க பொண்ணு வந்திருகேன் வந்து வரவேற்க மாட்டீங்களா?” என்றாள் கோபத்துடன்.

அதுடா…” என்று தயங்கினார் பரிமளம்.

அத்தை இது ரெண்டாயிரத்துப் பதினைந்து. இன்னும் இந்த மூடநம்பிக்கையெல்லாம் பார்த்துகிட்டு. வாங்க நீங்கதான் எங்களை முதல்ல ஆசீர்வாதம் பண்ணனும்என்றவள் கால்களில் விழ, பரிமளம் நெகிழ்ந்து போனார்.

பிரபுவும் காலைத் தொட்டு வணங்க, பரிமளம் புளங்காகிதம் அடைந்தார்

ம்ஹும்…” அசுவாரசியத்துடன் தலையை அசைத்தான் ஸ்ரீராம்.

என்னடா?” – பிரபாகர்.

ஹிட்லர் க்ளீன்போல்ட். இனி நம்ம சைட் ரொம்ப வீக்கா போச்சு. சின்ன மாப்பிள்ளைய நம்ம பக்கம் இழுக்காட்டி, அத்தை சைடு ரொம்ப ஸ்ட்ராங்க் ஆகிடுமே

இதை நான் யோசிக்கவே இல்லயேடா…”

உனக்கெங்க உன் பொண்டாட்டிகிட்ட ஈன்னு பல்லைக் காட்டவே சரியாஇருக்கு.”

என் பொண்டாட்டிகிட்ட தானே பல்லைக் காட்றேன். அடுத்தவன் பொண்டாட்டியைப் பார்த்தா சிரிக்கிறேன்என்றான் கோபத்துடன்.

! உனக்கு அந்த ஐடியா வேற இருக்கா? வர்ஷி! இங்கே வாயேன்…” என்று குரல் கொடுத்தான்.

டேய்! வாயை வச்சிட்டு சும்மா இருக்கமாட்ட? இல்லாததும் பொல்லாததும் அவகிட்ட ஏதாவது சொல்லிடுவ. அவள் மூஞ்சியைத் தூக்கி வச்சிகிட்டு, என் உயிரை எடுப்பாஎன்று கடுகடுத்தான்.

யாரு உயிரை எடுக்கறது?” கேட்டுக்கொண்டே அங்கு வந்தாள் வர்ஷா.

அது…” பிரபாகர் ஆரம்பிக்கும் போதே இடைபுகுந்தான் ஸ்ரீராம்.

நீதான் வேற யாரு? கூடப் பிறந்த அண்ணன்கிட்டயே இப்படிச் சொல்றான். நான் அப்போவோ சொன்னேன். இந்தப் படுபாவிய கல்யாணம் செய்துக்காதன்னு. நீதான் அப்பா கிழிச்ச கோட்டைத் தாண்டமாட்டேன்னு இவனைக் கட்டிகிட்ட. இன்னைக்கு இப்படிப் பேச்சு வாங்கிக்கிறதேவையாஇதெல்லாம்?”

அவன் பேசி முடிக்கும் வரை இமைக்காமல் அவனையே பார்த்த வர்ஷா, திரும்பி கணவனை ஒரு பார்வை பார்த்தாள். அவன் போலி பயத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்

கீழுதட்டை அழுந்த கடித்தவள், கடவுளே! என்பது போல சலித்துக் கொண்டாள்.

உங்க ரெண்டு பேருக்கும் தான் வேலையே இல்ல. எனக்குமா இல்லரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டு என்னைக் கலாய்க்கறீங்க. இன்னொரு முறை என்னைக் கூப்பிட்டுப் பாருங்க சொல்றேன்என்று பல்லைக் கடித்தாள்.

மிஞ்சி மிஞ்சி போனா என்னடா பண்ணுவாங்க?” – ஸ்ரீராம்.

என்ன பண்ணுவாங்க?” – பிரபாகர்.

எனக்கு ஒருவேளை சாப்பாடு போட மாட்டாங்க. நான் ஹோட்டல்ல போய்த் தேவையானதை சாப்பிட்டுக்குவேன்…”

மாப்பிள்ளைங்கற மரியாதைக்கு எனக்குச் சாப்பாடு போட்டுடுவாங்க. ஆனா, உன் தங்கச்சி என்னை ரூமுக்குள்ள சேர்க்கமாட்டா. அதனால நானும்…”என்றதும், “என்னது?என்று ஆத்திரத்துடன் இடைபுகுந்தாள் வர்ஷா.

மொட்டை மாடியில படுத்துக்குவேன்னு சொல்லவந்தேன். எதையுமே முழுசா கேட்க மாட்டியா நீ?” என்ற கணவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தாள்.

ரெண்டு பேரும் திருந்தவே மாட்டீங்க. ஒத்தையா ஊருக்குப் போய்க் கஷ்டப்பட்டா தான் என் அருமை தெரியும்…” சிடுசிடுத்து விட்டுச் சென்றாள் வர்ஷா.  

பின்ன சும்மா அங்கேயிருந்து நாங்க என்ன பண்றோம்னு எட்டி எட்டிப் பார்த்துட்டு இருந்தா இப்படித்தான்...” என்ற ஸ்ரீராம், “இன்னைக்கு வர்ஷாவோட கோட்டா ஓவர். இப்போ தான் நிம்மதியா இருக்கு. அடுத்த பிராஜெக்ட் சின்ன மாப்பிள்ளை…” என்றான்.
 



உறவு வளரும்...

No comments:

Post a Comment