அத்தியாயம் – 3
ஐவரின் சிரிப்புச் சப்தமும் அந்த வீட்டையே அதிரவைத்துக் கொண்டிருந்தது.
“எப்பவுமே அத்தை இப்படித்தான் உங்களை மிரட்டிட்டே இருப்பாங்களா?” சிரித்துக் கொண்டே கேட்டான் பிரபு.
“அவங்க எனக்குத் தான் அத்தை. உங்களுக்குப் பெரியம்மா!” திருத்தினாள் சஹானா.
“ஓகே பெரியம்மா!” என்றான் அவன் இலகுவாக.
“அத்தை எப்பவுமே அப்படித்தான். அதுவும் எங்க கல்யாண நேரத்துல எங்க அண்ணன் பண்ணின வேலையைப் பார்த்ததிலிருந்து அது ரெண்டு மடங்கா மாறிடுச்சி…” அடக்கமட்டாமல் வர்ஷா சிரிக்க, சஹானாவும் இணைந்து கொண்டாள்.
“அதென்னது அப்படி ஒரு விஷயம்?”
“அது ஒண்ணும் இல்ல மாப்பிள்ள… இவங்க கல்யாண நேரத்துல எனக்கு மூணு மாசத்துக்கு நார்த்ல ட்ரெயினிங்னு அனுப்பினாங்க. முடிச்சிட்டு வரும் போது மெயின் ஆஃபிஸ்ல என்னோட வேலைப் பார்த்த ஒரு லேடி இங்கே இருக்க பிரான்ச் ஆஃபிஸுக்கு வந்தாங்க.
அவங்க வந்தது ஆஃபிஸ் வேலைக்கு. என்னை மூணு மாசம் பழக்கம் என்பதால நம்ம வீட்டுப் பின் போர்ஷன்லயே பேயிங் கெஸ்டா தங்கிகிட்டாங்க. ஆனா, அவங்க வந்ததில இருந்தே, எங்க அத்தை என்னை உர்ருன்னு பார்த்துகிட்டு நோட்டம் விடுறதையே வேலையா வச்சிட்டு இருந்தாங்க.
நானும் மூணு நாலு நாள் பார்த்தேன்… அதுக்கு மேல தாங்க முடியல. ஒரு நாள் நைட் அவங்க ஆஃபிஸ் விஷயமா என்கிட்ட பேச என்னை வரச் சொல்லி கூப்பிட்டாங்கன்னு நான் போனேன். இந்த அத்தை விடாம ஃபாலோ பண்ணி வந்தாங்க போல எனக்குத் தெரியாது.
அந்த நேரம் பார்த்து பவர் கட் வேற ஆகிடுச்சி… மெழுகுவர்த்தி ஏத்தி வச்சி வேலை பார்த்துட்டு இருந்தோம். இவங்களுக்கு ஏற்கெனவே கொஞ்சம் பார்வை கம்மி. இதுல கரண்ட் வேற இல்ல… அத்தைக்கு நாங்க உட்கார்ந்திருந்தது தெரியல. ஆனா, சுவத்துல தெரிஞ்ச நிழலைப் பார்த்து எங்களை தப்பா நினைச்சிட்டாங்க.
வேலையை முடிச்சிட்டு நான் என் ரூமுக்குப் போன கொஞ்ச நேரத்துல இவங்க பின்னாலயே வந்து… குடும்ப மானம், கௌரவம் அது இதுன்னு ஒரு பத்து நிமிஷத்துக்கு லெக்சர் கொடுக்க, எனக்கு என்னடா இதுன்னு யோசனை…
கடைசில அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு வேணாம்டா. பார்க்க வெண்ணை பொம்மை மாதிரி நல்லாத்தான் இருக்கா. அதுக்காக நம்ம குடும்பத்துல இதெல்லாம் பழக்கமில்லடா. உனக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க அவங்களை நினைச்சிப் பாருன்னு போட்டாங்க பாருங்க… எனக்குச் சிரிப்புத் தான் வந்தது.
ஆனா, அத்தை முன்னால சிரிச்சா… எல்லாமே தெரிஞ்சிடும். அதனால அத்தையை அப்படியே ஃபாலோ பண்ணி நானும், இதுவரைக்கும் இல்லனா இனி பழகிக்கங்க… நான் முடிவு பண்ணிட்டேன்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டேன். அவ்வளவு தான் சோகமா ஒரு லுக்கு விட்டுட்டே வெளியே போனாங்க பார்க்கணுமே…
ரெண்டு நாள் யாருக்கும் தெரியாம என்கிட்ட பேசறதும், நான் மறுக்கறதுமா இருந்தது. ஒரு நாள் ரொம்ப கோபமா அவங்க பேச, நான் மானசீகமா அந்த மேடம்கிட்ட ஒரு மன்னிப்பைக் கேட்டுகிட்டு, சடார்னு எங்க அத்தை கால்ல விழுந்துட்டேன்.
எங்க அத்தை பதறிப் போயிட்டாங்க. நான் நிதானமா, இனி ஒண்ணுமே பண்ண முடியாது அத்தை… அந்தப் பொண்ணு மூணு மாசம் கர்ப்பம்னு ஒரு பிட்டைப் போட்டேன்…” என்றவன் நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தான்.
“பெரியம்மா… என்ன சொன்னாங்க?” ஆர்வத்துடன் கேட்டான் பிரபு.
“அம்மா சொல்ற நிலைமைலயா இருந்தாங்க... இவன் போட்ட போடுல அவங்க மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க” என்று சிரித்தான் பிரபாகர்.
“என்னங்க இப்படிச் சிரிக்கிறீங்க…?” – பிரபு.
“இன்னைக்குச் சிரிக்கிறாருங்க அன்னைக்கு அவர் முகத்தைப் பார்த்திருக்கணுமே…” சொல்லிவிட்டுச் சிரித்தாள் வர்ஷா.
“அப்புறம் என்ன தான் ஆச்சு?”
“எங்க அப்பா அண்ணனை அடிக்காம விட்டது பெரிய பாக்கியம். அப்படி ஒரு திட்டு வாங்கிகிட்டாங்க…” – சஹானா.
“மயக்கம் தெளிஞ்சி எழுந்தவங்க திரும்பப் புலம்ப ஆரம்பிக்க, அம்மா சமாதானம் பண்ணி விளக்கினாங்க. ஏன் அத்தை நான் அந்த ஊருக்கு போயே ரெண்டு மாசம் தான் ஆச்சு மூணு மாசம் கர்ப்பம்னு சொல்றேன்… இதுக்குப் போய் வீட்டையே கலக்கிட்டியேன்னு சொன்னதும் வந்தது பார் அவங்களுக்குக் கோபம்…” என்று சிரித்தான்.
“அதுல இருந்து நான் என் கல்யாணப் பேச்சை எடுத்தாலே… அத்தை டெரர் ஆகிடுவாங்க…” என்றான்.
மாடியில் ஒலித்த சிரிப்புச் சப்தத்தைக் கேட்ட பரிமளம் சந்தோஷத்துடன் புன்னகைத்துக் கொண்டார்.
“நான்கூட ரொம்பப் பெரிய இடமா இருக்கே, நமக்கு ஒத்து வருமான்னு நினைச்சேன். ஆனா, என் குழந்தை நல்ல இடத்துல தான் போய்ச் சேர்ந்திருக்கா. அந்தக் காசி விஸ்வநாதன் என்னைக்கும் எங்க குழந்தைகளோட இந்தச் சந்தோஷத்தை நிலைச்சியிருக்க செய்யணும்” என்று மனமுருக வேண்டிக் கொண்டார்.
“ஆமாங்க அண்ணி! சஹியோட மாமியார் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க. சம்மந்திதான் கொஞ்சம் வெடுக்குன்னு இருக்கார். ஆனா, சஹி அதையெல்லாம் சமாளிச்சிக்குவா. கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொன்னது தான் அவளுக்குக் கொஞ்சம் சங்கடமா இருந்தது.
ஆனா, அவங்க வீட்டு வேலையை மேற்பார்வை பார்த்துக்கவே இவளுக்குச் சரியா இருக்கும் போல” வியப்புடன், அதில் மகளுக்குக் கிடைத்திருக்கும் வளமான வாழ்க்கையை நினைத்தும் அவருக்கு மிகுந்த சந்தோஷம்.
“மணியாகுதே சுகுணா! வர்ஷாவைக் கூப்பிடு…” என்றார் பரிமளம்.
“நானே வந்துட்டேன் அத்தை! சஹி டைனிங்ல இருக்கா” என்றாள்.
*********
“எதுக்கு இப்படி ஒரு சிரிப்பு?”
“எவ்வளவு தான் முன்னேறினாலும், சில விஷயங்கள்ள நாம இன்னும் அப்படியே தான் இருக்கோம் இல்ல. கல்யாணம் ஆகி மூணு நாள் ஆகியாச்சு. இன்னும் இந்தச் சடங்கு சம்பிரதாயமெல்லாம் விடறா மாதிரி தெரியலையே.”
“சிலதெல்லாம் என்னைக்குமே விடமுடியாது…”
“எதையெல்லாம்…”
“அதைச் சொன்னா உனக்குப் புரியாது…” என்றவன், விளக்கை அணைத்தான்.
“கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமே…” தயக்கத்துடன் ஒலித்தது அவளது குரல்.
“ரெண்டு நாளா அதைத் தானே செய்துட்டு இருக்கோம்…” பேசினாலும் தனது காரியத்தில் அவன் கண்ணாக இருந்தான்.
அவனது கரத்தை விலக்கியவள், “ரெண்டு நாளா பேசறோம். ஆனா, அது என்னைப் பத்தியும் என் குடும்பத்தைப் பத்தியும் மட்டுமா தானே இருக்கு. உங்களைப் பத்தி எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க. கேட்டாலும் போகப் போகத் தெரியும் சொல்றீங்க…” சற்று சலிப்பும், எரிச்சலுமாகவே சொன்னாள்.
“கேட்டுத் தெரிஞ்சிக்கிறதை விட பார்த்தும் பழகியும் தெரிஞ்சிக்கறது பெட்டர். உன்னைப் பத்திக் கூட நானா எதுவும் கேட்கலையே. நீயே தானே சொன்ன. அதையும் நான் தடுக்காம கேட்டுகிட்டேன் இல்லயா?
உன்னோட உணர்வுகளுக்கு நான் மரியாதை கொடுக்கறா மாதிரி என்னோட உணர்வுகளை நீயும் மதிக்கணும். இது நியாயமான எதிர்பார்ப்பு தானே…”
சஹானாவால் இதற்கு ஆம் என்பதைத் தவிர வேறு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
அவளது மௌனத்தை அவன் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டான்.
ஜன்னல் வழியாக கசிந்த நிலவு வெளிச்சம் அந்த அறையை நிறைத்திருந்தது.
நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தவளுக்கு எதுவுமே புரியவில்லை. நன்றாக பேசுகிறான், பழகுகிறான். தன்னிடம் மட்டும் அல்ல… தனது குடும்பத்தினரிடமும் அவன் பழகுவதைக் குறை சொல்லவே முடியாது.
ஆனால், இந்த மூன்று நாட்களாக புரிந்தும் புரியாமல் இருந்த விஷயம், இப்போது தான் அவளுக்கு விளங்கியது. அவன் தன்னிடம் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறானா? இல்லை என்றே தோன்றியது.
‘இது உண்மையா? இல்லை, தனது மனக்குழப்பத்தினால் விளைந்த முடிவா?’
அவளால் தெளிவான முடிவிற்கு வர இயலவில்லை.
ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு இந்தத் திருமணப் பேச்சில் சற்று அதிருப்தியாகத் தான் இருந்தது. ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்த போது அங்கு வந்திருந்த பிரபுவின் அன்னை தான் அவளைப் பார்த்துவிட்டு தெரிந்தவர்கள் மூலமாக வீட்டில் வந்து பேசினார்கள்.
இரண்டு மூன்று வரன்கள் வந்திருக்க, ஸ்ரீ ராம் தான் பிரபுவிற்குக் கொடுக்க வேண்டும் தனது தங்கைக்கு எல்லாவிதத்திலும் அவந்தான் பொறுத்தம் என்று ஒற்றைக் காலில் நின்றான்.
அப்பாவிற்குக் கூட பெரிய இடமாக இருக்கிறதே என்ற தயக்கம். அதோடு அப்போது தான் பி.எட் முடித்துவிட்டு ஒரு பள்ளியில் இரண்டு மாதங்களாக அவள் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.
ஆனால், மாப்பிள்ளை வீட்டில் போட்ட முதல் கட்டளையே திருமணத்திற்குப் பின் வேலைக்குப் போகக் கூடாது. தங்களது குடும்பத்தையும், மகனையும் பார்த்துக் கொண்டால் போதும் என்றனர்.
ஆரம்பத்தில் யோசித்தவரை, ஸ்ரீ ராம் தான் பேசிப் பேசிக் கரைத்தான். அம்மாவும் சம்மதம் சொல்லிவிட, அப்பா சஹானாவிடம் பேசினார்.
ஆரம்பத்தில் அவள் சம்மதிக்காவிட்டாலும், பின்னர் சம்மதித்தாள். பெற்றவர்களது சந்தோஷத்திற்காக என்றாலும், அவளுக்கும் பிரபுவை மிகவும் பிடித்திருந்தது.
அவளுக்குள் இருந்த கற்பனைக்கு முழு வடிவம் கொடுத்தது போல அவன் இருந்தான். சந்தோஷத்துடன் திருமணத்திற்குத் தலையாட்டினாள்.
அவள் எதிர்பார்த்ததைப் போல திருமணமாகி இந்த இரண்டு நாட்களில் அவன் நடந்து கொள்ளவேயில்லை என்று புரிந்தது. அவனாக அவளிடம் பேசுவதே இல்லை. அப்படிப் பேசினாலும் அது ஏதோ கடமைக்காக என்பதை இப்போது தெளிவாக உணர முடிந்தது.
திருமணமான தம்பதிகளுக்குள் இருக்கும் இயல்பான எந்த நெருக்கத்தையும் அவன் காட்டவில்லை. ஆசையுடன் அவளிடம் பேசவில்லை… அவளை வேண்டுமென்றே சீண்டவில்லை.
யோசிக்க யோசிக்க அவளுக்குத் தலை வலித்தது. ஏனோ, தான் தவறு செய்து விட்டதைப் போல் ஒரு எண்ணம், தனக்குள் தோன்றுவதை அவளால் தாங்க முடியவில்லை.
“தூங்கலையா நீ?” அரைத்தூக்கத்தில் கேட்டவனது கரம் அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்தது.
சஹானாவின் கனவுகள் அத்தனையும், அவனது இரும்புப் பிடிக்குள் சிக்கி நொறுங்கிக் கொண்டிருந்தது.
உறவு வளரும்...
No comments:
Post a Comment