அத்தியாயம் – 4
ஈரத்தலையைத் துவட்டியபடி, தூரத்தில் தெரிந்த மலைமுகடுகளை வெறித்துக் கொண்டிருந்தாள் சஹானா.
இரவு முழுவதும் தூக்கமில்லாததால் கண்கள் கோவைப் பழமாக சிவந்திருந்தன.
“ஹாய் புதுப் பொண்ணு!” பின்னாலிருந்து தோள்களைப் பற்றிக் கொண்டு சிரித்த வர்ஷாவைப் பார்த்துச் சிரித்தாள்.
தங்கையிடம் தெரிந்த மாற்றத்தை, அவளது கண்கள் சுலபமாக அடையாளம் கண்டுகொண்டன. இரகசியமாகப் புன்னகைத்துக் கொண்டாள்.
தமக்கையின் பார்வை வீச்சில் சஹானாவின் முகம் லேசாக சிவந்தது.
“இன்னைக்குக் குற்றாலம் போகலாமான்னு உங்க அத்தான் கேட்டுட்டு வரச் சொன்னாரு. நீ இருக்கற நிலைமையைப் பார்த்தா… வர்றா மாதிரி தெரியலயே…” என்றாள் குறும்புடன்.
“அவர் தூங்கிட்டு இருக்கார். எழுந்ததும் கேட்டுச் சொல்றேங்கா!” என்றாள்.
“ம், நீங்களும் குடும்ப இஸ்திரி ஆகிட்டீங்க…” என்று கலகலத்த சகோதரியைப் பார்த்து முறுவலித்தாள்.
கொண்டு வந்த காஃபியை அவளிடம் கொடுத்துவிட்டு, சிறிது நேரம் தங்கையுடம் பேசிக்கொண்டிருந்தாள் வர்ஷா.
“சரி சஹி! நான் போய் அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன் நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ. எட்டரை மணிக்கு மேலே நீ வந்தா போதும்.”
தங்கையின் கன்னத்தைத் தடவி கொடுத்துவிட்டுக் கீழே சென்றாள்.
மேலும் சற்றுநேரம் அங்கேயே நின்றிருந்தவள், நேரமாவதை உணர்ந்து அறைக்குச் சென்றாள்.
உள்ளே நுழைந்ததுமே, கதவு தாளிடப்படும் சப்தம் கேட்டுத் திரும்பியவள் நிலைதடுமாறிப் போனாள்.
கணவனின் கையணைப்பில் திமிறினாள்.
“என்னதிது காலங்கார்த்தால…” அவனிடமிருந்து விலக முயன்றாள்.
“காலங்கார்த்தால ஒரு புது அனுபவம் தான். நீயும் வருவ வருவன்னு எவ்வளவு நேரம் வெயிட் பண்றது?”
சொல்லிக் கொண்டே அவளது கூந்தலில் வாசம் பிடித்தான்.
“ம், சூப்பர் வாசனை என்ன ஷாம்பூ?”
“இது சீயக்காய். அத்தைக்கு ஷாம்பு யூஸ் பண்றதெல்லாம் பிடிக்காது. வீட்ல தயார் பண்ற சீயக்காய் தான்” என்று விளக்கம் சொன்னாள்.
“காஃபி கொண்டு வரட்டுமா?”
“நான் காலைல காஃபியெல்லாம் சாப்பிடுறதில்ல…” உதடுகளால் அவளது கன்னத்தை உரசினான்.
கூச்சத்துடன், “இது எத்தனை நாளா?” என்றாள்.
“இன்னையில இருந்து தான். ஒன்லி ஸ்பெஷல் சாக்லேட் டிரிங்க்” என்றவன் அவளது இதழ்களை நோக்கி முன்னேறினான்.
சிரமத்துடன் தன்னிடமிருந்து அவனைப் பிரித்து விலக்கியவள், மேல்மூச்சு வாங்க தள்ளாடினாள்.
“பாரு எப்படி தடுமாறுற… இதுக்குத் தான் உன்னை இறுக்கமா பிடிச்சிட்டு இருந்தேன்” என்று அவளை நெருங்கினான்.
“ஐயோ கிட்ட வராதீங்க கோயிலுக்கு வேற போகணும். நான் ஏற்கெனவே குளிச்சிட்டேன்” என்று பின்னாலேயே விலகினாள்.
“அதனால என்ன? நான்தான் இருக்கேன் இல்ல. டோண்ட் வொர்ரி” என்று அவளை அணைத்தான்.
“ப்ளீஸ்!” கெஞ்சலாகச் சொன்னாள்.
விழிகளிரண்டும் அவனது முகம் பார்க்கத் தயங்கின.
“சரி. அப்போ என்னைப் பிரபுன்னு கூப்பிடு…”
“மாட்டேன்…” என்றாள் பிடிவாதமாக.
“அப்போ நானும் விடமாட்டேன்” அவனும் அழுத்தமாகச் சொன்னான்.
“எங்க அம்மா வீட்ல இதெல்லாம் பழக்கமில்ல… அம்மா காதுல இது விழுந்ததுனா நான் அவ்வளவு தான்” சிறு குழந்தையாக சிணுங்கினாள்.
“அப்போ தனியா இருக்கும் போது கூப்பிடு…” சொல்லிக் கொண்டே அவளது நெற்றியை முட்டினான்.
இப்போதைக்கு அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென்று எண்ணி, “ம்” என்றாள்.
“சரி, கூப்பிடு…”
“நாளையில இருந்து…”
“நன்றே செய் அதை இன்றே செய்” என்றான்.
‘சொல்லாவிட்டால் அவன் பிடிவாதமாக இப்படியே இருப்பான்’ என்று புரிந்து கொண்டவளாக, “ப்..பிர..பு!” என்றாள்.
“சோ நைஸ்” என்று சிரித்தவன், “இப்போ என் முகத்தைப் பார்த்துச் சொல்லு” என்று நெஞ்சில் புதைந்திருந்த அவளது முகத்தைப் பற்றி நிமிர்த்தினான்.
“ஹும்! இப்போ தானே சொன்னேன்…”
“ஒன் மோர் டைம். ப்ளீஸ்!” என்றான் காதலுடன்.
அவனது கண்கள் வெளிப்படுத்திய காதலில் கரைந்தவளாக, “பிரபு!” என்றாள்.
“தேங்க்யூ டார்லிங்!” என்றவன், அவளது இதழ்களைச் சிறை செய்தான்.
“இப்போ உன் குழப்பமெல்லாம் தீர்ந்துச்சா…”
அவர்களிருந்த சூழ்நிலை அவளை எதையும் யோசிக்க விடவில்லை.
“ம்” என்று புன்னகைத்தாள்.
“தட்ஸ் குட்…”என்றவனது வலிமையான கரங்களுக்கிடையில், அவளது பூவுடல் பாந்தமாக அடங்கிப் போனது.
பிரபுவுடன் பேசிக்கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தவள், தன்னைக் கண்டதும் நமுட்டுச் சிரிப்புச் சிரித்த தமக்கையைப் பார்த்து போலியாக கோபம் கொண்டாள்.
“அக்கா! சும்மா இருக்கமாட்டியா?” இரகசியக் குரலில் தமக்கையிடம் சொன்னாள்.
“சரி… சரி” என்றாளே தவிர, அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டுதான் இருந்தாள்.
சஹானாவுக்குமே வந்த சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, “மாப்பிள்ளை! பிள்ளைங்க எல்லாம் குற்றாலம் போயிட்டு வரலாம்னு பிரியப் படுறாங்க. நீங்க ரெஸ்ட் எடுக்கறதுன்னா எடுத்துக்கோங்க. இல்லனா…” என்றார் கணேசன்.
“நோ பிராப்ளம் மாமா. தாராளமா போய் வரலாம். இதை விட்டா நான் எப்போ இங்கே வருவேன்னு எனக்கே தெரியாது” என்றான்.
“என்ன மாப்பிள்ளை இப்படிச் சொல்றீங்க?” கவலையுடன் கேட்டார் சுகுணா.
“அது… அவரோட பிஸினஸ் அப்படிம்மா. கவலைப்படாதீங்க மாசத்துக்கு ஒரு முறை அவரை இங்கே கூட்டிட்டு வர்றது என் பொறுப்பு” என்றாள்.
திரும்பி அவளைப் பார்த்த பிரபு சிரித்துக் கொண்டான்.
அத்தியாயம் – 5
பெரியவர்கள் மூவரும் சிறியவர்கள் ஐவரை மட்டும் வழியனுப்பி விட்டு, மீதமிருந்த வேலைகளை கவனிக்கலாயினர்.
முதலில் காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு, சற்று நேரம் பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர்.
“ஈவ்னிங் டைம்ல இங்கே வரணும். காத்து சும்மா அள்ளிட்டுப் போகும்” என்றான் பிரபாகர்.
“ஆமாம். நாங்க ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் வீட்டுல இருந்து நடந்தே வந்திடுவோம். சென்னைல இருக்கவங்களுக்கு எப்படி பீச்சோ எங்க தென்காசி காரங்களுக்கு இந்த கோயில் என்றாள் வர்ஷா.
“கடல் காத்து கூட கொஞ்ச நேரத்தில் உடம்பை கசகசன்னு ஆக்கிடும். ஆனா, இந்தக் காத்து மூலிகைக் காத்து. நம்ம மைண்டையே ஃப்ரெஷ் ஆக்கிடும்” என்றான் ஸ்ரீ ராம்.
பிரபு திரும்பி மனைவியின் முகத்தைப் பார்த்தான்.
அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“நீ என்ன எதுவுமே பேசாமல் அமைதியா இருக்க… நேத்து உங்க ஊரைப் பத்தி அவ்வளவு பெருமையோட சொன்ன… இன்னைக்கு மௌன விரதமா?” என்றான்.
“அதான் இவங்கள்ளாம் சொல்றாங்களேன்னு விட்டுட்டேன்” என்று தோள்களைக் குலுக்கினாள்.
“சஹி எப்பவுமே அப்படித்தான் ரொம்ப யோசிச்சித் தான் பேசுவா. பேசினாலும் சரியா பேசவேண்டியதை மட்டும் பேசுவா. அப்பாவுக்கு அவளைக் லாயர் ஆக்கணும்னு ஆசை இருந்தது. ஆனா, இவளுக்கு டீச்சர் ஆகணும்னு கனவு, இலட்சியம் எல்லாம்” என்றாள்.
அதுதான் மண்ணோடு மண்ணாக போயிற்றே’ மனத்திற்குள் நினைத்துக் கொண்டதை வெளியில் சொல்லவில்லை அவள்.
“சரி கிளம்பலாமா…? நேரமாகுது” என்றாள்.
கிளம்பியவர்கள் நேராக ஐந்தருவியில் சென்று காரை நிறுத்தினர்.
இப்போ சீசன் இல்லாததால, கூட்டம் இல்ல. அடுத்த மாசமெல்லாம் இவ்வளவு ஃப்ரீயா நிக்கக் கூட முடியாது. இங்கேயிருந்து கொஞ்சம் மேலே போனா பழதோட்ட அருவி இருக்கு. அங்கே போகலாம். அதுக்கு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிட்டேன்” என்ற ஸ்ரீ ராம் அவர்களை அங்கே அழைத்துச் சென்றான்.
சீசனிலேயே அங்கெல்லாம் வர மக்கள் அத்தனை ஆர்வம் காட்டமாட்டார்கள். இப்போது சொல்லவே வேண்டாம். யாருமில்லாமல் அமைதியாக அருவியின் மெல்லிய சலசலப்பு மட்டுமே கேட்டது.
மலை மீது நடக்க வர்ஷா சற்றுச் சிரமப்பட, புதுத் தம்பதிகளை முன்னால் நடந்து செல்ல சொல்லிவிட்டு, மற்ற மூவரும் பின் தங்கினர்.
எதுவும் பேஎசாமல் அமைதியாக வந்தவள் தோள் மீது கையைப் போட்டு அணைத்தான் பிரபு.
அவள் அதற்கும் அமைதியாகவே இருந்தாள்.
“என்னாச்சு சஹி உனக்கு? ஏன் டல்லா இருக்க?” என்று அவளை நிறுத்தினான்.
“அதைச் சொல்றதால ஒண்ணும் ஆகப்போறதில்ல. ஆனா, நினைக்கும் போது கஷ்டமா இருக்கு” என்றாள்.
“எது? நீ வேலை பார்க்கணும்னு நினைச்சதா?” என்றான்.
“ம்”
“இதுக்கா இவ்வளவு டென்ஷன். ஒருநாள் இல்லைனாலும் ஒரு நாள் உன் படிப்பு பின்னால நிச்சயம் உனக்கு உதவும். வாழ்க்கைல நீ பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு. இதுக்கே சோர்ந்து போனா எப்படி?” என்றான்.
“மூளைக்குப் புரிஞ்சாலும் சில விஷயங்களை மனசு ஏத்துக்கறது இல்லயே. சாரி உங்க நல்ல மூடை நான் ஸ்பாயில் பண்ணிட்டேன்” – வருத்தத்துடன் சொன்னாள்.
“ஹ ஹ… இதுக்கேவா. அப்போ நான் உன்னை அடிக்கடி இப்படி மூட் அவுட் பண்ணுவேனே அதுக்கு என்ன செய்வ? நான் நிச்சயமா சாரியெல்லாம் கேட்கமாட்டேன்” என்று சிரித்தான்.
“உங்களுக்கு எல்லாத்திலேயும் விளையாட்டு…” என்று அவனது வயிற்றில் லேசாக குத்தினாள்.
“ம், இதான் என் சஹானா” என்று அவளை நெருங்கினான்.
“இந்த வேலையெல்லாம் இங்கே வேணாம். நடங்க நாம இன்னும் கொஞ்ச தூரம் நடக்கணும்.”
அவனை விலக்கிவிட்டு நடக்க ஆரம்பிக்க, அவனும் அவளோடு இணைந்து நடந்தான்.
“உங்க அத்தை எப்படி? உங்க வீட்டிலேயே தான் இருக்காங்களா?”
கேட்டவனை ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தாள்.
“யாரோ போகப் போகப் புரிஞ்சிக்கணும்னு சொன்னாங்க…” என்றாள் கேலியுடன்.
“அது உன்னைப் பத்தி அத்தையை பத்தி நான் உன்கிட்ட தான் கேட்க முடியும்” என்றான்.
“நல்ல சமாளிப்பு” என்றாள்.
“சரி விடு நான் ஸ்ரீ ராம் கிட்ட கேட்டுக்கறேன்” என்றான்.
“ஆனாலும், இந்த பொல்லாத கோபம் சும்மா சும்மா வரும் போல. சரி நீங்களா கேட்கறதால சொல்றேன். மாமா இருந்த வரைக்கும் அத்தை திருநெல்வேலில இருந்தாங்க. அத்தான் காலேஜ் படிச்சிட்டு இருந்த சமயத்தில் மாமா இறந்துட்டாங்க.
இது தாத்தாவோட வீடு. அத்தைக்கும் பங்கு இருக்கு. நம்ம வீட்டு பின் கட்டுல தான் அத்தை இருந்தாங்க. பூர்வீக வீடு இது. இதைத் தவிர எங்க அப்பா எங்களுக்குன்னு சேர்த்ததெல்லாம் கல்வி தான். இதை அடிக்கடி அப்பா சொல்வாங்க. நான் உங்களுக்கு அழியாத செல்வத்தை கொடுத்திருக்கேன். என்னைக்கும் உங்களை அது காப்பாத்தும்னு.”
“ஓ! அப்போ உங்க அக்காவும், பிரபாவும் லவ் மேரேஜா?”
“சேச்சே! அத்தான் அக்கா கூட பேசினது கூட கிடையாது. இவ்வளவு ஏன் நிமிர்ந்து பார்த்திருக்காரான்னு கூட தெரியாது. எப்பவும் அவருண்டு அவர் படிப்பு உண்டுன்னு இருப்பார். அக்காவும் அப்படித் தான் அநாவசியமா சிரிக்கக் கூட மாட்டாங்க.
நானும் ஸ்ரீ ராம் அண்ணாவும் முடியைப் பிடிச்சிக்காத குறையா சண்டை போடுவோம். அப்போ கூட வேண்டாம்டீ அண்ணண்டீன்னு தூரமா நின்னு குரல் கொடுப்பாங்களே தவிர, பக்கத்துல வந்து எங்களை விலக்கக் கூட மாட்டாங்க.
அப்பாவுக்கு எப்படி இவங்களுக்குக் கல்யாணம் செய்யணும்னு எண்ணம் வந்ததுன்னு எனக்குத் தெரியல. அத்தான் கேம்பஸ்ல செலக்ட் ஆகி கொஞ்ச நாள் பெங்களூர்ல வேலை செய்துட்டு இருந்தாங்க. கல்யாணம் ஆன சமயத்துல தான் அவங்களை ஐந்து வருஷ காண்ட்ராக்ட்ல யூ.எஸ் அனுப்பினாங்க.
இப்போ நம்ம கல்யாணத்துக்காக வந்திருக்காங்க. அக்கா மட்டும் டெலிவரி முடியும் வரை இருப்பாங்க. அத்தான் இன்னும் ரெண்டு நாளில் கிளம்பிடுவார்.”
ஒருவழியாக விஷயத்தைச் சொல்லி முடித்தவள், “இதான் எங்க வீட்டு சரித்திரம். இதுக்கு மேல சொல்லிக்கிறதுக்கு பெரிசா எதுவும் இல்ல” என்றாள்.
“ம், இண்ட்ரஸ்டிங்க்…” என்றான்.
“என்ன இங்கேயே நின்னுட்டீங்க… வாங்க போகலாம்” பின்னாலிருந்து ஸ்ரீராம் குரல் கொடுக்க, பேசிக் கொண்டே நடந்தனர்.
******
“சஹி! அடுத்தமுறை நீ வரும் போது உன் நாத்தனார் தேவியையும் கூட்டிட்டு வாம்மா” என்றார் சுகுணா.
“நிச்சயமா கூட்டிட்டு வரேம்மா.”
“சஹிமா! உன் புகுந்த வீட்டு மனுஷங்க பெரிய இடம். அதனால அவங்க ஏதாவது உன்னை பேசினா தப்பா எடுத்துக்காத. நம்மள புரிஞ்சிக்கிற வரைக்கும் அப்படித் தான் இருப்பாங்க. புரிஞ்சிகிட்டா எல்லாம் சரியாகிடும்” – இது பரிமளம்.
“சஹி கண்ணா! ஒரு வீட்டோட மருமகளாகிட்ட. இனி அந்த வீட்டு சுகதுக்கம் அத்தனையிலும் உனக்கு பங்கு இருக்கு. அதுதான் இனி உன் வீடு. எப்பேர் பட்ட விஷயமா இருந்தாலும் நாலு சுவத்துக்குள்ள இருக்கணும். அதைத் தாண்டி வந்தா அது குடும்ப விஷயம் இல்ல. பொது விஷயம்.
ஊர்ல இருக்க நாய், நரில இருந்து எல்லாம் பேசும். அடுத்தவங்க பேச்சுக்கு நீ என்னைக்கும் ஆளாகக் கூடாது. உன்னால முடிஞ்சத நீ செய். உன்னை ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கேங்கற திருப்தி எனக்கு இப்போ முழுசா வந்துடுச்சிடா.
எதுக்குப் பணிஞ்சி போகணுமோ பணிஞ்சி போ. அதேநேரம் உனக்கான சுயமரியாதையை யாரிடமும் விட்டுக் கொடுக்காதே.
என்னைக்கும் நீ சந்தோஷமா இருக்கங்கற அந்த செய்தி தான் நாங்க சுவாசிக்கிற மூச்சுக் காத்தா இருக்கும். நல்ல மருமகள்னு பேர் எடு. கணேசன் தன்னோட குழந்தைங்கள நல்லபடியா வளர்த்திருக்கான்னு சொல்லணும். அந்த வார்த்தையை நீ காப்பாத்துவியா கண்ணம்மா!”
நெக்குருகிக் கேட்ட தந்தையின் கரத்தைப் பற்ரிக் கொண்டவள், “நிச்சயமா செய்வேம்பா. என்னால என்னைக்கும் உங்களுக்கு கெட்ட பெயர் வராது. நம்ம குடும்பம் தலைகுனியற மாதிரி விஷயத்தை என்னைக்கும் செய்யமாட்டேன்” என்றாள்.
மகளை அணைத்துக் கொண்டவர், கண்ணீருடன் வழியனுப்பினார்.
அம்மாவிடமும், அத்தையிடமும் விடை பெரும் போது கண்கள் கலங்காமல் இருக்க பிரம்மபிரயத்தனம் செய்யவேண்டி இருந்தது.
“வரேன் அத்தான். சென்னை வந்தா நம்ம வீட்டுக்கு வராமல் போகக் கூடாது” என்று அன்புக் கட்டளையிட்டவள், “வரேங்க்கா! உடம்பைப் பார்த்துக்கோ. தினம் போன் பண்ணு” என்று தமக்கையை அணைத்துக் கொண்டாள்.
“பார்த்துப் போய்ட்டு வா சஹி!” வர்ஷா பாசத்துடன் சொன்னாள்.
“வரேண்ணா! என்றவளுக்கு கால்கள் பின்னியது.
அத்தனை நேரம் அடக்கி வைத்த அழுகை ஸ்ரீ ராமைக் கண்டதும் பொங்கி வந்தது.
“ஹேய் எதுக்கு அழற? உனக்கு எப்போ எங்களைப் பார்க்கணும்னு சொல்லு நாங்க மறுநாளே குடும்பத்தோட அங்கே நிப்போம். கண்ணைத் துடை. கிளம்பு மாப்பிள்ளை வெயிட் பண்றாரு பாரு.”
தைரியமாக பேசினாலும் அவனது கண்களும் பனித்தது.
“ம் வரேண்ணா” சமாளித்துக் கொண்டு கிளம்பினாள்.
“சஹிமா! என்னை எப்பவும் டேய் அண்ணான்னு கூப்பிடுவியே அப்படி ஒரு தடவை கூப்பிடு…” என்றான்.
சஹானாவால் பேசவே முடியவில்லை.
“அண்ணா!” என்று அவனது நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.
அடித்தாலும் பிடித்தாலும் அவனுக்கு சஹானாவென்றால் உயிர். அவளுக்கும் அப்படித் தான். ஆனால், அது வெளிப்பட இத்தனைக் காலம் ஆயிற்று.
பிரபு இழுத்துப் பிடித்த பொறுமையுடன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
”சஹி! நேரமாகுது பாரு. கிளம்புமா மாப்பிள்ளை எவ்வளவு நேரம் காத்திருப்பார்” பரிமளம் அவளை கார் வரை அழைத்துச் செல்ல, அனைவரிடமும் கையசைத்து விடைபெற்றாள்.
No comments:
Post a Comment