அத்தியாயம்– 6
அலங்கரித்த
குத்துவிளக்கைப் போன்று பூஜையறைக்குள் வந்த மருமகளைக் கண்குளிரப் பார்த்தார் கௌரி.
ஆரத்தித் தட்டை
அவளிடம் காட்ட, பயபக்தியுடன்
கண்களில் ஒற்றிக்கொண்டு, குங்குமத்தை எடுத்து வகிட்டில் வைத்துக்கொண்டவள்,
மாமியாரைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
அவளது கள்ளமில்லா
சிரிப்பைப் பார்த்த கௌரி, மனம் கலங்கிப் போனார்.
‘தன்சுயநலத்திற்காக
ஒன்றும் அறியாத இந்த அப்பாவிப் பெண்ணின் வாழ்வை பணயம் வைத்து, தவறு செய்து விட்டோமோ?’ என்று முதன்முறையாக அவரையும்
அறியாமல் எண்ணம் எழ, தொண்டையை அடைத்தது.
ஆரத்தித் தட்டை
வெள்ளி முக்காலியின் மீது வைத்தவர், ‘கடவுளே! உன்னை நம்பித்தான் இப்படி ஒரு
முடிவை எடுத்தேன். யாருக்கும் எந்தப் பாதகமும் இல்லாம நீதான்
நல்லவழியைக் காட்டணும்’ மனமுருக வேண்டிக்கொண்டார்.
யாருக்கும்
பாதகமில்லாமல் எந்த முடிவும் கிடைக்காதென்பதை, ஏனோ அவர் அறிந்தும், புரியாமல் இருந்தார்.
மாமியாரின்
முகமாற்றத்தைக் கவனித்த சஹானாவிற்கு, என்னவென்று அறிந்து கொள்ள மனம் பரபரத்தது. ஆனால், ‘எப்படிக் கேட்பது?’
என்று தெரியவில்லை.
“அத்தை!” மெல்ல அழைத்தாள்.
குரலில் அவளையும்
அறியாமல் ஒரு பதட்டம்.
கண்களைத் துடைத்துக்
கொண்ட கௌரி, “ஒண்ணுமில்லமா.
இன்னைக்குப் போல என்னைக்கும் இந்தக் குடும்பம் சந்தோஷமா இருக்கணும்னு
வேண்டிகிட்டேன். அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்” என்று சமாளித்தார்.
சஹானா நிம்மதியாக
மூச்சு விட்டாள்.
“நல்லாயிருப்போம். எல்லோரும் எப்பவும் நல்லா இருப்போம்… அப்படியில்லனா அந்தப் பிள்ளையாரை யார் விட்டது?
பூஜை ரூமே கதின்னு உட்கார்ந்து நீங்க சண்டை போட மாட்டீங்க…”
ஜீன்ஸும், முழங்கால் வரை நீண்டிருந்த குர்த்தியையும்
அணிந்து, இடுப்பில் கைவைத்தபடி இடமும் வலமுமாக ஆடியபடி நின்றிருந்தாள்
தேவி. அந்த வீட்டின் இளவரசி. பிரபுவின்
ஒரே தங்கை. பி.எஃப்டெக் இறுதியாண்டு படித்துக்
கொண்டிருக்கும் யுவதி.
“என்ன வாலு இன்னைக்குச் சீக்கிரம் கிளம்பியாச்சு?”
“நேத்தே சொல்லியிருந்தேனேம்மா! இன்னைக்கு ரியாவுக்கு பர்த்டே… எல்லோரும் வெளியே போறோம்னு. மறந்துட்டீங்களா?”
“நினைவே இல்ல…” என்றார் கௌரி.
“அச்சச்சோ! கிஃப்ட் வாங்க நான் கேட்ட பணத்தை அப்பாகிட்ட சொல்லி வாங்கனீங்களா
இல்லயா?”
“அதெல்லாம் வாங்கிட்டேன்” என்றபடி தனது அறைக்குச் சென்றவர், சற்றுநேரத்தில் திரும்பி வந்தார்.
புத்தம்புது
நூறு ரூபாய் சலவைத்தாள் கட்டை மகளிடம் கொடுத்ததைப் பார்த்த சஹானாவிற்கு மூச்சடைத்தது. திகைத்த பார்வையுடன் இருவரையும் பார்த்தாள்.
“சாயங்காலம் சீக்கிரம் வந்திடு தேவி. இன்னைக்குச் சங்கடஹர
சதுர்த்தி… கோயிலுக்குப் போகணும்” என்றார்.
“ஆ! எப்போ பார் கோயில், குளம்னு என்னைத் தொல்லை பண்ணாதம்மா.
இதோ இனி உனக்குக் கூட்டணிக்கு அண்ணியை வச்சிக்க.
அவங்கதான் உனக்குச் சரிப்பட்டு வருவாங்க. என்னை
ஆளைவிடு” என்று நகர்ந்தவள் திரும்பி
வந்தாள்.
“ஈவ்னிங் நான் லேட்டாதான் வருவேன். நீ போன் செய்து கிளம்பிட்டியா… எப்போ வரேன்னு தொல்லை பண்ணாத! சரியா? பை!” என்றவள் சஹானாவிடம் திரும்பி,
“பை அண்ணி!” என்றாள்.
சஹானாவின் உதடுகள் ‘பை’ என்று முணுமுணுத்தாலும்,
அவள் இன்னும் திகைப்பிலிருந்து வெளிவரவில்லை.
‘சஹி!’
என்ற கௌரியின் இரண்டாவது அழைப்பிற்கு சுயநினைவுக்கு வந்தாள் அவள்.
“என்னங்க அத்தை!” என்றாள்.
“நீ என்னோட கோயிலுக்கு வர்றியாம்மா?”
‘இவளாவது
வருவாளா?’ என்ற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“கண்டிப்பா வரேன்!” என்றாள்.
“சரிம்மா. ஐஞ்சு மணிக்குக் கிளம்பலாம்” என்றதற்கு, சம்மதம் தெரிவித்தாள்.
மனத்தைக் குறுகுறுவென அரித்த
கேள்வியை, ‘கேட்டு விடலாமா?’என்று வாய்
பரபரத்தது.
சரி… வேண்டாம்… என்று, அதே மனம்
இப்படியும் அப்படியுமாகத் தள்ளாடியது.
கடைசியில், “நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே?”
என்றாள்.
நெற்றியைச்
சுருக்கிப் பார்த்த கௌரி, “என்ன?” என்றார்.
“படிக்கிற பொண்ணுக்கு எதுக்கு இவ்வளவு பணத்தைக் கொடுத்தனுப்பறீங்க? அதோட பார்ட்டி அது இதுன்னு… வீட்லனா பரவாயில்ல அத்தை; வெளியில…” அதற்கு மேல் சொல்ல
முடியாமல் நிறுத்தினாள்.
சலிப்புடன்
புன்னகைத்தவர், “உனக்கு…
இதெல்லாம் புதுசா இருக்கு. போகப் போக நீயும் பழகிக்குவ” என்றார்.
தலையும் இல்லாமல்
வாலும் புரியாமல்… சொல்லிவிட்டுச் சென்ற மாமியாரைப் புரியாமல் பார்த்தாள்.
அவளுக்கு ஒன்று
மட்டும் புரிந்தது. இந்த வீட்டில் இருப்பவர்கள், மூலைக்கு ஒன்றாக நிற்கும் நவகிரகங்களைப் போன்றவர்கள் என்று.
தோட்டத்திலிருந்து
பூக்களைப் பறித்துக் கொண்டு வந்தவள், வராண்டா ஊஞ்சலில் அமர்ந்து பூக்களைத் தொடுத்துக் கொண்டிருந்தாள்.
கைகள் அதன் வேலையைச் செய்தாலும், மனம் மட்டும்
குழப்பத்திலிருந்து விடுபடவேயில்லை.
”நீயேம்மா இதையெல்லாம் செய்யற? வேலைக்காரங்க பார்த்துப்பாங்க” என்றபடி அங்கே வந்தார் கௌரி.
“நான் சும்மாதானே இருக்கேன். காலைல சமையலும் முடிஞ்சிடுச்சி. எதுவும் செய்யாம உட்கார்ந்துக்க போர் அடிச்சிது. நாளையிலிருந்து
நான் இன்னும் சீக்கிரம் எழுந்து வந்து சமையலை கவனிச்சிக்கிறேன் அத்தை!” என்றாள்.
“அதைப் பத்தி ஒண்ணும் இல்ல. நீ மெதுவாகவே வா. இந்த வீட்ல யாரும் எட்டு
மணிக்குக் குறைவா ரூமை விட்டு வெளியே வரமாட்டாங்க.”
“எங்க அம்மாவும் சரி, அத்தையும் சரி… ஆறரை மணிக்கு மேல படுக்கவே விடமாட்டாங்க. அப்பா கூட சொல்லுவாங்க
லீவ் நாள்லயாவது குழந்தைங்க தூங்கட்டுமேன்னு. அந்தப் பேச்சே பேசக்கூடாதுன்னு
அம்மா ஒரே வாக்கியத்துல முடிச்சிடுவாங்க” என்று புன்னகைத்தாள்.
“இந்த வீட்ல என் பேச்சு எதுக்கும் எடுபடாது. ரெண்டு பேரும் அப்பா செல்லம். அதுவும் பிரபு இருக்கானே… அப்படியே
அப்பாவோட வாரிசு. எல்லா விஷயத்திலேயும்…” என்று சொல்லிக்கொண்டே வந்தவர் பட்டென நிறுத்திவிட்டுச்
சஹானாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.
“ஏன் சஹி! பிரபு உன்கிட்ட ப்ரியமா தானே இருக்கான்?” மென்குரலில் கேட்டார்.
அவர் கேட்டதற்கான
அர்த்தம் புரியாதவளா அவள்!
“ம், ப்ரியமாதான் இருக்காரு அத்தை!”
நாணத்தில் சிவந்த
முகமும், குழைந்த குரலுமாக சொன்னவளைப் பார்த்த கௌரிக்குப்
பெருத்த நிம்மதியாக இருந்தது.
அவரது அருகாமை
அவளுக்குச் சற்று கூச்சத்தைக் கொடுக்க, தொடுத்த பூக்களில் வலு இல்லாமல் உதிர்ந்து விழுந்தன.
சிரித்துக்
கொண்ட கௌரி, “இங்கேகொடு” என்று அவளிடமிருந்து பூச்சரத்தை வாங்கி அவளது கூந்தலில்
சூட்டினார்.
“நீ போய் உன் வீட்டுக்காரனை எழுப்பு. இன்னைக்கு ஆஃபிஸ்ல
ஏதோ மீட்டிங்னு உங்க மாமா சொல்லிட்டு இருந்தார்” என்றுஅவளை அனுப்பி வைத்தார்.
**********
காஃபியை கட்டிலின்
அருகிலிருந்த மேஜை மீது வைத்தவள், இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தவனது வெல்வெட் பிளாங்கெட்டைப்
பிடித்து இழுத்தாள்.
அடுத்த நொடி, ‘ஆ…’ என்ற அலறலுடன் அவனது அணைப்பில் கட்டிலில் கிடந்தாள்.
“காலங்கார்த்தால சும்மா அசத்துறியே…” என்றவனைப் பிடித்துத் தள்ளினாள்.
“முதல்ல எழுந்திருங்க. தினமும் இப்படியா…?”
கோபமாகச் சொல்ல
முனைந்தாலும், முடிந்தால்
தானே.
அவளது மூளையும், மனமும் அவனது செயல்களுக்குத் தானே அடிமையாகிக்
கிடக்கிறது.
அது ஒன்று போதாதா
அவனது காரியத்தைச் சாதித்துக்கொள்ள.
அவளது கழுத்தில்
முத்தமிட்டவன், கூந்தலில்
சூட்டியிருந்த மல்லிகைப் பூவை முகர்ந்தான்.
”லைஃப் டைம் லைசன்ஸ் வாங்கியிருக்கேன். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது.”
“ப்ளீஸ் பிரபு!” கெஞ்சலாகச் சொன்னாள்.
இமைக்காமல்
அவளைப் பார்த்தவன், “சரி போ. பிரபுன்னு வேற சொல்லிட்ட… அதனால விடுறேன்” என்றவன் அவளிடமிருந்து விலகி எழுந்தான்.
அவனைப் பின்னாலிருந்து
அணைத்தவள், “கோபமா
என் பிரபுவுக்கு…” என்றாள் குழைவாக.
“பின்ன இருக்காதா… ஆசையா வந்தால் அலட்டிக்கிறியே…” என்றான்.
“அததுக்குன்னு ஒரு நேரம் இருக்கு இல்லயா” அதே குழைவுடனேயே சொன்னாள்.
அவன் அமைதியாக
இருந்தான்.
“கோபமா?” மீண்டும் கேட்டாள்.
“என் கோபத்துக்கே மதிப்பில்லன்னும் போது. கோபம் இருந்தா என்ன, போனா என்ன?”
என்றபடி அவளது கையை விலக்கிவிட்டுக் குளியலறைக்குள்
நுழைந்தான்.
‘ஹும்’
என்றபடி படுக்கையைத் தட்டிப்போட்டாள்.
குளித்து விட்டு
வந்தவன், அங்கே ஒருத்தி இருப்பதையே உணராதவன் போலவே மளமளவென தயாரானான்.
டையின் முடிச்சை
சரி செய்தபடி, “நான் நைட்
வரலேட் ஆகும். எனக்காக காத்துட்டு இருக்க வேணாம்” முறைப்புடனேயே சொன்னான்.
“நான் காத்துட்டு இருப்பேன்” என்றாள் வேண்டுமென்றே.
“அது உன் இஷ்டம்” என்றவன் ப்ரீஃப்கேஸுடன் வெளியேறினான்.
‘ஹப்பா என்ன
கோபம்? எல்லாம் எவ்வளவு நேரத்துக்குப் பார்க்கலாம்’
சிரித்துக்கொண்டே அவன் பின்னால் சென்றாள்.
டிஃபன் சாப்பிடும்
போதும் உர்ரென்ற முகத்துடனேயே சாப்பிட்டு முடித்து, கிளம்பினான்.
அவனது நடவடிக்கை
அனைத்தும் அவளுக்குச் சிரிப்பாகவே இருக்க, அதே மனநிலையுடன் அவனுக்கு கையசைத்து விடை கொடுத்தாள்.
***********
புத்தகம் ஒன்றைப் படித்தபடி ஹாலில் அமர்ந்திருந்தாள் சஹானாவிற்கு எல்லாமே புதிதாக இருந்தது. திருமணமாகி முதல்
இரண்டு நாட்கள் விருந்தினர், உறவினர் என்று இருந்தவரை
அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.
ஆனால், இந்த
ஒரேநாளில் அந்தக் குடும்பத்தின் நடவடிக்கைகளைப் பார்த்தவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சில விஷயங்கள் ஏதோ புதிர் போலவே அவளுக்குத்
தோன்றியது.
மாமனார் யாரிடமும்
வாயைத் திறப்பதில்லை. மாமியார் யாரையும் அதட்டி மிரட்டுவது இல்லை. பிள்ளைகளை
மட்டும் அல்ல, வேலையாட்களையும். ஆனால், கனிவும், அன்பும் அவரிடம் கொட்டிக்கிடந்தது.
தேவியைப் பற்றிச்
சொல்ல ஒன்றுமே இல்லை. மொத்தத்தில் வீட்டில் யாருக்கும் யாரும் கட்டுப்படுவதில்லை. ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதே அரிது என்று தோன்றியது அவளுக்கு.
இந்நேரம் தன்
வீட்டில் எப்படி இருக்கும்? அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதும், மொட்டை மாடியில்
அமர்ந்து அரட்டை அடிப்பதுமாக எத்தனைச் சந்தோஷமாக இருக்கும்.
இப்போதும் எல்லோரும்
அப்படித்தானே இருப்பார்கள். என்னைப் பற்றியும் நினைத்துக் கொள்வார்கள். நானும் அப்படி
இந்தக் குடும்பத்துடன் ஒன்றி, சந்தோஷமாக இருப்பேன் என்று நினைத்திருப்பார்கள்’
நினைக்கும் போதே மனத்தில் ஏக்கம் தோன்றியது.
முதலில் இந்த
வீட்டில் சில விஷயங்களைச் சரிசெய்ய வேண்டும். மாமியார், மாமனாரை எதுவும் கேட்க முடியாது.
பிரபுவைச் சமாளித்துக் கொள்ளலாம். முதலில் மாறவேண்டியது தேவி.
இன்னொரு குடும்பத்திற்குச்
செல்ல வேண்டிய பெண், இப்படிப் பொறுப்பே இல்லாமல் இருந்தால் எப்படி? மணி ஒன்பதே முக்கால் இன்னும் வீட்டிற்கு
வந்து சேரவில்லை’ என சஹானா அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்
போதே, வெளியே ஸ்கூட்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டது.
ஏதோ ஒரு பாட்டை
முணுமுணுத்தபடி வீட்டினுள் வந்தவள், “ஹாய் அண்ணி!” என்று கையசைத்து விட்டு, துள்ளலுடன் அவளைக் கடந்து சென்றாள்.
“தேவி நில்லு!”அதட்டலுடன்
சொன்னாள்.
திரும்பிப்
பார்த்த தேவி, “என்ன?”
என்றாள் அலட்சியத்துடன்.
அவளுக்குத்
தன்னுடைய அதட்டல் சற்றும் பிடிக்கவில்லை என்று புரிந்தது.
“மணி என்ன தெரியுமா? வயசு பொண்ணு நீ” என்றாள்.
“இங்க பாருங்க எங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிகிட்டதால எல்லாத்துலயும்
தலையிடலாம்னு நினைக்காதீங்க. உங்க லிமிட் எதுன்னு புரிஞ்சி நடந்துக்கங்க. என்னைக்
கேள்வி கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது” என்றாள் ஆத்திரத்துடன்.
“என்னோட லிமிட் எனக்குத் தெரியும். உனக்கும் ஒரு லிமிட் இருக்கு அதைப் புரிஞ்சி
நீ நடந்துக்க. அதோட என்னோட உரிமை எதுவரைக்கும் யார் வரைக்கும்னு
எனக்கும் தெரியும்.
நாளையில இருந்து
ஏழுமணிக்கு மேல நீ வெளியே சுத்தக்கூடாது.
உன் ஃப்ரெண்ட்ஸுக்குப் பார்ட்டி கொடுக்கணுமா... பகல்ல போ.
பேசணுமா, வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து பேசு.
ஹோட்டல், டிஸ்கோதேன்னு சுத்தறதை விட்டுட்டு ஒழுங்கா
படிப்பை முடிக்கிற வழியைப் பாரு.
உன்னைக் கல்யாணம்
செய்து கொடுத்ததும் உன் வீட்டுக்காரரோட எங்கே போகணுமோ போ. இந்த வீட்ல இருக்கற வரைக்கும் எங்க பேச்சைத்
தான் நீ கேட்டாகணும்.”
“இங்கே பாருங்க….” கோபத்தில் தேவிக்கு வார்த்தைகள் வரவில்லை.
“என்ன மாமாகிட்ட சொல்வியா? போய்ச் சொல்லு. என்கிட்ட ஏதாவது கேள்வி
கேட்டா, பதிலை நான் சொல்லிக்கிறேன். அதையும்
மீறிஏதாவது சொன்னா, அதை அப்புறம் பார்க்கலாம். எந்தப் பெத்தவங்களும், பிள்ளைங்க கெட்டுப் போகணும்னு
நினைக்க மாட்டாங்க” என்றாள்.
தேவிக்கு ஆத்திரம். ஆனால், ஏதும் பேசமுடியாத நிலை. எரிச்சலுடன்
தன் அறைக்குச் சென்றாள்.
தனது அறையிலிருந்து
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த கௌரிக்குச் சந்தோஷமாக இருந்தது.
‘தான் சரியான
தீர்வைத் தான் எடுத்திருக்கிறோம். இவள் எல்லாவற்றையும் சமாளித்து
விடுவாள்’ என்ற நம்பிக்கை பிறக்க, அகம்
மகிழ்ந்து போனார்.
பூட்டியிருந்த
வாசற் கதவை ஒருமுறை இழுத்துப் பார்த்துவிட்டு, தங்கள் அறைக்குச் சென்றாள் சஹானா.
*************
சப்தமில்லாமல் தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்த பிரபு, படுக்கையறையில் இன்னும் விளக்கெறிந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.
அடிமேல் அடிவைத்து மெல்லக் கதவின் குமிழியைப் பிடித்துத் திறந்தான்.
காதில் ஹெட் போனுடன் கண்களை மூடி அமர்ந்திருந்தவள், அவன் வந்ததை உணரவேயில்லை.
ப்ரீஃப்கேஸை ஓரமாக வைத்துவிட்டு அவளை நெருங்கியவன், கையிலிருந்த பூங்கொத்தை அவளது மூக்கில் உரசினான்.
திடுக்கிட்டு கண்விழித்து எழுந்தவள், அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும் “வந்துட்டீங்களா பிரபு!”
என்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
உறவு வளரும்...
சிரிப்புடன், “ஹேப்பி பர்த்டே ஜோ!” என்றான்.
No comments:
Post a Comment