அத்தியாயம் - 42
“டாக்டர் சொன்ன தேதிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கே அத்தை! அதுக்குள்ளயா வலி வருது?” வியப்புடன் கேட்டாள் சஹானா.
“மழை பெய்யறதும், குழந்தை பிறக்கறதும் மகாதேவனுக்கே தெரியாதுன்னு சொல்வாங்க. இது தலைப்பிரசவம் இல்லயா அப்படித்தான் இருக்கும். சீரக கஷாயம் போட்டுக் கொடுத்திருக்கேன். குடிச்சிட்டு படுத்திட்டு இருக்கா. பிரசவ வலியா இருந்தா அதிகமாகும். சூட்டு வலியா இருந்தா குறைஞ்சிடும்… நீயும் தெரிஞ்சி வச்சிக்க சீக்கிரமே உனக்கும் தேவைப்படும்…” பரிமளம் அத்தை சொல்லிக் கொண்டிருக்க, சஹானாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன.
கதவைத் திறக்கும் சப்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள், “அத்தை! அவர் வந்துட்டார் நான் அப்புறமா பேசறேன். அக்காவை ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்லுங்க. பெயின் வந்ததுமே எனக்குச் சொல்லுங்க… நான் ஓடி வந்திடுறேன்…” என்றவள் போனை அணைத்தாள்.
“யாரு பெரிம்மாவா?” எனக் கேட்டான்.
“ம்” என்றவள் நடந்ததைச் சொன்னாள்.
“ஓ! ஆனா, இந்த முறை என்னால வரமுடியாது. ஒரு நாள்ள வந்திடலாம்னு வளைகாப்புக்கு வந்தேன். கடைசில ஸ்ரீயோட நிச்சயம் வரை இருக்க வேண்டியதா போச்சு. அதனால நீயும், அம்மாவும் தான் போகணும்” என்றான்.
“அப்படியா? அப்போ நான் குழந்தைக்குப் பேர் வைக்கிற வரைக்கும் அங்கேயே இருந்துட்டு வரேன்…” என்றாள்.
“இந்தக் கதையே வேணாம். இப்படியே பேசிட்டு இருந்தா, உன்னை அனுப்பி வைக்கறதைப் பத்தி நான் யோசிக்கணும் போலிருக்கே.”
“அதெல்லாம் முடியாது… நாம கட்டாயம் போறோம். பிறந்தவுடனே அந்தக் குழந்தையைத் தொட்டுத் தூக்கிப் பார்க்கணும். அந்த குட்டிகுட்டி விரலைப் பிடிச்சிப் பார்க்கணும்…” சொல்லும் போதே உணர்ச்சிக் குவியலில் சிக்கிக் கொண்டவளை சிரிப்புடன் பார்த்தான்.
“ஹலோ மேடம்! கொஞ்சம் நிறுத்தறீங்களா! நான் கொஞ்ச நாளைக்கு பொண்டாட்டி சொல்றதைக் கேட்டுட்டு நடக்கற நல்ல வீட்டுக்காரனா இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, பேசிப் பேசி என் மூடை மாத்திடுவ போலிருக்கே” என்றான்.
அவன் மறைமுகமாகச் சொன்ன வார்த்தையின் பொருளுணர்ந்தவள் வெட்கத்துடன், “என் வீட்டுக்காரர் ஜேன்டில் மேன்” என்றாள்.
“அப்படியா! இப்படியே பில்டப் கொடுத்து கொடுத்தே… என்னைச் சாவி கொடுத்தா ஆடும் பொம்மை மாதிரி மாத்திட்ட… நடத்து நடத்து. ஒரு நாளைக்கு இந்த ஜெண்டில் மேனோட பவர் தெரியும் போது இருக்கு உனக்கு…” என்றான்.
அவனை உறுத்து நோக்கியவள், “அப்படி ஏதாவது நடந்தா என்னுடைய முடிவு என்னவா இருக்கும்னு நீங்க பார்க்கத்தானே போறீங்க” என்றாள் அழுத்தமாக.
அவளை ஆழ்ந்து பார்த்தவன், ‘சரியான கல்லுடி நீ!’ என்று நினைத்துக் கொண்டான்.
“உங்களுக்குக் காஃபி கொண்டு வரட்டுமா?”
“வேணாம். ஸ்ரீயோட ஃப்ரெண்ட் தமிழ்ச் செல்வனைப் பார்த்தேன். அவரோட காஃபி சாப்டுட்டு வந்தேன்” என்றான்.
“தமிழ் அண்ணாவையா? அவரை எங்கே பார்த்தீங்க…?”
“ஹோட்டல்ல…” சொல்லிக் கொண்டே சட்டையை மாற்றினான்.
‘ஹோட்டலுக்கு எதுக்குப் போனீங்க?’ என்று கேட்க நினைத்தவள், ‘பிசினஸ் விஷயமாக யாரையாவது பார்க்கப் போயிருப்பார்’ என்று தனக்கே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
“ரெண்டு நாளைக்கு முன்னாடியும் அவரைப் பார்த்தேன். பட் அவர் என்னைப் பார்க்கல” என்றவன் லேப்டாப்புடன் அமர்ந்தான்.
“எங்கே ஹோட்டல்லயா?” அவள் யதார்த்தமாக கேட்க அவனும், “ஆமாம்” என்றான்.
சோஃபாவின் மீதிருந்த அவனது அலுவலக உடைகளை அழுக்குப் பெட்டியில் போட எடுத்தவளுக்கு, அவனது பதில் சந்தேகத்தைக் கொடுத்தது.
இப்போதெல்லாம் அலுவலகத்தில் நடப்பதை ஒன்றுவிடாமல் தன்னிடம் சொல்கிறான்.
ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் யாரையும் பிசினஸ் விஷயமாகச் சந்திக்கப் போனதாக… ஏன் ஹோட்டலுக்குப் போனதைக் கூட சொல்லவில்லையே…
“யார்கூட போனீங்க?” என்றாள்.
“சூரஜ் கூடத்தான்” சளைக்காமல் அவனும் பதில் சொன்னான்.
நிமிர்ந்து அவனை வெறித்துப் பார்த்தாள்.
அவன் தன்னிடமிருந்து எதையோ மறைக்கிறான் என்று புரிந்து கொண்டாள். அவன் சூரஜ்ஜுடன் ஹோட்டலில் இருந்ததாகச் சொன்ன அதேநேரத்தில், ஷீலா தாங்கள் குடும்பத்துடன் திருப்பதியில் இருப்பதாகப் போனில் சொன்னாளே!
மனம் வெறுத்துப் போனது அவளுக்கு. எதுவுமே பேசாமல் கீழே சென்றாள்.
வேலையில் கவனமாக இருந்தவனுக்கு அவளது மாற்றங்கள் தெரியவில்லை.
**************
பிரபு உறங்கிவிட்டதை உறுதிபடுத்திக் கொண்டவள், டேபிள் மீதிருந்த அவனது மொபைல் போனை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தாள்.
திருட்டுத்தனமான வேலைதான். ஆனால், அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. நேரடியாகக் கேட்டால் நிச்சயம் அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராது. சந்தேகம் என்று வந்தபின் அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்துவிடும் போலிருந்தது.
மொபைலின் லாக்கைத் திறந்தவள், கால் ஹிஸ்டரியை அலசினாள்.
ஏகப்பட்ட மிஸ்ட் கால்கள். அத்தனை அழைப்பும் ஜோஷிதாவிடமிருந்து வந்திருந்தது. எதையும் தவறாக நினைக்கக்கூடாது என்று எண்ணினாலும், மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.
அவள் வளைகாப்பிற்குக் கிளம்பிச் சென்ற அன்று, முதலில் பிரபுதான் ஜோஷிதாவை அழைத்துப் பேசியிருக்கிறான். அதன்பிறகு தான் அவளிடமிருந்து அழைப்புகள் வர ஆரம்பித்திருக்கிறது.
அன்று தமிழ்ச் செல்வனை அறிமுகப்படுத்த அவனைத் தேடியபோது, போன் பேச வெளியே சென்றிருந்தது நினைவு வர, குத்துமதிப்பாக நேரத்தைக் கணக்கிட்டு கால் ஹிஸ்டரியைப் பார்த்தாள்.
அவளது எண்ணத்தைப் பொய்யாக்காமல், ஜோஷிதாவிடம்தான் கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கும் மேலாக அன்று பேசியிருக்கிறான். ஓய்ந்து போனாள் சஹானா.
‘அவளை விட்டு விலகிவிட்டேன். நீ மட்டுமே என் வாழ்க்கை’ என்றவனை, இப்போது எப்படி நம்புவது? என்று அவளுக்குத் தெரியவில்லை. முதலில் வரவில்லை என்றவன் எதற்காக வரவேண்டும்? என்று மனசாட்சி கேள்வி கேட்டது.
‘அவனே சொன்னானே… உன்னோட கவிதை என்னை இழுத்து வந்ததென்று. அப்படியானால் நான் அவனுக்காக உருகி மெழுகாக கரைந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்தானா?’
‘இதென்ன வாழ்க்கையா? விளையாட்டா? இரட்டைச் சவாரி செய்ய? அப்படியே அவனுக்கு அப்படித்தான் இருக்கவேண்டுமென்றால் தான் அதற்கான ஆளில்லை என்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள்.
இப்போதே அவனிடம் அனைத்தையும் கேட்டுவிட வேண்டும் என்ற வேகம் எழுந்தாலும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
உறக்கம் வராமல் படுத்திருந்தாலும், மனம் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தடுமாறியது.
‘மாலையில் அவன் தன்னிடம் பேசிய போது அவனது கண்களில் தெரிந்த காதலில் போலித்தனம் இல்லை. ஆனாலும், மீண்டும் ஜோஷிதாவிடம் புதுப்பிக்கப்படும் உறவை என்ன சொல்வது?
அவசரப்பட்டு எதையும் பேசாதே சஹானா! விட்டுப்பிடி. கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய். அதேபோல இதை யாரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்வது?’
‘மெல்ல மொட்டவிழ துடித்துக் கொண்டிருந்த அவளது காதல் உணர்வுகளை, அவனே அழித்துவிட்டான்’ நினைக்க நினைக்க உள்ளம் கதறியது. துடித்த உதடுகளை அழுந்த மூடி கண்ணீரைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.
‘மனத்தில் இத்தனைக் கேள்விகளை வைத்துக் கொண்டு, தன்னால் அவனிடம் இழைய முடியாது. இப்போது இதற்கான விளக்கத்தை அவன் சொன்னாலும், அது உண்மையாகவே இருந்தாலும், தனக்கிருக்கும் மனக்கிலேசத்தில் அதை நிச்சயம் நம்பமுடியாது’ என்றே தோன்றியது.
‘இதற்குத் தீர்வுதான் என்ன?
‘பொறுமை’ அது ஒன்றுதான் இப்போதைக்குக் கையாள வேண்டிய விஷயம். நிச்சயம் என்னுடைய பொறுமைக்கு பலன் இருக்கும். எங்களுடைய பந்தம் அத்தனைச் சீக்கிரத்தில் குலைந்து போகாது.
இது நான் அவனுக்குக் கொடுக்கப் போகும் கடைசி வாய்ப்பு. இது தோல்வி அடையுமானால், நான் அவனிடமிருந்து பிரிந்து செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
‘கடவுளே! என்னுடைய அத்தனை சந்தேகமும், பொய்யாகப் போகவேண்டும்’ என்ற வேண்டுதலுடன் கண்களை மூடினாள்.
ஆனால், மனம் மட்டும் முரண்டிக்கொண்டே இருந்தது.
No comments:
Post a Comment