Thursday, September 24, 2015

உறவெனும் புதிய வானில்

அத்தியாயம் – 43

காலையில் எழுந்தவன் தனது வழக்கமான வேலைகளை முடித்துக் கொண்டு நாட்குறிப்பில் அன்றைய வேலைகள் பற்றிய குறிப்பைப் பார்த்துக் கொண்டிருந்த பிரபு, நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழாகியிருந்தது.

எப்போதும் ஆறு நாற்பத்தைந்திற்கெல்லாம் காஃபியுடன் வரும் சஹானா, இவ்வளவு நேரமாகியும் வராதது அவனுக்கு ஆச்சரியமாகவும், குழப்பமாகவும் இருந்தது.

மேலும் ஐந்து நிமிடங்களைக் கடத்தியவன், அதற்கு மேல் காத்திருக்க முடியாமல் கதவைத் திறக்கவும், தேவி காஃபியுடன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

“குட்மார்னிங் அண்ணா!” என்றவள் காஃபி ட்ரேயை அவனிடம் நீட்டினாள்.

“குட்மார்னிங்!” என்றபடி காஃபி கப்பையும், செய்தித்தாளையும் எடுத்துக் கொண்டு, “உன் அண்ணியை வரச் சொல்லு…” என்றான்.

“கூப்பிட்டாலும், அண்ணி வரமாட்டங்க” என்றாள்.

“ஏன்?” நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.

“ஏன்னா, அண்ணி வீட்ல இல்ல. கோவிலுக்குப் போயிருக்காங்க…” என்றாள்.

“கோயிலுக்கா…? அம்மாவும் கூட போயிருக்காங்களா?”

“சேச்சே! அண்ணி மட்டும் சிங்கிலா போயிருக்காங்க…”

“என்கிட்ட சொல்லாம…” என்றவனை இடைமறித்தவள், “அதையெல்லாம் அண்ணிகிட்ட கேட்டுக்க… எவ்ளோநேரம் இப்படிக் கைலயே வச்சிட்டு நிக்கிறது?” எனச் சிணுங்கினாள்.

 “ஆமாம் இது ஐம்பது கிலோ வெயிட் அதைத் தூக்கிகிட்டு நிக்கமுடியல…” என்றவன் செய்தித்தாளில் விழிகளைப் பதித்தான்.

“இப்போ உனக்குக் காஃபி வேணுமா வேணாமா?” என்றவள் நினைவு வந்தவளாக, “ஓ! தினம் அண்ணி தரிசனம் கொடுத்து, அவங்க கையால காஃபி கொண்டு வந்து கொடுத்தா தான் குடிப்பீங்களோ!” கிண்டலாகக் கேட்டாள்.

கப்பை எடுத்தபடி, “அறிவு சுடர்தான்… காலங்கார்த்தால உன் முகத்துல விழிச்சிருக்கேனேங்கற கவலை தான்…” என்றவன் காஃபியை எடுத்துப் பருகினான்.

“ஹய்யோ! எழுந்து இவ்வளவு நேரமாகுது… சார் அவர் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவேயில்ல போல” என்று தமையனை வெறுப்பேற்றினாள்.

“வரவர வாய் அதிகமாத்தான் போயிட்டிருக்கு…” என்று அவளது காதைப் பிடித்து வலிக்காமல் திருகினான்.

“டேய் அண்ணா! விடுடா…” என்று வேண்டுமென்றே துள்ளிக் குதித்தாள்.
“என்னது டேய்யா…?” என்று மிரட்டலாகக் கேட்டான்.

“ஆஹா! பயந்துட்டேன்…” என்றவளைப் பார்த்துச் சிரித்தான்.

தமையனின் சிரிப்பை ஆழ்ந்து நோக்கியவள், “தேங்க்யூண்ணா!” என்றாள்.

கண்களில் சிரிப்பைத் தேக்கியபடி, “எதுக்கு?” என்றான்.

“நீ என்கிட்ட இப்படியெல்லாம் பேசி, சிரிச்சி எத்தனை வருஷமாகிடுச்சி…” என்றவளது குரல் கரகரத்தது.

சில வருடங்களுக்கு முன்புவரை எந்தக் கவலையும் இல்லாமல் சுற்றி வந்தவன் தானே… இருவரும் சேர்ந்து வீட்டை அதகளப்படுத்தியவர்கள் ஆயிற்றே. ஆனால், அவன் பள்ளி இறுதியாண்டு படிக்கும் போது, அனைத்துமே தலைகீழாக மாறிப் போயிற்றே…

சில நொடிகள் கண்களை மூடித் தங்களது பிள்ளைப் பிராயத்தை மனக்கண்ணில் கொணர்ந்தான் பிரபு.

தங்கையின் கன்னத்தை வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்தவன், தனது நெகிழ்ச்சியை முடிந்தவரை மறைத்துக் கொண்டு, “போ! காலேஜுக்குக் கிளம்பணுமில்ல…” என்றான்.

அவளுக்கும் பழைய நினைவுகள் வந்துவிட்டன போலும், “ம்…” என்றதுடன் கதவு வரைச் சென்றவள், திரும்பிப் பிரபுவைப் பார்த்தாள்.

அவன் இரு கரங்களையும் கோர்த்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்ததைக் கண்டதும் அவளுக்குப் பரிதாபமாக இருந்தது.

“அண்ணா!” என்ற விளிப்புடன் அவனருகில் அமர்ந்தவள், “சாரிண்ணா! என்னால தான…” என்று தழுதழுத்தபடி தோளில் சாய்ந்து கொண்டாள்.

“ஹேய்! பச்சை மிளகா…! ரொம்பப் ஃபீல் பண்ணாத…” என்று அவளை முன்பெல்லாம் அழைக்கும் பட்டப் பெயரில் அழைத்தான்.

“ம்ம்…” என்று நிமிர்ந்து அமர்ந்தவள், “போடா ஜிராஃபி…!” என்று அவனது செல்லப் பெயரிலேயே அழைத்தாள்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொள்ள, கீழேயிருந்து கௌரியம்மா தேவியை அழைக்கும் சப்தம் கேட்டது.

“இதோ வரேம்மா…! என்றவள், “பிரதர்! நான் கிளம்பறேன்… அன்னம் விடு தூது ஏதாவது இருக்கா…?” என்றாள்.

“அன்னமா…? இங்கே அனுமார் தானே என் எதிரில் நின்னுட்டு இருக்கு” என்றான்.

“வெவ்வெவ்வே! உன் தங்கச்சி தானே…” என்றவள் வேகமாகக் கீழே ஓடினாள்.

சற்றுநேரம் தனது கவலைகளை மறந்து பழைய நினைவுகளை மீட்டெடுத்துக் கொடுத்த சகோதரியின் மீது அன்பு பெருகியது அவனுக்கு. அதே மனநிலையுடன் அலுவலகத்திற்குச் செல்லத் தயாரானான்.

குளித்துவிட்டு வந்தவன், கட்டில் மீது அலுவலக உடைகள் இருப்பதைக் கண்டதும், எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்துவிட்டுச் சென்றிருப்பவளை நினைத்துச் சிரித்துக் கொண்டான்.

உடைகளை அணிந்து கொண்டு சஹானாவின் மொபைலுக்கு முயன்றான். ரிங் போய்க் கொண்டே இருந்தது.

“பிரபு நேரமாகுதே… கிளம்பலையா? இன்னைக்கு லேபர்ஸ் மீட்டிங் வேற இருக்கே…” கீழேயிருந்து கௌரியம்மா குரல் கொடுத்தார்.

“இதோ வரேன்ம்மா!” என்றவன் டைனிங்கில் வந்தமர்ந்தான்.

“சஹி கார்லயா போயிருக்கா?” எனக் கேட்டான்.

“இல்லப்பா கால்டாக்ஸில…” என்றார் கௌரி.

“ஏன்? ரெண்டு கார் இருக்கு ஏதாவது ஒண்ணுல போயிருக்கலாமில்ல… நானும் அப்பாவும் ஒரே கார்ல போயிருப்போமே…” என்றான்.

“உங்கப்பா ஆஃபிஸ் போனதும் கார் வீட்டுக்கு வந்திடும் இல்ல. அதனால அவள் கால்டாக்ஸில போயிருக்கலாம். சரிவிடு… அதெல்லாம் பத்திரமா போய்வருவா… நீ சாப்பிடு” என்று டிஃபனை பரிமாறினார்.

“ம், அவள் வந்ததும் எனக்குப் போன் பண்ணச் சொல்லுங்கம்மா!” என்றவன் தந்தையுடன் அலுவலக விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே உண்டு முடித்தான்.

சஹானா தன்னிடம் சொல்லாமல் சென்றதற்குப் பின்னால், தனது வாழ்க்கையையே புரட்டிப் போடுமளவிற்குப் பெரிய விஷயம் இருக்கிறதென்று அறியாமல், அலுவலகத்திற்குக் கிளம்பினான் பிரபு.

*************************************************************************

“சஹானா! சஹானா!” அலுவலகத்திலிருந்து வந்த பிரபு, வீடே கிடுகிடுக்கும் அளவிற்குச் சப்தமாகக் குரல் கொடுத்தான்.

கோபத்தில் அவனது முகம் சிவந்திருந்தது.

“எதுக்குண்ணா இப்படிக் கத்தற? அண்ணி இன்னும் கோவில்லயிருந்து வரல!” சோஃபாவில் அமர்ந்திருந்த தேவி பதில் சொன்னாள்.

“உன் அண்ணி என்ன, சாமியாரா போகப் போறாளா?” எரிச்சலுடன் கேட்டான்.

கிளுக்கெனச் சிரித்தவள், “இதுக்கு பதில் நான் சொல்றதைவிட, நீங்க சொல்றதுதான் சரியா இருக்கும்” என்றாள்.

“எரிச்சலைக் கிளப்பாதே வாயை மூடு” என்றான்.

“என்னாச்சு பிரபு? எதுக்கு ஆஃபிஸ்லயிருந்து வந்ததும் வராததுமா கத்தற? காஃபி சாப்பிடுறியா?” நிதானமாகக் கேட்டார் கௌரி.

“ரொம்ப முக்கியம். எங்கே போய்த் தொலைஞ்சா உங்க மருமக? காலைலயிருந்து எத்தனை முறை போன் பண்ணிட்டேன். ரிங் போய்ட்டே இருக்கு அட்டெண்ட் பண்ண மாட்டேன்றா…” என்று கடுகடுத்தான்.

“அடடா! அவளோட போன்ல ஏதோ பிராப்ளம்னு, என்னோட போனை வாங்கிட்டுப் போனா. நான் சொல்ல மறந்துட்டேன்ப்பா” என்றார் கௌரி.

சோஃபாவில் அமர்ந்தவன், நெற்றியைத் தடவியபடி தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

“காலைல நான் எழந்திரிக்கறதுக்குள்ள கிளம்பிட்டா. இன்னைக்கெல்லாம் மீட்டிங்லயே போய்டுச்சி. ஈவ்னிங் அவளுக்குப் போன் பண்ணா எடுக்கல. வீட்டுக்குப் போன் பண்ணா இன்னும் வரலைன்னு சொல்றீங்க. அப்பவும் போனை மாத்தி எடுத்துட்டுப் போனதை என்கிட்ட சொல்லல…” என்றான் குறையாக.

“வயசாகுதே பிரபு. மறந்து போச்சு…” என்று புன்னகைத்தார்.

“அது சரி. உங்களுக்குத் தான் வயசாச்சு அவளுக்கென்ன? மணி ஆறாகுது. நானும் ஆஃபிஸ்ல இருந்து வந்தாச்சு… எனக்கு முன்னால கிளம்பிப் போனவ, இன்னும் வீட்டுக்கு வரலைனா என்ன அர்த்தம்? போன் பண்ணியும் அட்டெண்ட் பண்ணலைனா நான் என்னன்னு நினைக்கறது? ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாம் இல்ல…” கோபமும், வருத்தமும் கலந்த குரலில் சொன்னான்.

மகனை ஆழ்ந்து பார்த்த கௌரி, “பிரபு! கேட்கறேன்னு தப்பா நினைக்காதே, அவள் கோயிலுக்குப் போயிருக்கான்னு தேவி சொல்லித்தான் தெரியும். நீ என்கிட்ட கேட்டதுக்கு அப்புறம்தான் அவள் உன்கிட்ட சொல்லாமப் போனான்னு எனக்குத் தெரிஞ்சது. ஏன் உன்கிட்ட சொல்லலை? உங்களுக்குள்ள திரும்ப ஏதாவது பிரச்சனையா?” கவலையுடன் கேட்டார் கௌரி.
தலையை அழுந்தக் கோதியவன், “அதெல்லாம் எதுவும் இல்லம்மா...” சலிப்புடன் சொன்னவன், “ஊருக்குப் போன நாள்லயிருந்து என்கிட்ட சாதாரணமாத்தான் நடந்துகறா…” என்றவன் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.

மகனின் பதிலில் சமாதானம் அடையாத போதும், “சரிப்பா! இதுக்குக் குழம்பிக்காதே. அவள் வந்ததும், ஏன் சொல்லாம போனேன்னு கேளு. காஃபி கொண்டுவரேன். குடிச்சிட்டு ரெஸ்ட் எடு” என்றவர் அங்கிருந்து எழுந்து சென்றார்.

யோசனையுடன் கைகளில் முகவாயைத் தாங்கியபடி அமர்ந்திருந்தவன், தனது செல்போனிலிருந்து அவளுக்கு அழைத்தான். ரிங் போய்க் கொண்டே இருந்தது. எரிச்சலுடன் செல்போனை டீபாய் மீது போட்டான்.

“ஏதாவது பிரச்சனையா பிரபு?” எனக் கேட்டார் புருஷோத்தமன்.

“நீங்க நினைக்கிறா மாதிரி எதுவும் இல்லப்பா…” என்று முறுவலித்தான்.

ஆழ மூச்செடுத்தவர், “இப்போ உன்னோட நிலைமை முள்ளுமேல போட்ட துணி போலத்தான்ப்பா! இதுல சஹானா மேல தப்பு சொல்லவே முடியாது. நீ கொஞ்சம் பார்த்து நடந்துக்க… அவள் ரொம்ப நல்லப் பொண்ணு! இது உன்னோட வாழ்க்கை. நீங்க நல்லாயிருக்கணும்னு உங்கம்மா தினம் அந்தக் கடவுளை வேண்டிக்கிறா.

எனக்குப் புரியாமல் இல்ல… நீங்க ரெண்டுபேரும் சீக்கிரமே சமாதானமாகிடுவீங்கன்னு நாங்க நம்பிட்டு இருக்கோம். எதுவா இருந்தாலும் மனசுவிட்டுப் பேசுப்பா!” என்றவர், தளர்ந்த நடையுடன் எழுந்து செல்ல, பிரபு சற்றுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தான்.

மனம் அவளையே சுற்றி வந்தது. வீட்டுத் தொலைபேசியிலிருந்து மீண்டும் அவளுக்கு அழைத்தான்.

இரண்டு ரிங்கிலேயே போனை எடுத்த சஹானா, “அத்தை! இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்திடுவேன்” என்றவளது குரல் கரகரத்தது.

அவனிருந்த நிலையில் அதை மனத்தில் ஏற்றிக்கொள்ளாமல், கோபம் தடுத்தது.

“நான் பிரபு!” என்றான் கடினமான குரலில்.

உடனே அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

தொண்டையைச் செருமிக் கொண்டு, “நான் பத்து நிமிஷத்தில் வந்திடுவேன்…” என்று தொடர்பைத் துண்டித்தாள்.

கோபத்துடன் கழுத்திலிருந்த டையை உறுவியவன், விறுவிறுவென அறைக்குச் சென்றான். உடையைக்கூட மாற்றாமல் அவளது வரவை எதிர்பார்த்து காத்திருந்தான்.

யோசிக்க யோசிக்க அவள் தன்னைத் தவிர்க்கிறாள் என்று புரிந்து கொண்டான். திடீரென அவள் இப்படி நடந்துகொள்வதற்குக் காரணம் தெரியாமல், அவனுக்குத் தலையே வெடித்துவிடும் போலிருந்தது.

‘முன்தினம் மாலைகூட தன்னிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தவளுக்கு என்னதான் ஆயிற்று? அவளது விருப்பத்திற்கு மாறாக, எதுவுமே நடக்கவில்லையே… அப்படியிருந்தும் எதற்காக இந்த மாற்றம்?’

அவளது பாராமுகத்திற்கு விடை தெரியாமல், தவித்துப் போனான்.

No comments:

Post a Comment