அத்தியாயம் - 44
கிழக்குக் கடற்கரைச் சாலையிலிருந்த சாய்பாபா கோவிலுக்குள் நுழைந்த சஹானா, மனம் சற்று ஆசுவாசப்பட்டதைப் போல உணர்ந்தாள்.
அமைதியும், ஏகாந்தமுமாக இருந்த அந்தத் தியான மண்டபத்தில், சற்றுநேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தாள். நடந்ததையெல்லாம் நினைத்து நினைத்து மருகியவளது கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.
‘தெய்வமே! எனக்கு ஏன் இந்தப் பரிட்சை? இது வேணும், அது வேணும்னு நான் இதுவரை எதையுமே உன்னிடம் கேட்கல. ஆனா, எனக்கு எல்லாத்தையும் போதும் போதும்னு சொல்ற அளவுக்கு நிறைவா கொடுத்திருக்க.
ஒரு பொண்ணுக்குத் தேவை, அவள் கணவனோட அன்பு… அந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் திருப்தி அடையவே இல்ல. அவரோட மொத்த அன்பும், நேசமும் எனக்கு மட்டுமே சொந்தம்னு நினைச்சேன். பெருமிதத்தோடவும் இருந்தேன்.
நான் திருப்தி அடையலங்கறதுக்காக, என்னோட ஆசையை இப்படி நிராகரிக்கலாமா? எங்களோட இல்லரத்துல, இன்னொருத்தி வருவதை என்னால எப்படி அனுமதிக்க முடியும்?
பிரபுவை என்னோட உயிரா நினைச்சிட்டு இருக்கேன். அவருக்கு ஏதாவதுன்னா என்னால தாங்கவே முடியாதுன்னு, உனக்கு நல்லாவே தெரியும். எல்லாப் பெண்களைப் போலவும் அவரோட அன்பு எனக்கு மட்டுமே சொந்தம்னு நினைக்கறது தப்பா?
எனக்கு முன்னாலேயே இன்னொருத்தி அவரோட வாழ்க்கைல இருந்தாங்கற விஷயத்தை என்னால ஜீரணிக்க முடியலைதான். அவர்மேல இருக்கும் காதலாலத்தானே அவரை மன்னிக்கவும் முடியாம, மறக்கவும் முடியாம தவிக்கிறேன். ஆத்திரத்தில் என் வாயால் எந்த வார்த்தையையும் சொல்லிடக் கூடாதுன்னு தான் பொறுத்துப் போனேன்.
என்னுடைய முடிவுக்காக அவர் என்மேல கோபப்பட்டிருந்தாலோ… சண்டை போட்டிருந்தாலோ… நிச்சயமா என் முடிவு வேறாக மாறியிருக்கும். ஆனா, தப்பைத் திருத்திக்கிறேன்… புதுசா வாழ்க்கையைத் துவங்கலாம்னு கேட்பவரை என்னால் எப்படி வெறுக்க முடியும்?
என்னைத் தொட்டால் நான் அவமானப்படுவது போலன்னு சொன்ன ஒரு வார்த்தைக்காக, மனைவியாக இருந்தாலும் இன்னைக்கு வரை அந்தக் கோட்டைத் தாண்டி வராத அந்த நல்ல மனுஷனை நான் எப்படி இழக்க முடியும்?
யோசிக்காமல், எந்தப் பின்விளைவுகளையும் நினைக்காமல் அவர் தேடிகிட்ட ஒரு வாழ்க்கை, இன்னைக்கு எங்களுக்கு முட்டுக் கட்டையா நிக்குது. திரும்பவும் அப்படி ஒரு நிலைமை காலம்பூரா எங்களுக்குள்ள இருக்கக் கூடாதுன்னு, ரெண்டு பேருமே மனசுக்குள்ள போராடிட்டு இருக்கோம்.
அவரோட பழைய வாழ்க்கையை கனவா நினைச்சி மறந்துட்டு சேர நினைக்கற நேரத்துல, பழைய அத்தியாயம் ஏன் திரும்பத் துவங்கணும்? பிரபு எதுக்காக அவளிடம் பேசறார்?
என்மேலிருக்கும் நேசத்தைச் சொல்லாம சொல்லும் அவரோட பார்வை, எந்தக் கள்ளத்தனத்தையும் எனக்குக் காட்டலை. ஆனாலும், அவளோடு பேசுவதையும் என்னால் தாங்க முடியலையே…
முடிந்து போன விஷயத்தை எதுக்குத் திரும்ப பிள்ளையார் சுழி போட்டுத் துவங்கணும்? எந்தவிதமான தேவையில்லாத எண்ணத்தோடயும் பேசலைனா அவர் ஏன் என்னிடம் இதை மறைக்கணும். சொல்லியிருக்கலாமே…
எதுவாக இருந்தாலும் அதைத் தாங்கிக்கும் மனதிடத்தைக் கொடு கடவுளே! கோபத்தில் வார்த்தையை விடக்கூடாதுங்கற என்னோட கட்டுப்பாடு, எப்போ தளர்ந்து போகுமோன்னு தெரியாம, என்னை நினைச்சே எனக்குப் பயமா இருக்கு.
எனக்குத் தெளிவைக் கொடு. இந்தப் போராட்டத்துக்கு ஒரு முற்றுப் புள்ளியை நீதான் வைக்கணும்! கேட்காமலேயே கொடுத்த தெய்வம் நீ! அடுத்தவங்களோட பசியைக் கூட பொறுக்காத நீ, என்னோட கண்ணீரையும் துடைப்பீங்கங்கற நம்பிக்கையோட உங்களைத் தேடி வந்திருக்கேன்.
என் மொத்த வாழ்க்கையையும் உன் பாதத்தில் வச்சி உன்னையே நம்பி சரணாகதி அடைஞ்சிட்டேன். இனி இது உன்னோட கவலை. நடக்கப்போற அத்தனை விஷயங்களுக்கும், இனி நீ தான் பொறுப்பு!’
தனது மனக்கவலைகள் அத்தனையையும் அந்தத் தெய்வத்திடம் முறையிட்டுவிட்டு, இமைகளைத் திறந்தாள். எதிரிலிருந்த பாபாவின் உருவம் ஆறுதலுடன் தன்னைப் பார்ப்பது போலத் தெரிய, கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
தியான மண்டபத்திலிருந்து வெளியே வந்தவளை, மெல்லிய சாரல் துளிகள் நனைத்தன. காலை நேரத்திலும் சுட்டெறித்துக் கொண்டிருந்த சூரியன் சட்டென மறைந்து, வானம் கருக்கத் துவங்கியது.
வருணனின் ஆதிக்கத்தால் மெல்ல மெல்ல குளிர்ந்து கொண்டிருந்த நிலமகளைப் போல, மனத்திலிருந்த இறுக்கமெல்லாம் சிறிதுசிறிதாக கரைந்து போக, தன்னை நனைத்த இளஞ்சாரலை இரசிக்கத் துவங்கினாள்.
மணி பதினொன்று. ஏழு மணிக்குக் கோயிலுக்கு வந்தவள் இத்தனை நேரம் தியான மண்டபத்திலேயே அமர்ந்துவிட்டாள். மனத்தை அரித்துக் கொண்டிருந்த சஞ்சலங்களையெல்லாம் அவன் பாதத்தில் கொட்டி கண்ணீர் வடித்தவளது இதயம் சற்று லேசாகியிருந்தது.
வானம் கிழித்துக் கொண்டு கொட்டுவதைப் போல, மழை பொழிந்து கொண்டிருந்தது.
சுழற்றியடித்த காற்றும், பகலை இரவாக்கிக் கொண்டிருந்த மழையும், தன்னை ஏதோவொரு காரணத்திற்காக அங்கேயே நிறுத்தி வைத்திருப்பதாக நினைத்தாள் அவள்.
ஒருவேளை இந்த ஏகாந்தத்தையும், மன அமைதியையும் இன்னும் சற்றுநேரம் அனுபவித்துவிட்டுச் செல்லத்தான் இப்படி ஒரு மழையைக் கடவுள் பொழியச் செய்தானோ!’ என்று நினைத்து முறுவலித்துக் கொண்டாள்.
கோவிலிலிருந்து அவள் கிளம்பவும், கௌரியம்மா அவளை மொபைலில் அழைக்கவும் சரியாக இருந்தது. நான் வர தாமதமாகும் என்று சொல்லி தொடர்பைத் துண்டித்தாள்.
இரண்டு மணிநேரம் கொட்டித் தீர்த்த மழையால் சாலையெங்கும் தேங்கியிருந்த மழை நீர், போக்குவரத்து நெரிசலை உண்டு பண்ணியது. குறுக்குச் சாலை ஒன்றில் சென்று விடலாமென்று, அவளது அனுமதியுடன் வண்டியைத் திருப்பினான் டிரைவர்.
மதியநேரம், மழை வேறு முற்றிலுமாக விடாமல் பிசுபிசுத்துக் கொண்டிருந்ததால் சாலையே வெறிச்சோடி கிடந்தது. சற்று தொலைவு சென்றதும் ஒரு டாக்ஸி ஆட்டோ நின்றிருக்க காக்கி உடையணிந்திருந்த ஆட்டோ டிரைவர், அவள் சென்று கொண்டிருந்த டாக்ஸியை நிறுத்த கைக்காட்டினார்.
ஆனால், கால்டாக்ஸியின் டிரைவர் நிறுத்தாமல் செல்ல, சஹானா இடையிட்டாள்.
“அண்ணே! ஆட்டோல ஆள் இருக்காங்க போல… தெரியும். ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன் கொஞ்சம் நிறுத்துங்களேன்” என்றாள்.
“இதெல்லாம் ரொம்ப லோன்லியான ஏரியாம்மா! நம்பி நிறுத்த முடியாது…” என்றார் கால்டாக்ஸியின் டிரைவர்.
“பரவாயில்லன்ணே! எல்லோரும் கெட்டவங்களா இருக்கமாட்டாங்க. யாரோ செய்ற தப்புக்கு சில நல்லவங்களும் கஷ்டப்படணுமா. ப்ளீஸ் வண்டியை ரிவர்ஸ் எடுங்க. எதுவும் ஆகாது. பாபா என்னைக்கும் துணையிருப்பார்…” என்றாள்.
அவளது வார்த்தையில் முற்றிலும் சமாதானமடையாவிட்டாலும் ஏதோவொரு நம்பிக்கையில் வண்டியை ரிவர்ஸ் எடுத்தார் டிரைவர்.
ஆட்டோவை முழுவதுமாக நெருங்கிச் செல்லாமல், வண்டியை நிறுத்தவும், அந்த ஆட்டோ டிரைவர் நிம்மதியுடன் அவர்களை நோக்கி வந்தார்.
“சார்! லேடி பேசஜ்சர் இருக்காங்க. எஞ்ஜின் ஸ்டார்ட் ஆக மாட்டேன்னுது. எந்த வண்டியும் இந்தப் பக்கமா வரல. நீங்க அவங்களைக் கொஞ்சம் மெயின் ரோட்ல இறக்கிட முடியுமா?” என்று கேட்டார்.
டாக்ஸி டிரைவர் அதை மறுத்தார். ஆட்டோ டிரைவர் சஹானாவிடம் திரும்பி, “மேடம்! நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க… லேடியா இருக்காங்க…” என்றார் கெஞ்சலுடன்.
அவளும், “சரி வரச்சொல்லுங்க…” என்றாள்.
அவளுக்கு நன்றி கூறிவிட்டு அவர் செல்ல, கால் டாக்ஸி டிரைவர் முணுமுணுத்தார்.
புன்னகைத்தவள், “அண்ணே! நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்…” என்றாள்.
“நீங்க வேறம்மா… நாட்ல நல்லவன்ற போர்வைல இருக்கறவன் தான் அத்தனைத் தப்பையும் தயங்காம செய்றாங்க…” என்றார் எரிச்சலுடன்.
பதில் சொல்லாமல் புன்னகைத்தவள், ரியர் வியூ மிரரில் தெரிந்த ஜோஷிதாவைக் கண்டதும் மொத்தமாக அதிர்ந்து போனாள்.
‘இவளுக்காகவா தான் இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்தோம்?’ எரிச்சலாக வந்தது அவளுக்கு.
திகைத்த முகத்துடன் அமர்ந்திருந்த சஹானாவைக் கண்டதும், ஜோஷிதாவின் கண்கள் விரிய இதழ்களில் ஒரு எள்ளல் சிரிப்புத் தோன்றியது.
“ஓ! சஹி! நீயா? நல்லவேளை நீ இந்தப் பக்கம் வந்த…” என்று உரிமையுள்ளவள் போலப் பேச, சஹானாவிற்கு ஆத்திரமாக வந்தது.
“உங்களுக்குத் தெரிஞ்சவங்களா மேடம்!” காரில் அமர்ந்தபடி கேட்டார் டிரைவர்.
அவருக்குப் பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. ஆனால், அவளை முந்திக் கொண்டு பதிலளித்தாள் ஜோஷிதா.
“ஆமாம். நாங்க ரெண்டு பேரும் சிஸ்டர்ஸ்!” என்றாள் கேலிச் சிரிப்புடன்.
சஹானா அவளை முறைத்தாள்.
“என்ன சஹி அப்படிப் பார்க்கற? நியாயமா நீ என்னை அக்கான்னு கூப்பிடணும். ஆனா, நீ கூப்பிடமாட்ட… இருந்தாலும், முறைன்னு ஒண்ணு இருக்கில்ல…” என்றவள் விஷமமாகச் சிரித்தாள்.
அவள் பேசப் பேச சஹானா உதடுகளை அழுந்த மூடிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“டிரைவர்! கொஞ்சம் பாட்டைச் சத்தமா வைங்களேன்…” என்ற ஜோஷிதா, சாய்ந்து நன்றாக அமர்ந்தாள்.
“பரவாயில்ல… நான் அத்தனைத் தூரம் பிரபுவோட மறுபக்கத்தைத் தோலுரிச்சிக் காட்டியும், இன்னும் அவனோட குடும்பம் நடத்திட்டு இருக்கியே. ஆனாலும், நீ ரொம்பச் சாமர்த்தியசாலி!
நான்தான் உன்னை நியாயவாதின்னு நினைச்சி, தப்புக்கணக்குப் போட்டுட்டேன். உனக்கு மனசுக்குள்ள பிரபு மேல கோபமிருந்தாலும், எதையுமே நீ வெளியே காட்டிக்கல. பிரபுவை மன்னிச்சது போலவும் ஆச்சு. அவனோட பணத்தையும், செல்வாக்கையும் தக்க வச்சிக்கவும் செய்தாச்சு.
உன்னை மாதிரி ஒரு கன்னிங்கான ஆளை, நான் பார்த்ததேயில்லை. எவ்ளோ அழகா பிரபுவை ஹாண்டில் பண்ற. இருந்தாலும், என்ன பிரயோஜனம்? கடைசில பிரபு என்னைத் தானே தேடி வர்றார்…” என்றதும், சஹானா இமைக்காமல் அவளைப் பார்த்தாள்.
“ஓ காட்! உனக்குத் தெரியாத விஷயத்தை… நானே சொல்லிக் கொடுத்துட்டேனா… இருந்துட்டுப் போகட்டும். என்னைக்கிருந்தாலும் நீ தெரிஞ்சிக்கணும் இல்ல… என்னதான் நீ மாய்மாலம் பண்ணினாலும், பிரபு என்னைத்தான் தேடி வருவார்.
ஆரம்பத்துல அவர் என்கிட்டப் பேசும்போது நான் ஒதுங்கிப் போறா மாதிரியே தான் நடந்துகிட்டேன். எப்பவுமே ஆம்பளைங்களுக்கு தன்னைக் கண்டுக்காத பொண்ணு மேலதானே ஈர்ப்பு வரும். அவங்க ஈகோ அடிபடும்…
அதே டெக்னிக்தான் இங்கே நடந்தது. நான் விலகி விலகிப் போனேன். அவன் என்னை நெருங்கி நெருங்கி வந்தான். கூடிய சீக்கிரம் உன்னைவிட்டு நிரந்தரமா வரவச்சிடுவேன்…” என்றவளது கண்களில் தெரிந்த குரூரமும், உதடுகளில் கசிந்த புன்னகையும் சஹானாவை மருட்டியது.
‘எப்படி இவளால் இத்தனைக் குரோதத்தையும் நெஞ்சுக்குள் வைத்துக் கொண்டு, எதுவும் அறியாதது போலச் சிரிப்புடன் நிதானமாகப் பேச முடிகிறது?’ சஹானாவின் இரத்தம் கொதித்தது.
கடவுளிடம் வேண்டிக்கொண்ட பொறுமை, அவளது கைமீறும் நிலைக்குச் சென்றது. அவளது பற்கள் அத்தனையும் உதிரும்படி ஓங்கி அறைய, கரங்கள் துடித்தன. பொறு பொறு என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
தங்களுக்குள் நடக்கும் நிகழ்வு குடும்பத்தினருக்கே தெரியக்கூடாது என்று நினைப்பவள், தன்னை மற்றவர்களுக்குக் காட்சிப் பொருளாக காட்டிக்கொள்ள விரும்புவாளா என்ன?
ஆயினும், அவளது அமைதியை தனக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொண்ட ஜோஷிதா, மேலும் பேச ஆரம்பித்தாள்.
“இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப் போகல சஹானா! இதோ வழியில எனக்கு லிஃப்ட் கொடுத்தப் பாரு. இதே போல கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… பிரபு நம்ம ரெண்டு பேருக்குமே கிடைப்பான். கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா, நிறைய லாபம் இருக்கே…” என்றாள்.
அவள் பேசிய எந்த வார்த்தைக்கும், சஹானா வாயைத் திறக்கவில்லை. அதுவே, ஜோஷிதாவின் கோபத்தை பன்மடங்காகப் பெருக்கிக் கொண்டிருந்தது.
“மேடம்! நீங்க எங்கே இறங்கணும்?” டிரைவரின் குரலில் இருவரும் நினைவுக்கு வந்தனர்.
“அதோ, அப்படி ஓரமாக நிறுத்திக்கோங்க…” என்றவள், வண்டியிலிருந்து இறங்கினாள்.
டிரைவரிடம் ஏதோ சொல்லிவிட்டு, அவள் பின்னாலேயே இறங்கிய சஹானா, “ஒரு நிமிஷம்…” என்று அவளை நிறுத்தினாள்.
இதுவரை அமைதியாக இருந்தாளே… ஒருவேளை, தான் பேசிய பேச்சில் கொஞ்சம் பயந்து இறங்கி வருகிறாளோ…?’ என்று நினைத்தபடி உள்ளுக்குள் சிறு சந்தோஷத்துடன் அவளருகில் வந்தாள் ஜோஷிதா.
டாக்ஸி சற்று தொலைவாகச் செல்லும் வரை அமைதியாக இருந்தவள், கைகளைக் கட்டிக்கொண்டு ஜோஷிதாவை நிதானமாகப் பார்த்தாள்.
“சஹானா…! சொல்ல வந்ததைச் சீக்கிரம் சொல்லு…” என்று அவளை அவசரப்படுத்தினாள்.
“சோ, நீ பேசினதையெல்லாம் பார்த்து… நான் உன்கிட்ட கெஞ்சி சமாதானம் பேசுவேன்னு நினைக்கிறியா ஜோஷிதா!” என்றாள் அழுத்தமாக.
அவளோ நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்த்தாள்.
“நீ இப்படியெல்லாம் பேசினா… பயந்து உன் காலைப் பிடிச்சி கெஞ்சுவேன்னு நினைச்சிட்ட… இல்ல. ம்சும்! எனக்கு எதையுமே நேரா செய்துதான் பழக்கம். இது என்ன தெரியுமா?” என்று கழுத்திலிருந்த தாலிச்சங்கிலியைத் தொட்டுக் காட்டினாள்.
ஜோஷிதாவின் முகம் கறுத்தது.
“என்னை யாராவது நீங்க யாருன்னு கேட்டா, மிசஸ். சஹானா பிரபுன்னு சப்தமா சொல்வேன். அப்புறம் என்ன சொன்ன… கன்னிங்! இதுக்கான அர்த்தம் என்னன்னு தெரியுமா உனக்கு…
என் கணவரோட நான் வாழ எதுக்குத் தந்திரமா நடந்துக்கணும்…? அதோட என் கணவர் எனக்கு உரிமையானவர்னா அவரைச் சேர்ந்த அத்தனையும் எனக்குச் சொந்தம் தானே. இதுல எங்கேயிருந்து வந்தது தந்திரம், மந்திரமெல்லாம்.
ஆனா, அடுத்தவங்களுக்கு உரிமையான பொருளைத் தட்டிப் பறிக்கும் சில ஜென்மங்ககிட்ட, அப்படித் தந்திரமா நடந்துக்கறதுல தப்பே இல்லைன்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற ஜோஷிதா?” என்றாள் கிண்டலாக.
சஹானாவின் ஒவ்வொரு வார்த்தையும், ஜோஷிதாவின் மனத்தில் இடியென இறங்கியது. அவளது அகங்காரம் அங்கே நசுக்கப்பட… என்ன செய்வதெனப் புரியாமல் தடுமாறினாள். கோபம் எரிமலையாகப் பொங்கியது.
“சஹானா! வேணாம். என்னைச் சீண்டிப் பார்க்காதே. என்னைப் பத்தி உனக்குத் தெரியாது. இதோடு நிறுத்திக்க அதான் உனக்கு நல்லது. இல்லனா…” என்றவளுக்கு அடுத்த வார்த்தை வரவில்லை.
“இல்லைனா என்ன செய்வ ஜோஷிதா? இப்போ மிரட்டினா மாதிரி மிரட்டுவியா? என்ன சொன்ன… என்ன சொன்ன? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணுமா… இன்னொரு பொண்ணோட வாழ்க்கைல தலையிடுறோம்ங்கற குற்ற உணர்வு கொஞ்சமாவது உனக்கு இருக்கா?
இறங்கும் போது ஒரு வார்த்தை சொன்ன பாரு… இங்கே இறங்கிக்கிறேன்னு… அதான் உனக்கான இடம். என்னைக்குமே நீ என்னோட இடத்துக்கு வரணும்னு கனவுல கூட நினைக்காதே. அது என்னைக்குமே நடக்காது” என்றாள்.
மனத்திற்குள் அடக்கி வைத்த கோபம், கடைசி வரிகளை உச்சரிக்கும் போது அவளது முகத்தில் பிரதிபலித்தது.
காரில் ஏறியவளுக்கு தனது ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“அண்ணா! பெசண்ட் நகர் பீச்சுக்குப் போங்க…” என்றவள், இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினாள்.
ஜோஷிதா பேசிய பேச்சு இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
அவள் இத்தனைத் தைரியமாகப் பேசக் காரணம் தனது கணவன் தானே என்று ஒட்டுமொத்த கோபமும் அவனிடம் திரும்பியது.
தன்னைச் சுற்றியிருப்பவரது நடவடிக்கையால் எங்கே தனது சுயத்தைத் தொலைத்து விடுவோமோ என்ற அச்சம் அவளை ஆட்கொண்டது.
No comments:
Post a Comment