Thursday, October 1, 2015

உறவெனும் புதிய வானில்

அத்தியாயம் – 45

வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டதும், அவளது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவளோ, முழுதாகப் பத்து நிமிடங்களுக்குப் பிறகே வந்தவள், அவனிருந்த பக்கம்கூடத் திரும்பாமல் தனது அறைக்குச் சென்றாள்.

கோபமிருந்த போதும், அவளிடம் பொறுமையாகவே பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனாலும், அவளது அலட்சியப் போக்கு அவனது ஈகோவை உரசிப் பார்க்க, பிரபுவின் முகம் இறுகியது.

ஆத்திரத்தில் பற்களைக் கடித்தவன், “சஹானா! நில்லு!” கட்டளையிடும் குரலில் அதட்டலாகச் சொன்னான்.

நின்றவள் திரும்பி அவனைப் பார்த்தாள். அவளது பார்வை, எதற்கும் தயார் என்பதைப் போலிருந்தது. இருவரது பார்வையிலும் அனல் தெறித்தது.

“எங்கே போயிட்டு வர்ற?” என்று உறுமினான்.

“கோயிலுக்கு…” வழக்கம் போல நிதானமான பேச்சு அவளிடம்.

“அதைச் சொல்லிட்டுப் போகணும்னு தெரியாதா உனக்கு?”

“அத்தைகிட்ட சொல்லிட்டுத்தான் போனேன்…” என்றாள்.

அவளது விட்டேத்தியான பதில்கள், அவனது ஆத்திரத்தை முன்னிலும் அதிகமாக்கின.

“என்கிட்ட ஏன் சொல்லிட்டுப் போகல?” என்று சீறினான்.

அவளோ நிதானமாக, “எதுக்குச் சொல்லணும்?” என்றாள்.

“என்னது?” என்று நெற்றியைச் சுருக்கினான்.

“எந்த உரிமைல உங்ககிட்ட சொல்லிட்டுப் போகணும்னு எதிர்பார்க்கறீங்க?” என்றாள்.

அவளது பதிலில் வெடுக்கென நிமிர்ந்து நின்றவன், “சஹானா! யார்கிட்ட பேசறோம்னு புரிஞ்சி பேசு. என்னோட பொறுமைக்கும் எல்லையிருக்கு” கோபத்துடன் உறுமினான்.

சட்டென தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

மனத்தில் அடக்கிவைத்த கோபமெல்லாம் தலைதூக்க, முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

‘உனக்கு மட்டுமல்ல எனக்கும்தான்…’ என்று சொல்ல நினைத்தவள் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

பிரபுவின் நிதானம் பறந்துகொண்டிருந்தது. ஆனால், அவளது முகம் வெளிப்படுத்திய வேதனையை, யோசனையுடன் பார்த்தான்.

“என்னாச்சு? உடம்பு சரியில்லயா?” என்றபடி அவளருகில் வந்தான்.

வேகமாகப் பின்னால் நகர்ந்தவள், “அதெல்லாம் ஒண்ணுமில்ல…” என்றாள்.

கண்களில் கனல் தெறிக்க அவளைப் பார்த்தான்.

“நீ எதையோ என்கிட்ட மறைக்கற… சம்திங் ராங்…” என்றவனைப் பார்த்து உதட்டை அழுந்த கடித்தபடி பார்த்தாள்.

மனத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பால் விழிகளில் அலைபாய நின்றிருந்தவளை, தவிப்புடன் பார்த்தான். தலையிலேயே அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

‘சே! என்ன வாழ்க்கை இது? எதுக்கு இப்படி விலகிவிலகிப் போறா?’ வெறுப்புடன் நினைத்தவன், கைகளை இறுக மூடி தொடையிலேயே குத்தினான்.

அவளது கட்டுப்பாட்டையும் மீறி விழிகள் நீரைப் பொழிந்தன.

“உன் மனசுல என்னத்த நினைச்சிட்டு இப்படிப் பேசிட்டு இருக்க சஹானா! வாயைத் திறந்து சொல்லேன்…” தவிப்புடன் ஆரம்பித்தவன், எரிச்சலுடன் முடித்தான்.

கன்னங்களை முத்தமிட்ட கண்ணீரை வேகமாகத் துடைத்தவளுக்கு, அவனெதிரில் இப்படி அழுதுவிட்டோமே என்று அவமானமாக இருந்தது.
தன் மீதான சுயபச்சாதாபம், அவன்மீது கோபமாகத் திரும்பியது.

இத்தனை நாள் எரிமலையாகக் குமுறிக்கொண்டிருந்த மனத்தில் பொத்தி வைத்திருந்த ஆற்றாமையும், அதனால் விளைந்த கோபமும் அவளது நிதானத்தை மழுங்கடித்தது.

“தெரியாதவங்களுக்குச் சொல்லலாம். தெரிஞ்சிகிட்டே கேட்கறவங்ககிட்ட என்னன்னு சொல்றது?”

இதுநாள் வரை எத்தனைக் கோபமிருந்த போதும், அவளிடம் இப்படியொரு ஆங்காரத்தை அவன் பார்த்ததேயில்லை. அவளது முகபாவத்தையும், பேச்சையும் நம்பமுடியாமல் பார்த்தான்.

அவனைப் பார்க்கப் பார்க்க ஜோஷிதாவின் குரூரமும், பேச்சுமே நினைவில் வர, அந்த அழுத்தத்தில் அவளது நிதானமும், பொறுமையும் கட்டவிழ வார்த்தைகள் குத்தீட்டிகளாகப் பாய ஆரம்பித்தது.

“நான் உங்களுக்கு என்ன துரோகம் பண்ணேன்? ஏன் இப்படி என்னைக் கொல்லாம கொல்றீங்க? உங்களுக்கு என்கூட வாழப் பிடிக்கலைனா, நேரடியா சொல்லிடுங்க. உங்க கண்ணிலேயே படமுடியாத இடத்துக்குப் போயிடுறேன். அப்புறம், நிம்மதியா உங்க விருப்பம் போல இருந்துக்கலாம்…” என்று விடாமல் பேசியவளுக்கு கோபத்தில் உடல் நடுங்கியது.

அவளது வார்த்தைகளைக் கேட்ட பிரபுவிற்கு ஆத்திரமாக வந்தது.

“பைத்தியமாடி உனக்கு. வாய்ல வந்ததையெல்லாம் உளறிட்டு இருக்க. நான் ஒண்ணு கேட்டா, நீ ஒண்ணு பேசற. அப்படி உன் நிம்மதி பறிபோற அளவுக்கு என்ன பண்ணேன்?” பதிலுக்கு அவனும் குரலை உயர்த்தினான்.

“இன்னும் என்ன பண்ணணும்? எல்லாத்தையும் மிச்சம் வைக்காம செய்துட்டுத் தானே இருக்கீங்க… உங்களை நம்பினதுக்கு இதான் பலனா? உங்களுக்கு அவதான் வேணும்னா, என்னை எதுக்குக் கல்யாணம் செய்துகிட்டீங்க?” என்றாள் ஆங்காரத்துடன்.

“என்னது? என்னடி பேசற நீ… ஜோஷிதாவைப் போய்…” என்றவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.

“எப்படிச் சஹானா உன்னால அப்படி நினைக்க முடியுது? நீ நினைக்கிறா மாதிரி எதுவுமே இல்ல…” அவன் சொல்லி முடிக்கும் முன், “போதும்… இன்னமும் எத்தனைப் பொய்தான் சொல்வீங்க?” என்று இடையிட்டாள்.

“கடவுளே! இவளுக்கு எப்படிப் புரியவைப்பேன்?” என்று நெற்றியைத் தடவிக் கொண்டான்.

அவளது கண்ணீர் அவனது இதயத்தை உலுக்கியது. அவளை நெஞ்சோடு அணைத்துக் கொள்ள துடித்தான். ஆனால், அதற்குத்தான் தடை போட்டுவிட்டாளே…

அறியாமல் செய்த பிழையால், அவளது மனத்தை இரணமாக்கியவனுக்கு, தெரிந்தே அவளைக் காயப்படுத்தும் தைரியம் இல்லை. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலைக்கு, தான் ஆளாவோம் என்று அவன் கனவிலும் எண்ணவில்லை.

கண்கள் இருட்டிக் கொண்டு வர, சுவரோரமாகச் சரிந்து அமர்ந்தாள்.

காலையில் ஒரு கப் காஃபியை கௌரி வற்புறுத்திக் கொடுத்ததைக் குடித்துவிட்டுச் சென்றவள் தான். இரவு ஏழு மணிவரை விரதத்தில் இருக்கிறாளே…

அவளது தள்ளாட்டத்தைக் கண்டவன், “சஹானா!” என்றபடி அவளை நெருங்கியவன் சுதாரித்து தண்ணீர் பாட்டிலுடன் அவளெதிரில் முழங்காலிட்டு அமர்ந்தான். 

மூடியைத் திறந்து பாட்டிலை அவளிடம் நீட்டினான். மறுக்காமல் வாங்கிக் கொண்டவள், மளமளவென பாதி பாட்டிலைக் காலி செய்தாள்.

அவளையே இமைக்காமல் பார்த்தவன், “காலைலயிருந்து எதுவும் சாப்பிடலையா?” எனக் கேட்டான்.

அவள் அமைதியாக கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

சற்றுநேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு வேதனையாக இருந்தது.

“சஹானா! என்மேல இருக்கற கோபத்துல, உன் உடம்பை ஏன் கெடுத்துக்கற?” ஆற்றாமையுடன் கேட்டான்.

அவளிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லாமல் போக சலிப்புடன், “எனக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சனை இருக்கு. இதுல நீ வேற இப்படியிருந்தா நான் என்னன்னு நினைக்கிறது? உன்னை இப்படி வருத்திக்கிற அளவுக்கு என்ன நடந்தது?” சிறுகுழந்தையிடம் பேசுவதைப் போலப் பேசினான்.

அதற்கும் எவ்வித பலனுமில்லாமல் போக, “இருந்து இருந்து ஏதாவது வந்துடுமா உனக்கு? இன்னும் உனக்கு என்ன சந்தேகம்? கடைசி வரைக்கும் என்னைப் புரிஞ்சிக்கவே போறதில்லையா நீ…” ஏமாற்றமும், விரக்தியும் அவனது குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“நான் நல்லவன் இல்ல சஹானா! ஆனா, நம்பவச்சி கழுத்தறுக்கறவனும் இல்ல… முக்கியமா உன்னை ஏமாத்தணும்ங்கற எண்ணம் கொஞ்சங்கூட இல்ல. தயவு செய்து புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. இதுக்கு மேல என்னை எப்படி ப்ரூவ் பண்றதுன்னு எனக்குத் தெரியல…” என்றான்.

ஆழமூச்செடுத்தவன் எழுந்துச் சென்று சோஃபாவில்அமர்ந்தான்.

“நான் உங்களை ப்ரூவ் பண்ணச் சொல்லி கேட்கல… நடக்கிறதை என்கிட்ட சொல்லுங்கன்னு கேட்கறேன்… நான் எதைப் பத்திக் கேட்கறேன்னு நல்லாவே தெரியும். தெரியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க… ஏன்னா, உங்கமேல எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கை தந்த தைரியத்துல தான், ஜோஷிதாகிட்ட தலைநிமிர்ந்து பேசிட்டு வந்திருக்கேன்” என்றாள்.

“என்ன…? அவளைப் போய் நீ பார்த்தியா…?” அதிர்ச்சியுடன் கேட்டான்.

“ஏன் நீங்க போய்ப் பார்க்கும்போது நான் பார்த்துப் பேசக்கூடாதா?” என்றாள் கிண்டலாக.

அவளை உற்று நோக்கியவன், “என்னை வேவு பார்க்கறியா?” என்றான்.

“ஹும்! இல்லனா, உங்க உறவை புதுப்பிச்சிக்கிட்டது எனக்கு எப்படித் தெரியும்?” – இடக்காகக் கேட்டாள்.

அவளை முறைத்தவன், “என்னவோ இப்பத்தான் நம்பிக்கை அதுஇதுன்னு பேசின… இதான் உன் நம்பிக்கையா?” என்றான்.

“உங்க மேல நிறைய நம்பிக்கை இருக்கு… ஆனா, அடுத்தவளோட கணவனைத் தனக்கு உரிமையாக்கிக்க நினைக்கிறவ மேல துளிகூட இல்ல…”

“நீ தப்பா புரிஞ்சிட்டிருக்க சஹி! தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு தப்பு செய்துட்டேன். என்னால அவளோட வாழ்க்கையே திசைமாறி போச்சு. அதான்…”

“அதுக்காக, பிராயசித்தம் பண்றீங்களா?” எனக் கேட்டாள்.

“அது தப்புன்னு சொல்றியா?”

“தப்பை சரி செய்யணும்னு நினைக்கிறதை, நான் குற்றம் சொல்லல. பாத்திரம் அறிந்து பிச்சை போடுன்னு சொல்வாங்க…” என்றாள்.

கண்கள் இடுங்க அவளைப் பார்த்தவன், “உன்கிட்டயிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்க்கல…” என்றான்.

“ஏன்னா, அவளைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். என்னைக்கு நீங்க அவகிட்ட கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டீங்களோ, அன்னைக்கே உங்களை நாலு அறை விட்டிருந்தான்னா… அவள் நல்லவ. இன்னைக்கு இப்படி நாம அவளைப் பத்தி பேசிட்டு இருந்திருக்கமாட்டோம். இங்கேதான் எல்லாமே தலைகீழா இருக்கே” என்றாள் கிண்டலாக.

சிலநொடி கண்களை மூடி அமைதியாக இருந்தவன், “இப்போ என்னதான் செய்யச் சொல்ற? அவளை அப்படியே விட்டுடச் சொல்றியா?” என்றான்.

“அவள் படிச்சவ, தனக்கு எது நல்லது கெட்டதுன்னு பிரிச்சி பார்க்கற அறிவு நிச்சயம் அவளுக்கு இருக்கும். நீங்க விலகினது விலகினதாகவே இருக்கட்டும். அவளோட வாழ்க்கையை அவதான் ஃபேஸ் பண்ணியாகணும். நீங்க அவளுக்கு உதவுறேன்னு திரும்பத் திரும்ப அவளைச் சந்திக்கிறதை, என்னால அனுமதிக்க முடியாது…” என்றாள் பிடிவாதமாக.

“இதுக்குத்தான் நான் உன்கிட்ட எதுவும் சொல்லாம, இந்த விஷயத்தை முடிக்க நினைச்சேன். அவள் என்ன பேசினாலும் நம்பற. என் வார்த்தையை நம்பமாட்டியா? என்மேல நிறைய நம்பிக்கை இருக்குன்னு சொல்றதெல்லாம் வெறும் வாய் வார்த்தை தானா?” என்றான்.

சஹானாவிற்கு ஆயாசமாக இருந்தது. என்ன பேசினாலும், கடைசியில் அதே இடத்தில் வந்து நிற்கிறோம் என்று ஏமாற்றமாக இருந்தது.

ஜோஷிதாவின் முகத்திரையை அவனுக்கு கிழித்துக் காட்டியும், பிடிவாதமாக நிற்பவனை என்ன சொல்லி மாற்றுவது என்று புரியவில்லை.

“ஆதாரமில்லாம நான் பேசல. நீங்க அவளோட பழகினது உங்களுக்கு வேணா பொழுதுபோக்கா இருந்திருக்கலாம். ஆனா, அவள் உங்களோட தன் வாழ்க்கையை இணைச்சிக்கணும்னு தான் நினைச்சிருக்கா, இப்பவும் நினைக்கிறா.

என்னைப் பார்க்கும் போதெல்லாம், அவளோட முகம் பிரதிபலிக்கிற வெறுப்பை உணராம இல்ல. அவளோட வலியும், வேதனையும் புரியாமல் இல்ல… அதுக்காக என் வாழ்க்கையை, அவளோட பங்கு போட்டுக்கவும் நான் தயாரா இல்ல.

இது என்ன தெரியுமான்னு என் தாலியைக் காட்டிக் கேட்டேன். சமுதாயத்துல என்னோட அங்கீகாரம் என்னனு தெரியுமான்னு முகத்துல அடிச்சா மாதிரி கேட்டேன். அவளுக்கிருந்த கோபத்தில், பேச்சே வரலை.

ஆனா, இதுக்கெல்லாம் உன் வீட்டுக்காரன்தானே காரணம். தப்பு செய்தவங்களை விட, அதுக்குத் தூண்டிவிட்டவங்கதான் குற்றவாளின்னு அவள் பதிலுக்குச் சொல்லியிருந்தா நான் என்ன செய்திருக்க முடியும்?” மனத்திலிருந்ததையெல்லாம் கொட்டிக் கொண்டிருந்தவளை இமைக்காமல் பார்த்தான்.

அவள் சொல்வதெல்லாம் உண்மை என்று உணர்ந்திருந்த போதும், அவனுடைய குற்ற உணர்வு அவனைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது. தன்னால் வாழ்க்கையில் தடம் மாறியவளுக்குத் தன்னாலானதைச் செய்தே ஆகவேண்டும் என்று திடமாக இருந்தான்.

தலையை உலுக்கியவன், “ஐயம் சாரி சஹி! நீ மட்டுமில்ல… யார் சொன்னாலும், இதிலிருந்து நான் பின்வாங்கறா மாதிரி இல்ல… கடைசியா சொன்னபார் குற்றவாளின்னு, அதுக்கான தண்டனையைத் தானே எனக்குக் கொடுத்துட்டு இருக்க. 

உன்னோட தண்டனையை நான் ஏத்துகிடேன். இதுவரைக்கும் என்னை பெருந்தன்மையா நீ சகிச்சிகிட்டது மாதிரி, என்னோட இந்த முடிவையும் நீ ஜீரணிச்சித்தான் ஆகணும்” என்றான்.

அவனது பதிலைக் கேட்ட சஹானா விக்கித்துப் போனாள்.

‘பெருந்தன்மையா? கணவன், மனைவிக்குள் என்ன பெருந்தன்மை வேண்டியிருக்கிறது? அப்படியானால், இவனது பார்வையில் இத்தனை நாட்கள் தான் இப்படித்தான் தெரிந்திருக்கிறோமா? என்னுடைய காதலை இவன் உணரவேயில்லையா?

மனதிற்குள் போராடிக்கொண்டிருக்கும் தன்னை, இத்தனைநாள் நடமாட வைத்துக் கொண்டிருந்தது அவன்மீதான காதல் அல்லவா… அதற்கு பெருந்தன்மை என்று பெயர் சூட்டிவிட்டானே…

“நீங்க ஏன் இப்படிப் பேசறீங்க? நான் உங்க மனைவி. உங்க நல்லது கெட்டதுல எனக்குப் பங்கு இல்லயா?” கேட்டவளுக்கு விழிகள் பெருக்கெடுத்தன.

அவளது பேச்சும், கண்ணீரும் அவனது சீற்றத்தை அதிகப்படுத்தியது.

“மனைவியா…? பரவாயில்லையே... இத்தனைநாள் நினைவு வராததெல்லாம் இப்போ ஞாபகம் வருதா உனக்கு… எத்தனை நாள் என்னோட பிடிவாதம், ஈகோ எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உன்னோட ஒரு பார்வைக்காக, பிரியமான ஒரு வார்த்தைக்காக ஏங்கிட்டு இருந்தேன். அப்போல்லாம் நீ என் மனைவின்னு உனக்கு நினைவு வரல… இன்னைக்கு வந்திருக்கு” என்று உறுமியவனை, அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

யாரோ ஒரு ஜோஷிதாவிற்குத் தான் செய்த தவறுக்குப் பிராயசித்தம் செய்ய நினைப்பவன், கட்டிய மனைவிக்குரிய நியாயமான கோபத்தின் பின்னணியை புரிந்து கொள்ளவே இல்லை.

தனது செயலில் அவன் உறுதியுடன் இருக்கும் போது, ஒரு மனைவியாக அவளது ஸ்திரமான முடிவு சரிதான் என்பதை, அவனால் உணர முடியவில்லை.

No comments:

Post a Comment