அத்தியாயம் - 46
இந்த இரவு நேரத்தில் அலுவலகத்திற்கு வந்திருக்கும் முதலாளியின் காரைக் கண்டதும் வேகமாக ஓடிவந்த செக்யூரிட்டி அவசரமாக ஒரு சல்யூட் அடித்துவிட்டு, கேட்டைத் திறந்துவிட்டான்.
தனது அலுவலக அறைக்குள் நுழைந்த பிரபுவின் முகம் கடுகடுவென இருந்தது.
விளக்கைக் கூடப் போடாமல், கார் சாவியை மேஜை மேல் வீசிவிட்டு, பொத்தென இருக்கையில் அமர்ந்தான். மனத்தின் இறுக்கம் வண்டாகக் குடைய, தலையைப் பிடித்துக் கொண்டான்.
வாழ்க்கையே போர்க்களமாகத் தோன்றியது. இத்தனை நாட்கள் அமுதமாக இனித்த திருமண வாழ்க்கை, இப்போது எட்டிக்காயாகக் கசந்தது.
அதிலும், இரண்டிற்குமே காரணம் அவள்தான் என்பதே, அவனுக்கு மிகுந்த வேதனையை அளித்தது.
இத்தனை நாட்களாக அவள் காத்துவந்த மௌனத்தின் பின்னாலிருந்த உணர்வுப் போராட்டம், இப்படி வெடித்துக் கிளம்புமென்று அவன் எண்ணவேயில்லை.
இன்னமும் தன் மீது அவளுக்கு முழு நம்பிக்கை வரவில்லை என்று நினைக்கவே சிரமமாக இருந்தது. களைப்புடன் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
அப்போதும் அவனது மனக்கண்ணில் கலங்கிய விழிகளுடன் உணர்ச்சித் ததும்ப வந்து நின்றாள் சஹானா.
‘என்னைப் புரிஞ்சிக்கவே மாட்டியா சஹி!’ என்று மனத்திற்குள் அரற்றினான்.
அந்தப் புலம்பலில், தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் மட்டுமே தெரிந்தது.
அறைக்குள் நிலவிய இருளைப் போலவே, அவனது மனமும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
அந்தத் தனிமையும், அமைதியும் அவனது மனத்தைச் சற்று ஆசுவசப்படுத்த, சிந்தனையில் சிறிது மாற்றம் ஏற்பட்டது.
சஹானா பேசிய அனைத்தும் உண்மையென்று, அவனுக்குமே தெரியும். ஆயினும், அதை ஏற்றுக் கொள்ள மனமில்லை.
ஜோஷிதாவிற்கு, தான் உதவ நினைப்பதை சஹானா தடுப்பாளென்று தெரியும். அதனால்தான், ஜோஷிதாவிடம் பேசுவதைக்கூட சொல்லாமல் மறைத்து வைத்தான். இருந்தும், விஷயம் அவளுக்கு எப்படித் தெரிந்ததென்று, இந்த நிமிடம் வரை அவனுக்குப் புரியவில்லை.
இருந்தும் கடைசியில் அவளது முகத்தில் அறைவது போல, பேசியிருக்கக்கூடாது என்று எண்ணினான். சொல்லப் போனால் ஆரம்பத்தில் நான்தான் அவளிடம் போலித்தனமான அன்பைக் காட்டினேன்.
ஆனால், தனது மென்மையான குணத்தாலும், உண்மையான அன்பாலும் கவர்ந்தவள் அவள். அதனை உணர்ந்திருந்த போதும் அவளது நேசத்தை உதாசீனப்படுத்துவது போலப் பேசி, அவளைத் துடிக்க வைத்துவிட்டேனே!’ என்று காலம் தாழ்த்தி வருந்தினான்.
அறைக்கதவை யாரோ திறக்கும் உணர்வுகூட இல்லாமல், தன்னை மறந்து நினைவுகளில் மூழ்கியிருந்தான்.
“என்னடா வீட்ல தூங்க முடியாம, ஆஃபிஸுக்கு வந்து தூங்கிட்டு இருக்கியா?” சூரஜின் குரல் கேட்டதும் சட்டென கண்களைத் திறந்தான்.
விளக்கையும், ஏசியையும் ஆன் செய்தவன், பிரபுவின் எதிரில் வந்தமர்ந்தான்.
“வாடா!” என்றான் சோர்வுடன்.
எதுவும் பேசாமல் அவனைப் பார்த்த சூரஜின் பார்வை, ‘தேவையா இதெல்லாம் உனக்கு?’ என்று கேட்பதைப் போலிருந்தது.
ஆழ மூச்செடுத்தபடி நிமிர்ந்து அமர்ந்த பிரபு, “என்னடா இந்தப் பக்கம்?” என்றான்.
“வேலையா வந்தேன்னு சொன்னா நம்பிடுவியா?” என்றான் இடக்காக.
ஒருகையால் முகத்தைத் துடைத்தவன், “ம்ச்சு” என்றான் சலிப்புடன்.
“இதெல்லாம் நீயா இழுத்து விட்டுக்கறது. போதும் எல்லாத்தையும் விட்ரு. இனியாவது சஹானாவை நல்லபடியா வச்சிக்கிற வழியைப் பாரு. அந்தப் பொண்ணு மனசு சங்கடப்பட்டா… நீ நிம்மதியாவே இருக்கமுடியாது…” என்றான் காட்டமாக.
எரிச்சலுடன் நிமிர்ந்தவன், “டேய்! நானே டென்ஷன்ல இருக்கேன். நீ வேற…” என்றான்.
“லைட்டும் போடாம, ஏசியையும் ஓடவிடாம இருட்ல உட்கார்ந்திருந்த இலட்சணத்துல இருந்தே தெரியலையா எனக்கு… பெருசா பேசறான். சரிசரி கிளம்பு…”
“எங்கே?” எரிச்சல் மாறாமல் கேட்டான்.
“வேற எங்கே ஹோட்டலுக்குத் தான். ஆஷா ஊரில் இல்லை. சாப்பிடலாம்னு வெளியே கிளம்பிட்டு இருந்தேன். அப்போதான் அம்மா போன் பண்ணாங்க… சரி உன்னையும் சேர்த்து கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன். மணி ஒன்பதரை ஆகுது கிளம்பலாமா?” என்றான்.
“நான் வரலை, நீ கிளம்பு…” என்றான் விட்டேத்தியாக.
இருக்கையிலிருந்து எழுந்த சூரஜ், கோபத்துடன் அவனைப் பார்த்தான்.
“வராம, அப்படியே சீலிங்கை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கப் போறியா?” என்றான்.
“சஹி சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருப்பா. நான்…” முணுமுணுத்துக் கொண்டே நிமிர்ந்தவன் சிரிப்பும், முறைப்புமாக தன்னைப் பார்த்த நண்பனைப் பார்த்ததும், “என்னடா?” என்றான் பரிதாபமாக.
“டேய் பாவி! மனசுல இவ்ளோ இருக்கு. அதையெல்லாம் யார்கிட்ட காட்டணுமோ அவளை, எவளோ ஒருத்திக்காக அழவிட்டுட்டு இங்க வந்து ஃபீல் பண்ணிட்டிருக்க… முதல்ல வீட்டுக்குக் கிளம்புடா…” என்றான் குறுஞ்சிரிப்புடன்.
**************
கோபமாக வீட்டிலிருந்து கிளம்பிய பிரபுவைக் கண்ட அவனது பெற்றோருக்கு பிரச்சனை பெரிது என்று புரிந்தது. களைத்த முகத்துடன் மாடியிலிருந்து அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த மருமகளை கௌரி கேள்வியுடன் பார்த்தார்.
அவள் எதுவுமே பேசாமல் மீண்டும் அறைக்குச் சென்றுவிட, கௌரியின் மனம் அடித்துக் கொண்டது.
சஹானாவின் முகத்தில் தெரிந்த பிடிவாதமும், கோபமும் அவருக்கு பயத்தையே கொடுத்தது. மகனை நினைத்து வேதனையாக இருந்தது.
வெண்ணை திரண்டு வரும் வேளையில் பானையை உடைத்தது போல, அவள் மனம் மாறி வரும் நேரத்தில் எதையோ செய்து அவளை கோபப்படுத்தி விட்டான் என்று மட்டும் புரிந்தது.
ஏழு மணிக்கெல்லாம் இரவு உணவு தயாரிக்க வந்துவிடுபவள், இன்று இறங்கி வரவேயில்லை.
தேவியை அனுப்பிப் பார்க்கச் சொல்லலாம் என்றிருந்தவர், முடிவை மாற்றிக் கொண்டார். அன்றைய இரவு சமையலை, வேலையாட்களிடமே விட்டுவிட்டார்.
மணி எட்டரை ஆகியும் அவள் இறங்கி வரவில்லை. பிரபுவும் வீட்டிற்கு வரவில்லை. அவன் அலுவலகத்திலிருந்து வரச் சற்று தாமதமானாலும் வாசலைப் பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருப்பவள், இரண்டு மணிநேரமாகியும் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.
புருஷோத்தமனும் யாரையோ பார்க்கவேண்டுமென்று கிளம்பிச் சென்றிருந்ததால், தனியாக தவித்துக் கொண்டிருந்தார் கௌரி. கடைசியாக சூரஜிற்குப் போன் செய்து தயக்கத்தோடே விஷயத்தைச் சொன்னார்.
“சஹி!” என்று அவர் கதவைத் தட்டும் போதும் மனம் படபடவென அடித்துக் கொண்டது. என்ன கோபத்தில் இருகிறாளென்றும் தெரியவில்லை… அழுது கொண்டிருந்தால்… நினைக்கவே அச்சமாக இருந்தது.
அவள் கதவைத் திறக்க எடுத்துக் கொண்ட 2 நிமிடங்களில் அவரது மனம் இலக்கில்லாமல் தறிகெட்டு ஓடியது.
கதவைத் திறந்தவள், “வாங்கத்தை!” என்று உள்ளே அழைத்தாள்.
முகம் கழுவி, உடை மாற்றியிருந்தவள் முகம் மட்டுமே வாட்டமாக இருந்தது. தான் நினைத்தது போல எதுவுமில்லாமல் இருந்தாலும், அவளது இந்த அமைதிகூட அவருக்குப் பயத்தைக் கொடுத்தது.
அவளுக்கு என்ன சமாதானம் சொல்வதென்று தெரியாமல், அவளை ஆழ்ந்து பார்த்தார்.
அவரது பார்வையை தயக்கமின்றி நேருக்கு நேராக எதிர்கொண்டாள் சஹானா. அவர் எதுவும் கேட்காவிட்டாலும், அவரது மனவோட்டத்தை நன்கறிந்திருந்தாள்.
“என்னத்தை! அப்படிப் பார்க்கறீங்க…?” என்றாள்.
“உன்னோட இந்த அமைதிக்குப் பின்னால என்ன இருக்குன்னு தெரியாம, எனக்குப் பயமாயிருக்கு சஹானா!” என்றவரை இமைக்காமல் பார்த்தாள்.
“மனசுல எதையும் வச்சி உள்ளுக்குள்ள புழுங்காதேம்மா! அழணும்னு தோணினா மனசுவிட்டு… அழுதுடும்மா!” ஒருவழியாகச் சொல்ல நினைத்ததைச் சொல்லி முடித்துவிட்டார்.
இமைகளைக் குறுக்கியவள், “அழணுமா? நான் ஏன் அத்தை அழணும்? நான் என்ன தப்பு செய்தேன்? அப்படி நான் அழணும்னு நினைச்சா எத்தனை விஷயத்துக்காக அழறது…
உங்க பிள்ளையைக் கல்யாணம் செய்ததுக்கு… அவருக்கு நல்ல மனைவியா இருந்ததுக்கு… அவரை என் உயிருக்கும் மேலா நேசிச்சதுன்னு எதுக்காகன்னு அழறது?” என்று நிதானமாகக் கேட்டாள்.
கௌரியால் பதில் சொல்ல முடியவில்லை.
“உங்களுக்கு அவரைப் பத்தித் தெரியும் இல்ல… அப்புறம் எதுக்காக என்னை அவருக்குக் கல்யாணம் செய்து வச்சீங்க? இப்படி நாங்க ஆளுக்கொரு பக்கமா பிரிஞ்சி நிற்கவா?” என்றாள்.
எதற்காக அழவேண்டும் என்று தலைநிமிர்ந்து கேட்டவளது குரல் கடைசி வாக்கியத்தைச் சொல்லும் போது தழுதழுத்தது. கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.
என்னைக்காவது இப்படி ஒரு சூழ்நிலை வரும்னு நீங்க நினைக்காம இருந்திருக்க மாட்டீங்க… அப்படியிருந்தும், ஏன் இந்தக் கல்யாணத்தை நடத்தினீங்க? இவரைப் பத்தி என் குடும்பத்தில் இருக்கவங்களுக்குத் தெரிஞ்சா… அவருக்கு என்ன மரியாதை இருக்கும்?
அவருக்குப் பிடிச்ச ஒரு வாழ்க்கையை நிம்மதியா வாழ்ந்துட்டு இருந்தார். அவரையும், இதுல இழுத்துவிட்டு… இப்போ எங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் இப்படி கேள்விக்குறியோட நிற்கவா கல்யாணம் செய்து வச்சீங்க?
அவரை அவரோட போக்கிலேயே விட்டிருந்தா, நிம்மதியா இருந்திருப்பார்.
நானும் இப்படி என்னோட வாழ்க்கைப் பத்தின பயம் இல்லாம, நிம்மதியா இருந்திருப்பேன். இப்படி இரட்டை வாழ்க்கை வாழ நேர்ந்திருக்காதே…
ஒரு தாயா நீங்க செய்தது தப்பில்ல… ஆனா, அவருக்குப் பிடிச்சவளையே கல்யாணம் செய்து வச்சிருக்கலாமே… ஏன் என்னைப் போய்…” என்றவள், அன்றுவரை நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
மனத்திலிருந்த ஆதங்கத்தையெல்லாம் கொட்டியதும், மனம் சற்று இலகுவாகியிருக்க வேண்டும். ஆனால், அவளுக்கு இன்னமும் இதயம் கனத்துப் போனது.
ஓய்ந்து போனவளாக கால்களைக் கட்டிக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தாள்.
குறுக்கிடாமல் மருமகளின் மனக் குமுறல்களை கேட்டுக்கொண்ட கௌரியம்மாவின் விழிகள் கசிந்தன. அவளருகில் அமர்ந்தவர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“சஹானா! ஒண்ணை நல்லா புரிஞ்சிக்கோம்மா! பிரபு அந்தப் பொண்ணோட இருந்திருந்தாலும், அவள் மேல அவனுக்கு விருப்பம்னு எதுவும் இல்லை. நானும் கல்மனசுக்காரி இல்லம்மா!
அவளையே கல்யாணம் செய்துக்கோ இப்படி உன் வாழ்க்கையை நாசமாக்கிக்காதேன்னு சொன்னேன். அவன்தான் பிடிவாதமா எனக்குக் கல்யாணம் வேண்டாம். அவள் மேல எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லைன்னு தீர்மானமா சொல்லிட்டான்.
அதுக்குப் பிறகுதான் தீவிரமா அவனுக்குக் கல்யாணம் செய்தே ஆகணும்னு நினைச்சேன். அப்படித்தான் உன்னைப் பார்த்தது… அவனுக்கு நீதான் பொறுத்தமானவன்னு என் மனசு சொல்லுச்சி. நிச்சயம் கல்யாணத்துக்குப் பின்னால அவன் மாறிடுவான்னு எதிர்பார்த்தேன்.
ஆரம்பத்தில் அவன் கொஞ்சம் பிடிப்பு இல்லாமல் இருந்தாலும், உன்னை அவனுக்குப் பிடிச்சியிருந்தது. அது எனக்குத் தெரிந்ததும் தான் கல்யாண ஏற்பாடே செய்தேன்…
நீ அவனை மாத்திடுவேன்னு நம்பினேனே தவிர, இப்படியொரு பிரச்சனை வரும்னு நான் நினைக்கவேயில்ல சஹானா. ஒரு அம்மாவா என் மகனுக்கு நல்லது நடக்கணும்னு நினைச்சேன்.
ஒரு தாயா.. என் மகனோட நிலைக்காக யோசிச்சேனே தவிர, உன்னை என் மகளோட ஸ்தானத்தில் வச்சி யோசிக்க தவறிட்டேன்மா! உன்னோட மனசு என்ன பாடுபடும்னு எனக்கு நல்லாத் தெரியும். இதையெல்லாம் இருபத்தைந்து வருஷமா அனுபவிச்சவ நான்.
என் மகன் நல்லவன்னு அவனுக்காக பரிந்து பேசலம்மா… அதே நேரம் அவன் மோசமானவனும் இல்ல. இவ்வளவு நாள் அவனுக்காக எல்லாத்தையும் தாங்கிகிட்ட… கடைசியா இதுக்கும் கொஞ்சம் தணிந்து போயிடேன்…” என்றவரை விழியகல பார்த்தாள்.
சஹானாவின் பதிலுக்காக பதட்டத்துடன் காத்திருந்தார் கௌரி.
சற்றுநேரம் இமைகளை மூடியவள், ஒரு முடிவுடன் கண்களைத் திறந்தாள்.
“சரி, நீங்க இவ்வளவு தூரம் சொல்றதால என்னோட மனசை கல்லாக்கிட்டு அரைமனதோட சம்மதிக்கிறேன். அவளுக்கு என்ன செய்யணும்னு நினைக்கிறாரோ அதைச் செய்து முடித்ததும் ரெண்டு பேருக்கும் எந்தச் சம்மந்தமும் இருக்கக் கூடாது. அப்படி மீறிட்டா... என்னுடைய முடிவை யாருக்காகவும் நான் மாத்திக்கமாட்டேன்” என்றாள்.
அடக்கிக் கொண்ட கோபம் அவளது உச்சரிப்பில் சற்று வெளிவரத்தான் செய்தது.
“சரிம்மா… இது போதும். நான் பிரபுகிட்ட பேசறேன்” என்றார்.
“வேணாம். நானே சொல்லிடுறேன்… என் வாயால கேட்டுகிட்டா உங்க பிள்ளைக்குச் சந்தோஷமா இருக்குமில்ல…” என்றாள்.
“உண்மைதான்… நீயே சொல்லிடுறது நல்லதுதான்…” என்றவர் முகத்தில் தோளிலிருந்த பாரத்தை இறக்கிவைத்த திருப்தி தென்பட்டது.
அவரை உற்று நோக்கியவள், “என்ன இருந்தாலும், அம்மா அம்மாதான். மாமியார் மாமியார் தான்…” என்றாள்.
அவளது வார்த்தையைக் கேட்ட கௌரியும், அவள் பேசியதைக் கேட்டபடி அறைக்குள் நுழைந்த பிரபுவும் ஒருசேர திகைத்துப் போயினர்.
No comments:
Post a Comment