Friday, October 30, 2015

உறவெனும் புதிய வானில்

அத்தியாயம் - 47

யோகாவை முடித்துவிட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டே ஜன்னலருகில் வந்தமர்ந்தாள் திவ்யா.

காலை நேர புத்துணர்ச்சியுடன் தோட்டத்து மலர்களெல்லாம் தன்னைக் கண்டு தலையாட்டிச் சிரிப்பது போலிருந்தது அவளுக்கு. சிறுமுறுவல் ஒன்று இதழ்களில் படர, ஜன்னலருகில் அமர்ந்தாள்.

இதழ்களில் மலர்ந்த புன்னகை, அவளது மனத்தையும், விழிகளையும் எட்டவில்லை. ஏதோ யோசனையுடன் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“திவிம்மா! இன்னைக்கு என்ன டிஃபன் பண்ணட்டும்?” என்று கேட்டபடி காஃபி கப்பை நீட்டிய அன்னையை ஏக்கத்துடன் பார்த்தாள்.

வைதேகிக்கு அவளது எண்ணம் நன்றாக தெரியுமாதலால், அவளது முகவாட்டத்தைக் குறித்து பேச்சே எடுக்கவில்லை.

அவளும் அதைப் புரிந்து கொண்டாள்.

“கொஞ்ச நேரம் இப்படி ரிலாக்ஸா உட்காரும்மா! இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போற வேலையும் இல்லயே…” என்றபடி அவரது கரத்தைப் பற்றி அருகில் அமரவைத்தாள்.

“இப்படி உட்கார்ந்திருந்தா… இருக்கற வேலையை யாரு பார்க்கறது?”

“ஏம்மா! உன் பொண்ணை அவ்ளோ மோசமா வளர்த்து வச்சிருக்கேன்னு நினைக்கிறியா? நாங்களும் நல்லாவே சமைப்போமாக்கும்…” என்றாள் திவ்யா.

“அதெல்லாம் உன் மாமியார் வீட்டுக்குப் போனதும் நடக்கட்டும். இங்கே நீ நிம்மதியா, சந்தோஷமா மகாராணி மாதிரி இரு. உனக்கு என்ன வேணுமோ, அதை என் கையால செய்து கொடுக்கறேன்” நெகிழ்ச்சியுடன் சொன்ன அன்னையை, விழியகல பார்த்தாள்.

‘எனக்காக எத்தனையோ துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, எனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தத் தெய்வத்திற்கு, என்ன கைமாறு செய்யப் போகிறேன்?’

“உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேம்மா!” என்றவளது விழிகளில் கண்ணீர் பெருக, அன்னையின் மடியை இறுகக் கட்டிக் கொண்டாள்.

அவளது செய்கையால், வைதேகியுமே சற்றுக் கலங்கிப் போனார்.

தன் வாழ்விற்கு ஆதாரமாகவும், தாயுமானவளாக இருந்த மகள் மணக்கோலம் கொள்ளப் போவதை நினைத்து மனம் நெகிழ்ந்தாலும், அவளைப் பிரியப் போகும் வருத்தம் அவரை வாட்டிக் கொண்டுதான் இருந்தது.

அதேநேரம் மகள் உத்தமமான ஒரு இடத்திற்குத் தான் சென்று சேரப்போகிறாள் என்ற நிம்மதியும் மனத்தில் எழ, அந்த வருத்தத்திலும் ஒரு நிறைவு இருக்கத்தான் செய்தது. கண்களைத் துடைத்துக் கொண்டவர், மகளை எழுப்பி ஆறுதல் கூறினார்.

திருமணத்திற்குப் பிறகு தங்களுடனேயே வந்துவிட வேண்டுமென்று பேச்சுவாக்கில் ஒருநாள் அவள் சொல்ல, வைதேகி ஒரேயடியாக மறுத்துவிட்டார்.

ஸ்ரீராமின் விருப்பமும் அதுவே என்று திவ்யா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் வைதேகி பிடிகொடுக்கவேயில்லை. இரண்டு நாட்கள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அவள் திரிந்தும்கூட அவர் இளகவேயில்லை.

அதை ஸ்ரீராமிடம் அவள் பகிர்ந்து கொண்ட போது, இதைப் பெரியவர்கள் மூலமாகப் பேசியிருக்க வேண்டும். நீ சற்று அவசரப்பட்டுவிட்டாய் என்றவன், இதற்கு நிச்சயம் நல்ல முடிவை எடுக்கலாம்… என்று அவளைச் சமாதானப்படுத்தி வைத்திருந்தான். ஆனாலும், இன்று ஏனோ அவளால் தாளமுடியவில்லை.

“திவிம்மா! கண்ணைத் துடை. பொண்ணா பிறந்துட்டா ஒரு நாளைக்குப் பெத்தவங்களைப் பிரிஞ்சிதான் ஆகணும். இதுக்கெல்லாம் அழலாமா…?” மகளைச் சமாதானம் செய்தார் வைதேகி.

“ஆனாலும், உனக்குக் கல் மனசும்மா! நான் இவ்வளவு தூரம் சொல்லியும், நீ எனக்குத் தானே சமாதானம் சொல்ற… உன் மனசை மாத்திக்க மாட்டேங்கற இல்ல…” குரல் தழுதழுக்கக் கூறினாள்.

மனம் விம்மினாலும், முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

“ம்ஹும்! இது சரியில்லையே… எப்பவும் சரவெடி மாதிரி விடாம பேசிகிட்டு, சொல்றதைக் கேட்காம அடாவடியா நடந்துக்கற திவ்யாவைத் தான் ரொம்பப் பிடிக்கும்” வலிய வரவழைத்த மலர்ந்த முகத்துடன் சொன்னார்.

“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல… ராம்தான் இதுக்குச் சம்மதம் சொல்லிட்டாரே… அப்புறம், நீ ஏன்மா பிடிவாதம் பிடிக்கிற? என்னை விட்டுட்டு உன்னால இருக்கமுடியுமா சொல்லு?” கோபமும், ஏமாற்றமுமாகப் பேசினாள்.

“உன்னைப் பார்த்தா எனக்குச் சிரிப்புதான் வருது. நீ ஒரு டாக்டர்ங்கறதை மறந்துட்டு சின்னக் குழந்தை மாதிரி பேசற…” என்றவர், சமாதானமாகாமல் ஈரவிழிகளுடன் அமர்ந்திருந்த மகளை ஆதூரத்துடன் பார்த்தார்.

“பொண்ணுங்கறவ செடி மாதிரி. விதை போட்டு வளர்க்கறது ஒரு இடமா இருந்தாலும், அது செழிச்சி வேர்விட இன்னொரு இடத்துல பிடுங்கி நடவு செய்யறது இல்ல... அந்தச் செடி புது இடத்துல தழைக்கறதும், பட்டுப் போறதும் அந்த மண்ணுக்கும், செடிக்கும் இருக்கும் பண்பாலதான் முடியும்.

அதுமாதிரி கல்யாணமாகிப் புகுந்த வீட்டுக்குப் போற பொண்ணு, அங்க இருக்கவங்கள புரிஞ்சிகிட்டு சுமுகமான உறவை ஏற்படுத்திக்க நிச்சயம் நாளாகும். வீட்ல இருக்கவங்க உன்னிடம் சந்தோஷமா பேசலாம்… உரிமையா கோவிச்சிக்கலாம்…

நீகூட அதையெல்லாம் இயல்பா எடுத்துக்கலாம். எதுவாக இருந்தாலும் அது உன்வரைக்கும் இருந்தா… சந்தோஷம். ஆனா, என் எதிர்ல உன்னை யாராவது ஏதாவது சொல்லிட்டா என்னால தாங்க முடியுமா சொல்லு?” என்ற அன்னையை வெறித்துப் பார்த்தாள்.

என்னைக்குமே சொந்தமா இருந்தாலும், பந்தமா இருந்தாலும் ஓரடி தள்ளி நிக்கறதுதான் நல்லது. நெருங்கினா அந்த உறவையே இழக்க வேண்டிகூட வரலாம். எல்லாமே புரிதல்லதான் இருக்கு. அதுகூட நல்லவிதத்தில் பார்த்தால் நல்லது… வேற விதத்தில் பார்த்தால் விபரீதம்தான்…” என்றவரைப் புரிந்தும் புரியாமல் பார்த்தாள்.

அவள் மறுத்துச் சொல்ல வாயைத்திறக்கும் முன், “எனக்குச் சரின்னு தோணுறதெல்லாம் உனக்கும் சரின்னு தோணனும்னு நான் கட்டாயப்படுத்த முடியாது திவி… அதேபோலத் தான் எனக்கும்.

நான் என்ன உன்னை வெளிநாட்டுக்கா அனுப்பப் போறேன். இதே பக்கத்துத் தெருவுக்குத் தானே… நினைச்சா உன்னைப் பார்க்க வந்திடுவேன். நீயும் ஹாஸ்பிட்டல் போகும்போதோ, வரும்போதோ என்னை வந்து ஒரு எட்டு பார்த்துட்டுப் போகமாட்டியா?” - புன்னகையோடே கேட்டார்.

அன்னையின் அந்தப் புன்னகைக்குப் பின்னால் மறைந்திருந்த வருத்தத்தை, அவளால் உணரமுடியாமல் இல்லை. இருந்தும், அவரைச் சமாதானப்படுத்த முடியாத இயலாமை, அவளை மௌனிக்க வைத்தது.

அவர்களது மௌனப் போராட்டத்திற்கு தற்காலிக தடையுத்தரவு இடப்பட்டது போல வாயிற் கதவு திறக்கப்பட்டும் சப்தம் கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த வைதேகி பரபரப்பானார்.

“திவ்யா! மாப்பிள்ளை வர்றார்… அவர் முன்னால முகத்தை இப்படி வச்சிட்டு உட்கார்ந்திருக்காதே எழுந்து முகத்தைக் கழுவிகிட்டு வா…” என்றவர் வேகமாக வாசற்கதவை நோக்கி நடந்தார்.

அன்னை சொன்னதைப் போலவே செய்தவள், “வாங்க!” என்றபடி அவனருகில் அமர்ந்தாள்.

காஃபி கப்பைக் கையில் ஏந்தியபடி யோசனையில் இருந்தவன் நிமிர்ந்து அவளைப் பார்த்து மென்நகைப் புரிந்தான்.

திவ்யா இயல்பாக இருப்பதைப் போலக் காட்டிக் கொள்ள எண்ணினாலும், வழக்கத்திற்கு மாறான அமைதியான பேச்சே அவளது மனத்தைத் துல்லியமாகப் படம்பிடிக்க அவனுக்குப் போதுமானதாக இருந்தது.

”நீங்க ரெண்டுபேரும் பேசிட்டு இருங்க… நான் டிஃபன் ரெடி பண்றேன்…” என வைதேகி அங்கிருந்து அகல, ஸ்ரீராம் அவள் பக்கமாகத் திரும்பி அமர்ந்தான்.
“டாக்டரம்மா மூட் அவுட்டா இருக்கீங்களோ?”

“இ..ல்லையே…” என்றாள்.

“ஆனா, கண்ணு ஆமாம்னு சொல்லுதே…” என்றான் சிரிப்புடன்.

“விடுங்க ராம்! கொஞ்சம் மனசு சரியில்ல… அதான் நீங்க வந்துட்டீங்க இல்ல… இனி சரியாகிடும்” என்றாள்.

“ஓ! விஷயத்தை கேட்ச் பண்ணிட்டேன்… அத்தை விஷயம் தானே...” மென்குரலில் கேட்டான்.

விழிகள் அகல, “ம்ம்…” என்றவள், அனைத்தையும் அவனிடம் பகிர்ந்துகொண்டாள்.

“நீ கொஞ்சம் அவசரக்குடுக்கைன்னு எனக்குத் தெரியும். அதுக்காக இப்படி அதே விஷயத்தை தினமும் பேசி அவங்களோட முடிவை உறுதியாக்கறது. அப்புறம், முகத்தைத் தூக்கி வச்சிக்கிறது…” என்றவனை முறைத்தாள்.

“ஹலோ கூல்டௌன்… அன்னைக்கே சொன்னேன் இல்லயா? இந்த விஷயத்தை என்னிடம் விட்டுடு நீ நிம்மதியா… கல்யாண நாளை எதிர்பார்த்து காத்திட்டு இரு. அப்புறம்…”  என்று பாதியில் நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.

குறுஞ்சிரிப்புடன், “அப்புறம்…” என்றாள்.

“நீ இங்கே மட்டும் இல்ல… எப்பவும் என் மனசுல மகாராணிதான்னு நான் அத்தைக்கு நிரூபிக்கிறேன்…” என்றான் இரகசியக் குரலில்.

இமைக்காமல் அவனைப் பார்த்தவள், பட்டென அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

ஒரு கரத்தால் அவளது தோளை வளைத்தவன், “ஹேய்! அத்தை கிச்சன்லதான் இருக்காங்க…” என்றான்.

“ப்ளீஸ் ராம்! எதுவும் சொல்லதீங்க… நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எங்கம்மாவும் இந்த வயசைத் தாண்டித்தான் வந்திருக்காங்க. அவங்களுக்கும் எல்லாம் புரியும்” என்றவளது கண்ணீர் அவனது டீ-ஷர்ட்டை நனைத்தது.
“திவ்யா…!” என அவளது முகவாயைப் பற்றி உயர்த்தினான்.

“இது சந்தோஷத்துல வர்ற அழுகை. என் அப்பாவோட குணத்தைப் பார்த்தே வளர்ந்ததால கல்யாணத்தையே வெறுத்தேன். ஆனா, அப்படிப்பட்ட என் மனசுல என்னையும் அறியாம, உங்க மேல ஒரு ஈர்ப்பு வந்தது.

அது தப்போன்னு நிறைய தடவை நினைச்சிருக்கேன். ஆனா, அப்படி நினைச்சதுதான் தப்புன்னு இப்போல்லாம் அடிக்கடி தோணுது. கடைசி வரைக்கும் என்மேல இதே நேசத்தோட இருப்பீங்களா?” என்றவளது குரல் தழுதழுத்தது.

“நீ இவ்ளோ செண்டிமெண்டான ஆளா…” என்று சிரித்தவன், “இது ஒருத்தரை ஒருத்தர் பார்த்து வந்த காதல் இல்ல. ஏதோ ஒரு பந்தம் நமக்குள்ள இருந்திருக்கு… அதோட தொடர்ச்சிதான் இது. அதனாலதான் சொல்லாமலேயே நமக்குள்ள ஒரு புரிதல் வந்தது. இதுக்கு மேல உனக்கு என் மேல டௌட் இருக்கா…” எனக் கேட்டான்.

இல்லை என்பது போல இமைகளை மூடி தலையசைத்தவள், “ஆனா…” என இழுத்தாள்.

“எதுக்கு இந்த இழுவை…?”

“இந்த மகாராணியோட மகாராஜா எதுக்காக திடீர்னு இவ்ளோ காலைல வந்திருக்காருன்னா…” என்று பாதியில் நிறுத்தினாள்.

“ஏன் உன்னைப் பார்க்க வரக்கூடாதா?”

“ஓ!” என கண்களை விரித்தவள், “ஆனா, அதை நான் நம்பணுமில்ல…” என்று புருவத்தை உயர்த்திச் சிரித்தாள்.

கண்கள் இடுங்கப் பார்த்தவன், அவளது மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
“ஸ்..ஆஹ்! இந்த சமாளிப்பெல்லாம் வேணாம்… கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லணும்.”

இடது கையால் தலையைக் கோதிக் கொண்டவன், “நைட்டெல்லாம் சரியா தூக்கமே இல்ல…” என்றான்.

“அதான் கண்ணைப் பார்த்தாலே தெரியுதே… நிச்சயமா அதுக்குக் காரணம் நான் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்…” என முறுவலித்தாள்.

அவளது முகத்தைப் பார்த்தவன், “ம், என்னன்னு தெரியல… திடீர்னு சஹியைப் பார்க்கணும் போல இருக்கு. வர்ஷிக்கு வேற டெலிவரி டைம்… அப்பா, பிரபா எல்லோரும் இருக்காங்க… இருந்தாலும் சஹியைப் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டுப் போக முடியுமா?

காலைல எழுந்ததும் அவகிட்ட போன்ல பேசினேன். இருந்தாலும் மனசு கேட்கல, அதான் தமிழ்கிட்ட, சஹியைப் போய்ப் பார்த்துட்டு வரச்சொல்லியிருக்கேன்” என்றான்.

அதுவரை தீவிர முகபாவத்துடன் அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தவள், தமிழைப் பார்த்துட்டு வரச்சொல்லியிருக்கேன் என்றதுதான் தாமதம், கலகலவென நகைக்க ஆரம்பித்தாள்.

“என்னைப் பார்த்தா உனக்குக் கிண்டலா இருக்கா…?”

“அதில்ல ராம்! ஃப்ரெண்டுக்கு இவ்ளோ ஹெல்ப் பண்றீங்களேன்னு சிரிப்பு வந்திடுச்சி…”

“ஒண்ணு முழுசா சொல்லிட்டு சிரி. எனக்குத் தலையும் புரியல; வாலும் புரியல…” என்றான்.

அவனிடம் தமிழ்ச்செல்வன், தேவியைப் பற்றிச் சொன்னவள், “எனக்குக் கூடத் தெரியாது. வர்ஷா சொல்லித்தான் தெரியும்…” என்றாள்.

“ஓ! தமிழ் ரொம்ப நல்லவன்… தேவியும் நல்ல பொண்ணு அவனுக்கு அவள்தான் சரியான பொறுத்தம்” என சிரித்தவன், “என்கிட்ட இவன் சொல்லவேயில்ல பாரு…” என்றவன் சந்தேகத்துடன், “இதெல்லாம் வர்ஷா சொன்னானா… அவளுக்கு யார் சொன்னது?” எனக் கேட்டான்.

“வர்ஷாக்கு ஏற்கெனவே ஒரு சின்ன டௌட் இருந்திருக்கு. சஹானாவிடம் அதைச் சொல்லியிருக்கா… அப்போதான் தேவி தமிழ் அவளைத் தன்னோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் அவங்க பேரண்ட்ஸ்க்கு அறிமுகப்படுத்தி வச்சிருக்கார்னு அவள் சொன்னதா சஹானா சொல்லியிருக்கா. அதுலதான் கன்ஃபார்ம் ஆச்சு.”

“பரவாயில்லையே… பயல் இதுல் ரொம்ப ஸ்பீடா இருக்கான். அப்போ அடுத்தடுத்து ரெண்டு கல்யாணம் நம்ம வீட்ல…” எனச் சந்தோஷமாகச் சொன்னவனை, நிறைவுடன் சிரித்தாள்.

No comments:

Post a Comment