அத்தியாயம் - 48
‘அவனுக்காகக் கொஞ்சம் தணிந்து போயிடேன்’ என்ற மாமியாரின் வார்த்தையைக் கேட்ட சஹானா, உள்ளுக்குள் உடைந்து போனாள்.
‘நானும் இதே துயரத்தை, வருடக்கணக்கில் அனுபத்திருக்கிறேன் என்றவருக்கு, ஏன் என்னுடைய மனத்திலிருக்கும் பயம் புரியாமல் போனது?
ஆரம்பத்தில்தான் அவனைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார். ஆனால், இப்போதாவது தனக்கு உறுதுணையாக ஏதேனும் பேசக்கூடாதா?
இப்போதும் அவனுக்குத் தானே பரிந்துகொண்டு வருகிறார். பெற்ற மகன் என்ற பாசமிருந்தாலும், நானும் அவரைப் பெற்ற அன்னையைப் போலத் தானே நினைக்கிறேன். என்னையும் அவரது மகளாக, ஏன் நினைக்கத் தோன்றவில்லை?’
நினைக்க நினைக்க அவளது சுயபச்சாதாபம், மாமியாரின் மீதான கோபமாக உருவெடுத்தது. பொறு பொறு என்று தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவள், முற்றிலுமாகத் தனது நிதானத்தை இழந்தாள்.
அதன் எதிரொலியாக வார்த்தைகள் கடினமாக விழுந்தன. சொல்லி முடித்த பின்பே வார்த்தைகள் கொடுத்த வலியை மாமியாரின் கண்களில் கண்டாள்.
சிறுவயதிலிருந்து கற்றுக் கொண்ட அன்பும், அரவணைப்பும், யோசித்தலும், நிதானமும் தவறிப்போனதில் திடுக்கிட்டுப் போனாள்.
எதுவுமே பேசாமல் எழுந்தவரை தவிப்புடன் பார்த்தாள். வாசலில் நிழலாட திரும்பியவள், அங்கே திகைப்புடன் நின்றிருந்த பிரபுவைக் கண்டதும், ‘கடவுளே!’ என நெற்றியைத் தடவிக் கொண்டு நின்றாள்.
ஏற்கெனவே, மறுமகளின் பேச்சால காயப்பட்டுப் போன கௌரியம்மா, அங்கே வந்த மகனைக் கண்டதும் சொல்லொண்ணா வேதனையடைந்தார்.
குனிந்த தலையுடன் அங்கிருந்து வெளியேறிய அன்னையைத் தேற்றும் வழிதெரியாமல் தவிப்புடன் பார்த்தான் பிரபு.
“அம்மா!” என்றவனது குரல், அவனுக்கே கேட்கவில்லை.
அன்னையின் மனம் படும்பாட்டை எண்ணியவனுக்கு, சஹானாவின் மீது ஆத்திரமாக வந்தது. ‘தன்மீதிருக்கும் கோபத்தில், அவள் எப்படி அவரைக் காயப்படுத்தலாம்?’ இரு கரங்களையும் இறுக மூடி தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றான்.
திரும்பிச் சஹானாவைப் பார்த்தான். அவளோ, தவிப்புடன் கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தாள்.
‘செய்வதைச் செய்துவிட்டு, இப்போது எதற்காக இந்தப் பரபரப்பு?’ அவளைப் பார்க்கப் பார்க்க அடக்க முனைந்த கோபமும், ஆத்திரமும் முன்னிலும் அதிகரித்தது.
“சஹானா! நீ என்ன பேசற… யார்கிட்ட பேசறன்னு புரிஞ்சிதான் பேசறியா? எங்க அம்மா… அவங்களைப் போய் இப்படிப் பேச உனக்கு எப்படி மனசு வருது? நீ எனக்கு மரியாதை கொடுக்க வேணாம். அவங்… அவங்களுக்கு… ச்சே! நீ இப்படி இருப்பேன்னு நினைக்கவேயில்ல…” கோபத்தில் அவனது உடலும், குரலும் தடதடத்தன.
அதுவரை குற்ற உணர்வில் தவித்தவளுக்கு, அவனது பேச்சு விடுதலை உணர்வைக் கொடுக்க, நிமிர்ந்து அவனை நேராகப் பார்த்தாள்.
“இன்னைக்கு உங்களுக்குப் புதுசா வந்திருக்குற இந்த அக்கறையும், பாசமும் சில வருஷங்களுக்கு முன்னாலேயே இருந்திருந்தா, இன்னைக்கு இந்த சூழ்நிலை வந்திருக்காது” என்றாள் அழுத்தமாக.
உஷ்ணத்துடன் வெளிவந்த அவளது வார்த்தைகளைக் கேட்ட பிரபுவிற்கு, வெறுத்துப் போனது. தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து விட்டான்.
இதுவரை யாரும் அவனது ஈகோவைத் தட்டி எழுப்பியதில்லை. மனத்தின் ஒருபக்கம் அவள் மீதிருக்கும் கோபம்; அதற்கு ஈடாக அதே அளவிற்கு அவள் மீது பொங்கிய காதல் என்று தனக்குள்ளேயே போராடிக் கொண்டிருந்தான்.
அவள் பேசிய பேச்சிற்கு இழுத்து நான்கு அறை விடவேண்டும் என்ற வேகம் எழுந்ததது. ஆனாலும், அடக்கிக் கொண்டான்.
‘தவறுக்கு அடித்தளமே தன்னிடமிருக்கும் போது, அவளைக் கண்டித்து என்ன செய்வது?’
“என்னை ஏண்டி இப்படிக் கொல்ற?” – வேதனையும், விரக்தியுமாக அவன் உச்சரித்த வார்த்தைகள் அவளது கண்களில் கண்ணீராக உதிர்ந்தது.
அவனது சந்தோஷம் அவளையும் ஆட்கொண்ட வேகத்தைவிட, அவனது வேதனை அவளை இருமடங்காகத் தாக்கியது.
நெகிழும் மனத்தை இழுத்துப் பிடிக்க ஒரே வழி, கோபம் மட்டுமே. அதை மீண்டும் மீண்டும் முயன்று வரவழைத்துக் கொண்டாள்.
மறக்கவேண்டிய எண்ணங்களெல்லாம் மீண்டெழ, மேலும் மேலும் மன உளைச்சல் அதிகரித்தது அவளுக்கு.
நேசம் கொண்ட இரு இதயங்கள் விலகிப் போகும்போது ஏற்படும் வலி கொடியது. அதை இருவருமே அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
உலகிலேயே மிகப்பெரிய போர்க்களம் மனித மனமே. அதில் வெல்பவன் அறிஞனாகிறான். தோற்பவன் முட்டாளாகிறான். பிரபு தன்னை இரண்டாவது வகையில் சேர்த்துக் கொண்டான்.
தன்னை நிதானித்துக் கொண்டவள், “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.
‘இன்னும் என்ன சொல்லி என்னை உயிருடன் புதைக்கப் போகிறாய்?’ ஆத்திரத்துடன் நினைத்துக்கொண்டே விழிகளை உயர்த்தி அவளைப் பார்த்தான்.
எச்சிலைக் கூட்டி விழுங்கியவள், கண்களை அழுந்த மூடி நின்றாள்.
மூக்கை உறிந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், “நீங்க கேட்டதுக்கெல்லாம் நான் சம்மதிக்கிறேன். அவளுக்கு என்ன பிராயச்சித்தம் செய்யணும்னு நினைக்கறீங்களோ செய்ங்க.
ஆனா, அதுக்குப்புறம் நீங்க அவளை எதுக்காகவும், பார்க்கக் கூடாது.
அப்படியே பார்க்க நேர்ந்தாலும், பேசக்கூடாது. அப்படி ஏதாவது நடந்தா, நான் எடுக்கற முடிவுக்கு நீங்கதான் காரணமா இருப்பீங்க” என்றாள் அழுத்தமாக.
“என்ன மிரட்டுறியா?” என்றான் கடினமாக.
இல்லை என்பது போலத் தலையை அசைத்தவள், “என் முடிவைச் சொல்றேன்” என்றாள்.
“எனக்கு வாழ்க்கைப் பிச்சை போடுறியா?” என்றான் காட்டமாக.
அத்தனை நேரம் அவளிடமிருந்த விரைப்பு விடைபெற, விழிகளில் நீர் தளும்பியது.
“என் வாழ்க்கையைக் காப்பாத்திக்க போராடுறேன். எனக்குச் சம்மதமில்லைனாலும், உங்களுக்காக சம்மதிக்கறேன்” என்றாள்.
அவளது கண்ணீரை இரக்கமே இல்லாமல் பார்த்தான்.
“ஆகமொத்தம் இன்னும் உனக்கு என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை வராததை சொல்லாம சொல்ற…” என்றான் கிண்டலாக.
“இருக்கற நம்பிக்கையும் பொய்யா போயிடுமோன்னு பயத்தில் சொல்றேன்” என்றாள்.
“எல்லாமே ஒண்ணுதான். வார்த்தையை பூசி மெழுகி சொன்னா அர்த்தம் மாறிடுமா?” என்றான்.
“நீங்க என்னைப் புரிஞ்சிக்கவேயில்லையா? யாரோ ஒரு ஜோஷிதாவுக்காக இவ்வளவு பேசற நீங்க… உங்க மனைவியோட உணர்வுகளை ஏன் புரிஞ்சிக்க மாட்டேன்றீங்க?”
கெஞ்சலும், கோபமுமாகச் சொன்னவளை நெருங்கி வந்து நின்றான்.
“உன் உணர்வுகளுக்கும், உனக்கும் மதிப்புக் கொடுத்ததாலதான், இத்தனை நாளும் நீ சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருக்கேன்... அதை நினைவு வச்சிக்க” என்றான் முறைப்புடன்.
அவள் விக்கித்துப் போனாள்.
‘ச்சே! என்ன பேச்சிது?’ அவளது முகம் விவரிக்க இயலாத பாவனையை வெளிப்படுத்தியது.
முகத்தைப் பார்த்தே அவளது எண்ணவோட்டத்தைப் புரிந்து கொண்டவன், “இங்கே பாரு… நானும் மனுஷன்தான்! சாடிஸ்ட் இல்ல. நான் வாழ்க்கைல முறைதவறி நடந்திருக்கலாம். ஆனா, எனக்கும் மனசாட்சி இருக்கு” என்றவன், டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
காலையில் எழுந்தவன் பேப்பருடன் அப்படியே அமர்ந்திருந்தான். சஹானா அவனுக்குத் தேவையான அனைத்தையும், வழக்கம் போலச் செய்தாள்.
அவன் அணிந்துச் செல்லத் தேவையான உடையை எடுத்து கட்டில் மீது வைத்தாள்.
அதுவரை அமைதியாக இருந்தவன், “இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல…” என்றபடி பேப்பரை மடித்து வைத்துவிட்டு எழுந்து சென்றான்.
அவள் மறுவார்த்தை பேசாமல் வேலைகளைச் செய்து விட்டு, கீழே சென்றாள்.
“ஏன் அண்ணி ஒருமாதிரி இருக்கீங்க…?” கேட்ட நாத்தனாரைப் பார்த்து சமாளிப்பாகச் சிரித்தாள்.
“உனக்கு எப்போ செமஸ்டர் ஆரம்பிக்குது?” கேட்டுக் கொண்டே நிமிர்ந்தவள் டைனிங்கில் வந்து அமர்ந்த கணவனைப் பார்த்தாள்.
அவள் எடுத்து வைத்த உடைகளை அணியாமல் வேறு உடை அணிந்து வந்திருந்தான்.
ஒருகணம் இருவரும் பார்வைகளை பரிமாறிக்கொள்ள, வேகமாக தனது விழிகளை விலக்கிக் கொண்டாள் சஹானா.
பரிமாற வந்தவளைத் தடுத்தவன், தானே எடுத்துப் போட்டுக் கொண்டான்.
பெரியவர்கள் இருவரும் வழக்கம் போல மௌனம் காத்தனர். தேவி இருவரையும் மாறி மாறிப் பார்க்க, சஹானாவிற்கு அவஸ்தையாக இருந்தது.
கிளம்பும் போதும் தன் அன்னையிடம் சொல்லிக் கொண்டவன், அவளிருந்த பக்கமாகத் திரும்பக்கூட இல்லை.
கார் கிளம்பும் வரை வாசலிலேயே நின்றிருந்தாள். ஆனால், தான் அங்கே இருப்பதையே கவனிக்காமல் செல்லும் கணவனை, உணர்ச்சிகளைக் களைந்த முகத்துடன் பார்த்தாள்.
தளர்ந்த நடையுடன், முன் வராண்டாவிலிருந்த இருக்கையில் வந்தமர்ந்தாள். முன்தினம் இரவு நடந்ததெல்லாம் நினைவிற்கு வர மனம் வெகுவாகச் சோர்ந்து போனது.
தன் நிலையை யாரிடமும் மனம்விட்டுப் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில், அவனது இந்தப் பாராமுகம் அவளை மேலும் தளர்வுரச் செய்தது.
“அண்ணி!” என்ற அழைப்பில் நினைவுகிற்கு வந்தாள் சஹானா.
“என்ன தேவி?” என்றவள் தன்னை இயல்பாகக் காட்டிக் கொள்ள முறுவலித்தாள்.
அவளருகில் அமர்ந்தவள், “அண்ணாவுக்கும், உங்களுக்கும் சண்டையா?” எனக் கேட்டாள் தேவி.
அவளது முகம் மிகுந்த வாட்டத்தில் இருந்தது.
“சேச்சே! உங்க அண்ணனோட கோபமெல்லாம் எவ்ளோ நேரத்துக்கு… அதோட இதெல்லாம் சகஜம். எல்லாம் சீக்கிரம் சரியாகிடும். நீ போய் உன் அஸைன்மெண்டை முடி” என்றவள் எழுந்து உள்ளே சென்றாள்.
அறைக்குள்ளிருந்து வெளியே வந்த கௌரியம்மா, உள்ளே வந்த மருமகளைக் கண்டதும் மீண்டும் அறைக்குள்ளே செல்ல, சஹானா தவித்துப் போனாள்.
காலையில் எழுந்ததிலிருந்தே அவர் அவளிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஆனால், அவரது மகனைப் போன்று முகத்திலடித்தாற் போல நடந்து கொள்ள வில்லை. அந்த மட்டிலும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது.
‘என்ன இருந்தாலும் தான் அப்படிப் பேசியிருக்கக்கூடாது’ என்று நேற்றிலிருந்து எத்தனையோ முறை நினைத்துக் கொண்டாள். விடிந்ததும் அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தாள்.
ஆனால், இதுவரை கௌரியம்மா அதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை.
அறைக்குள் சென்றவரை, “அத்தை!” என்று அழைத்தாள்.
நின்றவர் திரும்பாமலேயே, “அத்தைதாம்மா! உனக்கு அம்மாவா என்னால யோசிக்க முடியாம போச்சு. என்னை மன்னிச்சிடும்மா!” என்றவர் பட்டென கதவை மூடிவிட, சஹானா நொறுங்கிப் போனாள்.
No comments:
Post a Comment