Sunday, November 15, 2015

அத்தியாயம் – 49

‘இந்த அண்ணனுக்கு என்ன ஆயிற்று? அண்ணியிடம் அப்படியென்ன கோபம்? பாவம் அண்ணி!’

சகோதரனின் மீது ஏகத்துக்குக் கோபம் வந்தது தேவிக்கு.

வீட்டின் முன்புற லானிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஒரு காலை ஊன்றி மெல்ல ஆடிக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தாள்.

திடீரென காதருகில், “ஹாய்!” என்ற ஆணின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

காக்கிச் சீருடையில் மிடுக்காக நின்றிருந்த தமிழைக் கண்டதும் ஸ்தம்பித்துப் போனாள் தேவி.

“எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த யோசனை?” என்றவனை இன்னும் பிரமிப்பு மாறாமல் பார்த்தாள்.

“நீ… நீ…” என்றவளுக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகள் வரவில்லை.

“என்னது நீ…யா? ரொம்ப மரியாதைதான் உனக்கு. இப்பவே நீன்னா கல்யாணத்துக்கு அப்புறம், ‘டா’வா?” என்று போலியாகப் பதறினான்.

“ஆஹ்ஹ்…!” என்று அடித்தொண்டையில் கத்துவதைப் போலச் செய்தவள், “நீங்க எங்க இங்கே வந்தீங்க?” என்றாள் எரிச்சலுடன்.

“உன்னைப் பார்க்கத்தான்னு சொல்வேன்னு நினைச்சியா? என் தங்கச்சியைப் பார்க்க வந்தேன்…” என்றபடி கையிலிருந்த தொப்பியை, அவளது தலையில் மாட்டினான்.

வேகமாக அதைக் கழற்றியவள், “உள்ளே இருக்காங்க போய் பாருங்க…” என்றாள் முணுமுணுப்பாக.

“ஹேய்! உனக்கும் அழகாத்தான் இருக்கு. போட்டுக்க…” சொல்லிக் கொண்டே அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தான்.

“ச்சே! என்ன நீங்க இப்படிப் பண்றீங்க? வீட்ல அம்மா, அண்ணியெல்லாம் இருக்காங்க… யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?” கோபத்துடன் அவனை முறைத்தாள்.

அவளுக்கு எதிர்மறையாக அவனது முகம் மலர்ந்து விகசித்தது.

சந்தோஷத்துடன், “தேங்க்யூ!” என்றான்.

சந்தேகத்துடன் அவனைப் பார்த்தவள், “எதுக்குத் தேங்க்ஸ்?” என்றாள்.

“நீ என்னை லவ் பண்றேன்னு மறைமுகமா சொன்னியே அதுக்கு…” என்றான்.

“உங்களுக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு…”சொல்லிக் கொண்டே எழுந்தவளது கரத்தை, அழுந்தப் பற்றினான்.

“தமிழ்! கையை விடுங்க…” கையை அவனது பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றாள்.

“அப்படி எதுவும் இல்லன்னு சொல்லப் போறியா தேவி!” உருக்கமாகக் கேட்டவனது முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

மீிண்டும் அவனருகில் அமர்ந்தவள், “உண்மையைச் சொல்லட்டுமா?” எனக் கேட்டாள்.

அவன் அமைதியாக அவளது மறுவார்த்தைக்காகக் காத்திருந்தான்.

கீழுதட்டை உள்ளாக மடித்தவள் ஒரு பெருமூச்சுடன், “எனக்குக் கல்யாணம் செய்துக்க இஷ்டமில்ல. நீங்க வீணா உங்க மனசுல கற்பனையை வளர்த்துக்காதீங்க…” என்றாள் சோகமாக.

“ஓ!” என்றவனது முகத்தில், எந்தப் பாவமும் இல்லை.

மீண்டும் ஆழமூச்செடுத்தவள் தனது டிராயிங் போர்டை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.

நான்கடி சென்றதும், எழுந்து சென்று அவளுடன் இணைந்து நடந்தான் தமிழ்ச் செல்வன்.

போர்ட்டிக்கோவை நெருங்கும் நேரம், “ஏதோ உண்மையைச் சொல்றேன்னு சொன்னியே… என்ன அது?” என்று எதுவுமே தெரியாதவன் போலக் கேட்டவனை உறுத்து விழித்தாள்.

அவனது உதடுகள் இளநகையை வெளிப்படுத்த, பட்பட்டென கையிலிருந்த டிராயிங் போர்டால் அவனது முதுகிலும், கையிலும் வலிக்காதவண்ணம் அடித்தாள்.

“ஏய் லூசு! யூனிஃபார்ம் போட்ட போலீஸ்காரன் மேலயே கை வைக்கிறியா?” –அதட்டலாகக் கேட்டான்.

“ம், கேஷுவல்ஸ்ல வந்தாலும், அடிப்பேன்…” என்றவள், அவனை மேலும் ஒரு அடி அடித்துவிட்டு வீட்டிற்குள் ஓடினாள்.

அவன் பேசியதை நினைத்துச் சிரித்தபடி துள்ளிக் கொண்டு வீட்டிற்குள் ஓடிவந்தவள், எதிரில் வந்த தந்தையைக் கண்டதும் சட்டென அடங்கிப் போனாள்.

திருதிருவென விழித்த மகளை, காணாததைக் கண்ட அதிசயத்துடன் பார்த்தார் புருஷோத்தமன்.

“என்னம்மா! இப்படி கன்னுக்குக் குட்டி மாதிரி துள்ளிகிட்டு வர…” என்றார்.

“அதுப்பா…! அண்ணியோட…” என ஆரம்பிக்கவும், “ஹலோ அங்கிள்!” என்று வாசலில் நின்று குரல் கொடுத்தான் தமிழ்.

அவனை அடையாளம் கண்டுகொண்டவர், “அடடே வாங்க!” என்று முன்சென்று வரவேற்க, தேவி சஹானாவின் அறைக்கு விரைந்தாள்.

மாமனார், மாமியாருடன் பேசிக்கொண்டிருந்த தமிழ்ச் செல்வனை பாசத்துடன் உபசரித்தாள் சஹானா.

“இப்பவாவது எங்க வீட்டுக்கு வரணும்னு தோணுச்சே உங்களுக்கு, ரொம்ப சந்தோஷம்” என்றாள்.

“நான் போலீஸ்காரன்மா… இருபத்தி நாலு மணி நேரமும் ஆன் டியூட்டி…” என்று சிரித்தான் அவன்.

“அதுக்காக சொந்தமெல்லாம் வேணாமா?” என்றாள் சிரிப்புடன்.

“சொந்தமெல்லாம் வேணும்னு நினைக்கறதால தானே இங்கே வந்திருக்கேன்…” என்றவனது பார்வை தேவியைத் தேடியது.

அவளோ காதுகளையும், மனத்தையும் ஹாலில் வைத்துவிட்டு அவளறைக்குள் அண்ணியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அமர்ந்திருந்தாள்.

“நீங்க பேசிட்டு இருங்கண்ணா! இன்னைக்கு நம்ம வீட்லதான் உங்களுக்கு லஞ்ச்” என்று எழுந்தாள் சஹானா.

“அதெல்லாம் வேணாம்மா! இன்னொரு நாள் பார்க்கலாம்…” என்றவனை அன்பான உபசரிப்பாலும், பாசத்தாலும் அவ்வீட்டினர் அவனைக் கட்டிப் போட்டனர்.

அரைமணி நேரம் கழித்து தேவியின் அறைக்குச் சென்றவள், அவளை ஹாலில் வந்து அமரும்படிச் சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.

மதிய உணவை முடித்துக்கொண்டு அவன் கிளம்பும்போது, “நீங்க எல்லோரும் ஒரு நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரணும். சஹி, மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வரணும்” என்றான்.

“கண்டிப்பாண்ணா!” என்றாள்.

மரியாதைக்காக போர்ட்டிக்கோ வரை வந்தவர்கள், அவன் சஹானாவுடன் ஏதேனும் பேசக்கூடும் என்று நாசுக்காக விலகிக் கொண்டனர்.

மெயின் கேட்டை நோக்கி மெல்ல நடந்தபடி, “ஓக்கேம்மா! நான் கிளம்பறேன்” என்றான்.

“ம்” என்று தலையசைத்தவள், “நான் நல்லாயிருக்கேன். என்னைப் பத்திக் கவலைப்பட வேணாம்னு அண்ணாகிட்ட சொல்லிடுங்கண்ணா!” என்றாள்.

வியப்புடன், “சஹிம்மா!” என்றான் தமிழ்.

“நான் குழந்தை இல்லண்ணா! இன்னைக்குக் காலைல அண்ணன் என்கிட்ட போனில் பேசினாங்க. இப்போ நீங்க வந்திருக்கீங்க… எனக்குப் புரியாதா?” என்றாள் மென்நகையுடன்.

“நீ பேசாம எங்க டிப்பார்ட்மெண்ட்ல சேர்ந்துடும்மா! உன்னை மாதிரி அறிவாளிங்க எங்களுக்குத் தேவை…” என்றவனைப் பார்த்துச் சிரித்தாள்.

“ஓகே சஹி! டேக் கேர்…” என்றவன் காரில் ஏற முற்பட, அவன் கரத்தைப் பற்றினாள்.

திரும்பிப் பார்த்தவனிடம், “தேவிக்கு படிப்பு முடிய இன்னும் ரெண்டு மாசம்தானிருக்கு. அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கண்ணா! முறைப்படி அத்தை, மாமாகிட்ட பேசுங்க. அவருக்குத் தெரிஞ்சா… எனக்குச் சங்கடமா இருக்கும். புரிஞ்சிக்குவீங்கன்னு நினைக்கிறேன்…” என்றாள்.

நெற்றியைத் தடவிக் கொண்டவன், “சாரி சஹி! உன்னோட ஏங்கில்ல நான் யோசிக்கவேயில்ல…” என்று உண்மையாகவே வருத்தம் தெரிவித்தான்.

“பரவாயில்லண்ணா! தேங்க்ஸ்…” என்றவளிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.


***************

இரவு உணவிற்குப் பின், அனைவரையும் ஹாலுக்கு வரவழைத்தார் கௌரி.

என்ன விஷயமென்று தெரியாவிட்டாலும், ஏதோ முக்கியமான விஷயம் என்று மட்டும் அனைவருக்கும் புரிந்தது.

சஹானாவிற்கு மட்டும், ‘இப்போது பேசப் போகிற விஷயத்திற்கு, முழுமுதற் காரணமும் தான்தான்’ என்று நன்றாகவே புரிந்தது.

“தேவி! ரூம்ல ஒரு லெதர் பேக் இருக்கும். அதைக் கொண்டுவா” என்றார்.

சஹானா நிமிர்ந்து பிரபுவைப் பார்த்தாள். அவன் தாடையில் கைகளை ஊன்றி அன்னையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தேவி கொண்டு வந்து கொடுத்த பையை வாங்கியவர், அதிலிருந்து இரு சாவி கொத்துகளை எடுத்தார்.

அதைப் பார்த்ததுமே சஹானாவிற்கு விஷயம் விளங்கிவிட திடுக்கிட்டுப் போனாள்.

“பிரபு! தேவி! இப்போ நான் சொல்றது முழுக்க முழுக்க உங்க அப்பாகிட்ட ஆலோசனைக் கேட்டு, நான் எடுத்த முடிவு. இதுல உங்க ரெண்டு பேருக்கும் எந்த ஆட்சேபணையும் இருக்காதுன்னு நினைக்கிறேன்” என்றவர் சாவிக்கொத்துடன் எழுந்து சஹானாவின் அருகில் வந்தார்.

எழுந்து நின்றவளுக்குப் பேச்சே வரவில்லை.

“சஹானா! இன்னைலயிருந்து இந்த வீட்டோட முழுபொறுப்பையும் உன்கைல கொடுக்கறேன். இந்தச் சாவியையும், முக்கியமான டாக்குமெண்ட்ஸ் இருக்கற இந்தப் பையையும் இனி உன் பொறுப்புல வச்சிக்க” என்று சாவியை அவளிடம் நீட்டினார்.

“இல்லத்தை… இதை நான் ஒத்துக்கமாட்டேன்… நீங்க எதையோ மனசுல வச்சிட்டு இப்படிப் பேசறீங்க” என்றாள் பதற்றத்துடன்.

“நான் மனசாரதான் இந்த முடிவெடுத்திருக்கேன் சஹானா!”

“உங்களை நான் மரியாதைக் குறைவா பேசினது ஆற்றாமையால தானே தவிர, இந்தக் குடும்பத்தைப் பிரிக்கணும்னு நான் என்னைக்குமே நினைக்கல” என்றவளை தேவி கண்கள் இடுக்கப் பார்த்தாள்.

கௌரி பிடிவாதமாகத் தன் பிடியில் நிற்க, “நீங்களாவது சொல்லுங்களேன்…” என்று பிரபுவிடம் முறையிட்டாள்.

“ஒருத்தரைக் கன்வின்ஸ் பண்ண உனக்கா தெரியாது…?” கிண்டலாகக் கேட்டுவிட்டு அவன் எழுந்து செல்ல, சஹானா பரிதவிப்புடன் மாமனாரைப் பார்த்தாள்.

“நான் முடிவெடுத்தது எடுத்து எடுத்தது தான். இந்தக் குடும்பம் மொத்தத்தையும் உன் கைல கொடுத்துட்டேன். என்னைவிட இந்தக் குடும்பத்தை நீ பொறுப்பா பார்த்துப்பன்னு, எனக்கு நம்பிக்கையிருக்கு…” என்றவர் சாவியையும், பையையும் டீபாய் மீது வைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றார்.

பையையும், சாவிக் கொத்தையும் எடுத்துக் கொண்டு அவளருகில் வந்த புருஷோத்தமன், “அம்மாடி! நடக்கறதெல்லாம் நல்லதுக்குத்தான். உன் அத்தையோட முடிவு கோபத்துல வந்தது இல்ல. முழு மனசோட எடுத்த முடிவுதான். அதனால நீ கலங்க வேண்டியதில்ல. குடும்பத்தைப் பிரிக்கிறன்னு யாரும் எதுவும் சொல்ல முடியாது… நான் சொல்றேன் வாங்கிக்கம்மா!” என்று அவளிடம் கொடுக்க, அரைமனத்துடன் வாங்கிக் கொண்டாள்.

“நல்லாயிரும்மா!” என்று அவளது தலையைத் தடவிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

பொத்தென இருக்கையில் அமர்ந்தவளுக்குக் கண்கள் கலங்கின.

“அண்ணி!” என்று அருகில் வந்தமர்ந்த தேவி, “நீங்க அம்மாகிட்ட என்ன பேசினீங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா, நீங்க அப்படி என்ன பேசியிருந்தாலும், அதுக்குப் பின்னால நியாயமான காரணமிருக்கும். நீங்க கவலைப்படாதீங்க ப்ளீஸ்” என்று தோளில் சாய்ந்து கொண்ட நாத்தனாரை, பாசத்துடன் தோளோடு அணைத்துக் கொண்டாள் சஹானா.

No comments:

Post a Comment