அத்தியாயம் – 50
“ம், இது பொறுத்தமா இல்லயே...” போட்டிருந்த சட்டையைக் கழற்றிவிட்டு, வார்ட்ரோபைத் திறந்தான் பிரபு.
“இது வேணாம்… இது வேணாம்… இ…து எஸ்! பிளாக் ஷர்ட்… கரெக்ட் காம்பினேஷன்…” என்று சட்டையை வெளியே எடுத்தான்.
அனைத்தையும் இழுத்துப் பிடித்த பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்த சஹானா, ஏதோ சொல்ல நினைத்தவள், வாயை இறுக மூடிக் கொண்டாள்.
அப்போதுதான் நினைவு வந்தவனாக, “ஓஹ்! இன்னைக்கு வெள்ளிக்கிழமையா… கருப்புச் சட்டை போட்டா, என் பொண்டாட்டிக்குப் பிடிக்காதே…” என்றபடி சட்டையை கட்டில் மீது வீசினான்.
அவன் பேசிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வேலையில் கவனமாக இருந்தாள் சஹானா.
‘சரியான கல்லுளிமங்கி…! வாயைத் திறக்கறாளா பார்’ என நினைத்துக் கொண்டே சட்டையின் காலரை மடித்துவிட்டபடி, கண்ணாடியில் தெரிந்தவளை நோட்டம் விட்டான்.
அவன் தன்னைப் பார்ப்பதைக் கவனித்தவள், கட்டில் மீது அவன் கழற்றிப் போட்டிருந்த சட்டைகளை, ஹேங்கரில் மாட்டுவதைப் போலத் திரும்பிக் கொண்டாள்.
இரண்டு நாள்களாக அவனாக ஏதாவது கேட்டால்கூட, அவள் நின்று அவனது முகத்தைப் பார்த்துப் பதில் சொல்வதில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான்… அவள் சற்றும் இறங்கி வருவதைப் போலத் தெரியவில்லை.
காலையில் சமையலறையில் இருந்தவளை, அறைவாசலில் நின்று கொண்டு உரக்க அழைத்தான்.
பதில் சொல்லாமல் இருந்தால் இரண்டு மூன்று முறை அழைத்துவிட்டு அமைதியாகிவிடுவான் என்று நினைத்து அவள் அமைதியாக இருந்தாள்.
அவனோ, ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த தந்தையிடம், “அப்பா! சஹியைக் கொஞ்சம் வரச் சொல்லுங்க… நான் கூப்பிட்டது அவளுக்குக் கேட்கல போல…” என்றான்.
‘என் காதென செவிடா! விடாக்கண்டன்…!’ என்று எரிச்சலுடன் நினைத்துக் கொண்டிருந்தவளை, “அம்மாடி! சஹானா…” என்று அழைத்தார் புருஷோத்தமன்.
“இதோ வரேன் மாமா!” என்றவள், பிரபு அவளை அழைத்ததாக அவர் சொன்னதும், முணுமுணுத்துக் கொண்டே அறைக்குச் சென்றாள்.
உள்ளே வந்தவளை, “ரொம்பப் பிஸியா இருந்தியா என்ன?” என்றான்.
“அதெல்லாம் இல்லை…” அவனை வெறுப்பேற்ற வேண்டுமென்றே சொன்னாள்.
“டிஃபன் வேலை…”
“முடிஞ்சிடுச்சி…”
“வேற ஏதாவது பாத்திரம் கழுவறது, சமைச்சதை டைனிங் டேபிள் மேல அடுக்கறது…” விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தான்.
அவளுக்குக் கடுப்பாக வந்தது.
“வேலையெல்லாம் முடிஞ்சது. நீங்க எதுக்குக் கூப்பிட்டீங்க?”
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும். உட்கார் குளிச்சிட்டு வந்திடுறேன்…” என்றபடி குளியளறைக்குள் நுழைந்தான்.
“என்ன பேசணுமோ சொல்லிட்டுப் போனா… நான் கீழே போவேனில்ல…”
“சமையல் ரூம்ல போய் நிக்கறதுக்குப் பதிலா கொஞ்ச நேரம் இங்கேயே ஏசியில் உட்கார்ந்திட்டு இரு…” உள்ளேயிருந்து பதில் சொன்னான்.
“நான் கீழே போறேன்…” கோபத்துடன் சொன்னாள்.
“நான் எங்க அம்மாகிட்ட சொல்லிக் கூப்பிடச் சொல்வேன்…” என்றவன், ஷவரைத் திறந்துவிட்டான்.
“உங்களுக்கு என்னதான் வேணும்?” கோபத்துடன் பற்களைக் கடித்தாள்.
“தண்ணி சத்தத்துல எதுவும் கேட்கல... நான் வெளியே வந்ததும் சொல்லு…” என்று சப்தமாகச் சொன்னவன், ஷவரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
இதோ, அறைக்குள் வந்தமர்ந்து கிட்டதட்ட முக்கால்மணி நேரமாகிறது. இதுவரை அவன் எதற்காக அழைத்தான் என்பதைப் பற்றி எதுவுமே பேசவில்லை.
அவன் ப்ரீஃப்கேஸை மூடிய சப்தத்தில், தனது நினைவுலகுக்கு வந்தாள் சஹானா.
“இப்பவாவது சொல்லுங்க… என்னை எதுக்குக் கூப்பிட்டீங்க?” பொறுமையிழந்து கேட்டாள்.
அடக்கி வைத்திருந்த கோபத்தால், அவளது முகம் சந்தன நிறத்திலிருந்து லேசாக ரோஜா நிறத்திற்கு மாறியிருந்தது.
அவளையே சில நொடிகள் வைத்தகண் வாங்காமல் பார்த்தான். மனத்திற்குள் மெல்லிய ஏக்கமும், அவளை வருத்துகிறோமே என்ற கவலையும் எழுந்தது.
கட்டிலில் அமர்ந்தவன், “இப்படி உட்கார் சொல்றேன்…” என்றான்.
“பரவாயில்ல நான் நிக்கிறேன்…” என்றாள் பிடிவாதமாக.
எழுந்து அவளை நெருங்கி நின்றவன், “இன்னைக்கு… ஜோஷிதாவை மீட் பண்ணப் போறேன்…” என்றான்.
அகன்ற விழிகளில் திகைப்பைத் தேக்கி அவனைப் பார்த்தாள். மனத்திற்குள் ஆத்திரமாக வந்தது. ஆழமூச்செடுத்து கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அவளது முகத்தில் தெரிந்த பாவனையும், வேகமாக எழுந்த நெஞ்சுக்கூடும், குவிந்தும், குழிந்தும் எழுந்த தொண்டைக் குழியுமே அவளது மனநிலையைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியது.
எல்லாமே சிலநொடிகள் தான்.
சலனமேயில்லாமல், “சரி” என்றாள்.
‘இவையெல்லாம் நடக்கும் என்று தெரிந்த போதும், அதைத் தன்னிடமே சொல்லிவிட்டுச் செய்பவனை என்ன சொல்வது?’
இமைகளின் விளிம்பில் நின்ற கண்ணீரை அவளால் மறைக்க முடியவில்லை.
“சஹி!” என்றபடி இரு கரங்களையும் அவளது முகத்தருகே கொண்டு செல்ல, கண்களை இறுக மூடியவள், “ப்ளீஸ்…!” என்றாள்.
அவளது இதழ்கள் நடுங்கின.
சற்று நேரத்திற்கு முன்புவரை அவளை வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தவன், அவளது கண்ணீரைக் கண்டதும் துவண்டு போனான்.
இருகரங்களையும் தலைக்குப் பின்னால் கோர்த்து அதில் தலையைத் தாங்கி அண்ணார்ந்து பார்த்தபடி நின்றான்.
அவன் நிதானத்திற்கு வந்தபோது, சஹானா கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அவளருகில் சென்று அமர்ந்தான். அவள் விலகவில்லை.
திரும்பி அவளைப் பார்த்தான். அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
“போய்ட்டு வாங்க…” என்றாள் மெதுவாக.
வியப்புடன், “சஹி!” என்றான்.
“என் சம்மதத்தைத் தானே எதிர்பார்த்தீங்க. அன்னைக்குச் சரின்னு சொல்லிட்டு, இன்னைக்கு ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன். சாரி!” என்றாள்.
அவனும் அமைதியாக இருக்க, “இனிமேலாவது என்னைச் சரியா புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க…” ஆழ்ந்த குரலில் சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினாள்.
பிரபுவிற்கு மனம் சற்று லேசானது போலிருந்தது.
தனது அன்னையை இப்படி மனம்நோகப் பேசிவிட்டாளே என்ற கோபம் அவனுக்கு இருக்கத்தான் செய்தது. ஆனாலும், அவளது பேச்சிலிருந்த நியாயத்தை புரிந்து கொண்டான்.
மறுநாளே குடும்ப பொறுப்பு அத்தனையையும் அவளிடம் கொடுத்த போது, அவனுக்குச் சற்று வியப்பாகவே இருந்தது. இருப்பினும், அன்னையின் முடிவில் அர்த்தமிருக்கும் என்று நினைத்தான்.
அதனால்தான், அவள் அவனிடம் இறைஞ்சிய போதும், முடிவை அவளிடமே விட்டுவிட்டு ஒதுங்கிப் போனான்.
‘என்றைக்கு இருந்தாலும், தங்களது வாழ்வை சரிசெய்து கொள்ளத்தான் வேண்டும். நீ சொல்வதைப் போல யாரோ ஒருத்திக்காக போராடும் நான், உனக்காக யோசிக்க மாட்டேனென்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாயே!’ என்று வேதனைப்பட்டான்.
பெயருக்காக ஒரு திருமணம் என்று நினைத்துத்தான் அவளை மணந்து கொண்டான். ஆயினும், இன்று அவள்தான் தன் உலகம் என்று முற்றிலுமாக மாறிப்போனான்.
ஜோஷிதாவை அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால், அது நேசமும், அக்கறையும் கலந்த உறவல்லவே!
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் அவளுடன் பழகியும் வராத உணர்வுகள், திருமணமான சில தினங்களிலேயே சஹானாவின் மீது வந்ததேன்?
‘மனைவி என்ற உரிமையாலா?’
அதுமட்டும் அல்ல என்று அவனால் அருதியிட்டுக் கூறமுடியும்.
‘இது காதல், அக்கறை, அரவணைப்பு என்று அனைத்தும் கலந்து உண்டான பந்தம். அதை அத்தனை விரைவில் உடைத்துவிட அவன் தயாராக இல்லை.
*************
“அண்ணி! நான் கேட்டதை கன்சிடர் பண்ணீங்களா?” வைத்த டிஃபனைச் சாப்பிடாமல் சஹானாவை துளைத்துக் கொண்டிருந்தாள் தேவி.
“நான்தான் நேத்தே சொல்லிட்டேனே… அத்தை, மாமாகிட்ட பர்மிஷன் கேடுக்கோன்னு…”
“ஹப்பா! எனக்குப் புல்லரிக்குது” சிரித்துக் கொண்டே சொன்னாலும், அவளது வார்த்தைகள் கடுப்புடனே வந்தன.
முறுவலை அடக்கிக் கொண்டு, சாப்பிட அமர்ந்தாள் சஹானா.
“வீட்ல எல்லோரும் முறுக்கிட்டு இருப்பீங்க. ஆனா, நாம ஏதாவது வேணும்னு கேட்டா… பொறுப்பை உன் அண்ணிகிட்ட கொடுத்தாச்சு. எதுவாக இருந்தாலும் அவகிட்டயே கேட்டுக்கோன்னு இந்தப் பக்கமா நம்மளை ஒரு உதை விடுவாங்க இந்த அம்மா.
அண்ணிகிட்ட வந்து கேட்டா அத்தை, மாமாகிட்ட பர்மிஷன் கொடுத்தா போய்ட்டுவான்னு சொல்வாங்களாம். ஆகமொத்தத்துல நம்மளை மெண்டல் ஆக்காம விடமாட்டாங்க இவங்க. கடைசி வரைக்கும் எனக்கு இன்னைக்கு பார்ட்டிக்குப் போக யாரும் பர்மிஷன் கொடுக்கப் போறதில்ல. அதுமட்டும் உறுதி” என்று புலம்பிக் கொண்டிருந்தாள் தேவி.
“என்னாச்சு? எதுக்கு இப்படி பாட்டு பாடிட்டு இருக்க…” கேட்டுக் கொண்டே சஹானாவின் அருகில் அமர்ந்தான் பிரபு.
தேவி அமைதியாக இருக்க, “அவளோட ஃப்ரெண்டுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்காம். அதுக்கு நைட் டின்னர் பார்ட்டியாம்… போகணும்னு சொல்றா. மழை நேரமா இருக்கு. இன்னைக்கு வேணாம் நாளைக்குப் பகல்ல போங்கன்னு சொன்னேன்… கேட்க மாட்டேன்றா. அத்தை மாமா பர்மிஷன் கொடுத்தா போய்ட்டு வான்னு சொல்லிட்டேன். அத்தை என் பர்மிஷனோட போகச் சொல்லிட்டாங்களாம்” என்று நடந்ததை சொல்லி முடித்தாள் சஹானா.
“நாளைக்கெல்லாம் முடியாதுண்ணா! இன்னைக்குத் தான் காலேஜ் லாஸ்ட் டே. நாளைலயிருந்து ஸ்டடி ஹாலிடே. எல்லோரும் கேதராகறது கஷ்டம்ண்ணா! நீயாவது அண்ணிகிட்ட சொல்லுண்ணா!” சிணுங்கலுடன் சொன்ன தங்கையை, புன்னகையுடன் பார்த்தான் பிரபு.
“ஆக, இந்த வீட்ல என்னை ஒரு உப்புமா ரேஞ்சுக்கு வச்சிருக்கீங்க… யார்கிட்டயும் வேலைக்கலைனா என்கிட்ட வரவேண்டியது” என்றான் கிண்டலாக.
விழிகளை உயர்த்திய சஹானா, “வீட்ல யாரும் ஒத்துக்கலைன்னு, பர்மிஷன் வாங்கிக் கொடுக்கச் சொல்லி அவரிடம் கேட்கறாங்கன்னா… எந்த அளவுக்கு அவரை உயர்த்தி வச்சிருக்காங்கன்னு புரியலையான்னு கேளு தேவி!” என்றாள்.
வாய்விட்டுச் சிரித்த புருஷோத்தமன், “பிரபு! உன் டெபாசிட்டையே மருமக காலி பண்ணியாச்சு…” என்றதும், “என் மனைவிகிட்ட தானேப்பா டெப்பாசிட்டை இழந்திருக்கேன். அது எனக்கு சந்தோஷம் தான்” என்று அவனும் நகைத்தான்.
அங்கே சஹானாவால் தான் பேசமுடியவில்லை.
தேவிக்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளவேண்டும் போலிருந்தது. மூன்று நாள்களுக்கு முன்பு நடந்ததென்ன? இப்போதிருக்கும் நிலைமை என்ன? எது நிஜம்?
அமைதியான முகத்துடன், “சரி! போய்ட்டு வா. ஆனா, சீக்கிரமா வந்திடணும்…” என்று கௌரியும் மெல்ல தனது திருவாய் மலர்ந்தார்.
“கடவுளே! இந்த வீட்டில் என்ன நடக்குது? எனக்கு ஒண்ணுமே புரியமாட்டேன்னுதே” என்று மேலே பார்த்து பேசினாள்.
“எது நடந்தா என்ன? இப்போதைக்கு நமக்கு ரூட் கிளியர்” என்றவள் வேகமாக உண்ண ஆரம்பித்தாள்.
No comments:
Post a Comment