அத்தியாயம் – 51
அவளிடம் பேசியபின்னரே தான் சொன்னது அவளுக்கு எந்த அளவிற்கு வேதனையாக இருந்திருக்கும். ஆனால், வருத்தத்தை கோபமாக யார் மீதும் காட்டவில்லை. எப்போதும் போல இயல்பாகவே இருக்க முனைந்தாள்’ என்று காலையில் வரும் வழியெல்லாம் அதையே யோசித்துக் கொண்டு வந்தான்.
ஒவ்வொரு பிரச்சனையின் போதும் அவள்மீதான அன்பு அவனுக்கு கூடிக்கொண்டே போனதே தவிர எள்ளளவும் குறையவில்லை.
‘போன ஜென்மத்தில் செய்த பாவமும், புண்ணியமும் தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும்’ என்று அவனது பாட்டி அடிக்கடி சொல்வது இப்போது நினைவிற்கு வந்தது.
அப்போதெல்லாம் அதைக் கேலி செய்தவனுக்கு, தான் உண்மையிலேயே ஏதோ ஒரு புண்ணியம் செய்திருக்கிறோம்’ என்று இப்போது தோன்றியது. அதேநேரம் திருமணத்திற்கு முன்பான வாழ்க்கைக்கு என்னவென்று சொல்வது?’
சஹானா வாழ்க்கைத் துணையாக வந்தது புண்ணியமென்றால், அது எந்த பாவத்தால் விளைந்தது? இதற்கு விதியை குறை சொல்வதா? அன்றி, இந்த ஜென்மத்தில் செய்த பாவம் என்பதா? அவன் உண்டாக்கிய கேள்விகளுக்கான விடை, அவனுக்கே தெரியவில்லை.
அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தவனுக்கு, தனது கவலையை நினைக்க நேரமில்லாமல் போனது. அலுவலக அறைக்குள் வந்து அமர்ந்தது தான் தாமதம்… திடீரென வெளிநாட்டிலிருந்து வரவைத்த புது மெஷினில் ஏதோ கோளாறு என்று தகவல் வர வேகமாக அங்கே சென்றான்.
என்ன, ஏதென்று பார்த்து அதைச் சரி செய்வதிலேயே அவனுக்குப் பாதி நாள் ஓடிவிட்டது. அது மீண்டும் ஓடத் துவங்கியதும் தான் அவனுக்கு மூச்சே வந்தது. இரண்டரை கோடியை முழுதாக விழுங்கிவிட்டு வந்த மெஷினல்லவா…
மதியத்திற்கு மேல் திடீரென அவன் வாங்கியிருந்த ஷேர்கள் சிலது சரிவை நோக்கிச் செல்ல, அதில் வேறு டென்ஷன். மூன்றே கால் மணி வாக்கில் பங்குச் சந்தை சரிவிலிருந்து ஓரளவு மேலே வரவும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
பிறகு கிளையண்ட் போன் கால், பார்க்க வேண்டிய ஃபைல்கள் என்று அவனுக்காக காத்திருந்த வேலையில் மூழ்கிப் போனான்.
ஓரளவிற்கு வேலையை முடித்துவிட்டு தளர்வாக சாய்ந்து அமர்ந்தவனுக்குத் தலையை வலிப்பது போலிருந்தது.
வேலையால் மறந்திருந்த சஹானா மீண்டும் அவனது நினைவை ஆக்ரமித்துக் கொண்டாள். அவளது அருகாமை வேண்டும் போலிருந்தது. அட்லீஸ்ட், அவள் கையால் ஒரு காஃபியாவது சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது.
அவளிடம் பேசவாவது செய்யலாம் என்று மொபைலைக் கையிலெடுக்கவும், அவனது அறைக்கதவு தட்டும் சப்தம் கேட்டது.
“எஸ், கம் இன்” என்றான்.
உள்ளே வந்த சுரேஷ், “குட் ஈவ்னிங் சார்!” என்றான் பவ்யமாக.
நெற்றியின் இருபுறமும் விரல்களால் அழுத்தியபடி “ம்ம், குட் ஈவ்னிங்!” நீங்க வீட்டுக்குக் கிளம்பலையா?” எனக் கேட்டான்.
“கொஞ்சம் பெண்டிங் ஒர்க் இருந்தது அதை முடிச்சிட்டு… கிளம்பலாம்னு இருந்தேன் சார்! நீங்க இதைப் பார்த்து சைன் பண்ணிட்டா ஃபேக்ஸ் அனுப்பிடலாம் சார்!” என்றான்.
“ஓஹ்! கொடுங்க…” என்று அவன் நீட்டிய பிரிண்ட் அவுட்டை வாங்கி வேகமாகப் படித்தான்.
மீண்டும் கதவு தட்டும் ஓசை கேட்க, விழிகளை உயர்த்திப் பார்த்தான் பிரபு.
“நான்தான் சார் பியூனை வரச்சொன்னேன்…” என்றபடி கதவருகில் சென்றவன் காஃபியுடன் உள்ளே வந்தான்.
“சார்! காலைல வரும்போதே கவனிச்சேன் கொஞ்சம் டிஸ்கம்ஃபர்டபிளா தெரிஞ்சீங்க. இன்னைக்குப் புல்லா உங்களுக்கு டென்ஷன் வேற… சீக்கிரமா வீட்டுக்குக் கிளம்பிடுவீங்கன்னு நினைச்சேன். நீங்க வொர்க் பண்னிட்டு இருந்தீங்க. அதான், காஃபி வாங்கிட்டு வரச் சொன்னேன். குடிச்சா கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும்” என்றான் அக்கறையுடன்.
பிரபுவிற்கும் அப்போது அது தேவையாயிருக்க, “தேங்க்யூ சுரேஷ்! நீங்க சாப்டீங்களா?” என்று பதிலுக்குக் கேட்டான்.
“என் டேபிள்ள இருக்கும் சார்!”
“நீங்களும் ரெஃப்ரெஷ் பண்ணிக்கோங்க. இன்னைக்கெல்லாம் என்னோடு சேர்ந்து நீங்களும் தானே அல்லல் பட்டீங்க…” என்று முறுவலித்தான்.
புன்னகைத்த சுரேஷ் பேச வாயைத் திறக்கும் முன், “ஹாய் பிரபு!” என்றபடி கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள் ஜோஷிதா.
காஃபியைப் பருக ஆரம்பித்த பிரபு, சுளித்த முகத்துடன் நிமிர்ந்தானென்றால், அதிர்ந்த முகத்துடன் அவளைப் பார்த்தான் சுரேஷ்.
‘சில மாதங்களாக இந்தப் பக்கம் தலையையே காட்டாதவள் இப்போது எந்த நோக்கத்துடன் இங்கே வந்திருக்கிறாள்? இவளாக வந்தாளா இல்லை…’ சந்தேகத்துடன் பிரபுவைத் திரும்பிப் பார்த்தான்.
பிரபுவின் முகம் லேசாக சுணங்கித் தெரிந்ததில் அவனுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது.
உற்சாகத்துடன் உள்ளே வந்த ஜோஷிதா, அங்கே சுரேஷைக் கண்டதும் முகத்தைச் சுருக்கினாள்.
அதற்குள் சற்று தெளிந்தவனாக, “சார்! அந்த ஃபேக்ஸ் லெட்டர்…” என்றான்.
“ம்” என்றவன் கையெழுத்திட்டு அவனிடம் கொடுத்தனுப்பினான்.
சுரேஷ் வெளியேறும் வரை அமைதியாக இருந்தவன், “நீ எங்கே இங்கே?” என்றான் அவளிடம்.
அதைச் சற்றும் எதிர்பாராத ஜோஷிதா, சமாளிப்பாகச் சிரித்தபடி, “நீங்க தானே மீட் பண்ணலாம்னு சொன்னீங்க…” சொல்லிக்கொண்டே மேஜை மீது அமர்ந்தாள்.
காஃபியை அப்படியே வைத்தவன், “இது ஆஃபிஸ்! கொஞ்சம் இறங்கி சேர்ல உட்கார்றியா” என்றான்.
“நான்தான் வரேன்னு சொல்லியிருந்தேனே அப்புறம் எதுக்கு வந்த?” முகத்தை இறுக்கத்துடன் வைத்துக் கொண்டு சொன்னான்.
ஜோஷிதாவிற்கு உள்ளுக்குள் கடுகடுவென இருந்தது. ஆனால், அவனிடம் அப்படி முகத்தைக் காட்டினால் தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்வது போலாகிவிடும் என்று அறியாதவளா அவள்.
இதழ்களில் தேக்கிவைத்திருந்த புன்னகை சற்றும் மாறாமல், “எப்படியும் நைட் டின்னருக்கு கூட்டிட்டுப் போவீங்க. நீங்க வீட்டுக்கு வந்து அப்புறம் நான் தயாராகி வெளியே கிளம்பறதுக்கு நேரமாகிடும். அதான், பிரபுவுக்கு அலைச்சல் வேணாம்னு நானே கிளம்பி வந்துட்டேன்…” என்றாள்.
அவளையே இமைக்காமல் பார்த்தான். ஆனால், அந்தப் பார்வையில் பிரியமோ, அன்போ, ஏன் சிநேக பாவம் கூட சிறிதும் இல்லை. அவளது உள்மனத்தை எடை போடுவதைப் போலப் பார்த்தான்.
ஜோஷிதாவின் நிலைதான் தர்மசங்கடத்தில் இருந்தது. உள்ளுக்குள் மண்டிய எரிச்சலை மறைக்க, படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
அவளது அவஸ்தையை உணர்ந்தவனது உதடுகள், கேலியாக வளைந்தன.
“உன்னை வெளியே கூட்டிட்டுப் போறேன்னு நான் எப்போ சொன்னேன்?”
அவனிடமிருந்து நறுக்குத் தெறித்தார் போன்று வார்த்தைகள் வந்தன.
“அது… ரொம்பநாள் கழிச்சி என்னைப் பார்க்க வரேன்னு சொன்னீங்க. அதோட நாம அவுட்டிங் போய் ரொம்ப நாள் ஆச்சே…” என்றாள்.
“நான் உன்கிட்ட பேச வரேன்னு மட்டும்தான் சொன்னேன்” என்றான் அழுத்தமாக.
அவளது முகம் திகைப்பை வெளிப்படையாக காட்டியது.
இதற்குமேல் அலுவலகத்தில் இதைப் பற்றி விவாதிப்பது உசிதமல்ல என்று எண்ணியவன், “சரி கிளம்பு…” என்று எழுந்தான்.
“எங்கே?” சந்தேகத்துடன் கேட்டாள்.
“நீ கேட்ட அவுட்டிங்…” என்றான்.
அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் இவ்வளவு சீக்கிரம் இதற்குச் சம்மதிப்பான் என்று அவள் நினைக்கவேயில்லை. சந்தோஷத்துடன் அவனைப் பின்தொடர்ந்தாள்.
அவன் சுரேஷிடம் ஏதோ சொல்லிவிட்டு, லிஃப்டில் ஏறினான்.
“நாம இப்படி வெளியே போய் ரொம்பநாள் ஆகிடுச்சி இல்ல…” அவளது முகம் சந்தோஷத்தில் மலர்ந்திருந்தது.
“ம்” என்றான்.
“உங்க கல்யாணத்துக்கு முன்னால போனது. அப்புறம் இப்போதான் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு…” என்றாள்.
அதற்குள் தரைத்தளம் வந்திருக்க, லிஃப்டிலிருந்து வெளியே வந்தவன் காரின் ஆட்டோமாட்டிங் லாக்கை விடுவித்தான்.
காரின் முன்பக்கக் கதவைத் திறக்கச் சென்றவளை, “பின்னால உட்காரு…” என்றான்.
அவன் சொன்ன வார்த்தையைக் கேட்டதும், “என்னது…?” என்றாள்.
அவன் பதில் சொல்லாமல் காரின் பின் இருக்கையில் ஏறி அமர, எங்கிருந்தோ அவனது டிரைவர் ஓடிவந்து அவனிடமிருந்து காரின் சாவியை வாங்கிக் கொண்டான்.
‘இவன் மனத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? இத்தனை நாள்கள் எங்கு சென்றாலும் இவந்தானே காரை செலுத்துவான்… என்று நினைத்தவளுக்கு மனத்தில் ஏதோ நெருடியது.
‘ஒருவேளை அதுதானோ?’ என்று அவன் மறைமுகமாகச் சொன்ன செய்தியில் அவளுக்குக் காந்தியது.
அரைமணி நேர பயணத்தில் இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.
‘இதற்கெல்லாம் நீ பதில் சொல்லியே ஆகவேண்டும் பிரபு!’ என்று மனத்திற்குள் குமுறினாள்.
ரூஃப் டாப் ரெஸ்டாரண்டில் இறங்கியவன், கொஞ்சம் பணத்தைக் கொடுத்து டிரைவரை அனுப்பிவிட்டு சற்று ஒதுக்குப்புறமாக இருந்த மேஜையில் அமர்ந்தான்.
“என்ன சாப்பிடுற?” என்றான்.
“எனக்குப் பசியில்ல…” என்றாள்.
“நீதானே வெளியே டின்னருக்குப் போகலாம்னு சொன்ன…”
“நான் சொன்னது டின்னருக்கு மணி ஏழரைகூட ஆகல…” என்றாள்.
“சரி வந்ததுக்கு லைட்டா ஏதாவது சாப்பிடு…” என்றவன், பேரரைக் கூப்பிட்டு ஆர்டரைச் சொல்லி அனுப்பினான்.
“என்ன எல்லாத்திலேயும் ஒண்ணு ஒண்ணு சொல்லியிருக்கீங்க?”
“ஆர்டர் செய்தது உனக்கு. எனக்கு டின்னர் வீட்டில் தயாரா இருக்கும்…”
“பிரபு! நீங்க ரொம்ப மாறிட்டீங்க…” என்றாள் வெறுமையாக.
முறுவலித்தவன், “இப்போதான் சரியாகியிருக்கேன்…” என்றான்.
அவள் அதற்குப் பதில் சொல்லும் முன், தான் அவளை எதற்காக சந்திக்க வருவதாகச் சொன்னான் என்பதை மெதுவாக அவளுக்கு உரைத்தான்.
இதை அவளும் ஓரளவு எதிர்பார்த்தே வந்தாள். ஆனால், அவனைச் சரிகட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் வந்தாள்.
அவள் வந்தது முதலே அது அவ்வளவு சுலபமல்ல என்பதை அவன் நிரூபித்துக் கொண்டே இருந்தான்.
இவனிடம் தனது உருட்டல், மிரட்டலெல்லாம் செல்லாது என்றெண்ணியவள், அவனை உணர்வுபூர்வமாக தாக்க முடிவெடுத்தாள்.
“ஏன் பிரபு நான் பணத்துக்காக உங்களோட பழகினேன்னு நினைக்கறீங்களா? நான் உங்களை மனப்பூர்வமா காதலிச்சேன். ஆனா, நீங்க அப்படி ஒரு நினைவே இல்லைன்னு சொன்ன போதும், எதுக்காக உங்களோட விருப்பத்துக்குக் கட்டுப்பட்டேன்னு நீங்க புரிஞ்சிக்கவே இல்லையா?”
அவளது இமைகள் ஈரமாயின.
அத்தனை நேரம் கடுமையைக் காட்டிய அவனது மனம், அவளது பேச்சில் சற்று கரைந்து போனது.
அவள் சொல்வதில் பாதி உண்மையல்ல என்று அறிந்திருந்த போதும், அவள் தன்னைக் காதலித்தது, அவனுக்குமே தெரியும் தானே.
சற்றுநேரம் அமைதியாக இருந்தான்.
அவனது அமைதியே ஜோஷிதாவிற்கு மேலும் பீதியைக் கிளப்பியது. இப்படி எதிர்கேள்வி கேட்டதும் அடங்கிப் போகும் ரகமல்லவே அவன். பின் எப்படிப் பயப்படாதிருக்க முடியும்?
‘இது வேலைக்காகாது’ என்று எண்ணியவளாக, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
கசிந்திருந்த விழிகளைத் துடைத்துக் கொண்டே, “நானும் உறவை புதுப்பிச்சிக்கணும்னு நினைக்கல. அதேநேரம் உங்களோடான நட்பிலிருந்து விலகவும் விரும்பல…” என்றாள்.
பிரபு அவளையே வெறித்துப் பார்த்தான்.
பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காக மாறுவதை, கண்கூடாகப் பார்த்தான்.
“ஆரம்பத்துல நான் என்ன சொன்னேன்னு உனக்கு மறந்து போச்சா ஜோஷிதா? அன்னைக்கே எல்லாத்துக்கும் சரின்னு சம்மதம் சொன்ன தானே…”
அவளது கண்ணீர் அவனது இரக்கத்தைத் தூண்டுவதற்குப் பதிலாக, ஆத்திரமூட்டியது.
“ஆமாம் சொன்னேன். உங்களைப் பிரியறது இவ்வளவு கொடுமையா இருக்கும்னு நினைக்கல. அவ்வளவு ஏன்? நாம பிரிஞ்சிடுவோம்னு நினைக்கவேயில்ல…” என்றாள் அழுத்தமாக.
மின்சாரம் தாக்கியதைப் போல அதிர்ந்து போனான் அவன்.
இப்படி ஏதாவது நடக்கும் என்று ஓரளவு கணித்திருந்ததாலேயே அவளது வீட்டிற்கு வருவதாகச் சொல்லியிருந்தான்.
‘இப்படியொரு பொது இடத்தில் அவள் கண்ணீர் விடுவதை யாரேனும் காணநேர்ந்தால் என்னாவது?’ என்று எரிச்சலாக இருந்தது அவனுக்கு.
இதற்கு மேலும் பேசி பிரச்சனையை பெரிதாக்க அவன் விரும்பவில்லை. அத்துடன் தனது முடிவில் இன்னமும் திடமாக நின்றான்.
“இங்கே பார் ஜோஷிதா! நீ என்ன சொன்னாலும் சரி. என் முடிவுல நான் தீவிரமா இருக்கேன். யோசிச்சி பாரு. உன்னோட நல்லதுக்காகத் தான் சொல்றேன். இப்போ நான் இருக்கும் நிலைல நீ இருந்திருந்தா நிச்சயமா உன்னோட வாழ்க்கைக்கு நான் குறுக்கே வந்திருக்க மாட்டேன். யோசி. உன்னோட நல்வாழ்க்கையை மனசுல வச்சித்தான் சொல்றேன்…” என்று மெதுவாகவும், அழுத்தமாவும் சொன்னான்.
கண்களிலிருந்து கண்ணீர் அருவியென பெருகியது.
பிரபுவின் பொறுமை பறந்துகொண்டிருந்தது.
“வீணா சீன் கிரியேட் பண்ணாத…” மெல்லிய குரலில் அதட்டலாகச் சொன்னான்.
வேகமாக எழுந்தவள் ரெஸ்ட் ரூமிற்குச் சென்றாள். அவள் திரும்பி வர எடுத்துக் கொண்ட ஐந்து நிமிடத்தில் ஆர்டர் செய்திருந்த உணவுகளெல்லாம் டேபிளில் தயாராக இருந்தன.
காஃபியை உறிஞ்சிக் கொண்டிருந்த பிரபுவின் எதிரில் வந்தமர்ந்தாள்.
“கிளம்பலாம்” என்றாள்.
“டிஃபன்…?”
“எனக்குப் பசிக்கல…” என்றாள்.
“ஓகே…” என்றவன் பில்லுக்கான பணத்துடன் தாராளமாக டிப்ஸையும் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.
ஒரு ஆட்டோவை அழைத்த ஜோஷிதா, அவனிடம் சொல்லாமலேயே கிளம்பினாள்.
அவனும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அவள் செல்வதை பார்த்துவிட்டு காரை நோக்கி நடந்தான்.
தனது பார்வையிலிருந்து அவன் மறையும் வரை திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு ஆத்திரமாக வந்தது.
‘எத்தனைச் சுலபமாகத் தன்னை உதற முற்பட்டுவிட்டான்’ என்ற கோபத்தில் அவளது உடலே தீப்பற்றியதைப் போல எரிந்தது. மனத்தில் வெடித்துக் கொண்டிருந்த எரிமலையின் சீற்றம் அவளது கண்களில் தெரிந்தது.
சிலநொடிகள் தான் இதெல்லாம் விரைவிலேயே தன்னை சுதாரித்துக் கொண்டாள். தனது எண்ணம் ஈடேறும் வரை ஆத்திரமும், அவசரமும் கூடவே கூடாது. சஹானாவிற்கு, தான் யாரென்று காட்ட வேண்டும். உன் கணவனை என்னைத் தேடி வரவைப்பேன் என்று சவால் விட்டதை நடத்திக் காட்ட வேண்டாமா?
தலை நிமிர்ந்து கழுத்திலிருந்த மாங்கல்யத்தைத் தொட்டுக் காட்டி என்னை இழிவுபடுத்தியவளை, என்னெதிரில் தலை தூக்க முடியாமல் செய்ய வேண்டுமே. இத்தனை நாள்களாக இல்லாத சூடு, சுரணையெல்லாம் இன்று எதற்காக புதிதாக வரவேண்டும்.
இப்போது தனக்குத் தேவையானது கண்ணீரோ, மறுப்போ, கோபமோ அல்ல. தந்திரம்! பிரபுவைத் தன் பக்கமாக இழுக்கத் தேவையான தந்திரம். அதற்காக இவ்வளவு நாள்கள் எப்படி அவனுக்கு அடிபணிந்திருந்தேனோ, அதையே தொடரவேண்டும்.’
தனது முடிவை எப்படி நடத்திக் கொள்வது என்ற யோசனையில் மூழ்கிப் போனாள்.
***********
‘கடவுளே! உன்னையே நம்பியிருக்கற என்னை கைவிட்டுடாதே…’ கண்களை மூடி பிரார்த்தித்தவள், “ஆரத்தி எடுத்துக்கோங்கோ…” என்ற குரலால் விழிகளைத் திறந்தாள்.
குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு உச்சிவகிட்டில் வைத்தபடி திரும்பியவள் தன்னருகில் நின்றிருந்த கணவனைப் பார்த்ததும், வியப்பில் புருவங்கள் உயர்ந்தன.
அவள் கையிலிருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டவன், ‘கிளம்பலாமா’ என்பது போலத் தலையசைக்க, அவளும் சரியென்று தலையசைத்தாள்.
மனத்திற்குள் இனம்புரியா சந்தோஷம் உண்டானது. வேறெதையுமே அவள் நினைக்கத் தாயாராக இல்லை.
இருவரும் பிரகாரத்தில் அமர்ந்தனர்.
“நீங்க எப்படி வந்தீங்க…?” என்றாள்.
“கார்ல…” என்றான் சிரிப்புடன்.
“போதுமே…” என்றவளும் வெகுநாட்களுக்குப் பிறகு மனம்விட்டுப் புன்னகைத்தாள்.
“வீட்டுக்குப் போனேன். அம்மா நீ கோவிலுக்குப் போயிருக்கன்னு சொன்னாங்க. அதான் கிளம்பி வந்தேன்” என்றான்.
“எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு…”
தனது வேண்டுதலுக்கு அம்மன் செவிசாய்த்து விட்டாள் என்ற நம்பிக்கையாலோ என்னவோ, மனத்திலிருந்ததை அவளால் தேக்கி வைத்துக் கொள்ள முடியவில்லை.
புன்னகைத்தவன், “எனக்கும்தான்…” என்றான்.
இருவரும் மெல்ல காரை நெருங்கினர். ஆட்டோமேட்டிக் லாக்கை விடுவித்தவன் அவள் அமர, காரின் முன்பக்க கதவைத் திறந்துவிட்டு, மறுபக்கம் வந்து காரைக் கிளப்பினான்.
No comments:
Post a Comment