அத்தியாயம் - 53
விருந்தினர்களை உபசரித்துக் கொண்டே ஹாலை சுற்றி வந்துகொண்டிருந்த ஷீலா, இரு தூண்களுக்குப் பின்னால் மறைவாக நின்றிருந்த ஜோஷிதாவைக் கண்டதும் நெற்றியைச் சுருக்கினாள்.
‘இந்த சூரஜ்ஜுக்கு அறிவேயில்லை. இவளை எதற்காக அழைக்கவேண்டும்?’ மனத்திற்குள் மண்டிய எரிச்சலை மறைத்துக் கொள்ள முடியாமல் திண்டாடினாள்.
“என்ன ஷீலா! மச்சினன் கல்யாண வேலையில் முதுகு ஒடியுதா?” கேட்டுச் சிரித்த உறவினருக்கு புன்னகையைப் பதிலாகிவிட்டு ஜோஷிதாவை நோக்கி நடந்தாள்.
மேடையின் அருகில் நின்றிருந்த சஹானாவை பார்வையாலேயே கூறுபோட்டுக் கொண்டிருந்தவளது முகத்தில் தெரிந்த குரோதத்தில் திடுக்கிட்டுப் போனாள் ஷீலா.
‘இன்னமும் இவள் மாறவேயில்லையா?’ மனத்திற்குள் வெறுப்பு மண்டியது அவளுக்கு.
வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அவளருகில் சென்றவள், “ஹாய் ஜோஷிதா என்ன ஓரமா வந்து நிக்கிற? வா இப்படி வந்து உட்காரு…” என்றாள்.
அவளைச் சற்றும் எதிர்பார்க்காத ஜோஷிதா, “ஹாய் ஷீலா! ஹவ் ஆர் யூ?” என செயற்கையாக ஒரு புன்னகையைச் சிந்தியவள் ஷீலாவை அணைத்துக் கொண்டாள்.
‘சே! இவளைப் பத்தித் தெரியாம ஆரம்பத்தில் ரொம்ப இடம் கொடுத்தது தப்பா போச்சு…’ மனத்திற்குள் திட்டிக் கொண்டே அவளை விலக்கியவள், “நான் நல்லாயிருக்கேன்” என்றாள்.
“ம்ஹும்! இவ்ளோ க்ளோசா பழகியும், உன் மச்சினன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிடணும்னு தோணல பார்த்தியா உனக்கு…” என்று பெருமூச்சுடன் சொன்னாள்.
சமாளிப்பாகச் சிரித்த ஷீலா, “நான் கூப்பிட்டா என்ன? சூரஜ் கூப்பிட்டா என்ன…?” என்றாள்.
அப்போது தான், தானே உளறிவிட்டதை உணர்ந்து காதுவரை உதடுகள் விரிய புன்னகைத்தாள்.
ஷீலாவிற்கு அங்கே நிற்கவே எரிச்சலாக இருந்தது. ஒரு காலத்தில் சூரஜ்ஜிடம் அவள் வேலை செய்து கொண்டிருந்த போது, ஷீலாவிற்கு மிகவும் பிரியமானவளாகத் தான் இருந்தாள் அவள். பிரபுவின் மீது அவளுக்கு விளைந்த நேசமும் தெரியும்.
இருப்பினும், அதைச் சற்றும் விரும்பாத சூரஜ், ‘இதெல்லாம் சரிவராது. பிரபுவிற்கு, அவள்மீது எவ்விதமான ஈடுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், அவளை தன் நிலை உணர்ந்து நடந்துகொள்ள ஏதுவாக எடுத்துச் சொல்லும்படி ஷீலாவிடம் கூறினான்.
அப்போது… ‘அவள் யாருமற்றவள், தன்னிடம் மதிப்பும், மரியாதையும் உடையவள்’ என்ற நினைப்பில், அவளுக்கு ஒரு வளமான வாழ்க்கை கிடைக்குமானால், அதற்கு நாம் ஏன் தடையாக இருக்க வேண்டுமென்று சூரஜ்ஜிடம் கூட சண்டையிட்டிருக்கிறாள்.
ஆனால், பிரபுவின் மறுப்பிற்கு வருந்தியவள், அவனது நிபந்தனையை அறிந்து கடுங்கோபம் கொண்டாள். அதைவிட, எதையுமே யோசிக்காமல் அதற்குச் சம்மதித்த ஜோஷிதாவை நினைத்து கொதித்துப் போனாள்.
அதன்பிறகு, ஜோஷிதாவை சந்திக்கும் வாய்ப்பும் அவளுக்கு எப்போதாவது தான் நேர்ந்ததாலும், என்ன என்றால் என்ன என்பதோடு அவர்களது நட்பு முறிந்து போனது. கணவனின் நண்பன் என்ற காரணத்தால், பிரபுவிடமும் பட்டும் படாமலும் பழகினாள்.
‘ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டானே’ என்ற கோபம் அவளுக்கு வெகுநாள்கள் இருந்தது.
பிரபு, சஹானாவின் திருமணத்திற்குப் பிறகு, அவர்களது அன்னியோன்யத்தை நேரில் கண்டாள். ‘அவனது காதல் முழுவதும், மனைவியிடம் மட்டுமே…’ என்று புரிய அதுவும் விலகிப் போயிற்று.
அவனது திருமணத்திற்குப் பிறகும், ஜோஷிதாவின் நடவடிக்கைகளைக் கேள்விப்படும் போதும் அவளிடம் கொண்டிருந்த அன்பெல்லாம், வெறுப்பாக மாறியது ஷீலாவிற்கு.
வெகுநாள்களுக்குப் பிறகு இன்று அவளைப் பார்த்ததும் தன்னை நிதானித்துக் கொள்ள சிரமமாகத்தான் இருந்தது. ஆயினும், அவளது வளர்ப்பு முறையும், கணவன் அழைத்துவிட்டானே என்ற எண்ணத்தாலும், தன்னை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டாள்.
தனது பழைய நினைவுகளைக் களைந்தவள், ஜோஷிதாவிற்குப் பழச்சாற்றை தருவித்துக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தவளது கண்கள் கணவனைத் தேடியது.
“புஜ்ஜி பையா… குட்டிப் பையா… தங்கக் கட்டி…” என வாயில் வந்த பெயர்களையெல்லாம் சொல்லி சூரஜ்ஜின் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் தேவி.
அவளது கொஞ்சலுக்கெல்லாம் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த போதும், சஹானாவின் மடியிலிருந்து குழந்தை இறங்கவேயில்லை.
“சிபி குட்டி! என்கிட்ட வாங்கடா…” என்று அவள் ஆசையுடன் கைநீட்டி அழைக்க, அதை மறுப்பது போல சிரிப்புடன் சஹானாவின் கழுத்தை கட்டிக் கொண்டான் குழந்தை.
“பாருங்கம்மா! இவனை. நான் கூப்பிட்டாகூட வரமாட்டேன்றான். திருட்டுப் பையன்!” சிறுகுழந்தை போலத் தாயிடம் முறையிட்டாள் தேவி.
ஷீலாவின் அன்னையுடன் பேசிக்கொண்டிருந்த கௌரியம்மா, சிரிப்புடன் மகளைப் பார்த்தார்.
“நீ உன் அண்ணிகிட்ட அப்ளிகேஷன் போடு… அப்புறம், இருபத்தி நாலு மணிநேரமும் கொஞ்சிகிட்டே இருக்கலாம்…” என்றார் ஷீலாவின் தாய்.
அவர் சொல்லிய வார்த்தைகள் காதில் விழுந்த போதும், கமுக்கமாக அமர்ந்திருந்தாள் சஹானா.
அதேநேரம் அங்கே வந்த பிரபு, தன்னைக் கண்டதும் தாவிய குழந்தையைத் தூக்கி முத்தமிட்டான்.
அதைக் கண்டு சிரித்த ஷீலாவின் அன்னை, “எங்களுக்கெல்லாம் எப்போ வளைகாப்பு சாப்பாடு போடப்போற பிரபு…?” என்று கேட்டதும்,கௌரியம்மா அச்சத்துடன் மறுமகளின் முகத்தைப் பார்த்தார்.
அவரது வார்த்தைகள் காதில் விழாதது போல அமர்ந்திருந்தாலும், அழுந்த மூடிய இதழ்களில் மறைந்திருந்த முறுவலையும், செம்மையுற்ற கன்னங்களும் அவளது உள்ளத்தை கண்ணாடியாகக் காட்டியதைப் பார்த்து நிம்மதியுற்றார் கௌரி.
ஏற்கெனவே, மனைவியின் மறைமுகச் குறிப்புகளால் விளைந்த சந்தோஷத்திலும், மனத்தின் பூரிப்பிலும், “அதுக்கென்ன கூடிய சீக்கிரம் அழைச்சிடுவோம்… என்ன சஹானா?” என்று அவளையும் தனது பேச்சிற்குத் துணைக்கு அழைத்தான்.
அவஸ்தையான அந்த நிமிடத்தையும் மீறி விழிகள் பளிச்சிட அழகாகப் புன்னகைத்தாள் அவள்.
கௌரி அம்மாவின் கண்கள் கலங்கின. நடுங்கிய விரல்களால் மருமகளின் கரத்தைப் பற்றினார்.
திரும்பிப் பார்த்தச் சஹானா மலர்ந்த புன்னகையுடன், அவரது கரத்தை ஆதரவுடன் பற்றிக் கொண்டாள்.
“தேவி! ப்ரீத்தி வந்திருக்கா பாரு…” என்று அன்னை சொன்னதும், “ஹாய்!” என்றபடி தனது தோழியை நோக்கி ஓட, தனது இருக்கையை சற்று திருப்பிப் போட்டுக் கொண்ட கௌரியம்மா, அங்கிருந்தவர்களுடன் பேச ஆரம்பித்தார்.
நின்றிருந்த பிரபு, “சஹி! இவனைக் கொஞ்சம் பிடி…” என்று குழந்தையை அவளிடம் கொடுத்தவன், அமர்வதற்கு ஏதுவாகப் பேண்ட்டைச் சற்று தளர்த்திக் கொண்டு, குழந்தையை வாங்கி இருத்திக் கொண்டான்.
சற்றுநேரம் இருவரும் பேசிக்கொள்ளாவிட்டாலும், நீண்ட நாள்களுக்குப் பிறகு இருவரது மனத்திலும் ஏற்பட்டிருந்த நிம்மதி அந்த நொடியை இரசிக்கச் செய்தது.
மெல்லிய குரலில், “தேங்க்ஸ்…” என்றான்.
விழிகளை உயர்த்தியவள், “எதுக்கு?” என்றாள்.
“இந்த நிமிஷத்துக்காக…” என்றான் காதலுடன்.
ஏதும் அறியாதவள் போல், “ஓ! நான் முத்துமாலைகோன்னு நினைச்சேன்…” என்றாள்.
அவளையே இமைக்காமல் பார்த்தவன், “இந்த நிமிஷத்தை எவ்வளவு இரசிக்கிறேனோ… அதே அளவுக்கு வெறுக்கறேன்…” என்றான்.
நெற்றிச் சுருங்க, “ஏன்?” என்றாள் சிறு பதட்டத்துடன்.
“இது நம்ம வீடா இல்லாம போச்சேன்னு தான்…” என்று விஷமமாகச் சிரித்தான்.
அவன் சொல்லவந்த குறிப்பை உணர்ந்து கொண்டவள் நாணத்துடன், “பிரபு…!” என்றாள்.
திகைத்த அவனது பார்வையை குறுகுறுப்புடன் பார்த்தாள்.
‘எத்தனை நாள்களுக்குப் பிறகு இந்த அழைப்பு…’
‘அவளது கரத்தைப் பற்றிக் கொள்ளவேண்டும், அவளது மடியில் சாய்ந்து மனம் விட்டுப் பேச வேண்டும், தனது பாவங்கள் கரையும் அளவிற்குக் கண்ணீர் விட்டு அழவேண்டும்’ என்று, என்னென்னவோ எண்ணங்கள் அவனைப் போட்டு புரட்டி எடுத்தன.
தனது மனத்திலிருந்ததை வெளிப்படையாகக் கொட்டிவிட்டதை உணர்ந்து அவளும், மௌனமாக இருந்தாள்.
மடியிலிருந்த குழந்தை அவனது சட்டைப் பாக்கெட்டிலிருந்த பேனாவை உருவ, சட்டென நிதானத்திற்கு வந்தான்.
“சஹி!” என்று அவன் அழைக்கவும், “ஹலோ பிரபு! ஹவ் ஆர் யூ…?” என்றபடி அவனை நோக்கி வந்தாள் ஜோஷிதா.
பிரபுவும், சஹானாவும் ஒருசேர அவளை நிமிர்ந்து பார்த்தனர்.
No comments:
Post a Comment