Wednesday, March 30, 2016

நெஞ்சத்திலே.... (சிறுகதை)


நெஞ்சத்திலே....


அந்தி மாலை நேரம்.

ஹோட்டல் லாபியில் நின்றிருந்த சித்ரலேகா, யாரையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள் போலும்.
கைக் கடிகாரத்தையும் வாயிற்புறத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பார்வை அவ்வப்போது தவிப்புடன், சற்று தொலைவில் அமர்ந்திருந்த ஹரி பிரசாத்திடம் சென்று மீண்டு வந்தது. 

தான் அழைத்ததுமே என்ன ஏதென்ற கேள்வி எதையுமே கேளாமல் வந்தவனை, வெகுநேரமாக காக்க வைத்திருக்கிறோம் என்ற எண்ணதால் அவளுக்குத் தன்னைக் குறித்தே எரிச்சல் எழுந்தது.

‘தன்னுடைய முட்டாள்தனம் தான் இத்தனைக்கும் காரணம்’ என்று ஸ்திரமாக நம்பினாள். 

முடிந்து போன அத்தியாயம் என்று நினைத்த பழங்கதை, மீண்டும் தொடர்ந்து வருமென... அவள் கனவிலும் நினைக்கவில்லை. நான்கு நாள்களாக மனத்தோடு போராடி தீர்க்கமான ஒரு முடிவெடுத்த பின்பே அமைதியடைந்தாள்.

ஆயினும், ‘ஹரியின் முடிவு என்னவாக இருக்கும் என்று இதுவரை தெரியாத போதும், அவனறியாமல் தன்னுடைய வாழ்க்கையில் எந்த விஷயமும் நடக்கக்கூடாது’ என்பதில் திடமாக இருந்தாள்.
 
"ஹாய் சித்து..." என்றபடி வந்தான் மிதுன்.


மிதுன், சித்ரலேகாவின் கடந்த நாள்களின் மிச்சம்! இன்றைய தினத்தின் அவளது குழப்பத்திற்கும், தடுமாற்றத்திற்கும் காரணமானவன்.

"ஹாய்...!" என்று பதிலுக்கு உரைத்தவளது குரலில் கொஞ்சங்கூட சுரத்தே இல்லை.

"என்ன டியர்? ரெண்டு வருஷம் கழித்து பார்த்துக்கொள்ளும் லவர் மாதிரி பேசமாட்டேன்ற?" புன்னகையுடன் அவளது கரத்தைப் பற்ற முயன்றான்.

அவனது எண்ணத்தை உணர்ந்து கொண்டவளாக, சட்டென பின்வாங்கினாள்.
புருவங்கள் இடுங்க, அவளைப் பார்த்தவனது முகம் திகைப்பையும், கோபத்தையும் காட்டியது. கீழ் உதட்டைக் கடித்து தன்னைக் கட்டுப்படுத்தினான்.

அவனது முகபாவங்களை, ஆழமாக உள்வாங்கிக் கொண்டிருந்தன அவளது விழிகள். 

தன்னை முயன்று சமாளித்துக் கொண்டவன், “ஓகே உன்னோட கோபம் புரியுது. ரெண்டு வருஷமா உன்னைப் பார்க்க வரல... பேசவும் முயற்சி செய்யலைன்னு கோபம் உனக்கு. அதான் இப்போ வந்துட்டேனே சாரி சித்தும்மா! உன்னுடைய மிதுனை கொஞ்சம் மன்னிக்கக் கூடாதா?” கெஞ்சலும் கொஞ்சலுமாகப் பேசியனான்.

அவனுடைய நாடகத்தன்மையான பேச்சியும், நடத்தையையும் கண்டவளுக்கு எரிச்சல்தான் மிஞ்சியது. காத்திருக்கும் ஹரியின் நினைப்பு வர, மிதுனிடம் சமாதானமாகப் பேசினாள்.

"வாங்க மிதுன்! உங்ககிட்ட சில முக்கியமான விஷயம் பேசணும். சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்...." என்றவள் அவனது பதிலுக்காகக் காத்திராமல் ஹோட்டலின் உள்ளே சென்றாள்.


அவளது நிதானமான செய்கையைக் கண்ட மிதுன், யோசனையுடன் அவளைப் பின்தொடர்ந்தான்.

சித்ரலேகா ஒரு டேபிள் அருகில் சென்று நின்றாள். அங்கே, ஏற்கெனவே ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டதும் மிதுன் லேசான பதட்டத்துடன் பார்த்தான்.

"மிதுன்! மீட் மிஸ்டர். ஹரிபிரசாத்" அவள் அறிமுகப்படுத்தியதும், ஹரி எழுந்து அவனை நோக்கி கையை நீட்டினான்.

நாகரீகம் கருதி கையைக் குலுக்கியவன், ‘யாரிவன்?’ என்பதைப் போல லேகாவைப் பார்த்தான்.

"எம்.என்.சியில் ப்ராஜெக்ட் லீடரா இருக்கார். என் வருங்கால கணவர்" என்றவள் ஹரியின் அருகில் சென்று நின்றாள்.

மிதுன் அதிர்ந்து போனான்.

"ஆர் யூ மேட்? விளையாடுறியா?” என ஆத்திரத்துடன் கத்தினான்.

அங்காங்கே அமர்ந்திருந்த சிலர் திரும்பி பார்த்தனர்.

"எதுக்கு மிதுன் இப்படிச் சீன் க்ரியேட் பண்ற? நியாயமா நான்தான் உன்மேல கோபப்படணும். ஆனால், எனக்கு உன்மேல கொஞ்சங்கூட கோபமே வரலை. ஏன்னா, நான் உன்னைக் காதலிக்கவே இல்லை."


அட்சரம் பிசகாமல் அவளது வார்த்தைகள், கல்லில் செதுக்கியதைப் போல ஆணித்தரமாக வந்தது.

"இதெல்லாம் அநியாயம் சித்ரா" என்றவனது முகம் கோபத்திலும், ஏமாற்றத்திலும் சிவந்தது.

வேகமாக ஹரிப்ரசாத்திடம் திரும்பி, "சார்! நானும், இவளும் காலேஜில் படிக்கும் போதே காதலர்கள். இரண்டு வருஷம் அவளுக்கு நான்; எனக்கு அவள் என்று இருந்தோம். ரெண்டு வருஷத்துக்கு முன் வேலைக்கு என்று போன இடத்தில், ஏதேதோ காரணங்களால் இவளைத் தொடர்புகொள்ள முடியாமல் போச்சு. இப்போ, இவளே கதி என்று வந்திருக்கும் எனக்கு, என்ன பதில் சொல்ல போகிறாள்?" என்றவனின் முகம் கோபத்தில் ஜொலித்தது.

ஹரி வாயைத் திறக்காமல் சித்ரலேகாவைப் பார்த்தான்.

படிப்பை முடித்து வேலைக்குச் செல்வதாக வெளியூர் சென்றவன், அதோடு தொடர்பை முறித்துக்கொண்டான். அந்த நிலையில், ‘யாரை விசாரிப்பது?’ என புரியாமல் தவித்துப் போனால் சித்ர லேகா.

ஆறு மாதத்திற்கு முன்பு, ஹரி அவளைப் பெண்பார்க்க வந்தான். அப்போதே, தன்னைப் பற்றி ஒன்றுவிடாமல் அவனிடம் சொல்லி, திருமணத்தை நிறுத்தும்படி சொன்னாள்.

ஆனால், சித்ர லேகாவின் இந்தக் குணமே அவள் மீது அவனுக்கு ஒர் ஈர்ப்பை உண்டாக்கியது.

‘திருமணம் என்ற ஒன்று நம்மிடையில் இல்லாவிட்டாலும், நல்ல நண்பர்களாக இருப்போம்’ என மாலையிட வந்தவன் நட்புக்கரம் நீட்டினான்.

அவன் நீட்டிய கரத்தை, அவளுமே ஆவலுடன் பற்றிக்கொண்டாள். சில நாட்களிலேயே, ‘தன்னுடைய வாழ்க்கையே அவந்தான் என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.


ஆனாலும், மனத்திலிருந்த தயக்கத்தால், தன்னை அவனிடம் வெளிப்படுத்திக் கொள்ள முடியாமல் தத்தளித்தாள். 

பதின்ம வயதில் ஏற்படும் பருவக் கோளாறால், தன்னைப் பாராட்டி முகமன் கூறியவனின் சொல்லையும், செயலையும் எண்ணி எண்ணி பூரித்தது காதல் இல்லை என புரிந்தது.

இனக்கவர்ச்சிக்கும், காதலுக்கும் இடையில் சிக்கித் தவித்த காலத்தைக் கடந்து ஆராய்ந்து, அறிவுபூர்வமாகச் சிந்திக்க முடிந்தது.

கடந்த ஆறுமாதத்தில் ஹரி தனிமையில் கூடத் தன்னிடம் பேசிய பேச்சில் விடலைத்தனமோ, கள்ளச்சிரிப்போ, சீண்டலோ இல்லை. சிந்திக்கும் திறன் தெரிந்தது. அவனது புத்திசாலித்தனம் புரிந்தது. அதன் மூலம் அவளது வாழ்க்கையும் தெளிந்தது.

தைரியத்தைத் திரட்டிக் கொண்டு தன்னுடைய மனத்திலிருந்ததை, ஹரியிடம் பகிர்ந்து கொள்ள நினைத்த நேரத்தில், மிதுன் மீண்டும் அவள் வாழ்வில் வந்தான். ஆனால், அவனைக் கண்டவளுக்கு ஆச்சரியமோ, சந்தோஷமோ, கோபமோ ஏற்படவில்லை. மாறாக அனுதினமும் நாம் சந்திக்கும் யாரையோ பார்ப்பது போலத் தோன்றினான்.

கோபத்துடன் தன்னைப் பார்த்தவனை, பரிதாபமாகப் பார்த்தாள்.

"நீ ஒரு இர்ரெஸ்பான்சிபிலிட்டி பெர்சன்! எடுத்த வேலையைக் கடைசிவரை முடிக்கத் தெரியாத முட்டாள்! உன்னை நம்பி என் வாழ்கையை எப்படி உன்னிடம் ஒப்படைக்க முடியும்? ரெண்டு வருஷம் என்னை மறந்திருந்த போது, இப்போது மட்டும் எப்படி நினைவுக்கு வந்தேன்?

இதைக் கூடப் புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு, நான் அறிவிழந்து விடவில்லை. நீயும், நானும் சேர்ந்திருந்தால் அது உடலோடு உடல் சேரும் காமமாக இருந்திருக்கும். இப்போது தான் நான் உண்மையாக காதலிக்கிறேன். ஹரியோடு காலம் முழுதும் சேர்ந்து வாழணும்னு ஆசைப்படுகிறேன்" தீர்க்கமாக சொல்லி முடித்தாள்.

"இதுதான் உன் முடிவா?" என்றவனின் குரல் அவள் தன்னைக் கண்டுக்கொண்டாளே என்ற குன்றலுடன் வந்தது.

"இது முடிவில்ல. என் வாழ்க்கையோட ஆரம்பம்" மனத்திலிருந்த தன்னம்பிக்கையால் குரல் உறுதியாக ஒலித்தது.

பணத்திற்காக இரண்டு வருடம் சித்ரலேகாவை மறந்து, வேறொருத்தி பின்னால் அலைந்ததற்கு இது தேவைதான் என எண்ணிக்கொண்டே, விடுவிடுவென அங்கிருந்து அகன்றான்.

நிம்மதியாக பெருமூச்சொன்றை வெளியிட்டவள், நிமிர்ந்து ஹரி பிரசாத்தைப் பார்த்தாள்.

"சாரி ஹரி! உங்க அனுமதி இல்லாமல்... பேசிட்டேன். உங்க முன்னால், பேசக் கூடாததையும் பேசிட்டேன். என் மனத்தை நேரடியாக உங்களிடம் சொல்லும் தைரியம் எனக்கு இல்லை. இந்தச் சந்தர்பத்தை, எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டேன். உங்களுக்கு ஆட்சேபனை ஏதும்..." 


தடுமாற்றத்துடன் வாக்கியத்தை முடிக்காமல் அவனைப் பார்த்தாள்.

அவளை உறுத்து விழித்த ஹரி, எதுவும் சொல்லாமல் காரை நோக்கிச் சென்றான்.

உள்ளுக்குள் பொங்கிய உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, காரில் வந்து அமர்ந்தாள்.

உணர்ச்சிகளைத் தொலைத்தவளாக அமர்ந்திருந்தவளை திரும்பிப் பார்த்தான்.

"லேகா...!" மிக மென்மையாக அழைத்தான்.

மயிலிறகால் வருடிய வார்த்தைகளால் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

"ஹனி மூனுக்கு எந்த ஊருக்குப் போகலாம்? சாய்ஸ் இஸ் யுவர்ஸ்!" கண்களைச் சிமிட்டிச் சிரித்தபடி சொன்னான்.

அதுவரை தொலைந்திருந்த புன்னகை, அவளது இதழ்களிலும் எட்டிப்பார்த்தது.

வலது கையை அவள் புறமாக நீட்ட, ஆசையுடன் கரத்தை அவன் கையில் ஒப்புக் கொடுத்தாள்.

சந்தோஷத்தில் கண்கள் ஈரமாக தனது தோளில் சாய்ந்தவளை, இடது கையால் சேர்த்தணைத்தான். இருவரின் நேசமும் அவர்களின் நெஞ்சத்திலே... நிறைந்திருந்தது.

No comments:

Post a Comment