Saturday, April 8, 2017

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்! 
ரொம்ப நாள் கழித்து உங்களுடன் கைக்குலுக்க வந்திருக்கிறேன். இன்றுடன் நான் கதை எழுத ஆரம்பித்து முழுதாக பத்து வருடங்கள் முடிந்து, பதினோராவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.

சிறுவயது முதலே எழுதுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். பள்ளி, கல்லூரிகளில் கட்டுரைப் போட்டிகள் ஒன்றுவிடாமல் அனைத்திலும் கலந்து கொள்வேன். வீட்டில், முந்திரிக் கொட்டைன்னு திட்டும் வாங்கியிருக்கேன். 


7ம் வகுப்பு படிக்கும் போது நானும் என் ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து ஆண்டு விழாவிற்காக ஒரு காமெடி நாடகம் எழுதினோம். அந்த நிகழ்வுதான் நம்மாலும் எழுதமுடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. என்னுடைய முதல் கதை என்னுடைய ஏழாம் வகுப்பு இறுதிப் பரிட்சையின் விடுமுறை நாட்களில் ஆரம்பமானது.


கதை எழுதுகிறேன் என்று வீட்டில் சொல்ல பயம். என் தங்கைதான் என்னுடைய முதல் வாசகி. இது வீட்டிற்குத் தெரியவந்தால் துரத்தித் துரத்தி அடிப்பாங்கன்னு மனசுக்குள்ள அப்பப்போ பயம் வந்து தலைகாட்டும். கடைசியில் பயமே வெல்ல, பாதி கதை எழுதிய பின் மொத்தமாகக் கிழித்துப் போட்டோம்.


இன்றைக்கும் அந்தக் கதை மனத்திலேயே இருக்கு. சீக்கிரமே எழுத்து வடிவம் கொடுக்கணும் என்ற எண்ணம் மட்டும் எப்போதும் இருக்கிறது.
அதன்பிறகு வெறும் கட்டுரைகளுடன் என் எழுத்து நின்று போனது.


திருமணம் ஆன புதிதில் மங்கையர் மலரில் வரும் கட்டுரைப் போட்டிக்கெல்லாம் அனுப்பவேண்டும் என்று எழுதினாலும், எதையும் அனுப்பவில்லை. எங்கே நிராகரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சமே காரணம். இப்படி எழுதி எழுதியே எனது டைரிகளின் பக்கங்கள் கரைந்து போயின. 2003ல் டெல்லியிலிருந்து, பிலாய்க்கு என் கணவரது வேலை நிமித்தமாக மாறினோம். 


அப்போதுதான் கம்ப்யூட்டரும் வாங்கினோம். என் கணவரது நச்சரிப்பால் தான் ஆன்லைனிற்கு வந்தேன். அப்படி ஒரு நாள் ஆன்லைனில் துலாவி சில தமிழ் பிளாக்குகளை கண்டறிந்து படிக்க ஆரம்பித்தேன்.


தமிழ்மன்றம்.காம் தான் நான் விரும்பிப் படிப்பேன். அதிலும், அறிவியல் சம்மந்தப்பட்ட விஷயங்களென்றால் எனக்கு அவ்வளவு விருப்பம். அண்டத்தின் அற்புதங்கள் என்ற தொடரை தொடர்ந்து படிப்பேன். வாசலில் போய் அமர்ந்தால் கண்கள் வானத்தையே ஆராயும் அளவுக்கு அதில் மூழ்கிப் போனேன். 


2007ல் மீண்டும் கதை எழுதும் ஆர்வம் ஏற்பட, என் முதல் கதையான காதலடி நீ எனக்கு எழுதினேன். அந்தச் சமயத்தில்தான் அமுதா பிளாக் எனக்கு அறிமுகமானது. 2008ல் முதன்முதலாக அமுதா ப்ளாகில் ரைட்டர் எல்.பிக்கு கமெண்ட் போட ஆரம்பித்தேன். 


எல் பி யோட அறிமுகம் என்னுடைய கதையெழுதும் ஆர்வத்தை அதிகமாக்கியது. அப்போது தான் என் தோழி பாரதியும் எனக்கு பெரும் ஊக்குவிப்பாக இருந்தார்.


அவர்கள் கொடுத்த நம்பிக்கையுடன் 10 எபிசோடு மட்டும் எழுதியிருந்த நின்னைச் சரணடைந்தேன் கதையை, அமுதா பிளாகில் துவங்கினேன்.
அன்று ஆரம்பித்த என்னுடைய பயணம் இன்றும் வெற்றிகரமாக செல்கிறதென்றால், அதற்கு முழுக் காரணம், எல்.பி, அமுதா, மற்றும் அமுதா ஃப்ரெண்ட்ஸில் எனக்குக் கிடைத்த அருமையான வாசக தோழிகளுமே.


தப்புன்னா தப்பு, இது எப்படி இப்படி வரும்? போன எபியில் அவங்களோட கேரக்டர் இப்படி இருந்தது, இந்த எபியில் அதற்கு தலைகீழாக இருக்கு. அப்படி மாற என்ன காரணம்?என்று எழுத்தாளர்களை கேள்விகளால் திணற அடித்துவிடுவர். 


வாசகிகள் மட்டுமல்லாமல், எழுத்தாளர்கள், அமுதவள்ளி கல்யாண சுந்தரம், விஜி, மீனா, கிரித்தி, சுபஸ்ரீ கிருஷ்ணவேணி, விபிஆர், இவங்களும், எழுத்தாளர் என்ற நிலையைத் தாண்டி சகோதரிகளாக கதைக்கு அழகாக விமர்சனமும், அறிவுரைகளும் சொல்வர். 


அவர்கள் அனைவரது அழகான, ஆழமான கேள்விகள் தான் இன்று நல்ல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. என்னுடைய நீண்ட இந்தப் பயணத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த அமுதா பிளாக்கை என்றும் என்னால் மறக்க இயலாது.

தேங்க்யூ அமுதா, மற்றும் அமுதா பிளாக் தோழிகளே!

No comments:

Post a Comment