Wednesday, November 27, 2019

மகிழ்வானதொரு தருணம்

சென்ற வாரத்தில் ஒருநாள் எனது கணவரின் நண்பர் எழுத்தாளர் திரு. மணிவண்ணன் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

பரஸ்பர நலம் விசாரித்தலுக்குப் பிறகு, மேடம்! நாளை பெண்கள் தனிச்சிறையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறோம். மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்க வரமுடியுமா? முடியுமென்றால் நேரில் வந்து அழைக்கிறேன் என்றார்.

எப்போது என்று கேட்டேன். ஞாயிற்றுக் கிழமை என்றார். மன்னிக்கனும் சார். என் அக்கா மகனின் திருமண வரவேற்பிற்காக நாளை சென்னைக் கிளம்புகிறேன். பின்னதொரு தருணத்தில் நிச்சயம் வர முயல்கிறேன் என்றேன். 

உங்கள் சூழ்நிலை புரிகிறது. வந்தால் நன்றாக இருக்கும் என்று சற்று வருத்தத்துடன் தான் போனை வைத்தார். எனக்குமே செல்லமுடியாததை எண்ணிச் சங்கடமாக இருந்தது. அத்துடன் அந்தப் பேச்சு அப்படியே நின்று போனது.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக மாவட்ட மைய நூலக வார விழாவின் பணியில் மூழ்கிப் போனோம். நேற்று நிகழ்ச்சிகள் முடிந்து கிளம்பும் நேரம், சென்ற வாரம் பெண்கள் தனிச் சிறையில் உங்கள் இரண்டு புத்தகங்கள் அங்கிருந்தவர்களால் படிக்கப்பட்டு, திறனாய்வு செய்யப்பட்டதைக் கூறினர்.

மிகவும் அருமையாக இருவர் புத்தகத்தைப் பற்றிக் கூறினர் என்று சொன்னார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. சில சமயங்களில் எழுதுவதை விட்டுவிடலாமா என்று தோன்றும். பலமுறை அப்படி எண்ணும் நேரத்தில் முகநூலிலோ, போனிலோ, மெயிலிலோ, வாட்ஸ் ஆப்பிலோ உங்க புக் மட்டும் தான் நான் வாங்குவேன். உங்க புத்தகத்திற்காக காத்திருக்கிறேன் என்று விமர்சனங்கள் வரும். இப்படிப்பட்ட ஒரு சில வாசகிகளுக்காகவாவது எழுத வேண்டும் என்று எழுதுவேன்.

நடுவில் ஒரு வருடம் எதுவுமே எழுதாமலும் இருந்தேன். மீண்டும் கடந்த மூன்று மாதங்களாகத் தான் எழுதத் துவங்கியிருக்கிறேன். அதற்கெல்லாம் சிகரம் வைத்ததைப் போல பெண்கள் தனிச்சிறையில் படித்துப் பகிர்ந்துகொண்ட விமர்சனத்திற்கும், விமர்சித்தச் சகோதரிகளுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்.

புத்தகத்தை வாங்கி அவர்களுக்குப் பரிசளித்த மணிவண்ணன் சாருக்கும், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மாவட்ட மைய நூலகருக்கும், உடனிருந்து விழாவை நடத்திய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!

ஒரு வருடத்திற்குப் பிறகு, எழுத வந்ததற்குக் காரணம் நம்ம தீபி மேடம் தான். உங்க அருமை உங்களுக்கே தெரியல. உங்க கதைக்காக நிறைய பேர் வெய்ட்டிங்க் என்று, ஓயாம வாட்ஸ் ஆப்லயும், முக நூலிலும் என்னை அன்போடும், மிரட்டியும் எழுத வைத்த பெருமை தீபிகாவையே சாரும்.

பி்ன்குறிப்பு :

நான் என்னைக்கும் விமர்சனத்தை எதிர்பார்த்தது கிடையாது. ஆனால், விமர்சனம் வந்தால் சந்தோஷப்படுவேன். அவ்வளவே.

No comments:

Post a Comment