அத்தியாயம் – 8
இரவெல்லாம் உறக்கம் சரியாக இல்லாததால் காலையில் எழும் போதே தலைவலி மண்டையைப் பிளந்தது அவனுக்கு. முழங்காலில் கைகளை ஊன்றி, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
உள்ளே வந்த சஹானா அவன் அமர்ந்திருந்த நிலையைக் கண்டு, தவித்துப் போனாள். முன்தின இரவின் பாதிப்பால் கேட்கவும் தயக்கமாக இருந்தது.
“என்னங்க! காஃபி வச்சிருக்கேன்” சொல்லிவிட்டு அவனருகில் வைத்தாள்.
ஆனால், அவன் நிமிரவேயில்லை.
அதற்கு மேல் தாள முடியாமல் அவனது தலையை கோதிக் கொடுத்தாள்.
“தலைவலிக்குதா? நான் வேணா மசாஜ் பண்ணிவிடட்டுமா?” தயங்கிக் கொண்டே கேட்டாள்.
அவன் எதுவும் சொல்லாமல் நிமிர்ந்து பார்த்தான்.
“நீங்க படுத்துக்கோங்க” என்றவள், முந்தானையை இழுத்துச் சொருகிக் கொண்டு அவனது நெற்றியில் பிரஷர் பாயிண்ட்டுகளை அழுத்திக் கொடுத்தாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் தலைவலி இருந்த இடம் தெரியாமல் மாயமாகியிருக்க, மெல்ல கண்களைத் திறந்தான் அவன்.
புடவையின் மேலாக அவள் அணிந்திருந்த மாங்கல்யம், புது மெருகு குறையாமல் அவனது கண்களுக்கு எதிரில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.
ஒருமுறை கண்களை அழுந்த மூடித் திறந்தவன், “போதும்” என்று அவளது கைகளை விலக்கிவிட்டு எழுந்து காஃபி கப்பைக் கையிலெடுத்தான்.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அறையின் திரைச்சீலைகளை திறந்து விட்டாள். டேபிள் மீது அவன் குடித்துவிட்டு வைத்திருந்த காலி கப்பை எடுத்தாள்.
அவளது கரத்தைப் பற்றியவன், “உனக்கு ஏதாவது வேணும்னு கேளு சஹானா!” என்றான்.
தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து, “மசாஜ் செய்ததுக்கு கூலியா?” கேட்டுவிட்டுப் புன்னகைத்தாள்.
“ப்ளீஸ் சஹி! உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது” என்றான்.
அவனைக் காதலுடன் பார்த்தவள், “நான் என்ன கேட்கப் போறேன்? இன்னைக்குப் போலவே என்னைக்கும் உங்க காதலும், நீங்களும் இதே போலவே வேணும்” சொல்லிக் கொண்டே அவனது கழுத்தில் கைகளை மாலையாகக் கோர்த்தாள்.
பிரபுவிற்கு நரக வேதனையாக இருந்தது.
‘முன்தினம் இரவில் தனக்கு அவள் மீதிருந்த கோபம் என்ன? இப்போது இப்படி அவளிடம் காதல் கொண்ட கணவனாக உருகிக் கொண்டிருப்பது என்ன?’ மனத்தில் எழும்பிய கேள்விக்கான பதிலை தேடிப் பெறும் அளவிற்கு அவனுக்குப் பொறுமை இல்லை.
“நான் ஆஃபீஸுக்குக் சீக்கிரம் கிளம்பணும்…” மழுப்பலாகச் சொல்லிவிட்டு அவளிடமிருந்து நழுவினான்.
சஹானாவிற்கு, அவனது நிலையில்லா மனத்தை நினைத்து குழப்பம் தான் மிஞ்சியது. ம்ஹும், என்று தலையை அசைத்துக் கொண்டே கீழே சென்றாள்.
தனக்கிருந்த அத்தனை கோபத்தையும், அலுவலக ஊழியர்களிடத்தில் காட்டியவன், கடுகடுத்த முகத்துடன் ஃபைலில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்க, அவனது அனுமதி இல்லாமலேயே கேபினின் கதவு படாரென திறக்கப்பட்டது.
சுளித்த முகத்துடன் நிமிர்ந்தவன், வெள்ளை நிற சஃபாரியில் நின்றிருந்த அவனது தந்தை நிற்பதைக் கண்டான்.
இருந்த கடுப்புடன் ஏளனமான சிரிப்பு ஒன்றும் உதட்டில் ஒட்டிக் கொள்ள, கால் மேல் காலைப் போட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
“வெல்கம் மிஸ்டர்.புருஷோத்தமன்! என்னடா இன்னும் காணோமேன்னு நினைச்சேன் வந்துட்டீங்க. காஃபி சொல்லட்டுமா? வேணாம் வேணாம் ஏற்கெனவே சூடா இருக்கீங்க. இதுல காஃபி வேற எதுக்கு… ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட்டு, கொஞ்சம் கூலாகிக்கோங்க.”
அவனது வார்த்தைகளில் வண்டி வண்டியாக கேலி கொட்டிக் கிடந்தது.
“வாயை மூடுடா. ராஜாத்தி மாதிரி மருமகள் ஒருத்தியை கொண்டு வந்திருக்கோம். ஆனாலும், நீ இன்னும் அந்தக் கஷிச்சடைக் கூடத்தான் குடித்தனம் நடத்திட்டு இருக்க. வெட்கமா இல்ல உனக்கு?” ஆத்திரத்துடன் உறுமினார்.
“வெட்கத்தைப் பத்தி நீங்க பேசாதீங்க. ஆறு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் நீங்களும் இதையே தான் செய்துட்டு இருந்தீங்க. இப்போ நீங்க மாறிட்டதால நல்லவர் ஆகிடுவீங்களா? உங்களையே பார்த்து வளர்ந்தவனாச்சே, நான் எப்படி இருப்பேன்? ஆனா ஒண்ணு. எனக்கு ஜோ மட்டும் தான்… அங்கே எப்படி?” என்று எக்காளமாகச் சிரித்தான்.
புருஷோத்தமனுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போலிருந்தது. பெற்ற மகனிடம் இப்படி வாங்கிக் கட்டிக் கொள்ளும் அளவிற்கு தான் நடந்து கொண்டதை நினைத்து இப்போது அவமானமாக இருந்தது.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்… தன்னைப் பழிவாங்குவதாக நினைத்து இவனுடைய வாழ்க்கையை அல்லவா சூன்யமாக்கிக் கொள்கிறான். இரவு அவன் வரும் வரை விழித்திருந்தவரால் வீட்டில் இதைப் பற்றிப் பேசமுடியவில்லை.
‘அவன் திருமணத்தை வெறுக்கவும், இப்படி முறைதவறி நடக்கவும் தானல்லவா காரணமாகிவிட்டோம்’ என்ற குற்ற உணர்வு அவரை அனுதினமும் கொன்று கொண்டிருக்கிறது.
அவன் சொன்னால் ஏற்றுக்கொள்ளக் கூடியவன் அல்ல. அந்தப் பெண்ணிடமும் இவனை விட்டு விலகி விடு என்று சொல்லியும் அவள், “முடிந்தால் பிரபுவை இங்கே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ஒரே வாக்கியத்தில் அவரது வாயை அடைத்து விட்டாள்.
மிரட்டியும், அடியாளை வைத்து பயமுறுத்தவும் அவர் சற்றும் விரும்பவில்லை.
‘தவறை தங்கள் மீது வைத்துக் கொண்டு, என்ன செய்ய முடியும்? போதாதற்கு தங்களுக்கும் ஒரு மகள் இருக்கிறாள்; அவளுக்கும் வாழ்க்கை இருக்கிறது’ என்ற எண்ணமே ஜோஷிதாவிற்கு எதிராக, அவரை எந்த விபரீத முடிவையும் எடுக்க விடவில்லை.
தழைந்த குரலில், “பிரபு! நான் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளுடா. சஹானா… ” என்று ஆரம்பித்தார்.
ஆத்திரத்துடன் எழுந்தவன் கையிலிருந்த பேனாவைத் தூக்கி சுவற்றில் வீசியெறிந்தான்.
“நிறுத்தறீங்களா. முதல்ல என் சொந்த விஷயத்துல தலையிடுறதை நீங்க நிறுத்துங்க. இதுக்கும் மேல என்னை எதுவும் பேசவைக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்” என்று உறுமினான்.
பெற்ற மகனிடம் இப்படித் தலை குனிந்து நிற்கும் நிலைமையை நினைத்து மனத்திற்குள் புழுங்கினார். அதற்கு மேல் அவருக்கு அங்கே நிற்க முடியாமல் வேகமாக வெளியேறினார்.
பிரபுவிற்கு வெறுப்பாக இருந்தது. கழுத்திலிருந்த டையின் முடிச்சை தளர்த்திக் கொண்டு இருக்கையில் பொத்தென அமர்ந்தான். போன் செய்து தனது அத்தனை நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தவன், தன்னைப் பார்க்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றான்.
தலை விண்விணென்று தெறித்தது அவனுக்கு. இதமாக யாராவது பிடித்து விட்டால் நன்றாக இருக்கும் போல இருந்தது. நெற்றியை மெல்ல நீவிக் கொண்டான்.
அவனது மொபைல் ஒலித்தது.
இதை நிறுத்தித் தொலைக்காமல் விட்டுவிட்டோமே என்ற எரிச்சலுடன் போனை எடுத்தான்.
வீட்டிலிருந்து தான் அழைப்பு. முதலில் இணைப்பைத் துண்டித்துவிட நினைத்தவன் தனது முடிவை மாற்றிக் கொண்டு போனை ஆன் செய்தான்.
“நான்தாங்க. முக்கியமான வேலையா இருக்கீங்களா? ரெண்டு நிமிஷம் தான்…” என்றாள்.
மூச்சை இழுத்துவிட்டவன், “சொல்லு” என்றான்.
“முதல்ல உங்க ஆஃபிஸ் போனுக்குத் தான் ட்ரை பண்ணேன். உங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொன்னீங்களாம். மனசு கேட்கல. காலைலயே தலைவலின்னு சொன்னீங்களா… அதான் உங்க மொபைலுக்கே கூப்பிட்டுட்டேன். இப்போ தலைவலி எப்படி இருக்கு?” என்று கேட்டாள்.
சில நொடிகள் கண்களை மூடியபடி இருந்தவன், “இப்போ பரவாயில்ல…” என்றான்.
“சரிங்க வச்சிடுறேன்” என்று போனை வைத்தாள்.
இருக்கையைப் பின்னால் சாய்த்து நன்றாக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.
மெல்லிய வளைக்கரம் ஒன்று அவனது முகத்தை மயிலிறகைப் போல வருடியது. அதன் மென்மையை அவன் ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்க, இதமான ஒரு உணர்வு அவனது மனத்தை ஆக்கிரமித்தது.
“என்ன பிரபு ஆஃபிஸ் வந்து தூக்கமா?” கேட்டு விட்டுச் சிரித்தவளது குரலைக் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தான்.
ஜோஷிதா அவனுக்கு வெகு அருகாமையில், டேபிள் மீது சாய்ந்து நின்றிருந்தாள்.
“சாரி சார்! மேடம் தான் சொல்லச் சொல்ல…” அவனது செயளாளர் சொல்லிக் கொண்டிருக்க, கை நீட்டி அவனைத் தடுத்தான் பிரபு.
வந்தவன் வெளியே செல்ல, ஜோஷிதாவிடம் திரும்பினான். அவனது பார்வையே என்ன இந்தப் பக்கம் என்று கேள்வி கேட்டது.
“என் ஃப்ரெண்ட் கூட ஷாப்பிங் வந்தேன். உங்க ஆஃபிஸ் இங்கே தானே இருக்கு… அப்படியே பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றாள்.
அவள் சொல்வதிலிருந்தே பொய் என்று உணர்ந்து கொண்டான் அவன்.
அவளைப் பொறுத்தவரை ‘பிரபுவிற்குத் திருமணமானாலும், தங்களுக்கிடையிலான உறவு இன்னும் அப்படியே தான் இருக்கிறது’ என்று மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டியிருந்தது. அதனாலேயே அவனைப் பார்க்க முடியாது என்று சொன்ன போதும், விடாப்பிடியாக அவனைக் காண வந்தாள்.
‘நிச்சயம் அடுத்தவர் முன்பாக பிரபு தன்னை ஒன்றும் சொல்லமாட்டான்’ என்ற நம்பிக்கையுடன் வந்தாள். அதற்கேற்றார் போல அவனும் எதுவும் கூறாமலிருக்க, தனது கூற்று பொய்க்கவில்லை என்ற மமதையுடன் அவனைப் பார்த்தாள்.
“உங்களைப் பார்க்க வந்திருக்கேன்… உட்கார்ன்னு கூடச் சொல்லமாட்டீங்களா?” என்றாள்.
“உட்கார்” என்று இருக்கையைக் காட்டிவிட்டு, மேஜை மீதிருந்த ஃபைலை புரட்டலானான்.
ஏதேதோ பேசிக்கொண்டிருந்தவளுக்கு, தான் சொல்வதற்கெல்லாம், ‘ம்’ மட்டுமே அவன் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று சற்று தாமதமாகத் தான் உரைத்தது அவளுக்கு.
அவனையே இமைக்காமல் பார்த்தவளது மனத்தை இனம் புரியாத ஒரு பயம் ஆட்கொண்டது.
“அப்போ நான் கிளம்பறேன் பிரபு!” என்றாள்.
“சரி” என்று வாயைத் திறந்தான்.
ஒருமுறை நன்றாக அவனை ஊன்றிப் பார்த்தவள், கைப்பையை எடுத்துக் கொண்டு கதவை நோக்கி நடந்தாள்.
“ஜோஷிதா!” என்று அவன் அழைக்க, திரும்பிப் பார்த்தாள்.
“இனி நீ ஆஃபிஸுக்கெல்லாம் வர வேணாம். புரிஞ்சிதா. ஏதாவது தேவைனா போன் பண்ணு. நீ கேட்டது உன் வீடு தேடி வரும்” என்றான்.
சாதாரணமாக சொல்வதைப் போல இருந்தாலும், வார்த்தைகளில் இருந்த அழுத்தை அவள் உணராமல் இல்லை.
அப்போதிருந்த நிலையில் எதையும் அவள் பேசும் நிலையில் இல்லை. வரும் போதிருந்த குதூகலம் அனைத்தையும் தொலைத்தவளாக, மௌனமாக அங்கிருந்து வெளியேறினாள்.
No comments:
Post a Comment