Friday, June 26, 2015

உறவெனும் புதிய வானில்



அத்தியாயம் - 9

ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமாக காலையில் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான் பிரபு.
அத்தை! அவர் கிளம்பறார் சொல்லுங்களேன்…”

மாமியாரின் காதை கடித்தாள் சஹானா.

சொல்றேன்சொல்றேன்…” என்றவர், “பிரபு!” என்று அழைத்தார்.

தான் வெளியே கிளம்பிக் கொண்டிருப்பதை அறிந்தும் தன்னை அழைத்த அன்னையை எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தான்.

என்னம்மா?”

முக்கியமான வேலையா கிளம்பிட்டியா?”

அதான் கூப்பிட்டாச்சே அப்புறம் என்ன?” என்றான்.

அவரருகில் பவ்யமாக நின்றிருந்த மனைவியின் மீது பார்வையைச் செலுத்தினான்

இவள்தான் ஏதாவது கிளப்பி விட்டிருக்கணும்நினைத்துக் கொண்டே அன்னையிடம் திரும்பினான்.

சட்டுன்னு சொல்ல வந்ததை சொல்லுங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு…” 

மதியானம் லஞ்சுக்கு கொஞ்சம் சீக்கிரம் வரப்பாருப்பா.” 

நான் ஆஃபிஸ் வேலையா போறேன்மா! எப்போ முடியும்னு தெரியாது. நான் லஞ்ச் வெளியே பார்த்துக்கறேன்.”

சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

இன்னைக்குச் சண்டே தானேஎல்லோரும் வீட்ல இருக்கோம். வாரத்துல ஒரு நாளாவது எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாமில்ல…”

மெல்லியக் குரலில் சொன்னாள் சஹானா.

ஆஃபிஸ்ல எனக்கு ஆயிரம் வேலையிருக்கும். அங்க போய் சாப்பாட்டை நினைச்சிட்டு உட்கார்ந்திருக்க முடியாது. நீங்க எல்லாம் இருக்கீங்க இல்லசேர்ந்து சாப்பிடுங்க.” 

எரிச்சலும், சலிப்புமாக சொல்லிக் கொண்டே ஷூவை எடுத்தான்.

அவனுக்குப் பின்னாலேயே வந்தவள், “சரி, அப்போ நைட் டின்னர் சேர்ந்து சாப்பிடலாம்என்றாள்.

ஹூலேஸை முடிச்சிட்டவன் நிமிர்ந்து சாவதானமா அவளைப் பார்த்தான்.
உனக்குச் சொன்னா புரியாதா?” 

புரியறா மாதிரி சொன்னா கண்டிப்பா புரிஞ்சிக்குவேன்.”

ஒன்றும் தெரியாதது போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன மருமகளை மெச்சுதலாகப் பார்த்தார் கௌரி.

அன்னையின் சிரிப்பைக் கண்டு கொண்ட பிரபுவிற்கு ஆத்திரமாக வந்தது

மகனின் பார்வையைக் கண்டதும், சிரிப்பை மறைத்துக் கொண்டவர், இனி தான் அங்கு அதிகப்படி. மருமகளே பேசிக்கொள்ளட்டும் என்று அங்கிருந்து சென்றார்.

அன்னையின் தலை மறைந்ததும் மனைவியை முறைத்துக் கொண்டு எழுந்தான்.

உனக்கு ஓவர் குசும்பா தான் இருக்கு. எல்லாத்துக்கும் எங்க அம்மாவை கூட்டுச் சேர்த்துக்கறயா?” என்று கடுகடுத்தான்.

நீங்க அப்படி நினைச்சா நான் என்ன பண்ணட்டும்? நீங்க கேட்ட கேள்விக்குத் தானே நான் பதில் சொன்னேன்.”

அவள் பேசும் போது எழுந்த பாவத்திலிருந்து அவனால் எதையுமே கண்டறிய முடியவில்லை

‘இவள் வேண்டுமென்றே பேசுகிறாளா? இல்லை இவளது பேச்சே இப்படித்தானா’ குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போ நைட் டின்னர் சேர்ந்து சாப்பிடலாம்…”

அவளது வார்த்தைகளால் நினைவுக்கு வந்தவன், “நான் ஆஃபிஸ் வேலையை முடிச்சிகிட்டு அப்படியே வெளியே போய்ட்டு நைட் லேட்டாதான் வருவேன்.”

சொல்லிக் கொண்டே ப்ரீஃப்கேஸுடன் காரை நோக்கி நடந்தான்.

நான் வெயிட் பண்றேன்.”

எனக்காக காத்திருக்கத் தேவையில்ல. நீ சாப்பிடு.”

நான் வெயிட் பண்றேன். நீங்க வந்ததும் தான் சாப்பிடுவேன்…”

ஸ்டியரிங் வீலில் ஒரு கையால் தாளமிட்டவன், “இந்த மாதிரி வேஷம் போடுற வேலையெல்லாம் வேணாம். எங்க வீட்ல இருக்கவங்க வேணா இதுக்காக பரிதாபப்படலாம் நான் படமாட்டேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி எனக்காக சாப்பிடாம தூங்கிட்டேன்னு டிராமா பண்ணா மாதிரி பண்ணாத. உன் வயித்துக்கு நீ தான் சாப்பிடணும். நான் இல்லஎன்று கடுகடுத்தான்.

அவளது முகம் வாடிவிட்டது.

அப்போ நான் சொன்னதை நீங்க நம்பவேயில்லையா?” பரிதாபமாகக் கேட்டாள்.

உஸ் என்று பெருமூச்சு விட்டவன், “நகருஉனக்கு விளக்கம் சொல்ல எனக்கு நேரமில்லஎன்றவன் காரைக் கிளப்ப, சஹானா போர்ட்டிக்கோவின் படியிலேயே அமர்ந்துவிட்டாள்

***********

வேலையை முடித்து விட்டு கைகளை உயர்த்தி தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான். எழுந்து சென்று கையைக் கழுவிக் கொண்டு வந்தவன், பியூன் வாங்கி வைத்துவிட்டுச் சென்றிருந்த உணவு பாக்கெட்டைப் பிடித்தான்.

அதன் வாசமே பசியைத் தூண்டுவதாக இருக்க, இரண்டு கவளங்களை அள்ளி வாயில் வைத்தான்.

அத்தனை நேரம் வேலையில் ஆழ்ந்திருந்த மனம், இப்போது மனைவியின் நினைவில் அலைபாய்ந்தது

கிளம்பும் போது பரிதாபமாக தன்னைப் பார்த்தவளது முகம் மீண்டும் மீண்டும் நினைவில் வர, ‘அளவிற்கதிகமாக அவளைப் பேசிவிட்டோமோ?’ என்று இப்போது நினைத்துக் கொண்டான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, அவளிடம் சுள்ளென்று எரிந்து விழுந்ததிலிருந்தே, அவள் தன்னிடம் அதிகம் நெருங்கி வருவதும் இல்லை, பேசுவதும் இல்லை என்பதை யோசிக்கும் போது தான் உணர்ந்தான்.

அன்னைக்குச் சாப்பிடாமலேயே படுத்துட்டான்னு சொன்னது உண்மையாக இருக்குமோ?’ நிச்சயமாக அவள் பொய் சொல்லவில்லை என்றே தோன்றியது.

எல்லாம் இந்த ஜோஷிதாவால் தான். அன்று அலுவலகத்திற்கு வந்து சென்றதிலிருந்து வீட்டிற்கு வரச்சொல்லி என் உயிரை எடுக்கிறாள். இப்போதெல்லாம் அவள் முன்பு போலில்லை

எதற்கெடுத்தாலும் பிடிவாதம். வா என்றால் வந்தே ஆகவேண்டும் என்று உடும்புப் பிடியாக நிற்கிறாள். கேட்டால், நீதானே சொன்னாய்போன் செய்தால் போதும் நீ கேட்டது வீடு தேடி வரும் என்றுசொல்லிவிட வேண்டியது

இந்த இடைப்பட்ட இரண்டு நாட்களில் குறைந்தது பத்து முறையாவது போன் செய்து விட்டாள். போதாதற்கு இன்று வந்தே தீரவேண்டும். டின்னர் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று காலையிலேயே போன் செய்து கட்டளை வேறு.’

நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது அவனுக்கு.

ஏனோ, சஹானாவிடம் பேச வேண்டும் போலிருக்க, மொபைலை எடுத்தான்.

சரியாக அதேநேரம் அவனது மொபைலும் ஒலித்தது.

ஜோஷிதா

சலிப்புடன் மொபைலையே பார்த்துக் கொண்டிருக்க, அது இடைவிடாமல் ஒலித்து அடங்கியது

அவன் சற்று நிம்மதி பெருமூச்சு விட, மீண்டும் அவளது அழைப்பு. அவனுக்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது

எரிச்சலை அடக்கிக் கொண்டு, “சொல்லு ஜோஷிதா!” என்றான்.

பிரபு! நைட் டின்னருக்கு வரீங்க இல்ல…” கொஞ்சலாகக் கேட்டாள்.

கண்டிப்பா வரேன்என்றான்.

கண்டிப்பா வந்து தான் ஆகணும்வேற வழி இல்லயே. நீங்க வரமாட்டேன்னு சொன்னாலும் உங்களை எப்படி வரவைக்கறதுன்னு எனக்குத் தெரியும்என்று சிரித்தவள், “ஓகே உங்களுக்காக காத்துட்டு இருப்பேன்நாலு மணிக்கெல்லாம் உங்க கார் கேட் வாசல்ல வந்து நிக்கணும்மீண்டும் கொஞ்சிப் பேசியவள், சலுகையாக ஒரு முத்தத்தையும் வழங்கிவிட்டுப் போனை வைத்தாள்.

சட்டென மொபைலை காதிலிருந்து எடுத்தவன், அதையே வெறித்துப் பார்த்தான்

மொபைலை டேபிள் மீது வீசியவனுக்கு, மனம் ஏனோ நிலைகொள்ளாமல் தவித்தது

வருகிறேன் என்ற ஒரு வார்த்தைக்காக, எதிர்பார்ப்புடன் தன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த சஹானாவின் முகம் கண்முன்னே தோன்றியது.

அதுவரை அவனது முகத்திலிருந்த இறுக்கம் மறைந்து, மெல்ல புன்னகை மலர்ந்தது

************

வாசலையும், கடிகாரத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்து அலுத்துவிட்டது சஹானாவிற்கு.

சஹி! அவன் சொன்னா சொன்னதுதான். நீ வா இன்னைக்கு நாம வரைக்கும் சேர்ந்து சாப்பிடலாம்என்றார் கௌரி.

இல்லங்கத்தை! நீங்க சாப்பிடுங்கஎனக்காக அவர் கண்டிப்பா வருவார்என்றாள்.

நம்பிக்கையுடன் அவளைப் பரிதாபமாகப் பார்த்தார். அவரால் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் உண்மை நிலை தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட முள்ளாக உறுத்தியது.

புருஷோத்தமனும் தன்னையே நொந்து கொண்டு நடப்பவற்றை கண்டும் காணாமல் அமர்ந்திருந்தார். அவரது உள்ளம் மட்டும் ஊமையாக புலம்பியது.

சஹானாவின் நடவடிக்கைகளைப் பார்த்த தேவி, “கல்யாணமானா இப்படிலாம் இருக்கணுமா என்ன? நம்மால இதெல்லாம் ஆகாதுப்பாஎனக்குப் பசிக்குதுஎன்று தோளைக் குலுக்கிக் கொண்டு சப்பாத்தியை எடுத்து தட்டில் போட்டுக் கொண்டாள்.

மணி பத்தரை

இரண்டு முறை சொல்லிப் பார்த்த கௌரியும், அறைக்குச் சென்றுவிட்டார்.

கதவை வெளிப்பக்கமாக பூட்டிக்கொண்டு வராண்டாவிலிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தாள். பசியுடன், தூக்கமும் கண்களைச் சுழற்றியது.

காரின் கதவை அறைந்து மூடும் சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தாள்.

வலது கரத்தில் ப்ரீஃப்கேஸும், இடது கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி தன்னைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த கணவனைக் கண்டதும் வேகமாக எழுந்தாள்.

வந்துட்டீங்களா? சாரி கொஞ்சம் கண் அசந்துட்டேன்என்றாள்.

இவ்வளவு பெரிய வீட்டில் உனக்குத் தூங்க இடமா இல்ல. எதுக்கு இந்தக் கொசுக்கடியில உட்கார்ந்திருக்க?” பேசிக்கொண்டே கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

உள்ளே வந்தவள் கதவைப் பூட்டிவிட்டுத் திரும்புவதற்குள் அவன் பாதி படியேறியிருந்தான்

அறைக்குள் நுழைந்தவள், “சாப்பிட வரீங்களா?” என்று கேட்டாள்.

ம்என்று திரும்பியவன், கடிகாரத்தைப் பார்த்தான்.

மணி பதினொன்னு ஆகுது இன்னுமா சாப்பிடாம இருப்பேன்?”

சொல்லிக் கொண்டே சட்டையின் பொத்தான்களை கழற்றினான்.

சஹானாவின் முகம் சட்டென சுருங்கி விட, சற்று தயங்கி நின்றவள் வெளியே செல்லத் திரும்பினாள்.

நீ சாப்டியா சஹி!” 

அதுவரை விட்டேத்தியாகப் பேசிக் கொண்டிருந்தவன், இளகிய குரலில் கேட்டதும், விரைந்து திரும்பினாள்.

அவன் கேட்டதே போதுமென்பதைப் போல முறுவலித்தபடி தலையாட்டினாள்.

அவளருகில் வந்தவன், “நிமிஷத்துக்கு நிமிஷம் முகம் பலவித பாவங்களை காட்டுதே என்ன விஷயம்?” என்றான்.

இமைகள் படபடக்க பார்த்தவள், “ஒண்ணுமில்லஎன்றாள்.

ஒவ்வொரு கேள்விக்கும் இப்படி ஸ்லோமோஷன்ல பதில் சொல்லாதஉனக்குப் பசிக்குதோ இல்லயோ எனக்கு அகோரப் பசி. உனக்காக சாப்பிடாம வேலையை முடிச்சிட்டு வந்திருக்கேன்…” 

தனக்காக வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் அவளது முகம் மலர்ந்து விகசித்தது.

எனக்குத் தெரியும்அத்தைகிட்ட கூட சொன்னேன்…” என்று சிரித்தாள்.

கள்ளமில்லா அவளது சிரிப்பில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான் பிரபு.

ம், அவ்வளவு நம்பிக்கையா?” ஆச்சரியம் போல கேட்டுக் கொண்டே அவளது தோள்களின் மீது கரத்தைப் போட்டு தன்னருகில் இழுத்தான்.

இல்லாமலா உங்களுக்காக காத்துட்டு இருந்தேன்…”

உனக்காகவே வந்திருக்கேனே, ஸ்பெஷலா எதுவும் கிடையாதா?” 

கேட்டுக்கொண்டே அவளது நெற்றியில் முட்டினான்

ஸ்பெஷலா தானேகுல்சா, பட்டர் பீஸ் மசாலா, கடாய் பனீர் செய்திருக்கேன்இதுக்கும் மேல ஏதாவது வேணும்னா சொல்லுங்க நாளைக்குச் செய்து தரேன்…” என்றவளை, முறைத்துப் பார்த்தான்.

அடுத்து நடக்கப் பொவதை எண்ணி அவள் சுதாரித்து விலகும் முன்பாக தோள்களை வளைத்திருந்த கரங்கள் அவளது சிற்றிடைக்கு இடம் பெயர்ந்திருந்தது.

அவளது போலியான கெஞ்சல்கள் அவனுக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுக்க, தனது நிலையிலிருந்து சற்றும் பிறழாமல் அப்போதைய தேவையை நிதானமாக பூர்த்தி செய்து கொண்டான்.


அத்தியாயம் - 10


பிரபு அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த போது, வீணை வாசிக்கும் சப்தம் கேட்டது.

கௌரி மிக நன்றாக வீணை வாசிப்பார். ஏனோ தெரியவில்லை சில வருடங்களாக அவர் அதைத் தொடவேயில்லை. இன்று மீண்டும் அந்த நாதத்தைக் கேட்டதும் பூஜையறையை நோக்கி நடந்தான்.

பூஜையறையை நெருங்க நெருங்க வீணையின் நாதத்துடன், சஹானாவின் குரலும் கேட்டது.

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில்
ஏதும் தரநிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா!

மெய் மறந்து கண்களை மூடி சஹானா பாடிக்கொண்டிருக்க, கண்களில் கண்ணீர் வழிய வீணை வாசித்துக் கொண்டிருந்தார் கௌரி.

பாடி முடித்து கண்களைத் திறந்த சஹானா, மாமியாரைப் பார்த்தாள். அவரது விழிகள் நிறைந்திருந்ததைப் போல மனமும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.

சஹி!” என்று அவளது கன்னத்தை வழித்தவர், “ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. நான் ஒரு நல்ல மருமகளைத் தான் இந்தக் குடும்பத்துக்குக் கூட்டிட்டு வந்திருக்கேன் நினைச்ச என்னோட எண்ணம் பொய்க்கலம்மா! நீ வந்த நேரம் இந்த வீட்டுக்கு ரொம்ப நல்ல நேரம்…” 

மனமுறுகி அவர் சொல்லிக் கொண்டிருக்க, சஹானா சந்தோஷத்துடன் நின்றிருந்தாள்.

ஏன் இதுக்கு முன்னாடி அவ்வளவு மோசமாவா இருந்தது?”

குரல் வந்த திசையை நோக்கிப் பெண்கள் இருவரும் திரும்பினர்.

நீ என்ன இன்னைக்கு ஆஃபீஸ்லயிருந்து சீக்கிரம் வந்துட்ட?”

கௌரி ஆச்சரியத்துடன் கேட்டார்.

வந்ததால தானே உங்க கூட்டணியோட ஒத்துமையை பார்க்க முடிஞ்சது…” என்றவன், “இப்படித்தான் எங்க அம்மாவை கவர் பண்றியா நீ?” என்றான் இடக்காக.

நான் ஒண்ணும் யாரையும் கவர் பண்ணல. எனக்கும், அத்தைக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரி எண்ணம். அதான் இப்படிஎன்றாள்.

ம், பார்த்தீங்களா உங்க மருமகளுக்கு வாயைரொம்ப அமைதியான பொண்ணுன்னு சர்ட்டிஃபிகேட் கொடுத்தீங்க இல்லஎப்படி பேசறா பாருங்க?” என்றான்.

உன்னைச் சமாளிக்கிற அளவுக்குத் திறமை இருக்குப் பார்த்தியாஅடுத்தவங்க பேச்சை காது கொடுத்துக் கேட்காத நீயே அவளுக்குப் பயப்படுறியேபுன்னகைத்துக் கொண்டே சொன்னார் அவனது அன்னை.

சரியா போச்சு. உங்ககிட்ட போய் சொன்னேன் பாருங்கஎன்னைச் சொல்லணும்என்று அலுத்துக் கொண்டான்.

சஹானா இருவரையும் பார்த்துச் சிரிக்க, நிமிர்ந்து அவளைப் பார்த்தவன், “என்ன?” என்றான்.
ம்ஹூம்என்று வேகமாக தலையை ஆட்டினாள்.

எங்க வாயைப் பார்த்தது போதும், எனக்கு ஒரு கப் காஃபியோட மேலே வா…” என்றவன் விடுவிடுவென சென்றான்.

மாமியாரைப் பார்த்துச் சங்கோஜத்துடன் புன்னகைத்தவள், “அத்தை! நான்உங்களுக்கும் காஃபி கொண்டு வரவா?” என்றாள் அவசரமாக.

அதெல்லாம் வேணாம். அவனுக்குக் கொண்டு போ. லேட்டானா அதுக்கும் ஏதாவது சொல்லப் போறான்.”

சரிங்கத்தை!”

உனக்கும் சேர்த்து எடுத்துட்டுப் போ சஹி!”

மீண்டும் குரல் கொடுக்க, “ஓகே அத்தை!” என்று சமையலறையிலிருந்து பதிலளித்தாள்.

கௌரி, தனது மகனின் மனமாற்றத்தை எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்து போனார்.

வாங்க மேடம்! வாங்க

காஃபி ட்ரேயுடன் உள்ளே வந்தவளை ஆர்வமாக வரவேற்றான் பிரபு.

என்ன வரவேற்பெல்லாம் பலமா இருக்கு?” 

பின்ன, சங்கீத கலாநிதி திருமதி.சஹானா பிரபுவை எப்படி வரவேற்கறது?” என்றான் கேலியாக.

சஹானான்னே வரவேற்கலாம். தப்பில்ல…”

தப்புன்னு யார் சொன்னது?

கண்டிப்பா நான் இல்ல…”

அப்போ என்னைத் தானே சொல்ற…”

அதுவும் தப்பில்லையே…” என்றாள்.

எனக்குச் சரிக்குச் சமமா பேசி என் வாயையே அடைக்கிற பாருஇது மட்டும் தான் எனக்கு உன்கிட்ட பிடிக்கலைஅதுக்கு ஏதாவது தண்டனைக் கொடுத்தே ஆகணுமே
தீவிரமாக யோசிப்பதைப் போல பாவனை செய்தான்.

அதெல்லாம் அப்புறம் தண்டனை கொடுக்கலாம். காஃபி ஆறிப் போறதுக்குள்ள குடிச்சிடுங்க... இல்லனா அதைக் குடிக்கறதே தண்டனை தான்.”

காஃபியை உறிஞ்சியபடி, “அம்மா வீணை வாசிச்சி வருஷக் கணக்காகிடுச்சிரொம்ப நாளைக்கப்புறம் அவங்களை அப்படிப் பார்க்கும் போது எனக்கு என் காலேஜ் டேஸ் நினைவு வந்திடுச்சிஎன்றவன் சற்று தீவிரமான பாவனைக்கு மாறினான்.

நீங்க ஏன்னு கேட்கலையா?”

ம்சும்…” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

ஏன் பிரபு அத்தைக்கு ஏதோ ஒரு மனக்கஷ்டம் இருக்குஅப்பப்போ அவங்களோட பேச்சுல அது நல்லாவே தெரியுது. ஆனா, எனக்குத் தான் நேரடியா அவங்களைக் கேட்க சங்கடமா இருக்கு. உங்களுக்கு என்னன்னு ஏதாவது தெரியுமா?”

மாமியாரின் துயரைத் துடைக்கும் வேகம் அவளது கேள்வியில் இருந்தது.

எல்லோருக்குமே ரெண்டு பக்கம் இருக்கும். அது தானா தெரியும் போது தெரியட்டும்நீயா தெரிஞ்சிக்கணும்னு ஆசைப்படாதேஅதோட தாக்கம் உன்னால தாங்க முடியாததா கூட இருக்கலாம்…” என்று பீடிகையுடன் நிறுத்தினான்.

அதைச் சொல்லும் போது அவனது முகத்தில் பலவித பாவங்கள் வந்து போவதை கவனித்த சஹானாவிற்கு, குழப்பங்கள் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே தான் சென்றது

தன்னைச் சுதாரித்துக் கொண்டவன், சஹானாவின் குழப்பம் நிறைந்த முகத்தைப் பார்த்தான்.

ஹே சஹி! என்ன ரொம்ப சீரியஸாகிட்டஅதைவிடு. இப்ப சொல்லு உனக்கு என்னவெல்லாம் தெரியாது?” என்று கேட்டான்.

அவனது முகத்தைப் பார்த்ததும்  தனது மனக்குழப்பத்தைச் சற்ற்று தள்ளிவைத்துவிட்டு அவனது கேள்விக்குப் பதில் கேள்வி கேட்டாள்.

என்ன கேள்வியே புதுசா இருக்கு? என்னவெல்லாம் தெரியும்னு கேட்பாங்கநீங்க எதெல்லாம் தெரியாதுன்னு கேட்கறீங்க? இதுவும் பிரபு ஸ்டைலா!” என்று சிரித்தாள்.

அப்படித்தான் வச்சிக்கயேன். நல்லா சமைக்கத் தெரியும், வீட்டைப் பார்த்துக்கத் தெரியும், எல்லோர்கிட்டயும் அன்பா பழகத் தெரியும்இப்படி நிறைய தெரியும் கூட உனக்குப் பாடத் தெரியும்னு இன்னைக்குத் தான் எனக்குத் தெரிஞ்சது. அதான் கேட்டேன்.”

அது சின்ன வயசுல கத்துகிட்டது. அப்புறம் பாட்டு க்ளாஸ்க்குப் போக முடியல. ஆனா, கோயில் திருவிழா, ஸ்கூல் ஃபங்ஷன்ல பாடணும்னா என்னைத் தான் கூப்பிடுவாங்க…” என்றாள்.

தலையை அசைத்து, கண்கள் மின்னச் சொன்னவளை இரசனையுடன் பார்த்தான்.

ஐயைய்யே! அப்போ வெறும் பக்திப் பாடல் பாடுற ஆளா நீ? என்னை மாதிரி யூத்தை அட்ராக்ட் பண்றா மாதிரி பாடத் தெரியாதா?” என்றான்.

இதுக்கு மேலயும் உங்களை அட்ராக்ட் பண்ணணுமா என்ன?” 

கண்களை விரித்து ஒன்றும் தெரியாததைப் போல கேட்டாள்.

அப்போ ஏற்கெனவே மயங்கிக் கிடக்கறேன்னு சொல்றியா?”

அதை என் வாயால கேட்கறதுல உங்களுக்குச் சந்தோஷமா?”

முடிஞ்சா இப்போ சொல்ல வையேன் பார்ப்போம்…”

அப்படி சொல்ல வச்சிட்டா?”

முதல்ல முடியுதான்னு பார்ப்போம்…”

என்கிட்டயேவா…”

முதல்ல சொல்ல வை அப்புறம் கிட்ட வரேன்…” என்று சொல்லிக் கொண்டே தன்னை நெருங்கியவனை நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டாள்.

சில நொடிகள் கண்களை மூடி நின்றிருந்தவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்

கண்ணழகா.. காலழகா
பொன் அழகா.. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா
இதழும் இணையட்டுமே புதிதாய் படிகள் இல்லை
இமைகள் மூடி அருகினில் வா; இதுபோல் எதுவும் இல்லை
உனக்குள் பார்க்கவா, உள்ளதைக் கேட்கவா
என் உயிர் சேர்ந்திடஓர் வழி சொல்லவா…”

பாவத்துடன் அவள் உருகிப் பாடியதைக் கேட்டவன், அவளது காதலெனும் நதிக்குள்ளே மூழ்கிப் போனான்.

அத்தனை நாட்களும் அதுவா, இதுவா என்று ஊசலாடிக்கொண்டிருந்த அவனது வாழ்க்கைப் படகு, இவள் தான் இனி உனக்கானவள் என்று சொல்லி ஸ்திரமாக நிற்க

உயிரே உயிரே உனை விட எதுவும், உயிரில் பெரிதாய் இல்லையடிகடைசி வரியை அவள் பாடி முடிக்க, வேகமாக அவளை அணைத்துக் கொண்டான்.


தனது காதல் மொத்தத்தையும் குழைத்து அவளது முகமெங்கும் முத்த மழை பொழிந்தான்.
அவனது வேகத்திலும், ஆளுமையில் சற்று மிரண்டு போன சஹானா, “பிரபு!” என்றாள்.

அவளது அழைப்பில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், “பிரபு தான்உன்னோட பிரபுஉனக்கு மட்டுமே சொந்தமான பிரபுஇனி நமக்கு நடுவில் யாருக்குமே இடமில்லை சஹி!” என்றவன் ஆசையும், காதலுமாக அவளை அணைத்துக் கொண்டான்.

No comments:

Post a Comment