Sunday, June 28, 2015

உறவெனும் புதிய வானில்



அத்தியாயம்– 11

நீங்க அத்தானையே நினைச்சிட்டு இருக்காம, உங்க உடம்பைப் பார்த்துக்கோங்க. இதோட என்னைக்கு செக் அப்புக்குப் போகணும்?” தமக்கையிடன் பேசிக்கொண்டே கப்போர்டிலிருந்த வாட்சை எடுத்தாள் சஹானா.

சட்டையை மாட்டிக் கொண்டு கை பட்டனைப் போட்டுக்கொண்டிருந்த பிரபுவிடம் வாட்சைக் கொடுத்தாள்.

“……….”

ஆமாம்ஆஃபிஸுக்குக் கிளம்பிட்டு இருக்கார்.”

“……...”

அவன் சட்டையை இன் பண்ணுவதற்குள் இரண்டு மூன்று டையைக் கொண்டு வந்தவள், சட்டைக்குப் பொறுத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து அவனது தோளில் போட்டு விட்டுச் சகோதரியிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.

அதெல்லாம் அவர் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டார்க்கா!சொல்லிக் கொண்டே அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

அவனுக்குப் பிடித்த மஞ்சள் நிற சேலையில் இறுகப் பின்னிய கூந்தலும், நெருங்கக் கட்டிய முல்லைச் சரத்துடன் அவள் இங்கும் அங்கும் நடக்கும் போது அசையும் குட்டி குடை ஜிமிக்கி என்று எல்லாமுமாகச் சேர்ந்து, அவனது மனத்தை இப்படியும் அப்படியுமாக அசைத்தது.

பேச்சு பேச்சாக இருந்த போதும், தனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்பவள் மீதான ஈர்ப்பு நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டிருந்தது.

பிரீஃப்கேஸை அவனது கரத்தில் கொடுத்துவிட்டுத் திரும்பியவள், திடீரென பயத்தில் கத்தியபடி போனைக் கீழே வீசிவிட்டு புடவையைத் தட்டிவிட்டாள்.

என்ன ஆச்சு சஹானா?” அக்கறையுடன் விசாரித்தான்.

ம், என்னவோபூச்சி போல…” சொல்லிக் கொண்டே நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

குறுஞ்சிரிப்புடன் மீசையைத் தடவியபடி, சோஃபா கைப்பிடியில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.

உஷ்என்றபடி நெற்றியைப் பிடித்துக் கொண்டவள் மூச்சை வெளியிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்

உங்களுக்கு எப்போ எதில விளையாடுறதுன்னு இல்லஇடுப்புல திடீர்ன்னு குறுகுறுன்னவும் பயந்தே போயிட்டேன். தெரியுமா?” என்றபடி குனிந்து போனை எடுத்தாள்.

அப்படியா?” கேட்டுக் கொண்டே அவளை நெருங்கினான்.

அவனது கைகளில் சிக்காமல் நழுவ முயன்றவளது இடுப்பை வளைத்துப் பிடித்தான்.

எப்போ பாரு உங்களுக்கு இதே வேலைதானா?”

எரிச்சலுடன் கேட்பதைப் போலிருந்தாலும், அவளது குரலில் எள்ளளவும் அதற்கான உணர்வுகள் தென்படவில்லை

நீ ஏன் எப்பவும் என்னைத் தப்பாவே நினைக்கிற?” அவனது மீசை அவளது காதில் உரசி குறுகுறுக்கச் செய்தது.

உங்க வேலை எனக்குத் தெரியாதா?”

என்ன தெரியும் உனக்கு? நாம அநாவசியமா பயமுறுத்திட்டோமேன்னு உன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தலாம்னு வந்தேன்…” 

வருவீங்க வருவீங்கஉங்களால காலும் கட்டாகிடுச்சி…”

உங்க அக்காவே கட் பண்ணிட்டு இருப்பாங்க. விவஸ்தை தெரிஞ்சவங்க…”

பேசிக்கொண்டே இருந்தாலும் அவனது கரங்களும், உதடுகளும் தனது பணியினை செவ்வனே செய்தன.

அவனது பிடி லேசாக தளர, அவனைப் பிடித்துக் கட்டில் மீது தள்ளி விட்டாள்.

ஏமாற்றத்தில் சுருங்கிப் போனவனது முகத்தைப் பார்த்துச் சிரிக்க, அவளைப் பொய்யாக முறைத்தான்.

நான் இன்னும் ஐந்து நிமிஷத்துல ஆஃபீஸ் கிளம்பணும்.”

கிளம்புங்கஅதைத் தானே நானும் சொல்லிட்டு இருக்கேன்.” 


இப்போ நான் எழுந்து வந்தேன்னாதெரியும்என்றான் மிரட்டலாக.

ஒண்ணும் பண்ண முடியாதுநான்தான் இப்போ கீழே போயிடுவேனே…” சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தவள், அவனைப் பார்த்து கிண்டலாகச் சிரித்துவிட்டுச் சென்றாள்.

அம்மா! நான் கிளம்பறேன்…” 

அம்மாவிடம் சொல்லிக் கொண்டாலும், அவருக்குப் பின்னால் நின்றிருந்த சஹானாவை முறைத்துக் கொண்டே சொன்னான்.

அவளோ, சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள்.

இருவரது பார்வைக்கும் அர்த்தம் புரியாதவரா கௌரி?

சரிப்பா. பத்திரமா போய்ட்டு வாஎன்றதோடு தனது அறைக்குள் சென்றுவிட்டார்.

விறைப்பாகச் செல்பவனைப் பின் தொடர்ந்தவள், அவன் காரைக் கிளப்பியதும் கையை அசைத்தாள். அவன் திரும்பிப் பார்த்தால் தானேஉர்ரென்ற முகத்துடனேயே புறப்பட்டான்.

சஹானாவிற்கு ஒருமாதிரி ஆகிவிட, அங்கேயே நின்றிருந்தாள்.

போர்ட்டிக்கோவைத் தாண்டிச் சென்றவன் சக்கரம் கீரிச்சிட வண்டியை நிறுத்தி வேகமாகக் கீழே இறங்கினான்.

அவனது செய்கையை பார்த்தவள் என்னவோ என்று நினைத்து பதட்டத்துடன் காரை நோக்கி ஓடினாள்.

என்னங்க ஆச்சு?” 

கீழே எதையோ பார்த்தபடி, “இதென்ன?” என்று கேட்டான்.

எது?” என்றவள் அவனருகில் வந்து குனிந்து பார்க்க, எதிர்பாராத நேரத்தில் அவளது கன்னத்தில் தனது முத்தத்தைப் பதித்தான் பிரபு.

திகைப்புடன் கண்கள் விரிய, அவனைப் பார்த்தாள்.

இப்படிப் பார்க்காதேநான் ஒண்ணோட நிறுத்திடணும்னு நினைக்கிறேன்என்றான் உற்சாகமாக.

இப்படி மற்றவர்கள் நடமாடும் இடத்தில் நடந்து கொண்டானேஎன்ற கோபம் ஒரு பக்கம் இருந்தாலும், அவளது காதல் கொண்ட மனது அதைச் சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் செய்தது.

அவளது முகத்தில் திகைப்பு மறைந்து மெல்ல நாணம் தலைகாட்ட, உதட்டைக் கடித்து தனது புன்னகையை கட்டுப்படுத்தினாள்.

இதுக்கு மேல முடியாது நான் கிளம்பறேன். ஈவ்னிங் ரெடியா இருவெளியே போகலாம்என்றதும், “ம்என்று முறுவலித்தாள்.

பை சஹி!” என்றவன் மனமேயில்லாமல் கிளம்பினான்.

மனம் முழுக்க உற்சாகம் நிரம்பியிருக்க, சிரித்தபடி அலுவலகத்திற்குள் நுழைந்தவனை அனைவருமே வியப்புடன் பார்த்தனர்

சுழற் நாற்காலியை ஒரு சுழற்று சுழற்றி விட்டவன், பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி லேப்டாப்பை திறந்தான். டெஸ்க்டாப் ஸ்கிரீனில் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள் சஹானா.

முதன்முதலில் இப்படியொரு வரன் வந்திருப்பதாகச் சொல்லி அவனது அன்னை கொடுத்த போட்டோதான் அது. திருமணமே வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருந்தவனிடம் வற்புறுத்தித் தான் அந்த போட்டோவைப் பார்க்கச் சொல்லிக் கொடுத்தார் கௌரி.

வேண்டாவெறுப்பாகப் பார்த்தவன் எதுவுமே சொல்லாமல் அவளது போட்டோவுடன் அறைக்குவந்துவிட்டான்

மறுநாள் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தவனிடம் அவனது முடிவைக் கேட்டதுமே,‘எனக்குச் சம்மதம்என்று இரண்டே வார்த்தைகளில் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டான்.

மகனது அந்த வார்த்தைகள் மட்டும் கௌரிக்குப் போதவில்லை போலும்.

பொண்ணை உனக்குப் பிடிச்சிருக்கா பிரபு?

சற்று யோசிப்பதைப் போல அமைதியாக இருந்தவனது மனக்கண்ணில், அவளது சிரித்த முகமே நினைவிற்கு வர, கண்களை அழுந்த மூடித் திறந்தான்.

எப்படியும் கல்யாணப் பேச்சை விடப்போறதில்ல. உங்க இஷ்டப்படியே முடிங்கஎன்று சொல்லிவிட்டான்.

அதற்காகவே காத்திருந்தது போல அடுத்த ஒரே மாதத்தில் அவனது திருமணத்தை முடித்து விட்டுத் தான் ஓய்ந்தார் கௌரி

இப்போது அதெல்லாம் நினைவிற்கு வர தன்னையும் மீறி முறுவலித்துக் கொண்டான்

கற்பாறை என்று தன்னை நினைத்துக் கொண்டிருந்தவனுக்குத் தான் ஒரு இறுகிய மணற்குவியல் தான். அதில் சஹானா என்ற இளம் சாரலின் ஆதிக்கத்தால், தான் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருக்கிறோம் என்று அவன் உணர்ந்து விட்டான்.

வந்த சில நாட்களில் தனது வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டாளே! எப்படி? எனக்கு ஏதாவதென்றால் பதறித் தவிக்கும் அந்தக் குணமா? அனைவரிடமும் ஒன்றுபோல பழகுவம் விதமா? தன்னிடம் காட்டும் பாசாங்கில்லாத காதலாலா 

எது தன்னை அவள்பால் இத்தனை வேகமாக, இத்தனை ஆழமாக ஈர்த்தது

புரியாத புதிர்தான். இத்தனை நாட்கள் தான் வாழ்ந்தது வாழ்க்கையல்ல. இதுதான் வாழ்க்கை என்று வந்த சிலநாட்களிலேயே உணர்த்திவிட்டாளே! பெண்ணே உன்னை என் வாழ்க்கையில் முதலிலேயே சந்திக்காமல் போய்விட்டேனே... சந்தித்திருந்தால்?’
அவன்மேலும் சிந்திக்கும் முன்பாக, கேபினின் கதவு தட்டப்பட்டது.  

கம் இன்என்று குரல் கொடுத்தான்.

சார்! பெரியவர் உங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டு வரச்சொன்னார்என்று ஒரு ஃபைலை டேபிள் மீது விரித்து வைத்தான் அவனது செக்கரட்டரி சுரேஷ்.

மளமளவென படித்து அவன் கையெழுத்திட்டுக் கொண்டிருக்க அவனது பெர்சனல் போன் அலறியது.

போனை எடு என்பதைப் போல சுரேஷிற்குக் கையைக் காட்டியவன், கையெழுத்திடுவதில் கவனமாக இருந்தான்.

ரிசீவரை மூடியபடி, “சார்! ஜோஷிதா மேடம்…” என்றான்.

பிரபுவின் கரம் சற்று நேரம் அசையாமல் நின்றது

நிமிர்ந்து பார்க்காமலேயே, “நான் முக்கியமான மீட்டிங்ல இருக்கேன்னு சொல்லிடுஎன்றான்.
சுரேஷ் சொல்லி முடிப்பதற்குள் ஃபைலை மூடியவன், போனை வைத்துக் கொண்டு அவன் சற்று திணறுவது போலத் தெரிய, ரிசீவரை வாங்கி தொடர்பைத் துண்டித்தான் பிரபு.

ஃபைலை எடுத்துக் கொண்டு நகர்ந்தவனிடம், “சுரேஷ்! ஜோஷிதா ஏதாவது சொல்லியிருந்தா நான் சாரி கேட்டுக்கறேன்என்றான்.

ஐயோ சார்! நீங்க போய் பரவாயில்ல சார்…” என்றவன் அங்கிருந்து அகன்றான்.

அவனுக்கு மனத்திற்குள் சிறிதாக ஒரு மகிழ்ச்சி எழுந்தது. எல்லா விஷயத்திலும் மிகவும் கவனமாக இருக்கும் பிரபுவிற்கு, இப்படி ஒரு காதலியா என்று அலுவலகத்தில் அத்தனைப் பேருக்கும் சிறு மனத்தாங்கல் இருக்கத் தான் செய்தது.

பெரிய இடத்தில் இதெல்லாம் சகஜம் என்று சிலர் சொன்னாலும், பலரால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதிலும் சுரேஷ் அவனோடே இருப்பவன். மற்றவரைவிட பிரபுவைப் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும்.

தந்தையின் மீதிருக்கும் சில கோபதாபங்களுக்காக, தனது வாழ்க்கையை இவன் கெடுத்துக் கொள்கிறானேஎன்று தோன்றியதும் உண்டு. ‘எல்லாம் தெரிந்தவன் இப்படி முட்டாள்தனமாக, தன் வாழ்க்கையை அழித்துக் கொள்வானா?’ 

கௌரியைப் போன்ற ஒரு தாய்க்கு இப்படி ஒரு மகனா? என்ற ஆதங்கம் கூட எழுந்ததுண்டு. எத்தனையோ முறை இந்தக் கேள்வி அவனுக்குள் எழுந்தாலும், அதைப் பிரபுவிடமோ, மற்றவரிடமோ சொன்னதில்லை

வயதில் தன்னைவிடச் சிறியவன் தான். வேலை நேரம் தவிர அலுவலகத்தில் இருப்பவர்கள் அனைவரிடமும், நட்பு பாராட்டுபவன் தான். ஆனாலும், சம்பளம் கொடுக்கும் முதலாளியிடம் ஒரு வரம்பிற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.

ஜோஷிதாவை அவனுக்குமே ஆரம்பத்திலிருந்து தெரியும். அவளது குணமும் தெரியும். அவள் நல்லவள் தான். ஆனால், பிரபுவிற்குத் தன் மீதிருக்கும் ஈடுபாட்டை அனைவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவாள். அவனிடம் அதிக உரிமையுடன் பழகுவாள்.

அப்படிப்பட்டவள் பிரபுவின் திருமணத்திற்குப் பிறகும் சாதாரணமாக இருப்பதை அவனால் நம்பமுடியவில்லை. புயலுக்குப் பின்பு தான் அமைதி வரும். ஆனால், இதை எந்த வகையில் சேர்ப்பது

என்ன யோசித்தும் அவனால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.

No comments:

Post a Comment