அத்தியாயம் - 12
“இந்த டிஷ்ஷை ட்ரை பண்ணிப் பாரேன். உனக்குப் பிடிக்கும்.”
அவன் ஆசையுடன்
ஊட்டிவிட்டதை, நிதானமாக
மென்று விழுங்கினாள்.
“உனக்குப் பிடிச்சிருக்கு இல்ல…” எதிர்பார்ப்புடன் கேட்டவனுக்கு இல்லை என்று சொல்ல முடியவில்லை அவளால்.
“ம், நல்லாயிருக்கு. ஆனா, இதோட போதும்…” என்றவள் தட்டிலிருந்த நாணைக் காலி செய்தாள்.
“ஏன் சஹி டல்லா இருக்க? வீட்டு ஞாபகம் வந்திடுச்சா?” என்றான்
அக்கறையுடன்.
“ம், ஆமாம்…” சமாளிப்பாகச் சிரித்தாள்.
“டோண்ட் வொர்ரி… இன்னும் ஒரு
பத்து நாள் பொறுத்துக்கோ. ஒரு ட்ரிப் தென்காசிக்குப் போய் வரலாம்” என்றான்.
“உண்மையாவா சொல்றீங்க?” கண்கள் மின்ன கேட்டாள்.
“டௌட் வேறயா? உண்மையாத் தான் சொல்றேன்” கண்களைச் சிமிட்டிச் சிரித்தான்.
“நம்பாதீங்க மிஸஸ்.பிரபு! நிறைய விஷயத்துல மிஸ்டர்.
பிரபு சொன்ன வார்த்தையைக் காப்பாத்த மாட்டார்” என்று குரல் வந்த திசையை இருவரும் ஒருசேர திரும்பிப்
பார்த்தனர்.
தங்களைப் பார்த்துப்
புன்னகைத்தபடி நின்றிருந்தவளைக் கண்ட சஹானா, கேள்வியுடன் பிரபுவைப் பார்த்தாள்.
ஜோஷிதாவை அவன்
அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிலும், சஹானாவிடம் இப்படி நேராக வந்து பேசுவாள்’ என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
“என்ன பிரபு! என்னை உங்க வைஃப்க்கு அறிமுகப்படுத்தி வைக்க
மாட்டீங்களா? பாருங்க,
நான் யாருன்னு தெரியாமல் உங்களையே பார்க்கறாங்க” என்றாள்.
அவள் இலகுவாக
சொல்வது போலிருந்தாலும், வார்த்தைகளிலிருந்த துவேஷம் பிரபுவிற்குப் புரியாமல் இல்லை.
“ஷூயூர். உன்னை அறிமுகப்படுத்தாமலா?” என்றவன், “சஹி! இவங்க மிஸ்.ஜோஷிதா.
என் ஃப்ரெண்டோட கம்பெனில வொர்க் பண்றாங்க” சொல்லிவிட்டு ஜோஷிதாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“ஜோஷிதா! இவங்களை உனக்கு ஏற்கெனவே தெரியும் இருந்தாலும், என் சார்பா
உனக்கு அறிமுகப்படுத்தறேன். இவங்க என்னோட பெட்டர் ஹாஃப் மிஸஸ்.சஹானா பிரபு” என்றான்.
அவளது கன்னம்
இறுகியதிலிருந்தே, பற்களை நெறிப்பது புரிய, ‘யாரிடம் உன் வேலையைக் காட்டுகிறாய்? என்னிடமேவா?’ என்பதைப் போல இறுமாப்புடன் அவளது கண்களை
நேராகச் சந்தித்தான்.
அதற்கெல்லாம்
அசந்து விடுபவளா அவள்? ஆனானப்பட்ட பிரபுவை இத்தனை நாட்களாக சமாளித்துக் கொண்டிருக்கிறாளே!
வார்த்தைகளில்
மட்டுமே மறைமுகமாக தெரிந்த வஞ்சகம், இப்போது அவளது பார்வைக்கு இடம் மாறியிருந்தது.
“அது மட்டும் இல்ல மிஸஸ்.சஹானா! நான் பிரபுவுக்கு ரொம்ப… நெருக்கமான… ஃப்ரெண்ட்” என்றவள்,
“இல்ல பிரபு!” என்று அவனைப் பார்த்து
முறுவலித்தாள்.
ஒவ்வொரு வார்த்தையையும்
அழுத்தம் திருத்தமாக, நிறுத்தி நிதானமாகச் சொல்லி பிரபுவின் இதயத் துடிப்பை எகிற வைக்க முயன்று கொண்டிருந்தாள்.
அவனோ, “இதை நான் மறுப்பேன்னு நினைக்கிறியா என்ன?”
என்றவன், “அது சரி. நீ
எங்கே இந்தப் பக்கம்?” என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்டான்.
“ஒரு ‘முக்கியமான’ வேலை இருந்தது. அதான்
இந்தப் பக்கம் வந்தேன்” என்றாள்.
டிஷ்யூவால்
கையைத் துடைத்தவன், “ஓ! அப்போ வந்த வேலை நல்லபடியா முடிஞ்சிடுச்சி போல…” அலட்சியமாகக் கேட்டபடி சோஃபாவில் நன்றாக சாய்ந்து
அமர்ந்தான்.
‘தான் அவனைக்
கதிகலங்க வைக்க நினைத்தால், இவன் தன்னிடமே போட்டு வாங்குகிறானே’
என்று திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.
அணுஅணுவாகத்
தன்னைத் துளைத்த அவனது பார்வையில், உள்ளுக்குள் கதிகலங்கிப் போனாள். இதற்குமேல் தான் இங்கே நின்றால் கழுத்தை
நெறித்தாலும் நெறித்துவிடுவான்’ என்ற முடிவிற்கு வந்திருந்தாள்
ஜோஷிதா.
இருவருக்குள்ளும்
நடந்து கொண்டிருந்த வார்த்தைப் போரின் உண்மையான அர்த்தம் புரியாமல், அவர்களைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்
சஹானா.
திடீரென, “நீங்களும் எங்க கூட ஜாயின் பண்ணிக்கோங்களேன் மிஸ்.ஜோஷிதா” என்றாள்.
சமாளிப்பாகச்
சிரித்தவள், “நீங்க சொன்னதே போதும் மிஸஸ்.பிரபு! எனக்கு நேரமாச்சு கிளம்பறேன்” என்று புன்னகைத்தவள், “வரேன் பிரபு!” என்று விடை பெற, அவன் தலையசைத்து விடை கொடுத்தான்.
அதற்குமேல்
அவனால் நிம்மதியாகச் சாப்பிடக்கூட முடியவில்லை. ஜோஷிதாவின் மீது கொலை வெறியே வந்தது அவனுக்கு.
எத்தனைத் தைரியமாக
தன்னெதிரிலேயே சஹியிடம் பேச வந்தாள். எங்கிருந்து வந்தது இந்தத் தைரியம்?
இருவரில் யாருக்கேனும்
இந்த வாழ்க்கை சலித்துவிட்டாலோ, அல்லது வேறு காரணங்களால் பிரிந்து செல்வது என்று முடிவெடுத்தால், மற்றவர் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் அவர்களது உணர்வை மதித்து நடக்க வேண்டும்
என்பது அவர்களிடையில் எழுதப்படாத ஒப்பந்தம்.
ஆனால், இன்று இவள் நடந்து கொள்வது என்ன?
யோசிக்க யோசிக்க
அவனுக்கு ஆத்திரமும், கோபமும் தான் எஞ்சியது.
சஹானாவைக் காரில்
அமரவைத்து விட்டு எங்கோ சென்றவன் பத்து நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தான். முன்னிலும் முகம் இன்னும் இறுக்கமாக இருக்க,
அவள் புரியாமல் பார்த்தாள்.
ஆர்டர் செய்த
உணவில் பாதிக்கு மேல் அப்படியே வீணாகிவிட, சஹானாவிற்கு மனம் கேட்கவில்லை.
“பாதி சாப்பாடு வீணா போச்சு. யாராவது இல்லாதவங்களுக்குக் கொடுத்திருந்தா
ரெண்டு பேர் வயிராவது நிறைஞ்சிருக்கும்” மனம் தாளாமல் வழியெல்லாம் புலம்பிக் கொண்டே வந்தாள்.
அவன் வாயைத்
திறக்காமல், காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
சிக்னலில் நின்ற
போது காரின் கதவைத் தட்டிய சிறு பெண்ணிற்கு முழுதாக ஐந்நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான். அந்தச் சிறுமி முகம் முழுதும் சிரிப்புடன்
அங்கிருந்து ஓட, சஹானா திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.
“போதுமா… இப்போதாவது
கொஞ்சம் வாயை மூடுறியா?” அவளிடம் சுள்ளென்றான்.
“நான்…” என்று ஆரம்பித்தவள், சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு வெளியே வேடிக்கை
பார்க்கலானாள்.
ஹாலிலேயே அமர்ந்திருந்த
கௌரியும், புருஷோத்தமனும் இறுகிய முகத்துடன் வந்து
கொண்டிருந்த மகனைக் கண்டதும், கலவரத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்
கொண்டனர்.
அங்கிருந்தவர்களை
இலட்சியம் செய்யாமல் வேகமாக தனது அறைக்குச் சென்றான்.
கை நிறைய ஷாப்பிங்
செய்த பொருட்கள் அடங்கிய பைகளை எடுத்து வந்தவள் சென்டர் டேபிள் மீது வைத்தாள்.
“சாப்டீங்களா மாமா?” என்று மாமனாரிடம் விசாரித்தவள், மாமியாரையும்
பார்த்தாள்.
“ஆச்சும்மா. நீங்க சாப்டாச்சா?” என்றார்.
“ஆஹ்… அதெல்லாம் முடிஞ்சுது
மாமா!” என்றவள், “அத்தை! இந்த திங்க்ஸெல்லாம் இங்கேயே
இருக்கட்டும். நான் போய் டிரெஸ் மாத்திகிட்டு வரேன்” என்று மாடிக்கு விரைந்தாள்.
பெரியவர்கள்
இருவரும் பிரச்சனை என்ன என்று புரியாமல் பார்த்துக் கொண்டனர்.
சஹானா அறைக்குள்
நுழைந்த போது, உடையைக் கூட மாற்றாமல் பிரபு கண்களை மூடிப் படுத்திருந்தான். சில நொடிகள் நின்று பார்த்தவள், எதுவுமே பேசாமல் மாற்றுடையுடன் டிரெஸ்சிங் ரூமிற்குச் சென்றாள்.
அவள் உடை மாற்றிக்
கொண்டு வரும் போது, அவன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு படுத்திருந்தான்.
“நான் கொஞ்சம் கீழே போய்ட்டு வரேன். விளக்கை அணைச்சிடட்டுமா?” என்று கேட்டாள்.
கண்களைத் திறக்காமலேயே, ‘ம்’ என்றான்.
சஹானாவிற்கு
ஏமாற்றமாக இருந்தது.
‘எத்தனைச்
சந்தோஷத்துடன் இன்றைய நாள் துவங்கியது. அத்தனையும் வீணாகி விட்டதே!’
மனத்திற்குள் ஏக்கப் பெருமூச்சு எழ, சிரமத்துடன் அதை ஒதுக்கிவிட்டுக்
கீழே சென்றாள்.
“அத்தை! இந்த மூஷிக வாகனன் சிலை உங்களுக்கு” என்று எடுத்துக் கொடுத்தாள்.
இரு பக்கமும்
சிங்க உருவம் பதித்த பிரபையின் நடுவில், ஊஞ்சலில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த தங்க முலாம்
பூசப்பட்ட விநாயகர் சிலை அது.
“ரொம்ப நல்லா இருக்குமா” மனநிறைவுடன் சொன்னார் கௌரி.
“தேங்க்ஸ் அத்தை! என்றவள், “மாமா! நீங்க நிறைய புக்ஸ் படிப்பீங்கன்னு அத்தை சொன்னாங்க. அதான் உங்களுக்காக புக்ஸ் சிலது வாங்கிட்டு வந்திருக்கேன்… பிடிச்சிருக்கான்னு பாருங்க” என்று ஒரு பை நிறைய புத்தகங்களைக் கொடுத்தாள்.
ஆசையுடன் அவற்றைத்
தொட்டுப் பார்த்தவர், “வித்தியாசமான கலெக்ஷன்ஸ்மா…
தேங்க்யூ” என்றார்.
“என்ன மாமா இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லிகிட்டு… நமக்குப் பிடிச்சதை அடுத்தவங்களுக்குச் செய்யறதைவிட, அவங்களுக்கு என்ன பிடிக்குதோ
அதைச் செய்தால் நாம அவங்களுக்குப் பிரியமானவங்களா ஆகிடுவோம்னு எங்க அப்பா சொல்வாங்க. நான் அதைத் தான் மாமா ஃபாலோ பண்ணியிருக்கேன்” என்றாள்.
சிறிதுகூட அலட்டல்
இல்லாமல், இயல்பாக நடந்து கொள்பவளை பெருமையுடன் பார்த்தனர்
இருவரும்.
மீதமிருந்த
ஒரு பேகை எடுத்துக் கொண்டு எழுந்தவள், “தேவி... ரூம்ல இருக்காளா அத்தை!” என்று
கேட்டாள்.
“ஆமாம்மா… நீ ஒரு நாள்
போட்ட போடில் கொஞ்சம் ஆள் மாறித்தான் இருக்கா” என்று சிரித்தார் கௌரி.
புருவத்தை உயர்த்தி
உதட்டைச் சுழித்துச் சிரித்தவள், இது அவளுக்கு வாங்கின குர்த்தி கொடுத்துட்டு வந்திடுறேன்” என்று தேவியின் அறைக்குச் சென்றாள்.
அவளது அறைக்கதவைத்
தட்டிவிட்டு காத்திருந்தவளுக்கு வயிற்றை இறுக்கிப் பிடிப்பது போன்று தோன்ற, வயிற்றைத் தடவிக் கொடுத்தாள்.
கதவைத் திறந்த
தேவி, வாசலில் நின்றிருந்த அண்ணியைப் பார்த்ததும் சற்று திடுக்கிட்டுத் தான் போனாள்.
இருவருக்குள்ளும்
அந்த நிகழ்விற்குப் பிறகு, என்ன என்றால் என்ன என்பதோடு அவர்களது பேச்சு இருந்தது. அதிலும் சஹானாவாக பேசினாலொழிய தேவி அவளிடம்
பேசுவதேயில்லை. அவளும் சில நாட்கள் விட்டுப்பிடிப்போம் என்று
நினைத்திருந்தாள்.
சிநேக
பாவத்துடன் தன்னைக கண்டு புன்னகைத்த அண்ணியை, “உள்ளே வாங்க” என்றழைத்தாள்.
“என் மேல கோபமிருந்தாலும், உள்ளே வாங்கன்னு கூப்பிட்டப் பாரு. இதிலிருந்தே
உன்னோட நல்ல குணம் தெரியுது” என்றாள்.
“சும்மா இந்த முகஸ்துதி பண்ற வேலையெல்லாம் வேணாம். இதுக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன்” என்று முகத்திலடித்ததுப் போல கூறினாள்.
சஹானாவிற்கு
நிற்கச் சற்று சிரமமாக இருக்க, “நான் கொஞ்சம் உட்கார்ந்துக்கட்டுமா?” என்றாள்.
“சாரி. உட்காருங்க” என்றாள்.
வயிற்றைப் பிடித்தபடி
அமர்ந்தவள், “நீ நிச்சயம்
நல்ல பொண்ணு தான்…” என்று சிரித்தாள்.
தேவி எதுவுமே
பேசவில்லை.
“நான் உன்னை ரொம்ப ஹார்ஷா பேசிட்டேன் இல்ல… உன்னை என் தங்கை மாதிரி நினைச்சித் தான் அப்படிப் பேசினேனே தவிர, அண்ணின்னு என்னோட அதிகாரத்தைக் காட்ட இல்ல.
இதுக்காக நான்
உன்கிட்ட சாரியெல்லாம் கேட்க மாட்டேன். அதையெல்லாம் நீ என்கிட்ட எதிர்பார்க்காதே. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் உன்னைப் பேசினது சரி. ஆனா, அளவுக்கதிகமா பேசினது தான் சரி இல்ல.”
சொல்லிவிட்டு
தேவியின் பதிலுக்காக காத்திருந்தாள்.
“நானும் என்னோட லிமிட்டைத் தாண்டி போற ஆள் கிடையாது. என்னோட சுதந்திரத்தை நான் மிஸ் யூஸ் பண்ணமாட்டேன்.
நீங்க எனக்குச் சொன்னது பெரிசா தெரில. ஆனா,
ஓவரா பேசிட்டீங்கன்னு ஃபீல் பண்ணேன்.
இன்னொன்னும்
சொல்லணும்… நம்மளை கவனிக்க, அதட்டிப் பேச ஒருத்தர் இருக்காங்கன்னு நான் உண்மைலயே சந்தோஷப்பட்டுகிட்டேன்.
இந்த வீட்ல யாரும் யாரையும் அதட்டி பேசவே மாட்டாங்க. அதோட உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”
முகத்தை உர்ரென்று
வைத்து கொண்டே பேசி முடித்தவளை, மலர்ந்த முகத்துடன் பார்த்தாள் சஹானா.
“தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமெண்ட்” என்று நகைத்தவள், “இப்போ என்னோட ப்ரெசண்டை வாங்கிக்க” என்று கொண்டு வந்திருந்த குர்த்தியைக் கொடுத்தாள்.
“வாவ்! எனக்குப் பிடிச்ச ஆலிவ் க்ரீன், ப்ளட் ரெட்” என்று சிறு குழந்தையாகி குதித்தவள், தன் மேலேயே
வைத்து கண்ணாடி முன்பாக நின்று அழகு பார்த்தாள்.
“ரொம்ப நல்லா இருக்கு அண்ணி! தேங்க்யூ” என்றாள்.
“இனி நமக்குள்ள தேங்க்ஸ் சொல்லிக்கவே கூடாது. டீல்…” என்று கையை நீட்ட, “டீல்” என்று அவளது கரத்தில் தட்டினாள் தேவி.
“சரி நேரமாகுது தூங்கு. குட் நைட்” என்று
சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியே வர, அவளுக்காகவே காத்திருந்த கௌரி, “சஹி!” என்று அழைத்தார்.
“என்னங்கத்தை!” என்று அருகில் சென்றாள்.
“அது… பிரபு உன்கிட்ட… ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டார்.
“நீங்க நினைக்கிறா மாதிரியெல்லாம் ஒண்ணுமில்ல அத்தை! ஹோட்டல்ல அந்தப் பொண்ணைப் பார்க்கற வரைக்கும்
நல்லாத்தான் இருந்தார். அதுக்கு அப்புறம் தான்… அவருக்கு அவளைப் பார்த்தாலே பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.
ஏன் அப்படி டென்ஷன் ஆனார்னு தெரியலை…” என்றாள்.
அந்தப் பெண்
என்று சொன்னதுமே கௌரிக்கு இதயம் வேகமாகத் துடித்தது.
“எந்தப் பொண்ணு?” பரிதவிப்புடன் கேட்டார்.
“அவள் பேரு… நல்ல பேரு.
ஆனா, எனக்கு நினைவில நிக்கவே இல்ல… ம், ஜோதி… இல்ல ஜோஷி… ஆங் ஜோஷிதா” என்றவள், “என்னவோ தெரியல எனக்கும்
அவளைப் பிடிக்கவேயில்ல” என்றாள்.
கேட்டவுடன்
கௌரிக்கு உள்ளுக்குள் கலங்கியது.
“சரிங்கத்தை நேரமாகுது. நீங்க படுங்க…” சொல்லிவிட்டு பாதி படி ஏறும் போதே வயிற்றில் வலி சுருட்டி இழுத்தது
அவளுக்கு.
சமாளித்துக்
கொண்டு அறைக்கு வந்தவள், தண்ணீரை எடுத்துக் குடித்தாள். வலி சற்று மட்டுபட்டது
போலிருக்க, மெல்லக் கண்களை மூடினாள்.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த
பிரபு ஏதோ சப்தம் கேட்டு கண்களைத் திறக்காமலேயே படுக்கையைத் தட்டிப் பார்த்தான்.
சஹானா அவனது
கைகளில் அகப்படவேயில்லை.
சட்டென உறக்கம்
கலைந்து எழுந்தவன், குளியலறையில் விளக்கெறிவதைக் கண்டான். கூடவே சஹானா முனகும்
சப்தமும் கேட்க, வேகமாக எழுந்து ஓடினான்.
பூட்டாமலிருந்த
குளியலறைக் கதவைத் திறக்க, அவனுக்காகவே காத்திருந்தவள் போல மயங்கிச் சரிந்தாள்.
கீழே விழாமல்
அவளைத் தாங்கிக் கொண்ட பிரபு, “சஹி!” என்று அலறினான்.
No comments:
Post a Comment