அத்தியாயம் - 13
“உன்னுடைய இடம் எதுவோ அதை உணர்ந்து அங்கேயே நில்லு. அதுதான் உனக்கு நல்லது. என்னை வேவு பாக்கறதும், என் மேல அளவுக்கதிகமா உரிமை எடுத்துக்கறதும்
உனக்கு நல்லதுக்கில்ல. ஏன்னா, சஹானாவைத்
தவிர வேற யாருக்கும் என் மேல உரிமை கிடையாது.”
பிரபு பேசிச்
சென்ற வார்த்தைகள் இன்னமும், ஜோஷிதாவைக் குடைந்து கொண்டிருந்தது.
‘என் இடமா?
எது என் இடம்? அந்த இடத்திற்கு நான் ஏன் வந்தேன்?
யாருக்காக வந்தேன்? இவனுக்காகத் தானே! இவன் மீது நான் வைத்த காதலுக்காகத் தானே!
இன்று மனைவி
என்று ஒருத்தி வந்தவுடன் தான், என் தகுதி தெரிகிறதா இவனுக்கு? அப்படியே ஆனாலும்,
என்னைக் கேள்வி கேட்க இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?
அவனை எப்படியாவது
வளைத்துப் போடவேண்டும் என்று தானே அவனது ஆட்டத்திற்கெல்லாம் ஈடுகொடுத்து வந்தேன். கடைசியில் தன்னை இப்படிக் கேவலப்படுத்தி
விட்டானே.
இவன் மட்டும்
மனைவி, குடும்பம் என்று சந்தோஷமாக இருப்பான்.
நான் இவனையே நினைத்து ஏங்கிக் கொண்டிருக்க வேண்டுமா… எந்த ஊர் சட்டம் இது?
சஹானாவாம்… சஹானா. அவளுக்கு
மட்டும் தான் இவன் மீது உரிமை இருக்கிறதாம். என் இடம் எது என்று
அவளிடம் சொன்னால், அவளுடைய உரிமையாளன் என்ன ஆவான்?
கிட்டதட்ட ஒரு
வருடம் அவனுடன் இருந்தும், அவனது காதலைப் பெற முடியவில்லை. ஆனால், வந்த சில நாட்களிலேயே
அவளால் எப்படி முடிந்தது? தன்னைவிட எந்த விதத்தில் அவள் சிறந்தவள்?
தனக்குக் கிடைக்காத
இந்த வசதியான வாழ்க்கையை, சந்தோஷத்தை, என் பிரபுவை இந்தச் சஹானாவிடம் இழக்க மாட்டேன்.
அவள் இருப்பதால் தானே பிரபு என்னைத் திரும்பிப் பார்க்காமல் இருக்கிறான்.
அவளது கழுத்தில்
தொங்கிய மஞ்சள் கயிறு தானே இத்தனைக்கும் காரணம். அது தானே என் பிரபுவை என்னிடமிருந்து பிரித்தது. முடியாது… இனியும் இதை விடமாட்டேன்.
எனக்கும், பிரபுவிற்கும் இடையில் வந்த அந்தச் சஹானாவை,
எங்களது வாழ்க்கையிலிருந்து ஓட ஓட விரட்டுவேன். மீண்டும் பிரபுவே என்னைத் தேடி வரும் வரை ஓயமாட்டேன்.
பொறாமை கொண்ட
பெண் மனம் ஒன்றுமறியாத சஹானாவின் மீது தனது வன்மத்தைக் காட்டியது. மனம் ஆறவில்லை அவளுக்கு. பிரபுவின் பேச்சு அவளைச் சீண்டி விட்டதைப் போலாகிவிட்டது.
ஆனால், இத்தனை யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.
தான் என்னதான்
பேசினாலும், சபதமிட்டாலும்,
பிரபு அத்தனைச் சீக்கிரம் தன்னிடம் திரும்பி வரமாட்டான் என்று அவளுக்குத்
தோன்றவேயில்லை.
இவள் தனது அழகால்
அவனை ஈர்த்திருந்தாலும், அவனுக்கு உரிமையானவள் அவனைக் காதலால் தன் கைக்குள்ளே அவனைப் பொத்தி வைத்திருக்கிறாள்
என்பதை மறந்துவிட்டாள்.
பிரபு, சஹானா இருவரது விஷயத்திலும், தான் நச்சுப் பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்பதை அவள் உணரவேயில்லை.
சூழ்ச்சியும், வஞ்சகமும் என்றும் வாழ்ந்ததில்லை,
அது அவர்களையே வேரோடு சாய்த்துவிடும் என்று எடுத்துச் சொல்லிப் புரியவைக்கவும்
அவளுக்கு யாருமே இல்லை.
அவசரத்தில்
அவள் எடுத்த முடிவு. இன்று அள்ளித் தெளித்தது போல அலங்கோலமாகிக் கிடக்கிறது.
பிரபுவையே தனது
நிலைக்கு முழுக்காரணமாக சொல்லிக் கொள்பவளுக்கு, அவன் கடைசியாக அவளிடம் கொடுத்த முடிவெடுக்கும் உரிமையைப் பற்றி
மறந்தே போனது தான் பரிதாபம்.
அவள் தனது கனவுக்
காதலனை கைசேர வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்க, அவனோ, தனது காதல் மனைவியின்
நிலைக்காக உருகிக் கொண்டிருந்தான்.
***************
“வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருந்த? பிடிக்கலன்னா பிடிக்கலைன்னு சொல்லித் தொலைய
வேண்டியது தானே.”
பிரபு கோபத்துடன்
கத்திக் கொண்டிருக்க, டிரிப்ஸ் நீக்கிய கரத்தை மெல்ல தடவிக் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்
சஹானா.
“இப்போ யார் அவஸ்தைப்படுறது? இவ்ளோ கேட்கறேன் வாயைத் திறக்கறாளா பாரு?”
கையைப் பின்னால்
கட்டிக்கொண்டு கட்டிலின் அருகில் இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டே அவளைத் திட்டிக்
கொண்டிருந்தான்.
“சரி விடுப்பா. இப்போ தான் அவளுக்கு ஒண்ணுமில்லையே. காண்டினெண்டல்,
மெக்ஸிகன் டிஷ்லாம் அவளுக்குச் சேராதுன்னு தெரிஞ்சிகிட்ட இல்ல.
இனிமே அதெல்லாம் வாங்கிக் கொடுக்காதே” என்றார் கௌரி.
“தெரியாததால தானே வாங்கிக் கொடுத்தேன்… தெரிஞ்சே கொடுக்க எனக்கென்ன பைத்தியமா?” என்று மீண்டும் கத்தினான்.
“அவள் முதன்முதல்ல நம்ம வீட்டுக்கு வந்த போதே, எனக்கு மசாலாவெல்லாம்
ரொம்ப சேராது அளவாதான் சாப்பிடுவேன்னு… நீ கவனிக்கலை
போல” முணுமுணுப்பது போல சப்தமாகவே சொன்னார் கௌரி.
அப்படியா? என்பது
போல மனைவியைப் பார்த்தான். அவளும் ஆமாம் என்பதைப் போன்று கண்களாலேயே அவனிடம் ஜாடை
பேசினாள்.
என்ன சொல்வதென்று
தெரியாமல் தலையை தடவிக் கொள்ள, அவனது நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த தேவிக்குச்
சிரிப்பாக வந்தது.
“அம்மா! நாம கிளம்புவோம். உன் பிள்ளை இப்படி உருகி நான் பார்த்ததே
இல்ல. அவ்வளவு ஏன் இப்படில்லாம் பேசுவார்னே எனக்கு இன்னைக்குத்
தான் தெரியும்” என்றாள் இடக்காக.
தங்கையைத் திரும்பிப்
பார்த்தவன், எதுவுமே
பேசாமல் நின்றிருந்தான்.
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு சஹி! பத்து மணிக்கா உனக்கு ஜூஸ் கொடுத்தனுப்பறேன்.”
“சரிங்கத்தை!” மெல்லிய குரலில் சொன்னாள்.
மாமியாரும், நாத்தனாரும் அறையிலிருந்து வெளியேறியதும்,
தன்னைக் குறுக்கிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.
ஏற்கெனவே சோர்வில்
இருந்தவள், முகத்தை
வேறு உம்மென்று வைத்துக் கொண்டு படுத்திருந்தது அவனுக்குக் கவலையாக இருந்தது.
தலையணையில்
முழங்கையை ஊன்றி சாய்ந்து அமர்ந்தவன், “சஹி!” என்று அவளது தோளைத் தொட்டுத் திருப்பினான்.
அதற்காகவே காத்திருந்ததைப்
போல அவனை ஒட்டிப் படுத்து, அவனது நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
அவளது செயலைக்
கண்டு சிரித்துக் கொண்டவன், இரு கைகளாலும் அவளை அணைத்துக் கொண்டான்.
“என் மேல கோபம் இல்லல்ல…?”
“நிறைய இருக்கு. அதனால தான் வாயை மூடிட்டு இருக்கேன். ஏடாகூடமா பேசி என் கடுப்பைக் கிளப்பாதே” என்றான்.
நிமிர்ந்து
அவனது முகத்தைப் பார்த்தவள், “நீங்க அக்கறையா பேசறதைக் கூட அதிகாரமா தான் சொல்வீங்களா?” என்றாள்.
அவளது கண்களை
ஊன்றிப் பார்த்தவன், “உனக்கு ரொம்பக் கொழுப்புடி” என்றான்.
அவள் கண்களைச்
சிமிட்டி, “மிசஸ்.பிரபுவாச்சே அப்படித்தான் இருக்கும்” என்றாள்.
போலியாக அவளை
முறைக்க முயன்றும், அவனால் முடியவில்லை.
“இப்போ மட்டும் வாய் பேசு. தேவைப்படும் போது ஒண்ணும் சொல்லாத…”
என்றான் கடுப்புடன்.
“நான் வேண்டாம்னு சொல்லியிருப்பேன். ஆனா, கொடுத்தது என்
பிரபுவாச்சே!”
அவனுக்கு உச்சிக்
குளிர்ந்துவிட, கணக்கில்லாமல்
அவளது முகமெங்கும் முத்தமிட்டான்.
“என்னை அவ்ளோ லவ் பண்றியா சஹி?”
“இதுக்கு மேல எப்படி ப்ரூவ் பண்ணணும்?”
“அப்போ நான் என்ன சொன்னாலும் செய்வியா?”
“அது நீங்க சொல்ற விஷயத்தைப் பொறுத்தது…”
“திரும்ப இதே டிஷ் வாங்கிக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னா…?”
“நீங்க எனக்காக இதே போலத் தவிக்க தயார்னா… கண்டிப்பா சாப்பிடுவேன்.”
உச்சிக் குளிர்ந்திருந்தவனுக்கு, இப்போது மனமும் சேர்ந்து குளிர்ந்தது.
“அப்போ என்னை விட்டுப் பிரிஞ்சி போன்னு சொன்னா?”
அவன் விளையாட்டாகத்
தான் கேட்டான். அவளோ உணர்ச்சிப்
பிழம்பாக மாறிப் போனாள்.
மெல்ல அவனிடமிருந்து
விலகியவள், அவனது விழிகளை
ஊடுறுவிப் பார்த்தாள்.
அந்தப் பார்வை
அவனை என்னவோ செய்ய, முதன்முறையாக பயம் என்ற உணர்வை, அப்போது தான் அனுபவித்தான்.
முதுகுத் தண்டு சில்லென உறைந்தது போல ஆனது.
“அப்படி ஒரு நினைப்பு உங்க கனவுல கூட வரக்கூடாது. இன்னொரு தடவை இப்படி ஏடாகூடமா பேசுங்க… அப்புறம் இருக்கு சங்கதி” என்றாள்.
அவளது வார்த்தைகளில்
நிதானம். ஆனால், பேசும் போது
கண்களில் தெறித்த கனலில், அவன் ஸ்தம்பித்துப் போனான்.
அத்தனை நேரம்
மலரைப் போன்று மென்மையாகக் காட்சியளித்தவள், திடீரென சுனாமியாக மாறி அவனைச் சுருட்டி வீசினாள்.
சுதாரித்து
எழுந்தவன், “சஹி!
விளையாட்டுக்குத் தானே சொன்னேன்… அதுக்கு எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ற?” என்றான்.
“எது விளையாட்டு? எங்க அத்தை அடிக்கடி சொல்வாங்க ஒரு வார்த்தை வெல்லும்,
ஒரு வார்த்தை கொல்லும்னு… கொட்டின வார்த்தைகளை என்னைக்குமே அள்ள முடியாது. இனி
விளையாட்டுக்குக் கூட அப்படிப் பேசாதீங்க” என்றவள் அவனது கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டாள்.
“நாம என்னைக்கும் இப்படியே இருக்கணும் பிரபு! கல்யாணம் ஆகும் போது நான் உங்களை இந்த அளவுக்கு
விரும்புவேன்னு நினைச்சிக் கூடப் பார்த்ததில்லை. உங்களை ரொம்ப
ரொம்ப விரும்பறேன். என் உயிருக்கும் மேல…”
அவளது கண்ணீர்
அவனது டீ-ஷர்ட்டை நனைக்க, பிரபு
அவளது காதலில் உறைந்து போனான்.
சற்று நேரத்திற்கு
முன்பு என்னவெல்லாம் பேசிவிட்டாள். அவளது கோபத்தில் தெரிந்த காதல், அவனுக்கு
கட்டிக் கரும்பாய் இனித்தது.
தோளில் சாய்ந்து
உறங்கிக் கொண்டிருந்தவளது கன்னத்தை ஆசையுடன் வருடிக் கொடுத்தான்.
‘நான்கூட
உன்னை இவ்வளவு விரும்புவேன்னு நினைக்கவே இல்ல சஹி! எப்படிடீ உன்
அன்பால என்னைக் கட்டிப் போட முடிஞ்சது? இன்னும் கூட புரியாத விஷயம்
தான் எனக்கு’ என்ற பெருமிதத்துடன் அவளைப் பார்த்தான்.
No comments:
Post a Comment