அத்தியாயம் - 14
பைக்கை வாசலில்
நிறுத்திய ஸ்ரீராம் யோசனையுடனேயே வீட்டினுள்ளே நுழைந்தவன், நேராக மாடிப்படியை
நோக்கி நடந்தான்.
“இதோ
ஸ்ரீயே வந்துட்டானே...! என்ற பரிமளம், “ஸ்ரீராம்!” என்று அழைக்க, தனது யோசனையைக்
களைந்து திரும்பிப் பார்த்தான்.
அம்மாவும், அத்தையும் புதிதாக ஒரு பெண்மணியுடன் பேசிக்கொண்டிருப்பதைப்
பார்த்தவன் வரவேற்பாக சிறு புன்னகை ஒன்றை அவரிடம் வீசினான்.
“என்னங்க
அத்தை?” என்றான்.
“வைதேகி! நான் சொன்னேன் இல்ல. என் தம்பி மகன் ஸ்ரீராம்… பெருமைக்குச் சொல்லலை ரொம்பத் தங்கமான பையன். பெரியவங்ககிட்ட ரொம்ப
மரியாதை உள்ளவன். ஒரு ப்ரைவேட் கம்பெனியில ஹெச்.ஆர் மேனேஜரா இருக்கான்.”
‘ஆஹா! இந்த
ஹிட்லர் நம்மள வச்சி காமெடி சீனுக்குப் பிளான் போடுறாங்க போலிருக்கே...
மாட்டிக்காதே ஸ்ரீ ராம் பிச்சிக்கோ...’ என்று நினைத்துக் கொண்டவன், கேள்வியுடன்
அன்னையைப் பார்த்தான்.
“வணக்கம் தம்பி!” வைதேகி சொல்ல, அவனும் பதிலுக்கு வணக்கம்
என்றான்.
“இவங்க
நம்ம பக்கத்துத் தெருவுக்குப் புதுசா குடி வந்து ஒரு மாசம் ஆகுது. கோயில்ல
பார்த்துப் பழக்கம். நாலு பேரைப் பழகிக்கட்டுமேன்னு, நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு
வந்தேன்” என்று தம்பி மகனிடம் விளக்கமாகச் சொன்னார்.
அவனும்
பயபக்தியுடன் கேட்டுக் கொள்வதைப் போல பாவனை செய்து கொண்டிருந்தான்.
அவனது
பார்வையிலிருந்த கிண்டலை உணர்ந்த சுகுணாவிற்கு, சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது. இருந்தும் தன்னை
சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
“அப்போ
நான் ரூமுக்குப் போகட்டுமா அத்தை!” – பவ்யமாக கேட்டான்.
“ஆமா,
ஆஃபிஸ்லயிருந்து வந்த உன்னை நிக்கவச்சி பேசிட்டு இருக்கேன். நீ போப்பா...” – பரிமளம்.
“வரேங்க”
வைதேகியிடம் சொல்லிவிட்டுத் தனது அறைக்குச் சென்றான்.
“சரிங்கக்கா! அப்போ நான் கிளம்பறேன். டியூட்டி முடிஞ்சி
என் பொண்ணு வர்ற நேரமாச்சு” என்றபடி
எழுந்தார் அவர்.
“ஒரு நிமிஷம்” என்ற சுகுணா, பூஜையறையிலிருந்து குங்குமத்தைக் கொண்டு
வந்து கொடுத்தார். “அடுத்த முறை நீங்க வரும் போது உங்க பொண்ணையும்
கூட்டிட்டு வாங்க. புது ஊரா இருந்தாலும், நாம பழகினா தான் அடுத்தவங்களும் மனசு விட்டுப் பழகுவாங்க” என்றார்.
“கட்டாயம் கூட்டிட்டு வரேங்க… நீங்களும் நம்ம வீட்டுக்கு வாங்க” என்ற வரவேற்பையும்
முன் வைத்துவிட்டுக் கிளம்பினார் வைதேகி.
வாசல் வரை சென்று
வழியனுப்பி விட்டு வந்த பரிமளம், “சுகுணா! நீ என்ன சொல்ற…?”
“பேசின வரைக்கும் நல்லவங்களாதான் தெரியுது. எதையும் பார்க்காம சரியா பழகாம எப்படியண்ணி…?” தயங்கினார் சுகுணா.
“ஏன்? நம்ம சஹியை கொடுத்தோமே பார்த்ததும் பிடிச்சிருந்தது கொடுத்துட்டோம்.
இன்னைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சௌக்கியமா தானே இருக்கா.
நாம யாருக்கும் கெடுதல் நினைக்கல… கடவுள் நமக்கு எந்தக் குறையையும் வைக்க மாட்டான்.
அதோட அந்தப்
பொண்ணுக்கு எவ்வளவு நல்ல மனசு இருக்கணும். இத்தனைக்கும் இவள் பெத்தவ கூட கிடையாது. ஆனாலும், அவளோட சுயமரியாதையைக் காப்பாத்த, தன்கூடவே கூட்டிட்டு இப்படி ஊரைவிட்டு வந்து வேலை செய்யறா.
எனக்கு அந்தப்
பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு. நம்ம ஸ்ரீராமுக்குப் பொறுத்தமா இருப்பா. எந்தப் பிரச்சனையும்
வராது. கணேசன் வரட்டும், நானே பேசறேன். உனக்குச் சம்மதமா அதைச் சொல்லு போதும்…” என்றார் பரிமளம்.
“எல்லாம் சரிங்கண்ணி! நம்ம ஸ்ரீராமுக்குப் பிடிக்கணும் இல்ல…”
“நான் அந்தப் பொண்ணைப் பார்த்திருக்கேன். நல்லா ஒட்டும், உசரமுமா
அம்சமா நம்ம ஸ்ரீக்கு ஏத்தா மாதிரி இருப்பா. நம்ம வர்ஷாவும் கோயில்ல
அவளைப் பார்த்திருக்காளே… அவகிட்டயே
கேளேன்.”
“சரி, நீங்க இவ்வளவு சொல்றீங்க… இதுக்கு
மேல நான் என்ன சொல்லப்போறேன்? உங்க பிள்ளைங்களுக்கு எதைச் செய்தா
நல்லா இருப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியாததா.”
பெரிய பனிக்கட்டியைத்
தூக்கி, நாத்தனாரின் தலையில் வைத்த சுகுணாவை,
முகம் விகசிக்க, பெருமையுடன் பார்த்தார் பரிமளம்.
**********
‘வரவர இந்த
ஹிட்லரோட அராஜகம் தாங்கலை. ஆஃபிஸ்லயிருந்து வர்ற மனுஷன் ஆயிரத்தெட்டு பிரச்சனையோட
வருவான்... அதெல்லாம் தெரியுதா? இப்போ என்னைக் கூப்பிட்டு அறிமுகப்படுத்தலைன்னு
யார் அழுதா? ச்சைய்!’ என்று சட்டையைக் கழற்றி வீசியெறிந்தான்.
‘எல்லாம்
தலையெழுத்து காலங்கார்த்தால அந்தச் சிடுமூஞ்சிகிட்டப் போய் என் வாயைக் கொடுத்து...
தேவையா தேவையா… பொண்ணா
அது பிசாசு! இதையெல்லாம் பெத்தாங்களா,
இல்ல ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா? அதை கட்டிக்கப்போற புண்ணியவான் யாரோ?
அவனுக்குக் கோயில் கட்டிக் கும்பிடணும்.’
கண்ணாடியில்
தனது முகத்தை இப்படியும் அப்படியுமாக பார்த்துக் கொண்டவன், “இந்த மூஞ்சிக்கு என்ன
ஓட்டை? இன்னைக்கு ஹீரோ சான்ஸ் கேட்டு ப்ரொட்யூசர் முன்னால போய் நின்னா, கண்ணை மூடிகிட்டு செக்கைத் தூக்கி
நீட்டுவானுங்க... போனாப் போகுது, இப்போயிருக்க ஹீரோக்களுக்கு
வயத்துல புளியைக் கரைக்க வேணாம்னு ஒதுங்கி இருக்கேன்.
அது
தெரியாம அந்தப் பஜாரி, உன் மூஞ்சியை நீ கண்ணாடியில பார்த்ததில்லயான்னு கேட்குது.
அதுகிட்ட வாயைக் கொடுத்துட்டு இன்னைக்கு ஆஃபிஸ்ல எல்லோரையும் காய்ச்சி எடுக்கறா
மாதிரி ஆகிப் போச்சு.
இந்தப் பியூன் என்னடான்னா, இன்னா சார் எப்பவும் சிரிச்சிக்கினே
இருப்ப... இன்னைக்கு இப்படிக் கடுப்படிக்கிறன்னு அவனோட சென்னை பாஷைல நம்மல
கலாய்க்கிறான்.
ஆக
மொத்தத்துல வீட்லயும் சரி; வெளியிலயும் சரி, நம்மளைக் காமெடி பீஸ் ரேஞ்சுக்குத்
தான் வச்சிருக்காங்க. இனி நாமளும் ஹீரோதான்னு இவங்களுக்குப் ப்ரூவ் பண்ணனும்
போலயிருக்கே... என்ன பொழப்போ இது...?’
அலுவலகத்தில்
நடந்த கலாட்டாவை நினைத்து மனத்திற்குள் திட்டிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
விஷயம்
பெரிதாக ஒன்றுமில்லை.
காலையில்
அவனது அலுவலகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ கேம்பிற்கு ஏற்பாடு செய்வதைப்
பற்றி விவாதிக்க, இரண்டு ஜூனியர் டாக்டர்கள் வந்திருந்தனர்.
அந்த
ஜூனியர் டாக்டர்கள் கேண்டீனில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டிருக்க, பக்கத்து
டேபிளில் அமர்ந்திருந்த ஸ்ரீராம் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
காலையில்
அவன் அலுவலகம் கிளம்பும் போது ரேடியோவில் ஒலித்த அந்தப் பாடலின் மெட்டு அவனுக்கு
மிகவும் பிடித்துவிட, அதை அவ்வப்போது முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அவனது கெட்ட
நேரமோ என்னவோ? அவன் பாடிக்கொண்டிருந்த பாட்டு, அந்த ஜுனியர் டாக்டர் ஒருத்தியின்
பெயரில் ஆரம்பிப்பது.
முதலில் அவன்
பாடிய போது அவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவள் சமோசா
வாங்கச் சென்ற போது இவனும் அந்தப் பாடலை முணுமுணுத்தபடி அவள் பின்னால் சென்று வரிசையில்
நின்றான்.
அப்போது தான்
அதைக் கவனித்தவள், இரண்டு முறை இவனைத் திரும்பிப் பார்த்தாள். முதன்முறை
அமைதியாக இருந்தவன் மீண்டும் அவள் திரும்பிப் பார்த்ததும், லேசாக
அவளைப் பார்த்து முறுவலித்தான்.
அவளோ, முகத்தைத் திருப்பிக் கொண்டாள். இவன் புரியாமல் தோளைக் குலுக்கிக் கொண்டு, தனது ஆர்டருடன்
டேபிளுக்கு வந்தான். நடுவில் அவனது நண்பன் வரவும் சற்றுநேரம்
அவனிடம் பேசிக் கொண்டிருந்தவன், விடை பெற்று தனது அலுவலக அறைக்கு
வந்தான்.
அவனைப் பார்க்க
ஜூனியர் டாக்டர்கள் வந்திருப்பதாக பியூன் வந்து தெரிவிக்க, அவர்களை வரச்சொன்னேன்.
வந்தவளுக்கு
இவனைப் பார்த்ததும் லேசான அதிர்ச்சி என்று அவளது முகத்தைப் பார்த்ததுமே புரிந்து கொண்டான்
அவன். ஆனால், காரணம் தான்
புரியவில்லை.
உடன் வந்த மற்றொரு
டாக்டரே பேசிக்கொண்டிருக்க, “இவங்க எதுவும் பேசமாட்டாங்களா? மௌன விரதமா?” எப்போதும் போல இவன் தனது வாய் ஜாலத்தைக் காட்ட அவளுக்கு வந்ததே கோபம்.
ஏன்டா அவள்
பேசமாட்டாளா என்று கேட்டோம் என்று அவன் நினைக்கும் அளவிற்கு, அவனைப் பற்றித் தாறுமாறாகப் பேசிப் பொறிந்து
தள்ளினாள் அவள்.
ஆரம்பத்தில்
புரியாமல் பார்த்தவன், தனது பெயரைச் சொல்லிக் கேலி செய்து பாடியதாக அவள்
கூறியதும் தான் விவரமே புரிந்தது.
“நான் ஏதோ
எதார்த்தமா பாடப் போய் இப்படி ஆகிடுச்சி” என்று அவன் தன்மையாகவே
சொன்னான்.
ஆனால், அவள் விட்டால்தானே… “இப்படி ஒரு கௌரவமான போஸ்ட்ல இருந்துகிட்டு ரோட் சைட் ரோமியோ மாதிரி சீப்பா
பிஹேவ் பண்றியே வெட்கமா இல்ல…” என்றாள்.
“நான் ஏதோ
யதார்த்தமா பாடினேன். உன் பேர் திவ்யான்னு என்னக்கென்ன ஜோசியமா
தெரியும்” என்று அவனும் ஏகவசனத்தில் எகிறினான்.
“எதார்த்தமா
பாடினேன், பதார்த்தமா ஆடினேன்னு கதையா விடுற… உன் மேலிடத்துல சொல்லி உன் வேலைக்கு வேட்டு வைக்கல, என்
பேர் திவ்யா இல்ல…”
“நீயெல்லாம்
டாக்டரா… விளங்கிடும். பொறுமையா இருக்க
வேண்டிய இடத்துல பஜாரி மாதிரி ரியாக்ட் பண்ற…” என்று சீறினான்.
“உன் முகரைக்கு
நீ இவ்வளவு பொறுப்பான பதவியில இருக்கும் போது, நான் டாக்டரா இருந்தா
தப்பா…” அவளும் பதிலுக்கு எகிறினாள்.
உடன் வந்தவள்
என்ன செய்வதென்று தெரியாமல் இருவரையும் மாறி மாறி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இருவருக்குமே
வேறு என்ன சொல்லித் திட்டிக் கொள்வது என்று தெரியவில்லை போலும்… அமைதியாக இருந்தனர். ஆனால், இருவரது பார்வையும் உஷ்ணத்துடன் உரசிக் கொண்டது.
“எழுந்து
வாடி போகலாம்” உடன் வந்தவளை எழுப்பினாள் திவ்யா.
“நாம வந்த
விஷயத்தை இன்னும் அவங்களுக்குக் கிளாரிஃபை பண்ணவேயில்லையே…” என்றாள்.
“ரொம்ப முக்கியம்.
நீயே இருந்து பண்ணிட்டு வா… நான் கிளம்பறேன்”
சொல்லிக் கொண்டே விடுவிடுவென அறையிலிருந்து வெளியேறினாள்.
ஸ்ரீராமின்
பக்கமாகத் திரும்பியவள், “சார்! வெரி சாரி. அவளுக்குக் கொஞ்சம்
முன்கோபம் அதிகம். உங்களை என்னால புரிஞ்சிக்க முடியுது”
என்றாள்.
“இட்ஸ் ஓகே
மேடம். ஒண்ணுமில்லாத விஷயத்தை அவங்க தான் பிரச்சனையாக்கிட்டாங்க”
என்றான்.
“எனக்காக
கொஞ்சம் எக்ஸ்கியூஸ் பண்ணிக்கோங்க. ப்ளீஸ்! ஒரு சின்ன ஆப்ளிகேஷன்.
எங்க ஹாஸ்பிட்டல்ல இருந்து ஏதாவது போன் வந்தா நீங்க யோசிச்சி சொல்றேன்னு
சொல்லுங்க. நாங்க அனுப்பின ஈமெயில் படிச்சாலே உங்களுக்குப் பாதி
புரிஞ்சிடும். மீதியை நான் மதியம் என் டியூட்டி முடிஞ்சதும் வந்து
எக்ஸ்ப்ளெயின் பண்றேன்” என்றாள்.
அவள் அத்தனைத்
தூரம் தன்மையாகக் கேட்கவும், அவனால் மறுக்க முடியவில்லை.
“ஓகே மேடம்!
உங்களுக்காகச் சம்மதிக்கிறேன்” என்று அவளை அனுப்பி
வைத்தான்.
ஒரு பாட்டில்
தண்ணீரை ஒன்றாகக் குடித்தும், அவனது ஆத்திரம் மட்டும் அடங்கவேயில்லை. அவள் பேசிச் சென்றதே மீண்டும் மீண்டும் காதுகளில்
ஒலித்தது.
நடந்ததை நினைத்தபடி
பால்கனியில் வந்து நின்றான்.
குளுகுளுவென்ற பொதிகைத் தென்றல் அவனது உடலைத் தழுவிச் சென்றது.
கேண்டீனின்
உள்ளே செல்லும் போது அந்தத் திவ்யா, தோழியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த காட்சி
கண்முன்னே நிழலாடியது.
‘சிரிச்சா
அந்தச் சிடுமூஞ்சியும் நல்லாத்தான் இருக்கு’ என்று நினைத்துக்
கொண்டான்.
**************
தந்தையுடன்
வாக்கிங் சென்றிருந்த வர்ஷாவும் வந்துவிட, வைதேகியைப் பற்றி கணேசனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பரிமளம்.
“அப்பன் தான் சரியில்ல. அதான் அம்மாவை கூட்டிகிட்டு தனியா வந்துட்டா… நீ என்ன சொல்ற கணேசா? நம்ம
குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருப்பா” ஒரு வழியாக சொல்லி முடித்தார் பரிமளம்.
“நீ சொல்றன்னா நல்லா விசாரிச்சித் தான் இருப்ப. நம்மள பொறுத்தவரைக்கும் பிரச்சனை இல்ல.
ஆனாலும், சஹியோட மாமியார் வீட்லயும் கலந்து பேசணும் இல்ல.”
“அவங்ககிட்டயும் கண்டிப்பா சொல்லித் தான் ஆகணும். முதல்ல நம்ம பக்கம் பேசிட்டா, அவங்ககிட்ட
நாளைக்கே பேசிடலாம்…” – சுகுணா.
“அதுவும் சரிதான்…” பரிமளம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஸ்ரீராம் வேகமாக படியிறங்கி வந்தான்.
“அம்மா! சஹி வராம்மா…” சொல்லிக் கொண்டே
அவன் வாசலுக்கு ஓட, அனைவரும் அவன் சொல்வதை நம்பாமல் பார்த்தனர்.
வர்ஷா மட்டும்
எழுந்து வெளியே சென்றவள், “அம்மா! உண்மையாவே சஹிதாம்மா வந்திருக்கா…” என்று குரல் கொடுக்க, பெரியவர்கள்
மூவரும் அவசரமாக வாசலுக்கு விரைந்தனர்.
“அண்ணா! எப்படியிருக்கீங்க?”
தன்னை எதிர்கொண்டு
வந்த அண்ணனை பாசத்துடன் விசாரித்தாள் சஹானா.
“சஹீ! நல்லாயிருக்கேன்டா. நீ எப்படியிருக்க?” என்று தங்கையை பரிவுடன் அணைத்துக் கொண்டவன், “வாங்க மாப்பிள்ளை!” என்று பிரபுவை வரவேற்றான்.
சற்றுநேரம்
அங்கே பாசமழை பொழிய, சிரிப்புடன் அங்கே நடப்பதைக் கவனித்துக் கொண்டு நின்றிருந்தான்
பிரபு.
தேவியோ, அனைத்தையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது மனத்தில் மெல்லிய ஏக்கம் ஒன்று பரவ திரும்பி தனது அண்ணனைப் பார்த்தாள்.
“வா தேவி! உள்ளே போகலாம்” வர்ஷா அழைக்க, சுதாரித்துக் கொண்டு திரும்பியவள் அவளைப்
பார்த்து முறுவலித்தாள்.
வீட்டுப் பெரியவர்களை
விசாரித்துவிட்டு, “என்னடா சர்ப்ரைஸ் கொடுக்க, சொல்லாமலேயே வந்துட்டியா?” – கணேசன்.
“சர்ப்ரைஸ்சா? ரெண்டு நாளா எங்க அப்பா அம்மாவைப் பார்க்கணும்னு அவள் அழுத
அழுகைக்கும்… அதைச் சமாளிக்க நான் பட்ட
அவஸ்தையும் எனக்குத் தானே மாமா தெரியும். போதும்டா சாமி” என்றான் பிரபு.
“அதெல்லாம்
ஒண்ணுமில்லப்பா. சும்மா உங்களைப் பார்க்கணும் போல இருந்தது.
சொன்னேன், உடனே கூட்டிட்டு வந்துட்டார்” சொல்லிக்
கொண்டே கணவனைப் பார்த்தாள்.
அவன் ஸ்ரீராமுடன்
ஏதோ பேசிக் கொண்டே மனைவியைப் பார்வையால் வருடிக் கொண்டிருந்தான்.
“இந்த வீட்டு
மாப்பிள்ளைங்களுக்கெல்லாம் குதிரைக்குப் போடுறா மாதிரி கடிவாளம் போடணும் போல…
முதல்ல வந்த மாப்பிள்ளைதான் பொண்டாட்டி பின்னாடியே சுத்தறவன்னு பார்த்தா,
சின்னவரும் அப்படியே தானே இருக்கார்… பேச்சு மட்டும் தான் நம்மகிட்ட
பார்வையெல்லாம் பொண்டாட்டிகிட்ட தான். முடியல…” என்று சலித்துக் கொண்டான்.
“அட!
ஒரு நாளைக்கே இப்படியா? நாங்க ஒன்றரை மாசமா அனுபவிக்கிறோமே
எங்களுக்கு எப்படி இருக்கும்?” தேவியும் ஜோதியில் கலந்து கொள்ள,
அந்த இடமே களை கட்ட ஆரம்பித்தது.
“சுகுணா!
நைட்டு தூங்கறதுக்கு முன்னாடி எல்லோரையும் உட்காரவச்சிச் சுத்திப் போடணும்…
மறந்திடாதே” என்றார் பரிமளம் பூரிப்புடன்.
No comments:
Post a Comment