அத்தியாயம் - 28
வழக்கமான புன்னகையைத் தொலைத்தவளாக,
சப்பாத்தியைத் திரட்டிக் கொண்டிருந்த மருமகளைப் பார்த்தார் கௌரி.
எப்போதும் ஏதாவது பேசிக்
கொண்டும், தங்களது வீட்டில் நடந்தது என்று எதையாவது பேசிச் சிரிப்பவள், இன்று பேச்சையே
மறந்தது போல மௌனமாக இருப்பது, அவருக்குப் பயத்தைக் கொடுத்தது.
ஜோஷிதா அவளிடம் என்ன சொன்னாள்
என்று அவருக்குத் தெரியாத போதும், சஹானாவின் அமைதியே அவருக்கு விஷயத்தை விளங்கிக் கொள்ள
போதுமானதாக இருந்தது.
காரில் வீட்டிற்குத் திரும்பி
வரும்போதே ஏதேனும் கேட்பாளோ என்று அவரது இதயம் தடதடவென அடித்துக் கொண்டது. ஆனால், ஒரு
வார்த்தைக்கூட அவரிடம் பிரபுவைப் பற்றி அவள் எதுவும் பேசவில்லை.
“சஹி! நான் ஏதாவது செய்யட்டுமாம்மா?”
என்று அவளிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்றே கேட்டார்.
“வேணாம் அத்தை! நான் முடிச்சிட்டேன்”
அவரைப் பார்க்காமலேயே சொன்னாள்.
கௌரிக்கு அதற்கு மேல் என்ன
பேசுவது என்று பிடிபடாத காரணத்தால், ஹாலில் வந்து அமர்ந்தார்.
சமைத்த உணவை ஹாட்பேக்கில்
வைத்து டைனிங் டேபிளில் அவள் அடுக்கிக் கொண்டிருக்க, “அண்ணி! போன்ல அண்ணா…!” என்றபடி
கார்ட்லெஸைக் கொண்டு வந்து கொடுத்தாள் தேவி.
“தேங்க்ஸ்” என்று வாங்கிக்
கொண்டவள், “சொல்லுங்க…” என்றாள்.
“சின்னு! பிஸியா இருக்கியா?”
என்று உருகினான் அவன்.
“டின்னர் ரெடி பண்ணிட்டு
இருந்தேன்…”
“நீ சாப்பிட்டுடா… நான்
வர லேட் ஆகும். கொஞ்சம் வேலையிருக்கு. அதைச் சொல்லத்தான் போன் பண்ணேன்” என்றான்.
“சரி, வேலையை முடிச்சிட்டு
வாங்க. நான் வெயிட் பண்றேன்” என்றவள் மேற்கொண்டு அவன் பேசும் முன்பாக போனை அணைத்தாள்.
போனை அதனிடத்தில் வைத்துவிட்டு
மாமியாரிடம் வந்தவள், “அத்தை! டின்னர் ரெடி பண்ணிட்டேன். நீங்க எல்லோரும் சாப்பிடுங்க.
எனக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கு, நான் ரெஸ்ட் எடுத்துக்கறேன். அவர் லேட்டாதான் வருவாராம்.
வந்ததும் நான் சேர்ந்து சாப்பிட்டுக்கறேன்” என்றாள்.
“சரிம்மா!” என்றவருக்கு,
சோர்ந்த முகத்துடன் செல்பவளைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது.
‘தான் சுயநலமாக எடுத்த முடிவால்,
இப்போது இந்த அப்பாவிப் பெண்ணின் உள்ளமல்லவா காயப்படப் போகிறது’ நினைக்கும் போதே நெஞ்சம்
தடதடத்தது.
‘கடவுளே! நீதான் எந்தப்
பிரச்சனையும் இல்லாமல்… என் குடும்பத்தைக் காப்பாத்தணும். என் குழந்தைகளோட வாழ்க்கை
நிம்மதியா இருக்கணும்னு தானே ஆசைப்பட்டேன். தயவு செய்து அவங்களை நிம்மதியா வாழவைப்பா!”
என்று அவரால் வேண்டிக் கொள்ள மட்டுமே முடிந்தது.
பயண அலுப்பு, வேலை என்று
அவளது உடல் களைத்திருந்த போதும், ஜோஷிதாவின் பேச்சால் மனம் வெகுவாக சோர்ந்து போயிருந்தது.
ஜோஷிதா பேசிச் சென்ற வார்த்தைகளால், அவளது மனம் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது.
‘என்ன அர்த்தத்தில் அவள்
இப்படியெல்லாம் பேசுகிறாள். மனத்தையும் கடந்தது எங்களுடைய பந்தம் என்கிறாளா?’ அதை நினைக்கும்
போதே தொண்டைக் குழி அடைத்தது அவளுக்கு.
‘அவள் சொல்வதை எப்படி நம்பமுடியும்?
பிரபுவின் மீதிருக்கும் காதலால் அப்படிப் பேசுகிறாளா? அவன் மீது காதல் என்றாலும், அதற்காக
இத்தனைத் தூரம் இறங்கி வந்து பேசுவாளா?’
இந்தக் குழப்பத்திற்கெல்லாம்
விளக்கம் தரக்கூடியவன், தரவேண்டியவன் பிரபு மட்டுமே. அவனிடமே கேட்டுக் கொள்வோம் என்று
அவனுக்காக காத்திருந்தாள்.
தண்ணீர் கொட்டும் சப்தம்
கேட்டு, உறக்கம் கலைந்து கண்விழித்தாள் சஹானா. விடிவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்ததைப்
பார்த்ததும் எழுந்து அமர்ந்தாள்.
குளியலறை திறக்கும் ஓசை
கேட்டுத் திரும்பியவள், வெளியே வந்த பிரபுவைப் பார்த்தாள்.
“ஹாய் பொண்டாட்டி! எழுந்துட்டியா?
நான் வரும்போது நல்லா தூங்கிட்டு இருந்த, அதான் குளிச்சிட்டு வந்து எழுப்பலாம்னு விட்டுட்டேன்…”
சொல்லிக் கொண்டே குர்தாவை அணிந்து கொண்டு அவளருகில் வந்தான்.
எழுந்து நின்று முந்தானையை
இடுப்பில் சொறுகியவள், கூந்தலை கொண்டையிட்டபடி, அவனைத் தாண்டிச் செல்ல முயன்றாள்.
ஒரு கரத்தால் அவளது இடையை
வளைத்துப் பிடித்தவன், “என்ன சின்னு! ஒரு மாதிரி இருக்க? உடம்பு சரியில்லையா?” அக்கறையுடன்
கேட்டுக்கொண்டே அவளது நெற்றியில் கைவைத்துப் பார்த்தான்.
அவனது கரத்தை மெல்ல விலக்கியவள்,
“நல்லாத்தான் இருக்கேன். வாங்க சாப்பிடலாம்…” என்றபடி இடையில் பதிந்திருந்த அவனது கரத்தையும்
விலக்கிவிட்டுச் சென்றாள்.
பிரபு புரியாமல் பார்த்தான்.
‘ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்?’ குழப்பத்தோடே அவள் பின்னால் சென்றான்.
சாப்பிடும் போதும் அவன்
அவளுக்குப் பரிமாற முயல, “வேண்டாம்… நேரமாயிடுச்சி சாப்பிட முடியலை” என்று இரண்டு சப்பாத்தியுடன்
எழுந்து கொண்டாள்.
“சஹி! என்ன ஆச்சு உனக்கு?
உடம்பை ஏதாவது செய்யுதா? இல்ல… யாராவது ஏதாவது சொன்னாங்களா? ஏன் இப்படி இருக்க?” கவலையுடன்
கேட்டான்.
நிமிர்ந்து அவனது முகத்தைப்
பார்த்தாள். ‘என் மேல் இத்தனைக் காதலுடன் இருப்பவனிடம், எப்படி அந்தக் கேள்வியைக் கேட்பதுதென்று
தவிப்பாக இருந்தது அவளுக்கு.
அவளது கரத்தை அழுந்தப் பற்றியவன்,
“சஹி! உன் மனசை எதுவோ அரிச்சிட்டு இருக்கு. நீ என்கிட்ட ஏதாவது கேட்கணும்னு நினைக்கிறியா?”
எனக் கேட்டான்.
அவனது பேச்சிலும், பார்வையிலும்,
துடிப்பிலும் நிச்சயம் போலித்தனம் இல்லை. அவளது மனம் பரிதவித்தது.
“ம்… பேசணும். உங்ககிட்டத்தான்
அதைக் கேட்க முடியும்” கம்மிய குரலில் சொல்லிவிட்டு, சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்துக்
கொண்டு எழுந்தாள்.
ஏதோ விபரீதம் என்று புரிந்து
போன பிரபுவிற்கு, உணவு தொண்டையில் இறங்கவில்லை. தட்டிலிருந்த உணவைக் காலி செய்துவிட்டு,
எழுந்து கையைக் கழுவிக் கொண்டு அறைக்குச் சென்றான்.
பாத்திரங்களை ஒதுங்க வைத்துவிட்டு
பூஜையறைக்குச் சென்றாள் அவள்.
‘கடவுளே! இப்படி ஒரு சிக்கலான
நிலை எனக்கு வரும்னு, கனவுல கூட நினைக்கல. இன்னைக்கு ஜோஷிதா பேசினதை இவர்கிட்ட சொல்லப்
போறேன்.
நான் கேட்கப் போற எல்லா
கேள்விகளுக்கும், அவர் இல்லைன்னு பதில் சொல்லணும். நாங்க என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்.
எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் ஒரு புது உறவு வருதுன்னா, அது எங்க இரத்த பந்தமாக மட்டும்தான்
இருக்கணும்.’
இரு கரங்களையும் கூப்பி
வேண்டியவளுக்கு, மனம் மட்டும் அமைதி அடையவில்லை. விழிகளில் திரண்ட நீர்த்துளியைக் கட்டுப்படுத்திக்
கொண்டு, இதுவரை இல்லாத தயக்கத்துடனேயே அறைக்குள் சென்றாள்.
ஒரு கரத்தைப் பின்னால் வைத்தபடி,
மறுகரத்தால் தலையைக் கோதிக் கொண்டே நடந்துகொண்டிருந்த பிரபு, கதவைத் திறக்கும் சப்தம்
கேட்டு நின்றான்.
கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை
கட்டிலருகே வைத்துவிட்டு, அவனெதிரில் வந்து நின்றாள்.
இருவரது பார்வையும் தழுவிக்
கொள்ள இருவருக்குமே, ‘இக்கட்டான இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள, தேவையான மனோதிடத்தைக்
கொடு கடவுளே!’ என்ற வேண்டுதலுடன் நின்றிருந்தனர்.
“சஹி!” என்று அவன் அழைத்த
மறுநொடி, அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
அவளது உடல் நடுங்கியது.
மாலையிலிருந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவளால், இப்போது அது முடியாமல் போனது.
ஏதோ ஒரு பயம் அவளை ஆக்கிரமித்துக் கொண்டது.
“சஹானா! என்ன ஆச்சு உனக்கு?
நான் கேட்டுட்டே இருக்கேன் நீ எதுவுமே சொல்ல மாட்டேன்ற? என்னதான்டி ஆச்சு உனக்கு?”
அவனது மனத்தைக் குடைந்து கொண்டிருந்த அவளைப் பற்றிய கவலை கோபமாக
வெளிப்பட்டது.
அவன் அத்தனைத் தூரம் கேட்டும்,
அவனது நெஞ்சில் முகத்தைப் புதைத்தபடி அவனை மேலும் இறுக அணைத்துக் கொண்டாள்.
“மை காட்! சஹானா! இப்போ
சொல்லப் போறியா இல்லயா?” என்று சீறினான்.
எச்சிலைக் கூட்டி விழுங்கியவள்,
“நான் கேட்கறதுக்கு நீங்க மறைக்காம உண்மையைச் சொல்லணும்…” என்றாள்.
“உன்கிட்ட நான் என்னடி பொய்
சொல்லப் போறேன். நீ முதல்ல விஷயத்தைச் சொல்லு.”
அவனது டி-ஷர்ட்டின் காலரை
இறுக்கிப் பிடித்தவள், “இன்னைக்கு நான் ஜோஷிதாவைப் பார்த்தேன்… பேசினேன்” என்றாள்.
ஜோஷிதாவின் பெயரைக் கேட்டதுமே,
அவனது உடல் இறுகுவதை உணர்ந்தவள், மெல்ல தனது பிடியைத் தளர்த்தினாள்.
அவளிடமிருந்து விலகிச் சென்றவன்,
கைகளைத் தலைக்குப் பின்னால் கோர்த்துக் கொண்டு கண்களை மூடி விட்டத்தைப் பார்த்தபடி
நின்றான்.
சஹானாவின் உடலைப் போலவே,
அவளது மனமும் தொய்ய ஆரம்பித்தது.
முழுதாக ஒருநிமிடம் அப்படியே
நின்றிருந்தவன் திரும்பி அவளைப் பார்த்தான். நம்பிக்கையில்லாத பார்வையை அவளிடம் கண்டவன்,
தளர்ந்து போனான்.
வேகமாக அவளை நெருங்கி,
“சஹி! அன்னைக்கு உன்கிட்ட ஒண்ணு கேட்டேன். நினைவிருக்கா…?” எனக் கேட்டான்.
“என்..னது?” எனக் கேட்பதற்குள்
அவளுக்கு நா உலர்ந்து போனது.
“எந்தக் காரணத்தைக் கொண்டும்
என்னை வெறுக்கக் கூடாது. என்கூடவே இருக்கணும்னு கேட்டேனே…” சொல்லிக் கொண்டே அவளது கரத்தைப்
பிடித்தான்.
அவனை உற்றுப் பார்த்தவள்,
“அது நீங்க சொல்லப் போற பதிலில் இருக்கு…” சொல்லிக்கொண்டே அவனது பிடியிலிருந்து கையை
உருவிக் கொண்டாள்.
அவளது கண்களைச் சந்திக்கும்
திராணி இல்லாமல் தலையைக் குனிந்தவன், “ஆமாம். எனக்கும், ஜோஷிதாவிற்கும்… மனசளவில் எதுவும்
இல்லை. ஆனா, அதையும் தாண்டின ஒரு உறவு இருந்தது உண்மைதான்” என்றான்.
இப்படி எதுவும் இருக்கக்
கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தவளிடம், “ஆமாம், எல்லாம் உண்மைதான்” என்று
பிரபுவே சொன்னதைக் கேட்டதுமே ஓய்ந்து போனவளாக, சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
தனக்கும், ஜோஷிதாவிற்கும்
இடையில் ஏற்பட்ட நட்பு, அதனால் விளைந்த உறவின் துவக்கம் வரை அத்தனையையும், முழுதாகச்
சொல்லி முடித்தான்.
“செய்த தப்புக்காக நான்
வருந்தாத நாள் இல்ல சஹி! இதை நான் அன்னைக்கே சொல்லியிருப்பேன். ஆனா, சந்தர்ப்பமும்,
சூழ்நிலையும் சாதகமா இல்லை. எப்போ உன்னை என் மனசுல முழுமையா ஏத்துகிட்டேனோ, அன்னையிலிருந்து
ஜோஷிதான்னு ஒருத்தி இருந்ததையே மறந்துட்டேன்.
என் வாழ்க்கையே நீதான்.
என் காதல் முழுக்க முழுக்க உனக்கு மட்டும் தான். உன்னைத் தவிர வேற பொண்ணுக்கு என் மனசிலும்,
வாழ்க்கையிலும் என்னைக்குமே இடமில்ல” என்றவன் தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
“சஹானா! இத்தனை நாள் என்
மனசை அரிச்சிகிட்டு இருந்த உண்மையை உன்கிட்ட சொல்லிட்டேன். இனி நமக்குள்ள எந்த ஒளிவு
மறைவும் இல்லை” என்று நிம்மதியாக மூச்சுவிட்டான்.
அசையாமல் ஒரேயிடத்தில் நின்றபடி
தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை நெருங்க, அவள் வேகமாக பின்வாங்கினாள்.
திகைத்துப் போன பிரபு,
“சஹி!” என்று அவளது கரத்தைப் பிடிக்க முயல, “தயவு செய்து என் பக்கத்தில் வராதீங்க…”
என்று கத்தினாள்.
“சஹி! என்ன சொல்ற நீ?” என்று
மேலும் அவளை நெருங்க, “அங்கேயே நில்லுங்க… என்னைத் தொட உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.
அதை நீங்க இழந்துட்டீங்க…” என்றவளுக்கு உதடுகள் துடித்தன.
“நீ பேசறதுக்கான அர்த்தம்
புரிஞ்சிதான் பேசறியா?” பதிலுக்குக் கத்தினான் பிரபு.
“நான் பைத்தியமா? சொல்லுங்க
பேசற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருக்க நான் பைத்தியமா? உங்க மேல எவ்வளவு நம்பிக்கை
வச்சிருந்தேன்… எல்லாத்தையும் நாசமாக்கிட்டீங்க.
என் புருஷன், என் மேல எவ்வளவு
காதலோட இருக்காருன்னு அகங்காரத்தோட இருந்தேன். ஆனா, எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சிட்டீங்க.
என்னை, நான் உங்க மேல வச்சிருந்த காதல… எல்லாத்தையும் கொச்சைப்படுத்திட்டீங்க.
உங்களுக்கெல்லாம் ஆம்பளைங்கற
திமிர். எது செய்தாலும் கேட்க ஆளில்லங்கற நினைப்புதானே, இப்படியெல்லாம் நடந்துக்கச்
சொல்லுது. முடிவை அவள் கையில் கொடுத்தேன்னு சொல்றீங்களே… அசிங்கமா இல்ல உங்களுக்கு.
ஒரு பொண்ணோட வாழ்க்கையைத்
தீர்மானிக்கிற உரிமையை, யார் உங்களுக்குக் கொடுத்தது? உங்க அப்பா மேல கோபமிருந்தா அதைத்
தீர்த்துக்க, ஒரு பொண்ணோட வாழ்க்கையைப் பலியாக்குவீங்களா?
முதல்ல உங்க அப்பாவைப் பழிவாங்க,
உங்களுக்கு என்ன அருகதை இருக்கு? பழிவாங்கறேன்னு நீங்களும் அதே வேலையைத் தானே செய்திருக்கீங்க…”
ஆக்ரோஷத்துடன் பேசினாள் அவள்.
அவள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டு
அமைதியாக நின்றிருந்தான் பிரபு.
“திட்டு சஹானா! எவ்வளவு
வேணும்னாலும் திட்டு. நான் செய்தது எல்லாமே தப்புதான். ஆனா, உன் காதலை கொச்சைப்படுத்திட்டேன்னு
மட்டும் சொல்லாதே… உன்மேல நான் வச்சிருக்க காதல் உண்மையானது.
நீ என்னை எவ்வளவு வேணும்னாலும்
பேசு. ஆனா, என்னை வெறுத்துடாதே. நீ எனக்கு வேணும். எப்பவும்… என் கூடவே…” என்றவன் அவளது
கரத்தைப் பற்றினான்.
“என் கையை விடுங்க…” என்று
முரண்டு பிடித்தாள்.
“நீ என்னை மன்னிச்சிட்டேன்னு
சொல்லு…”
“விடுங்கன்னு சொல்றேன் இல்ல…
தொடாதீங்க என்னை. இதுக்கு மேலேயும் என்னைத் தொட்டா… நீங்க என்னை அவமானப்படுத்தறா மாதிரி”
என்று அழுத்தமாகச் சொன்னாள்.
அதுவரை, அவளைச் சமாதானப்படுத்தி
விடலாம் என்று நினைத்துப் பேசிக் கொண்டிருந்தவனது கரம் தானாகத் தளர்ந்தது.
“என்ன வார்த்தை சொல்லிட்ட
நீ? நான் உன்னை அவ… ச்சே! இதுக்கு நீ என்னை செருப்பால அடிச்சிருக்கலாம்” என்றான் ஆத்திரத்துடன்.
அவனது வார்த்தைகள் அவளைக்
காயப்படுத்தினாலும், அழுத்தமாக நின்றாள்.
கையில் கிடைப்பதைத் தூக்கிப்
போட்டு உடைக்க வேண்டும் என்ற வெறி வந்தது அவனுக்கு. தலையைப் பிடித்துக் கொண்டான்… என்ன
செய்வதென்றே தெரியாதவன் போல ஆத்திரமும், கோபமுமாக இங்குமங்கும் உலவினான்.
“தப்பு செய்தவன் திருந்தவே
கூடாதா? என் மனசுல இருக்கறதையெல்லாம் சொல்லியும், உன்கிட்ட மன்னிப்பு கேட்டும் நீ சமாதானமாகலைனா,
நான் என்ன சொல்ல?
தப்பை ஒத்துகிட்டாலும் இந்த நிலைதான்னு தெரிஞ்சா, எந்த ஆம்பளைதான்
பொண்டாட்டிக்கு உண்மையா இருப்பாங்க?
நான் தப்பு செஞ்சதால உன்
காதலை கொச்சைப் படுத்திட்டேன்.
ஆனா, நீ உன் வார்த்தையால என்னை அசிங்கப்படுத்தலாம். கடைசில
என்னையும் புலம்ப வச்சிட்டடி. இனியாவது நிம்மதியா இரு” என்றவன் கோபத்துடன் வெளியேற,
இறுகிய மனத்துடன் சுவற்றில் சரிந்து அமர்ந்தாள் சஹானா.
No comments:
Post a Comment