அத்தியாயம் - 29
காலையில் கண்விழித்த பிரபு, “சின்னு! என்றபடி கையை நீட்டினான்.
ஆனால், அவனது விரல்களுடன் பிணைந்து கொள்ள, அவளது கரம் நீளவில்லை.
அரைத் தூக்கத்திலிருந்தவன், முழுதாகக் கண்களைத் திறந்துப் பார்த்தான். இரவு நடந்ததெல்லாம்
நினைவிற்கு வர, எரிச்சலாக இருந்தது அவனுக்கு.
எழுந்து அமர்ந்தவனுக்குக் கட்டிலருகிலிருந்த சிறிய ஃப்ளாஸ்க்கும்,
காஃபி மக்கும் கண்களில் பட அவசரமாகச் சுற்றிப் பார்த்தான். சஹானா அந்த அறையில் இல்லை.
முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தவன், காஃபியுடன் சிட்டவுட்டிற்குச்
சென்றான். பறந்து திரிந்த பறவைகளின் ஒலி, உடலை வருடிய இதமான காற்று எதுவுமே அவனுக்கு
இரசிக்கவில்லை. காஃபி கப்பையே வெறித்துக் கொண்டு நின்றான்.
காலையில் எழுந்ததுமே அவனுக்குப் பெட் காஃபி தயாராக இருக்கவேண்டும்.
ஆனால், அந்தப் பழக்கமே கூடாதென, அடியோடி நிறுத்தியவளே அவள்தான். அன்றைய தினம் அவனுக்கு
நன்றாக நினைவிருந்தது.
“சின்னு! காஃபி…” கண்களைத் திறக்காமல் கையை மட்டும் நீட்டினான்.
பதிலுக்கு அவனது கரத்தில் சேர்ந்தது காஃபி கப் அல்ல அவளது
கரம்.
அவன் கண்களைத் திறந்துப் பார்க்க, “குட்மார்னிங்!” என்று
சிரித்தாள் அவள்.
புன்னகைத்தபடி, “குட்மார்னிங்!” என்றவன், “எங்கே என்னோட பெட்
காஃபி?” என்றான்.
“இன்னைலயிருந்து நமக்குள்ள ஒரு டீல். இனி, நாம ரெண்டு பேரும்
சேர்ந்துதான் காலைல காஃபி சாப்பிடப் போறோம்.”
“இது நல்ல ஐடியாவா இருக்கே…”
“ம், அதோட…” என்றதுமே அவன் கண்களைச் சுருக்கிக் கொண்டு அவளைப்
பார்த்தான்.
“காலைலயிருந்து உங்களுக்காக நான் வெயிட் பண்றேன் இல்லயா,
அதுக்கு உபகாரமா நீங்க பெட் காஃபியைக் கட் பண்ணணும்.”
“ம், இதுக்கெல்லாம் வேற ஆளைப் பாரு…” என்றவன் மீண்டும் படுக்க
முயல, அவனைப் பிடித்து எழுப்பினாள்.
“உங்களுக்காக எழுந்ததிலிருந்து காஃபி கூடக் குடிக்காம வெயிட்
பண்ணிட்டு இருக்கேன்.”
“நானா உன்னைக் குடிக்காதேன்னு சொன்னேன்?”
“அப்போ, எனக்காக இதைக் கூடச் செய்ய மாட்டீங்களா?” சிணுங்கலுடன்
கேட்டாள்.
“உனக்கு வேற என்ன வேணுமோ… கேளு செய்றேன். இதெல்லாம்… நிச்சயமா
முடியாது…” என்றான்.
இடுப்பில் கைவைத்தபடி அவனை முறைக்க, அவன் போர்வையை நன்றாக
இழுத்து முடிக்கொண்டான்.
“பிரபு! இப்போ எழுந்திரிக்கப் போறீங்களா இல்லயா?” என்றாள்
கோபத்துடன்.
அவன் குரலே கொடுக்காமல் படுத்திருந்தான்.
சற்றுநேரம் அமைதியாக இருந்தவள், அவனருகில் அமர்ந்து,
தோளில் சாய்ந்தபடி, “நீங்க இதுக்குச் சம்மதிச்சா, நான் உங்களுக்கு ஒண்ணு சொல்றேன்…”
என்றாள் மெதுவாக.
“முதல்ல சொல்லு… அப்புறம் பார்க்கலாம்” என்றான்.
“நீங்க இதுக்குச் சம்மதிச்சா… தினம் உங்களுக்குக் காலைல ஸ்பெஷல்
சாக்லேட் டிரிங்க் கிடைக்கும்…” சொல்லும் போதே அவளது குரல் குழைந்தது.
போர்வையை விலக்கிப் பார்த்தவன், “நிஜமாவா?” என்றான்.
“என் மேல நம்பிக்கை இல்லையா?” செல்லம் கொஞ்சினாள் அவனிடம்.
“அப்போ அதுக்கு ட்ரையல் பார்த்துக்கலாம்” என்றபடி அவளை அணைத்து
இழுத்தான்.
“இதெல்லாம் அழுகுணி ஆட்டம்…” என்று சிணுங்கினாலும், அவனிடமிருந்து
விலகவில்லை.
இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவனது கையிலிருந்த காஃபி
ஆறிப் போயிருந்தது. அவனது மொபைல் ஒலிக்க, சென்று எடுத்தான். அவனது செக்கரட்டரி சுரேஷ்
அழைத்திருந்தான்.
“…………….”
“குட் மார்னிங்! சொல்லுங்க சுரேஷ்!” என்றான்.
“…………….”
“ஓஹ்! ஆமாம். மறந்தே போய்ட்டேன்” என்றபடி கடிகாரத்தைப் பார்த்தவன்,
“இன்னும் ஒன் ஹவர்ல ஆஃபிஸ்ல இருப்பேன்” என்றவன், வேகமாகக் குளியலறைக்குள் நுழைந்தான்.
அதுவரை டிரெஸ்சிங் ரூமில் இருந்தபடி, அவனைக் கவனித்துக் கொண்டிருந்த
சஹானா வெளியே வந்தாள்.
குளித்துவிட்டு வந்த பிரபு கட்டில் மீது எடுத்து வைக்கப்பட்டிருந்த
அலுவலக உடையைப் பார்த்தான்.
அருகிலேயே வாட்ச், மொபைல் போன், ப்ரீஃப்கேஸ்… என்று அனைத்தும்
தயாராக வைக்கப்பட்டிருந்தது.
அதுவரை அவனுக்குள் இருந்த சஞ்சலம் மறைய, ‘இதெல்லாம் தற்காலிகமான
பிரிவு’ என நினைத்து புன்னகைத்துக் கொண்டவன், அலுவலகத்திற்குக் கிளம்பினான்.
***********
முகத்தில் எந்தச் சலனத்தையும் வெளிக்காட்டாமல், தனது மகனுக்குக்
காலை உணவைப் பரிமாறிக் கொண்டிருந்த மருமகளைப் பார்த்த கௌரியால், அவளை வியக்காமல் இருக்க
முடியவில்லை.
இரவு அவள் சப்தமாக ஏதோ பேசியதும், பிரபுவும் பதிலுக்குக்
கத்தியதும் அவர் அறிந்ததுதான். என்ன பேசினார்கள் என்று அவருக்குத் தெரியாதே தவிர, பிரச்சனை
நடந்ததற்குச் சாட்சியாக மகன் வீட்டிலிருந்து வெளியேறியதையும் பார்த்துக் கொண்டிருந்தவர்
தானே.
ஆனால், அவள் எதுவும் நடக்காதது போல உணவு பரிமாறுவதும், “போதும்
சஹி! நேரமாகுது” என்று வேகமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மகனையும் பார்த்தார்.
காலையில் எழுந்து வந்தவள், காஃபி போட்டு அனைவருக்கும் கொடுத்துவிட்டுத்
தனக்கும், கணவனுக்குமாக ஃப்ளாஸ்கில் எடுத்துக் கொண்டு மேலே சென்றாள்.
அரைமணி நேரத்தில் திரும்பி வந்தவள், காலை உணவைத் தயாரிப்பதில்
இறங்கி விட்டாள். எல்லாம் இயல்பாகவே நடந்துகொண்டிருந்தது.
‘ஒருவேளை நான் நினைத்த அளவிற்குப் பெரிய விஷயம் எதுவும் இல்லையோ?’
என்ற சந்தேகமும், ‘அப்படியிருந்தால் சரிதான்’ என்ற நிம்மதியும் ஒருங்கே தோன்றியது கௌரிக்கு.
அதேநேரம், ‘இது நிலைக்க வேண்டுமே!’ என்ற பயமும் மனத்தின் ஒரு ஓரமாக எட்டிப்பார்க்காமல்
இல்லை.
“வரேன்மா!” என்றவன், ஷுவை மாட்டிக் கொண்டு எழுந்தான்.
“சரிப்பா!” என்றவர் தன்னருகில் வந்து நின்ற மருமகளைக் கண்டதும்,
தனது அறை பக்கமாக விரைந்தார்.
ஜன்னலின் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தார். எப்போதும் சிரித்த
முகத்துடன் காரைக் கிளப்புபவன், இன்று கடுகடுவென இருப்பதைப் போலத் தென்பட, அதுவரையிருந்த
சஞ்சலம் இப்போது பயமாக மாறியது அவருக்கு.
***********
வாசல் வரை கணவனின் பின்னாலேயே சென்றாள் சஹானா.
“ஈவ்னிங் நான் வர லேட்டாகும் சஹி!” என்றவன், திரும்பி அவளது
கரத்தைப் பற்ற முயல, சட்டெனப் பின்னால் நகர்ந்தாள் சஹானா.
திகைப்புடன், “சஹி...!” என்றான்.
“நான் எதுவும் நடந்துக்காதது போல நடந்துக்கறதால எல்லாத்தையும்
மறந்துட்டேன், உங்களை மன்னிச்சிட்டேன்னு நினைக்காதீங்க. நமக்குள்ள இருக்கற பிரச்சனை
இன்னும் அப்படியேத்தான் இருக்கு” என்றாள்.
எதுவோ சொல்ல நினைத்து வாயைத் திறந்தவன், எதையும் சொல்லாமலேயே
கடுகடுவென்ற முகத்துடன் அங்கிருந்து கிளம்பினான்.
கார் கேட்டைக் கடக்கும் வரை வாசலிலேயே நின்றிருந்தவள், ஆயாசத்துடன்
தங்களது அறைக்குத் திரும்பி வந்தாள்.
இரவு அவன் கோபத்துடன் பேசிவிட்டு வெளியில் சென்றுவிட, சற்றுநேரம்
எதுவும் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். பிறகு யோசித்துப் பார்த்தவள், தான் பேசியதில்
எந்தத் தவறும் இல்ல என்ற ஸ்திரமான முடிவிற்கு வந்தாள்.
எழுந்து கப்போர்டில் இருந்த ரஜாயை எடுத்துச் சென்று டிரெஸ்ஸிங்
ரூமில் தனக்கான படுக்கையைத் தயார் செய்தாள். தான் பயன்படுத்தும் பொருட்களையும், படிக்கும்
புத்தகங்களையும் அந்த அறையிலேயே வைத்துக் கொண்டாள்.
இனி வெளியுலகிற்கு மட்டுமே இருவரும் கணவன், மனைவி. ஆனால்,
தன்னைப் பொறுத்தவரை பிரபுவை மன்னிக்கும் மனமும், அவனுடன் சேர்ந்து வாழும் எண்ணமும்
நிச்சயமாக இல்லை.
எவ்வளவுதான் விட்டுக் கொடுத்து வாழும் குணத்துடனும், பொறுமையுடன்
எதையும் யோசித்துச் செய்பவள் தான். அதற்காக, தனக்கு முன்பே கணவனின் வாழ்க்கையில்
ஒருத்தி இருந்ததை ஏற்றுக் கொண்டு, அதை மறந்து அவனுடன் வாழும் அளவிற்குப் பெருந்தன்மையான
மனம் நிச்சயமாக அவளுக்கு இல்லை.
அதைவிட தனது காதல் இங்கே தோற்றுப் போனதைத் தான் அவளால் தாங்கிக்
கொள்ள முடியவில்லை. இத்தனை மாதங்கள் வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமில்லாததாகவே தோன்றியது.
மனம் கனத்துப் போயிருக்க, கண்களை மூடிப் படுத்திருந்தாள்.
பிரபு வீட்டிற்குள் நுழைந்தபோது மணி ஒன்றாகியிருந்தது. அறைக்குள்
வந்தவன் அவளது பொருட்கள் இல்லததைக் கண்டு திகைத்துப் போயிருக்க வேண்டும். டிரெஸ்சிங்
அறையில் விளக்கெறிவதைப் பார்த்து கதவைத் தட்டினான்.
சஹானா குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்க, கதவைத் திறந்துகொண்டு
உள்ளே வந்தவன், எதுவுமே சொல்லாமல் அமைதியாக நின்று பார்த்தான்.
அவன் வந்திருப்பதை அறிந்து, அவளும் எழவில்லை. அவள் விழித்துக்
கொண்டுதான் இருக்கிறாள் என்று, அவனுக்கும் தெரியாமல் இல்லை.
‘இன்னும் இது எவ்வளவு தூரம் போகிறதென்று பார்க்கலாம்’ என்று
நினைத்தபடி தனது படுக்கையில் விழுந்தான்.
காலையில் எழுந்து வழக்கமான வேலைகளைப் பார்த்தாள்.
மாமியார்
தன்னை குறுகுறுவென பார்த்ததை அவள் கவனித்தும் கவனிக்காதது போலிருந்து கொண்டாள்.
அவனுக்குக் காஃபியை எடுத்துச் சென்று அறையில் வைத்தவள், தனக்கு
ஒரு கப்பில் ஊற்றி எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றாள்.
அவன் ‘சின்னு! காஃபி!’ என்று அழைத்த சப்தம், லேசாகத் திறந்திருந்த
கதவிடுக்கு வழியாக அவளுக்குக் கேட்டது. மனம் பதைபதைத்தது. சிரமப்பட்டு தள்ளாடிய மனத்தை
அடக்கினாள்.
சிட்டவுட்டில் நின்றபடி அவன் எங்கோ வெறித்துக் கொண்டிருந்ததைப்
பார்த்தவளுக்கு, மனத்தை கசக்கியது போல வலித்தது. இருவருமே பழைய நினைவினால் மூழ்கடிக்கப்பட்டனர்.
ஆனாலும், பிடிவாதமாக அறைக்குள்ளேயே அமர்ந்திருந்தாள். அவன்
குளியலறைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம் வெளியில் வந்தவள், அவன் அலுவலகத்திற்குப் புறப்படத்
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்தாள்.
மீண்டும் கீழே வந்து சமையலில் மூழ்கினாள். அவர்கள் இருவரைத்
தவிர மற்ற எல்லா வேலைகளும் எப்போதும் போல இயல்பாக நடந்தன.
இரவு உணவும் எல்லோரும் சேர்ந்தே சாப்பிட்டனர். தேவி மட்டும்
வளவளவெனப் பேசிக் கொண்டிருக்க, மற்ற நால்வரும் எதையோ விழுங்க முடியாமல் தவிப்பதைப்
போல ஒருவித சங்கடத்துடனேயே இருந்தனர்.
சாப்பிட்டவுடன் அறைக்குச் சென்றுவிடும் பிரபு, அவள் வேலைகளை
முடித்துவிட்டு வரும்வரை ஹாலிலேயே அமர்ந்திருந்தான். அவள் அறைக்குச் சொல்லும் போது
பின்னாலேயே சென்றான்.
தண்ணீர் பாட்டிலை டேபிள் மீது வைத்துவிட்டுத் திரும்பியவள்,
மோதிக் கொள்ளும் அளவிற்குத் தன்னை நெருங்கி நின்றிருந்தவன் மீது மோதாமல் சமாளித்து
நின்றாள்.
அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே அவனைத் தாண்டிச் செல்ல, “சஹானா!”
தழைந்த குரலில் அழைத்தான் பிரபு.
அவனது அழைப்பிற்கு மதிப்பளித்து நின்றவள், எதுவுமே பேசவில்லை.
“ஏன் சஹானா என்னை இப்படிப் படுத்தற? நான்தான் உன்கிட்ட மன்னிப்புக்
கேட்கறேனே. நீ என்னை மன்னிக்கலைனாலும் பரவாயில்ல, இப்படி என்னைவிட்டு ஒதுங்கிப் போறது…”
என்றவனால் பேசவே முடியவில்லை.
“புரிஞ்சிக்கோ சஹானா! செய்த தப்பை உணர்ந்தவனுக்கு மன்னிப்பே
இல்லையா?” என்றான் உருக்கமாக.
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “உங்களைத் தண்டிக்க நான் யாரு?
இது எனக்கு நானே கொடுத்துக்கற தண்டனை. உங்களை என் உயிரா நினைச்சேன் இல்ல… அதுக்காக”
என்றாள்.
“சஹானா! நீ நம்பினாலும் நம்பாட்டாலும் எனக்கும் நீதான் உயிர்.
நீ மட்டும் தான். நீ என்னை மன்னிக்கலைனாலும் பரவாயில்ல… என்னை ஒதுக்கிட்டுப் போறா மாதிரி
நடந்துக்காத… நீ செய்யறதைப் பார்த்தால் என் மேல நம்பிக்கையில்லாத மாதிரி இருக்கு…”
அவன் சொன்னதைக் கேட்டு, கேலியாகச் சிரித்தாள்.
“இன்னுமா நான் உங்களை நம்புவேன்னு நினைக்கறீங்க? என்னுடைய
நம்பிக்கையை மொத்தமா அழிச்சவர் மேல, எப்படி நம்பிக்கை வைப்பேன்? மன்னிப்பு கேட்டா செய்ததெல்லாம்
இல்லைன்னு ஆகிடுமா? நீங்க சுலபமா சொல்லிட்டீங்க.
ஆனா, என் மனசு என்ன பாடுபட்டிருக்கும்னு
நினைச்சீங்களா?” ஆத்திரத்துடன் கேட்டவள், “இனி இதைப்பத்திப் பேசறதுல எந்தப் பிரயோஜனமும்
இல்ல” என்றபடி அறையை நோக்கி நடந்தாள்.
அதுவரை இழுத்துப் பிடித்த பொறுமையுடன் பேசிக் கொண்டிருந்தவன்,
“அப்போ இதான் உன் முடிவா?” எரிச்சலுடன் கேட்டான்.
“நான் எதையும் யோசிச்சித்தான் முடிவெடுப்பேன்…” என்றாள்.
ஆத்திரத்துடன் திரும்பியவன், “நீயும் உன் முடிவும்… இன்னும்
எத்தனை நாளைக்கு இந்த முடிவுல இருக்கறதா உத்தேசம்?” என்றான்.
நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தவள், பதில் சொல்லாமல்
அறைக் கதவைத் திறந்தாள்.
“உன்னைத் தான் கேட்கறேன் சஹானா!” என்று உறுமினான்.
“சில கேள்விகளுக்குப் பதிலே கிடையாது…”
“அப்போ… காலம் பூரா இப்படியே இருக்கப் போற அப்படித்தானே…”
“அதான் உங்களுக்கே பதில் தெரிஞ்சிருக்கே…” என்றவள் உள்ளே
சென்று கதவை மூடினாள்.
“சஹானா!” என்று இரண்டு முறை கதவைத் தட்டியவன், வெறுப்புடன்
அங்கிருந்து அகல, கதவில் சாய்ந்து நின்றவளது விழிகளில் கண்ணீர் துளிர்க்க, வேகமாக அதைச்
சுண்டிவிட்டாள்.
No comments:
Post a Comment