Monday, July 20, 2015

உறவெனும் புதிய வானில்



அத்தியாயம் - 30

நான்கு நாட்கள் பெரிதாக எவ்வித மாற்றமும் இல்லாமல் கழிந்தது. 

வீட்டில் மற்றவர் எதிரில் மட்டுமே இருவரும் பேசிக்கொண்டாலும், அறைக்குச் சென்றால் சஹானா முன்னறையில் அமர்வதே இல்லை. அதைத் தடுக்க வழி தெரியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது அவனால்.

அலுவலகத்திலிருந்த பிரபுவின் தொலைபேசி ஒலிக்க, எடுத்து, “ஹலோ” என்றான்.

“நான் சஹானா பேசறேன்” என்றாள்.

அவனும், “தெரியுது சொல்லு” என்றான்.

“நீங்க ஆஃபிஸ் கிளம்பினதுக்கு அப்புறம் அப்பாவும், அம்மாவும் பேசினாங்க. அக்காவுக்கு அடுத்த வாரம் வளைகாப்பு வச்சிருக்காங்களாம். அதுக்கு அழைக்க அண்ணா வராங்களாம்” என்றாள்.

“ஓ! ஸ்ரீ வரானா?” மகிழ்ச்சியுடன் கேட்டான்.

“ம்” என்றவள், “நான் எதுக்குப் போன் செய்தேன்னு புரிஞ்சிட்டு இருப்பீங்க…” என்றாள்.

கோபத்தில் அவனது தாடை இறுகியது.

“அருமை பொண்டாட்டி! நீ சொல்ல வர்றது புரியாம என்ன? நல்லாவே புரியுது. உன் அண்ணன் எதிர்ல நான் சாதாரணமா நடந்துக்கணும். அதே நேரத்துல, அட்வான்டேஜ் எடுத்துக்கக் கூடாது அதானே…” என்றான் கடுப்புடன்.

“புரிஞ்சிகிட்டதுக்குச் சந்தோஷம்” என்றவள், போனை வைத்தாள்.

இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவனுக்கு, ‘இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வேதனை?’ என ஆயாசமாக இருந்தது.
சஹானா போனை வைத்த அடுத்த நொடி, பிரபுவின் மொபைல் ஒலித்தது.

போனை எடுத்தவனது முகம் இறுக்கத்தைத் தளர்த்தி புன்னகை மலர, “சொல்லுடா மச்சான்! எப்படிடா இருக்க?” என்று சிரித்தான்.

“நல்லாயிருக்கேன் மாப்பிள்ளை!”

“நீதானேப்பா, வருங்கால மாப்பிள்ளை…” என்று சிரித்தான் பிரபு.

சிரித்த ஸ்ரீயும், “ஏம்ப்பா நீங்கல்லாம் செய்யாததையா நான் செய்துட்டேன். ஒரு வீட்டுக்கு மாப்பிள்ளையாகற வயசு தானே இது” என்றான்.

“அதுசரி” என்று சிரித்தவன், “இப்போ எங்கே இருக்க?”
“இப்போதான் பஸ்ஸை விட்டு இறங்கினேன்” என்றான் ஸ்ரீராம்.

“நீ வரேன்னு முதல்லயே சொல்லக்கூடாதா?” எனக் கேட்டான் பிரபு.

“ஆக்சுவலி ஆஃபிஸ் வேலையாத்தான் வந்தேன். வர்ஷியோட வளைகாப்புக்கு அழைக்க அம்மாவும், அப்பாவும் வரணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. நான்தான் சஹி வீட்ல அதெல்லாம் தப்பா நினைச்சிக்க மாட்டாங்க. நான் இன்விடேஷன் கொடுத்திடுறேன். நீங்க போன் செய்து அழைச்சிடுங்கன்னு சொல்லிட்டேன்” என்றான்.

”அதுவும் சரிதான். நீ முதல்லயே சொல்லியிருந்தா நான் பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருப்பேனே…”

“அதெல்லாம் பிரச்சனை இல்லடா. நான் ஆட்டோ பிடிச்சி வந்துக்கறேன்…”

“சரி, நான் லஞ்சுக்கு வீட்டுக்கு வரேன். அப்போ பார்க்கலாம்” என்று இணைப்பைத் துண்டித்தான் பிரபு. 

*********

“ஹாய் அத்தான்! வாங்க வாங்க…” ஆர்வத்துடன் வரவேற்றாள் தேவி.

“என்ன வாலு! இன்னைக்குக் காலேஜுக்குப் போகலயா?”

“ஹய்யோ! என்னோட ஃபேவரிட் அத்தான் வரீங்க இன்னைக்குக் காலேஜ் போனால் எப்படி?” என்று சிரித்தாள் தேவி.

“அடடா! நமக்கு இப்படி ஒரு ரசிகையா?” என்று புன்னகைத்தான்.

“ஏன் அத்தான் இதை உங்க டாக்டர் மேடம் எதிர்ல சொன்னா, எப்படி இருக்கும் உங்க நிலைமை?” ஆர்வத்துடன் கேட்டாள்.
அவளை உறுத்து விழித்தவன், “உனக்கு எவ்ளோ நல்ல எண்ணம். நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா உனக்கு. நீ இருக்கற திசைக்கே ஒரு கும்பிடு… இப்போ வழியை விடு” என்றவன் வீட்டினுள் நுழைந்தான்.

“அத்தான் அத்தான்… என்று பின்னாலேயே வந்தவள், 

“அண்ணி! அத்தான் வந்தாச்சு” என்று சப்தமாகக் குரல் கொடுத்தாள்.

புருஷோத்தமனும், கௌரியும் அவனை வரவேற்று பேசிக்கொண்டிருக்க, மாடியிலிருந்து இறங்கி வந்தாள் சஹானா.

“வாங்கண்ணா!” என்ற தங்கையைப் பார்த்துச் சிரித்தவன், 
“சஹி எப்படிடா இருக்க?” பாசத்துடன் விசாரித்தான்.

அவள் புன்னகையுடன் தலையாட்ட, “நியாயமா… இந்தக் கேள்வியையே நான் கேட்கக்கூடாது. சம்பிரதாயத்துக்காக கேட்கறேன்” என்றான்.

அவன் சொன்னதற்காக அர்த்தம் புரிந்த பெரியவர்கள் இருவரும் தர்மசங்கடத்துடன் பார்க்க, சஹானா மெலிதாக முறுவலித்தாள்.

பிறந்த வீட்டினரது நலத்தை விசாரித்தவள், “நீங்க ஃப்ரெஷாகிட்டு வாங்கண்ணா, சாப்பிடலாம்” என்றாள்.

எழுந்தவனைப் பிடித்து இழுத்த தேவி, “அத்தான்! வாங்க நான் உங்க ரூமைக் காட்டறேன்” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றாள்.

சாப்பிடும் போதும் அருகில் அமர்ந்து அவனுடன் வம்படித்துக் கொண்டு அந்த இடத்தையே கலகலக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

“அத்தை! வர்ஷிக்கு வளைகாப்புக்கு சேலை எடுக்கணுமாம். அம்மா உங்ககிட்ட சொல்றேன்னு சொன்னாங்களே.”

“ஆமாம்ப்பா. அம்மா சொன்னாங்க. நம்ம சஹியை கூட்டிட்டுப் போய் எடுத்துட்டு வந்திடுங்க… வர்ஷாவுக்கு எந்த மாதிரி பிரிக்கும்னு அவளுக்குத் தெரியும் இல்லயா?” என்றார்.

மறுக்க நினைத்த சஹானா, ‘தனது தமக்கைக்காக முதன்முதலிம் செய்யும் விஷயத்தில் ஏன் மாட்டேன் என்று சொல்ல வேண்டும் என்று அவள் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.

“ஓகே சஹிம்மா! நான் என் வேலையை முடிச்சிட்டு வந்திடுறேன். நாம லஞ்ச் முடிச்சிட்டுக் கிளம்பலாம்” என்றான்.
சரியென தலையசைத்தவள், “நான் செலக்ட் பண்ணாலும், அத்தையும் நம்மோட இருந்தா அம்மாவுக்கும், அத்தைக்கும் சந்தோஷமா இருக்கும்” என்றபடி மாமியாரைப் பார்த்தாள்.

“என்ன வாலு! நீயும் வர்றியா?” என தேவியைக் கேட்க, “கண்டிப்பா” என்றாள் உற்சாகத்துடன்.

அலுவலக வேலையாகச் சென்ற ஸ்ரீராம், திரும்பி வரும்போது பிரபுவுடன் வந்தான்.

“என்ன ரெண்டு பேரும் ஒண்ணா வரீங்க?” எனக் கேட்டார் கௌரிம்மா.

எங்கே இருக்கேன்னு பிரபு போன் செய்தான். கொஞ்சம் வேலை இருக்கு. ரெண்டு மணியாகிடும் வீட்டுக்கு வரன்னு சொன்னேன்…” ஸ்ரீராம் சொல்லிக் கொண்டிருக்க, “நாந்தான் அங்கேயே இரு… நான் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்.அப்படியே கூட்டிட்டு வந்துட்டேன்” என முடித்து வைத்தான் பிரபு.

அவர்கள் சொல்வதை கௌரியும், தேவியும் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருக்க, சஹானா அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள்.

திரும்பி அவளைப் பார்த்த பிரபு, “சஹானா! வரும் வழியில் முல்லைப் பூ வித்துட்டு இருந்தாங்க. உனக்குப் பிடிக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன்” என பெரிய கவர் ஒன்றை அவளிடம் நீட்டினான்.

மதியானம் ரெண்டு மணிக்கு எந்தக் கடையில் அதுவும் நடுரோட்டில் விக்கிறாங்க? மனத்திற்குள் பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டு நின்றாள்.

அங்கிருந்த அனைவருமே இதைக் கேட்கவும், பார்க்கவும் செய்தாலும், யாரும் இவர்கள் பக்கமாகத் திரும்பவில்லை.

சுற்றும் முற்றும் பார்த்தவள், வேறு வழியில்லாமல் அவனிடமிருந்த கவரை வாங்கினாள். பிரபுவின் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை மலர்ந்தது.

அவனைப் பார்த்தவள், ‘இரண்டு நாளைக்குத் தானே அதன்பிறகு என்ன செய்வாய்?’ என்பது போல ஒரு பார்வையை வீசியவள் அங்கிருந்து சென்றாள்.

காலையில் இருந்ததை விட, மதியம் டைனிங் ஹால் மேலும் அமர்க்களமாக இருந்தது.  

“அத்தான்! உங்க டாக்டரம்மா அண்ணி மாதிரி நல்லா சமைப்பாங்களா?”

“ம்ம், உன் அளவுக்குச் சமைப்பாங்கன்னு நினைக்கிறேன்…” என்றான்.

“ஓ! இப்போ நான் தண்ணி சுடவைக்க கத்துகிட்டேன் தெரியுமா?” என்றாள்.

“என்னது, அதைக் கூட கத்துக்கணுமா உனக்கு?” என்று சிரித்தான்.

“ம், தண்ணியைக் கொதிக்க வைக்கறதுக்கும், சுட வைக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்ல…” என்றாள்.

“அட அறிவாளி்! போதுமே உன் திறமை” என்று சப்தமாகச் சிரிக்க, பிரபுவும் அவனுடன் கூட்டணி அமைத்துக் கொண்டான்.

ஸ்ரீராமை முறைத்தவள், “அண்ணா…!” என்று கத்தினாள்.

“தேவி! போதும் சாப்பிடு. பேச்செல்லாம் அப்புறம் பேசலாம்” என்றாள் சஹானா.

“பிரபு உனக்கும் தான் சாப்பிடும் போது பேசினா, உடம்புல ஒட்டாதாம்…” என்றான் ஸ்ரீ ராம்.

“அப்பா சாமி! நீ ஏதாவது சொல்லி வச்சி என்னை மாட்டி விட்டுடாதேப்பா” சொல்லிக்கொண்டே மனைவியைப் பார்த்தான்.

பிரபு தனது அலுவலகத்தில் இறங்கிக் கொள்ள, அதே காரில் மற்றவர்கள் புடவை கடைக்குச் சென்றனர்.

சஹானாவும், கௌரியும் புடவைத் தேர்வில் அமர்ந்துவிட, ரெடிமேட் செக்‌ஷனுக்குச் சென்ற தேவி அங்கே, ஸ்ரீராம் சில குர்த்திகளை எடுத்து வைத்துக் கொண்டு மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

“ஹா! அத்தான் மாட்டிகிட்டார்…” என்று சொல்லிக் கொண்டவள், மெதுவாக அவனுக்குப் பின்னால் சென்று நின்றாள்.

தொண்டையைச் செருமிக் கொண்டு, “எக்ஸ்க்யூஸ்மீ சார், கேன் ஐ ஹெல்ப் யூ!” சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

“யா… மேம்!” என்றபடித் திரும்பியவன், அடக்கமட்டாமல் சிரித்த தேவியைப் பார்த்து, ‘ஸ்’ என்று முகத்தைச் சுளித்தான்.

“ஹேய்! போதும் ரொம்ப ஓட்டாதே…” என்றான்.

“எப்படி எப்படி? நீங்கல்லாம் புடவை சூஸ் பண்ணுங்க. நான் கடையைச் சுத்திப் பார்த்துட்டு வரேன்” என்று அவனைப் போலவே பேசிக்காட்டினாள்.

“தெரியாத்தனமா சொல்லிட்டேன் தாயே! தயவு செய்து உன் திருவாயைக் கொஞ்சம் மூடு” என்றான்.

“ம், மூடிக்கிறேன். அப்போ ஒரு கண்டிஷன். நான் தான் உங்க டாக்டர் மேடமுக்குக் குர்த்தி செலக்ட் பண்ணுவேன். ஓகேவா…” என்றாள் சிரித்துக் கொண்டே.

“நல்லவேலை, எங்கே நீ எனக்கும் நாலு வேணும்னு கேட்டுடுவியோன்னு பயந்துட்டேன்” என்று பயப்படுவது போல நடித்தான்.

“அடடா! நானு… அதுவும் உங்ககிட்ட, அப்படியே கேட்டுட்டாலும்…” அவளும் வேண்டுமென்றே அவனது காலை வாரினாள்.

“சரி விடு. நாம ஒரு சமரசத்துக்கு வருவோம். இந்த விஷயத்தை நீ யார்கிட்டயும் சொல்லாமல் இருந்தா, உனக்கு மட்டும் ஒரு கிலோ திருநெல்வேலி அல்வாவை வாங்கி உனக்குப் பார்சல் அனுப்பறேன்… சந்தோஷமா!” என்றான்.

அவனைக் கிண்டலாகப் பார்த்தவள், “அப்போகூட எனக்கு அல்வாதான் கொடுப்பீங்களா?” என்றாள்.

“எல்லாருக்கும் என்ன கொடுப்பேனோ, அதைத் தானே உனக்கும் கொடுக்கறேன்…”

“பார்த்து, டாக்டரம்மாவுக்கும் அல்வா கொடுத்திடப் போறீங்க” என்று சிரித்தாள்.

“ஏம்மா! நான் நல்லாயிருக்கறது உனக்குப் பிடிக்கலையா? நீ குர்த்தியை செலக்ட் பண்ணுமா” என்றான்.

“ஓகே… ஓகே…” என்று சிரித்துக் கொண்டே உடைகளைத் தேர்வு செய்வதில் மும்முரமானாள்.

“ஏன் அத்தான்! கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கு முதன்முதல்ல புடவை வாங்கிக் கொடுப்பாங்க. நீங்க என்னடான்னா குர்த்தி வாங்கிக் கொடுக்கறீங்க?”

“அதுதான் திவியோட வேலைக்குச் சூட் ஆகும். அங்கே இங்கே ஓட இதுதான் வசதி” என்றான்.

“ம், உங்க திவி டாக்டர் தானே? என்னவோ அதலெட் மீட்ல ஓடுறவங்க மாதிரி பேசறீங்க” என்றாள்.

“ரொம்பப் பேசாதே அறுந்த வாலு… வேலையை முடி” என்று சற்று எரிச்சலுடன் சொன்னான்.

“ம், விசுவாமித்ரருக்குக் கோபம் வந்தாச்சு… இனி, வாயை மூடிக்க வேண்டியது தான்”

“விசுவாமித்ரரா… இந்தப் பேரை யார் சொன்னது? சஹியா…”
“பின்ன அவங்கதான் சொல்வாங்க, பாசம் காட்டுறதுல எங்க அண்ணன் மாதிரி யாரும் இருக்கமாட்டாங்க. அதேபோல கோபம் வந்தாலும் விசுவாமித்திரருன்னு உங்க பெருமையை எப்பவோ பாடிட்டாங்க” என்றாள் குறும்புடன்.

“போதுமே… இந்தப் பொண்ணுங்களுக்குப் பேச விஷயமா இல்ல. இதெல்லாம் ஒரு கதைன்னு பேச வேண்டியது…” என்று சிடுசிடுத்தான்.

‘ஆஹா! இதோட வாயை மூடலனா நாம தீர்ந்தோம்’ என எண்ணிக் கொண்டு வேலையைப் பார்க்கலானாள்.

பணத்தைச் செலுத்திவிட்டு வந்தவன், “நீ புடவை எடுத்துட்டாங்களான்னு பாரு. முடிச்சிட்டா பார்க்கிங் வந்திடுங்க, நான் கார்ல வெயிட் பண்றேன்” என அவளிடம் சொல்லிவிட்டு பார்சலுடன் சென்றான்.

சஹானாவைத் தேடிச் சென்ற தேவியை கடைக்குள் நுழைந்த ஜோஷிதா பார்த்துவிட்டாள்.

“இவள் பிரபுவின் தங்கை தானே…” என்று நினைத்துக் கொண்டே, அவள் பின்னாலேயே சென்றவள் அங்கே சஹானாவும், கௌரியும் இருப்பதைப் பார்த்தாள்.

சஹானாவைப் பார்த்ததும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.  ‘இன்னுமா இவள் இங்கிருக்கிறாள்?’ என எண்ணியவள் அவர்கள் இன்னும் புடவைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, வேகமாக வெளியே வந்தாள்.

கார் பார்க்கிங்கிற்கு வந்தவள், அங்கே பிரபுவின் காரையும், காரின் பின் சீட்டில் திரும்பி ஏதோ செய்து கொண்டிருந்தவனையும் பார்த்தாள்.

‘ஓஹ்! பொண்டாட்டியைக் கூல் பண்ண, ஷாப்பிங் கூட்டிட்டு வந்திருக்காரா சார்!” என்று கருவிக் கொண்டவள், காரை நோக்கி விரைந்தாள்.

“செய்த தப்பை மறைக்க, மனைவியோட ஷாப்பிங் வந்தாச்சா பிரபு!” என்றாள் கிண்டலாக.

பிரபு என்ற பெயரைக் கேட்டதும், துணுக்குற்றுத் திரும்பினான் ஸ்ரீராம்.

பிரபுவை எதிர்பார்த்தவள், அங்கே முகம் தெரியாத ஒருவனைக் கண்டதும் திடுக்கிட்டுப் போனாள்.

“சாரி… இது பிரபுவோட கார்தானே…”

“ஆமாம்… நீங்க யாரு?” என்றான்.

அதற்குள் சுதாரித்துக் கொண்ட ஜோஷிதா, “ஒரு நிமிஷம்” எனச் சொல்லிவிட்டு வேகமாக காரின் நம்பர் ப்ளேட்டைப் பார்த்தாள்.

“ஓ காட்!” என்று நெற்றியைப் பிடித்தபடி மழுப்பலாகச் சிரித்தவள், “சாரி சார்! உங்க காரும், என் கசினோட காரும் ஒரே மாடல், ஒரே கலர். ஆனா, நம்பர் வேற. அதான் கொஞ்சம் குழம்பிட்டேன். எக்ஸ்ட்ரீம்லி சாரி!” என்றவள் அங்கிருந்து செல்ல முயன்றாள்.

“ஒரு நிமிஷம் மேடம்! பிரபுன்னு… சொன்னீங்களே.”

“ஹாங்… ஆமா, என் கசின் பேரும் அதுதான். சாரி…” என்றவள் ஓட்டமும், நடையுமாக அங்கிருந்து வெளியேறினாள்.

குழப்பத்துடனேயே அமர்ந்திருந்தவன், காரை நோக்கி வந்துகொண்டிருந்த மூவரையும் பார்த்தான்.

தேவி ஏதோ சொல்ல கௌரி அதற்குப் புன்னகைக்க, சஹானா பெயரளவில் ஒரு முறுவலுடன் நிறுத்திக் கொண்டாள்.
‘தங்கையை ஒரு நல்லவனிடம் ஒப்படைத்திருக்கிறோம்’ என்று, அதுவரை இறுமாந்திருந்தவனது மனத்தில் சிறு சஞ்சலம் உருவானது.

No comments:

Post a Comment