அத்தியாயம் - 31
“என்னண்ணா! இந்த நேரத்துல
இங்கே வந்து நடந்துட்டு இருக்கீங்க? தூங்கப் போகலையா?” தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்த
சகோதரனிடம் கேட்டாள் சஹானா.
“ம், தூக்கம் வர வரைக்கும்
நடக்கலாம்னு வந்தேன். மணி பதினொன்னு ஆகப்போகுது பிரபு இன்னும் வரலையா?”
“கொஞ்சம் வேலை இருக்காம்.
முடிச்சிட்டு வருவார்” என்றாள்.
“நீயாவது நேரத்துக்குச்
சாப்பிடுறது தானே. ஏன் வயித்தைக் காயப்போடுற?” ஆற்றாமையுடன் கேட்டான்.
புன்னகைத்தவள், “அவரோட சேர்ந்து
சாப்பிட்டுக்கறேன்ணா!” என்றாள்.
“அம்மாதான் இப்படின்னா நீயுமா?”
சலித்துக் கொண்டான் ஸ்ரீராம்.
“நாளைக்கு அண்ணியும் இப்படி
இருந்தா…” என்று சிரித்தாள்.
முறுவலித்தவன், “நான் இதையெல்லாம்
அலோவ் பண்ண மாட்டேன். என்னமோ போங்க…” என்ற சகோதரனை ஆராய்ச்சியுடன் பார்த்தாள்.
“அண்ணா! ஏதாவது குழப்பத்தில
இருக்கீங்களா? ஈவ்னிங்ல இருந்தே நீங்க கொஞ்சம் டல்லா இருக்கா மாதிரியிருக்கு…” என்றாள்.
“குழப்பமா? அதெல்லாம் ஒண்ணுமில்லடா.
கொஞ்சம் அலைச்சல், அதான் அப்படித் தெரியுது உனக்கு” என்றான்.
அவனது பதிலில் சமாதானமானவள்,
“சரிண்ணா! சீக்கிரம் வந்து படுங்க. காலைல நிறைய வேலை இருக்குன்னு சொன்னீங்களே” என்றாள்.
“சரிடா” – புன்னகைத்தவன்,
பதிலுக்குப் புன்னகைத்த தங்கையை உற்று நோக்கினான்.
“என்னண்ணா! புதுசா பார்க்கறா
மாதிரி பார்க்கறீங்க?”
“நீ சந்தோஷமா இருக்கியா
சஹிம்மா!” என்று அவளது தலையை வருடிக் கொடுத்தான்.
தமையனின் கேள்வியில் திடுக்கிட்டுப்
போனாள்.
மாலை கடையிலிருந்து கிளம்பும்
நேரம் தேவி, ஏதோ ஒரு புடவையை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க, உடன் நின்றிருந்தவள்
தன்னை யாரோ உற்று நோக்குவதைப் போல உணர்ந்தாள்.
மெல்லப் பார்வையை மட்டும்
சுழலவிட்டவள், தனக்கெதிரிலிருந்த கண்ணாடியில் தெரிந்த ஜோஷிதாவின் உருவத்தைக் கண்டதும்
சற்று பதட்டமானாள்.
ஆனால், அவள் மறைந்திருந்து பார்த்துவிட்டுச் சட்டென அவ்விடத்தை
விட்டு அகன்றதும் தான், அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
ஆயினும், சற்றுநேரம் அந்த
எண்ணங்களை நினைவிற்குக் கொண்டு வராமல் இருந்தவள், மீண்டும் தேவையில்லாத நினைவுகளின்
ஆக்கிரமிப்பால் சோர்ந்து போனாள்.
இப்போது அண்ணன் இந்தக் கேள்வியைத்
திடீரெனக் கேட்டதும், மாலையில் நடந்த நிகழ்வு நினைவிற்கு வர, திகைப்புடன் தமையனைப்
பார்த்தாள்.
ஜோஷிதாவைப் பற்றி அண்ணனுக்குத்
தெரியாது என்று அறிந்திருந்த போதும், அவள் இன்று கடைக்கு வந்த போது ஸ்ரீராம் காரில்
இருந்தான். அப்போது ஏதேனும் நடந்திருக்குமோ என்ற அச்சத்துடன் அவனைப் பார்த்தாள்.
தங்கையின் பார்வையையும்,
திகைப்பையும் கண்ட ஸ்ரீராமிற்கு உள்ளம் பரிதவித்தது.
“சஹானா!” என்று அவளைப் பிடித்து
உலுக்கினான்.
“திடீர்னு என்ன இப்படி ஒரு
சந்தேகம் உங்களுக்கு…?”
“நான் கேட்ட கேள்விக்கு
இது பதில் இல்ல சஹி!”
சமாளிப்பாகச் சிரித்தவள்,
“இப்படி ஒரு கேள்வி கேட்கறதே தப்புன்னு காலைல சொன்ன அண்ணன், திடீர்னு இப்படி ஒரு கேள்வி
கேட்டா திகைக்காம என்ன பண்ணுவேன்?” என்றாள்.
ஆனால், அவளது விழிகளில்
தெரிந்த அலைக்கழிப்பைக் கண்ட ஸ்ரீராம், ‘இவள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள்’ என்று புரிந்து
கொண்டான்.
அண்ணனின் பார்வையில் நம்பிக்கையின்மையைக்
கண்டவள், “உன் தங்கை ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்ணா!” என்றவளை, எதுவுமே சொல்லாமல்,
பார்த்தான்.
“ம்ச்சும்! இவ்வளவு சொல்றேன்
நம்பலையா நீங்க?” என்று அவனிடம் செல்லம் கொஞ்சினாள்.
“ம்” என்ற முறுவலுடன்,
“நீ சொல்றது உண்மையா இருந்தா, ரொம்ப சந்தோஷம்மா!” என்றவன் வீட்டினுள்ளே செல்ல, அயற்சியுடன்
அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள் சஹானா.
***********
“தினமும் தான் உங்களுக்கு
வேலை இருக்கு. அதுக்காக இவ்வளவு நேரம் சாப்பிடாமலிருந்தா எப்படி?”
உடை மாற்றிக்கொண்டு வருகிறேன்
என்றவனை, அறைக்குக் கூடச் செல்ல விடாமல் சாப்பிட வரச்சொல்லி வற்புறுத்தியவள், முணுமுணுத்துக்
கொண்டே பரிமாறுவதைப் பார்த்தான் பிரபு.
‘தன் மீதிருக்கும் கோபம்
சற்று தணிந்துவிட்டதோ!’ என்ற நப்பாசையுடன் சப்பாத்தியை விண்டு வாயில் வைத்தான்.
“இவ்ளோ நேரம், அண்ணன் சாப்பிடாம
உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. நான்தான் கம்பெல் பண்ணி சாப்பிட வச்சேன்.
இன்னும் தூங்கிக்கூட இருக்க மாட்டாங்க” என்றாள்.
அடுத்த கவள உணவை வாயில்
வைத்தவனுக்குச் சப்பென்றாகி விட, “அதானே, என்னடா! திடீர்ன்னு நம்மமேல இவ்வளவு அக்கறைன்னு
பார்த்தேன்” என்றான் எரிச்சலுடன்.
சட்டென அவனைத் திரும்பிப்
பார்த்தவள், “உங்க மேல வச்சிருந்த அக்கறை, கரிசனம், நம்பிக்கை அத்தனையும் காணாமல் போகக்
காரணமே நீங்கதானே. மறந்து போச்சா!” முகம் மாறாமல், குரலில் மட்டும் அழுத்தத்தைக் கூட்டிச்
சொன்னாள்.
தாடை இறுக தன்னிடம் எதுவோ
சொல்லத் திரும்பியவனை, பார்வையாலேயே தடுத்து நிறுத்தினாள்.
“போதும். அண்ணன் நம்மள கவனிக்க
நிறைய வாய்ப்பிருக்கு. வேற எதுவும் பேசவேணாம். சாப்பிடுங்க…” என்றாள்.
கண்களை அழுந்த மூடித்திறந்தவன்,
மளமளவெனத் தட்டிலிருந்ததை காலி செய்துவிட்டு எழுந்தான்.
“என்ன எழுந்துட்டீங்க? இன்னொரு
சப்பாத்தி வச்சிக்கோங்க… அரைவயிறு கூட நிரம்பியிருக்காது…” என்றாள் அவசரமாக.
தண்ணீரை எடுத்துப் பருகியவன்,
“நீ பேசினதே வயிறு நிறைஞ்சி போச்சு” என்றவன் கையைக் கழுவிக் கொண்டு அறைக்குச் சென்றான்.
சட்டைப் பொத்தானைக் கழற்றியபடி
கட்டிலில் அமர்ந்தவன், அப்படியே விட்டத்தைப் பார்த்தபடி படுத்தான். ஒரே வாரத்தில் தனது
வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
‘சஹானா மீதும் எந்தத் தவறும்
சொல்ல முடியாது. அவளது நிலையில் யாராக இருந்தாலும், இதைவிட மோசமாக நடந்து கொள்வார்கள்.
இவளாக இருக்க, இத்தனைப் பொறுமையுடன் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறாள். தவறையெல்லாம் தன்மீது வைத்துக்
கொண்டு விதியை நொந்துகொண்டு என்ன செய்வது?
அம்மாவின் நிலையைப் பார்த்தும்
நான் ஏன் இந்த வழியில் வந்தேன்? அப்பாவின் மீதிருந்த கோபம் என் கண்ணை மறைத்து விட்டதா?
திருமணமே வேண்டாமென்று தானே இருந்தேன். அம்மாவின் வற்புறுத்தலால் அல்லவா இத்திருமணமே
நடந்தது. ஆனால், அந்தநேரத்தில் நான்
பிடிவாதமாக மறுத்திருக்க வேண்டும்.
அப்படி நடந்திருந்தால், சஹானா தன்னை மணந்து கொண்ட
பாவத்திற்காக, செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்க மாட்டாள்.’
தன்மீதே வெறுப்பும், மனத்தில்
கசப்பும் எழ தலையைக் கோதிக் கொண்டான். கதவை அடைக்கும் சப்தம் கேட்டுச் சட்டென எழுந்து
அமர்ந்தான்.
மெல்ல அவனருகில் வந்தவள்,
“நீங்க சரியாவே சாப்பிடல, இந்தப் பாலையாவது குடிங்க…” என்றாள்.
அவன் நிமிர்ந்தே பார்க்காமல்,
“ம்” என்று சொல்ல மேஜை மீது வைத்துவிட்டு சென்றாள்.
தன்னருகில் தயங்கி நின்றவளைக்
கண்டதும், ‘ஏதேனும் பேசுவாளா!’ என்று அவன் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, அவள் மௌனமாகச்
சென்றது ஏமாற்றமாக இருந்தது அவனுக்கு.
அறைக்குள் செல்லும் வரை
பார்வையை அவள் மீதே பதித்திருந்தவன், நீண்ட மூச்சை வெளியிட்டான்.
படுக்கையில் விழுந்த சஹானாவிற்கு
நெஞ்சைப் பிசைந்தது.
தன்னால் தான் அவன் சரியாக
சாப்பிடவில்லை என்ற வருத்தத்தில் பாலுடன் அவள் வந்த போது, நெற்றியைச் சுருக்கியபடி
யோசனையுடன் படுத்திருந்தவனைப் பார்க்கவே வேதனையாக இருந்தது அவளுக்கு.
அவனிடம் ஆறுதலாகப் பேசவேண்டும்
என்ற எண்ணம் தலைதூக்கியதை நினைத்து, தன்னையே கடிந்து கொண்டு அறைக்கதவை சப்தமாக மூடினாள்.
விருட்டென எழுந்து அமர்ந்தவன் தன்னை நிமிர்ந்து பார்க்காமல் தலைகுனிந்து அமர்ந்திருந்திருந்ததைக்
காண அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.
பேசலாமா வேண்டாமா என இருமனத்துடன்
போராடியபடி இருந்தவள், தன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டாள்.
எங்கே அவன் நிமிர்ந்து தன்னைப்
பார்த்தாலும் அவனிடம் பேசிவிடுவோமோ என்ற பயத்தில் வேகமாக தன்னறைக்குள் வந்துவிட்டாள்.
அவனது வேதனையைக் கண்டு,
‘இளகிவிடவா?’ என்று அவளிடம் யாசித்த காதல் கொண்ட மனத்தை, சிரமப்பட்டு தனது கட்டுக்குள்
கொண்டுவந்தாள்.
தனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை?
இதே பிரபு யாரோவாக இருந்தால், நான் ஏன் இத்தனை வருத்தப்படப் போகிறேன்? என்னுடைய பிரபுவாகிவிட்டானே!
என் பிரபு எனக்கு மட்டுமே
சொந்தம். இதில் வேறொருத்திக்கு அவனைப் பங்களிக்க என்னால் இயலாது. அது திருமணத்திற்கு
முன்பானாலும் சரி, பின்பானாலும் சரி…
மன்னிப்பு என்பதே, அடுத்த
தவறுக்கு அஸ்திவாரம் தான்.
இலகுவாகக் கிடைத்து விட்டால், எந்தப் பொருளுக்குமே மதிப்பிருக்காது.
சிரமப்பட்டால் தான், சிறு துரும்பாக இருந்தாலும் அதன் அருமை தெரியும்.
இது அவனுக்கான தண்டனை காலம்
மட்டும் அல்ல. மனத்தை மாற்றிக் கொள்ள முடியுமா? முடியாதா! எனப் போராடிக் கொண்டிருக்கும்
எனக்கான, கால அவகாசமும் கூட. இதன் முடிவு, காலத்தின் கையில் தான் இருக்கிறது.
காலமே இதற்குப் பதில் சொல்லட்டும்.
காலம் கனிந்து என் மனம் வென்றுவிட்டால், என் பிரபுவுடன் புதியதொரு வாழ்க்கையைத் துவங்கிவிடுவேன்.
இல்லையென்றால்…!’
வண்ணத்துப் பூச்சியின் இறகைப்
போல, இமைகளை வேகமாகத் தட்டி விழித்து, வழிய துடித்த கண்ணீரைக் கட்டுப்படுத்தினாள்.
No comments:
Post a Comment