Monday, July 27, 2015

உறவெனும் புதிய வானில்

                                                  அத்தியாயம் - 32

“இந்த ஃபைலை ஜி.எம்கிட்ட கொடுத்திடுங்க…” என்று பியூனிடம் ஃபைலை நீட்டினான் ஸ்ரீராம்.

“சரி சார்!” என்றபடி வாங்கிக் கொண்ட பியூன், “கேக்கறேன்னு தப்பா நினைச்சிக்காத சார்! வூட்ல எதனா பிரச்சனையா சார்?” என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

“தப்பா நினைச்சிக்காத சார்! நீ இப்பிடி உம்முன்னு இருந்து நான் பாத்ததேயில்லயா… அதான் கேட்டேன்” என்றான் பியூன்.

“அதெல்லாம் எதுவுமில்ல. கொஞ்சம் வேலை டென்ஷன். நீங்க வேலையைப் பாருங்க…” என்றான் சுரத்தே இல்லாமல்.

“இன்னிக்கு நேத்தா பாக்கறேன்… உன்னை எனக்குத் தெரியாதா சார்!” என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியில் சென்ற பியூன், சற்று நேரத்திற்கெல்லாம் ஆவி பறக்கும் காஃபியுடன் திரும்பி வந்தான்.

 நெற்றியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஸ்ரீராமின் எதிரில் வைத்தவன், “காப்பிய குடிச்சிடு சார்… உனக்காக சூடா கொண்டாந்தேன்” என்று சொல்லிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே சென்றான்.

ஸ்ரீக்கும் அப்போது அது தேவையாக இருக்க, காஃபி கப்புடன் ஜன்னலருகில் சென்று நின்றான்.

யோசனையுடன் ஜன்னல் வழியாக வெளியே வெறித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.

சென்னையிலிருந்த இரண்டு நாட்களில் நடந்த நிகழ்வுகளெல்லாம் அவனது சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்துவதாகவே இருந்தது. ‘பிரபுவும், சஹானாவும் இயல்பாக பேசிக் கொள்வதைப் போலிருந்தாலும், அவர்களுக்கிடையிலிருந்த அன்னியோன்யம், இப்போது சுத்தமாக இல்லை’ என்றே தோன்றியது.

ஆனாலும், அவனைப் பொறுத்த வரையில், முழுதாக விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் தங்கையிடமும், பிரபுவிடமும் பேச அவன் தயாராக இல்லை. அதனால், இயல்பாகவே நடந்துகொண்டான். தென்காசிக்கும் திரும்பி விட்டான். ஆனாலும், மனம் எதிரும் ஈடுபட மறுக்கிறது.

தங்கையின் வாழ்க்கையில் இருக்கும் சீர்கேட்டை அறிந்துகொள்ள, மனம் தவித்தது. நிச்சயமாக சஹானா வெளிப்படையாக எதையும் சொல்லப்போவதில்லை. அப்படியிருக்க, அவளிடமே இதைப் பற்றிக் கேட்டுச் சங்கடத்தில் ஆழ்த்தவும், அவனுக்கு மனமில்லை. அதோடு, வர்ஷாவின் வளைகாப்பு முடியும் வரை காத்திருக்க நினைத்தான்.

எப்போதும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவனை என்னவென்று வீட்டிலிருப்பவர்கள் விசாரிக்க, வேலைப் பளு’ என்று சமாதானப்படுத்திவிட்டான். ஆனால், திவ்யாவைத் தான் அவனால் சமாளிக்க முடியவில்லை.

ஊருக்குத் திரும்பி வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இரண்டு முறை அவளாக போன் செய்த போது, மீட்டிங்கில் இருப்பதாகக் கூறி தவிர்த்துவிட்டான்.

அதன்பிறகு அவள், அவனுடைய வீட்டுத் தொலைபேசியில் அழைக்க, தவிர்க்க முடியாமல் பேசினான். நாளைச் சந்திக்க வருகிறேன் என்றும் சொன்னான். ஆனால், அதைக் கடைபிடிக்கத் தவறிவிட்டான்.

முன்தினத்திலிருந்து இருமுறை போனில் அழைத்துவிட்டாள். நான்குமுறை குறுஞ்செய்தியும் அனுப்பிவிட்டாள். எதற்குமே அசைந்து கொடுக்காமல், ‘இப்போதிருக்கும் மனநிலையில் அவளைச் சந்தித்தாலும், இயல்பாக பேச முடியாது’ என்ற காரணத்தால், அவளை இன்னும் சந்திக்காமல் தவிர்த்து வந்தான்.

அதே நினைவுடனே, கையிலிருந்த காஃபியை உறிஞ்சியவனது நாக்குச் சுட்டுக் கொள்ள, “ஸ்! ஆ…!” என்றவன்  வேகமாக தண்ணீரை எடுத்துப் பருகினான்.

நன்றாக பொத்துக் கொண்ட நாக்கில் எரிச்சல் அடங்கவேயில்லை. சலிப்புடன் நெற்றியைத் தடவிக் கொண்டே இருக்கையில் அமர, யாரோ கதவை தட்டும் சப்தமும் கேட்டது.

சப்தமாக, “வாங்க…” என்றான்.

“ஹாய் ராம்! குட்மார்னிங்” என்றபடி அறைக்குள் நுழைந்தாள் திவ்யா.
அவளை அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராதவன், திகைத்துப் போனான்.

ஆயினும், அவளது மலர்ந்த முகத்தைப் பார்த்ததும், தனது இறுக்கத்தைக் களைந்து சிறு முறுவலை உதிர்த்தான்.

“குட்மார்னிங்! உட்கார்” என்று இருக்கையைக் காட்டினான்.

“தேங்க்யூ!” என்றபடி அமர்ந்தவள், அவனது முகத்தையே கூர்ந்து பார்த்தாள்.

பியூனை அழைத்து அவளுக்கும் காஃபி கொண்டுவரச் சொன்னவன், “அப்புறம், எப்படியிருக்க?” என்று விசாரித்தான்.

“பரவாயில்லயே, நாலு நாள் கழிச்சி என்னை ஒருவழியா விசாரிச்சிட்டீங்களே…” என்றாள்.

கீழுதட்டைக் கடித்து தன்னை சமன்படுத்திக் கொண்டவன், “சரி, என்ன இந்தப் பக்கம் திடீர் விஜயம்?” என்றான்.

“நான் அத்தனை முறை போன் செய்தும் நீங்க என்னைப் பார்க்க வரல. சரி பிஸியா இருக்கீங்களேன்னு நானே வந்துட்டேன்” சொல்லும்போதே, லேசான சோகம் அவளது குரலில் இழையோடியது.

சட்டென் அவனுக்கு எரிச்சல் மூள, “என்னைச் சந்தேகப்படறியா?” என்றான் கோபத்துடன்.

“இது நான் கேட்கவேண்டிய கேள்வி. என்னை ஏன் அவாய்ட் பண்றீங்க?” என்றாள்.

“படிச்ச பொண்ணு மாதிரி பேசு. பைத்தியம் மாதிரி உளறாதே” என்றான் வேகமாக.

“படிச்ச பொண்ணு என்ன? படிக்காத பொண்ணு என்ன? நீங்க செய்யறதைப் பார்த்தா எல்லாப் பொண்ணுங்களும் ஒரே மாதிரிதான் யோசிப்பாங்க” அவளும் கோபத்தை மறைத்துக் கொண்டு பேசினாள்.

“ஆஃபிஸ் வேலை கொஞ்சம் அதிகம். அதோட, வர்ஷா வளைகாப்பு வேலை வேற…” என்று மெல்ல முனகினான்.

“என் முகத்தைப் பார்த்து பேசுங்க ராம்! என்னதான் ஆஃபிஸ் வேலை இருந்தாலும் அதை என்னிடம் சொன்னா நான் புரிஞ்சிக்க மாட்டேனா? என்னை அவாய்ட் பண்றாமாதிரி தானே பேசினீங்க...”

ஸ்ரீராமிற்கு ஆத்திரமாக வந்தது.

“சரி, அப்படி பேசினதுக்கு சாரி! போதுமா…” என்றவன் தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

அவனைப் பார்க்கவே அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. ‘எதையோ மனத்திற்குள் போட்டு உழப்பி, தன்னையே வருத்திக் கொண்டிருக்கிறான்’ என்று புரிய, அவனருகில் சென்றாள்.

“ராம்! ஏதாவது பிரச்சனையா?” கவலையுடன் கேட்டாள்.

இப்போது அவளிடம் அவனால் சொல்லவும் முடியவில்லை… சொல்லாமல் இருக்கவும் இயலவில்லை.

‘தான் ஏதாவது சொல்லி, கடைசியில் அது பொய்யாகப் போகும் பட்சத்தில், பிரபுவின் மீது அவளுக்கொரு தவறான எண்ணம் தோன்றிவிடக்கூடாது’ என்று பயந்தான்.

“ஒண்ணுமில்ல… இது கொஞ்சம் பர்சனல்… அதாவது, எங்க குடும்ப விஷயம். ப்ளீஸ் எதுவும் கேட்காதே…” என்றான்.

ஆதரவுடன் அவனது தோளைப் பற்றிக் கொண்டிருந்தவளது கரம், தொய்ந்து விழுந்தது. அவனது வார்த்தைகள் மனத்தை முள்ளாகத் தைக்க, உணர்ச்சிகளைக் களைந்த முகத்துடன் தனது கைப்பையை எடுத்தாள்.

“நான் கிளம்பறேன்…” என்றவள் விறுவிறுவென அங்கிருந்து சென்றாள்.
‘ம்’ என்ற ஸ்ரீராம் அவள் பக்கமாகத் திரும்பவே இல்லை.

“இன்னா சார்! டாக்டரம்மாவை ஏதாவது சொல்லிக்கினியா? அழறா மாதிரி போவுதே… என்னமோ போ சார்… நல்ல டாக்டரம்மா சார்… அதை அழவுட்டுகினியே… வாங்கியாந்த காபியும் வீணா பூட்ச்சி…” என்றவன், ஸ்ரீராம் குடிக்காமல் வைத்திருந்த காஃபியையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

அப்போதுதான், பேசிய வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்த ஸ்ரீராம் தன்னையே நொந்து கொண்டான்.

‘இருக்கும் பிரச்சனை போதாதென்று இதுவேறு. நான் ஏன் அப்படிப் பேசினேன்? பாவம் திவ்யா… என்ன நினைத்திருப்பாள்? கடவுளே!’ என்று அலுத்துக் கொண்டான்.

*************

“இன்னும் கொஞ்சம் வச்சிக்கோங்க தம்பி!” என்று அவியலை அவனது தட்டில் வைத்தார் வைதேகி.

“அத்தை! போதும்… இதுவே வயிறு நிரம்பிடும் போலிருக்கே. நைட் நான் எப்படி சாப்பிடுறது?” என்று போலியான கவலையுடன் சொன்னான் ஸ்ரீராம்.

“நீங்க வீட்டுக்குப் போறதுக்குள்ள செரிச்சிடும் சாப்பிடுங்க…” என்று சொல்லிக் கொண்டிருக்க, வீட்டிற்குள் நுழைந்த திவ்யா, இதையெல்லாம் பார்த்துக் கொண்டு வாசலருகிலேயே நின்றிருந்தாள்.

சிரிப்புடன் நிமிர்ந்தவன், தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டதும், “ஹாய் குட் ஈவ்னிங்!” என்றான்.

கடுகடுத்த முகத்துடன் அவனது மாலை வணக்கத்தைப் புறம் தள்ளியவள், எதுவுமே பேசாமல் தனது அறைக்குச் சென்றாள்.

அவளது கோபத்தைப் புரிந்து கொண்டிருந்தவன், அதிருப்தியுடன் புருவத்தை உயர்த்தினான்.

மகளின் கோக்கைக் கவனித்த வைதேகி, “நீங்க சாப்டுட்டே இருங்க தம்பி! இதோ வந்திடுறேன்” என்றவர் கவலையுடன் மகளது அறைக்கு விரைந்தார்.

தோளிலிருந்த கோட்டை  ஹாங்கரில் மாட்டிவிட்டு, பின்னியிருந்த கூந்தலை விரித்து உதறி அப்படியே உயர்த்திக் கொண்டையிட்டாள்.

“திவி! மாப்பிள்ளை வந்திருக்கார்… அவரை வாங்கன்னு ஒரு வார்த்தைக்கூடச் சொல்லாம வர்ற… இதெல்லாம் நல்லாவா இருக்கு? அவர் என்ன நினைச்சிக்குவார்?”

அன்னைக்கே உரிய கவலையும் ஆதங்கமுமாக வினவினார் வைதேகி.
அலட்சிய முகபாவத்துடன் திரும்பியவள், “அதான், விருந்து உபச்சாரமெல்லாம் நீ பலமா பண்றியேம்மா… அப்புறம் என்ன?” என்றாள்.

“ஏய்! அவர் உன்னைப் பார்க்கத்தானே வந்திருக்கார். நீ இப்படிப் பேசற?” என்றார் கோபத்துடன்.

அன்னையின் கோபத்தைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல், “அவர் ஒண்ணும் சும்மா வரல. அவர் பேசின பேச்சு இங்கே இழுத்துட்டு வந்திருக்கு” என்றவள், “எனக்குப் பசிக்குது… ரெண்டு அடை சுட்டு வைம்மா. குளிச்சிட்டு வந்திடுறேன்” என்று விட்டேத்தியாகச் சொல்லிவிட்டுச் செல்லும் மகளை, ஆற்றாமையுடன் பார்த்தார்.

கையைப் பிசைந்தபடி ஹாலுக்கு வந்தவர், “ஐந்து நிமிஷத்தில் வந்திடுவா தம்பி! நீங்க இன்னொரு அடை…” என்று சொல்ல, “அச்சச்சோ! அத்தை இனி முடியவே முடியாது…” என்று சொல்லிக் கொண்டே எழுந்து வாஷ்பேசினை நோக்கி ஏறக்குறைய ஓடினான்.

அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாலை இறக்கி, டிக்காஷனைக் கலந்து கொண்டு வந்தார் வைதேகி.

“இந்தாங்க தம்பி!” என்று அவனிடம் கொடுத்தார்.

“வாவ்! வாசனையே அமர்க்களமா இருக்கே…” என்றபடியே வாங்கிப் பருகியவன், “பிரமாதம்… எங்க வீட்டுக் காஃபி மாதிரியே அட்டகாசமா இருக்கு” என்றான்.

“சர்க்கரை போதுமா? சூடு சரியா இருக்குங்களா?” என்று வினவ, “எல்லாமே அருமையா இருக்கு. எங்க ஹிட்லர் அத்தையோட கைமணம், அப்படியே உங்க சமையல்ல தெரியுது…” என்று வருங்கால மாமியாரின் தலையில் பெரிய ஐஸ் பாரையே இறக்கி வைத்தான்.

இருவரது உரையாடலையும் கேட்டுக் கொண்டே உர்ரென்ற முகத்துடன், அவன் அமர்ந்திருந்த சோஃபாவிலேயே வந்தமர்ந்தாள் திவ்யா.

“அம்மா! எனக்குப் பசிக்குதுன்னு சொன்னேனில்ல… கொஞ்சம் உன் பொண்ணையும் கவனி. அதுக்குள்ள உன் மாப்பிள்ளையை காக்கா தூக்கிட்டுப் போயிடாது” என்றாள் கோபத்துடன்.

“என்னது காக்கா தூக்கிட்டுப் போயிடுமா?” கேட்டுக் கொண்டே அவளைத் திரும்பிப் பார்த்தவன் தீவிரமான முகபாவத்துடன், “காக்கா தூக்கிட்டுப் போக, நான் என்ன வடையா…?” என்று கேட்டான்.

அதுவரை போலியாக குடிகொண்டிருந்த கோபம் விலகியோட, தன்னையும் மீறி சிரித்துவிட்டாள் திவ்யா.

மகளின் துடுக்குத்தனத்தைத் கண்டிக்கும் வகையில், “ஏய் திவி!” என்ற வைதேகியும், அவனது பதிலில் சட்டென சிரித்துவிட்டார்.

கலகலவென நகைத்த திவ்யாவின் முகத்தையே அவன் முறுவலுடன் பார்த்துக் கொண்டிருக்க, அங்கிருந்து மெல்ல நழுவினார் வைதேகி.

“அப்புறம்… கோபமெல்லாம் போயிடுச்சா?” என்று கேட்டான்.

துப்பட்டாவின் முனையைக் கையில் சுற்றிக் கொண்டே நிமிர்ந்தவள், “நீங்க சொன்ன வார்த்தை என்னைக் காயப்படுத்தியிருக்குன்னு தெரிஞ்சதும், என்னைத் தேடி வந்திருக்கீங்களே! அதுக்கப்புறமும் உங்கமேல கோபம் இருக்குமா என்ன?” என்றாள் மென்குரலில்.

“அப்போ… கோபமா இருக்கறது மாதிரி நடிச்சிருக்க…?”

அவனை ஊன்றிப் பார்த்தவள், “வெளியே சாதாரணமா பேசிகிட்டு, உங்க மனசுக்குள்ளயே எதையோ வச்சி மருகறீங்களே அதைவிடவா…” என்றாள்.

மௌனமாக நெற்றியைத் தடவிக்கொண்டவனது முகம், பலவிதமான பாவங்களை வெளிப்படுத்தின. பார்வையை அகற்றாமல் அவனையே ஆழ்ந்து பார்த்தவள், ஆதரவுடன் அவனது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“திவ்யா! நான்…” சொல்லிக் கொண்டே திரும்பியவனது கண்கள் மிகுந்த வேதனையை வெளிப்படுத்தின.

“ராம்! உங்க மனசுல இருக்கற பாரத்தை பகிர்ந்துகிட்டா, கொஞ்சம் இலகுவா இருக்குமேன்னு தான் சொன்னேன். எனகிட்ட சொல்லமுடியாத அளவுக்குப் பர்சனல்னா… பரவாயில்ல...” என்றாள்.

மெல்லிய குரலில் நடந்தவைகளைச் சொல்லி முடித்தவன், “இதான் நடந்தது… எனக்கென்னவோ சஹானா முன்ன மாதிரி சந்தோஷமா இல்லைன்னு தோணுது. தன் மனசுல இருக்கறதை வெளியே சொல்லவும் மாட்டா…” என்றான்.

அவன் சொன்ன அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டவள், “இது உங்க யூகம் மட்டும் தானே…” என்றாள்.

“ம், இருக்கலாம்… அப்படி இருந்துட்டா ரொம்ப நல்லாயிருக்கும். ஆனா, ஏதோ ஒண்ணு சரியில்லன்னே தோணுது திவி!” என்றான்.

“அப்படி எதுவும் இருக்காதுன்னு நம்புவோமே… ஏன் நெகடிவா யோசிக்கணும்?” என்றாள்.

சற்று யோசித்தவன், “சஹியும், பிரபுவும் முன்ன மாதிரி…” என இழுத்தான்.

“ஏன்? பிரியமா இருக்கறவங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் வராதா? கணவன், மனைவிக்குள்ள சின்னச் சின்ன உரசல் வர்றதெல்லாம் சகஜம் தானே” எனக் கேட்டாள்.

“என் சந்தேகமே, இது சின்ன உரசல் தானாங்கறது தான் திவ்யா…” என்றான்.
இந்த சில நிமிடப் பேச்சிலேயே, ‘இந்தப் பிரச்சனை என்னவென்று அறிந்து கொள்ளவேண்டும். அதேநேரம் அவன் நினைப்பது போலிருந்தால், அவனது நடவடிக்கை என்னவாக இருக்கும்?’ என்பதையும் ஓரளவு யூகித்துவிட்டாள்.

“ராம்! இப்போதைக்கு இந்தப் பிரச்சனையைக் கொஞ்சம் தள்ளி வைங்க. எனக்குத் தெரிஞ்சி… எதுவாக இருந்தாலும், சஹானாவே இதை ஹாண்டில் பண்ணிப்பாங்க” என்றாள்.

“அப்போ என்னை இதுல தலையிடாதேன்னு சொல்றியா?” கோபத்துடன் கேட்டான்.

“அப்படி நீங்க நினைச்சபடி இருந்தால், சஹானாவுக்கு நீங்க உதவலாமே தவிர நிச்சயமா நீங்க தலையிடக்கூடாது. உங்க தங்கையே அதை விரும்பமாட்டாங்க. இது அவங்களோட குடும்ப விஷயம்” நிதானமாகவே சொன்னாள்.

“அப்போ நான் மூணாவது மனுஷனா?” கோபம் சற்றும் குறையாமல் கேட்டான்.

“அப்படிச் சொல்லல ராம்! நீங்க தலையிட்டா பிரச்சனை பெரிதாகும். சஹானாவா கேட்காம, நீங்க இதில் மூக்கை நுழைக்காதீங்க…” என்றாள்.

“நீயும் ஒரு சாதாரண பொண்ணுதான்னு நிரூபிச்சிட்ட திவ்யா! என்னைக்கு இருந்தாலும் பொண்ணுங்களுக்கு கல்யாணமானா புருஷன் தனக்கு மட்டுமே சொந்தம்னு நினைக்கற. அதான் இப்படியெல்லாம் பேசற…” என்றான்.

“பாருங்க ராம்! நான் சாதாரண பொண்ணுதான். அதுக்காக சுயநலவாதி இல்ல. கல்யாணமானா புகுந்த வீட்டைத் தன்னோட குடும்பமா நினைக்க எனக்கும் தெரியும். அப்படி நினைச்சித்தான் சொன்னேன். அது உங்களுக்குத் தப்பா தெரிந்தா, நான் எதுவுமே செய்யமுடியாது” என்றாள் வேகமாக.

அதற்குமேல் அங்கே அமர்ந்திருக்கும் பொறுமை இல்லாமல் எழுந்தவன், “நான் கிளம்பறேன்…” எனச் சொல்லிக் கொண்டே வாசலை நோக்கி நடந்தான்.

கோபமாகக் கிளம்பிச் செல்பவனை, எதுவும் சொல்லாமல் பார்த்தாள்.

அவளுக்கென்று அவன் வாங்கி வந்திருந்த குர்த்தி இருந்த கவர், அவளிடம் சேர்ப்பிக்கப்படாமல், சோஃபாவில் அப்படியே இருந்தது.

No comments:

Post a Comment