Saturday, August 1, 2015

உறவெனும் புதிய வானில்



அத்தியாயம் - 33

“பிரபு! நான் சொன்னதை யோசிச்சியா?”
சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரபு, நிமிர்ந்து அன்னையைப் பார்த்தான்.

“என்னப்பா மறந்துட்டியா? நம்ம வர்ஷாவோட வளைகாப்பு இன்னும் நாலு நாளில் வருதே. நீங்க ரெண்டு பேரும் ரெண்டுநாள் முன்னால் கிளம்பிப் போங்கன்னு சொன்னேனே…” என்றார்.

“ம், இப்போ இருக்கற நிலையில நான் பங்ஷனுக்கு வருவேனான்னே தெரியல… இதுல எங்கே முன்னாலயே கிளம்பறது?” என்றான்.

இவர்களது பேச்சில் தலையிடாமல், உணவருந்திக் கொண்டிருந்தாள் சஹானா.

“என்னப்பா இப்படிச் சொல்ற? ஆஃபிஸ், பேக்டரின்னு ஆயிரம் வேலை இருக்கத்தான் செய்யும். அதுக்காக அதையே கட்டிக்கிட்டு தொங்க முடியுமா? உங்க கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற முதல் பங்ஷன். சஹிக்கும் மனசுக்குள்ள ஆசையிருக்கும் இல்ல…” என்றார்.

அதுவரை அமைதியாக இருந்தவள், “பரவாயில்ல அத்தை! நாம எல்லோரும் சேர்ந்தே போகலாம். உங்க பிள்ளையை மட்டும் கட்டாயம் வரச்சொல்லி சொல்லுங்க” என்றாள்.

திரும்பி அவளைப் பார்த்தான். அவளோ, கவனமாக அவன் பக்கமாகத் திரும்பாமல் அமர்ந்திருந்தாள். 

“எனக்கு வரக்கூடாதுன்னு இல்லயே… நிலைமை அப்படியிருக்கு, நான் என்ன செய்யறது?” சொல்லிக் கொண்டே உணவை வாயில் வைத்தவனுக்குச் சட்டென புரையேறியது.

கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு அவன் இரும, அவன் தலையில் தட்ட எழுந்தவள், நினைவு வந்தவளாக நீண்ட கரத்தை இழுத்துக் கொண்டாள். தண்ணீர் டம்ளரை அவனருகில் வைத்துவிட்டு, கையை அலம்பச் சென்றாள்.

தேவி இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், பெற்றவர்களது திகைத்தப் பார்வையைக் கண்ட பிரபுவிற்கு, அவமானமாக இருந்தது. எதுவுமே பேசாமல் எழுந்து சென்றான்.

கௌரியின் பெற்ற வயிறு கலங்கியது. கடைசியில் தான் பயந்தது போலவே நடந்து கொண்டிருப்பதைக் கண்டு தவித்துப் போனார். 

‘இதில் யாரைக் குற்றம் சொல்வது? எல்லாவற்றிற்கும் முன்னோடியான கணவரையா? தெரிந்தே தவறு செய்த மகனையா? ஏல்லாவற்றிற்கும் மேலாக, தவறை சரிசெய்வதாக நினைத்து, மகனின் வாழ்வை, கேள்விக்குறி ஆக்கியிருக்கும் தன்னையேவா?’ என்று அவருக்குப் புரியவில்லை.

வேதனை நிறைந்த முகத்துடன் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்த கணவரையும், அதுவரை இயல்பாகப் பேசிக் கொண்டிருந்த மகன், இறுகிய முகத்துடன் செல்வதையும் கண்கலங்கப் பார்த்தார். 

கௌரிக்கு மனமே ஆறவில்லை. மகனின் வாழ்க்கையைச் சீர்படுத்துவதாக எண்ணி செய்த காரியம், முதலுக்கே மோசமானதை நினைத்து மாய்ந்து போனார். 

‘இந்த விஷயத்தில், தான் தலையிடுவதா வேண்டாமா?’ என்று வெகுநேரம் யோசித்தும், எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை. மருமகள் மீது கோபம் கூட வந்தது.

ஒருகட்டத்திற்கு மேல் தாளவியலாமல், எழுந்து சமையலறைக்குச் சென்றார். பாத்திரங்களை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த சஹானா, சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
கோபத்துடன் நின்றிருந்த மாமியாரைக் கண்டதும், இமைக்காமல் பார்த்தாள்.

“சஹானா! உனக்கே இது நல்லாயிருக்கா? உனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிடுச்சோன்னு ஒரு சந்தேகம் இருந்தது. அது ஊர்ஜிதமானதும் சரி கொஞ்ச நாள்ள ரெண்டு பேரும் சமாதானமாகிடுவீங்கன்னு நினைச்சேன். 

ஆனா, நான் எவ்வளோ பெரிய தப்பு பண்ணியிருக்கேன்னு இன்னைக்கித்தான் தெரிஞ்சிகிட்டேன். நீ என் பிள்ளைக்கு எவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்கன்னு கொஞ்சம் யோசிச்சிப் பாரு… 

அவன் செய்தது சரின்னு சொல்லல. தப்புதான்… அதுக்காக, நீ இப்படி ஒரு முடிவெடுத்திருக்க வேணாம் சஹானா! நீ செய்த காரியத்தால, என் பிள்ளை முகத்தைப் பார்க்கவே முடியல. நீ இவ்ளோ கல் மனசுக்காரியா இருப்பேன்னு நினைக்கவேயில்ல” வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி அவளைப் பார்த்தார்.

இன்னமும் அமைப்பு மாறாமல், சிலை போல அதே இடத்தில் அழுத்தமாக நின்றிருந்தாள்.

தயாராக இருந்த பால் டம்ளர்கள் அடங்கிய ட்ரேயைக் கொண்டு வந்தவள், “எடுத்துக்கோங்க அத்தை! நேரமாகுது நீங்க போய்ப் படுங்க…” சொல்லிவிட்டு, அவரது பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து அகன்றாள்.

எதுவுமே நடக்காததைப் போலப் பேசிவிட்டுச் செல்பவளை திகைப்பும், கோபமுமாகப் பார்த்தார் கௌரி. 

‘இவள் கல்நெஞ்சக்காரி மட்டுமல்ல, நெஞ்சழுத்தம் மிக்கவள்’ என்று நினைத்துக் கொண்டார்.

மாமியாரின் பார்வை வட்டத்திலிருந்து வெளிவந்த பிறகுதான், சஹானாவால் ஒரு நிலைக்கு வரமுடிந்தது. 

அவர் கேட்ட போது, “ஆமாம். இதில் முதல் குற்றவாளியே, நீங்கள்தான்’ என்று சொல்ல வாய் துறுதுறுவென்றது. முயன்று முகத்தில் எந்தப் பாவனையையும் வெளிப்படுத்திவிடாமல் அமைதியாக நின்றாள்.

அவளைப் பொறுத்தவரை, பிரபு அவளது காதல் கணவன். அவன் செய்தது மிகப் பெரிய தவறு. அதற்காக அதை மறந்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் சற்றும் இப்போதைக்கு இல்லை. 

ஒரு வேளை தனது காதல் கொண்ட மனம், இதையெல்லாம் மறந்து அவனோடு சேர்ந்து வாழ ஒத்துழைத்தால்…
அதற்காகத் தானே உள்ளக் குமுறல்களையெல்லாம் மனத்திற்குள்ளேயே போட்டுக் கொண்டு, உணர்வுகளையெல்லாம் கட்டுப்படுத்தியபடி, அவனெதிரிலேயே நடமாடிக் கொண்டிருக்கிறாள்.

இதுவரை அதற்கான சாத்தியக் கூறுகள் சற்றும் இல்லாத போதும், இம்முயற்சியைக் கைவிடும் நோக்கம் அவளுக்கு இல்லை. இந்தப் பிரச்சனையை பொறுத்தவரையில், முடிவெடுக்க வேண்டியது தாங்கள் இருவர் மட்டுமே. இதில் வேறு யாரும் தலையிடுவதையும், அவள் விரும்பவில்லை. 

என்றாவது ஒருநாள் இந்நிலை மாறும். நடந்தவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும்; எனது வாழ்வு தழைக்கும். அதுவரை, தன்னிடமிருந்து எந்த வார்த்தைகளும் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதில், மிகுந்த கவனத்துடன் இருந்தாள்.

அவர் பேசிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதது போல, பால் டம்ளரை அவரிடம் கொடுக்கும் போது உள்ளுக்குள் அச்சம் இல்லாமல் இல்லை. தன்னை ஒரு மகளைப் போல நடத்துபவரை அவமதிப்பது போல தான் நடந்து கொள்வது வேதனையைக் கொடுத்தது.

அதேநேரம் அவர் தன்னை மேலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் இருக்கவேண்டுமே என்று நினைத்துக் கொண்டே தான் சென்றாள். அவரும், அவள் கொடுத்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு, எதுவும் கேட்காமல் இருந்தது பெருத்த நிம்மதியைக் கொடுத்தது.

வழிதவறிப் போன கணவரையே தட்டிக் கேட்காதவர் அவர். இதில் பெற்ற மகனை, மருமகள் இப்படி தீண்டத் தகாதவனைப் போல நடத்துவது அவரைப் பாதிக்காமல் என்ன செய்யும்? கடைசியில் தன்னாலேயே அவர்களுக்கு இது தெரிய வந்தது தான் அவளுக்கு வருத்தமாக இருந்தது.

ஒருவழியாக அவரது பார்வைக் கணைகளைத் தாண்டி வந்தாயிற்று. இதுவரை அவர் தன்னிடம் நடந்து கொண்டது போல, இனியும் இருப்பார் என்பது சொல்வதற்கில்லை. இருந்தாலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார் என்று நம்பினாள். 

இதே யோசனையுடன் அறைக்குள் நுழைந்தவள், கடுகடுத்த முகத்துடன் அறைக்குள் சுற்றிக் கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.

அவளைக் கண்டதும் சுட்டெரித்து விடுவதைப் போலப் பார்த்தான்.

அவளோ, ‘கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா?’ என்பதைப் போன்ற ஒரு பார்வையை அவன் மீது வீசிவிட்டு, மேஜை மீது பால் டம்ளரை வைத்தாள்.

அமைதியாக செல்பவளைப் பார்த்ததும், அவனுக்குச் சுறுசுறுவென கோபம் ஏறியது.

“இப்போ திருப்தியா உனக்கு? அம்மாவுக்கு எதுவும் தெரியக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா, கடைசில எல்லாம் உன்னாலேயே வெளியே வந்தாச்சு” என்று இரைந்தான்.

அவன் அப்படிக் கேட்டதும், அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“அத்தைக்கு இன்னைக்குத்தான் விஷயம் தெரிஞ்சிதுன்னு நினைச்சீங்களா?” 

“அதுதான் நல்லா தெரியுமே. எப்படிக் கேட்கறதுன்னு மனசுக்குள்ளயே தவிச்சிகிட்டு இருந்தது நல்லாவே தெரியும். ஆனா, இப்படி நீ ஒரு விரதத்துல இருக்கேன்னு அவங்களுக்குத் தெரியாதே. 

புரையேறினா என்ன? தண்ணியை எடுத்துக் குடிக்க எனக்குத் தெரியாதா? பெரிய இவள் மாதிரி, உன்னை யாரு நடுவுல வரச்சொன்னது? ஆக மொத்தம் என்னை நிம்மதியா இருக்க விடக் கூடாதுங்கறதுல குறியா இருக்க… அப்படித்தானே” என்று சீறினான்.

“வாய்க்கு வந்ததைப் பேசாதீங்க. எனக்கு மட்டும் உங்ககிட்டயிருந்து ஒதுங்கிப் போ…” என்றவள் சட்டென அமைதியானாள்.

‘கடவுளே! என்ன பண்றேன் நான்? என் கோபமெல்லாம் வெளிப் பார்வைக்கு மட்டுமே. உள்ளுக்குள் உன் மேலிருக்கும் காதலால உருகிட்டு இருக்கேன்னு நானே சொல்லிடுவேன் போலிருக்கே…’ என்று நினைத்தவள் திடுக்கிடலான பார்வையுடன் கணவனைப் பார்த்தாள்.

அதுவரை அவள் பேசுவதை எரிச்சலுடன் கேட்டுக் கொண்டிருந்தவன், அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை முழுதாக உணர்ந்ததும், ஆச்சரியமும், திகைப்புமாக அவளைப் பார்த்தான்.

இருவரது பார்வையும் சந்தித்துக் கொண்ட நொடியில் அவன், “சஹி…!” என காதலுடன் அழைக்க, தகிக்கும் மனத்துடன் வேகமாக பார்வையை விலக்கிக் கொண்டு, அறைக்கு விரைந்தாள். 

“சஹானா!” என்றபடி அவள் பின்னாலேயே விரைந்தவனது முகத்தில் மோதுவது போல, கதவு அறைந்து மூடப்பட்டது.
“சஹி! ப்ளீஸ் கதவைத் திற. எங்கே என்னை வெறுத்து ஒதுக்கிட்டியோன்னு இத்தனை நாள் தவிச்சிட்டு இருந்தேன். 

ஆனா, உன் மனசுல இன்னும் நான் இருக்கேன்னு உன்னையும் அறியாமல் சொல்லிட்ட… எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் சஹி! இனியும் தள்ளி நின்னு என்னை தண்டிக்காதே…” இறங்கிய குரலில் கெஞ்சியபடி கதவைத் தட்டினான்.

“என்னுடைய காதலை காரணம் காட்டி உங்க வாழ்க்கையை புதுப்பிக்க நினைச்சிக்காதீங்க. உங்க மேல இருக்கும் அளவுக்கதிகமான காதல்தான், நான் எடுத்த முடிவுக்கே காரணம். என்னைக்கு என்னால உங்களை முழுமனசோட ஏத்துக்க முடியுதோ, அன்னைக்கு நானே உங்களைத் தேடி வருவேன். அதுவரைக்கும் ப்ளீஸ்!” என்றாள்.

பெருமூச்சு விட்டவன் தலையைக் கோதிக் கொண்டான்.

“நான் இவ்வளவு தூரம் கெஞ்சியும் நீ பிடிவாதத்தோட தான் இருக்க இல்ல… எனக்கும் பிடிவாதமா இருக்கத் தெரியும்… ஆனா, அதை உன்னால தாங்க முடியாது. எத்தனை நாளைக்கு இப்படி இருக்கேன்னு பார்க்கறேன்…” வீம்பும், எரிச்சலுமாக, அங்கிருந்து நகர்ந்தான்.   

No comments:

Post a Comment