Monday, August 3, 2015

உறவெனும் புதிய வானில்


அத்தியாயம் - 34

“அத்தை! நீங்களும் மாமாவும் சாப்பிட வரீங்களா? தேவியும், அவரும் காத்துட்டு இருக்காங்க…” சஹானா பெரியவர்கள் இருவரையும் அழைத்தாள்.
 

கௌரி காதிலேயே விழாதது போல அமர்ந்திருக்க, புருஷோத்தமன் இருவரையும் பார்த்தார்.

“நீ போம்மா… நான் கூட்டிட்டு வரேன்” என்றார் அவர்.

“சரிங்க மாமா!” என்றவள் மாமியாரை வேதனையுடன் பார்த்துவிட்டுச் சென்றாள்.

காலையிலிருந்து இப்படித்தான் இருக்கிறார். அவளிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. காலை உணவும் சாப்பிடவில்லை. புருஷோத்தமன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக தன் நிலையிலேயே நின்றார்.

‘நீங்க போய்ச் சாப்பிடுங்க. எனக்கு வேணாம்…” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

புருஷோத்தமனுக்கும் வருத்தம்தான். அதற்காக அதை மருமகள் மீதுகாட்ட அவர் தயாராக இல்லை. சிறிதுநேரம் பொறுத்து தானே சென்று ஓட்ஸ் கஞ்சி தயாரித்து பருகினார் கௌரி.

மதியமும் அதே கதைதான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சஹானாவிற்கு அவரது செயல்கள் குற்ற உணர்ச்சியைத் தூண்டியது.

“ஏன் அத்தை இப்படி இருக்கீங்க? என்னைத் திட்டணும்னா திட்டுங்க. அதுக்காக உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க” என்றாள்.

அழுத்தமாக அவளைப் பார்த்தவர், “என் பிள்ளையோட வாழ்க்கையே இங்கே ஊசலாடிகிட்டு இருக்கு. இதுல சாப்பாடு ஒண்ணுதான் குறை…” என்றார் கோபத்துடன்.

சஹானாவிற்கு முகத்திலடித்தது போல இருந்தது.

உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தவள், “இந்தக் கோபத்தையும், பிடிவாதத்தையும் ஆரம்பத்திலேயே நீங்க செய்திருந்தீங்கன்னா… எல்லாமே சரியாக இருந்திருக்கும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, கௌரியால் இதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

கடைசியில் தன்னைக் குற்றவாளியாக்கிவிட்ட மருமகள் மீது எரிச்சலும், கோபமும் வந்தது. ஆனால், முன்பின் மற்றவரிடம் வார்த்தையாடி பழக்கமில்லாதவருக்கு, கோபப்பட மட்டுமே முடிந்தது.

அதை வெளிக்காட்டவே மதியத்திலிருந்து அறையை விட்டு வெளியே வரவில்லை. யாருடனும் பேசவில்லை. இப்போது சஹானா வந்து அழைத்தும் அவள்புறமாக திரும்பிப் பார்க்கவும் இல்லை.

“அண்ணி! அம்மா வராங்களா இல்லையா? எனக்குப் பசிக்குது…” கையிலிருந்த மொபைலிலிருந்து பார்வையை அகற்றாமல் பேசினாள் தேவி.

மாமியாரைப் பற்றி நினைத்துக் கொண்டு வந்தவள், “ஆஹ்! அவங்க வராங்களாம் நீ சாப்பிடு…” என்று உணவைப் பரிமாறினாள்.

கலங்கிய விழிகளுடன் பரிமாறிக் கொண்டிருந்த மனைவியை ஆதங்கத்துடன் பார்த்தான் பிரபு.

தன்னையும் மீறி வழிந்த கண்ணீரை அவசரமாகத் துடைத்துக்கொண்டு, தனக்குப் பரிமாற வந்தவளைக் கை நீட்டித் தடுத்தவன், எதுவும் பேசாமல் எழுந்து செல்ல, அவள் செய்வதறியாமல் நின்றிருந்தாள்.

“அண்ணி! எனக்குப் போதும்…” என்ற தேவியின் குரலால் நினைவுலகிற்கு வந்தவள், அப்படியே தோட்டத்தில் வந்தமர்ந்தாள்.

இருந்த குழப்பமான மனநிலையில் அவளால் எதையுமே சிந்திக்க முடியவில்லை. அழவேண்டும் போலிருந்தது. ஆனால், அழக்கூடாது என்ற வைராக்கியம் வேறு தலையிட்டது. மனம்விட்டு அழக்கூட முடியாத தனது நிலையை நினைத்து சுயபச்சாதாபம் தோன்றியது.

உணவை மறுத்துவிட்டு சென்ற பிரபு, பெற்றோரின் அறைக்கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்த புருஷோத்தமன், அங்கே மகனைக் கண்டதும் புருவங்கள் உயர, ஆச்சரியத்துடன் பார்த்தார். ஒரே வீட்டில் இருந்தாலும், அவன் அந்த அறைக்கு வந்து வருடக்கணக்காகிறது. இவ்வளவு ஏன்? தந்தை என்ற உரிமையைக் கூட அவன் கொடுப்பதில்லையே.

கட்ட்டிலில் அமர்ந்திருந்த கௌரி, சற்று சரிந்து வெளியே பார்க்க, பிரபுவும் அன்னையைப் பார்த்தான்.

அவரும் ஆச்சரியத்துடன், “பிரபு!” என்று அழைத்தார்.

“உள்ளே வாப்பா!” என்ற புருஷோத்தமன் மகனுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றார்.

மகனைக் கண்டதும் இதயம் தவித்தாலும், அவன் எதற்காக வந்திருக்கிறான் என்பதை அறியாதவரா அவர். கட்டிலில் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தார் கௌரி.

“அம்மா! சாப்பிட வாங்க” என்றான்.

“நீ சாப்பிடுப்பா. எனக்குப் பசியில்ல…” என்றார்.

அன்னையின் அருகில் அமர்ந்து அவரது கைகளை தனது கைகளில் ஏந்தியவன், “சஹி மேல ஏம்மா இவ்வளவு கோபம்?” எனக் கேட்டான்.

“நான் யாருப்பா அவள் மேல கோபப்பட?” சொல்லும் போதே அவருக்கு அழுகை வந்தது.

“அம்மா! தப்பெல்லாம் என் மேல. ஆனா, தண்டனையை அவள் அனுபவிக்கிறா. கூடிய சீக்கிரமே சஹி என்னை ஏத்துக்குவாம்மா! அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு… நான்தான் அவளை ஏமாத்திட்டேன்.

உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கா, நீங்களும் அவகிட்ட கோபத்தைக் காட்டாதீங்க. அவளால தாங்கமுடியாது ப்ளீஸ்!” என்ற மகனை கண்ணீருடன் பார்த்தார்.

“பிரபு!” என்று அவர் உருக்கமாக அழைக்க, “நியாயமா தண்டிக்கப்பட வேண்டியது நான். எனக்காக சஹி அவமானப்படுறதையும், வேதனைப் படுவதையும் என்னால பார்க்க முடியாதும்மா!” என்றான் அழுத்தமாக.

கௌரி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பார்வை மட்டும் மகனைத் துளைத்தது.

“வரீங்களாம்மா! சாப்பிடலாம்” என்று மெதுவாகக் கேட்க, “ம்” என்று தலையை ஆட்டினார் கௌரி.

சந்தோஷத்துடன், “சீக்கிரம் வாங்க…” என்றபடி கதவு வரை சென்றவன் திரும்பி, “அப்பா!” என்றழைத்தான்.

வியப்பு மேலிட மகனைப் பார்த்தார் புருஷோத்தமன். கிட்டதட்ட ஒன்பது வருடங்கள் கழித்து அப்பா என்று அவன் அழைத்ததும் அவருக்கு நெகிழ்ச்சியில் உருகி நிற்க, கௌரியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சொறிந்தது.

“நீங்களும் வாங்கப்பா!” என்றவன் வெளியே செல்ல, புருஷோத்தமன் சந்தோஷத்துடன் மனைவியைப் பார்த்துச் சிரித்தார்.

தோட்டத்துக் கதவு காற்றில் அசைய, சஹானா அங்கேதான் இருக்கிறாள் என்று உணர்ந்து அவளைத் தேடிச் சென்றான் பிரபு.

இருகால்களையும் கட்டிக் கொண்டு முகத்தை அதில் புதைத்துக் கொண்டு புல்தரையில் அமர்ந்திருந்தாள் சஹானா.

அவள் அமர்ந்திருந்த கோலம் கண்டவனுக்கு உள்ளம் துடித்தது. அவள் இப்படி மனமொடிந்து அமர்ந்திருந்து அவன் பார்த்ததேயில்லை.


தன்னிடம் பேசும் போதுகூட கண்களைப் பார்த்துத் தான் பேசுவாள். அன்னையின் கோபம் அவளை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்று புரிந்ததும், வருத்தத்துடன் முறுவலித்தான்.

தன்மீது பட்டுக்கொண்டிருந்த நிலவொளி மறைந்து இருள் படர்வது தெரிய கண்களைத் திறந்து பார்த்தாள். அங்கே கௌரியைக் கண்டதும், வேகமாக எழுந்தாள்.

“வாம்மா சஹானா! சாப்பிடலாம்” என்றார்.

“அத்தை! ஏதோ… ஒரு வேகத்துல அப்படிப் பேசிட்டேன். மன்னிச்சிடுங்க அத்தை!” என்றாள்.

“உன்னை நானும் புரிஞ்சிட்டு இருக்கணும் சஹி!” என்று நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவர், “விடும்மா! போனது போகட்டும். நானும் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். வா, உங்க மாமா காத்திட்டு இருக்கார்” சொல்லிக் கொண்டே செல்ல, அவரைப் பின்தொடர்ந்தாள்.

படிகளைக் கடந்து வராண்டாவில் இரண்டடி நடந்தவள், சட்டென நின்று திரும்பிப் பார்த்தாள். அங்கிருந்த தூணில் கைகளைக் கட்டிக் கொண்டு சாய்ந்து நின்றிருந்த பிரபுவின் முகத்தில் குறுநகை படர்ந்திருந்தது.

விழிகள் விரிய அவனது முகத்தைப் பார்த்தாள். ‘எத்தனை நாட்கள் ஆயிற்று இவனை இப்படிச் சிரித்த முகத்துடன் பார்த்து?’ விழிகளுடன் அவளது அதரங்களும் மெல்ல விரிந்தன.

அவனது பார்வை அவளைக் கூர்மையுடன் துளைக்க, சட்டென அவளது முகம் ஒளியிழந்து போனது. விறுவிறுவென வீட்டினுள்ளே சென்றாள்.

சற்றுநேரம் அங்கேயே நின்றிருந்தவன், தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, முகத்தின் இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டு உள்ளே சென்றான்.

No comments:

Post a Comment