Wednesday, August 5, 2015

உறவெனும் புதிய வானில்

அத்தியாயம் - 35

“வாங்க சம்மந்தி! எப்படியிருக்கீங்க? வாம்மா தேவி… சஹிம்மா!” என்று வாய்நிறைய வரவேற்றனர் சஹியின் பிறந்த வீட்டினர்.

அவர்கள் வந்திருப்பதை அறி்ந்து உள்ளிருந்து வந்த வர்ஷாவை, பிரியத்துடன் நலம் விசாரித்தார் கௌரி.

அவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும், பரிமளம் அத்தையை அணைத்தபடி பேசிக் கொண்டிருந்த தங்கையிடமே அவளது பார்வை சென்று மீண்டு வந்தது.

புன்னகை மாறாமல், “நீ போம்மா உன் தங்கச்சிகிட்ட போய்ப் பேசு. நாங்க எங்கே போயிடப் போறோம்?” என்றார் கௌரி.

“அதெல்லாம் இல்லத்தை! அவளோட பேசி ரொம்ப நாளாச்சு இல்லயா?” சிரித்து மழுப்பினாள் வர்ஷா.

“வா வா!” என்று தங்கையை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றாள்.

அதற்குள், “அத்தை! அத்தான் எங்கே?” என்று சுகுணாவைக் கேட்டாள் தேவி.

“கடைக்குப் போயிருக்காம்மா. இப்போ வந்திடுவான்…” பதிலளித்தார் சுகுணா.

“உனக்குக் காலேஜ் இல்லையாம்மா தேவி?”  - பரிமளம்.

“இருக்குப் பெரியம்மா! நான் தான் ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு வந்துட்டேன்…” என்றாள்.

“அப்படியே உங்க அண்ணனையும் கூட்டிட்டு வந்திருக்காலாம். இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும்…” சற்று தாங்கலுடன் சொன்னார் பரிமளம்.

“இல்லைங்க… அவனுக்குக் கொஞ்சம் வேலை. இல்லனா நம்ம வீட்டு விசேஷத்துக்கு வராம இருப்பானா? இது அவனோட வேலை… அவனுக்குத்தான் எல்லாம் தெரியும்… இல்லனா நான் இருந்து அவனை அனுப்பி வச்சிருப்பேன்” சமாளிப்பாக சிரித்துக் கொண்டே சொன்னார் புருஷோத்தமன்.

“இந்த பொம்பளைங்களுக்கு இதே தான் எல்லோரும் எப்பவும் இருக்க முடியுமா? வேலை செய்தாலும் பரவாயில்ல லீவ் போட்டுட்டு வரலாம்… முதலாளி அப்படியிருக்க முடியுமா?” என்றார் கணேசன்.

அதே கேள்வியைச் சற்று மாற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள் வர்ஷா.
“ம்ஹும்! அப்புறம் எப்படி ஹீரோ சார் உன்னைத் தனியா அனுப்பி வச்சிட்டார்? ஆச்சரியமா இருக்கே…” எனக் கேட்டாள்.

“ஃபாரின் போய்ட்டு வந்ததிலிருந்தே அவருக்கு வேலை அதிகம்க்கா! இல்லனா கட்டாயம் வந்திருப்பார். அவருக்கும், வரமுடியலன்னு ரொம்ப வருத்தம்” என்று பதிலுரைத்தாள் சஹானா.

கிளம்பும் வரைகூட, அவன் நிச்சயம் வருவான் என்றுதான் அவள் நினைத்திருந்தாள். இப்படி வராமலிருப்பான் என்று நினைக்கவேயில்லை. அன்று எல்லோரும் சேர்ந்து போகலாம் என்று சொன்னதோடு, அந்தப் பேச்சை யாருமே பேசவில்லை.

அவன் வரவில்லை என்றதும் தான், தானாவது வாயைத் திறந்து அவனை வரச்சொல்லி அழைத்திருக்கலாம். நான் ஒருவார்த்தை சொல்லியிருந்தால் கட்டாயம் வந்திருப்பான் என்றே எண்ணினாள்.

“ஹலோ மேடம்! என்ன அதுக்குள்ள உன் வீட்டுக்காரை கூட டூயட் பாடப் போய்ட்டியா?” என்று தங்கையை உலுக்கினாள் வர்ஷா.

அவள் பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன், “சஹிம்மா!” என்றபடி ஸ்ரீராம் அங்கு வர, அவனுக்குப் பின்னாலேயே வந்தான் பிரபாகர்.

அவர்களுடன் தேவியும் இணைந்து கொள்ள, அவ்விடமே சில்லரைக் காசுகளைச் சிதறவிட்டது போல கலகலவென்றிருந்தது. வெளியில் அவர்களுடன் சலசலத்துக் கொண்டிருந்த சஹானாவின் மனம் மட்டும், கணவனையே சுற்றி வந்தது.

இரவு உணவிற்குப் பிறகும் இவர்களது கச்சேரி களைகட்டிக் கொண்டிருந்தது. நேரமாகிறது என்று பரிமளம் இரண்டு மூன்றுமுறை சொன்ன பிறகே, அவரவர் உறங்கச் சென்றனர்.

பிரபாகரை, ஸ்ரீராமின் அறைக்கு அனுப்பிவிட்டு, தங்கையைத் தன்னறையிலேயே தங்க வைத்துக் கொண்டாள் வர்ஷா. தேவி அசந்து உறங்கிக் கொண்டிருக்க, சஹானா உறக்கம் வராமல் படுத்துக் கொண்டிருந்தாள்.

நினைவு முழுவதும் பிரபுவையேச் சுற்றி வந்தது. இத்தனை நாட்களாக இருவரும் பேசிக்கொள்ளாவிட்டாலும், அவனது தேவைகளை உணர்ந்து உடனுக்குடன் செய்து வந்தாள். மதியம் அவர்கள் புறப்படும் நேரத்திற்கு வந்தவனிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை அவள்.

காரில் ஏறியதும், அவன் தன்னைப் பார்த்த பார்வையை அவளால் மறக்க முடியவில்லை. ஆனால், கடைசிவரை வராமல் தன்னை ஏமாற்றி விட்டானே என்ற கோபம் மனத்திற்குள் இருந்தது.

இங்கு வந்து சேர்ந்த பின்பும் புருஷோத்தமன் தான் மகனுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னார். இதுவரை அவள் அவனிடம் பேசவில்லை. ஆயினும், அவளது நினைவுகளையும், மனத்தையும் மொத்தமாக அவன்தான் ஆக்கிரமித்திருந்தான்.

திடீரென, “சஹி!” என்று வர்ஷாவின் குரல் காதருகில் கேட்க, தூக்கி வாரிப்போட எழுந்தாள் சஹானா.

”ஏய்! நாந்தாண்டி… பயந்துட்டியா?” எனக் கேட்டாள்.

“பின்ன என்னக்கா? இப்படி அர்த்த ராத்திரியில காதுகிட்ட வந்து கூப்பிட்டா பயப்படாம என்ன பண்ணுவேன்?” என்றாள் எரிச்சலுடன்.

“சாரிப்பா! நீ தூங்காம முழிச்சிட்டு உன் வீட்டுக்காரர் நினைப்புல இருந்தியா…”

“இருங்க இருங்க. நான் தூங்காம இருந்தேன் அதுக்காக அவரோட நினைப்புல இருந்தேன்னு சொல்வீங்களா?”

“ஆஹ்…ஆஹ்! எங்கே இல்லன்னு சொல்லு பார்ப்போம்…” தங்கையைச் சீண்டினாள் வர்ஷா.

 “அக்கா! சும்மா இருக்கமாட்டீங்களா? தூக்கம் வரலையா உங்களுக்கு?”

“எங்கே சஹி! இந்த ஜூனியர் வந்ததில இருந்து அப்படித்தான் இருக்கு. ஆனா, இதுவும் ஒரு சுகம் தெரியுமா?” பூரிப்புடன் சொன்ன சகோதரியின் முகத்தைப் பாசத்துடன் பார்த்தாள்.

மனம் நிறைய புன்னகைத்தவள், “சஹி! நீ எப்போ சந்தோஷமான விஷயம் சொல்லப் போற?” என்றாள்.

இந்தக் கேள்வியை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை, அவளது பார்வையே சொன்னது.

“ஹேய்! நான் என்ன கேட்டேன்னு இப்படித் திருதிருன்னு முழிக்கிற?”

“ம், இல்லக்கா… திடீர்ன்னு கேட்டீங்களா! அதான்…”

“என்னமோ நான் புதுசா கேட்டா மாதிரியும்… நீங்க ரெண்டு பேரும் இதைப் பத்திப் பேசிக்காத மாதிரியும் சொல்ற…”

‘ஆமாம். இதுவரை தங்களுக்குள், குழந்தையைப் பற்றிய பேச்சு எழாமலிருந்தது?’ அவளுக்கு ஆச்சரியமாகவும், அதேநேரம் தங்களது தற்போதைய நிலைமை சற்று ஏமாற்றத்தையும் கொடுத்தது.

“நானும், உன் அத்தானும் முதல்நாளே குழந்தையைப் பத்தி கனவு காண ஆரம்பிச்சிட்டோம். நான் அவரை மாதிரி குட்டி பிரபா வேணும்னு கேட்டேன்.
அவர் என்னை மாதிரி குட்டி வர்ஷா வேணும்னு சொன்னார்…” என்று தங்களது பேச்சை நினைவுபடுத்திச் சிரித்தாள்.

சின்ன வயது பிரபுவின் சாயலில், கொழுக் மொழுக்கென்று ரோஜா இதழ்களைப் போன்ற மென்மையுடன், தனது கைகளில் தவழுவதைப் போல நினைத்துப் பார்க்கும் போதே, அவளது உடல் சிலிர்த்தது.

நினைவிலாடும் பிம்பத்தை நிஜமாக்கிவிடும் நோக்கத்துடன், கண்களை மூடி அந்த ஆனந்தத்தை அனுபவித்தாள்.

“சஹானா!” என்று தமக்கை உலுக்கிய உலுக்கலில் திடுக்கிட்டு கண் விழித்தாள்.

“ம்ஹும்! நீ ஆளே சரியில்ல… நீ படு. எனக்கும் தூக்கம் வருது. காலைல பேசுவோம்” சொல்லிவிட்டு படுத்துவிட்டாள்.

ஆனால், சஹானாவின் நிலைதான் அங்கே மோசமானது. அமைதியாக இருந்த குளத்தில் கல்லெறிந்தது போல, அவளது மனத்தில் குழந்தை என்ற விதையை விதைத்துவிட்டு உறங்கிவிட்டாள் வர்ஷா.

‘தான் என்ன நிலையில் இருக்கிறோம், என்ன நினைக்கிறோம்’ என்று ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை அவளால். மனம் ஏனோ தவியாய் தவித்தது. வெகுநேர போராட்டத்திற்குப் பிறகு, அவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. 

‘அவனுடன் இணைந்து வாழ மனம் ஒப்பவில்லை என்று சொல்லிக் கொண்டாலும் அவனையும், அவனது நினைவுகளையும் விட்டுப் பிரிவதென்பது, தன்னால் இயலாத காரியம். இன்றுவரை அவனும் தனது உணர்வுகளுக்கும், வார்த்தைக்கும் மதிப்பளித்து தள்ளியே நிற்கிறான்.

நினைத்திருந்தால் ,தன்னை அவனது விருப்பத்திற்கு வளைத்துக் கொள்ளத் தெரியாதவனல்ல அவன். செய்த தவறை சரிசெய்யவே அவனும் முயல்கிறான். இத்தனைத் தூரம் தனக்காக அவன் செய்யும் செயல்களுக்கு, சிறிதேனும் மதிப்பளிக்க வேண்டும்’ என்று தோன்றியது.

அதோடு, ‘காலம் கனியும்; மனம் மாறும் என்று நினைத்துக் கொண்டு இருப்பதை விட, அதைச் செயலாற்றுவதற்கு தானும் சிறு முயற்சி எடுக்க வேண்டும்’ என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

ஆக்கப் பொறுத்தவனுக்கு; ஆறப் பொறுக்காது என்ற சொலவடைக்கு ஏற்ப, அவனைக் காண, முழுதாக இருதினங்கள் காத்திருக்க வேண்டுமே இன்றே அது முடியாதா? தனக்காக அவன் வந்துவிட மாட்டானா?’ என்ற ஆவல் ஏற்பட்டது.

அவனது நினைவுகள் அருகில் வரவர, உறக்கம் அவளைப் பிரிந்து வெகுதூரம் சென்றது.


                                                                 ****************

தலையணையை மடியில் வைத்தபடி, உறங்காமல் அமர்ந்திருந்தான் பிரபு.

இத்தனை நாட்கள் அவள் பக்கத்து அறையில் இருந்தபோதும் தன்னருகில் இருக்கிறாள் என்ற நிம்மதியில் இருந்தவனுக்கு, இன்று அறையே வெறிச்சோடிக் கிடப்பது போலிருந்தது.

மதியம் அவள் கிளம்பும் நேரம், தான் வருவேனென்று எதிர்பார்த்திருந்தவளது முகம் ஏமாற்றத்தில் களையிழந்து போயிருந்ததை கவனித்ததிலிருந்தே அலுவலகத்தில் அவனுக்கு வேலையே ஓடவில்லை.

ஆனால், புது மிஷனரிஸ் வந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகியும் இன்னமும் அதன் விவரம் சரிவர தொழிலாளர்களுக்குப் புரியவில்லை. அதற்காக சிலரை வரவழைத்து பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறான்.

அதோடு, தானக்கிருந்த சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வதுடன், தானும் கற்றுணர வேண்டிய அவசியமும் இருந்தது. அப்படி தனக்கே சமாதானம் சொல்லித்தான் ஊருக்குச் செல்வதைத் தவிர்த்தான்.

வீட்டில் வேலை அதிகம் என்று அவர்களது வாயை அடைத்துவிட்டான்.

அவனது தந்தைக்கு விவரம் தெரிந்த போதும், அவர் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. மகனின் பேச்சில் ஏதேனும் காரணம் இருக்கும் என்று அமைதி காத்தார்.

அன்று ஸ்ரீராம் ஊரிலிருந்து வந்த அன்று தன்னிடம் பேசியதற்கும், மறுநாள் அவன் பேசியதற்கும் இருந்த வித்தியாசத்தையும் பிரபுவால் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

இந்தநேரத்தில் அவனுக்கு முன்னால் சென்று தங்களின் செயல்களை ஊர்ஜிதப்படுத்துவது போல நடந்து கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். ஆனாலும், சஹானாவின் மௌனம் அவனை இம்சை செய்தது.

அவள் ஒரு வார்த்தை வா என்று அழைத்திருக்கலாம் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. அதேநேரம் அவனது மனசாட்சி, ‘அவள் அழைக்காவிட்டாலும் நீ சென்றிருந்தால் நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பாள்’ என்றது.

 ’நான் உன்னை நினைத்துக் கொண்டிருப்பதைப் போல நீயும் என்னை நினைத்துக் கொண்டிருப்பாயா சஹி!’ – தனக்குள்ளே பேசிக் கொண்டான்.

அவனது மனத்தின் எண்ணவோட்டத்தை ஆமோதிப்பது போல, அவனது கைப்பேசி குறுஞ்செய்தி வந்திருப்பதற்கு அறிகுறியாக ஒலியெழுப்பியது.

‘இந்த அர்த்த இராத்திரியில், எனக்குக் குறுஞ்செய்தி அனுப்புவது யார்?’ என்ற கேள்வியுடன் கைப்பேசியை எடுத்தான்.

அவனது கண்களை அவனாலேயே நம்பமுடியவில்லை.

’சாப்டீங்களா?’ என்று சஹானாவிடமிருந்து வந்திருந்தது.

மடியிலிருந்த தலையணையைத் தூக்கி பக்கத்தில் வைத்தவன், காலை சம்மணமிட்டு அமர்ந்தான். முகம் கொள்ளா சிரிப்பும், மனம் நிறைய சந்தோஷமும் அத்தனை நேரம் அவனுக்கிருந்த குழப்பத்தையும், கேள்விகளையும் பின்னுக்குத்  தள்ளி உற்சாகத்தை ஊட்டின.

“மணி ஒண்ணு!” என்று சிரித்துக் கொண்டே பதிலனுப்பினான்.

“நான் உங்களை மணியா கேட்டேன்…?” அவனுக்கான பதில் உடனே வந்தது.

“இந்த நேரத்தில் பேய்தான் விழிச்சிட்டு இருக்கும்…” இது இவன்.

“நீங்க விழிச்சிட்டு இருக்கும் போதே தெரியுதே…” அதற்கு இவளது பதில்.

இப்போது சப்தமாகவே சிரித்தான் பிரபு. தனக்கிருக்கும் அதே நினைவுகள் அவளையும் அங்கே அலைகழித்துக் கொண்டிருப்பதை நினைத்து பூரித்துப் போனான்.

அவனிடம் பதிலில்லாமல் போக, மீண்டும் அவளிடமிருந்து ஒரு செய்தி வந்தது.

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“நான் என்ன சொன்னா நீ நம்புவ?” என்று அனுப்பினான்.

அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

“சஹி! ஐ மிஸ் யூ!” என்று பதிந்தவன் சற்று இடைவெளி விட்டு, “ஐ லவ் ஒன்லி யூ!” என்று அவளுக்கு அனுப்பினான்.

பத்து நிமிடங்களுக்கு அவளிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை.

‘தானாகத் தழைந்து வந்தவளிடம், அவசரப்பட்டு விட்டோமோ’ என்று அவனுக்குக் கலக்கமாக இருந்தது. மீண்டும் செய்தி அனுப்பவும் பயமாக இருந்தது. இரவு நேரத்தில் போன் செய்யவும் பயமாக இருந்தது.

செய்வதறியாமல் மொபைலையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
மேலும் சில நிமிடங்கள் அவனைத் தவிக்க வைத்துவிட்டு, கைப்பேசி குறுஞ்செய்திக்காக அலறியது.

‘குற்றுயிராய் உயிர்கூட்டிற்குள் நத்தையெனச் சுருண்டிருக்கும் காதல் உயிர் பெற்று நீயும், நானும் ‘நாம்’ ஆக மாறும் காலத்திற்காக காத்திருக்கிறேன்…’ –  சஹானா.

படித்ததும் கைப்பேசியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனது இதயம் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருந்தது.

No comments:

Post a Comment