Thursday, August 6, 2015

உறவெனும் புதிய வானில்


அத்தியாயம் - 36
 
காலையிலிருந்தே வீடு பரபரவென இருந்தது.

“சஹி! வர்ஷி குளிச்சிட்டு வர்றதுக்குள்ள சாம்பிராணி போட கங்கை தயார் பண்ணி வை…” என்ற பரிமளம் அத்தைக்கு, “சரிங்கத்தை!” என்று குரல் கொடுத்தாள்.

சாம்பிராணி கரண்டியை எடுத்துக் கொண்டு வந்தவளிடம், “சஹி! வீட்டு ஆம்பிளைங்க வந்தாச்சுப் பாரு. அவங்களுக்கு டிஃபனை வச்சிடும்மா!” என்றார் சுகுணா.

அதற்கும் சரியென்று பதிலளித்தாள் அவள்.

இரவெல்லாம் உறக்கமில்லாததால், தூக்கம் கண்களைச் சுழற்றியது. அவ்வப்போது முகத்தைக் கழுவிக்கொண்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.

டிஃபன் வேலை முடிவதற்கும், உறவினர்கள் வருவதற்கும் சரியாக இருந்தது.
வந்தவர்களை உபசரிப்பது, அவர்களுக்கு வேண்டியதைச் செய்வது, உன் வீட்டுக்காரர் வரலையா என்று கேட்டவர்களுக்கு புன்னகைத்துக் கொண்டே பதில் சொல்வதென்று அவளுக்குச் சரியாக இருந்தது.

‘எங்கேயாவது சற்று நேரம் உட்காரமாட்டோமா!’ என்று உடல் ஏங்கியது.

ஆனால், எப்படி? மதிய உணவு முடிந்ததும் வளைகாப்பு வைபவம் துவங்கிவிடும். எப்படியும் மாலை வரை ஓரிடத்தில் அமர்வது என்பது சற்று சிரமம்தான். இருந்தாலும், உடல் அயர்ந்து போனது.

அதற்குள் உள்ளேயிருந்து சுகுணா அழைக்க, அடுத்த வேலையைக் கவனிக்க முறுவலுடனே கிளம்பினாள்.

“சஹிம்மா! அக்காவுக்கு தலையை வாரி, இந்தப் பூவை வச்சிவிடு… பின்னால தலையைக் காயவச்சிட்டு உட்கார்ந்திருக்கா பாரு” என்று ஃப்ரிட்ஜிலிருந்த பூவை எடுத்துக் கொடுத்தார்.

பூவுடன் அவள் வாசல் பக்கமாக வரவும், திவ்யாவின் ஸ்கூட்டி வாசலில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

“அண்ணி!” என்று உற்சாகமாக குரலெழுப்பிய சஹானா, சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.

‘நல்லவேளை. யாரும் இங்கே இல்லை. முக்கியமா அம்மா’ என்ற நிம்மதியுடன் வைதேகியையும் வரவேற்றாள்.

பரஸ்பரம் நலம் விசாரிப்பு, பேச்சு என்று பெரியவர்கள் இருக்க, “நீங்க வாங்கண்ணி!” என்று திவ்யாவை அழைத்துக் கொண்டு வர்ஷா இருக்குமிடத்திற்குச் சென்றாள்.

திவ்யாவைக் கண்டதும் வர்ஷா சந்தோஷிக்க, அவளோ ஒரு மருத்துவராக வருங்கால நாத்தனாரின் நலத்தை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினாள்.

“ஹய்யோ! அண்ணி! இப்போ நீங்க டாக்டர் இல்ல. எங்க அண்ணி… இதெல்லாம் ஹாஸ்பிட்டலோட இருக்கட்டுமே ப்ளீஸ்” என்ற வர்ஷாவைப் பார்த்துச் சிரித்தாள் திவ்யா.

“ஓகே. பேசல… போதுமா” என்றாள்.

“ம்” என்றவள், “அண்ணி! இவள்தான் தேவி…” என்று அங்கே நின்றிருந்தவளை வர்ஷா அறிமுகப்படுத்த, “நம்ம சஹியோட நாத்தனார். உங்க அண்ணாவோட தீவிர ரசிகை…” என்று அதை முடித்து வைத்தாள் திவ்யா.

தேவிக்குச் சந்தோஷம் தாளவில்லை.

“ஹாய்! என்னைப் பத்தி தெரியுமா உங்களுக்கு?” ஆர்ப்பரிப்புடன் கேட்டாள் அவள்.

“தெரியாம என்ன? வர்ஷாகிட்டதான் தினம் பேசறேனே. அதனால எல்லோரைப் பத்தியும் கேள்விப்பட்டிருக்கேன். நான் இன்னும் மீட் பண்ணாத ஒரே ஆள், மிஸ்டர்.சஹானாதான். எங்கே அவர்?” என்று அவளும் இயல்பாக பேசினாள்.

“நீங்க எங்க அண்ணனைத் தேடுறீங்களா? இல்லை உங்க வருங்கால அத்தான் எங்கேன்னு கேட்காம கேட்கறீங்களா?” என்று திவ்யாவிற்கே கொக்கிப் போட்டாள் தேவி.

“இதுவேறயா? நான் உங்க அண்ணனைத்தான் கேட்டேன். ஸ்ரீராம் எங்கேன்னு நான் நேராவே கேட்பேன். எனக்கென்ன பயம்?” என்றாள் கிண்டலாக.

“ஹய்யோ நீங்க நம்மள விட ஃபாஸ்ட்டா இருக்கீங்க…” நகைத்தாள் தேவி.

“டாப்பிக் சேஞ்ச் ஆகுது… சஹி! உன் ஹஸ்பெண்டை எங்க கண்ணில் கொஞ்சம் காட்டலாமில்ல…” என்றாள்.

“அவருக்கு ஆஃபில கொஞ்சம் வேலை அதிகம். அதனால, வரலை அண்ணி!” என்றாள்.

சொல்லும்போதே சஹானாவின் முகம் சற்று வாட்டமானது. அந்தநேரத்தில் திவ்யாவிற்கு ஸ்ரீராம் சொன்னதெல்லாம் நினைவிற்கு வந்தது.

“சரிவிடு. பிஸ்னஸ்ல இருக்கவங்களுக்கு இதெல்லாம் சகஜம். லேடீஸ் நமக்குத்தான் கஷ்டமா இருக்கும். நேர்ல வரலனா என்ன? இப்போதான் லைவா பார்த்துக்கற அளவுக்கு வசதி வந்தாச்சே. இல்லனா இருக்கவே இருக்கு சி.டி” என்றாள் இலகுவாக.

“ஆமாம். வீட்ல சொந்தக்காரங்க யாரையும் காணோம்…” என்றாள்.

“வந்தவங்க எல்லோரையும் ஹோட்டலுக்கே கூட்டிட்டுப் போயாச்சு அண்ணி…” என்றாள் சஹானா.

“தெரிஞ்சிருந்தா நானும் நேரா ஹோட்டலுக்கே வந்திருப்பேன்…” – திவ்யா.

“அம்மா உங்களை வீட்டுக்குத்தானே வரச்சொன்னாங்க. நீங்க என்ன வெளியாளா?” என்றாள் வர்ஷா.

“உங்களை பார்க்கும் போது எனக்கு சென்னைல இருக்க என் ஃப்ரெண்ட்ஸ் அண்ட் மயூரி அண்ணிதான் ஞாபகத்துக்கு வராங்க. அவங்களையெல்லாம் மிஸ் பண்றேன்னு நினைச்சேன். பட் எனக்கு ரெண்டு நாத்தனார், ஒரு குட்டி சிஸ்டர் எல்லாம் கிடைச்சிருக்கீங்க…” என்ற திவ்யாவை ஆச்சரியத்துடன் பார்த்தாள் தேவி.

“வாவ்! நீங்களும், அத்தானும் சூப்பர் பேர் (pair). அத்தானை மாதிரியே நீங்களும் ரொம்ப அட்டாச்மெண்ட். எதுக்குமே டென்ஷன் ஆக மாட்டீங்க போலிருக்கே…” என்று வியந்தாள் தேவி.

“யாரு? உங்க அத்தானா? அவர் டென்ஷன் ஆனா என்ன பண்ணுவாருன்னு எனக்கில்ல தெரியும்” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பிரபாகர் அங்கே வந்து சேர்ந்தான்.

“வர்ஷி! நீ கேட்டதெல்லாம் இதிலிருக்கு…” சொல்லிக் கொண்டே உள்ளே வந்தவன், அங்கே அமர்ந்திருந்த திவ்யாவைப் பார்த்தான்.

அவளிடம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, “டேய்! போனா போன இடம்னு இருப்பியா? வேலையிருக்கு வாடா…” என்று பேசிக் கொண்டே உள்ளே வந்தான் ஸ்ரீராம்.

அவளைக் கண்டதும் மனத்திற்குள் சந்தோஷமாக இருந்தபோதும் அதை பிரதிபலிக்காதபடி, முகத்தை இறுக வைத்துக் கொண்டிருந்தான்.

அன்று அவளிடம் கோபமாக பேசிவிட்டு வந்ததுடன் சரி, இருவருமே பார்த்துக் கொள்ளவும் முயலவில்லை. போனிலும் பேசிக் கொள்ளவில்லை. பரிமளம் அத்தைகூட அவர்களை விழாவிற்கு அழைத்துவிட்டு வந்திருப்பதாகச் சொன்னார்.

ஆனால், அவன் அதை பொருட்டாக நினைக்கவில்லை. அவள் நிச்சாம் வரமாட்டாள் என்று நம்பினான். ஆனால், இப்போது அவள் வந்திருப்பது தன்னைப் பார்க்கத்தான் என்று புரிந்தாலும், பிடிவாதத்துடன் தனது கோபத்தை விடாமல் பற்றிக் கொண்டிருந்தான்.

இருவரது பார்வையும் சங்கமித்துக் கொள்ள, சுற்றியிருந்தவர்கள் அவர்களது நிலையைக் கண்டதும், நமுட்டுச் சிரிப்புச் சிரித்தனர்.

‘உன் மனத்திற்குள் பொங்கும் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருந்தால் உனக்கு என் மீது கோபம் என்று தப்புக் கணக்கு போட்டுவிடுவேன் என்று நினைத்தாயா? உன்னை எனக்கு நன்றாகவே தெரியும்’ மனத்திற்குள் அவனுடன் பேசிக் கொண்டாள் திவ்யா.

‘இவனைத் தான் பார்க்க வந்திருக்கிறேன் என்று தெரிந்தும், குத்துக்கல் போல நிற்கிறான் பார்… சிடுமூஞ்சி!’ செல்லமாக மனத்திற்குள் அவனை வைதாள்.

அவனைப் போல மனத்தை அடக்கவும் நினைக்கவில்லை. அடக்கவும் முடியவில்லை. காதல் கொண்ட நெஞ்சம் அவனிடம் பேச விழைந்தது.

“எப்படி இருக்கீங்க?” மென்குரலில் கேட்டாள்.

“ம்…” என்று தலையசைத்தவன் பிரபாகரிடம் திரும்பினான்.

“என்னடா உன் வேலை முடிஞ்சிதா? கிளம்பளாமா?” என்றான் எரிச்சலுடன்.

“இது நல்ல கதையா இருக்கே. இவ்ளோ நேரம் கனவுல மிதந்தது நீயா நானா?” தான் சொல்வதைக் காதில் வாங்காமல் சென்றவனின் பின்னால், பேசிக் கொண்டே விரைந்தான் பிரபாகர்.

திவ்யாவின் மனம் சோர்ர்வடையாவிட்டாலும், முகம் சற்று ஏமாற்றத்தைத் தாங்கி நின்றது.

‘அவனது தங்கைகள் எதிரிலாவது தன்னிடம் இவன் இரண்டு வார்த்தை சாதாரணமாகப் பேசிவிட்டுச் சென்றிருக்கலாம்’ என்று தோன்றியது.

மற்ற மூவரும் ஒருவரையொருவர் சங்கடத்துடன் பார்த்துக் கொண்டனர். ஆனால், திவ்யாவிடம் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.

அவர்களது மனம் சமாதானமடைவதற்குள், திவ்யா இயல்பிற்குத் திரும்பியிருந்தாள்.

“அதான் ஜடை பின்னியாச்சே… பூ அலங்காரம் நான் செய்து விடட்டுமா சஹி?” என்று கேட்க, அவளும் சந்தோஷமாக ஆமோதித்தாள்.

திவ்யாவைப் பார்க்க பாவமாக இருந்தது தேவிக்கு.

‘இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை போலும். ஆயிரம் இருக்கட்டும். அவர்களாகப் பேசியபோது, அத்தானும் பேசியிருக்கலாம். கல்யாணம் என்று வந்தால், இதெல்லாம் பிரச்சனைத்தானோ? எப்படியிருந்தாலும் சரி, யாருக்காகவும் என்னோட சுயத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்…’ என்று உறுதியே எடுத்துக் கொண்டாள்.

“வந்ததில இருந்து பாக்கறேன் ஏன் சஹி டல்லா இருக்க?” என்று கேட்டாள்.

“நைட்லாம் சரியா தூக்கமில்ல அண்ணி!” என்றாள் சஹானா.

“அவளோட வீட்டுக்காரர் இருந்தாலும், இப்படித்தான் இருப்பா. அவர் இங்கே இல்லைனாலும் இப்படித்தான் இருப்பா…”

சொல்லிவிட்டு வர்ஷா கலகலவென நகைக்க, “கடவுளே!” என்று சஹானா சலித்துக் கொண்டாலும், அவளும் சிரிக்காமல் இல்லை.

“ஹேய்! இங்கே ரெண்டு குழந்தை பிள்ளைங்க இருக்கோம்… என்ன பேசறீங்க நீங்கள்ளாம்…” என்று போலியாக அதட்டினாள் திவ்யா.

இப்படியாக அவர்கள் ஏதேதோ பேசிச் சிரித்துக் கொண்டிருக்க, அங்கே வந்தார் சுகுணா.

“இந்தாங்க நாலு பேரும் இந்தக் காஃபியைக் குடிங்க. மணி பதினென்னரை ஆகப் போகுது. நாங்க முன்னால கிளம்பிப் போறோம். அரை மணி நேரத்துல தயாராகிடுங்க. ஸ்ரீ வந்து உங்களைக் கூட்டிட்டு வருவான். சஹானா வீட்டையெல்லாம் பத்திரமா பூட்டிட்டு வா. புரிஞ்சிதா…” என்றவர் திவ்யாவின் பக்கமாகத் திரும்பினார்.

“திவி! நீயும் இவங்களோட வாம்மா. நான் அம்மாவை கூட்டிட்டுக் கிளம்பறேன்…” என்றார்.

“சரிங்கத்தை!” என்றாள்.

அடுத்த சில நிமிடங்களில் அனைவரும் கிளம்பிச் சென்றிருந்தனர்.

வர்ஷாவை தயார் படுத்தும் வேலையை திவ்யாவிடம் விட்டுவிட்டு, தேவியையும் கிளம்பச் சொல்லிவிட்டு, மாடிக்குச் சென்றாள் சஹானா.

ஸ்ரீராமின் அறையையும், வர்ஷாவின் அறையையும் பூட்டியவள், அடுத்த பக்கம் மொட்டை மாடியுடன் இணைந்திருந்த தங்களது அறைக்குச் சென்றாள்.

ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு, பூட்டியிருந்த பீரோவை மீண்டும் சரிபார்த்துவிட்டுத் திரும்பியவள், கதவை அடைத்தது போல நின்றிருந்தவனைக் கண்டதும் திடுக்கிட்டு தன்னையுமறியாமல், வாய்விட்டுச் சப்தமாக அலறினாள்.

“சஹி! ரிலாக்ஸ்… நான்தான்” என்ற பிரபுவை திகைப்பும், வியப்பும் மேலிட பார்த்தாள் அவள்.

No comments:

Post a Comment