அத்தியாயம் - 37
“நீங்க எப்படி இங்கே…?” திகைப்பும், சந்தோஷமுமாக கேட்டாள் சஹானா.
“என்னதிது? நீதானே நேத்து நடுராத்திரி எனக்கு போன் பண்ண?” குறும்பு மின்ன கேட்டான்.
“ஆஹ்! நான் எப்போ பேசினேன். எஸ்.எம்.எஸ் தானே அனுப்பினேன்…” என்றாள் வேகமாக.
“ஓ! எஸ்.எம்.எஸ் தான் அனுப்பினியா…? நான் என்னவோ உன்கிட்ட நேராவே பேசினதா நினைச்சிட்டேன் சஹி!” என்றான்.
அவனது பார்வையும், கண்களில் தெரிந்த நேசமும், உதட்டில் உறைந்திருந்த சிரிப்பும் அவளை நிலைகொள்ளாமல் தவிக்க வைத்ததுதான் உண்மை.
மூளை அதை எடுத்துச் சொன்னாலும், மனம் இன்னும் முழுமையாக அவற்றையெல்லாம் அனுமதிக்கும் நிலையில் இல்லை.
அவளது மனத்தைப் படிக்க, அவனுக்குச் சற்றும் சிரமமிருக்கவில்லை. அலைபாய்ந்த நீள்விழிகளில் தெரிந்த ஏக்கமும், குழப்பத்தால் விளைந்த தவிப்பும் புரிந்தது.
தோளிலிருந்த பையை மேஜைமீது வைத்தவன், “பீரோ சாவியைக் கொடுக்கறியா? டவல் எடுக்கணும்” என்றான்.
அதுவரை தயக்கத்துடன் நின்றிருந்தவள், “ஆஹ்! இதோ தரேன்…” என்று அவளே பீரோவைத் திறந்தாள்.
கட்டிலில் அமர்ந்தவன், “எப்படி வந்தேன்னு கேட்கமாட்டியா சஹி!” என்றான்.
அவள் திரும்பாமலேயே, “நீங்க சொல்லணுமா என்ன எனக்கே புரியுது ஃப்ளைட்ல வந்திருக்கீங்கன்னு. ஆனா, இப்படி அரக்கப்பரக்க வரணுமா?” என்றபடி டவலை அவனிடம் கொடுத்தாள்.
அவளை ஊன்றிப் பார்த்தவன், “ஏன் கேட்கமாட்ட? சும்மா இருந்த சங்கை ஊதினா மாதிரி. நான் பாட்டுக்கு இருந்தேன். மேசேஜ் அனுப்பி சீண்டிவிட்டுட்டு இப்போ கேள்வி கேட்கற…” என்றான்.
“ஓ! அதனாலதான் நான் மெசேஜ் அனுப்பினதுமே எடுத்துட்டீங்களா?” கிண்டலாகச் சொன்னாள்.
“ஆமாம். கிளம்பற நேரம் உர்ன்னு முகத்தை வச்சிட்டிருந்த உன்னைப் பத்தித்தான் நினைச்சிட்டு இருந்தேன்… பொய்ன்னு நினைக்கிறியா?” என்றான்.
அவள் அமைதியாக நிற்பதைக் கண்டவன், “உன் காதலை மீட்டு நீயும், நானும் ‘நாம்’ ஆக மாற, இன்னும் என்ன செய்யவேண்டும்? உரைப்பாயா சகியே என் சஹியே!” என்றான்.
விழிகள் விரிய ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.
“எப்படி நம்ம கவிதை?” என்று கண்களைச் சிமிட்டினான்.
“இது கவிதையா?” என்று கலகலவென நகைத்தாள்.
அவளது சிரிப்பை இதயத்தில் நிரப்பிக் கொண்டவன், “சரி உரைநடை கவிதை…” என்றான்.
“அதுவேணா ஒத்துக்கறேன்…” என்றாள் சிரிப்போடு.
“ஹப்பா இதையாவது ஒத்துக்கறியே. சந்தோஷம்ம” என்றவன், “உன்னோட கவிதைதான் என்னை இப்படி இழுத்துட்டு வந்திருக்கு சஹி! உன்னை ரொம்ப நோகடிச்சிட்டேன் இல்ல…” என்றான்.
கணவனின் தளர்ந்த குரலில் இழையோடிய வருத்தத்தை உணர்ந்தவளால், எதுவுமே பேசமுடியவில்லை.
‘செய்த தவறுக்கு தண்டனைத் தருவதாக நினைத்து, மனம் மாறி வந்தவனை தானுமே நோகடித்திருக்கிறோம்’ என்று நினைத்தவளுக்கு இதயம் வலித்தது.
ஆயினும், தன்னிலை உணர்ந்தவளாக அவனது முகத்திலிருந்து பார்வையைத் தழைத்துக் கொண்டவள், “குளிச்சிட்டு வாங்க. அண்ணா வந்திடுவாங்க… நாம கிளம்பணும்” என்றாள்.
அவளது பதில் அவனுக்கு ஏமாற்றமளித்தாலும், டவலை எடுத்துக் கொண்டு சென்றான்.
**************
காலிங்பெல்லின் சப்தம் கேட்டு, கதவைத் திறந்தாள் திவ்யா. வெளியே வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தான் ஸ்ரீராம்.
அவளை ஒருபார்வை பார்த்துவிட்டு அவன் உள்ளே செல்ல, அவனைப் பின்தொடர்ந்தாள் திவ்யா.
“வர்ஷி!” என்றழைத்தான்.
“அத்தையோட ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க…” என்றாள் திவ்யா.
“சஹி எங்கே?” என்றான்.
“அவங்க கொஞ்சம் பிஸியா இருக்காங்க…” என்றாள்.
மாடிப் படியை அண்ணார்ந்து பார்த்துவிட்டுத் திரும்பியவன், அவள் மீது மோதிக்கொள்ள இருந்தவன், சமாளித்து நின்றான்.
இருவரும் ஒரே நேரத்தில் “சாரி” என்றனர்.
பேசுவதற்கு ஆசையிருந்தாலும், என்ன பேசுவதென்றே இருவருக்கும் பிடிபடவில்லை. ஃபேனை போட்டுவிட்டு ஸ்ரீராம் ஹாலில் சென்று அமர, தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டினாள் திவ்ய
நிமிர்ந்து பார்த்தவன், “தேங்க்ஸ்!” என்று வாங்கிக் கொண்டான்.
காலையில் அவளைக் கண்டதுமே மனத்திற்குள் சந்தோஷமிருந்தாலும், ‘அன்று முகத்திலடித்ததைப் போல பேசிவிட்டு இப்போது எப்படி இயல்பாக பேசுவது?’ என்று அவனுக்குத் தயக்கமாக இருந்தது.
அவளும் ஒரு முடிவுடன் இருந்ததைப் போல உள்ளே செல்லாமல், படிக்கட்டின் கைப்பிடியை பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
எழுந்து அவளருகில் வந்தவன், “தேவி எங்கே?” என்றான்.
“வர்ஷாவோட இருக்கா…” என்றாள்.
அவர்கள் இருந்த அறைக்கதவு மூடியிருப்பதை உறுதி செய்து கொண்டு அவளருகில் வந்தான்.
“சாரி திவ்யா! அன்னைக்கு நான் அப்படிப் பேசியிருக்கக்கூடாது” என்றான்.
கையைக் கட்டிக்கொண்டு மௌனமாக இருந்தாள் திவ்யா.
“என்ன திவி பேசமாட்டேன்ற?”
மூச்சை நன்றாக இழுத்துவிட்டவள், “ராம்! உங்ககிட்ட நான் எதிர்பார்க்கறது, சாரியை இல்ல. நான் சொன்ன விஷயத்தை முழுசா புரிஞ்சிக்கங்கன்னு தான் சொல்றேன்” என்றாள்.
அவளை அழுத்தமாகப் பார்த்தவன், “ஒரு பேச்சுக்குக் கேட்கறேன்… நாளைக்கே உன் அப்பா திருந்தி வந்தா… உங்க அம்மா என்ன செய்வாங்க? நீ என்ன செய்வ?” என்றான் காட்டமாக.
“இது ஆர்கியூமெண்ட்…” என்றாள் எரிச்சலுடன்.
“ஜஸ்ட் நடந்தால்… புரிஞ்சிதா” என்றான்.
சலிப்புடன் தலையை அசைத்தவள், “நீங்க ஏன் ராம் இப்படி யோசிக்கறீங்க? அவங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸாக கூட இருக்கலாம்… நீங்க தேவையில்லாம…” என்றவளை இடைமறித்தான்.
“எனக்குத் தேவை கேள்விக்கான பதில்…” அழுத்தமாகச் சொன்னான்.
“ஓகே. அப்படி ஒரு நிலை வந்தால் அதில் முடிவெடுக்க வேண்டியது எங்க அம்மாதான். சப்போஸ் அவங்க என்னுடைய விருப்பப்படித்தான் நடந்துப்பேன்னு சொன்னா… மட்டுமே என்னோட தலையீடு அதில் இருக்கும்…” சொல்லிவிட்டு அவ்வளவுதான் என்பதைப் போல அவனைப் பார்த்தாள்.
“சொல்றது ஈஸி. ஆனா, செய்றது ரொம்ப ரொம்பக் கஷ்டம்…”
“எனக்கும் புரியாமல் இல்ல ராம்! எனக்குத் தெரிந்து சஹானா சந்தோஷமாத் தான் இருக்காங்க.”
அவளது பேச்சு அவனுக்கு எரிச்சல் மூட்டியது.
“தெரிஞ்சா மாதிரி பேசாதே…” என்றான் கடுமையாக.
“தெரிஞ்சதால தான் பேசறேன் ராம்! அவங்க ரெண்டுபேரும் சந்தோஷமாத்தான் இருக்காங்க. நீங்க நினைக்கிறா மாதிரி எதுவும் இல்ல. அப்படியே பிரச்சனை இருந்திருந்தாலும், இப்போ எதுவும் இல்ல.”
“என்னவோ நேர்ல பார்த்தா மாதிரி சொல்ற?”
“ஆமாம் பார்த்தேன். சஹியோட வீட்டுக்காரர் வந்திருக்கார்” என்றாள்.
அதைச் சற்றும் எதிர்பார்க்காதவன், “என்னது? பிரபு வந்திருக்கானா?” நம்பமுடியாமல் கேட்டான்.
திவ்யா, திகைப்புடன் நின்றிருந்த அவனது முகத்தை முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நான் போய்…” என்று படியேறியவனை கையைப் பிடித்து இழுத்தாள்.
“எக்ஸ்க்யூஸ்மீ! இப்போ நீங்க அங்கே போகாமல் இருக்கறது தான் நல்லது…” என்றாள்.
“என் கண்ணால பார்க்காம எதையும் நான் நம்பறாமாதிரி இல்ல…” என்றவன் அவளது கரத்தை விலக்கிக் கொண்டு வேகமாகப் படிகளைக் கடந்து சென்றான்.
“அடராமா!” என்றபடி தலையிலடித்துக் கொண்டவள், “உன்னைக் கூப்பிட்டு என்ன பண்றது. தலையெழுத்து” என்று சலித்துக் கொண்டாள்.
அவன் கதவை நெருங்கவும், சஹானாவின் சிரிப்புச் சப்தம் மெலிதாக அவனது காதுகளில் ஒலித்தது. தங்கையின் சிரிப்பு அப்போதைக்கு அவனது மனத்தை நிறைக்க, அதே வேகத்தில் திரும்பி கீழே வந்தான்.
****************
இருவரும் கீழே இறங்கி வர, பெண்கள் கூட்டணி பார்வையாலேயே சஹானாவைக் கேலி செய்ய, சஹானா வெட்கத்துடன் புன்னகைத்தாள்.
ஹாலில் ஸ்ரீராமுடன், பிரபாகரும் அமர்ந்திருப்பதைக் கண்ட சஹானா, “என்னத்தான் உங்களுக்கு அங்கே இருக்க முடியலையா?” என்று சிரித்தாள்.
“பார்த்தியா யார் என்னைக் கேள்வி கேட்கறதுன்னு?” என்ற பிரபா, வரவேற்பாக பிரபுவிடம் கைகுலுக்கினான்.
“உண்மையைச் சொன்னா கசக்குதா?” மீண்டும் அவனிடமே வம்பு வளர்த்தாள்.
“ஏய்! நேத்துத் தான் நீ வந்த. இதோ பின்னாலயே அடிச்சிப் பிடிச்சி பிரபு ஓடி வர்ல. அப்படித்தான் எல்லாம் விடுவிடு” தன் பங்கிற்கு பிரபுவின் காலை வாரினான் ஸ்ரீராம்.
“அதை நீ சொல்லாதப்பா… நீ என்னென்ன பண்ணப் போறன்னு நாங்களும் பார்க்கத்தானே போறோம். அதோட நீ இதுவரைக்கும் என்னென்ன கோமாளித்தனம் செய்திருக்கன்னு மேடமைக் கேட்டா தெரிஞ்சிடப் போகுது” என்று திவ்யாவைப் பார்த்துச் சிரித்தான்.
“ஓ! அதுக்குள்ள அறிமுகமாயாச்சா? எனக்கு வேலை மிச்சம்” என்றான் ஸ்ரீ.
“என்னை ரிசீவ் பண்ணினதே சிஸ்டர் தான்…” என்றான் பிரபு.
“சரிசரி எல்லாத்தையும் போகும் வழியில் பேசிக்கலாம். நேரமாகிட்டே இருக்கு கிளம்புவோமா?” தேவி கேட்க, “பார்த்தியா பொறாமைய…” என்று அவளை கலாய்த்தான் ஸ்ரீராம்.
அனைவரும் கொல்லென சிரிக்க, “அத்தான்!” என்று சிணுங்கினாள் தேவி.
“சரி விடு உனக்கும் மாப்பிள்ளை பார்த்திடலாம்…” என்றான் பிரபா.
“ஹய்யோ! ஆளை விடுங்கப்பா…” என்று அவள் முன்னால் ஓட, அனைவரும் சிரித்தபடியே கிளம்பினர்.
No comments:
Post a Comment