அத்தியாயம் - 26
கால் - டாக்ஸியிலிருந்து
இறங்கிய சஹானாவைக் கண்டதும், வாட்ச்மேன் ஓடி வந்து அவளிடமிருந்த பெட்டியை வாங்க முயன்றார்.
“கொடுங்க சின்னம்மா!” என்றவரிடம்,
“பரவாயில்லண்ணே! நீங்க எப்படி இருக்கீங்க?” விசாரித்துக் கொண்டே கேட்டைத் திறந்தாள்.
அண்ணியின் குரலைக் கேட்டதும்,
தோட்டத்திலிருந்த ரோஜா செடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த தேவி திரும்பிப் பார்த்தாள்.
“அண்ணி! இப்படி சர்ப்ரைஸ்
கொடுக்கறீங்களே…” என்றாள் சிரிப்புடன்.
“நீதான சொன்ன பத்து நாள்
இருந்திடாம சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொன்ன. அதான் வந்துட்டேன்…” என்றாள் சிரிப்புடன்.
“ஹும்! நான் நம்பிட்டேன்…”
என்ற நாத்தனாரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.
சொல்லாமல் கொள்ளாமல் வந்து
நிற்கும் மருமகளைக் கண்டதும் கௌரிக்கு தலைகால் புரியவில்லை.
“சொல்லியிருந்தா கார் அனுப்பி
இருப்பேனே? பஸ்லயா வந்த…? பிரபுவுக்குத் தெரிஞ்சா கத்தப் போறான்…” என்று பேசிக் கொண்டே
போனார்.
“அம்மா! அம்மா! அண்ணா வர்ற
நேரத்துக்கு அண்ணி இங்கே இருக்கறதே அவருக்குப் போதும். இதையெல்லாம் கேட்க நேரம் இருக்குமா
என்ன?” என்றவள், “அண்ணி! நான் சொல்றது கரெக்ட் தானே…” என்று குறும்பாகச் சிரித்தாள்.
“ஹேய்!” என்று செல்ல அதட்டலுடன்
சஹானா அவளது முதுகில் தட்ட, “இந்தக் காலப் பிள்ளைகளுக்கு பேசறதுக்கு கத்துக் கொடுக்கவே
வேணாம். என்ன பேச்சு பேசறா பார்… பெரிய மனுஷி மாதிரி” என்றார் கௌரி.
“சரி சரி பெரியவங்க ரெண்டு
பேரும் பேசுங்க… நான் கிளம்பறேன்” என்று அங்கிருந்து சென்றாள் தேவி.
வீட்டில் அனைவரது நலத்தையும்
விசாரித்து அறிந்து கொண்ட கௌரி, “உன்னை எப்படி தனியா அனுப்பிட்டாங்க?” என்றார்.
“அம்மாவும், அத்தையும் தனியா
அனுப்பமாட்டேன்னு தான் சொன்னாங்க… நான் தான் ஸ்ரீ அண்ணா மூலமா பேசி அவங்களைச் சமாதானப்படுத்திட்டுக்
கிளம்பி வந்துட்டேன்” என்றாள்.
அவள் எதையோ மறைக்கிறாள்
என்று புரிந்து கொண்ட கௌரி மனத்திற்குள் சிரித்துக் கொண்டார்.
“சரிம்மா, நீ குளிச்சிட்டு
வா. அதுக்குள்ள டிஃபன் ரெடியாகிடும். சாப்டுட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோம்மா.”
“சரிங்கத்தை!” என்றவள் தங்களது
அறைக்குச் சென்றாள்.
மனத்திற்குச் சந்தோஷமாக
இருப்பதைப் போல இருந்தது.
மணமான பின் பிறந்த வீட்டிற்குச்
சென்று வருவது ஒரு சுகம் என்றாலும், மீண்டும் புகுந்த வீட்டிற்கு வந்தால்தான் மனத்திற்குள்
நிம்மதியும், இதமும் பரவுகிறது. என்ன இருந்தாலும், இதுதானே என் வீடு’ என்று நினைத்துக்
கொண்டாள்.
வீட்டிற்குப் போன் செய்து
தான் வந்துவிட்டதைத் தெரிவித்தவள் அப்படியே படுக்கையில் சாய்ந்தாள்.
கட்டிலின் அருகிலிருந்த
மேஜை மீதிருந்த தங்களது திருமணப் புகைப்படத்தை எடுத்தாள்.
கணவனின் படத்தை வருடிக்
கொடுத்தவள், “எனக்குச் சந்தோஷ அதிர்ச்சி கொடுக்க நினைச்சி, சொல்லாம கொள்ளாம கிளம்பி
வரீங்க. ஆனா, இங்கே என்னைப் பார்த்ததும் உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்? ரொம்ப ஆவலா
இருக்கேன் அதைப் பார்க்க…” என்று சொல்லி புன்னகைத்துக் கொண்டாள்.
************
குளித்துவிட்டு காலை உணவை
முடித்துக் கொண்டு சமையலறையில் புகுந்தவள் தான்… மாமியாரை வெளியே அனுப்பிவிட்டு தானே
சமைத்தாள்.
“நைட் ஃபுல்லா பஸ் ஜர்னி.
உடம்பு அலண்டு போகும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ சஹி!” என்ற மாமியாரை, “பரவாயில்ல
அத்தை! எனக்கு டயர்டா இருந்தா நான் ரெஸ்ட் எடுத்துக்கறேன்” என்று பதிலளித்தாள்.
விஷயத்தை முதலிலேயே யூகித்திருந்த
கௌரியும் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. கணவனுக்காக, தானே பார்த்துப் பார்த்துச்
சமைக்கிறாள் என்று விட்டுவிட்டார்.
சாப்பிட அழைத்தாலும், இருக்கட்டும்
அத்தை நீங்க சாப்பிடுங்க நான் அப்புறம் சாப்பிடுறேன்…” என்று மறுத்துக் கொண்டிருந்தாள்.
“இங்கே பாரு சஹானா! நான்
ஒண்ணும் புரியாத குழந்தை இல்ல. பிரபு இன்னைக்கு வரான்னு நீ காலைல வீட்டுக்கு வந்த போதே
தெரிஞ்சிகிட்டேன். நீங்க இப்படி இருக்கறது எனக்கும் சந்தோஷம் தான். அதுக்காக வயித்தைக்
காயப் போடாதே. வந்து சாப்பிடு… அதுக்கப்புறம் உன்னை நான் என்ன சொல்லப் போறேன்?” என்றார்.
மனது கேட்கவில்லை என்றாலும்,
மாமியாருக்காக சிறிது கொறித்துவிட்டு எழுந்தாள்.
அதேநேரம் விமான நிலையத்திலிருந்து
காரை அனுப்பும் படி அவனிடமிருந்து அழைப்பு வந்தது.
அவசர அவசரமாக தேவியிடம்
தான் இருப்பதை சொல்ல வேண்டாம் என்றும், பிரபு வந்ததும் தனக்கு மொபைலில் தகவல் சொல்லச்
சொல்லிவிட்டுத் தங்களது அறைக்குச் சென்றாள்.
நெட்டித் தள்ளிய ஒரு மணி
நேத்திற்குப் பின் வாசலில் காரின் ஹாரன் ஒலி கேட்டது. அதேநேரம் தேவியிடமிருந்தும் தகவல்
வர, அவசர அவசரமாக ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்று மறைந்து கொண்டாள்.
பொதுவாகவே அவன் டிரெஸ்ஸிங்
அறைக்குள் அவ்வளவாக வரமாட்டான். அந்த அறையை அவள் மட்டுமே பயன்படுத்துவாள். செவிகள்
அவனது காலடி ஓசையைக் கேட்கவும், விழிகள் அவன் முகம் காணவும் தவியாய் தவித்தன.
முழுதாக ஐந்து நிமிடங்களுக்குப்
பிறகு, கதவைத் திறந்து மூடும் சப்தம் கேட்டதும் பரபரப்பில் அவளது இதயம் வேகமாகத் துடித்தது.
மூளை, ‘அவனிடம் செல்’ என்று கட்டளையிட்ட போதும், மனம் வேண்டாம் என்று தடுத்தது.
கையிலிருந்த ப்ரீஃப்கேஸை
அதனிடத்தில் வைத்தவன், சட்டையைக் கழற்றி கோட் ஸ்டாண்டில் மாட்டினான்.
சஹானா இல்லாத அந்த இடமே
அவனுக்கு வெறுமையாக தெரிந்தது. திருமணத்திற்குப் பிறகு அவளில்லாமல் தான் அன்றைய தினத்தை
அங்கே கழிக்கப் போவதை எண்ணி எரிச்சலாக இருந்தது.
ஜென்மன் செல்லும் அன்றும்,
தென்காசியிலிருந்து வந்த ஒரு மணி நேரத்தில் கிளம்பிவிட்டான். ஆனால், மிஷினரிஸ் கைக்கு
வந்துச் சேர இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று தகவல் வந்ததும், மொத்த பொறுப்பையும்
சூரஜிடமே ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
கிட்டதட்ட எட்டு நாட்கள்
அவள் அருகில் இல்லாததுகூட அவனுக்கு அத்தனைப் பெரிய பாரமாகத் தோன்றவில்லை. ஆனால், மறுநாள்
வரை அவளைக் காண முடியாதே என்ற எண்ணமே சலிப்பைக் கொடுத்தது.
இரு கைகளாலும் தலையை அழுந்தக்
கோதியவன், “சின்னு! உன்னைப் பார்க்க இன்னும் முழுசா அரைநாள் காத்திருக்கணுமா? ஐ மிஸ்
யூ சின்னு!” என்று வாய் விட்டு முணுமுணுத்தான்.
கண்களை மூடி, கைகளை தலைக்குப்
பின்னால் கோர்த்தபடி நின்றிருந்தவனை, “ஐ லவ் யூ பிரபு!” என்றபடி பின்னாலிருந்து அணைத்துக்
கொண்டாள் சஹானா.
அவளது அணைப்பிலும், காதல்
மொழியிலும், தன் உணர்வு வரப் பெற்றவனாக வேகமாக
அவளை முன்னால் இழுத்தான்.
“எதிர்பார்க்கல இல்ல” அழகாக
ஒரு பக்கமாகத் தலையசைத்துக் கேட்டவளை, தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்.
“சின்னு! வாட் எ சர்ப்ரைஸ்!
இதை நான் எதிர்பார்க்கவே இல்ல…” என்றவனை அவளைத் தன் அணைப்பிலேயே வைத்திருந்தான்.
“உங்களுக்கு மட்டும் தான்
சர்ப்ரைஸ் கொடுக்கத் தெரியுமா? நாங்களும் கொடுப்போமே…” என்றவளை சிறிது நேரம் பேசவிடாமல்
செய்தான்.
மெல்ல அவளை விடுவிக்க, அவனது
நெஞ்சில் வாகாகத் தலை சாய்த்துக் கொண்டாள்.
“எல்லாம் அந்த எட்டப்பனோட
வேலை தானே…” சிரித்துக் கொண்டே கேட்டான்.
“சூரஜ் அண்ணாவை திட்டாதீங்க.
அவர் சொல்லலைனா உங்களுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் கிடைச்சிருக்குமா? நாம ரெண்டு பேருமே
முழுசா ஒரு நாளை வேஸ்ட் பண்ணியிருப்போம்…” என்றாள் உல்லாசமாக.
“அதுசரி. இவ்ளோ ஸ்ட்ராங்
சப்போர்ட்டர் அவனுக்கு இருக்கும் போது என்னால என்ன செய்ய முடியும்…” என்றவன் மீண்டும்
அவளது முகம் நோக்கிக் குனிய, அவனது மொபைல் ஒலித்தது.
“ஆ! இந்தக் கரடிங்க தொல்லைத்
தாங்க முடியலை…” என்றவன் மொபைலை எடுக்க, சூரஜ்ஜின் பெயர் ஒளிர்ந்தது.
“சொல்லுடா எட்டப்பா!” என்றான்
சிரிப்புடன்.
“என்னடா! ஹாப்பியா? என்னை
என்ன வேணாலும் திட்டிக்கோ… ஆனா, அதெல்லாமே
சந்தோஷத்தோட வர்ற வார்த்தைங்கன்னு எனக்குத் தெரியும். சோ, நேரா மேட்டருக்கு வா… எப்படி
ஃபீல் பண்ண?” என்றான்.
“ம்” என்று சஹானாவைப் பார்த்துச்
சிரித்துக் கொண்டே, “என்னுடைய சொர்க்கத்துல இருக்கேன்டா” என்றவன், அவளது நெற்றியில்
சப்தம் வராமல் முத்தமிட்டான்.
சஹானா அவனைப் பார்த்தப்
பார்வையில் காதல் வழிந்தது. அவன் பேசட்டுமென எண்ணி, மெல்ல அவனிடமிருந்து விலகினாள்.
அவன் பார்வையாலேயே என்னவென்று
கேட்க, பேசும்படி செய்கை காட்டிவிட்டுச் சென்றாள்.
“அன்னைக்கு நைட் அந்த உருகு
உருகினயா… அதான் நீ வீட்டுக்குப் போகும் நேரத்தில் சஹானா அங்கே இருந்தா உனக்குக் கொஞ்சம்
சந்தோஷமா இருக்குமேன்னு போன் செய்து சொன்னேன். என் கணிப்பு தப்பாகல. என்ஜாய்டா! நான்
நாளைக்குப் பேசறேன்…” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தான் சூரஜ்.
மனநிறைவுடன் சிரித்தபடியே
மொபைலை அணைத்தான்.
அத்தயாயம் - 27
“சஹி! நீ இந்த லிஸ்டில்
இருக்கறதை வாங்கிடு… நான் இதோ வரேன்” என்று கௌரி வேறு பக்கமாகச் செல்ல, அவர் சொன்னபடியே
செய்து கொண்டிருந்தாள் அவள்.
அடி தட்டிலிருந்த வாஷிங்
பௌடரை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தவள், தன் எதிரில் வந்து நின்றவளைப் பார்த்ததும் சற்று
திகைத்துப் போனாள்.
“ஹ…லோ மிஸஸ்.பிரபு! எப்படி
இருக்கீங்க? உங்களை இங்கே எதிர்பார்க்கவே இல்ல…” என்றாள் ஜோஷிதா.
மனமில்லாத போதும் மெல்லிய
முறுவல் ஒன்றை உதிர்த்தவள், “நல்லா இருக்கேன்…” எனச் சொல்லிவிட்டு, கையிலிருந்த லிஸ்டில்
பார்வையைப் பதித்தாள்.
ஜோஷிதாவிற்கு ஆத்திரமாக
வந்தது.
‘பிரபுவிற்கு இருக்கும்
திமிர், கொஞ்சமும் குறையாமல் இவளுக்கும் இருக்கிறது. நலம் விசாரித்தால், ஒரு மரியாதைக்குத்
திரும்ப விசாரிக்கிறாளா பார்?’ என்று எரிச்சல் முண்டது.
‘ஜோ! கண்ட்ரோல் யுவர் செல்ஃப்…
இப்படியெல்லாம் மானம், மரியாதைப் பார்த்தால் வந்த காரியம் கெட்டுவிடும். அமைதி அமைதி’
என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
“நீங்க ரொம்பப் பிஸியா இருக்கீங்க
போல. ஆனாலும், நம்மள விசாரிச்சவங்களை பதிலுக்கு விசாரிக்கறது தான் மரியாதை…” என்று
அவளாகவே பேச ஆரம்பித்தாள் ஜோஷிதா.
இப்போது சஹானாவிற்கு எரிச்சலாக
வந்தது. சாதாரணமான பேச்சாக தோன்றினாலும், அதில் குத்தல் இருப்பதாகவே பட்டது அவளுக்கு.
முதன்முறை ஜோஷிதாவைச் சந்தித்த
போதே ஏனோ, அவள் மீது எந்தவிதமான நட்புணர்வும் தோன்றவில்லை அவளுக்கு. இதில் அவள் பிரபுவின்
முன்னாள் காதலி என்று தெரிந்ததும், அவளை அடியோடி பிடிக்காமல் போனது அவளுக்கு.
போதாக்குறைக்கு எதிரில்
வந்து நிற்பவளைத் தான் உதாசீனப்படுத்துகிறோம் என்று புரிந்தாலும், அவளது ஈகோ ஜோஷிதாவிடம்
பேசப் பெரும் தடையாக இருந்தது.
தான் அமைதியாக இருந்தால்
அவள் சென்றுவிடுவாள் என்று தான் நினைக்க, இதற்கெல்லாம் நான் அசருவேனா! என்பது போல மீண்டும்
தானாக வந்து பேசுபவளை என்ன சொல்வது?’
ஜோஷிதா தன்னையே பார்த்துக்
கொண்டிருப்பது புரிய, “எப்படி இருக்கீங்க?” வேண்டா வெறுப்பாகக் கேட்டுவிட்டு, டிராலியைத்
தள்ளிக் கொண்டு நடந்தாள்.
“எனக்கென்ன… ரொம்ப ரொம்ப
நல்லாயிருக்கேன். நீங்கதான் கொஞ்சம் டல்லா இருக்கா மாதிரி தெரியறீங்க… ஏதாவது பிராப்ளமா?”
என்றாள்.
அவள் கடைசி வாக்கியத்தைச்
சொல்லும் போது கிண்டலாகச் சொல்வது போலத் தோன்ற, நிமிர்ந்து ஜோஷிதாவின் கண்களை நேராகப்
பார்த்தாள் சஹானா.
“எந்தப் பிரச்சனையா இருந்தாலும்,
அதை எப்படி தீர்த்துக்கறதுன்னு எனக்குத் தெரியும். அப்படி ஏதாவது என்னால தீர்க்க முடியாத
பிரச்சனைன்னு ஒண்ணு வந்தால், அதை உங்களால மட்டும் தான் தீர்க்க முடியும்னு தெரிஞ்சா,
அப்போ உங்ககிட்ட என்னுடைய பிரச்சனையைச் சொல்றேன். அதோடு, அடுத்தவங்க விஷயத்தில் சம்மந்தமே
இல்லாமல் மூக்கை நுழைக்கறது நாகரீகமில்ல…” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
ஜோஷிதாவிற்கு கடுகடுவென
வந்தது.
‘பார்க்க ஒண்ணும் தெரியாத
அப்பாவி மாதிரி இருந்துட்டு, என்ன பேச்சு பேசறா பாரு?’ மனத்திற்குள் ஓடிய உணர்வுகளை
முகத்தில் காட்டாமலிருக்க, பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தாள் ஜோஷிதா.
“ஹய்யோ! என்ன மிஸஸ்.பிரபு!
நான் ஏதோ விளையாட்டுக்குச் சொன்னா, நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க… ரிலாக்ஸ். இதுக்கே
இப்படியானா நான் அடுத்துச் சொல்லயிருந்த விஷயத்தைக் கேட்டா எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க?”
– சொல்லிவிட்டு விஷமமாகச் சிரித்தாள்.
எவ்வளவு தான் தெளிந்த நீரோடையாக
இருந்தாலும், அதில் கல்லெறியும் போது சற்று சலனம் ஏற்படத்தானே செய்யும். சஹானாவும்
இப்போது அந்த நிலையில் தான் இருந்தாள்.
உள்ளுக்குள் இவள் என்ன சொல்லப்
போகிறாளோ என்ற பயமிருந்தாலும், வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமலிருக்க, தனது வேலையில்
கவனமாக இருப்பதைப் போல அசுவாரஸ்யத்துடன் பார்த்தாள்.
அகத்தை முழுமையாக வெளிக்காட்டிவிடும்
கண்ணாடி முகம் அவளுக்கு. அதோடு எந்தத் தகிடுதத்தமும் செய்யத் தெரியாதவளுக்கு தனது முகபாவத்தை
மறைப்பதென்பது சற்று சிரமமாகத் தான் இருந்தது.
அவளது முகத்தில் தெரிந்த
குழப்பத்தைச் சந்தோஷமாகப் பார்த்தாள் ஜோஷிதா.
‘இன்னும் உன்னை என்னவெல்லாம்
செய்யப் போகிறேன் பார்!’ என்று மனத்திற்குள் கறுவிக் கொண்டாள்.
முகத்தை இயல்பாக்கிக் கொண்டு,
“என்ன மிஸஸ். பிரபு! புரியலையா? பிரபு உங்களைத் தனியாக விட்டுட்டு ஜெர்மன் போயிருக்காரே…
அந்தக் கவலை தானே உங்களுக்கு…” என்றாள்.
இழுத்துப் பிடித்திருந்த
மூச்சை வெளியிட்டு, கண்களை மூடித் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். ‘சற்றுநேரத்தில்
தன்னை எப்படிக் கலங்கடித்துவிட்டாள்’ என்று ஆத்திரமாக வந்தது அவளுக்கு.
இமைக்காமல் ஜோஷிதாவைப் பார்த்தாள்.
அவளுக்கோ சஹானாவின் மனத்திற்குள்
ஓடும் எண்ணங்களைப் படிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை. தன்னுடைய பேச்சு அவளைப் பாதிக்கிறது
என்பதை அறிந்ததும் மேலும் குதூகலமாகிவிட்டாள்.
“இவளுக்கு எப்படிடா இந்த
விஷயம் தெரியும்னு யோசிக்கிறீங்களா? பிரபுவைப் பத்தி எனக்குத் தெரியாத விஷயமே இருக்காது.
ஏன்னா, அவர் ஊருக்குப் போறதுக்கு முன்னால என்கிட்டச் சொல்லிட்டுத் தானே போனார்…”
“அவரே சொல்லிட்டுப் போனாரா?”
உணர்ச்சிகளற்ற குரலில் கேட்டாள்.
இது ஒன்று போதாதா அவளுக்கு.
மேலும் உற்சாகத்துடன், “ஏன் என்னை நம்பலையா நீங்க? உங்ககிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியம்
என்ன இருக்கு மிஸஸ்.பிரபு?” சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“ஓ! ஆமாம்… நீங்க எதுக்காக
என்கிட்ட பொய் சொல்லணும்? ஆனா, ஊருக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போனவர் திரும்பி வர்றதையும்
உங்ககிட்ட சொல்லியிருப்பார் தானே…”
அவள் கிண்டலாகக் கேட்டதை,
ஜோஷிதா உணரவேயில்லை.
“சொல்லாமலா? இன்னும் ரெண்டு
நாளில் வந்திடுவார்.”
அவள் தன்னை இமைகள் விரிய
பார்ப்பதைக் கண்டதும், ஜோஷிதாவிற்கு ஆனந்தமாக இருந்தது.
தான் வந்த காரியம் ஈடேறிவிட்ட
வெற்றிக் களிப்புடன் கைகளைக் கட்டிக் கொண்டு,
“இப்பவாவது புரிஞ்சிகிட்டு இருப்பீங்களே…
நான் அவருக்கு எவ்வளவு
முக்கியமானவள்னு…” என்றாள்.
கடைசி வரியை அவள் சொல்லும்
போது ஜோஷிதாவின் முகத்தில், அதுவரையிருந்த சிரிப்பு மறைந்து கடுமை நிறைந்திருந்தது.
அதற்குள் லிஸ்டிலிருந்த
பொருட்களையெல்லாம் வாங்கியிருந்த சஹானா பில் கவுண்டரை நோக்கிச் செல்ல, ஜோஷிதா அவளைப்
பின்தொடர்ந்தாள்.
ஏற்கெனவே அங்கு வந்து பரிச்சயம்
என்பதால் பணியாளரிடம் பில் போடச் சொல்லிவிட்டு ஜோஷிதாவின் பக்கமாகத் திரும்பினாள்.
“மிஸ். ஜோஷிதா! நாம அப்படி
உட்கார்ந்து பேசலாமா?” என்று சூப்பர் மார்க்கெட்டின் உள்ளேயே இருந்த சிறு ரெஸ்டாரெண்ட்
பக்கமாகக் கையைக் காட்டினாள்.
“தாராளமா பேசலாம் மிஸஸ்.பிரபு.
இன்னும் பத்து நிமிஷம் ஃப்ரீதான்…” என்றாள் அவள் பெருந்தன்மையுடன்.
“வாங்க” என்றவள் இரண்டு
கோல்ட் காஃபியை வாங்கிக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
“சாப்பிடுங்க…” என்று ஜோஷிதாவிடம்
ஒன்றைக் கொடுத்தாள். ஸ்ட்ராவால் காஃபியைக் கலந்தபடி, “இப்போ நீங்க என்கிட்ட எதை ப்ரூவ்
பண்ண நினைக்கிறீங்க ஜோஷிதா?” எனக் கேட்டாள்.
காஃபியை ஒரு மிடறு விழுங்கிய
ஜோஷிதா, சஹானாவை நிமிர்ந்து பார்த்தாள். அவளிடமிருந்து இப்படி நேராக ஒரு கேள்வி வந்து
தாக்கும் என்று அவள் நினைக்கவேயில்லை.
திணறிக்கொண்டு, “என்ன சொல்றீங்க?”
என்றாள்.
மெல்லச் சிரித்த சஹானா,
“உங்களுக்குப் புரியலைன்னு சொன்னா நம்ப நான் ஒண்ணும் தெரியாதவள் இல்ல. இவ்வளவு நேரமும்
நீங்க சொன்னதை வச்சிப் பார்க்கும் போது நீங்க உங்களை பிரபுவுக்கு நெருக்கமானவன்னு எனக்குத்
தெரியப்படுத்தறது தான் உங்க நோக்கம்னு புரிஞ்சிகிட்டேன். என்ன நான் சொல்றது கரெக்ட்
தானே…” என்றாள்.
அதுவரை பேசிக்கொண்டிருந்த
ஜோஷிதாவால் இப்போது நேரடியாக சஹானா கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
“பிரபு பத்து நாள் ஜெர்மன்
போயிருக்கார்ங்கறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு… ஆனா, இன்னைக்கு அவர் சென்னை திரும்பிட்டது
உங்களுக்குத் தெரியல. ஊருக்குப் போறதை உங்ககிட்ட சொன்னவர், ரெண்டு நாள் முன்னாலேயே
திரும்பி வரேன்னு உங்ககிட்ட சொல்லாமவிட்டது ஆச்சரியமா இருக்கு இல்ல…” கேட்டுவிட்டு
அவளை ஆழ்ந்து பார்த்தாள்.
‘ஊருக்கு வந்துவிட்டானா?
சூரஜின் செகரட்டரி தானே ரெண்டு பேரும் வர பத்து நாட்கள் ஆகும்னு சொன்னான். அதை நம்பித்தானே
இவகிட்ட பேச வந்தேன். இவளை நான் டென்ஷன் பண்ணனும்னு நினைத்தால் இவள் என்னைக் கடுப்படிக்கிறாளே!
என்று மனத்திற்குள் அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.
“அ…து…” என்று ஆரம்பித்தவளை,
கைநீட்டி தடுத்தாள் சஹானா.
“இங்கே பாருங்க ஜோஷிதா,
உங்களைப் பத்தி எல்லாமே எனக்குத் தெரியும். பிரபு என்னிடம் சொல்லிட்டார். கல்யாணத்துக்கு
முன்னால எப்படியோ… ஆனா, இனி பிரபுவோட வாழ்க்கையில நான் மட்டும் தான் இருப்பேன்.
புரிஞ்சிதா. நான் மட்டும்
தான் இருக்கணும். இனி உங்க வாழ்க்கையில் பிரபு தலையிட மாட்டார். அதே போல எங்க ரெண்டு
பேருக்கும் நடுவில் நீங்க வரணும்னு கனவுல கூட நினைக்காதீங்க” என்றாள் அழுத்தமாக.
ஜோஷிதாவிற்கு ஆத்திரத்தில்
உடலெல்லாம் சூடானது. ‘இவளுக்கு எவ்வளவு தைரியம்…
என்கிட்ட எப்படி இப்படி பேசமுடியுது?’ என்று ஒரு நிமிடம் யோசித்தவளுக்கு எங்கோ
இடித்தது.
‘இதில் என்னவோ இருக்கிறது…
பிரபுவுக்கு என்னுடன் தொடர்பிருந்தது தெரிந்தும், இவள் இன்னும் அவனோடு இருக்கிறாளா?
நம்பமுடியவில்லையே… இவளுடைய குணத்திற்கு இது சாத்தியமில்லாத விஷயம். இவளைப் போன்ற பெண்களுக்குத்
தன்மானம் அதிகமாக இருக்குமே… பிறகு எப்படி அவனுடன்?’
யோசிக்க யோசிக்க குழப்பமாக
இருந்தது அவளுக்கு. கடைசியில் முழு விஷயமும் இவளுக்குத் தெரிந்திருக்காதோ’ என்ற முடிவிற்கு
அவள் வந்திருந்தாள்.
“ஓகே மிஸ்.ஜோஷிதா! இதுவே
நாம ரெண்டு பேரும் மீட் பண்றது கடைசியா இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்” என்றபடி
எழுந்தவள், “குட் பை” என்றாள்.
“ஒரு நிமிஷம் சஹானா!”
ஜோஷிதாவின் குரலைக் கேட்டதும்
நின்றாள்.
“நீங்க குட் பை சொல்லிட்டா
போதுமா? நானும் சொல்ல வேணாமா?” என்றவள் மர்மமாகச் சிரித்தாள்.
“பிரபு உங்ககிட்ட எல்லாத்தையும்
சொல்லிட்டதா சொன்னீங்களே! எல்லாத்தையும் சொல்லிட்டாரா?” விஷமமாகக் கேட்டாள்.
உதடுகளை அழுந்த மூடித்திறந்தவள்,
“ஆமாம்” என்றாள்.
“இல்ல சஹானா! முழுசா அவரும்
சொல்லல, நீயும் கேட்கல. போ போய்க் கேளு… அப்போ தெரியும் இந்த ஜோஷிதாவுக்கு பிரபு மேல
இருக்கும் உரிமை எவ்வளவு தூரம்னு. அப்புறம் முடிவு பண்ணு அவரோட இருக்க வேண்டியது நீயா?
இல்ல நானா?” ஆத்திரத்துடன் சொல்லி முடித்தவள், வேகமாக அங்கிருந்து சென்றாள்.
கோபத்துடன் பேசிவிட்டுச்
செல்லும் ஜோஷிதாவையும், சிலையாக சமைந்து நின்றிருந்த மருமகளையும் பார்த்த கௌரிக்கு
பயத்தில் நெஞ்சை அடைத்தது.
No comments:
Post a Comment