Thursday, July 9, 2015

உறவெனும் புதிய வானில்



அத்தியாயம் - 24

அலுப்பு தீர குளித்துவிட்டு வந்த சஹானா, முடியை விரித்துவிட்டபடி சோஃபா கைப்பிடியில் தலை சாய்த்து படுத்தாள். ஒரு வாரமாக மருத்துவமனை, வீடு, வர்ஷாவைப் பார்க்க வந்த உறவினர்கள் என்று எப்போதும் ஏதாவது வேலை இருந்து கொண்டே இருந்தது அவளுக்கு. 

வர்ஷா வீட்டிற்கு வந்தபின் தான் சற்று மூச்சுவிட முடிந்தது அவளால். இப்போது கூட கீழே உறவினர்கள் வந்திருக்கின்றனர். பரிமளம் அத்தை தான் அவளை ஓய்வெடுக்கச் சொல்லி மேலே அனுப்பிவிட்டார். அவளுக்கும் ஓய்வு தேவைப்பட ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டாள்.

கண்களை மூடி, கைகள் ஈரக் கூந்தலை அலைந்து கொண்டிருந்தாலும், மனம் கணவனை நினைத்துக் கொண்டிருந்தது. ஒரு வாரமும் இருவருக்குமே வேலை இருந்ததால், தினமும் இருவேளையும் பேசினாலும், அவர்களால் மனம்விட்டுப் பேசிக்கொள்ள முடியவில்லை.

கணவனின் அருகாமைக்காக அவளது மனம் ஏங்கியது. அவனது குரலைக் கேட்க வேண்டும் என்ற ஆவலும், அவனது அணைப்பில் பொதிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் அவளை அலைகழித்தது.

தன்னைக் காண ஓடிவந்துவிட மாட்டானா? என்ற ஏக்கம் மனத்தைக் கொய்ய, கண்களில் ஈரம் கசிந்தது.

கணவனின் தோளில் தலைசாய்த்துக் கொள்ளவெண்டும் என்ற ஆவல் அதிகரிக்க அதிகரிக்க அவளால் படுத்திருக்கக் கூட முடியவில்லை. எழுந்து ஜன்னலருகில் வந்தவள் மழையை வேடிக்கைப் பார்க்க, அவளது மொபைல் ஒலித்தது.

பிரபுவின் எண்ணைக் கண்டதும் வேகமாக போனை எடுத்து ஹலோ சொல்வதற்கு முன்பே, “சின்னு!” என்று குழைந்த குரலில் அழைத்தான் பிரபு.

அவனது குரலிலிருந்தே அவனும் தன்னிலையில் தான் இருக்கிறான் என்று புரிந்து கொண்டவளுக்கு, விழிகள் தளும்பின.

“பி..ர..பு!” என்று அழைப்பதற்குள் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

தழுதழுத்த அவளது குரலிலேயே அவளது நிலையை அறிந்து கொண்டவனுக்கு இப்போதே அவளைக் காண வேண்டும் என்ற வேகம் எழுந்தது.

“எப்படிடா இருக்க?” என்றான்.

“ம், நீங்க?” என்றாள்.

“உன் நினைப்போடு இருக்கேன். உன்னை எப்போ பார்ப்போம்னு ஏங்கிட்டு இருக்கேன்” என்றான்.

“நீங்க சொல்லிட்டீங்க… நான் சொல்லலை…”

“நீ சொல்லலைனாலும் எனக்குத் தெரியும்.”

“தெரிஞ்சி மட்டும் என்ன பிரயோஜனம்?” ஊடலாகக் கேட்டாள்.

“உன்னை நல்லா புரிஞ்சி வச்சிருக்கேன்னு அர்த்தம்” என்றான் சிரிப்புடன்.

“இந்த சிரிப்புல குறைச்சல் இல்ல… அப்புறம் வேலையெல்லாம் முடிஞ்சதா…”

“90% முடிஞ்சாச்சு. மெஷினரிஸை கார்கோக்கு அனுப்பினா என் வேலை முடிஞ்சது. அப்புறம் என் சின்னுவைப் பார்க்க ஓடி வந்திடுவேன்…” என்றான் காதலுடன்.

அவள் அமைதியாக இருக்க, “என்னடா! கோபமா?” என்றான்.
“ம்ஹும். நீங்க சீக்கிரமா வந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்.”

“எனக்கு மட்டும் அந்த எண்ணம் இல்லயா? இந்த சூரஜ் அவன் குடும்பத்தோட வந்திருக்கான். நீயும் வந்திருக்கலாம். அண்ணிக்காகத் தான் உன்னை விட்டுட்டு வரவேண்டியதா போச்சு. வந்திருந்தா நம்ம ஹனிமூனும் முடிஞ்சா மாதிரி இருந்திருக்கும்…” என்று சொல்லிச் சிரித்தான்.

“போன இடத்துல மனசை அலையவிடாம வேலையைப் பாருங்க. அதோட ஹனிமூன் எப்போ வேணாலும் போய்க்கலாம். இந்த வேலையெல்லாம் இல்லாம, நமக்கே நமக்குன்னு தனியா நேரம் ஒதுக்கிட்டுப் போகலாம்” என்றாள்.

“இந்த விஷயத்துல என்னைவிட நீ தான் ரொம்ப ஸ்மார்ட்டா டிசைட் பண்ற. கண்டிப்பா நீ நினைச்சா மாதிரியே போவோம். கூடிய சீக்கிரம்…” என்றவன், மேலும் சில கதைகள் பேச, அவர்கள் தங்களுக்கான உலகத்தில் சஞ்சரிக்கத் துவங்கினர்.

“ஓகேமா! எனக்காக சூரஜும், ஷீலாவும் டின்னர் சாப்பிடாம வெய்ட் பண்றாங்க. நான் நாளைக்குக் காலைல பேசறேன். ஓகே” என்று போனை வைத்தான்.

தனது எண்ணமெல்லாம் கட்டுக்குள் வர, சிரிப்புடன் போனை அணைத்தவள் படுக்கையில் விழுந்தாள்.

***********

“ஹா ஹா ஹா! பிரபு! நீ இப்படி ஒரு பொண்டாட்டிதாசனா மாறுவேன்னு நான் நினைச்சிக் கூட பார்க்கலைடா” வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் சூரஜ்.

இருக்கையின் கைப்பிடியில் முழங்கையை ஊன்றி, தாடையைத் தடவியபடி மோகனப் புன்னகை புரிந்தான் பிரபு.
அவனது பார்வையைக் கண்ட சூரஜின் மனைவி, “சூரஜ்! போதும் சும்மா இருங்க” என்று கணவனிடம் மென்குரலில் சொன்னாள்.

“உனக்குத் தெரியாது ஷீலா! இவன் எப்படி இருந்தவன் தெரியுமா? இன்னைக்கு எதைப் பார்த்தாலும் இது சஹிக்குப் பிடிக்கும்… இந்த கலர் சஹிக்குப் பிடிக்காது, இந்த இடத்துக்குச் சஹி வந்திருந்தா ரொம்ப இரசிச்சிப் பார்த்திருப்பான்னு வாயைத் திறந்தாள் அவன் மனைவியைப் பத்தித் தான் பேசறான்” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.

“சஹானா ரொம்ப லக்கி!” என்றாள் அவள்.

“ஹேய்! என்ன என்னையே கலாய்க்கற?”

“நான் ஒண்ணும் கலாய்க்கல. நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க…” என்றவள், “நான் ரூமுக்குப் போறேன்… சீக்கிரம் பேசிட்டு வாங்க” என்றவள் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு எழுந்தாள்.

டின்னரை முடித்துக் கொண்டு மூவரும், ஹோட்டலில் பின்புறமிருந்த கார்டனில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். உறங்க ஆரம்பித்திருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஷீலா சென்றுவிட, நண்பர்கள் இருவரும் மட்டும் அமர்ந்திருந்தனர்.

“சொல்லப் போனா நான்தான் ரொம்ப லக்கி சூரஜ்! சஹானா மாதிரி ஒரு பொண்ணு என் வாழ்க்கையில் வராமல் போயிருந்தால்… நினைச்சிப் பார்க்கவே முடியலைடா” என்றான்.

சூரஜ் அமைதியாக அவனைக் பேசவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“உனக்குத் தெரியாது சூரஜ்! கல்யாணம் செய்துக்கும் போதுகூட அவளை இந்த அளவுக்கு நேசிப்பேன்னு நினைச்சிப் பார்க்கல. எங்க அம்மாவோட வற்புறுத்தலால தான் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன்.

உண்மையைச் சொல்லணும்னா என் பேரண்ட்ஸ் மேல இருந்த கோபத்துக்கு இவளைப் பழிவாங்கணும் என்ற முடிவோட தான் தாலியே கட்டினேன்” என்றவனைச் சற்று திகிலோடு பார்த்தான் சூரஜ்.

“சுத்தப் பைத்தியக்காரத்தனமான எண்ணம் பிரபு! உன்னோட கோபத்துக்கு யாரோ ஒரு அப்பாவிப் பொண்ணை பலியாக்குவியா என்ன?” என்றான் ஆத்திரத்துடன்.

“அப்போ எனக்கு அது புரியலடா. என்னோட நிம்மதியை அழிக்க வந்தவன்னு தான் நினைச்சேன். கல்யாணம் செய்துகிட்டேனே தவிர, அவளை நான் நெருங்கவே இல்லை. ஆனா, என்னோட வைராக்கியமெல்லாம் மூணு நாளைக்கு மேல தாக்குப் பிடிக்கல.

எது என்னையும், என் மனசையும் மாத்துச்சுன்னு அப்போ எனக்குத் தெரியல. ஆனா, அவளைப் பார்த்ததுமே என் மனசுக்குப் பிடிச்சிருக்குங்கறதே எனக்குத் தாமதமாதான் புரிஞ்சது. கொஞ்சம் கொஞ்சமா தன்னோட குணத்தால என்னை மொத்தமா மாத்திட்டா. என்னோட காதலை புரியவச்சா…

அவளை என்னோட உயிருக்கு மேலா நேசிக்கிறேன் சூரஜ்! அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாது. இப்படிப்பட்ட ஒருத்திக்கு நான் துரோகம் செய்திருக்கேங்கற நினைப்பே என்னை இப்போலாம் அவகிட்ட நெருங்க விடமாட்டேன்னுது.

ஜோஷிதாவைப் பற்றி அவகிட்ட சொல்லிட முடிவு பண்ணேன். ரெண்டு முறை சொல்ல முயற்சி செய்தும் முழுசா சொல்ல முடியல. ஆனா, நான் சொன்ன பாதி விஷயத்தை வச்சி, நானும், ஜோஷிதாவும் காதலிச்சோம்னு அவளா ஒரு யூகம் செய்துகிட்டா…

அவளால அந்த நினைப்பைக் கூட தாங்கிக்க முடியலடா. 
அவகிட்ட போய் நான் எப்படி எல்லாத்தையும் சொல்றது? உண்மை தெரிஞ்சா அவளோட மனசு சுக்கு நூறா உடைஞ்சி போயிடும். நான் பொய்த்துப் போயிடுவேன். எங்களோட நேசமும், எதிர்காலமும் சிதைஞ்சி சின்னா பின்னமாகிடும்.

ஒவ்வொரு நாளும் இதைப் பத்தி நினைக்கும் போதெல்லாம்… என் மனசாட்சியே என்னைக் கொல்லுது. அவள்கிட்ட சொல்ல முடியாமல் மனசுக்குள்ளாயே போட்டு புழுங்கிகிட்டு இருக்கேன்.

ஒரு வகையில் நான் ரெண்டு பொண்ணுங்களுக்குத் துரோகம் செய்திருக்கேன். இதுக்கெல்லாம் எப்படிப்பட்ட தண்டனையை அனுபவிக்கப் போறேனோ?”

மனத்திலிருந்ததை கொட்டிவிட்டு தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த நண்பனைப் பார்க்கப் பார்க்க சூரஜிற்கு வருத்தமாக இருந்தது.

ஜோஷிதா அவனிடம் தான் செக்ரட்டரியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பிரபுவின் மீதிருந்த மயக்கம் தெரியும். அவள் பிரபுவிடம் பழக ஆரம்பித்த போதே ஒருமுறை அவளை எச்சரித்து அனுப்பினான்.

ஆனால், சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவளுக்குச் சாதகமாக இருந்ததால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. பிரபுவை மட்டும் ஒருமுறை நன்கு யோசிக்கும் படி கூறினான். அவன் சொன்ன வார்த்தைகளை காற்றோடு பறக்க விட்டவன் இன்று குற்றவாளியாகி தலைகுனிந்து அமர்ந்திருக்கிறான்.

இருந்தாலும் அவனால் பிரபுவின் நட்பை முறித்துக் கொள்ள முடியவில்லை. அவனது சொந்த வாழ்க்கையையுடன், நட்பை முடிச்சிட்டுக் கொள்ள அவன் விரும்பவில்லை. தனது எல்லையறிந்து அங்கேயே நின்று கொண்டான். அதனாலேயே நட்பு ரீதியாகவும், தொழில் முறையிலும் இருவரும் இன்றும் ஒன்றாக இருக்கின்றனர்.

நண்பனின் தோளை ஆறுதலுக்காக அழுத்திக் கொடுத்தான் சூரஜ்.

“பிரபு! நீ எப்போ உன்னோட தப்பை உணர்ந்துடியோ அப்பவே நீ மாறிட்ட. இப்போ… இல்ல அப்பவும் சரி இப்பவும் சரி உன் மனசுல இருக்கறது சஹானா மட்டும் தான். உன் வாழ்க்கையே அவங்கதான்னு நினைக்கிறன்னா… அவங்களுக்காக தான் நீ பார்க்கணும்.

ஜோஷிதாவை நினைச்சி நீ கவலைப்படாதே. அவளுக்குத் துரோகம் பண்ணிட்டோம்னு நீ வருத்தப்படுறது ஆச்சரியமா இருக்கு. அவளுக்குத் தேவை நீ மட்டும் இல்ல. உன்னோட பணம், வசதி, செல்வாக்கு எல்லாமே தேவை. அவளோட காதல் உண்மையா இருந்திருந்தா இந்த ஒரு வருஷத்துல நீ அவளுக்கு முழுசா சொந்தமாகியிருப்ப.

ஆனா, சஹானா விஷயம் அப்படியில்ல. அவங்களுக்கு நீயும், உன் மனசும் தான் ரொம்ப முக்கியம். வந்த கொஞ்ச நாளிலேயே உன்னை இந்த அளவுக்கு ஃபீல் பண்ண வச்சிருக்காங்கன்னா அதுதான்டா உண்மையான அன்பு.

உன்னோட குற்ற உணர்ச்சியைத் தூக்கித் தூரப் போடு. 
உனக்காக வாழ்ந்துட்டு இருக்கும் பொண்ணோட சந்தோஷமா லைஃபை என்ஜாய் பண்ணு மேன்! அதை விட்டுட்டு இப்படி வருத்தப்பட்டுட்டு இருக்க.

ஃபீல் ஃப்ரீ… ஊருக்குப் போனதும் பொண்டாட்டி கூட எப்படி ரொமான்ஸ் பண்ணலாம்னு யோசிப்பா… அதை விட்டுட்டு தேவையில்லாததுக்கு கவலைப்படாதே. போன்ல ஹனிமூன் போறதைப் பத்தி பேசிட்டு இருந்தியே அதுக்கான ஏற்பாட்டை பண்ணு” என்று பிரபுவின் வயிற்றில் தட்டிச் சிரித்தான்.

நண்பனின் வார்த்தைகள் அவனுக்குள்ளும் சற்று உற்சாகத்தைக் கொடுக்க, புன்னகையுடன் தலையாட்டினான்.
ஆனாலும், மனத்திற்குள் ஜோஷிதாவிற்கு ஏதாவது உபகாரம் செய்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

இந்த முடிவு தனது வாழ்க்கையை எப்படியெல்லாம் பந்தாடப் போகிறது என்று தெரியாமல், நண்பனுடன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.

அத்தியாயம் - 25

வரவேற்பறையில் அமர்ந்திருந்த திவ்யாவிற்கு வியர்த்து வழிந்தது. தைரியமாக ஸ்ரீராமைச் சந்திக்கக் கிளம்பி வந்தாயிற்று. ஆனாலும், இப்போது பதட்டத்தில் கைகாலெல்லாம் உதறியது.

‘இருந்தாலும் தனக்கு இத்தனைக் கோபம் வரக்கூடாது’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

“மேடம்! சார் உங்களை வரச்சொல்றார்” பியூன் தகவல் சொல்ல, ஒருமுறை முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு அறைக் கதவைத் தட்டினாள்.

உள்ளே வரச் சொல்லி அழைப்பு வந்ததும், ஆழ மூச்செடுத்து தன்னைச் சற்று நிதானப்படுத்திக் கொண்டு கதவைத் திறந்தாள்.

“ஹலோ டாக்டர்!” என்றபடி எழுந்த ஸ்ரீராம் திவ்யாவைக் கண்டதும் வியப்பு மேலிட பார்த்தான்.

ஹாஸ்பிட்டல் கார்டைக் கொடுத்து ஜுனியர் டாக்டர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்று பியூன் சொன்னதும், அவன் கல்பனாவைத் தான் எதிர்பார்த்தான். 

நிச்சயமாக திவ்யா வருவாள் என்று கனவிலும் அவன் நினைக்கவில்லை.

“ஹ…லோ சார்!” என்றவளுக்கு கால்கள் பின்னியதைப் போல நாவும் குழறியது.

சில நொடிகள் அங்கே அமைதி நிலவ, ஸ்ரீராமே அதைக் கலைத்து, “உட்காருங்க” என்று இருக்கையைக் காட்டினான்.
அமர்ந்தபடி, “தேங்க்யூ!” என்றாள்.

பஸ்சரை அழுத்தியவன், “நான் கல்பனா மேடம்கிட்ட டீடெயிலா பேசிட்டேனே. அப்புறம்…” என்று இழுத்தான்.

“நா..ன்.. அந்த விஷயமா வரலை” என்று தொண்டையைச் சொருமிக் கொண்டவள், “உங்ககிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும்” என்றாள்.

அவளையே பார்த்தவன், “சாரி மேடம்! ஆஃபிஸ் டைம்ல நான் பர்சனல் விஷயங்கள் பேசறது இல்ல” என்றான்.

“இன்னும் அஞ்சு நிமிஷத்தில் மணி பதினொன்று ஆகிடும். அப்போ உங்களுக்கு டீ டைம் தானே… அதைக் கணக்குப் பண்ணித்தான் வந்தேன்” என்றாள்.

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், “அப்போ நீங்க கணக்குப் பண்றதுல கில்லாடின்னு சொல்லுங்க…” என்றான்.

“என்னது?” என்றாள் எரிச்சலுடன்.

“ஐ மீன், டைம் கால்குலேட் பண்ணி வந்தேன்னு சொன்னீங்களே, அதைத்தான் சொன்னேன். தட்ஸ் ஆல்…” என்றான்.

‘சரியான அராத்து’ என்று மனத்திற்குள் சொல்லிச் சிரித்துக் கொண்டாள்.

“சரி சொல்லுங்க. அப்படி என்ன பர்சனலான விஷயம் பேசணும்?” என்று கேட்டான்.

இமைகளைப் படபடவென கொட்டியவள், “சாரி கேட்கணும்…” என்றாள் மென்குரலில்.

“நான் எதுக்குங்க, உங்ககிட்ட சாரி கேட்கணும்?” என்று வேண்டுமென்றே குரலை உயர்த்தினான்.

“ஹய்யோ! நீங்க இல்லங்க. நான்தான் உங்ககிட்ட சாரி கேட்க வந்தேன். அன்னைக்குத் தெரியாம உங்களை வாய்க்கு வந்தபடி பேசிட்டேன்…”

“என்ன திடீர்னு என்மேல உங்களுக்குக் கருணைப் பிறந்திருக்கு?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டான்.

“அப்படியெல்லாம் இல்ல. நான் தப்பு பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சா சாரி கேட்டுடுவேன். உங்க மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சிது… அதனால தான் சாரி கேட்க வந்திருக்கேன். உங்களை ரெண்டு முறை பார்த்தும் கேட்க முடியாத சூழ்நிலை அதான்…”

“ம். அன்ன்னைக்கு அத்தனை தடவை சொன்னேன். நீங்க நம்பல. இப்போ திடீர்ன்னு என் மேல தப்பிருக்காதுன்னு எப்படி ஃபீல் பண்ணீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“உங்க சிஸ்டர்ஸ் மேலயும், உங்க ஃபேமலி மேலயும் நீங்க வச்சிருக்க அன்பும், அக்கறையும் தான் காரணம்…” என்றாள்.

“அது வெறும் நடிப்பா இருந்தா…?”

“பாசத்துக்கும், நடிப்புக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு முட்டாள் இல்லை நான். உண்மையான அன்பு எல்லாத்தையும் விட்டுக் கொடுக்கும். உங்க அன்பு அப்படிப்பட்டது. அதை என் கண்ணால பார்த்தேன்.”
சொல்லும் போதே அவளது முகம் திடீரென இறுகிவிட, ஸ்ரீராம் என்னவென்று புரியாமல் குழம்பிப் போனான்.

அதற்குள் இருவருக்குமாக பியூன் காஃபி கொண்டுவந்து வைத்துவிட்டு வெளியேறும் வரை, பேச்சு தடைபட்டது.

“டாக்டர்! சீரியஸ் ஆகிடாதீங்க. நான் ஒரு தமாஷுக்காகக் கேட்டேன்.”

“இட்ஸ் ஓகே சார்! ஏதோ பழைய நினைப்பு” என்றவள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் கவரை அவனிடம் நீட்டினாள்.

“என்ன இது?”

“நேத்து மார்க்கெட்டில் எனக்காக கொடுத்தீங்களே டவல்… அழுக்கா இருந்ததேன்னு நேத்து கொடுக்கலை. வாஷ் பண்ணி கொண்டுவந்திருக்கேன்…” என்றாள்.

இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டே, “சாரிங்க, ஒருத்தருக்குக் கொடுத்த பொருளை நான் திரும்ப வாங்கிக்கறது இல்ல…” என்றான் முறுவலுடன்.

அவளும் விடாப்பிடியாக, “அதேபோல, நானும் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படுறவ இல்ல… இந்தாங்க” என்றாள்.
“பரவாயில்லைங்க… அந்த டவல்ல உங்க பேர் எழுதியிருக்குப் போல. நேத்து தான் வாங்கினேன்… உடனே உங்களுக்கு யூஸ் ஆச்சு. நான் உங்களுக்குக் கொடுத்ததா இருக்கட்டும். இதைப் பார்க்கும் போதெல்லாம் என் ஞாபகம் வரும் இல்ல…” என்றான்.

சட்டென விழிகளை உயர்த்திப் பார்த்த திவ்யாவிற்கு அவனது குறுஞ்சிரிப்பு, சொல்லாமல் ஒரு உவப்பான செய்தியைச் சொன்னது.

அதுவரை சற்று நேரம் மறைந்திருந்த படபடப்பு மீண்டும் தொற்றிக் கொள்ள, “பார்க்கும் போது தான் உங்க நினைவு வரும்னு நினைச்சா, நான் என்ன சொல்றது?” என்று முணுமுணுத்தாள்.

அவள் சொன்ன வார்த்தைகள், அவனுக்குத் தெளிவாகக் கேட்ட போதும், “என்ன மேடம் சொல்றீங்க?” என்று கேட்டான்.

அவன் வேண்டுமென்றே கேட்கிறான் என்று புரிந்து கொண்டவள், “ம், உங்க நினைவு எனக்கு எதுக்கு வரணும்னு கேட்டேன்” என்றாள்.

“அப்போ என் நினைப்பு உங்களுக்கு வரவே வராதுன்னு சொல்றீங்க…”

சந்தோஷத்தில் ஆர்ப்பரித்த மனத்தை அடக்கியபடி, “ரொம்பத் தேங்க்ஸ். உங்க காஃபிக்கும், டவலுக்கும்… நான் கிளம்பறேன்” என்றபடி எழுந்தாள்.

“டாக்டர் மேடம்! என் கேள்விக்குப் பதிலே சொல்லாம கிளம்பிட்டீங்களே…” என்றவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவனது கண்களைச் சந்திக்கும் தைரியம்மில்லாமல், “சில கேள்விகளுக்கு உடனே பதில் தெரிஞ்சிக்கறதைவிட, நிதானமா தெரிஞ்சிக்கறது தான் பெட்டர்…” என்றாள்.

அவளருகில் வந்தவன், “அந்த நாள் என்னைக்குன்னாவது சொல்வீங்களா?”

பின்னால் நகர்ந்தபடி, “அதை அடுத்த முறை நாம காஃபி சாப்பிடும் போது சொல்றேன்…” என்றவள் சிரிப்புடன் அங்கிருந்து வெளியேறினாள்.

தனது காதல் இத்தனைச் சீக்கிரம் கைகூடும் என்று எதிர்பார்க்காதவனுக்கு, அவளது பதில் தீஞ்சுவையாய் தித்தித்தது.

முன்தினம் அவளை மருத்துவமனையில் அழுத விழிகளுடன் சந்தித்த போதே, அவனுக்குச் சங்கடமாக இருந்தது. டீனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரே எதேச்சையாக அவளைப் பற்றிப் பேசினார்.

பன்னிரெண்டு வயது குழந்தைக்கு இதய அடைப்பு. அந்த அறுவை சிகிச்சையில் குழந்தையின் நிலை மேலும் கவலைக்கிடமாகிப் போக, அதை அவளால் தாங்க முடியவில்லை. அதுக்குத் தான் தைரியம் சொல்லி அனுப்பினேன். வெரி பிரில்லியண்ட் கேர்ல். பட் செண்டிமெண்ட் அதிகம்.

டீன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட போதே அவள் மீது ஒரு மரியாதை தோன்றத் தான் செய்தது. அன்று தானும் அவளிடம் அப்படி பேசியிருக்க வேண்டாம் என்று நினைத்த போதே அவளைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று நினைத்திருந்தான்.

மீண்டும் அன்று மாலையே, எதிர்பாராத சந்திப்பில் அவளிடம் பேச முடியவில்லை. ஆனால், இப்படி திடுதிப்பென அலுவலகத்திற்கு அவள் வருவாள் என்று சுத்தமாக அவன் எதிர்பார்க்கவில்லை.

அடுத்தமுறை அவ்வளைச் சந்திக்கும் போது தனது மனத்தை திறந்துவிட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டவன், மந்தகாசப் புன்னகைப் புரிந்தான்.

************

கையிலிருந்த புத்தகத்தையும், பொழிந்து கொண்டிருந்த மழையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவிற்கு கவலையாக இருந்தது.

“இந்த மழையில வெளியே போகலைன்னு இந்த அம்மாவை யார் திட்டினாங்க? மழை கொட்ட ஆரம்பிச்சாச்சு… இது எப்போ விடுறது?”

வாய்விட்டுப் புலம்பியவள், அன்னையின் மொபைலுக்கு முயன்றாள். அது சமையலறையிலிருந்து குரலெழுப்ப, எரிச்சலுடன் இணைப்பைத் துண்டித்தாள்.

“ஒரு அவசரத்துக்கு எடுத்துட்டுப் போகத் தானே மொபைல் வாங்கிக் கொடுத்தது. இப்படி வீட்டில் வச்சிட்டுப் போனா என்ன அர்த்தம்? வரட்டும் இன்னைக்கு இந்தம்மா…”
கோபத்துடன் புத்தகத்தை மூடிவைத்தவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. அரைமணி நேரமாக கொட்டிக் கொண்டிருந்த மழையும் விட்டபாடில்லை.

வீட்டிற்குள்ளே இருக்கப் பிடிக்காமல் வெளியே வந்தவள், இரண்டு வீடுகள் தள்ளி மழைக்கு ஒதுங்கி நின்றிருந்த ஸ்ரீராமைக் கண்டுவிட்டாள்.

“ராம்!” என்று அவனது பெயரை உச்சரித்தவள், ஓடிச் சென்று ஒரு குடையுடன் வந்தாள்.

“ஹலோ சார்!” என்ற அழைப்பைக் கேட்ட ஸ்ரீராம், சட்டென திரும்பிப் பார்த்தான்.

“என்னங்க நீங்க எங்கே இந்தப் பக்கம்?” என்றான்.

“அதை நான் கேட்கணும். இதுதான் எங்க வீடு… மழை இப்போதைக்கு விடாதுன்னு நினைக்கிறேன். வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் இருங்க… சூடா காஃபி சாப்பிடலாம். மழைக்கு இதமா இருக்கும்” என்றாள்.

எப்படியும் மறுப்பான் என அவள் நினைத்துக் கொண்டிருக்க, அடிக்கும் பேய் மழையிலிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்தவன், “நீங்க கூப்பிட்டு வராமல் இருப்பேனா?” என்றான்.

“நான் என்ன உங்களைக் காட்டுக்கா கூப்பிட்டேன்? நீங்க வராமலிருக்க. எங்க வீட்டுக்குத் தானே கூப்பிட்டேன்” சொல்லிக் கொண்டே அவனுக்கும் சேர்த்து குடை பிடித்தாள்.

சற்று பெரிய குடையாக இருந்த போதும், இருவரும் வீட்டிற்குள் வருவதற்குள் திவ்யாவும் நனைந்து போயிருந்தாள்.

மழைக் கோட்டை கழற்றி வராண்டாவிலிருந்த ஆணியில் மாட்டியவன், கால்களைக் கழுவிக் கொண்டு உள்ளே வந்தான்.

அதற்குள் உள்ளேயிருந்து டவல் ஒன்றைக் கொண்டு வந்தாள் அவள்.

மறுக்காமல் வாங்கி தலையைத் துவட்டிக் கொண்டான். ஜில்லிட்டிருந்த கரங்களை பரபரவென தேய்த்துக் கொண்டான்.

“நீங்க உட்காருங்க…” என இருக்கையைக் காட்டிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

“என்னங்க வீட்ல யாரையுமே காணோம்?” என்றான்.

“இருக்கறது நானும், எங்க அம்மாவும் தான். அம்மா வெளியே போயிருக்காங்க” என்றாள்.

“அச்சச்சோ! வீட்ல யாரும் இல்லையா? அப்போ நான் கிளம்பறேங்க…” என்று எழுந்தான்.

அடுப்பில் டிக்காஷன் கொதித்துக் கொண்டிருக்க, சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தவள், “சார்! கவலைப்படாதீங்க… உங்க மேல எனக்கு நல்ல அபிப்ராயம் தான் இருக்கு…” என்றாள்.

“நீங்க வேறங்க… வீட்ல பெரியவங்க யாரும் இல்ல. உங்ககிட்ட தனியா மாட்டிகிட்டேனேன்னு நானே டென்ஷன்ல இருக்கேன். நீங்க ஜோக் அடிக்கிறீங்க” என்றான் தீவிர பாவத்துடன்.

சமையலறை வாசலில் நின்று முறைத்தவள், “ஸ்ரீராம்! திஸ் இஸ் டூ மச்” என்றாள்.

“ஏங்க இப்படி மிரட்டறீங்க. இதுக்குத் தான் சொன்னேன்…” என்று அவன் சொல்ல, அதற்கு மேல் அவளால் போலியாக முறைக்க முடியாமல் சிரித்தாள்.

“நீங்க எப்பவுமே இப்படித் தானா?”

“பின்னே வேளைக்கு ஒரு முகத்தையும், குணத்தையுமா வச்சிக்க முடியும். நான் இப்படித் தான். கொஞ்சம் கலாய்ப்பேன். நீங்க தப்பா நினைச்சிக்கக் கூடாது…” என்றான்.

சிரித்தவள், “சாரி ராம்!” என்றாள்.

அவளது பெயர் சுருக்கத்தை இரசித்தவன், “எதுக்கு?” என்றான்.

“உங்களை நான் ரொம்பவே இன்சல்ட் பண்ணியிருக்கேன்…” என்றாள் வருத்தத்துடன்.

“இட்ஸ் ஓகே திவ்யா! நீ என்னைப் பத்தித் தெரியாமல் தானே செய்த. தெரிந்து செய்யும் தப்புக்குத் தான் மன்னிப்பு கிடையாது…” என்றான்.

இருவரது பார்வையும் காதலுடன் உரசிக் கொள்ள, அதை விலக்கிக் கொள்ள முடியாமல் தவித்தனர்.

அதேநேரம் திவ்யாவின் மொபைலில் வைத்திருந்த அலாரம் பாடியது…
விட்டுவிட்டு மின்னல் வெட்டும்; சப்தமின்றி இடிஇடிக்கும்,
இருவர் மட்டும் நனையும் மழையடிக்கும்…
இது கால மழையல்ல, காதல் மழை!

ஸ்ரீராமின் கரங்கள் அவளது கரத்தைத் தன்னுடன் பிணைத்துக் கொள்ள, சுயநினைவிற்கு வந்த திவ்யா, வேகமாக அவனிடமிருந்து விலகினாள்.

ஒவ்வொன்றாய் திருடுகிறாய், திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்…
முதலில் என் கண்களை,
இரண்டாவது இதயத்தை,
மூன்றாவது மொத்தத்தை…

அலாரம் நிற்காமல் பாடிக்கொண்டிருக்க, அவனது பார்வையின் வீச்சைத் தாள முடியாமல் தவித்துப் போனாள்.
அவளை நெருங்கிய ஸ்ரீராம், டேபிள் மீதிருந்த மொபைலை எடுத்து அலாரத்தை நிறுத்தி விட்டு, சோஃபாவில் வந்தமர்ந்தான்.

அங்கே நிற்க முடியாமல் சமையலறைக்குச் சென்றவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு டீயுடன் வந்தாள்.
டீயைக் குடித்து முடிக்கும் வரை இருவருமே பேசிக் கொள்ளவில்லை.

“ராம்! வாழ்க்கைல ஒரு முக்கியமான முடிவெடுக்க வேண்டிய கட்டத்துல நாம இருக்கோம்… அவசரப்பட்டு எதுவும் பேசிட வேணாம். நான் சொல்றதைக் கேட்டுட்டு நீங்க நிதானமா யோசிச்சி சொல்லுங்க…” என்றாள்.

“திவி! நம்ம ரெண்டு பேர் மனசுல என்ன இருக்குன்னு சொல்லாமலேயே நாம புரிஞ்சிகிட்டோம். இதுக்கு மேல என்ன வேணும்னு நான் கேட்கப் போறது இல்ல. உன் மனசுல இருக்கற விஷயத்தை தயக்கமில்லாமல் என்னிடம் சொல்லலாம்.

நிச்சயமா அது நமக்கு பாதகமா இருக்காதுன்னு நான் நம்பறேன். உனக்கு எல்லாமே உன் அம்மாதான். கயாணத்துக்குப் பின்னால அவங்க நம்ம கூட இருக்கணும்னு கேட்கப் போற அதானே” என்றான்.

“ம், ஆமாம். அதோட இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு. நிச்சயம் அதை நீங்க தெரிஞ்சிக்கணும். எங்க அப்பா இன்னும் உயிரோட தான் இருக்கார். சென்னையில் என் பாட்டியோட…” என்றாள்.

தனது தந்தையின் காதல் லீலைகள், வைதேகி தன்னைப் பெற்ற மகளாக எண்ணி வளர்த்தது. படிப்பு முடிந்ததும் அவரை அழைத்துக் கொண்டு தான் இங்கே வந்துவிட்டது என்று அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

குறுக்கிடாமல் கேட்டுக் கொண்ட ஸ்ரீராமிற்கு இவளது வாழ்க்கையில் இத்தனைச் சோதனைகளா என்று நினைத்துக் கொண்டான். ஒற்றை மனுஷியாக நேர்மையாக நின்று தான் பெறாத மகளை வளர்த்தவரை அவனால் வியந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

அதன் தாக்கத்திலேயே அமர்ந்திருந்த இருவரும், வைதேகி உள்ளே நுழைந்ததைக் கவனிக்க வில்லை.

ஹாலில் யாருடன் அமர்ந்து பேஎசிக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டே வந்த வைதேகி அங்கே ஸ்ரீராமைக் கண்டதும் ஒரு நொடி திகைத்துப் போனார்.

அவர்கள் இருவரும் கையைப் பற்றியபடி அமர்ந்திருந்ததிலிருந்தே விஷயத்தை முழுவதுமாக யூகித்துவிட்டவருக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.

“திவிம்மா!” என்று அவர் வராண்டாவிலிருந்து குரல் கொடுக்க, வேகமாக எழுந்தவள், “ராம்! எங்க அம்மா” என்றாள்.

அவனுக்குமே அது ஒரு திகைப்பான நிமிடமாக இருந்தது.

“எப்படியிருக்கீங்க தம்பி?” என்று பூரிப்புடன் விசாரித்தார்.

“நல்லாயிருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க?” என்றான்.
இருவரும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்று அறிந்து கொண்டவளுக்கு வியப்பாக இருந்தது.

“அம்மா! உனக்கு இவரையும் தெரியுமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“நான்தான் அவங்க வீட்டுக்குப் போயிருக்கேனே. அப்போ பார்த்திருக்கேன். அன்னைக்கு ஹாஸ்பிட்டலுக்கு வந்தேனே… அப்போ கூட தம்பி என்கிட்ட பேசிட்டுத் தான் போனார்” என்றார்.

பெண்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, ஸ்ரீராம் மௌனமாக சிரித்துக் கொண்டான். தனக்குப் பார்த்திருக்கும் பெண்ணே இவள் தான் என்று அவனுக்கு இன்றுதான் தெரிந்த போதும், தனது குடும்பத்தில் இவளை ஏற்றுக் கொள்ள எந்த ஆட்சேபணையும் இருக்காது என்ற எண்ணமே பெருத்த நிம்மதியைக் கொடுத்தது.

இங்கே இவன் அவனது நினைவுகளில் நீந்திக் கொண்டிருக்க, அதற்குள் தாயும், மகளும் பேசி முடித்திருந்தனர்.

“உட்காருங்க தம்பி!” என்றார் வைதேகி.

“இல்லங்கத்தை! மழை கொஞ்சம் விட்டிருக்கு கிளம்பறேன். இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம்” என்றவன், “வரேன் திவ்யா” என்று சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

“அம்மா! அவரை அனுப்பிட்டு வரேன்…” என்று அவன் பின்னாலேயே வந்தாள்.

ரெயின் கோட்டை மாட்டிக் கொண்டிருந்தவனிடம், “என்ன திடுதிப்புன்னு அத்தைன்னு கூப்பிட்டுட்டீங்க. இப்போ நான் என்ன சொல்லிச் சமாளிக்கிறது?” என்றாள்.

சிரித்தவன், “போய் உன் அம்மாகிட்டயே கேளு. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றவன் உற்சாகத்துடன் கிளம்பினான்.

புரியாமல் விழித்தவள், “அம்மா!” என்றபடி உள்ளே சென்றாள்.

No comments:

Post a Comment