Wednesday, July 8, 2015

உறவெனும் புதிய வானில்



அத்தியாயம் - 22

எப்போதும் பரபரவென பறந்துகட்டிக் கொண்டு கிளம்புபவள், இன்று நிதானமாக பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி தயாராவதை, கண்டும் காணாமல் சமைத்துக் கொண்டிருந்தார் வைதேகி.

ஐடி கார்டை கழுத்தில் மாட்டிக் கொண்டு திரும்பியவளிடம், லஞ்ச் பாக்ஸை கொடுத்தவர், “இன்னைக்கும் வேலை இருந்தது, ஆப்பரேஷன் இருந்ததுன்னு சாப்பிடாம வராதே… நேரத்துக்குச் சாப்பிடு” என்றார்.

“ஹப்பா! ஒருநாள் சாப்பிடாமல் வந்ததுக்கு இத்தனை அட்வைஸா? இனி என்ன வேலை இருந்தாலும் அப்படியே போட்டுட்டு ஓடி வந்து சாப்டுட்டு மீதி வேலையைப் பார்த்துக்கறேன். சரியா?” என்றாள்.

“வாலு!” என்று அவளது முதுகில் செல்லமாகத் தட்டினார் வைதேகி.

“உன் பொண்ணு தானே வைதேகி! பின்னே எப்படி இருப்பேன்” என்று செல்லமாக அன்னையின் இருபக்கக் கன்னத்தையும் பிடித்து ஆட்டினாள்.

“ஆ! உனக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கேன்” - சொன்ன வைதேகியின் முகம் பூரிப்பில் மலர்ந்திருந்தது.

“எனக்குச் செல்லம் கொடுக்காம, வேற யாருக்குக் கொடுக்கப் போறே… என் செ..ல்..ல அம்மா!” என்றவள் எதிர்பாராத நேரத்தில் அவரது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓட, புன்னகையுடன் அவளைப் பின்தொடர்ந்தார் வைதேகி.

ஸ்கூட்டியை வாசலுக்குத் தள்ளிக் கொண்டு வந்தவள், 
“அம்மா! நான் வர்ஷாவைப் பார்க்கப் போறேன். அவங்ககிட்ட ஏதாவது சொல்லணுமா? இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கன்னு நேத்து சொன்னாங்களே” என்று கேட்டாள்.

வைதேகிக்கு முழுதாக விஷயம் விளங்காவிட்டாலும், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதை அறிந்திருந்தவருக்கு, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கிட மட்டும் தோன்றவேயில்லை.

‘என்ன திடீர்னு வர்ஷா மீது பாசம்?’ வாய்வரை வந்த கேள்வியை மட்டும் ஏனோ அவர் கேட்கவில்லை.

“அவளை உடம்பைப் பார்த்துக்கச் சொல்லு. ஒருநாள் வீட்டுக்கு வந்து பார்க்கிறேன்னு சொல்லு” என்றார்.

“ம், மறக்காமல் சொல்லிடுறேன். வரேம்மா!” என்று மலர்ந்த முகத்துடன் செல்லும் மகளைக் கண்கொட்டாமல் பார்த்தார்.
சிலிசிலுவென வீசிய காற்று பருவமழையின் வரவேற்பை உணர்த்துவதாக இருந்தது.

மருத்துவமனைக்கு வந்தவள் முதல் வேலையாக வர்ஷாவைக் காணச் சென்றாள். இன்று அவளுடன் சஹானா மட்டுமே இருந்தாள்.

கதவைத் தட்டிவிட்டு, “ஹாய்!” என்றபடி உள்ளே சென்றாள் திவ்யா.

“ஹாய்! வாங்க” என்ற வர்ஷா, “சஹி! இவங்கதான் நேத்து சொன்னேனே டாக்டர். திவ்யா” என்றவள், தங்கையை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

தனது வருங்கால அண்ணியை ஆர்வத்துடன் பார்த்த சஹானாவும் ஸ்நேகத்துடன் புன்னகைத்தாள்.

அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போதும் திவ்யாவின் மனம், ஸ்ரீராமைக் காணவேண்டும் என்ற ஆவலில் தவிக்க, கண்கள் அதை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

சகோதரிகள் இருவரும் அவளறியாமல் ஒருவரையொருவர் பார்த்து இரகசியமாகப் புன்னகைத்துக் கொண்டனர்.
அவர்களைப் பொறுத்தவரை, வைதேகி மூலமாக அவள் விஷயத்தை அறிந்திருக்கக் கூடும் என்றே நினைத்தனர். 

ஆனால், ஸ்ரீராமிடம் இப்போதைக்கு எதுவும் சொல்லவேண்டாம் சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று முடிவெடுத்திருந்தனர்.

“சஹி! ஸ்ரீ அண்ணா வரேன்னு சொன்னாரே ஏன் வரலை? நீ போன் செய்து கேட்டியா?” என்றாள் வர்ஷா.

திடீரென தமக்கை அப்படிக் கேட்ட போதும், திவ்யாவிற்காக சொல்கிறாள் என்று புரிந்து கொண்டவள், “கிளம்பிட்டேன்னு சொன்னாங்க. இந்நேரம் வந்துட்டு இருக்கணும்” என்றாள்.

அதுவரை மனத்திற்குள் தவிப்புடன் அமர்ந்திருந்த திவ்யா, ‘இப்போதிருக்கும் மனநிலையில் அவனைப் பார்த்தால், தான் எப்படி நடந்து கொள்வோம் என்று தனக்கே தெரியாத நிலையில், இங்கிருந்து சென்று விடுவதே நல்லது’ என்ற முடிவுடன் எழுந்தாள்.

“எனக்கு டியூட்டிக்கு நேரமாகுது. நான் ஈவ்னிங் வந்து பார்க்கிறேன்… உடம்பைப் பார்த்துக்கோங்க… வரேன்” என்று இருவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

அதற்கு மேலும் அவளை அலைகழிக்கவேண்டாம் என்று எண்ணியதால் சகோதரிகள் இருவரும் விடைகொடுத்து அனுப்பினர்.

அறைக்குள் நுழைந்தவள் எதிரில் அமர்ந்திருந்தவளைக் கண்டுகொள்ளாமல் யோசனையுடன் இருக்க, டேபிள் மீதிருந்த ஸ்டெத்தை எடுத்து பட்டென அவளது கையிலேயே அடித்தாள் கல்பனா.

“ஸ்! ஆஹ்!” என்றவள் மலங்க மலங்க விழித்தாள்.

“என்னடி! திருவிழால காணாமப் போன பிள்ளை மாதிரி இந்த முழி முழிக்கிற? என்ன உன் ஆள் கண்ல படாம ஏமாத்திட்டாரா?” என்றாள் கல்பனா.

“சீ! அதென்னடி உன் ஆள்? அசிங்கமா…” என்று சிடுசிடுத்தாள்.

“ஓ! அப்போ வேற எப்படி சொல்றதாம்? பிராணநாதான்னு சொல்லட்டுமா?” என்றாள் கிண்டலாக.

“நீ ஒண்ணும் சொல்லவேணாம். என் எரிச்சலைக் கிளப்பாதே. அன்னைக்கு அவருக்குக் கல்யாணம் ஆகிடுச்சின்னு நினைச்சி எவ்ளோ ஃபீலிங்ல இருந்தேன். வர்ஷா அவரோட தங்கைன்னு ஒரு வார்த்தை சொன்னியா? எனக்கு எவ்ளோ கில்டியா இருந்தது தெரியுமா?” என்றாள்.

“இதுக்குத் தான் நேத்து என்னை அரைமணி நேரம் காய்ச்சி எடுத்தியே. இன்னுமா அதைத் தொடரணும்? இப்போ என்ன உன் பிரச்சனை? ஸ்ரீராம் சாரைப் பார்க்கணுமா?”

“அது மட்டும் இல்ல…”

“வேற என்ன உன் லவ்வை சொல்லணுமா?”

“அடச்சீ. முதல்ல மன்னிப்பு கேட்கணும்…”

“அவ்வளவு தானே…”

“அவ்வளவு தானேன்னு ஈஸியா சொல்ற… பட், அவரோட முகத்தைப் பார்த்துச் சாரி கேட்கறது எவ்ளோ கஷ்டம்?”

“ஓ! அன்னைக்கு வாய்கிழிய சண்டை போட்டப்போ இதெல்லாம் தெரியல போல…”

“அதையே திரும்பத் திரும்பச் சொல்லாதே கல்ப்ஸ்… அப்போ நடந்தது அது வேற…” என்றவளது குரல் குழைந்தது.

“ஹூம்! ரொம்ப முத்திப் போயிருக்கு. இதுக்குக் கட்டாயம் மருந்து கொடுத்தே ஆகணும்.”

“அவரை நினைச்சாலே கைகாலெல்லாம் தந்தியடிக்குது கல்பனா. இப்போகூட அவர் வந்திட்டு இருக்காருன்னு தெரிஞ்சதும், அங்கேயிருந்து ஓடி வந்துட்டேன் தெரியுமா? இந்த லவ் இருக்கே இது ரொம்ப ரொம்ப மோசம்…”

“மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சதே பெரிசு. அதை ஹாஸ்பிட்டல்லயே தான் செய்யணுமா என்ன? அவரோட ஆஃபிஸுக்குப் போயும் கேட்கலாம். போதா குறைக்கு, தெரிஞ்சவங்களாவும் ஆகிட்டாங்க. சோ…”

“சோ…” ஆர்வத்துடன் கேட்டாள் திவ்யா.

“எல்லாத்தையும் நானே சொல்லணுமா உனக்கு. நீயும் கொஞ்சம் யோசிச்சித் தொலையேன்” கடுப்படித்தாள் கல்பனா.

“சரிடியம்மா. நானே யோசிச்சிக்கிறேன்” என்று வீராப்பாகச் சொன்னவள், “அப்போ இன்னைக்குப் பார்த்தாலும் பேசவே முடியாதா?” என்று சோகமாகக் கேட்டாள்.

அவளை ஒருமாதிரியாகப் பார்த்த கல்பனா, திடீரென விழுந்து விழுந்துச் சிரித்தாள்.

“மன்னிப்பு எப்போ வேணாலும் கேட்டுக்கலாம்னு தான் சொன்னேன். பார்க்கக் கூடாதுன்னா சொன்னேன். ஆனால், திவி! நிச்சயமா உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல…” சொல்லிவிட்டு அவள் மேலும் சிரிக்க, “சும்மா இருடி நீ 
வேற…” என்ற திவ்யா வெட்கத்துடன் சிரித்தாள்.


அத்தியாயம் - 23

“என்ன சஹி! நாம கிளம்பிட்டோம்னு அண்ணிகிட்ட சொல்லிட்டியா?” அறைக்குள் நுழைந்த தங்கையிடம் கேட்டாள் வர்ஷா.

“அண்ணி ஆப்பரேஷன் தியேட்டர்ல இருக்காங்களாம்… அவங்க ஃப்ரெண்ட்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன். சொல்லிடுவாங்க” என்றாள் சஹானா.

“அண்ணியா? யாரை அண்ணிங்கற?” பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்த சுகுணா சந்தேகத்துடன் கேட்டார்.

“ஸ், அம்மா இருக்கறது மறந்தே போச்சு…” மெல்ல முணுமுணுத்த வர்ஷா, “நம்ம திவ்யா அண்ணியைச் சொன்னேம்மா!” என்றாள்.

“ரெண்டு பேரும் முடிவே செய்தாச்சா? இன்னும் உன் அண்ணனுக்கு விஷயம் தெரியாது. அவன் சம்மதிக்கணும். அப்புறம் தான் மத்ததெல்லாம். அதுவரைக்கும் ரெண்டு பேரும் கொஞ்சம் வாயை மூடிட்டு இருங்க” என்றார் அதட்டலுடன்.

“எங்க எல்லோருக்கும் அண்ணியைப் பிடிச்சிருக்கு. உங்களுக்கும் தானே பிடிச்சிருக்கு… அப்புறம் என்ன? அண்ணனுக்கும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்… தினம் அண்ணியைத் தரிசிக்கும் பாக்கியமாவது கிடைச்சிருக்கும்” என்ற மூத்தவளை முறைத்தார் சுகுணா.

“வரவர உனக்கு வாய் அதிகமாகிடுச்சி. இன்னும் சஹி வீட்ல விஷயத்தைச்  சொல்லவேயில்ல. அவங்களும் சரின்னு சொல்லி கல்யாணத்தைப் பேசி முடிக்கிற வரைக்கும் எதுவும் சாஸ்வதம் கிடையாது. எல்லாம் கூடி வரட்டும் அப்புறம் முறையெல்லாம் வச்சி கூப்பிட்டுக்கலாம்” என்றார்.

“எனக்குத் தெரிஞ்சி அத்தை, மாமா எதுவும் சொல்லப்போறதில்ல… அதனால பிரச்சனையில்லம்மா. நாங்க அண்ணின்னே கூப்பிட்டுக்கறோம்” என்றாள் இளையவள்.

“எப்படியோ செய்ங்க. திவ்யா, எதிர்ல மட்டும் அப்படிக் கூப்பிட்டு வைக்காதீங்க…”

“சேச்சே! அப்படியெல்லாம் செய்யமாட்டோம்மா” சகோதரிகள் இருவரும் ஒருசேர சொல்லிவிட்டு சிரித்தனர்.

“என்னமோ போ. எல்லாத்தையும் எடுத்தாச்சு இல்ல” என்றவர், அறையை மீண்டும் ஒருமுறை சுற்றிப் பார்த்த பின்பே திருப்தியானார். “வர்ஷாம்மா! மெதுவா நடந்து வா” பெரியவளிடம் அக்கறையுடன் சொன்னவர், “சஹி! ஸ்ரீக்குப் போன் பண்ணிட்ட இல்ல…” என்று கேட்டார்.

“பண்ணிட்டேம்மா. நம்மளை கிளம்பச் சொல்லிட்டாங்க. ஆஃபிஸ் முடிஞ்சதும் ஹாஸ்பிட்டல் வந்து டீனைப் பார்க்கறேன்னு சொல்லிட்டாங்க” பதில் சொல்லிக் கொண்டே வெளியில் வந்தாள்.

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த வர்ஷா, “ஹப்பா! ஒரு வாரம் இந்த ஹாஸ்பிட்டல்ல அடைஞ்சி இருந்தேன். இன்னைக்குத் தான் வெளி உலகத்தைத் திரும்பப் பார்க்கறேன்” என்று பெருமூச்சு விட்டாள்.

“நமக்கே இப்படி இருக்கு. தினம் ஹாஸ்பிட்டல் வர்ற அண்ணிக்கு எப்படி இருக்கும்?” என்ற தங்கையுடன் சேர்ந்து கதையளந்தாள் பெரியவள்.

“ஆரம்பிச்சாச்சா… முதல்ல டாக்ஸியில் ஏறுங்க. மீதியை வீட்ல போய்ப் பார்த்துக்கலாம்” என்ற சுகுணாவிற்கு, மகள்களின் ஆர்வத்தை எண்ணி சிரிப்புத் தான் வந்தது.

‘இன்று நாளும் நன்றாக இருக்கிறது. சம்மந்தி வீட்டில் பேசிவிடவேண்டும்’ என்ற முடிவுடன் காரில் ஏறினார்.

********

வழக்கமான வேக நடையுடன் டீனின் அறைக்கு முன்பாக வந்து நின்ற ஸ்ரீராம், கதவைத் தட்ட முயன்றான். அவர் உள்ளே யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டதும், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டதும் எழுந்தவன், கண்களைத் துடைத்துக் கொண்டே வெளியில் வந்த திவ்யாவை, வியப்புடன் பார்த்தான்.

கண்களைத் துடைத்துக் கொண்டு பாக்கெட்டிலிருந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டு நிமிர்ந்தவள், அப்போது தான் அங்கே நின்றிருந்த ஸ்ரீராமைப் பார்த்தாள்.

இருவருக்குமே அடுத்த அடி எடுத்து வைக்கும் எண்ணமே இல்லை என்பது போல, ஒருவரையொருவர் பார்த்தபடி திகைப்புடன் நின்றிருந்தனர். திகைத்தாலும் இருவருக்குள்ளும் வெவ்வேறு எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.

‘இன்னைக்கெல்லாம் தேடினேன். அப்போதெல்லாம் வராமல் இப்படி அழுது கொண்டிருக்கும் நேரத்திற்கு வரணுமா. கடவுளே! இப்படியேப் போய் எப்படிச் சாரி கேட்பது?’ என்று மனத்திற்குள் புலம்பிக் கொண்டாள் அவள்.

‘ஏதாவது பிரச்சனையா? ஏதாவது தப்பு செய்துட்டு மாட்டிக் கொண்டாளா? சேச்சே இருக்காது. இவளைப் பார்த்தால் ஸ்ட்ரெய்ட் பார்வார்ட் மாதிரி இருக்கு. ம்ம், இவளோட வாயால தான் மாட்டியிருப்பா. அப்படி என்னவாக இருக்கும்?’ என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான் அவன்.

“ஹலோ சார்! எப்படி இருக்கீங்க?” என்ற கல்பனாவின் குரலைக் கேட்டதும் தான் இருவருமே சுயநினைவிற்கு வந்தனர்.

“யா! நல்லா இருக்கேன். டீனைப் பார்க்க வந்தேன்… வரேன்” என்றவன், அவள் மேலும் பேசும் முன்பாக அங்கிருந்து நகர்ந்தான்.

எதிரெதிராக வந்த இருவரது பார்வையும், ஒருவரையொருவர் கடக்கும் வரை உரசிக் கொண்டே வந்தது.

அவளது விழிகளில் தெரிந்த தயக்கத்தை அவனும், அவனது கண்களில் தென்பட்ட குழப்பத்தை அவளும் புரிந்து கொள்ளத்தான் செய்தனர். ஆனால், அதைப் பேசித் தீர்த்துக் கொள்ளத் தான் அவர்களுக்குச் சமயம் வாய்க்கவில்லை.

டீனின் அறைக்கதவைத் தட்டுவதற்கு முன்பாக மெல்லத் திரும்பி அவளைப் பார்த்தான். கல்பனாவுடன் பேசிக் கொண்டே நடந்தவளும் தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள்.

அந்தப் பார்வை… அவனது இதயத்தை ஊடுறுவ, அந்தநொடி அவளது அழுகைத் தன்னைப் பாதித்தக் காரணத்தை அறிந்து கொண்ட ஸ்ரீராமிற்குத் திடுக்கிடலுடன் கூடிய ஆச்சரியம்தான் எழுந்தது.

‘இது எப்படிச் சாத்தியம்?’ இதற்கான காரணம் மட்டும் அவனுக்குப் புரியவேயில்லை.

**********

இரவெல்லாம் ஓயாமல் பெய்த மழையால் சாலையெங்கும் குட்டைகளாக மாறிப் போயிருந்தது. ஆங்காங்கே சேறும் சகதியுமாக, காலை கீழே வைக்கவே எரிச்சலாக இருந்தது திவ்யாவிற்கு.

போதாக்குறைக்கு அரசியல் பேரணி ஒன்றால் வாகனங்கள் வேறு வழியாகத் திருப்பி விடப்பட, போக்குவரத்து நெரிசல் வேறு அவளை மேலும் கடுப்பாக்கிக் கொண்டிருந்தது.

சூப்பர் மார்க்கெட்டிலிருந்து இருபது நிமிடத்தில் செல்ல வேண்டிய வீட்டிற்கு, ஒரு மணி நேரமாகியும் பாதி வழியைக் கூட கடந்த பாடில்லை. இருட்டிக் கொண்டு வர மழை வருவதற்குள் வீட்டிற்குச் சென்று விடும் அவசரம் அவளுக்கு மட்டுமல்ல. அங்கிருந்த அத்தனைப் பேருக்குமே இருந்தது.

கிடைத்த இடைவெளியில் புகுந்து மேலும் போக்குவரத்து நெரிசலை அதிகமாக்கிக் கொண்டிருந்தனரே தவிர, யாரும் பத்தடி கூட நகரமுடியவில்லை. ஆங்காங்கே கிடைத்த சிறு தெருக்களில் வாகனங்களின் ஆக்ரமிப்பு நடந்து கொண்டிருந்தது.

நடைபாதை என்பது மாறி, இருசக்கர வாகனங்களின் அவசரத் தேவைக்கு பாதையாக மாறிக் கொண்டிருந்தன.

கிடைத்த வழியில் முன்னேறி ஒரு சிறு தெருவிற்குள் புகுந்தாள் திவ்யா. நெரிசலிலிருந்து தப்பித்து வந்தவளுக்குத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூட நேரமில்லாமல், பின்னாலிருந்த வாகனங்களின் ஹாரன் ஒலி காதுகளைக் கிழித்தன.

அந்தத் தெருவைக் கடந்து வந்தவளுக்கு அங்கிருந்து எந்தப் பக்கமாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தெரியவில்லை. தென்காசிக்கு வந்து இரண்டு மாதங்களாகிய போதும், மருத்துவமனை, வீடு, சூப்பர் மார்க்கெட் என்று சில இடங்கள் மட்டுமே பரிச்சயமாகியிருக்க, வழி தெரியாமல் தடுமாறினாள்.

சுற்றும் முற்றும் பார்த்தவள், குனிந்து பைக்கில் என்னவோ செய்து கொண்டிருந்தவன் அருகில் சென்று, “எக்ஸ்கியூஸ்மீ சார்!” என அவள் அழைத்ததுமே திரும்பிப் பார்த்தவனைக் கண்டதும் அவளுக்குப் பகீரென்றது.

‘அச்சச்சோ! இவரா…’ என்று எண்ணியவளுக்கு தொண்டை வறண்டது.

பெட்ரோல் டாங்கில் தண்ணீர் இறங்கிவிட்டதால் கிளம்பாத பைக்கைச் சரி செய்து கொண்டிருந்த ஸ்ரீராம், திவ்யாவின் குரல் கேட்டதும் சட்டெனத் திரும்பிப் பார்த்தான்.

தன்னைக் கண்டதும் திணறிக் கொண்டு நின்றிருப்பவளைக் காணவே அவனுக்குச் சிரிப்பாக வந்தது.

‘நம்மளை மரியாதையா சார்ன்னு வேற கூப்பிட்டது மேடத்துக்குச் ஷாக்கா இருக்கும். இந்த நேரத்தில் இவளைக் கடுப்படிக்கிறா மாதிரி எதுவும் பேசவேண்டாம்’ என்று நினைத்துக் கொண்டவன் எதையும் காட்டிக் கொள்ளாமல், “சொல்லுங்க மேடம்!” என்றான்.

பழையபடி இருந்திருந்தால் அவனைக் கண்டதுமே வாயில் வந்ததைப் பேசியிருப்பாள். இப்போதுதான் அவளது உள்ளம் கவர் கள்வனாகி விட்டானே அவன். பின் எப்படி அவனைக் கரித்துக் கொட்டுவாள்?

“இல்ல… காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் போக எந்தப் பக்கமா போகணும்?” என்றாள் மென்குரலில்.

‘அடடா மேடம் இன்னைக்கு இவ்ளோ பவ்யமா பேசுவாங்கன்னு முன்னமே தெரிஞ்சி தான், வருண பகவான் நான் - ஸ்டாப்பா நைட்டெல்லாம் வந்து விசிட் அடிச்சிட்டுப் போயிருக்காரு போல’ என எண்ணிக் கொண்டான்.

என் பின்னாலேயே வா. நானும் அவ்வழியாகத் தான் போகிறேன் என்று அவனும் சொல்லியிருப்பான். ஆனால், அப்படிக் கூறினால் புதிதாக முளைத்திருக்கும் மரியாதை எந்த நேரத்திலும் காணாமல் போகும் என்ற அச்சத்தில் அவளுக்கு வழி சொல்லத் துவங்கினான்.

“ஓகே. தேங்க்ஸ்…” என்று அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்களைக் கடந்து சென்ற கார் சாலையிலிருந்த சேற்றை, அவள் மீது வாரி அடித்துவிட்டுச் சென்றது.

“சே!” என்றபடி தன்னை மொத்தமாக நனைத்து விட்டுச் சென்ற கார்க்காரனை மனத்திற்குள் திட்டினாள்.

“மை காட்!” என்றவன், “இந்தாங்க முகத்தைக் கழுவிக்கோங்க” என்று பைக்கிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தான்.

முகத்தைக் கழுவிக் கொண்டவள், தன் மீது படிந்திருந்த சேற்றையும் ஓரளவிற்குக் கழுவிக் கொண்டவள், அவன் நீட்டிய சிறிய டவல் ஒன்றை வாங்கி துடைத்துக் கொண்டாள்.

“வேற ஏதாவது…?” அவன் தயக்கத்துடன் வினவ, “நோ தேங்க்ஸ்” என்றாள்.

அதற்கு மேல் என்ன கேட்பதெனப் புரியாமல், “ஓகே, பத்திரமா வீட்டுக்குப் போங்க…” என்று சொல்லிவிட்டு பைக்கைக் கிளப்பிக் கொண்டு செல்ல, அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

No comments:

Post a Comment