Tuesday, July 7, 2015

உறவெனும் புதிய வானில்



அத்தியாயம் - 21

பணிநேரம் முடிந்து, களைத்த முகத்துடன் தனது கோட்டைக் கழற்றியபடி வந்த திவ்யா, எதிரில் வந்துகொண்டிருந்த வைதேகியைப் பார்த்தாள்.

என்னம்மா! இந்த நேரத்துக்குக் கோயில்ல இருப்பதிடீர்னு சொல்லாமல் கொள்ளாமல் இங்கே வந்து நிக்கிற? உடம்புக்கு ஒண்ணுமில்லையே…” என்றவளது பார்வை அன்னையை கவலையுடன் ஆராய்ந்தது.

மகளின் முகமாறுதலைக் கவனித்த வைதேகி புன்னகையுடன், “அதெல்லாம் ஒண்ணுமில்லடா. நான் நல்லாதான் இருக்கேன். உன் டியூட்டி முடிஞ்சிடுச்சி தானே. நீ இருக்கியோ இல்லையோன்னு நினைச்சிகிட்டே வந்தேன்…”

முடிஞ்சிடுச்சி. என்னை ரிலீவ் பண்ண வேண்டிய டாக்டர் வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சி. சரி என்ன விஷயம் இப்படி நீ திடீர்னு ஹாஸ்பிட்டல் வர?

வழக்கமா கோயிலுக்கு வரும் ஒருத்தங்களோட மருமகளை இங்கே அட்மிட் பண்ணியிருக்காங்க. அவங்களைப் பார்க்கலாம்னு வந்தேன். நீயும் கூட வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன்என்றார் கனிவுடன்.

அன்னையை உறுத்து விழித்தவள், “ஒரு நிமிஷத்துல என்னைக் கலங்கடிச்சிட்டம்மா!” எரிச்சலுடன் சொன்னவள், “இதையெல்லாம் நீயே பார்த்துக்க்க் கூடாதா? நான் கட்டாயம் வரணுமா?” என்று சிடுசிடுத்தாள்.

நீ இங்கேயே வேலை செய்யற, போய்ப் பார்க்கலைனா நல்லா இருக்காதும்மா…” நிதானமாக மகளுக்கு எடுத்துச் சொன்னார் வைதேகி.

அதற்கு மேல் அன்னையின் வார்த்தையை தட்டிக் கழிக்க மனமில்லாமல், “சரி, கொஞ்ச நேரம் உள்ளே வந்து உட்காரும்மா வந்திடுறேன்என்றாள்.

நீ தயாராகி வா. நான் இங்கேயே இருக்கேன்என்ற வைதேகி வராண்டாவிலிருந்த பெஞ்சில் அமர்ந்தார்.

ம், ஐஞ்சே நிமிஷம்என்றபடி அறைக்குச் சென்றாள்.

சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த வைதேகி, வேகமாக வாயிலை நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரீராமைப் பார்த்தார்.
அவரையும் அறியாமல் எழுந்தவர், “எப்படி தம்பி இருக்கீங்க?” என்று வினவ, அதுவரை அவரை கவனிக்காதவன் நிதானித்துத் திரும்பிப் பார்த்தான்.

சட்டென அவரை அடையாளம் காண முடியாமல் தடுமாறியவன், “நீங்க…” என இழுக்கும் போதே நினைவு வந்துவிட, “ஓஹ்! எப்படி இருக்கீங்க?” என்று முறுவலித்தான்.

நல்லயிருக்கேன் தம்பி! இப்போதான் விஷயம் கேள்விப்பட்டேன். அதான் தங்கச்சியைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்…” என்றார் வைதேகி.

அப்படியா, வாங்க…” என்று அவரை உடன் அழைத்துச் செல்ல முயல, “இல்ல தம்பி ஒருத்தர் வரணும்அதுக்காக காத்துட்டு இருக்கேன்என்றார்.

சரிங்க, நேரா போய் ரைட்ல போனா மூணாவது ரூம்என்று அறைக்குச் செல்லும் வழியைச் சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கிளம்பிச் சென்றான்.

மகளுக்காக்க் காத்திருந்த வைதேகிக்கு மனம் அடித்துக் கொண்டது.

நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் அமைதியான கூட்டுக் குடும்பம். அதோடு அனைவருமே படித்தவர்கள் என்பதோடு, ஸ்ரீராமைப் பார்த்ததுமே அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மகளுக்கு இதைவிட அருமையான இடம் அமையாது என்ற சந்தோஷத்தில் இருந்தார்.

ஆயினும், மகளது மனத்தில் யாரிடமோ நாட்டம் ஏற்பட்டிருக்கிறது என்று உணர்ந்ததிலிருந்தே அவருக்குச் சற்று வருத்தம் தான். அதனாலேயே மகளைப் பற்றி அவனிடம் எதுவும் சொல்லவில்லை.

ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவர், ‘இதுவரை எந்தவிதமான சந்தோஷத்தையும் அடையாத மகளுக்கு, அவளது மனம் போல ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் போதும்என்ற வேண்டுதலுடன் திவ்யாவிற்காக காத்திருந்தார்.

சாரிம்மா ஒரு போன் வந்த்து அட்டெண்ட் பண்ணிட்டு வர லேட் ஆகிடுச்சி. கிளம்பலாம்என்றதும், தனது எண்ணங்களின் பிடியிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டார்.

அமைதியாக இருவரும் வராண்டாவில் நடந்துகொண்டிருக்க, வலது பக்கம் திரும்பியதுமே அவளது இதயம் தடக்தடக்கென துடிக்க ஆரம்பித்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், ஸ்ரீராமை அங்கே கண்ட மறுநாள், அவளுக்கு ஓய்வுநாள் என்பதால் அவனைக் காணக்கூடிய சந்தர்ப்பம் அமையவில்லை. இன்று முழுவதும் முடிந்த வரை அவள் அந்தப் பக்கமாக வரவேயில்லை.

இப்போது அந்த வழியில் செல்லவும், ‘அவன் இருப்பானோ? தன் கண்களில் அகப்பட்டு விடுவானோ? என்ற அச்சத்துடனேயே சென்றவளுக்கு கால்கள் தள்ளாடின.

தன்னை நினைத்து அவளுக்கே வேதனையாக இருந்தது. ‘என் எண்ணங்கள் ஏன் இப்படித் தறிகெட்டுத் துடிக்கிறது? அதுவும் அவன் திருமணம் ஆனவன் என்று அறிந்தும்…’ திவ்யாவிற்கு ஓடிவிட வேண்டும் போலிருந்தது.

திவி! இந்த ரூம்தான்.”

அன்னைச் சுட்டிக் காட்டிய அறையைக் கண்டவள் தடுமாறிப்போனாள்.

..ல்லாத் தெரியுமாம்மா, இந்..த ரூம்.. தானா?” வார்த்தைகளும் அவளது பதட்டத்திற்குக் குறைவில்லாமல் தந்தியடித்தது.

தெரியும்டாஎன்றவர் மெல்ல கதவைத் தட்டினார்.
வாம்மா வைதேகி!” என்றழைத்த பரிமளம் பின்னாலேயே வந்த திவ்யாவைப் பார்த்தார்.

அவரது கண்கள் அங்கிருந்த சுகுணாவிடம் பதிய, அதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட சுகுணா, அவளை ஏறஇறங்கப் பார்த்து, திருப்தியுடன் பரிமளத்திடம் கண்களாலேயே சம்மதம் சொன்னார்.

அவர்களது கண் ஜாடைகளைக் கவனித்துவிட்ட வைதேகிக்கு, தர்மசங்கடமாக இருந்தது. சமாளித்துக் கொண்டு, “இவள்தான் என் பொண்ணு திவ்யா! இதே ஹாஸ்பிட்டல்ல தான் டாக்டரா இருக்காஎன்று மகளை அறிமுகப்படுத்தி வைத்தார்.

“ஆமாமில்ல… எங்களுக்கு இருந்த மனநிலையில எதுவுமே நினைவுக்கு வரலை வைதேகி” என்றார் பரிமளம்.

வர்கள் பேசிக் கொண்டிருக்க, உள்ளுக்குள் தவிப்பதை வெளியில் காட்டாமலிருக்க, பிரம்மபிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.

உட்காருங்க வைதேகி!என்ற சுகுணா திவ்யாவிடம், “நீயும் உட்காரும்மாஎன்றார்.

பரவாயில்ல…” என்றவளது பார்வை வர்ஷாவிடம் சென்றது.
கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த வர்ஷா, அவளைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தாள். அவளைப் பார்த்து முறுவலிக்க முடியாமல் இவளுக்குத் தான் தவிப்பாக இருந்தது.

வலிய வரவழைத்த புன்னகையுடன் வர்ஷாவை நெருங்கியவள், “என்னென்ன மெடிசன்ஸ் கொடுத்திருக்காங்க...” என்று ஒரு டாக்டராக வினவினாள்.

இளையவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, பெரியவர்கள் தங்களது பேச்சில் முனைப்பாயினர்.

கேஸ் ஷீட்டை எடுத்து நோட்டமிட்ட திவ்யாவின் கண்களில் முதலில் பட்டது வர்ஷா பிரபாகரன் என்ற பெயர் தான்.
அதைப் படித்ததுமே அவளையும் அறியாமல் மனத்திற்குள் ஒரு பரபரப்பும், சந்தோஷமும் ஒருசேர தொற்றிக் கொண்டது.

‘அப்படியானால் இவள் ஸ்ரீராமின்… சேச்சே இதில் தான் க்ளியரா போட்டிருக்கே இதுக்கும் மேல என்ன வேணும்? வேற எதையும் யோசிச்சி குழம்பிக்காதே’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

கேஸ்ஷீட்டை பார்த்து இத்தனை வகை முகபாவனை ஏன் தோன்றவேண்டும் என்று புரியாமல் வர்ஷா, அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உங்க ஹஸ்பண்ட் பேர் பிரபாகரா?” என்று படபடத்த திவ்யாவை வியப்புடன் பார்த்தாள் வர்ஷா.

நெற்றியைச் சுருக்கியபடி, “ஆமாம்” என்றாள்.

அவளது ஆராய்ச்சிப் பார்வையைக் கண்ட திவ்யா, “இல்ல… நீங்க மழை; உங்க கணவர் சூரியனா…?” என்று சிரித்தாள்.

“ஓ! ஆப்போசிட் போல் அட்ராக்ட்ஸ் ஈச் அதர் இல்லயா” என்று வர்ஷா சொல்ல, அதற்கும் வாய்விட்டுச் சிரித்தாள் அவள்.

பிடிக்கவில்லை என்றாலும் தனக்காகத்தான் மகள் வந்தாள் என்று புரிந்து கொண்ட வைதேகிக்கு, இப்போது அனைவரிடமும் அவள் சகஜமாகப் பேசுவதைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது.

அவர்கள் கிளம்பும் நேரம் பிரபாகரும் அங்கே வந்துவிட, வர்ஷா தனது கணவன் என்று அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

ஸ்ரீராம் இல்லை என்று தெரிந்ததுமே நிம்மதியாக இருந்தவளது மனம், பிரபாகரை அறிமுகப்படுத்தியதும் மேலும் அமைதியடைந்தது.

அந்தநொடி ஸ்ரீராமின் மீதிருந்த வருத்தமெல்லாம் மறைந்து போக, அவனை வாய்க்கு வந்தபடி பேசியதை நினைத்து கவலை கொண்டாள். 

‘நாளை வர்ஷாவை டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச் செல்வதற்குள், அவனைச் சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்’ என்ற முடிவுடன் விடைபெற்றுக் கிளம்பினாள்.

No comments:

Post a Comment