Monday, July 6, 2015

உறவெனும் புதிய வானில்



அத்தியாயம் - 19

நான் அவசியம் வந்தாகணுமாடா?” யோசனையுடன் போனில் பேசிக்கொண்டிருந்த நண்பனிடம் கேட்டான் பிரபு.

நீயும் புது மிஷினரிஸ் வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தல்லநல்ல சான்ஸ். மொத்தமா கிடைச்சா வாங்கிடுறது பெஸ்ட் இல்லயா? உனக்கு நான் சொல்லணும்னு இல்லயோசி. பத்து நாள் தானே போய்ட்டு வந்திடலாம்…”

தலையைத் தடவிக் கொண்டே மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தவன், “சரி சூரஜ்! என் வைஃப்கிட்ட பேசிட்டுச் சொல்றேன்என்று போனை அணைத்தான்.

களைத்த முகத்துடன் மாடிக்கு வந்துகொண்டிருந்த சஹானாவைப் பார்த்தான்.

இரண்டு நாட்களில் தமக்கைக்காக வருத்தப்பட்டே சற்று ஓய்ந்து போயிருந்தவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவனுக்கு. ஆனால், அதுமட்டுமே காரணமல்ல என்பதும் அவனுக்குப் புரியாமல் இல்லை.

இடைபட்ட இந்த நாட்களில் தன்னிடமிருந்து சற்று விலகியே இருக்கிறாள் என்று புரிந்திருந்த போதும், அவளை நெருங்க அவனுக்குமே பயமாக இருந்தது. இன்னும் முழு விஷயத்தையும் அவளிடம் சொல்லவில்லை.

மனதளவில் மட்டுமே மற்றொருத்தியுடன் தன்னைச் சேர்த்து நினைத்துக் கொண்டிருக்கிறாள். உண்மை தெரிந்தால்என்ன நடக்கும் என்பதை அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

அதற்காக அவளிடம் தனது இரகசியங்களை மூடிமறைத்து, காலமெல்லாம் போலி வாழ்க்கை வாழவும் அவன் தயாராக இல்லை. வர்ஷா கண் விழிக்கட்டும் என்று காத்திருந்தான். இதோ முழுதாக ஒன்றரை நாட்களுக்குப் பிறகு அதுவும் நடந்தாகி விட்டது.

இனி என்ன? ‘தனது மனத்தில் இருப்பதைச் சொல்லிவிட வேண்டியது தான். ஆனால், மீண்டும் எப்படி ஆரம்பிப்பது?’ என்ற தயக்கமும், அதனால் ஏற்படப் போகும் பின்விளைவுகளும் அவனைக் கலங்கடித்தன.

யோசனையுடனே அறைக்குள் நுழைந்தான்.

பீரோவில் எதையோ குடைந்து கொண்டிருந்த சஹானா, அவனது வருகையை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.

தன்னிடம் அவன் எதையோ பேச விழைகிறான் என்று உணர்ந்தவளுக்கு, எதைப் பற்றி என்றும் புரிந்தே இருந்தது. ஆனால், அதைக் கேட்கும் மனநிலை இப்போது அவளுக்குச் சற்றும் இல்லை. மீண்டும் பீரோவில் கவனத்தைத் திருப்பினாள்.

கடந்த காலம் என்பது முடிந்து போன ஒன்று. அதை நினைத்து மனத்தைக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று சொல்லிச் சொல்லித் தன்னைத் தானே தேற்றிக் கொள்ள முயன்றாலும், மனம் அதை ஏற்கத் தயாராக இல்லை.

சொல்லாமல் புரிந்து கொண்ட விஷயமே போதும். இன்னும் பிரபுவின் வாயால் நான் அந்த ஜோஷிதாவை விரும்பினேன் என்ற அவன் சொல்லப் போகும் வர்த்தைகளைக் கேட்கக் கூடிய தைரியம் அவளுக்குச் சற்றும் இல்லை.

சஹி!” என்று பிரபு மெல்ல அழைத்தான்.

உடைகளை எடுத்துக் கொண்டிருந்தவளது கரம் அசையாமல் நிற்க, இதயம் திக்திக்கென அடித்துக் கொண்டது.  அவனை என்ன சொல்லித் தடுப்பது என்றும் புரியவில்லை.

சூரஜ் போன் பண்ணியிருந்தான். ஜெர்மன்ல ஆட்டோமொபைல் எக்ஸ்போ நடக்குதாம் போய் வரலாம்னு சொல்றான். நமக்கும் கொஞ்சம் மிஷினரிஸ் வாங்க வேண்டி இருக்கறதால நானும் போகலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற?”

அவன் இதைப் பற்றித் தான் பேச வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் நிம்மதியாக மூச்சுவிட்டாள் சஹானா.

கம்பெனிக்காகத் தானே போறீங்கபோய்ட்டு வாங்க…” பீரோவைப் பூட்டிக் கொண்டே சொன்னவள், குளியலறையை நோக்கி நடந்தாள்.

சஹி!” தயக்கத்துடன் அவளது கரத்தைப் பிடித்துத் தன் பக்கமாகத் திருப்பினான்.

நைட்டெல்லாம் ஹாஸ்பிட்டல்ல இருந்தது ரொம்ப அலுப்பா இருக்கு. குளிச்சிட்டு வந்திடுறேன்…” அவனை நிமிர்ந்து பார்க்காமலேயே சொன்னாள்.

அவளது நாடியைப் பிடித்து உயர்த்தியவன், அவளது கண்களை ஊன்றிப் பார்த்தான். அதிலிருந்த கலக்கம் அவனைக் கவலை கொள்ளச் செய்தது.

தனது மனத்தை அரித்துக் கொண்டிருக்கும் அத்தனையையும் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவனது தைரியமெல்லாம், அவளது விழிகளில் தெரிந்த வேதனையில் ஓடி மறைந்தது.

சஹானா!” ஆழ்ந்து ஒலித்த அவனது குரலில், அவளை வருத்திக் கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் கண்ணீராக வெளிவர, கணவனை அணைத்துக் கொண்டு அழுது கரைந்தாள்.

பிரபுவின் பாடு திண்டாட்டமாகிப் போனது. தன் மேல் உயிரையே வைத்துக் கொண்டிருப்பவளிடம் உண்மையைச் சொல்லவும் முடியாமல், மறைக்கவும் இயலாமல் தவித்துப் போனான்.

முள் மேல் நிற்பது போன்ற அவஸ்தைஎன்ற வார்த்தையின் முழு அர்த்தத்தையும் அப்போது அவன் உணர்ந்தான். தனது உயிருடன் கலந்துவிட்டவளது கண்ணீர், பிரபுவின் அத்தனைக் குழப்பத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

நடப்பது நடக்கட்டும்இனியும் அவளது வருத்தத்தைக் காண தன்னால் இயலாதுஎன்ற முடிவுடன் தனது இருண்ட காலத்தை மனத்திற்குள் புதைத்துக் கொள்ளும் முடிவுடன், ஆறுதலாக அவளது முதுகை வருடிக் கொடுத்தான்.

அண்ணா!” என்று அழைத்தபடி அவர்களது அறைக் கதவைத் தட்டினாள் தேவி.

சஹானாவின் கண்ணீரைத் துடைத்து விட்டவன், “வரேன் தேவி!” என குரல் கொடுத்தபடி வேகமாகச் சென்று கதவைத் திறந்தான்.

சாரிண்ணா! அம்மா உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க அதான்…” என்று போனை தமையனிடம் கொடுத்தாள்.

சொல்லுங்கம்மா!”

“…………..”

சூரஜ்கிட்ட பேசிட்டு இருந்தேன்…” என்று விஷயத்தை அவரிடம் சொன்னான்.

வர்ஷாவைப் பற்றி அவனது அன்னை விசாரிக்க, போனை சஹானாவிடம் கொடுத்தான். அவளும் அவர் கேட்டதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு கணவனிடம் போனைக் கொடுத்தாள்.

வர்ஷாவைப் பார்க்க வருகிறேன் என்றவரிடம், “இல்லம்மா. அண்ணி வீட்டுக்கு வந்ததும் நீங்க வந்து பாருங்க. சஹியை இங்கே பத்து நாள் விட்டுட்டு வரலாம்னு இருக்கேன். அப்போ நீங்க வந்தா, அவளையும் உங்க கூட சேர்த்துக் கூட்டிட்டு வர வசதியா இருக்கும்என்றான்.

“…………..”

இன்னைக்கு மதியம் கிளம்பலாம்னு இருக்கேன். தேவியையும் அழைச்சிட்டு வந்திடுவேன்பேசி முடித்தவன் போனை அணைத்து தங்கையிடம் கொடுத்தவன், விஷயத்தை அவளிடமும் கூறினான்.

சரிண்ணா!” என்றவள், “அண்ணி! பத்து நாளைக்கு உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன். முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்திடுங்க…” என்றவள் சஹானாவின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து விரைந்தாள்.

புன்னகையுடன் திரும்பியவள், தன்னைப் பார்த்துக் கள்ளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து முறுவலித்தாள்.

என்ன புன்சிரிப்பெல்லாம் பலமாயிருக்கு சாருக்கு?”

ம்ம்என்று கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவன், “பத்து நாள் பிரிவுக்கு, தேவி கன்னத்தில் கொடுத்துட்டாஎனக்கு அதை விட உரிமை அதிகம் இல்லயா…?
குறுஞ்சிரிப்பில் மலர்ந்த இதழ்களைச் சுழித்தவள், “அதுக்கு?” என்றாள்.

நம்மளையும் கொஞ்சம் ஸ்பெஷலா கவனிச்சா போதும்…” என்று சிரித்தான்.

நீங்க இப்படியே பகல் கனவு கண்டுக்கிட்டு இருங்கநான் அதுக்குள்ள குளிச்சிட்டு வந்திடுறேன்என்று நகர்ந்தவளை, இழுத்து அணைத்துக் கொண்டான்.

பிரபு! விளையாடாதீங்க. நான் போகணும்நேரமாகுது…” என்று மெல்லிய குரலில் சிணுங்கினாள்.

நான் ஒண்ணுமே பண்ணலயேடா சின்னு! நீயா ஏன் கற்பனைப் பண்ணிக்கிற?” என்றவனை முறைத்துப் பார்த்தாள்.

உன்னோட ஃபீலிங்க்ஸ் எனக்குப் புரியுதுஇருந்தாலும்…” என்றவன் அதற்குமேல் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட, அவனிடமிருந்து வேகமாக விலகி விருட்டென அங்கிருந்து நகர்ந்தாள்.

இந்தப் பொண்ணுங்களைப் புரிஞ்சிக்கவே முடியலவேணும்னாலும் முறைக்கிறாங்கவேணாம்னாலும் முறைக்கிறாங்கஎன்னத்தான் சொல்றதுன்னே தெரியலயே ஆண்டவா!” என்று சப்தமாகப் புலம்பினான்.

ம், இப்படியே புலம்புங்க. ஊருக்குப் போய்ட்டு வாங்க. சஹி சஹின்னு வருவீங்க இல்ல அப்போ இருக்கு உங்களுக்கு…” என்று கடுகடுத்துவிட்டு செல்ல, பிரபு புன்னகைத்துக் கொண்டான்.

தான் இலகுவாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டாலும், ஆழ்மனத்தில் மறைத்து வைத்திருந்த அவனது எண்ணங்கள் குமுறிக் கொண்டிருந்தன.

அத்தியாயம் - 20

எனக்காகவா சஹி பாதியிலேயே திரும்பி வந்துட்டீங்க?” ஆதூரத்துடன் கேட்டபடி, தங்கையின் கரத்தைப் பற்றிக் கொண்டாள் வர்ஷா.

நீ இந்த நிலைமையில இருக்கன்னு தெரிஞ்சும், எப்படிக்கா என்னால அங்கேயிருக்க முடியும்? படியிறங்கி வரும் போது பார்த்து வரக்கூடாதா? போன் பேசிட்டே படியிறங்கி வரணுமா? அதோட போன் கீழே விழுந்தா என்ன புதுசா ஒண்ணு வாங்கிகிட்டா போகுதுஅதைப் பிடிக்கப் போய் நீ விழுந்துட்டியே…” கவலையும், அக்கறையுமாகக் கேட்டாள் சஹானா.

நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல சஹி!”

அதுவரைக்கும் எந்த விபரீதமும் இல்லாம, நல்லபடியா இருக்கியேஅதுவே பெரிய நிம்மதி. அத்தை போன் செய்து விசாரிச்சாங்க. உன்னைப் பார்க்க வரேன்னு சொன்னதுக்கு, அதான் நாங்க இருக்கோமே பார்த்துக்கறோம். அவங்க வீட்டுக்கு வந்ததும் நீங்க வந்து பாருங்கன்னு சொல்லிட்டார்என்றாள்.

உன் வீட்டுக்காரர், பார்க்கத்தான் ரொம்ப ரஃப் அண்ட் டஃபா தெரியறார். ஆனா, ரொம்ப அட்ஜஸ்டபிள் இல்ல சஹி!” என்ற தமக்கையைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள்.

பத்து நாள் உன்னை இங்கே விட்டுட்டுப் போயிருக்காரேஅதுக்கே தேங்க்ஸ் சொல்லணும். உன் அத்தான் என்னை டெலிவரிக்கு விட்டுட்டுப் போகறதுக்கே மூக்கால அழுதார் தெரியுமா?”

இவர் மட்டும் என்னவாம்? வெளியூர் போறதால விட்டுட்டுப் போயிருக்கார். இல்லனா என்னை இங்கே அனுப்புவாரா?”

பெண்கள் இருவருமே சலிப்போடு சொல்லிக் கொண்டாலும், அவர்களது வார்த்தையில் கணவன் தங்கள் மீது வைத்திருக்கும் நேசத்தால் விளைந்த பெருமைதான் தெரிந்தது.

அப்பப்பா…! என்ன டிராஃபிக்? என்ன டிராஃபிக்.”
சொல்லிக் கொண்டே கட்டிலருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான் ஸ்ரீராம்.

ராத்திரி எட்டு மணிக்கு நம்ம ஊர்ல எங்கேண்ணா டிராஃபிக் ஜாம் இருக்கும்?” கேட்டுக் கொண்டே அவன் கையிலிருந்த பேகை வாங்கிக் கொண்டாள் சஹானா.

ரோடு காலியாத்தான் இருக்கு. ஹாஸ்பிட்டலுக்குள்ள தான் இப்படி அப்படி நகர முடியாம, கூட்டம் அலை மோதுதுஎன்ற அண்ணனைப் பார்த்துச் சகோதரிகள் இருவரும் புன்னகைத்தனர்.

ம்க்கும்இப்போ சிரி. முழுசா முப்பத்தாறு மணிநேரம் மயக்கத்திலேயே இருந்தபார்க்கவே ஐயோ பாவமா இருந்தது. இதுல போதாக்குறைக்கு உன் வீட்டுக்காரன் வேற, அரை மணிநேரத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி வர்ஷி கண் விழிச்சிட்டாளான்னு கேட்டு என்னை டார்ச்சர் பண்ணிட்டான்.

பொறுக்க முடியாம ஹிட்லரே போனைப் பிடுங்கி, உனக்கு மட்டும் தான் கவலையா எங்களுக்கெல்லாம் இல்லயா? அவள் கண்விழிச்சா உனக்குத்தான்டா முதல்ல போன் செய்து சொல்வான். இப்போ போனை வைன்னு ஒரு போடு போட்டதுக்குப் பின்னால தான் போனையே வச்சான்.

அப்புறம் இந்நேரம் உன் வீட்டுக்காரன் ப்ளைட் ஏறியிருப்பான். அம்மாகிட்ட சொல்லாத நான் வந்து சமாளிச்சிக்கிறேன்னு சொன்னான். நானும் சொல்லலை. உன்கிட்ட சொல்லச் சொன்னான்சொல்லிட்டேன்என்றான் ஸ்ரீராம்.

அத்தான் வராங்களா?” ஆர்வத்துடன் கேட்டவளது முகம் சட்டென சோர்ந்து போனது

என்னால எல்லோருக்கும் கஷ்டம் இல்ல…” என்றவளுக்குக் கண்கள் கலங்கின.

என்னக்கா இது?” சஹானா ஆதரவுடன் அக்காவின் கையைப் பற்றிக் கொள்ள, ஸ்ரீராம் தங்கையின் அருகில் கட்டிலில் அமர்ந்தான்.

இப்படி எடுத்த்துக்கெல்லாம் அழறதை இன்னும் விடலையா நீ? கண்ணைத் துடை. உனக்கு செய்யறதை நாங்க சிரமமா நினைப்போமா? கஷ்டத்துல கூட இருக்கறது தான் நல்ல சொந்தங்களுக்கு அழகு. உன்னால யாருக்கும் எந்தக் கஷ்டமும் இல்லபுரிஞ்சிதா?”  

அதட்டலும், உரிமையுமாகச் சொல்லிக் கொண்டே தங்கையின் கண்களைத் துடைத்துவிட்டான் அவன்.

இரவுப் பணிக்காக மருத்துவமனைக்கு வந்ததுமே, டீன் அழைப்பதாக செய்தி வர, அவரது அறையை நோக்கி வந்து கொண்டிருந்தாள் திவ்யா.

யாருக்கும் எந்தக் கஷ்டமும் இல்லபுரிஞ்சிதா?’ என்ற குரலில் சற்று நிதானித்தவள், சப்தம் வந்த திசையைப் பார்த்தாள்.

திறந்திருந்த ஜன்னலின் வழியாக ஸ்ரீராம் ஒரு பெண்ணின் கண்களைத் துடைப்பதையும் அவள் அவனது தோளில் சாய்ந்து கொள்வதையும் பார்த்தவள், திகைத்துப் போனாள்.

அடப்பாவி!” என்று வாய்விட்டே முனகினாள் அவள்.

************

வழக்கமாக இரவுப் பணியை முடித்துவிட்டு வந்தால், குளித்து முடித்து அன்னை சமைத்து வைத்திருக்கும் டிஃபனை சாப்பிட்டு விட்டுப் படுத்தாலென்றாள், மதியம் இரண்டு மணிவரை அடித்துப் போட்டது போல உறங்குவாள்.

ஆனால், இன்று எல்லாமே ஏனோ தானோவென்று தான் நடந்தது. அரைகுறை குளியலும், இரண்டு இட்லியை விழுங்கிவிட்டு படுத்தவளுக்கு உறக்கம் மட்டும் வரவில்லை.

வைதேகி மதிய சமையலில் ஈடுபட்டிருக்க, கதவை மூடிவிட்டு வந்தவள் மொபைலில் கல்பனாவிற்கு அழைத்தாள்.

இரண்டு மூன்று முழு அழைப்பும் சென்று நின்றது தான் மிச்சம். கல்பனா மொபைலை எடுக்கவேயில்லை.

சரியான கும்பகர்ணனுக்குத் தங்கச்சிதிட்டிக் கொண்டே மீண்டும் அவளது மொபைலுக்கு அழைத்தாள்.

தூக்கக் கலக்கத்துடன் போனை எடுத்து, “ஹலோ!” என்றாள் கல்பனா.

ஏண்டி! எத்தனை தடவை போன் பண்னேன். நேத்தும் டியூட்டிக்கு வரலை. ராத்திரியெல்லாம் நல்லாத் தூங்கித் தானே இருப்ப. அப்படியும் உனக்குப் போனை எடுக்க இவ்வளவு நேரமா?” கோபத்தில் சிடுசிடுத்தாள் திவ்யா.

ஹாஸ்பிட்டல்லதான் என் உயிரை எடுக்கறன்னா, வீட்லகூட என்னை நிம்மதியா தூங்க விடமாட்டியா?” எரிச்சலுடன் கேட்டாள் கல்பனா.

நீ போன ஜென்மத்துல கும்பகர்ணனுக்குத் தங்கச்சியா பிறந்திருப்பா போலஎன்றாள் கடுப்புடன்.

அப்போ, என்னைச் சூர்ப்பனகைன்னு சொல்றியா?”
தோழியின் பேச்சில் உறக்கம் தெளிந்து போனது கல்பனாவிற்கு.

அதே மாதிரி எனக்கு வர்ற கோபத்துக்கு, உன் மூக்கை அறுக்கப் போறேன் பாரு…”

போதும்டியம்மா சொல்ல வேண்டியதைச் சொல்லித் தொலை. இன்னைக்கு ஸ்ரீராம் சாரைப் பத்தி என்ன புலம்பணுமோ புலம்பு. வழக்கம் போல கேட்டுக்கறேன்…”

திவ்யாவே சற்று ஆச்சரியப்பட்டுப் போனாள்.

நான் அவரைப் பத்திப் பேசப்போறேன்னு உனக்கெப்படித் தெரியும்?”

இதுக்கு நான் ஜோசியம் பார்க்கணுமா? கொஞ்ச நாளா நீ வாயைத் திறந்தாலே அவரைப் பத்தித் தானே பேசறே” – கல்பனா.

என்னடி சப்தமே இல்லஉண்மையைச் சொல்லிட்டேனோ?” சிரித்துக் கொண்டே கேட்டாள் கல்பனா.

உன் மூஞ்சிஅவன் என்ன என் லவ்வரா? எப்பவும் அவனையே நினைச்சிட்டு இருக்க?”

எனக்குக் கொஞ்ச நாளாவே அந்த டௌட் இருக்குஎன்று மனத்திற்குள் இருந்த எண்ணத்தைப் போட்டு உடைத்தாள்.

பற்களைக் கடித்துக் கொண்டு, “எருமை! நீ கவிழ்ந்தடிச்சி தூங்கு. நான் போனை வைக்கிறேன்என்றாள் திவ்யா.

ரொம்ப சீன் போடாதே. எப்படியும் திரும்ப எனக்குப் போன் பண்ணத்தான் போற. அதுக்கு சொல்ல வந்ததை சொல்லி முடிச்சிட்டு அப்புறமா போனை வைஎன்றாள்.

உனக்கு ரொம்ப ஏத்தம்டீ.”

அது ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டும். விஷயத்துக்கு வாஎன்று தனது பிடியிலேயே நின்றாள் கல்பனா.

மருத்துவமனையில் தான் கண்ட காட்சியை விளக்கியவள், “நீ என்ன நினைக்கிற கல்பூ?” என்றாள் பரிதாபமாக.

தோழியின் வார்த்தைகளிலிருந்த ஏமாற்றத்தை, கல்பனா கவனிக்காமல் இல்லை.அவள், அவனது தங்கைஎன்று தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லிவிடலாமா என்று நினைத்தவள் உடனே மனத்தை மாற்றிக் கொண்டாள்.

நீ நினைக்கிறா மாதிரியும் இருக்கலாம்…” என்று பட்டும் படாமலும் பதிலளித்தாள்.

என்னடி இப்படிச் சொல்ற?”

நான் என்ன சொல்லணும்னு நினைக்கிற?” கறாராகக் கேட்டாள் கல்பனா.

திவ்யாவிடம் எந்தப் பதிலும் இல்லாமல் போக, அவளே தொடர்ந்தாள்.

கைநிறைய சம்பாதிக்கிறார். பார்க்க ஹேண்ட்ஸமா இருக்கார். இவ்ளோ நாள் கல்யாணம் ஆகாமலா இருக்கும்?”

தோழியின் ஒவ்வொரு வார்த்தையும், திவ்யாவின் மனத்தை வண்டாகக் குடைய, எதுவுமே பேசாமல் போனை அணைத்து வைத்தாள்.

ஏனோ, அழ வேண்டும் போலிருந்தது.

ஸ்ரீராமைக் காதலிக்கிறேனா?’ மீண்டும் மீண்டும் தன்னிடமே கேட்டுக் கொண்டவளுக்கு, ‘ஆம்என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

எப்படி? முதன்முறை பார்த்த போதே அவனுடன் சுமுகமான ஒர் உறவு இல்லையே. தடாலடியான ஒரு நிகழ்வு தானே நிகழ்ந்தது. பின் எப்படி இத்தனைத் தூரம் என்னையறியாமலேயே என் மனத்தைக் கவர்ந்தான்?’

திவ்யாவிற்குப் புரியவே இல்லை. எப்போதுமே, எதையும் தைரியமாக எதிர்கொண்டவளுக்கு வாழ்க்கையில் முதன்முறையாக இந்த விஷயத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இருக்கையில் அமர்ந்தவள் தங்களது முதல் சந்திப்பை நினைத்துப் பார்த்தாள்.
கல்பனாவுடன் பேசிக் கொண்டே திரும்பியவள் தங்களது டேபிளின் அருகில் வந்தமர்ந்த ஸ்ரீராமை எதேச்சையாகப் பார்த்தாள். அவன் ஏதோ முணுமுணுப்பது தெரிந்ததும் வேண்டுமென்றே அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

நிச்சயமாக அதில் காதல் இல்லை என்ற போதும் வழக்கமாக ஒரு ஆணிடம் தோன்றும் ஈர்ப்பு அவன்மீது அவளுக்குத் தோன்றியது தான் காரணம்.

ஆனால், வரிசையில் நிற்கும் போது அவன் பாடிய பாடலைக் கேட்டவள் இவன் தன்னைக் கிண்டல் செய்கிறானோ என்ற எண்ணம் எழுந்த போதும், அவனை அவ்வாறு நினைக்கவும் முடியவில்லை.

இரண்டு மூன்று முறை இது தொடரவும், அவளால் தாளமுடியவில்லை. அதனால் தான் அவனது அறையில் முடிந்தவரை வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருந்தாள். அப்போது அவன் சும்மா இல்லாமல் இவங்க பேசமாட்டாங்களா என்று கேட்ட்துமே கோபம் சுறுசுறுவென் ஏறியது அவளுக்கு.

வாயில் வந்ததையெல்லாம் சேர்த்துப் பேசிவிட்டு, வேகமாக அங்கிருந்து வெளியேறினாள். இது ஏதோ கோபத்தில் விளைந்தது என்று இதுவரை அவள் நினைத்திருக்க, இது அத்தனையும் அவன் மீது தனக்குத் தோன்றியிருக்கும் ஈர்ப்பு என்பது இப்போது தான் அவளுக்குப் புரிந்தது.

சற்றுநேரம் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தவள் எழுந்து ஹாலுக்கு வந்தாள்.
தலையணை உறையில் பூ வேலை செய்து கொண்டிருந்த வைதேகி, நிமிர்ந்து மகளை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

என்னடா கண்ணா! தூங்கலையா?” என்றார்.

அவரருகில் அமர்ந்தவள், “உங்க மடியில படுத்துக்கடுமாம்மா!” கெஞ்சுவதைப் போலக் கேட்டாள்.

மகளது இந்தச் செயல்களெல்லாம் வைதேகிக்குப் புதிதாக இருந்தது. ஆனாலும், அந்த வயதைக் கடந்து வந்தவருக்குப் புரியாமலும் இல்லை.

மடியில் படுத்திருந்த மகளது தலையை மெல்ல வருடிக் கொடுத்தார்.
மனத்தில் புதைந்திருந்த காதலால் விளைந்த ஏமாற்றமும், அன்னையின் மடி தந்த கதகதப்பான சுகத்திலும், அவளது இமைகள் ஈரத்தை கசியவிட்டன.

அழுகையில் தனது புடவை ஈரமானதை உணர்ந்த வைதேகி, 'கடவுளே! என் மகளோட மனசுக்கேத்த மாதிரி எல்லாத்தையும் நல்லபடியா நடத்திவைப்பா! அவளுக்காவது நல்ல ஒரு வாழ்க்கை அமையட்டும்' தனக்கே தாயுமானவளாக இருக்கும் மகளுக்காக, அந்தத் தாயுள்ளம் வேண்டிக் கொண்டது.

No comments:

Post a Comment