Friday, July 3, 2015

உறவெனும் புதிய வானில்



அத்தியாயம் - 16

அத்தைஇன்னைக்கு என்ன டிஃபன்?”

கேட்டுக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்த சஹானாதன்னைக் கண்டதும் வேகமாக அங்கிருந்து வெளியே சென்ற தமக்கையைப் பார்த்தாள்.

என்னடா கண்ணா கேட்ட?” சிரிப்பை அடக்கிக் கொண்டு தன்னிடம் பேசும் அத்தையையும்கவனமாக தன்னைப் பார்க்காமல் வாயை இறுக மூடிக் கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்த அன்னையைக் கண்டதுமே, விஷயம் விளங்கிவிட்டது அவளுக்கு.

இப்படித் தன்னை மாட்டிவிட்டு அனைவரது கேலிப் பார்வைக்கும் ஆளாக்கிய கணவனை நினைத்து எரிச்சல் பொங்கியது

மேடை மீதிருந்த கேஸரோலை எடுத்துக் கொண்டு டைனிங்கிற்குச் சென்றாள்.

அப்போது தான் ஸ்ரீராமிடம் இரகசியமாக வர்ஷா ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அழுகையே வந்துவிடும் போலாகிவிட்டது அவளுக்கு.

தேவி! உங்க அண்ணாவைச் சாப்பிடக் கூப்பிடுஎன்று யாரையும் நிமிர்ந்து பார்க்காமலேயே சொன்னாள்.

மனைவியின் குரல் கேட்டதுமே படித்துக் கொண்டிருந்த பேப்பரை மூடி வைத்துவிட்டு டைனிங்கிற்கு வந்தான் பிரபு.

மாப்பிள்ளை! ஒரு நிமிஷம்என்றழைத்த மைத்துனனை, என்ன என்பதைப் போலப் பார்த்தான் பிரபு.

மாப்பிள்ளை! வித் யுவர் பர்மிஷன்என்றவன் சட்டென பிரபுவை அணைத்துக் கொண்டான்.

அனைவருமே ஒருவித பரபரப்பும், கேள்வியுமாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, பிரபு அவனது செய்கையில் திகைத்துப் போனான்.

ரொம்ப தேங்க்ஸ் மாப்பிள்ளை...!நெகிழ்ச்சியுடன் சொன்னவன், “என் தங்கையை இவ்வளவு அருமையா பார்த்துக்கறீங்க... உங்களுக்கு என்ன செய்யறதுன்னு எனக்குத் தெரியல... அதான் ஜஸ்ட் என்னோட சந்தோஷத்தை இப்படி வெளிக்காட்டிட்டேன்...

பனித்திருந்த இமைகளை துடைத்துக் கொண்டே அவன் சொல்ல, பிரபுவிற்கு வெளியில் மகிழ்ச்சியாகக் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் சிறு மிரட்சி அவனையும் அறியாமல் தோன்றியது.

நடப்பவற்றை நம்பமுடியாமல் இமைகள் விரிய பார்த்துக் கொண்டிருந்த தங்கையின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தான் ஸ்ரீராம்.

அனைவரும் ஒருவித நெகிழ்ச்சியில் இருக்க, அவனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தேவி.

க்ளீன் போல்ட்... போண்ணா! உன்னை வச்சி கொஞ்சம் டைம்பாஸ் பண்ணலாம்னு நினைச்சேன்... எல்லாம் போச்சுஎன்றாள் வர்ஷா.

அதனால என்ன டைம் பாஸ் பண்ண வேற ஆளா இல்ல... நீ இருக்க... நம்ம ஹிட்லர் அத்தை இருக்காங்க...சொல்லிக் கொண்டே திரும்பிப் பரிமளத்தைப் பார்த்தான்.

ஏன்டா என் வாயைக் கிளறாம உனக்குப் பொழுதே போகாதா? உன்னை அடக்க ஒருத்தி வராமலா போகப் போறா?” என்றார் வழக்கம் போல.

இது ஒன்று போதாதா அவனுக்கு... அதையே உடும்பாகப் பற்றிக் கொண்டான்.

எங்க...? பேச்சு வெறும் பேச்சாத்தான் இருக்கு. அதைத் தாண்டி யாரும் யோசிக்கிறா மாதிரியே தெரியலையே...

அண்ணா! அப்படிச் சொல்லாத உனக்காக அத்தை பொண்ணெல்லாம் பார்த்து வச்சாச்சு தெரியுமா?” உண்மையை அவிழ்த்து விட்டாள் வர்ஷா.

இதென்ன புதுக்கதை... எனக்குச் சொல்லவே இல்லையே அக்கா!” – சஹானா.

சொல்லலாம்னு தான் இருந்தேன் சஹி! அதுக்குள்ள அம்மா வந்துட்டாங்க இல்ல...தங்கைக்குச் சமாதானம் சொன்னாள் வர்ஷா.

எனக்கே சொல்லலை உனக்குச் சொல்லலைன்னு கேட்கறஎன்றவன், “வர்ஷி! மேலே சொல்லு...என்றான்.

அவளும் கடமையாக, “மேலேஎன்றாள்.

அனைவரும் சட்டென சிரித்துவிட, ஸ்ரீராம் தங்கையை முறைத்தான்.

நீ சொன்ன ஜோக்கை ரூம் போட்டு ரசிச்சி சிரிச்சிக்கிறேன்... முதல்ல யாராவது விஷயத்தைச் சொல்லுங்கஎன்றான் கடுப்புடன்.

ம்க்கும்என்று வர்ஷா முகத்தைத் தூங்கிவைத்துக் கொள்ள, சுகுணா ஆரம்பித்தார்.

நேத்து நீ ஆஃபீஸ்லயிருந்து வந்தப்போ, ஒருத்தங்க வந்திருந்தாங்க இல்ல... வைதேகி...

ஆமாம்... அவங்களுக்கு என்ன?” என்றான்.

அவங்களுக்கு ஒண்ணுமில்லடா... அவங்க பொண்ணைத் தான் உனக்குப் பேசலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்என்றார் சுகுணா.

ஓ! அவங்களைப் பார்த்தாலே ஐயோ பாவமா இருந்தது. அவங்க பொண்ணு எப்படி இருப்பா?” என்றான் கேள்வியுடன்.

வாயை மூடுடா. எப்போ பாரு ஏதாவது நொட்டை பேசிகிட்டு. பொண்ணு ரொம்ப லட்சணமா இருப்பா. உனக்கு நிச்சயம் பிடிக்கும்என்றார் பரிமளம்.

அதை நான் சொல்லணும். சரி, பொண்ணு பேர் என்ன?” என்றான்.

பொண்ணு பேரு...யோசித்த பரிமளம், “ஏன் வர்ஷி! அந்தப் பொண்ணு பேர் என்ன சொன்னா... அன்னைக்கு? நித்யாவா...

இல்லத்தை! வித்யான்னு நினைக்கிறேன்...என்றாள்.

நினைக்கறீங்களா? இவ்வளவு தூரம் கல்யாணம் பண்ண பேசறீங்க... பொண்ணோட பேரைக்கூட  நினைவு வச்சிக்க மாட்டீங்களா?” எரிச்சலுடன் கேட்டான் ஸ்ரீ.

சாரிண்ணா!” என்றாள் வர்ஷா.

பேராடா இப்போ முக்கியம்? வீட்ல அம்மாவும், பொண்ணும் மட்டும் தான். எந்தப் பிரச்சனையும் இல்ல…” என்றார் சுகுணா.

என்னமோ செய்ங்கமுதல்ல பேரைக் கேட்டுச் சொல்ற வழியைப் பாருங்க. இன்னைக்கு நான் ஆஃபிஸுக்குச் சீக்கிரம் கிளம்பணும்என்றவன் எழுந்து கைகழுவச் சென்றான்.

அனைவரிடமும் சொல்லிக் கொண்டவன், “மாப்பிள்ளை! கிளம்பறேன்என்றான்.

ஸ்ரீராம்! இந்த மாப்பிள்ளையை விட்டுடலாமேஎன்னைப் பேர் சொல்லியே கூப்பிடுங்க. நாமெல்லாம் ஒரே ஏஜ் க்ரூப் தானேஎன்றான்.

ரொம்பச் சௌகர்யமா போச்சு. வரேண்டா மச்சான்…” என்று கையசைத்துவிட்டுச் செல்ல, பிரபு கையசைத்து விடைகொடுத்தான்.

ஏற்கெனவே மரியாதை ராமன். இதுல பேரைச் சொல்லிக் கூப்பிடச் சொல்லியாச்சாஇனி உருப்பட்டா மாதிரி தான்என்றார் பரிமளம்.

நீங்களும் இனிமே என்னை பிரபுன்னு கூப்பிடுங்க பெரிம்மா! நானும் உங்க பிரபா மாதிரி தானேஎன்றதும், பரிமளத்திற்கு உருகிவிட்டது.

சஹானா கணவனைக் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

**************

அம்மா! நான் டியூட்டிக்குக் கிளம்பறேன். ஜாக்கிரதையா இரும்மா. கதவைத் தாழ் போட்டுக்கபடுக்கறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு ரெண்டு தடவை நல்லா சரி பார்த்துக்கோ…”

இரவு பணிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த திவ்யா, அன்னையிடம் சொல்லிக் கொண்டே, ஸ்கூட்டியில் தனது டாக்டர் கோட்டை வைத்து விட்டுத் திரும்பினாள்.

அப்புறம்…” என்றவள், தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு நின்றிருந்த அன்னையை முறைத்துப் பார்த்தாள்.

ஏம்மா! நான் எவ்ளோ முக்கியமான விஷயம் சொல்லிட்டு இருக்கேன். நீ என்னவோ சிரிச்சிகிட்டே என்னைப் பார்த்துட்டு இருக்கஎன்றாள் சற்று கோபத்துடன்.

நான் என்ன சின்னக் குழந்தையா திவி! நீ பத்திரமா போய் வாம்மா.”
நிதானத்துடன், புன்னகை மாறாமல் சொன்ன அன்னையை இமைக்காமல் பார்த்தாள்.

சிரிக்கும் போது நீ எவ்ளோ அழகா இருக்கம்மாஆனா, இத்தனை வருஷமும் அதையெல்லாம் மனசுக்குள்ளயே போட்டு வச்சிகிட்டு இருந்த இல்ல…” பாசத்துடன் அவரது கன்னத்தை வருடிக் கொடுத்தாள்.

உள்ளம் நெகிழ்ந்து போனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை வைதேகி.

ஏய்! நூத்துக் கிழவிநேரமாகுது கிளம்பு. வண்டியை வேகமா ஓட்டாதேஏற்கெனவே ஹெட்லைட் சரி இல்லநாளைக்கு டியூட்டி முடிஞ்சி வரும் போதே அதை சரிபண்ணிட்டு வந்திடு. பத்திரம்…”

சரி சரிவரேம்மாஎன்றவள் வண்டியில் ஏறியதுமே ஆக்ஸிலேட்டரை முடுக்க, வண்டி சல்லென வேகமெடுத்தது.

இத்தனைத் தூரம் சொல்லியும் இப்படி எடுத்தவுடன் வேகமாகச் செல்லும் மகளை அதிருப்தியுடன் பார்த்தார் வைதேகி.

பாதி வழி கடந்த போதே அவளது ஹெட்லைட் அணைந்துவிட வண்டியை ஓரம் கட்டினாள் திவ்யா.

மெக்கானிக் ஷெட்டையும் தாண்டி வந்தாகிவிட்டது. இனி திரும்பிச் சென்று சரிபார்த்துக் கொண்டு இரவு பணிக்குச் செல்வதற்குள் தாமதமாகிவிடும். அதோடு மெயின் ரோடில் எப்போதும் நிற்கும் கான்ஸ்டபிளிடமும் மாட்டிக் கொள்ள நேரிடும்.

என்ன செய்வது என்று யோசித்தவள், சற்று தூரம் சென்றால் அவர்களது மருத்துவமனைக்குச் செல்லும் குறுக்கு வழி ஒன்று நினைவிற்கு வந்தது. ஆனால், பாதை அத்தனை நன்றாக இருக்காதென்பதால், அவள் அந்த வழியைத் தவிர்த்து விடுவாள்.

இன்று வேறு வழியில்லாததால் அந்த வழியிலேயே சென்றுவிடலாமென்று எண்ணி வண்டியைக் கிளப்பினாள்.

குறுக்கு வழியில் சென்றவள் பத்தடி கூட சென்றிருக்க மாட்டாள். தெரு விளக்கும் இல்லாத அந்தச் சந்தில் மெதுவாகத் தான் சென்றாள். ஆனால், அவளுக்கு வலதுபுறத்திலிருந்த மற்றொரு சந்திலிருந்து, வேகமாக திரும்பிய பைக்கைக் கண்டதும், தடுமாறி வண்டியுடன் கீழே விழுந்தாள்.

அந்தத் தெருவில் அவ்வளவாக நடமாட்டம் இருக்காது என்று தெரிந்த ஸ்ரீராம் வண்டியின் வேகத்தைக் குறைக்காமல் திரும்பினான்.

அதோடு போதிய வெளிச்சமும் இல்லைஎதிரில் வந்த ஸ்கூட்டியின் முன் விளக்கும் எரியாததால் அவன் சற்று நெருங்கி வந்ததும் தான் கவனித்தான். அவன் பிரேக் போட்டும் பலனில்லாமல் ஸ்கூட்டியில் வந்தவள் கீழே விழுந்தாள்.

மோதாமல் சமாளித்து நின்றவன், வேகமாக பைக்கிலிருந்து இறங்கி வந்தான்.

சாரி, அடி ரொம்பப் பலமா பட்டுடுச்சா…” கேட்டுக் கொண்டே ஸ்கூட்டியைத் தூக்கி நிறுத்தியவன், விழுந்து கிடந்தவள் எழ உதவியாக தனது கரத்தை நீட்டினான்.

சாரி, நான் தான் கவனிக்காம…” சொல்லிக் கொண்டே கையில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிக் கொண்டே நிமிர்ந்தவள் அப்படியே உறைந்து போனாள்.

ஆத்தாடி! இந்தச் சொர்ணாக்காவா?’ என்று ஸ்ரீராமும்; ‘இந்த வாலில்லாத குரங்கா?’ என்று திவ்யாவும் ஒருவரையொருவர் பார்த்துத் திகைத்துப் போயினர்.

இடிச்சித் தள்ளினதும் இல்லாம ஹெல்ப் பண்ண வந்துட்டான்…” முணுமுணுத்துக் கொண்டே சமாளித்து எழுந்து நின்றாள்.

ஹலோ! என்னம்மா கிண்டலா? நீ நோ என்ட்ரில வந்ததும் இல்லாம, எனக்கே கதை சொல்றியா? ராங் ரூட்ல வந்ததே தப்பு. இதில் வண்டியில் வேற லைட் இல்ல. இந்த லட்சணத்துல பேச வந்துட்ட. வண்டி வாங்கினா மட்டும் போதாதுஅதை மெயிண்டெயின் பண்ணவும் தெரியணும்என்றான் கிண்டலாக.

தோடா! அட்வைஸ் ஐயாசாமி வந்துட்டாரு…” அவளும் தனது கோபத்தை வார்த்தைகளில் கொட்ட ஆரம்பித்தாள்.

தோடாவாமெட்ராஸ் பார்ட்டியா இது?” என்று வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டான்.

உன் வண்டியில தான் விளக்கெறியுதேநீ பார்த்து வரவேண்டியது தானேஉன் கண் என்ன பிடறியிலயா இருக்கு…” என்று கேலியாகச் சிரித்தாள்.

உன்கிட்டலாம் மனுஷன் பேசுவானா? பிடாரிஎன்றவன் வேகமாகச் சென்று வண்டியை எடுத்தான்.

மூஞ்சியைப் பாரு…” என்று முனகியவள், “இவன் முகத்தைப் பார்த்துத் தொலைச்சிட்டேன்இனி உருப்பட்டா மாதிரிதான்கடுகடுத்துக் கொண்டே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

அதுவரை எரியாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்த ஹெட்லைட் பளிச்சென ஜோராக எரிந்தது.

“இது முதல்லயே ஒழுங்கா எரிஞ்சித் தொலைஞ்சிருந்தா ஒழுங்கா மெயின்ரோட்லயே போயிருப்பேன். இந்தப் பக்கம் வந்து இவன்கிட்ட மோத வேண்டியதா போச்சு” அலுப்பும், சலிப்புமாக மருத்துவமனையை நோக்கி ஸ்கூட்டியை விரட்டினாள் திவ்யா.

No comments:

Post a Comment