Saturday, July 4, 2015

உறவெனும் புதிய வானில்



அத்தியாயம் - 17

கடுகடுவென்ற முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான் ஸ்ரீராம்.

என்னண்ணா! என்னைக்கும் இல்லாத திருநாளா உன் முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்குது?” சிரித்துக் கொண்டே கேட்டாள் சஹானா.

அது ஒரு பயங்கரமான பேய்க் கதைஅதை அப்புறமா சொல்றேன். பிரபு எங்கே?”

எல்லோரும் மொட்டை மாடில உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க. எனக்குக் கொஞ்சம் வேலை இருந்தது அதான் இங்கே இருக்கேன். நீ போண்ணாகொஞ்ச நேரத்தில் வரேன்…”

சரிடா, சஹி! எனக்குக் கொஞ்சம் டீ கொண்டு வர்றியா?”

இதெல்லாம் டூ டூ மச் அண்ணா. டீ வேணும்னு சொன்னா கொண்டு வரமாட்டேனா?”
கேலியாகப் புன்னகைத்தபடி கேட்ட தங்கையைப் பார்த்தான்.

சரி, எனக்கு டீ எடுத்துட்டு வாசொல்லிவிட்டு முறுவலித்தபடி மொட்டை மாடிக்குச் சென்றான்.

என்ன ஸ்ரீ! இன்னைக்கு ஆஃபீஸ்லயிருந்து இவ்வளவு லேட்டா வரீங்க?”

ஒரு வேலையா போயிருந்தேன் பிரபு!” என்றவன் அவனருகிலிருந்த இருக்கையில் 
அமர்ந்தான்.

அப்படி என்னடா வேலை?” – கணேசன்.

சஹி வந்திடட்டும்ப்பா சொல்றேன்.”

அதற்கு மேல் அவனிடம் யாரும் தோண்டித் துருவவில்லை. பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர். கடைசியில் அங்கே சுற்று இங்கே சுற்றி, பேச்சு வர்ஷாவின் வளைகாப்பில் வந்து நின்றது.

எட்டு மாசம் முடியப்போகுதே அண்ணி! வளைகாப்புக்கு நாள் பார்க்கணும்…” அன்னையின் பரிவுடன் சொன்னார் சுகுணா.

நானும் அதைப் பத்திப் பேசணும்னு நினைச்சிட்டே இருந்தேன். ஒரு நல்ல நாள் பார்த்திடுவோம். அவளோட டெலிவரி தேதி நெருக்கத்திலேயே வச்சாபிரபாவும் குழந்தைப் பிறக்கும் வரை இருந்து பார்த்துட்டுப் போகறாப்பல இருக்கும்என்ன சொல்ற கணேசா?” என்றார் பரிமளம்.

சரிதாங்க்காஇது பெண்கள் விசேஷம். நீங்க பேசி முடிவு பண்ணிட்டு எனக்குச் சொன்னா நான் ஏற்பாட்டை கவனிக்க வசதியா இருக்கும்.”
வீட்டின் ஆண்மகனாகவும், பெண்ணின் தகப்பனாகவும் அவரது பேச்சு இருந்தது.

ஹோட்டல், சமையல் எல்லாம் நான் பேசி முடிச்சிடுறேன்செலவையும் அப்படியே எஸ்டிமேஷன் போட்டுச் சொல்லுங்கம்மா…”

நல்ல தமையனாக சொன்னான் ஸ்ரீ ராம்.

பிரபுவிற்கு இதையெல்லாம் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. வீட்டில் எந்த பூஜையும், விசேஷமாக இருந்தாலும் அவனது தலையீடு அதில் சுத்தமாக இருக்காது.

ஆஃபீஸ் சென்று வருவதும், விடுமுறை நாளில் வெளியே செல்வது என்று இருப்பானே தவிர, இப்படி அமர்ந்து குடும்ப நிகழ்வுகளைப் பற்றி பேசவேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு வந்ததில்லை.

சஹானா வந்தபிறகு தனது அம்மாவுடன் சேர்ந்து அவள்தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறாள். அவனது வட்டதில் யார் வீட்டிலும் இந்தப் பழக்கமெல்லாம் இல்லாததால் அவனுக்கு எல்லாம் புதிதாக தெரிந்தது.

அதேநேரம் டீயுடன் வந்த சஹானா அதை, அண்ணனிடம் கொடுத்துவிட்டு தேவியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

சஹானாவைக் கண்டவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘இந்தப் பெண்கள் தான் இடத்திற்குத் தகுந்ததைப் போலத் தன்னை எத்தனை அழகாகப் பொறுத்திக் கொள்கிறார்கள்.

அம்மா மறந்தும் அதிர்ந்து பேசக்கூடியவர் அல்ல. சஹானாவும் அப்படித்தான். ஆனால், வேலையாட்கள் இதனாலேயே அவரைச் சற்று ஏமாற்றிக் கொண்டுதான் இருந்தனர். ஆனாலும் அம்மாவிடமிருந்து எந்த அதிகாரமான வார்த்தையும் வராது.

சஹானாவும் அப்படித்தான். ஆனால், அம்மாவைப் போல சிலநேரங்களில் கண்டும் காணாமல் இருந்தாலும், பலநேரங்களில் அவர்களது முகத்திற்கு நேராக கேட்டுவிட்டே செல்வாள்.

சஹானா ஏதோ சொல்ல சப்தமாகச் சிரித்த தேவியால், அவனது நினைவுகள் கலைந்தன. கலகலவென நகைத்துச் சிரிக்கும் தங்கையைப் பார்த்தான்.

எப்படியிருந்தவள், இப்படி மாறிவிட்டாள்! யார் வீட்டிற்கும் செல்லாதவள் சஹானா அழைத்த்துமே உடனே கிளம்பிக் கொண்டாள். நண்பர்கள், போன், அரட்டை என்று அவளது நேரம் செல்லுமே அம்மாவைத் தவிர அவளிடம் வேறு யாரும் அத்தனை அனுசரணையாக இருந்ததில்லை.

அதிலும், மாலையில் அவன் தங்கள் அறையிலிருந்து வெளியே வந்த போது தேவி வர்ஷாவிடம், “உங்களையெல்லாம் பார்க்கும் போது எவ்வளோ பொறாமையா இருக்கு தெரியுமா? ஒருத்தர் மேல ஒருத்தருக்கு எவ்வளவு பாசம்! அதிலயும் ஸ்ரீ அத்தான் கிரேட்! அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா நான் ஸ்ரீக்கு தங்கையா பிறக்கணும்னு வேண்டிக்கிறேன்என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதைக் கேட்டதிலிருந்தே அவனுக்கு மனத்திற்குள் தனது கடமைகளில் தான் ஒன்றைக் கூட சுத்தமாக கடைபிடிக்கவில்லை என்றே தோன்றியது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற கதையாக, தந்தையைப் பழிவாங்க என்று ஆரம்பித்து தன் சுயத்தை இழந்து நிற்பதை அப்போது தான் நன்றாக உணர்ந்தான்.

தன்னை அறியாமையிலிருந்து மீட்டெடுக்க வந்த தேவதையாகத் தெரிந்தாள் சஹானா. ஆரம்பத்தில் அவளை வாட்டிவதைக்கும் எண்ணத்துடன் தான் காத்திருந்தான். அவளை தன் வாழ்விலிருந்து எத்தனைச் சீக்கிரம் முடிகிறதோ அத்தனைச் சீக்கிரம் விரட்டியடிக்கும் காலத்திற்காக காத்திருந்தான்.

ஆனால், அவளது அன்பும், அரவணைப்பும் அவனை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. அவனுக்குள் இருந்த நல்லவன்  எதிர்பார்த்தது இதைத் தானோ?
ஆக மொத்தத்தில் அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அவளில்லாத அவனுடைய உலகம் அணு அளவிற்கும் அசையாது.

ஆனால், தனது இருள் சூழ்ந்த நிழல் வாழ்க்கை அவளுக்குத் தெரிய வரும் போது அதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள். வேலையாட்களின் சிறுசிறு தவறுகளைக் கூடப் பொறுத்துக் கொள்ளாதவள், என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாளா?’

சிந்தனைகள் அவனை அலைக்கழிக்க, அவனால் அங்கே அமரவே முடியவில்லை.
பிரபு! ஏன் ஒரு மாதிரி அப்செட்டா இருக்கீங்க?”

இரண்டு முறை அழைத்தும் ஏதோ நினைவில் இருந்தவனை தோளை உலுக்கி அழைத்தான் ஸ்ரீராம்.

சுதாரித்து நிமிர்ந்தவன், “நத்திங்கொஞ்சம் ஆஃபிஸ் பத்தி நினைச்சிட்டு இருந்தேன்…” சமாளிப்பாக புன்னகைத்தான்.

!” என்று சமாதானமான ஸ்ரீராம், “இந்தாங்க இதைப் பிடிங்கஎன்று ஒரு கவரை அவனிடம் கொடுத்தான்.

என்னதிது?” கேள்வியுடன் பார்த்தான் பிரபு.

பிரிச்சிப் பார்த்தால் தெரியப் போகுது” – புன்னகைத்தான் ஸ்ரீ.

என்ன ஸ்ரீ இது? எதுக்கு இதெல்லாம்…” சங்கடத்துடன் கேட்டவன், சஹானாவிடம் கையிலிருந்த பேப்பரைக் கொடுத்தான்.

சஹானாவும் திகைத்துப் போனாள்.

எதுக்குண்ணா! இவ்வளவு எக்ஸ்பென்ஸிவா…?” என்றவளிடமிருந்து பேப்பரை வாங்கிப் பார்த்த வர்ஷா, “ஹய்யோ! குமரகம் ஹனிமூன் பேக்கேஜா…” என்று ஆர்ப்பரித்தாள்.

 நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் சஹி! ரெண்டு நாளைக்குத் தான் புக் பண்ணியிருக்கேன். நாளைக்குக் காலைல கிளம்பணும்.”

கணவனும், மனைவியும் தயக்கத்துடன் பார்த்துக் கொள்ள, “போய் வாங்க சஹி! தேவியை நாங்க பார்த்துக்கறோம்என்றார் சுகுணா.

அரைமனத்துடன் தலையசைத்தாள் சஹானா.

**********

மறுநாள் காலையிலேயே சஹானாவும், பிரபுவும் குமரகம் கிளம்பிவிட, அனைவரும் சந்தோஷத்துடன் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

ஆனால், கிளம்பிச் சென்ற இருவருக்குமே மனத்தில் ஏதோ ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது.

சாதூர்யமாக இருவரும் அதை மறைத்து நடந்து கொண்டாலும், தங்கள் இருவருக்கிடையேயும் சிறு திரை விழுந்திருப்பதை உணர்ந்தே இருந்தனர்.

வேம்பநாட்டுக் காயலின் அழகில் மனம் சொக்கித் தான் போகும். ஆனால், தற்போதிருக்கும் மனநிலையில் இருவருக்குமே ஏனோ, மனம் அதன் அழகில் சற்றும் இலயிக்கவில்லை.
 திருமணமான நாளிலிருந்து இதுவரை அவள் கண்டிராத பேரமைதியுடன் இருந்தான்.

அதற்காக அவளிடம் பேசாமல் மௌனியாக இல்லை. தேவையான அளவிற்குப் பேசவே செய்தான். ஆயினும், கண்களில் எப்போதும் இருக்கும் அந்தக் குறும்புத்தனமும், உதடுகளில் நிறைந்திருக்கும் புன்னகையும் துளியும் தலைகாட்டவில்லை.

முன்தினம் அனைவரும் மொட்டைமாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போதிருந்தே அவனது முகம் சிந்தனை வயப்பட்டிருப்பதை அவள் கண்டுகொண்டாள்.

 ஸ்ரீராமிற்குச் சொன்ன பதிலை அவன் நம்பிய போதும் சஹானாவின் மனம் அதை ஒப்பிக் கொள்ளவில்லை. பிரபு அப்படி ஆஃபீஸ் பிரச்சனையைப் போட்டுக் குழப்பிக் கொண்டு, அவள் கண்டதேயில்லை.

அப்படியிருக்க அவனது யோசனைக்கு என்ன காரணம்? எதுவாக இருந்தபோதும் தானாகச் சென்று கேட்கப் போவதில்லை. சொல்லக்கூடிய விஷயமெனில் அவனே சொல்வான் என்று தனக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டாலும், நிச்சயம் தன்னிடம் பேசுவான்என்று எதிர்பார்த்தாள்.

படகு வீட்டின் ஜன்னலருகில் அமர்ந்து இருளில் வெளியே தெரிந்த காயலை வெறித்துக் கொண்டிருந்தாள் சஹானா.

தலைக்குப் பின்னால் கைகளைக் கோர்த்து, கண்களை மூடியபடி சிட் அவுட் போன்றிருந்த இடத்தில் அமர்ந்திருந்தான் பிரபு.

மனத்திற்குள் நடந்து கொண்டிருக்கும் போராட்டம் ஒரு முடிவிற்கு வரவேண்டும்மெனில் சஹானாவிடம் மனம்விட்டுப் பேசியே ஆகவேண்டும்.

தேன்நிலவு என்று அவளை அழைத்து வந்துவிட்டு தனது வாழ்க்கையின் இருள் சூழ்ந்த பக்கத்தை அவளுக்குச் சொன்னால் அதை எப்படி எடுத்துக் கொள்வாள்?

உடனே நம்பிவிடுவாளா? அல்லது நான் விளையாடுகிறேன் என்று நினைத்துச் சிரிப்பாளா?’
யோசிக்க யோசிக்க மனம் மேலும் குழம்பியது தான் மிச்சம்.

எழுந்து அந்த இட்த்திலேயே குறுக்கும் நெடுக்குமாக சிறிதுநேரம் நடந்தான். கடைசியில் அவளிடம் பேசியே தீருவது என்ற தீர்மானத்துடன் ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவன், அறைக்குள் வந்தான்.

சஹி!” என்று அவளது தோளில் கைவைத்தான்.

ம்என்றபடி எழுந்தாள்.

அவளது கண்களை நேராகப் பார்த்தவன், “உன்கிட்ட கொஞ்சம் மனசுவிட்டுப் பேசணும்என்றான்.

அவனது குரலிலிருந்த தீவிரம், அவளுக்குச் சற்று பயத்தைத் தோற்றுவித்தது.
சொ..ல்லுங்கஎன்றாள்.

அவளது கரத்தைப் பற்றி அழைத்துச் சென்று கட்டிலில் அமரவைத்து விட்டு, அவனும் அமர்ந்தான்.

பற்றியிருந்த அவளது கரத்தைத் தனது கன்னத்தில் பதித்துக் கொண்டான். அவனது செய்கைகளைக் காண அவளுக்கு வயிற்றில் பயப்பந்து உருண்டது.

பிரபு!” என்று தவிப்புடன் அழைத்தவள், அவனது கன்னத்தை மற்றொரு கரத்தால் தடவிக் கொடுத்தாள்.

அவளது கரத்தைப் பற்றி முத்தமிட்டவன், “சஹி! நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன். நான் கேட்கறதுக்கு நீ உன் மனசுல தோணுறதை மறைக்காம சொல்லணும். அதேபோல எந்த நிலையிலும் என்னை நீ வெறுத்துடக் கூடாது…” என்று உருக்கமாகச் சொன்னான்.

ஏன் பிரபு இப்படியெல்லாம் பேசறீங்க? எனக்குப் பயமா இருக்குஎதுவாக இருந்தாலும் தயவு செய்து நேரடியா சொல்லுங்க ப்ளீஸ்!”

அச்சமும், தவிப்பும் இரண்டறக் கலந்திருந்தது அவளது குரலில்.

நீ சந்தோஷமா இருக்கியா சஹானா? நான் உனக்கு ஏதாவது குறைவச்சிருக்கேனா?”
படபடக்கும் இதயத்துடன் கேட்டவனது கண்கள் பரிதவிப்பைக் காட்டியது.

என்னவோ ஏதோ என்று எண்ணி பயந்தவளுக்கு இந்தக் கேள்வி சற்று நிம்மதியைக் கொடுத்தது. ஆனாலும், இதற்காகவா அப்படி யோசித்துக் கொண்டிருந்தான் என்ற எண்ணமும் அவளுக்குத் தோன்றாமலில்லை.

சற்று இலகுவாக மூச்சு விட்டவள், “இதைக் கேட்கவா இத்தனை ஆர்ப்பாட்டம்?” என்றபடி கணவனைக் கூர்ந்து பார்த்தாள்.

ப்ளீஸ் சொல்லு சஹானா!”

சிறு குழந்தையின் பிடிவாதம் அவனது பேச்சில் தென்பட்டது.

சற்று அவனை நெருங்கி வந்து அவனது கன்னத்தில் முத்தமிட்டவள், “எனக்கு எந்தக் குறையும் இல்ல. சந்தோஷமா இருக்கேன் போதுமா…” தலையைச் சாய்த்து சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அவளையே வெறிக்கப் பார்த்தவன், “நிஜமாத்தானே சொல்ற?” எனக் கேட்டான்.

இதுல எதுக்குப் பொய் செல்லப்போறேன். உண்மையா சொல்றேன்.”

இல்லஎனக்கு…” என்று சற்று தடுமாறினான்.

சஹானாவிற்கு அவனது போக்கே வித்தியாசமாகத் தெரிந்தது. இந்தத் தயக்கமும், தவிப்பும் அவனுக்குப் புதிது. அவனது குணம் அதுவல்லவே!

நே..த்து உங்க வீட்ல எல்லோரும் வர்ஷா அண்ணி வளைகாப்பைப் பத்திப் பேசினாங்க. வீட்ல ஒவ்வொருத்தரும் ரொம்ப அன்னியோன்யமா, பொறுப்பாபாசமா சேர்ந்து பேசி முடிவெடுக்கறதைப் பார்த்தேன். எனக்கு ரொம்ப சங்கடமா இருந்த்து சஹி!

நம்ம வீட்ல ஒருநாள் கூட இப்படி நாம கலந்து பேசி எதுவும் செய்யறது இல்லஇப்பல்லாம் டின்னர் சேர்ந்து சாப்பிடுறதுக்குக் கூட நீ தானே காரணம். இப்படிப்பட்ட குடும்பத்திலேயிருந்து வந்த நீ எப்படி என்னை ஆரம்பத்துல சகிச்சிகிட்ட?”

மனத்திற்குள் இருந்ததை மளமளவென கொட்டித் தீர்த்தான்.

சஹானா ஆழ்ந்த பார்வையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

உனக்குத் தெரியுமா? தேவி சொல்றா, அவளுக்கு ஸ்ரீ மாதிரி ஒரு அண்ணன் வேணுமாம். அடுத்த ஜென்மத்துல, அவனுக்கே தங்கையா பிறக்கணுமாம்நான் அவகிட்ட பிரியமா இருந்திருந்தா இப்படிப் பேசியிருக்கமாட்டா இல்ல…”

அனைவரிடமும் உருட்டி மிரட்டி பேசிக்கொண்டு, கம்பீரமாக வளைய வருபவன் இன்று சிறு குழந்தையாக மாறி, மனத்திலிருக்கும் ஆற்றாமையைக் கொட்டிக் கொண்டிருப்பதை நெகிழ்ச்சியுடன் பார்த்தாள் அவள்.

ஏதாவது சொல்லு சஹானா!” என்றான் தவிப்புடன்.

லேசாக முறுவலித்தபடி, “அது நாங்க வளர்ந்த முறை. நீங்க வளர்ந்த முறை வேறஅவ்வளவு தான் காரணம்என்று தோள்களைக் குலுக்கினாள். அதோட, உங்களை நான் சகிச்சிகிட்டேன்னு எப்படிச் சொல்றீங்க? நான் உங்களைப் பிடிச்சித்தான் கல்யாணம் செய்துகிட்டேன்.

உங்ககிட்ட இருக்கற நல்ல குணங்களை மட்டும் தான் நான் பார்த்தேன் பிரபு. குறைன்னு எதையும் நான் நினைக்கல. உங்ககிட்ட என்ன குறை இருக்குன்னு கேட்டா, எனக்குச் சொல்லவே தெரியாது. இதான் உண்மைஎன்றாள்.

அவளது தோள்களைப் பற்ரிக் கொண்டவன், “ஆனா, எனக்கு ஸ்ரீ மாதிரி பாசம் காட்டத் தெரியாது. உங்க அப்பா மாதிரி பொறுப்பா நடந்துக்கத் தெரியாது…” என்று பரிதவிப்புடன் சொன்னான்.

யார் சொன்னது? ரெண்டு நாளைக்கு முன்னாடி எனக்கு உடம்பு சரியில்லைன்னதும் எனக்காக பார்த்துப் பார்த்துச் செய்ததுஅதுக்குப் பேர் பாசம் தானே? உங்க வேலையெல்லாம் விட்டுட்டுமுழுசா ஒருநாள் என்கூடவே இருந்து பார்த்துகிட்டது,  
 என்மேலயிருந்த பொறுப்பால தானே?

நான் கேட்காமலேயே என்னை எங்க அம்மா வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததுக்குப் பேர் தானே அக்கறை. அதிகாரமா பேசி அதட்டி, உருட்டினாலும் எனக்காக தினமும் டின்னருக்கு வீட்டுக்கு வரீங்களே, அது தானே அனுசரணைஎன்றவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

அவனது டீ ஷர்ட்டின் காலர் பட்டனைத் திருகியபடி, “உங்களோட அத்தனை வேலைக்கும் நடுவில் மறக்காம தினமும் எனக்காக பூ வாங்கிட்டு வருவீங்களேஅதுதான் காதல்! ஒரு சராசரி பொண்ணு எதிர்பார்க்கறது பணமும், நகையும் இல்லைங்ககணவனோட அன்பு.  

அந்த வகைல நான் கொடுத்து வச்சவதான்என்றவளது கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.
அவளைத் தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்ட பிரபுவும், முற்றிலுமாக நெகிழ்ந்து போயிருந்தான்.

இதையெல்லாம் மீறி அவனது மனத்திற்குள் புதைந்திருக்கும் விஷயத்தை சொன்னதும், அவளிடம் ஏற்படப்போகும் மாற்றம் என்னவாக இருக்கும்என்று நினைக்கும் போதே அவனுக்குத் திகிலாக இருந்தது.

அவளை விலக்கி நிறுத்தியவன், “இன்னும் உன்கிட்ட பேசவேண்டியது நிறைய இருக்கு சஹானா! நீ எனக்குக் கிடைச்சிருக்க ப்ரீஷியஸ் ட்ரெஷர். யாருக்காகவும், எதுக்காகவும் உன்னை இழக்க நான் விரும்பலை. அதுக்காகவே இப்போ என் மனசை உன்கிட்ட திறக்கப் போறேன்என்றவனை புரியாமல் பார்த்தாள்.

முரட்டுத்தனமா யார் சொல்றதையும் கேட்காம நான் நினைக்கறதை மட்டுமே செய்வேன். அப்படியிருந்த நான் உன்னாலதான் காதல்னா என்ன, அன்புன்னா என்னன்னு கத்துகிட்டேன்.

நான் எத்தனையோ தப்பு செய்திருக்கேன். ஆனா, நான் செய்த ஒரே நல்லதுஅம்மா உன்னைக் கல்யாணம் செய்துக்கச் சொன்னதும், ரொம்பவும் பிகு பண்ணாம சரின்னு சொன்னது தான்.

அன்னைக்கு ஒருநாள், நீ அம்மாவைப் பத்தி பேசினபோது எல்லோருக்கும் இரண்டு பக்கம் இருக்குன்னு சொன்னேன் நினைவிருக்கா…” என்று கேட்டவனைப் பார்த்து, ஆம் என்பதைப் போலத் தலையை அசைத்தாள்.

அம்மாவோட மனக்கவலைக்கும், எனக்கும் கூட சம்மந்தம் இருக்கு. வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ்ந்தேன். ஒருநாள் நானே அதையெல்லாம் என்னோட இருள் சூழ்ந்த வாழ்க்கைன்னு நினைப்பேன்னுயோசிச்சது கூட இல்லஎன்றவனைக் கலவரத்துடன் பார்த்தாள்.

No comments:

Post a Comment