Monday, August 10, 2015

உறவெனும் புதிய வானில்


அத்தியாயம் - 38

ஹோட்டல் வரவேற்பறையில் நின்று பேசிக்கொண்டிருந்த புருஷோத்தமனும், கௌரியும் காரிலிருந்து சிரித்துக் கொண்டே இறங்கிய மகனையும், மருமகளையும் பார்த்து திகைத்து நின்றனர்.

“என்னங்க பிரபு எப்போ வந்தான்?” கௌரி புரியாமல் கணவரைக் கேட்க, அவர் புரிந்து கொண்டதைப் போலச் சிரித்தார்.

“உன் பிள்ளை வந்தது சந்தோஷமா இல்லயா?” சிரித்துக் கொண்டே கேட்டார்.
“இல்லன்னு சொல்வேனா என்ன?” என்றார் கௌரி.

“நம்மள விட நம்ம மருமகளுக்குத் தான் ரொம்பச் சந்தோஷம். அங்கே பார்” என்று சஹானாவைச் சுட்டிக் காட்டினார்.

காரிலிருந்து இறங்கியவள், தனது தமக்கையை திவ்யாவின் பொறுப்பில் விட்டுவிட்டு, காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அவன் வரும் வரை நின்றிருந்தவள் கணவனுடன் இணைந்தே ஹோட்டலுக்குள் வந்தாள்.

கௌரிக்கு அதைக் காணவே அளப்பரிய சந்தோஷமாக இருந்தது. கலங்கிய விழிகளை நாசுக்காக மறைத்துக் கொண்டார்.

பெற்றோரைப் பார்த்ததும் தலையைத் தடவியபடி பிரபு சிரிக்க, சஹானா மாமியாரின் கண்களில் தெரிந்த கனிவில் நெகிழ்ந்து போனாள்.

வா என்பது போல சஹானாவை அழைத்த கௌரி தன்னோடு அவளை அழைத்துச் செல்ல, பிரபுவின் தோளைத் தட்டிக்கொடுத்த அவனது தந்தை, போகலாம் என்பது போல கைக்காட்டினார்.

கடைசி நேரத்தில் வந்து விழாவில் கலந்து கொள்ளும் மருமகனைக் கண்டதும், சஹானாவின் பிறந்த வீட்டினருக்கு பெரும் சந்தோஷம்.
வளைகாப்பு வைபவம் நல்லநேரத்தில் ஆரம்பிக்க, அனைவரது மனமும் நிறைந்திருந்தது.

வர்ஷா, சஹானா வயதையொத்த பெண்கள் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு அவளுக்கு வளையல் அணிவிக்க, வர்ஷா நாணத்துடன் அமர்ந்திருந்தாள்.
அவளது புன்னகையும், பெண்களின் கேலியையும் கண்ட பிரபாகர் முகம் சிவக்க நின்றான்.

“டேய் மாப்பிள்ளை! ஓவரா வெட்கப்படாதே… விடு. நாளைக்கு இவங்க எல்லோருடைய வீட்டுக்காரரும் வெட்கப்பட்டுகிட்டு இப்படி ஒரு ஓரமா நிக்கத்தான் போறாங்க. நாமல்லாம் பார்க்கத்தான் போறோம் என்ன சொல்ற?” என்றான் ஸ்ரீராம்.

“உங்களுக்கும் நாளைக்கு அதேதான் அத்தான்! மறந்துடாதீங்க… கூட்டத்தில் ஒருத்தி ஸ்ரீராமைப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.

“இதுக்கெல்லாம் அசரும் ஆளா நான்…” என்றவன் திவ்யாவைப் பார்த்து புருவத்தை உயர்த்திச் சிரிக்க, அவளது விழிகளால் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.

கிண்டலும், கேலியுமாக அவ்விடமே மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது.
வர்ஷாவை கைத்தாங்கலாங்க எழுப்பியதும், அவளோடு செல்லவிருந்த சஹானாவைப் பற்றி நிறுத்தினர்.

“புதுக்கல்யாணப் பொண்ணு நீ எங்கே போற?” என்றாள் ஒரு பெரியம்மா.

“அக்காவோட…”

“அதெல்லாம் அப்புறம் முதல்ல இங்கே வா என்று வர்ஷா எழுந்த இருக்கையிலேயே அவளைப் பிடித்து அமரவைத்தனர்.

“என்ன பெரியம்மா இது…?” அவள் புரியாமல் கேட்டாள்.

“கொண்டா கையை… அடுத்த வருஷம் உனக்கு இதேமாதிரி சீமந்தம் நடத்தணுமே அதுக்கு ஒரு முன்னோட்டம் தான்…” சிரித்துக் கொண்டே சொன்னவர், அவளது கைநிறைய வளையலை அடுக்கினார்.

முன்தின இரவில் தமக்கை பேசியதெல்லாம் நினைவு வர, கண்கள் தாமாக கணவனின் பக்கமாகச் சென்றது. அவனோ, மைத்துனன், சகலையுடன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான்.

அவனது சிரிப்பைத் தனது மனப்பெட்டகத்தில் சேகரித்துக் கொண்டாள்.
விசேஷத்திற்கு வந்த பெண்கள் அனைவருமே விதவிதமான கண்ணாடி வளையல்களை அணிந்து கொள்ள, தேவி இரு கைகளிலும் சூடியிருந்த வளையலை சேர்த்துத் தட்டிப் பார்த்தாள்.

அதன் சப்தம் அவளுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்க, இரு கைகளையும் தட்டி கைகளை விலக்கியவள், விழா நடந்துகொண்டிருந்த ஹாலின் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவனைப் பார்த்ததும், சிலையென சமைந்து நின்றாள்.

‘ஹய்யய்யோ! இவன் எங்கே இங்கே வந்தான்?’

அவனைக் கண்ட பயத்தில் மனத்திற்குள் புலம்பினாலும், அங்கிருந்து நகரமுடியாமல் நின்றிருந்தாள்.

வந்தவன் அவளைக் கடந்து, ஒரு பக்கமாக அமர்ந்திருந்த ஸ்ரீராம், பிரபாகர் இருவரது முதுகிலும் தட்டினான்.

திரும்பிய இருவரும் ஒரேநேரத்தில், “டேய் தமிழ்!” என்று சந்தோஷத்துடன் சப்தமிட்டனர்.

“ஏண்டா இதான் வர்ற நேரமா?” என்று அவனது வயிற்றில் லேசாகத் தட்டினான் பிரபாகர்.

“சாரிடா! காலைல தான் ஊர்லயிருந்து வந்தேன்” என்றான் தமிழ்.
“சரிப்பா நீ கடமை தவறாக காவல் அதிகாரின்னு ஒத்துக்கறறோம்” என்றான் ஸ்ரீ.

“என்னடா பண்றது? வேலை அப்படி… இன்னைக்கு ஈவ்னிங் திருநெல்வேலில ஒரு மீட்டிங் அதைச் சாக்கா வச்சித்தான் கிளம்பி வந்தேன். சஹி கல்யாணத்துக்கும் வர முடியல. அவளையும் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றான்.

“ஆஹா! கல்யாணத்துக்குத் தான் வரமுடியல. அதே சென்னைல தானே இருக்கீங்க. உங்ககிட்ட அட்ரஸ் இருக்கில்ல. வீட்டுக்கு வந்திருக்கலாம் இல்லயா?” என்று கேட்டுக் கொண்டே அங்கே வந்தாள் சஹானா.

“நான் என்னடா பண்ணட்டும்? அதான் இப்போ வந்துட்டேனே. கட்டாயம் உன் வீட்டுக்கு ஒருநாள் வரேன். இப்போ உன் பேமலியை எனக்கு அறிமுகப்படுத்தி வை…” என்றான் தமிழ்.

ம் என்றவள் அங்கே அமர்ந்திருந்த மாமனார், மாமியாரை அறிமுகப்படுத்திவிட்டு, “இவர் தமிழ்ச் செல்வன். அசிஸ்டண்ட் கமிஷனர். அண்ணாவுக்கும், அத்தானுக்கும் க்ளோஸ் ஃப்ரெண்ட். எனக்கு இன்னொரு அண்ணன்…” என்று அவனை, அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள்.

“அத்தை! இவர் எங்கே போனார்?” என்று பிரபுவைப் பற்றி விசாரித்தாள்.
“ஏதோ போன் வந்ததும்மா… சிக்னல் சரியா இல்லன்னு வெளியே போனான்” என்று பதிலளித்தார் கௌரி.

“ஓ! நம்ம தேவி எங்கே?” கேட்டுக் கொண்டே நாத்தனாரைத் தேடியவள், அவள் ஒரு பக்கமாக அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டாள்.

“தேவி! இங்கே வா…” என்று சப்தமாக கைநீட்டி அழைக்க, ‘ஹய்யோ! மாட்டினேன். இப்போ என்னையெலாம் அறிமுகப்படுத்தலைன்னு யாரு அழுதா?’ மனத்திற்குள் புலம்பிக் கொண்டவள், ‘உனக்குத் தேவை இதெல்லாம்’ என்று நெற்றியிலேயே இரண்டு தட்டு தட்டிக் கொண்டாள்.

உஸ்சென்று மூச்சை மூன்று நான்கு முறை ஆழ இழுத்துவிட்டுக் கொண்டு, ‘கடவுளே! இவனுக்கு நம்ம மூஞ்சி மறந்து போயிருக்கணும்’ என்று வேண்டிக் கொண்டே முகத்தைத் துடைத்தபடி சஹானாவின் அருகில் சென்றாள்.

“சொல்லுங்கண்ணி!” என்றவள் அருகில் நின்றிருந்தவனைத் தயக்கத்துடன் ஓரப்பார்வை பார்த்தான்.

“அண்ணா! இவள் தேவி. என் நாத்தனார்” என்று சஹானா அறிமுகப்படுத்த, அவன் புன்னகையுடன், “ஹலோ!” என்றான்.

அவளுக்கோ ஆச்சரியமோ ஆச்சரியம். ‘இவனுக்கு உண்மையிலேயே தன்னை மறந்துவிட்டதா என்ன? எப்படியோ மறந்து போயிருந்தால் சரி…’ என்று நினைத்தவளுக்கு, அப்போது தான் சற்று நிம்மதியாக இருந்தது.

அவனுடன் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு சஹானா சென்றுவிட, தமிழ் நண்பர்களுடன் அரட்டையில் இறங்கினான்.

விழாவை நல்லபடியாக நடத்திமுடித்த திருப்தியுடன் அனைவரும் பெரிய வட்டமாக அமர்ந்திருந்தனர். நெருங்கிய உறவினர்களைத் தவிர அனைவரும் சென்றிருக்க, ஸ்ரீராமின் திருமணத்தைப் பற்றிய பேச்சு ஆரம்பித்தது.
அதற்குள் திவ்யாதான் ஸ்ரீராமிற்காகப் பார்த்திருக்கும் பெண் என்று அனைவருக்கும் தெரிந்திருக்க, உறவுக்கூட்டம் திருப்தியுடன் தலையாட்டினர்.

“அப்புறம் என்ன கணேசா! கையோட அவங்க நிச்சயத்தையும் முடிச்சிடு. வர்ஷாக்கு குழந்தை பிறந்ததும் கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்றார் வயதில் மூத்தவரான ஒருவர்.

அதை அனைவரும் ஆமோதிக்க, சஹானாவின் புகுந்த வீட்டினரும் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டனர்.

மறுநாளே நல்ல நாள் அன்றே நிச்சயத்தை வைத்துவிடலாம் என்று நாளும் குறிக்கப்பட்டு விட்டது.

உறவுக்கூட்டமும், “அதான் இங்கேயே பேசிட்டோமே. இதையே அழைப்பா எடுத்துக்கறோம். நாங்க எல்லோரும் வந்து ஜமாய்ச்சிடலாம்” என்று சொல்லிவிட, இரு வீட்டினருக்கும் உண்டான சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

வைதேகி மகளைப் பார்த்து ஆசையுடன் கண்கலங்க, திவ்யா அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டாள்.

அன்னையின் நெகிழ்வையும், மகளின் ஆறுதலையும் பார்த்த ஸ்ரீராம் முறுவலித்தான்.

ஸ்ரீராமின் கரத்தைப் பற்றிக் குலுக்கி தனது வாழ்த்தைத் தெரிவித்த பிரபுவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ்ச் செல்வன்.

அவனைப் பார்த்ததிலிருந்தே முகம் பரிச்சயமாகத் தெரிந்தது. ஆனால் எங்கே பார்த்தோம் என்று அவனுக்குப் பிடிபடவில்லை.

தாடையைத் தடவியபடி யோசனையுடன் அமர்ந்திருந்தவன், “எக்ஸ்க்யூஸ்மீ அண்ணா! வீட்டுக்குக் கிளம்பலாமான்னு அண்ணி கேட்கச் சொன்னாங்க. நிறைய வேலை இருக்காம்…” என்று பிரபுவிடம் பேசிக்கொண்டிருந்த தேவியின் குரலில் நினைவுக்குத் திரும்பினான் தமிழ்.

தமிழ் கடைசியாக வெளியே வந்தபோது, யாரிடமோ பேசி முடித்து மொபைலை அணைத்த தேவி, அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
பதிலுக்குச் சிரித்தவன், “இன்னும் நைட்ல லேட்டாத்தான் வீட்டுக்குப் போறீங்களா மிஸ்.தேவி” என்றான்.

அவளுக்குக் குப்பென உடலில் சூடு பரவியது.

‘அப்போ இவன் எதையும் மறக்கல, என்னையும் மறக்கல. இவ்ளோ நேரம் தெரியாத மாதிரி நடிச்சிருக்கான்’ அவளுக்கு எங்கேயாவது முட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

”ஹலோ! சஹானா உங்களைக் கூப்பிடுறா. கிளம்புங்க” சொல்லிவிட்டு அவன் சென்றுவிட, தேவி தவிப்புடன் சென்றாள்.

‘நடந்ததை இவன் யாரிடமும் சொல்லாமல் இருக்கணும் கடவுளே!’ மனத்திற்குள் வேண்டிக் கொண்டே காரில் ஏற, அவன் பைக்கிக் அமர்ந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment