அத்தியாயம் - 39
“சஹி! நீயாவது மாப்பிள்ளைகிட்ட சொல்லக்கூடாதா? நிச்சயதார்த்தம் முடிஞ்சதுமே கிளம்பணுமா? இருந்து நாளைக்கு எல்லோரும் ஒண்ணா கிளம்பக்கூடாதா?”
சுகுணா, ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டிருக்க, சஹானா தண்ணீர் பாட்டிலை நிரப்பிக் கொண்டிருந்தாள்.
“அம்மா! அவருக்கு தலைக்கு மேல வேலை இருக்கு. அவர் வளைகாப்புக்கு வந்ததே அதிசயம். இதுல அண்ணாவோட நிச்சயதார்த்தத்திலும் கலந்துகிட்டாரேன்னு சந்தோஷப்படுங்க. கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாலயே வந்திடுவார்… சரியா” என்று அன்னையைச் சமாதானப்படுத்தி விட்டு தண்ணீர் பாட்டிலுடன் சென்றாள்.
“நம்ம ஆதங்கத்தை நாம சொன்னா, இவள் சமாதானம் சொல்லிட்டுப் போறா. நல்லப் பொண்ணு!” குறையாகச் சொன்னாலும், மகளை நினைத்து அவருக்குப் பெருமையாகத்தான் இருந்தது.
“எல்லாம் தெரிஞ்சது தானே. அந்தமட்டும் சந்தோஷமா நம்ம குழந்தையை வச்சிருக்காரில்ல. அதுல எந்தக் குறையும் இல்லாம தானே இருக்கா. அதை நினைச்சிக்க…” பரிமளம் தம்பி மனைவிக்கு ஆறுதல் சொன்னார்.
“அதென்னவோ உண்மைதான் அண்ணி! அந்த வகைல சஹி ரொம்பக் கொடுத்துவச்சவ…” என்று பெருமிதத்துடன் சொன்னார் சுகுணா.
பிரபு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தான்.
“பிரபு! அடுத்தமுறை நீ வந்து நிதானமா தங்கிட்டுப் போறா மாதிரி வரணும். இப்படி அவசரமா கிளம்பி ஓடக்கூடாது” ஸ்ரீராம் சொல்ல, “நிச்சயமா உன் கல்யாணத்துக்கு வந்து ஒருவாரம் தங்கறேன் ஸ்ரீ” என்று சிரித்தான்.
“பிரபா! குழந்தை பிறந்ததும் எனக்கு சொல்லுங்க. உடனே வந்திடுறேன்.”
“உனக்குச் சொல்லாமலா பிரபு! நிச்சயமா. நீ இந்த ஃபங்ஷனுக்கு வந்ததே எனக்கு ரொம்பச் சந்தோஷம்” என்றான் பிரபாகர்.
சிரித்தவன், “தேவி எங்கே காணோம்?” என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.
“ஆமாம், காலைல இருந்து சத்தமே காணோமே… என்ன பண்றா?” – கௌரி.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் மாடிக்குப் போனா…” சஹானா சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாடியிலிருந்ந்து இறங்கி வந்துகொண்டிருந்தாள் தேவி.
அவளைப் பெயர் சொல்லிஅழைத்தும் ஏதோ கனவில் நடப்பதைப் போலச் சென்று கொண்டிருந்தாள் தேவி.
“என்னாச்சு இவளுக்கு? கூப்பிடுறதைக் கூட காதில் வாங்காம போற?” மகளின் போக்குப் புரியாமல் சொன்னார் கௌரி.
“ஏய்! தேவி! என்று வர்ஷா அவளைப் பிடித்து நிறுத்தினாள்.
என்னவென்று புரியாமல் விழித்தவள், “என்னண்ணி?” என்று கேட்டாள்.
“ம், நொன்ன அண்ணி. உன்னை எவ்வளவு நேரமா கூப்பிடுறாங்க. நானும் வீட்டுக்கு வந்ததில இருந்து பாக்கறேன்… மயங்கி மயங்கி நிக்கிற…” என்று அதட்டலாகக் கேட்டாள் வர்ஷா.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல…” என்றவளிடம், “தேவி! உன் அண்ணன் ஊருக்குக் கிளம்பறார். பாசமலரைப் பார்க்காம கிளம்ப மனசில்லையாம். சீக்கிர வந்து வழியனுப்புமா!” கிண்டலாகச் சொன்னான் ஸ்ரீராம்.
“உங்களை விடவா நாங்க பாசமலராகிட்டோம்?” என்று கழுத்தை நொடித்தவள், “கிளம்புண்ணா! நாங்க நாளைக்கு நைட் வந்திடுவோம்” என்று சொல்லி பிரபுவை வழியனுப்பி வைத்தாள்.
அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டவன், வருகிறேன் என்பது போல சஹானாவைப் பார்த்துத் தலையசைக்க, அவளும் இதழ்களில் முறுவலுடனும், விழிகளில் சிறு சஞ்சலத்துடனும் அவனை வழியனுப்பினாள்.
*********
நிச்சயதார்த்தத்தில் நடந்ததையே, நினைத்துக்கொண்டு படுத்திருந்தாள் தேவி. மனம் அதன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தது.
‘திடுதிப்பென இப்படி ஒரு குண்டைத் தூக்கித் தன் தலையில் போடுவானா அவன்! போடுவானா என்ன? அதான் போட்டுவிட்டானே! இதில் பதிலைச் சீக்கிரமே சொல்ல வேண்டுமாம். வேண்டாமென்று விலகி ஓடுபவளைத் துரத்திப் பிடிப்பான் போல...
தேவையா இதெல்லாம் எனக்கு! ஒழுங்காக வீட்டிலேயே இருந்திருக்கலாம். இரண்டு நாட்கள் சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று வந்ததல்லவா இப்போது தவறாகிவிட்டது. கடவுளே! எனக்கு எதற்கு இந்தச் சோதனை?’
தமிழ்ச் செல்வனை முதன்முதலாகச் சந்தித்த நாளை நினைவில் கொணர்ந்தாள்.
‘அண்ணாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகிடுச்சி… எங்களுக்கெல்லாம் நீ ட்ரீட் கொடுத்தே ஆகணும்’ என்று வற்புறுத்திய நட்புவட்டத்திடம் இப்போதைக்கு சிம்பிளாக வைக்கிறேன். கல்யாணம் முடிந்ததும் பெரிய ட்ரீட் வைக்கிறேன்’ என்று சமாளித்து காஃபி ஷாப் ஒன்றிற்கு வந்தனர்.
ஆனால், ஏனடா அங்கு வந்தோம் என்று இன்றல்லவா வருந்துகிறாள்…
அன்று காஃபிஷாப்பில் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் கல்லூரி மாணவ, மாணவிகள் தான் இருந்தனர். அதனால் ஆரவாரத்திற்கும் குறைவில்லாமல் இருந்தது.
மூன்று டேபிள்களாக அவர்கள் இடம்பிடித்து அமர, தேவி யாருக்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட, ஆளாளுக்கு ஒவ்வொன்றாக சொல்லி, வெட்டரை கலாய்த்துக் கொண்டும், மாற்றி மாற்றி ஆர்டரைச் சொல்லி அவரைக் குழப்பிக் கொண்டும் இருந்தனர்.
“ப்ளீஸ் யாராவது ஒருத்தர் ஆர்டர் எடுத்துட்டு சரியா சொன்னா, கரெக்டா கொண்டு வர ஈஸியா இருக்கும்” என்று வெயிட்டர் சொல்ல, “அப்போ தப்பா சொன்னா ராங்கா கொண்டு வருவீங்களா?” என்று சொல்லி அவரை மண்டை காய வைத்தனர்.
அந்த வயதிற்கே உரிய வேகமும், உற்சாகமும் அவர்களை ஆட்டிப்படைக்க, சிரிப்பும், கும்மாளமுமாக அந்த இடமே களைகட்டியது.
தேவியைப் பொறுத்தவரை, இது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயது. படிக்கும் நேரம் படிப்பு… மற்ற நேரங்களில் விளையாட்டு, போன், நண்பர்களுடன் அரட்டை என்று காலம் கழியும். அவளுக்கு இதுவே போதுமானதாக இருந்தது.
நண்பர்களுடன் வாரத்தில் ஒருநாள் பீச், ஒருநாள் சினிமா, ஒருநாள் ஷாப்பிங்… இதல்லாமல் அவ்வப்போது பிறந்தநாள் பார்ட்டி, கெட் டு கெதர் என்று பொழுதைக் கழிப்பாளே தவிர, மற்ற எந்தக் கேளிக்கைகளிலும், கொண்டாட்டங்களிலும் இறங்கமாட்டாள்.
அவளது நட்பு வட்டத்தில் ஆண்களும் உண்டு. அதேநேரத்தில் அவர்களை ஒரு எல்லையிலேயே நிறுத்தி வைப்பாள். அண்ணனும், தந்தையும் சம்பாதிப்பதை நண்பர்களுடன் சேர்ந்து செலவழிப்பதில் அவளுக்கொரு திருப்தி.
அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் கேட்டு சொல்லிவிட்டு, தன்னிடத்தில் வந்தமர்ந்தாள் தேவி. பக்கத்திலிருந்த தோழிகள் யாரையோ பார்ப்பதும், மெல்லியக் குரலில் பேசிக்கொள்வதுமாக இருக்க, அது என்னவென்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அவளைத் தொற்றிக் கொண்டது.
அவர்கள் பேசியதிலிருந்து எதிர் டேபிளில் அமர்ந்திருந்த இளைஞனைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று புரிந்து கொண்டாள்.
அவளால் அவனது முகத்தை நேராகப் பார்க்க முடியவில்லை. ஆனாலும், தனது வாட்சைப் பார்ப்பதும், வாசலைப் பார்ப்பதுமாக இருந்தவன் யாருடைய வரவிற்காகவோ காத்திருக்கிறான் என்று மட்டும் புரிந்தது.
“தேவி! ஆள் எப்படி?” தோழி ஒருத்தி அவளது வாயைக் கிளறினாள்.
“முகமே தெரியல… ஆள் எப்படின்னு கேட்டா, என்ன சொல்ல?” என்றாள் அவள்.
“அவ்ளோ தானே” என்ற அவளது தோழி, “ஹலோ! எல்லோ ஷர்ட்… கொஞ்சம் இப்படித் திரும்பறது…” என்று சப்தமாகக் குரல் கொடுக்க, அவனும் சட்டெனத் திரும்பிப் பார்த்தான்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத தேவி திகைத்துப் போனாள்.
அவன் திரும்பிப் பார்த்த நேரம் அவளது தோழிகள் தனக்குள் பேசிக் கொண்டிருப்பது போல பாவனை செய்ய, தேவி மட்டும் மலங்க மலங்க விழித்தபடி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நொடிகள் அவளை உற்றுப் பார்த்தவன், எத்வுமே நடக்காதது போல பழையபடி தனது வேலையைச் செய்ய, அவளால் மூச்சுவிடவே முடிந்தது.
தன்னைப் பார்த்துச் சிரித்த தோழிகளை மெல்லியக் குரலில் திட்டிவிட்டு, முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
ஓரக்கண்ணால் அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். அவ்ன் யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தான்.
“ஹலோ! நான் தமிழ் பேசறேன்…” என்றான் இவன்.
மறுமுனையில் பதில் சொன்னார்களோ என்னவோ, அதே தோழி வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், “நாங்க மட்டும் இங்கிலீஷா பேசறோம்” என்று சப்தமாகக் கேட்டாள்.
அவன் திரும்பி முறைத்த முறைப்பில் தேவிக்கு சர்வமும் நடுங்கியது. அவன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது நல்ல நேரமோ என்னவோ அவன் எதிர்பார்த்திருந்த ஆள் வந்துவிட, தேவி தப்பித்தாள்.
ஆனால், அவள் காஃபிஷாப்பிலிருந்து வெளியே வரும் போது முதுகைத் துளைத்த அவனது பார்வையை அவள் உணராமல் இல்லை.
அடுத்து வந்த இரண்டு நாட்கள் போகுமிடமெல்லாம் அவன் இருக்கிறானா என்று தேவையில்லாத பயத்துடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டாள்.
‘கண்ணில் காணாதது கருத்திலும் நிற்காது’ என்ற சொல்லுக்கேற்ப, நான்கைந்து நாட்களில் ஏறக்குறைய அந்நிகழ்ச்சியை மறந்தேவிட்டாள்.
அன்று ரியாவின் பிறந்தநாளென்று அம்மாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, ‘என்ன பரிசு வாங்கலாம்?’ என்ற யோசனையுடன் வந்துகொண்டிருந்தாள்.
சிக்னலிலும் இதே யோசனையுடன் நின்றிருந்தவள் தன்னருகில் வந்து நின்ற வெள்ளை நிற காரைத் திரும்பிப் பார்த்தாள்.
‘ஓ! காவல்துறை வாகனமா?’ நினைத்துக் கொண்டே திரும்பிப் பார்த்தாள்.
டிரைவரின் அருகில் அமர்ந்திருந்தவன் பின்னால் திரும்பி பேசிக் கொண்டிருக்க, அவனது தோளிலிருந்த மூன்று நட்சத்திரங்களையும் ஐபிஎஸ் என்ற பாட்ஜையும் பார்த்தாள்.
‘அசிஸ்டெண்ட் கமிஷனர் வண்டியா இது…?’ என நினைத்துக் கொண்டே விழிகளை உயர்த்தியவள் அதுவரை பின்னால் திரும்பிப் பேசிக்கொண்டிருந்தவன், இப்போது கையிலிருந்த பைலில் பார்வையைப் பதித்திருந்தான்.
அவ்வளவு தான் அதுவரை சாதாரணமாக நின்றிருந்தவளுக்கு, கைகாலெல்லாம் ஆட்டம் கண்டது. ‘ஹய்யோ! இவன் போலீஸ் ஆஃபிஸரா? அன்னைக்கு என் நல்ல நேரம் தப்பிச்சிட்டேன். இன்னைக்குக் கண்ணில் படாமல் தப்பிச்சிப் போகணும் கடவுளே!’ என்று வேண்டிக்கொண்டாள்.
அவளது வேண்டுதல் பலிப்பது போல சிக்னல் விழவும் வண்டியை ஸ்டார்ட் செய்தவள், அவன் சென்ற திசைக்கு எதிர்த் திசையில் சென்றாள்.
பிறந்தநாள் என்றும் பாராமல் ரியாவை ஒருபிடி பிடித்தாள். அதற்கெல்லாம் அலட்டிக் கொண்டால் தானே அவள். தேவியை ஒருவழியாகச் சமாதானப்படுத்தினாள்.
அதன்பிறகு எந்தக் காவல்துறை வாகனத்தைப் பார்த்தாலும், அவளுக்குத் திக்திக்கென அடித்துக் கொள்ளும்.
முந்தினம் நடந்த நிகழ்வின் கொதிப்பில் இருந்தாள் தேவி.
‘அண்ணியாம் அண்ணி. வந்தவுடனே அதிகாரத்தை ஆரம்பிச்சாச்சு. நீ சொன்னா உடனே கேட்கணுமா? நான் லேட்டாதான் வருவேன்…’ என்று முனகிக் கொண்டே கல்லூரி முடிந்ததும் தோழிகளுடன் கடற்கரைக்குச் சென்றுவிட்டாள்.
அடுத்த இருநாட்களும் அப்படியே நடந்துகொண்டவள் மூன்றாவது நாள் ரியாவும் அவளும் மட்டுமே மாலை காட்சி திரைப்படம் ஒன்றிற்குச் சென்றுவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நேரம் கிட்டதட்ட பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது. எதிர்பார்த்ததை விட இன்று நேரமாகிவிட்டிருக்க, வேகமாக தனது ஸ்கூட்டியைச் செலுத்திக் கொண்டிருந்தவள் சாலை நடுவில் போடப்பட்டிருந்த தடுப்பையும், காவல்துறை வாகனத்தையும் பார்த்தவள், வண்டியின் வேகத்தைக் குறைத்தாள்.
போலீசார் வழக்கமான கேள்விக் கணைகளால் அவளைத் துளைத்தனர்.
கல்லூரி அடையாள அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம், என்று அவர்களிடம் கொடுத்தவள், யாரோ பளாரென அறையும் ஓசை கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
அங்கே அவனேதான். மீண்டும் பளாரென அவனது கன்னத்தில் அறைந்துவிட்டு அவளிருந்த பக்கமாக வந்தான்.
அவளை மேலிருந்து கீழ்வரைப் பார்த்தவன், “அன்னைக்குக் காஃபி ஷாப்பில்…” அவன் முடிக்கும் முன், “சார் அது நான் இல்ல சார்! என் ஃப்ரெண்ட் சார்…!” என்று படபடத்தாள்.
“படிச்ச பொண்ணு மாதிரியிருக்க, அறிவில்ல… ஹெல்மெட்டைத் தலைல மாட்டச் சொன்னா, கண்ணாடிக்கு மாட்டி வச்சிருக்க… உடைஞ்சிடும்னா?”
“இல்ல சார்...!” என்றவள் வேகமாக எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டாள்.
அவன் புஸ்சென மூச்சுவிட்டு முறைத்தான்.
“இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் இன்னொரு முறை இப்படி நைட்ல லேட்டா சுத்தறதை பார்த்தேன். தூக்கி உள்ளே வச்சிடுவேன்… என்றான் மிரட்டலாக.
பயத்துடன் அவனைப் பார்த்தாள்.
“என்ன?” என்றான் மிடுக்குக் குறையாமல்.
“இன்னைக்குத்தான் சார் இப்படி…” என்றவள் அவனது முறைப்பைக் கண்டு பாதியில் நிறுத்தினாள்.
“நீ இன்னைக்குத் தான் மாட்டியிருக்க… நான் உன்னை ரெண்டு மாசமாவே வாட்ச் பண்ணிட்டுத்தான் இருக்ககேன். உங்களையெல்லாம் இப்படித் தண்ணி தெளிச்சி விட்டுட்டு வீட்ல இருக்கவங்க என்ன பண்றாங்க? ஃப்ரெண்ட்ஸ், ஆட்டம் பாட்டம்னு திரியறது… இந்த நேரத்துல எங்கேயிருந்து வர்ற? ஏதாவது சொன்னா பெண்ணுரிமை, சம உரிமைன்னு பேசறது…” என்று சீறினான்.
சற்றுநேரம் அமைதியாக நின்றிருந்தாள். என்ன நினைத்தானோ… “அவங்க அட்ரஸை வாங்கிகிட்டு அனுப்பிவிடுங்க…” என்று அருகில் நின்றிருந்த பெண் போலீஸிடம் சொல்லிவிட்டு, ரோட்டைக் கடந்து எதிர்திசைக்குச் சென்றான்.
விட்டால் போதும் என்று வீட்டிற்குப் புறப்பட்டவளுக்கு, இப்போது சஹானா சொன்ன அனைத்தும் சரி என்று தோன்றியது. நேரத்தோடு அவள் வீட்டிற்கு வருவதைப் பற்றி சஹானா கேட்டபோது மனம் உறுத்தினாலும், நடந்ததைச் சொல்லும் தைரியமில்லாமல் அமைதியாக இருந்தாள்.
அன்றுதான் அவனை கடைசியாகப் பார்த்தது. அதன்பிறகு அவனைக் காணும் சந்தர்ப்பம், வர்ஷாவின் வளைகாப்பில் தான் நிகழ்ந்தது.
அன்று காலை நடந்த திவ்யா-ஸ்ரீராமின் நிச்சயதார்த்தத்திற்கும் வந்திருந்தான்.
அவன் ஃப்ரெண்டோட நிச்சயதார்த்தம்னு வந்தான்… அதோடு அவள் அமைதியாக இருந்திருக்கலாம். சாப்பிட்டுவிட்டு கையலம்ப வந்தவனைப் பார்த்து சிரிப்பானேன்? இப்போதும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பானேன்?
கையைத் துடைத்தபடி, “படிப்பெல்லாம் எப்படி போகுது தேவி?” உரிமையுள்ளவன் போலக் கேட்டுக் கொண்டே, அவளருகில் வந்து அமர்ந்தான்.
“ம்…” என்று மலங்க மலங்க விழித்தவள், “நல்லா போகுது சார்!” என்றாள் தடுமாற்றத்துடன்.
“இன்னும் எத்தனை செமஸ்டர் இருக்கு?”
“இதான் லாஸ்ட்…”
“அப்புறம்…?”
“மாடலிங்…” என்றாள்.
“மாடலிங்கா…!” ஆச்சரியத்துடன் கேட்டான்.
”ம், மாடலா இல்ல. டிரெஸ் டிஸைனரா… என்னோட கிரியேட்டிவிட்டி ஊரெல்லாம் பேசப்படணும்…” என்று கண்களில் கனவுகளுடன் சொன்னாள்.
“ஓ! நல்ல விஷயம்தான். உன் கனவெல்லாம் நிறைவேறினதும் என்ன பண்ணுவ?”
அவள் புரியாமல் பார்த்தாள்.
“புரியலையா? கல்யாணம் பத்திக் கேட்டேன்…”
முகத்தை அஷ்டக்கோணலாக்கியவள், “ஐயையே… எனக்கு அந்த ஐடியாவே இல்ல” என்றாள்.
“ஆனா எனக்கு இருக்கே…” என்றான்.
“என்னது?” என்று மீண்டும் முகத்தைச் சுளித்தாள்.
“நான் கல்யாணம் செய்துக்கற ஐடியால இருக்கேன். அதுவும் உன்னை…” என்றான்.
தேவி அதிர்ச்சியுடன் விரிந்த இமைகளை மூடாமல் அவனைப் பார்த்தாள்.
“இதோ இதே பார்வைல தான் நான் விழுந்தேன். எப்போ தெரியுமா? உன்னை முதன்முதல்ல பார்த்தேனே அப்போவே… அதை என்னைக்குக் கன்ஃபார்ம் பண்ணேன்னா… என்கிட்ட லேட் நைட்ல மாட்டினபாரு அன்னைக்குத் தான்” என்றான்.
“இல்ல… நான்…” என்று திணறினாள்.
“படிப்பை முடிக்கிற வரை நான் வெயிட் பண்றேன். கல்யாணத்துக்குப் பிறகு உன் ஆம்பிஷனுக்கு நான் ஹெல்ப் பண்றேன். அது எந்த வகையிலும் ஸ்பாயில் ஆகாது. அதுக்கு கேரண்டி” என்றான்.
அவளால் எதுவுமே பேசமுடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள்.
“உனக்கு ஷாக்கா இருக்கும். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க… நான் இன்னும் ஒன் ஹவர்ல சென்னைக்குக் கிளம்பறேன். நான் ஃப்ரீயானதும் உனக்குப் போன் பண்றேன். ஓகே” என்றவன் அவளது கன்னத்தில் தட்டிவிட்டுக் கிளம்பினான்.
“சார்!” என்றாள்.
“தமிழ்… அப்படியே கூப்பிடு” என்றான்.
“ஆ… இ..ல்ல இல்ல… அது கல்யாணம்…”
“உன் படிப்பு முடியட்டும் அப்புறம்…” சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டே சென்றான்.
நடந்ததையெல்லாம் நினைத்துக் கொண்டே படுத்திருந்தவளுக்கு, இதிலிருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமல் தவிப்பாகவும், குழப்பமாகவும் இருந்தது.
No comments:
Post a Comment