Friday, December 11, 2015

உறவெனும் புதிய வானில்



அத்தியாயம் - 55

பிரபுவின் அருகில் வந்தமர்ந்த சூரஜ், “டேய்! நடந்ததையே நினைச்சிட்டு இருக்கியா? எழுந்து வா சாப்பிடப் போகலாம்…” என்றழைத்தான்.

“ம்ம்” என்றவன் அசையாமல் அமர்ந்திருந்தான்.

“போதும்டா… நீ நல்லது நினைச்சி செய்தாலும், அவளுக்கு அதெல்லாம் புரியாது” என்றான் பொறுமையாக.

இம்முறை அவனிடம், ‘ம்’ என்ற ஒற்றை வார்த்தைக்குக் கூடப் பஞ்சமாகிப் போனது.

“நீ வர்றியா இல்லயா…? எனக்கு இன்னும் நிறைய வேலையிருக்குடா!” சூரஜ் சலிப்புடன் சொல்ல, தலையைக் கோதிக் கொண்டு எழுந்தான் பிரபு.

அவன் அழைத்துச் சென்ற இடத்தைக் கண்டதும், “டேய்! நான் இதையெல்லாம் விட்டு நாளாச்சுன்னு தெரியுமில்ல…” கண்டிப்பான குரலில் சொன்னான்.

“தெரியும்டா! சஹானாவுக்கு இதெல்லாம் பிடிக்காது… அதானே. என்னமோ, உன் பொண்டாட்டிக்குப் பிடிக்காத எதையும், நீ செய்யறதே இல்லங்கற மாதிரி பேசற!” 

“என்னடா கிண்டலா…?” என்றான் எரிச்சலுடன். 

“உன்கிட்ட பெரிய தொல்லையா போச்சுடா! என் கல்யாணத்தப்போ கூட நான் இவ்ளோ சந்தோஷமா இல்ல… இன்னைக்கு ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தேன். கடைசியா எல்லாம் கெட்டுப் போச்சுன்னு… புலம்புனியேன்னு ரிலாக்ஸ் பண்ணி விடலாம்னு பார்த்தா, ஒரேடியா சலிச்சிக்கிற. நீயா இழுத்து விட்டுகிட்டது தானே.” 

“ஃப்ரெண்டாச்சேன்னு தெரியாம சொல்லித் தொலைச்சிட்டேன்…” என்றவன் கோபத்துடன் அங்கிருந்து செல்ல, சூரஜ் அவனைத் தடுத்து நிறுத்தினான்.

“என்னடா! இப்படிக் கோச்சிக்கிற? உன்னைக் கொஞ்சம் கூல் பண்ணலாம்னு நினைச்சி சொன்னேன்” பேசிக்கொண்டே திரும்பிய சூரஜ், ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.

வரவேற்பிற்கு வந்தவர்கள் அங்கே உணவருந்திக் கொண்டிருக்க, பிரபுவிடம் பேசிக்கொண்டே பார்வையைச் சுழலவிட்டான். தேவியின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை கைத்தட்டி குதித்து விளையாடிக் கொண்டிருக்க, அதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சஹானா.

“பிரபு! நீ நினைக்கிற அளவுக்கு விஷயம் பெரிசா இருக்காதுன்னு நினைக்கிறேன்…” என்றான்.

“என்னடா சொல்ற?” என்றான் கேள்வியாக.

“அங்கே பார்…” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பக்கவாட்டிலிருந்த அறையில் பளாரென அறையும் சப்தமும், கண்ணாடி பாட்டில் உடையும் சப்தமும் கேட்க, இருவரும் திடுக்கிட்டுப் போயினர்.

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, சப்தம் வந்த திசையை நோக்கி விரைந்தனர்.

அங்கே, கையில் உடைந்த பாட்டிலோடும், கண்களில் ஆவேசத்துடனும் நின்றிருந்த ஜோஷிதாவைக் கண்ட பிரபு திகைத்துப் போனான்.

மேலும், சுவரோரமாக மெல்லத் தள்ளாடி எழுந்து நின்றவனைப் பார்த்ததும், நடந்தவற்றைப் புரிந்துகொள்ள அவனுக்குப் பெரிதான யூகம் தேவைப்படவில்லை. 

அவனை அங்கே எதிர்பார்க்காத ஜோஷிதாவின் விழிகள் கண்ணீரைப் பொழிய, அவன் செய்வதறியாமல் பார்த்தான்.

தள்ளாடி எழுந்து நின்று, “ஹாய் பி..ர..பூஊஊ! நீ எப்போ வந்த?” என்றவனைத் தாங்கிப் பிடித்து நிற்க வைத்தான் சூரஜ்.

“டேய் மதன்! என்னடா இது? இப்படிக் கண்ணுமண்ணு தெரியாம குடிச்சிட்டு, என்ன வேலை செய்த…? என்று கடிந்து கொண்டான் சூரஜ்.

“நீ தப்பா நினைச்சிக்காதே சூரஜ்… நம்ம பிரபுகிட்ட ஒண்ணு கேட்கணும்… வெயிட்” என்றவன் சூரஜ்ஜின் கரத்தை விலக்கிவிட்டு தள்ளாடியபடி, பிரபுவின் அருகில் வந்தான். 

“நீ சொன்ன அதே டீலைத்தான்டா நானும் அவளுக்குச் சொன்னேன். ஆனா, ஒத்துக்க மாட்டேன்றாடா… நீ உன் லைஃப்ல செட்டில் ஆகிட்ட… ஜோ பாவம் இல்ல. அதை நினைச்சித்தான் கேட்டேன். அவள் என்னைத் தப்பாவே புரிஞ்சிக்கிறாடா…”

“டேய்…!” என்றபடி அவனது சட்டையைக் கொத்தாகப் பிடித்தான் பிரபு.

மூக்குமுட்டக் குடித்திருந்தவன், பிரபுவின் கரங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான். 

“பிரபு! அவனை விடு. வீணா பிரச்சனை வேணாம்…” என்ற சூரஜ்ஜிடம், கோபத்துடன் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.

“முதல்ல இவனை இங்கேயிருந்து இழுத்துட்டுப் போடா…” என்றவன், 
கையாலாகாத்தனத்துடன் ஜோஷிதாவைப் பார்த்தான்.

அதுவரை கண்ணீரை மட்டும் பொழிந்தவள், அவனது பார்வையைக் கண்டதும் கதறி அழத் துவங்கினாள்.

“ஜோ..ஷி..தா…!” என்றவனது வார்த்தைகள், அவனது மனத்தின் வேதனையின் வெளிப்பாடாக இருந்தது.

“பார்த்தீங்களா… என் நிலைமையை… எது நடக்கக்கூடாதுன்னு நினைச்சேனோ, அது நடந்துடுச்சி. இதைத் தானே நீங்க எதிர்பார்த்தீங்க?” கண்ணீருடன் அவள் பேசப் பேச, பிரபு பேச்சிழந்து போனான்.

இப்படியொரு சூழலை, அவன் இதுவரை கனவிலும் நினைக்கவில்லை. 

‘தன்னுடைய புத்திகெட்ட செயலால், ஒரு பெண்ணின் வாழ்க்கையை எந்த அளவிற்குச் சிக்கலாக்கி, அவளது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறோம்’ என்று நினைக்க நினைக்க, தன்னை நினைத்தே அருவருப்பாக இருந்தது.

“இனி, ஒவ்வொரு நாளையும் இதுமாதிரி எத்தனைப் பேரை சந்திக்கணுமோ…? என் வாழ்க்கை இப்படி நாசமாகிடுச்சே… இதுக்கு என்ன சமாதானம் சொல்லப் போறீங்க? தினம் தினம் இதையெல்லாம் மனசுக்குள்ளயே வச்சி புழுங்கிச் சாகறதுக்கு, இப்பவே என்னை அழிச்சிக்கிறேன்…” என்றவள், சட்டென கையிலிருந்த உடைந்த கண்ணாடி பாட்டிலால் தனது இடதுகை மணிக்கட்டை அறுத்துக் கொண்டாள்.

பதறிப் போய் அவளருகில் ஓடியவன், தனது கைக்குட்டையால் இரத்தம் வடிந்து கொண்டிருந்த அவளது மணிக்கட்டை அழுத்திப் பிடித்தான்.

“நான் எதுக்கு உயிரோட இருக்கணும்… சொல்லுங்க பிரபு…! இப்படி ஒரு வாழ்க்கைதான் வாழணும்னு முதல்லயே தெரிஞ்சிருந்தா எங்க அப்பா, அம்மா இறந்த போதே நானும் இறந்து போயிருப்பேனே…”

தனது கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதபடி பேசியவளது கரம் மெல்ல தளரத் துவங்க, “ஜோஷிதா!” என்றபடி கண்கள் பனிக்க அவளது கன்னத்தைத் தட்டினான்.

அழுத்திப் பிடித்திருந்த போதும், இரத்தம் முழுதாக நிற்கவில்லை. இனியும் தாமதிப்பது நல்லதல்ல என்று உணர்ந்தவன், அவளை அணைத்து பிடித்தபடி திரும்பியவன் அந்தப் பார்ட்டி  ஹாலின் கண்ணாடிக் கதவருகில் நின்றிருந்த சஹானாவைப் பார்த்ததும் தடுமாற்றத்துடன் பார்த்தான்.

ஒரு கரத்தால் மணிக்கட்டையும், மறுகரத்தால் அவளது இடையையும் வளைத்திருந்த கணவனையும், அவனது தோளில் கண்மூடி சாய்ந்திருந்தவளையும் மாறி மாறிப் பார்த்தாள் சஹானா.

“சஹி…!” ஆழ்ந்து ஒலித்த அவனது குரலுக்கு எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், வந்தவழியே திரும்பி நடந்தாள் சஹானா.

*************

காரிலிருந்து இறங்கி எதுவுமே பேசாமல் செல்லும் மருமகளை, பெரியவர்கள் இருவரும் வேதனையுடன் பார்த்தனர்.

கௌரியம்மாவால், அவளது மனப்போராட்டத்தையும், உணர்ச்சிக் கொந்தளிப்பையும் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. 

இத்தனை நாள்களாக மகனுக்காகப் பரிந்து பேசிய தாயின் உள்ளமே, இன்று அவனது செயலால் மருமகளின் நிலையை எண்ணிக் குமுறியது. 

‘தெரிந்தே படுகுழியில் விழுபவனை, என்னவென்று சொல்வது? எனது சுயநலத்தால்  ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்வை பலியாக்கிவிட்டேனே!’ என்று கலங்கிப் போனார் கௌரி.

புருஷோத்தமனுக்கு நெஞ்சு அடைப்பது போலிருக்க, சப்தமில்லாமல் பிபி மாத்திரையை விழுங்கிவிட்டு படுக்கையில் சாய்ந்துவிட்டார்.

ஆளுக்கொரு பக்கமாக முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு, எதுவுமே பேசாமல் இருக்கும் குடும்பத்தினரின் அமைதிக்குப் பின்னால் ஏதோ இருக்கிறது என்ற பட்சத்தில் புரிந்து கொண்டாள் தேவி.

அண்ணி அண்ணன் வராமல், தங்களுடன் வந்ததிலிருந்தே ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டாள். காரில் வரும்போதும் பின்னால் அமர்ந்திருந்த அண்ணியின் முகத்தை அவ்வப்போது கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டே வந்தாள். 

வழக்கம் போல அண்ணியின் முகதிலிருந்து அவளால் எதையும் கண்டறிய முடியவில்லை. 

கௌரியம்மா ஹாலிலிருந்த சோஃபாவில் அமர்ந்துவிட, அன்னையின் அருகில் வந்து நின்றாள் தேவி.

“அம்மா! இந்த வீட்ல என்னதான் நடக்குது? காலைல நல்லாயிருந்தா சாயங்காலம் ஏதாவது ஆகிடுது… நான் இன்னும் சின்னக் குழந்தை இல்ல இதையெல்லாம் தெரிஞ்சிக்காம இருக்க. எனக்கென்னவோ தப்பு அண்ணன் மேலதான்னு தோணுது. அண்ணியைப் பார்த்தா உனக்குப் பாவமா இல்லயாம்மா!” என்றாள் பரிதாபமாக.

“தேவி! பிரச்சனைன்னு உனக்கு யார் சொன்னது? அப்படியே இருந்தாலும், அதைப் பெரியவங்க நாங்க பார்த்துப்போம். போய்த் தூங்கற வழியைப் பாரு” என்று மகளின் வாயை அடைத்தார் கௌரி.

“ஆமா, இன்னும் அதையே சொல்லுங்க. ஓட்டுப்போடும் வயசு வந்து மூணு வருஷம் ஆகுது. நாட்டை ஆளறவங்களைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு எனக்கும் அறிவிருக்கு. வீட்ல இருக்கறதை மட்டும் இவங்க சொல்லமாட்டாங்களாம்.

நீங்க யாரும் எதுவும் சொல்ல வேணாம். என்னைக்கு இருந்தாலும், எனக்குத் தெரியாம போகப் போறதில்ல. ஞாபகம் வச்சிக்கோங்க” என்றவள் கோபத்துடன் அறைக்குச் சென்றாள்.
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதைப் போல, மகளின் வார்த்தைகளைக் கேட்டு கவலை கொண்டார் கௌரியம்மா. இன்றுவரை கணவரின் கடந்த காலத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் வளர்த்துவிட்டார்.

அதிலும், பிள்ளைகள் இருவருக்கும் இருந்த வயது வித்தியாசமும், பிரபுவுமே தங்கை என்று அவளிடம் பெரிதாக அன்பு பாராட்டியதில்லை என்பதாலும், அவளுக்கு படிப்பு, நண்பர்கள், விளையாட்டு என்று அவளது வாழ்க்கை ஓடிவிட்டது.

ஆனால், இப்போது அப்படியல்லவே. எதையும் ஓரளவிற்கு கணித்துவிடும் பக்குவத்தில் இருக்கும் மகளையும், நினைத்தபடி வாழ்ந்துகொண்டிருக்கும் மகளையும் நினைக்க நினைக்க பயம்தான் அதிகரித்தது.

அதிலும் திருமண வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் மகளை நினைத்து அச்சமாக இருந்தது. தந்தை, தமையன் இருவரது இரகசியங்களையும் அவள் அறிய நேர்ந்தால், அவளது வாழ்க்கையில் எப்படி பிடிப்பு வரும்? ஆண்வர்க்கத்தின் மீதே ஒரு நம்பிக்கையில்லா தன்மை தோன்றிவிடுமோ என்று கவலையடைந்தார்.

இதற்காகத் தானே அன்று அத்தனைத் தூரம் யோசித்து சஹானாவின் கையில் இந்த வீட்டின் பொறுப்பை ஒப்படைத்தார். அவள் புத்திசாலி! அத்தனைச் சுலபத்தில் ஏற்றுக்கொண்ட பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடியவள் அல்ல… 

தனக்குப் பின்னால் இந்த வீட்டின் பொறுப்பை மட்டுமல்லாமல், தனது மகளுக்கும் ஆதரவாக இருப்பாள் என்ற எண்ணத்தோடு, கணவரிடமும் பேசி அதனை உறுதிபடுத்திக் கொண்டார்.

இதனை நேரடியாகச் சொன்னால் அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள். அத்துடன் தனது மகனின் நல்வாழ்க்கைக்கு அவளது துணை மிகவும் அவசியம் என்று முடிவெடுத்தே வீட்டுப் பொறுப்பை அவளிடம் கொடுத்தார்.

ஆனால், அத்தனையும் கெட்டுவிடுமோ என்ற கவலைதான் இப்போது மேலோங்கியிருக்கிறது. 

அவள்தான் உறுதியாக சொன்னாளே… ‘என்னோட முடிவு எதுவா இருந்தாலும் நீங்கள்லாம் ஏத்துக்கத்தான் வேணும்’ என்று.

ஆயாசத்துடன் பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டார்.

No comments:

Post a Comment