Saturday, December 12, 2015

உறவெனும் புதிய வானில்


அத்தியாயம் - 56

கண்ணாடி உடைந்து நொறுங்கும் சப்தம் கேட்டதும் திடுக்கிட்டுப் போனவளாக சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அதற்குள் லிஃப்டும் வந்துவிட, “சஹி! யாராவது கைத்தவறி போட்டிருப்பாங்க… வா போகலாம்” என்றாள் ஷீலா.

அதற்குள் நான்கடி தள்ளி வந்திருந்த சஹானா, இடதுபுறமாகச் சென்ற காரிடாரை எட்டிப் பார்த்தாள். அங்கிருந்த பார்ட்டி ஹாலிற்குள் வெளிப்புற வாயில் வழியாக பிரபுவும், சூரஜ்ஜும் உள்ளே வருவதைக் கவனித்தாள்.

அவர்களும் சப்தம் கேட்டு வருகிறார்கள் என்று எண்ணியவள், ஷீலாவின் குரலுக்குத் திரும்பினாள்.

“ஷீலா! நீ போ… நான் கொஞ்ச நேரத்தில் வரேன்…” என்றாள்.

“இல்ல சஹி…!” என்று ஏதோ சொல்ல வந்த ஷீலாவிடம், “ஒண்ணும் பிரச்சனை இல்லை… சீக்கிரம் வந்திடுறேன்…” என்று சொல்லிக் கொண்டே இடதுபுறமிருந்த காரிடாரில் நடந்தாள்.

சற்று யோசித்த ஷீலா லிஃப்டினுள் செல்லாமல் சஹானாவிற்குப் பின்னாலேயே நடந்தாள்.

முழுக்க கண்ணாடியால் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்ட மினி பார்ட்டி ஹால் என்பதால் உள்ளேயிருந்த நால்வரையும் சஹானாவால் தெளிவாக பார்க்க முடிந்தது. இன்னமும் அருகில் சென்றவளுக்கு திறந்திருந்த கதவின் வழியாக அவர்கள் பேசுவதையும் கேட்க முடிந்தது.

பிரபு பிடித்துத் தள்ளியவனை அழைத்துக் கொண்டு, வந்த வழியாகவே சூரஜ் வெளியேற, மறுபக்கமிருந்த கதவருகில் வந்து நின்றாள் சஹானா.

வேதனையுடன், ‘ஜோஷிதா’ என்று உச்சரித்த கணவனின் முகத்தைப் பார்த்தாள். கண்களை மூடி அவன் நின்றிருந்த விதத்திலிருந்தே, ‘தான் செய்த தவறுக்காக வருந்துகிறான்’ என்பதை அவளால் உணர முடிந்தது.

ஆறுதலுடன் அவனை அணைத்துக் கொள்ளத் துடித்த கரங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். தனது உள்ளத் துடிப்பையெல்லாம் ஒதுக்கித் தள்ளியவள், ஜோஷிதாவின் முகத்தை ஆராய்ந்தாள்.

விழிகளில் தெரிந்த ஆங்காரமும், உதடுகளில் மிளிர்ந்த ஏளனப் புன்னகையும் அவளது ஆழ்மனத்தின் கசடை, வெளிச்சம் போட்டுக் காட்டியது.

வாயிலருகில் நிழலாட, விழிகளைத் திருப்பிய ஜோஷிதாவின் கண்களில், மின்னல் தெறித்தது. அதேநேரம் பிரபுவிடமும் அசைவு தெரிய, சட்டென தனது முகபாவத்தை மாற்றிக் கொண்டாள்.

அதன்பிறகு அவள் பேசிய பேச்சில் பிரபு மேலும் குறுகிப் போனதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் மணிக்கட்டை அறுத்துக் கொண்டதைப் பார்த்ததும் பதறிப் போனாள். அவளுமே இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பிரபு அவளது மணிக்கட்டை இறுக்கிப் பிடித்ததும், தான் பார்க்கிறோம் என்று தெரிந்தே அவள் தனது கணவனுடன் இழைந்ததைக் காண ஆத்திரமாக வந்தபோதும் தொடர்ந்து மௌனம் காத்தாள்.

‘தான் இவ்விடத்தில் நுழைந்தாள் விஷயத்தை மேலும் திசைத்திருப்பக் கூடிய சாமர்த்தியசாலி அவள்’ என்பதை உணர்ந்தே இருந்தாள் சஹானா.

எந்தவிதத்திலும் மற்றவர்களுக்கு அவள்மீது பச்சாதாபத்தை உண்டாக்கி… தன்னை முட்டாளாக்கிக் கொண்டு, அவளை ஜெயிக்க வைக்க சஹானா விரும்பவில்லை.

அப்போதே தான் என்ன செய்ய வேண்டும் என்பதை திடமாக முடிவெடுத்துக் கொண்டாள்.

தன்னுடைய நிலைப்பாட்டால் ஏற்படப் போகும் விளைவை சம்மந்தபட்டவர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதில் ஸ்திரமாக இருந்தாள்.

************

மணி மூன்று. இன்னமும் பிரபு வீட்டிற்கு வரவில்லை. அவனது வருகைக்காக காத்திருந்தவளுக்கோ, உறக்கம் வரவில்லை.

ஆயாசத்துடன் தரையில் அமர்ந்த நிலையில் கண்களை மூடி சோஃபாவில் தலையைச் சாய்த்தவள், தன்னையறியாமல் உறங்கிப் போனாள். பிரபு கதவைத் திறந்து விளக்கைப் போட்டதும் வெளிச்சத்தில் அரைகுறை உறக்கத்தில் இருந்தவள் பிரிய மறுத்த இமைகளை வலுக்கட்டாயமாக பிரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.

இதை எதிர்பார்த்தவன் போல அவளை நோக்கி ஆழ்ந்த பார்வை ஒன்றைச் செலுத்த, அவள் மெல்ல எழுந்து நின்றாள்.

அவனது சட்டையில் ஆங்காங்கே திட்டுத் திட்டாகப் படிந்திருந்த இரத்தக்கறையைக் கண்டதும் சிறுவலி மனத்திற்குள் எழுந்தது.

திருமணத்திற்கு முன்பே அவள் அவனுக்காக பார்த்துப் பார்த்து வாங்கிய சட்டை அது. நீண்ட மூச்செடுத்து தனது மனச்சுமையை குறைத்துக் கொள்ள முயன்றாள்.

பிரபுவின் கண்களை நேஎராகப் பார்த்தவள், “ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாச்சா?” அமர்த்த குரலில் கேட்டாள்.

“ம்ம்…”

“எப்போ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகப் போறீங்க…?” என்றாள் விடாமல்.

அவளை அழுத்தமாகப் பார்த்தவன், “மூணு நாலு நாள் அங்கேயே இருக்கட்டும்னு சொல்லிட்டேன். வீட்டுக்குப் போனா அவ தனியா தானே இருக்கணும்…” என்றான்.

“ஓஹ்! அக்கறை…” என்று கிண்டலாகச் சொன்னாள்.

“சஹானா! நான் எதுக்காக…” என்று ஆரம்பித்தவனை, கைநீட்டி தடுத்தாள்.

“குளிச்சிட்டு வாங்க… நேரமாகுது. கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் எடுங்க. காலைல ஹாஸ்பிட்டல் போகணுமில்ல…” கிண்டலாகச் சொன்னாள்.

மனத்தின் ரணம், கண்களில் பிரதிபலிக்க, “ப்ளீஸ்! நான் சொல்ல வர்றதையும் கேட்ககாம… உன் இஷ்டபடி பேசிட்டு இருக்க. என் நிலைமையைக் கொஞ்சம் புரிஞ்சிக்க. என்னைக் கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கவிடு.”

வேதனையுடன் ஆரம்பித்து எரிச்சலுடன் முடித்தான்.

அவனைக் கூர்ந்து பார்த்தவள், “கவலைப்படாதீங்க. இனிமே உங்க நிம்மதிக்குத் தடையா நான் இருக்கமாட்டேன். அதுக்கான அவசியமும் இருக்காது” என்றவளை புரிந்தும் புரியாமலும் பார்த்தான்.

சூடியிருந்த முல்லைப் பூவை எடுத்து டீபாயின் மீது கழற்றி வைத்திருந்த முத்துமாலையின் அருகில் வைத்துவிட்டு உள் அறைக்குச் சென்றாள்.
குளித்துவிட்டு படுக்கையில் விழுந்தவனுக்கு, ஒவ்வொரு நொடியும் நரகமாக இருந்தது.

ஜோஷிதாவிற்கு இப்படி ஒரு நிகழ்வு ஏற்படும், அதனால் தனது உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிவாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
அடுத்தடுத்து நிகழந்த செயல்களால், அதற்குக் காரணகர்த்தாவான தன்னையே அவன் வெறுக்க ஆரம்பித்தான்.

அவளது உயிரைக் காப்பாற்றிவிடும் நோக்கத்தில் மட்டுமே அவனது நடவடிக்கைகள் இருந்தனவே தவிர, ஜோஷிதாவின் மீது அவனுக்கு பாசமோ, நேசமோ ஏற்பட்டுவிடவில்லை.

அவளை மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் அவனது நினைவை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது சஹானா மட்டுமே. உணர்ச்சிகளைக் களைந்த விழிகளால் அவள் தன்னைப் பார்த்த பார்வையிலேயே, அவன் குற்றுயிராகி விட்டிருந்தான்.

ஜோஷிதாவிற்குத் தேவையான மருத்துவ உதவியைச் செய்திருந்த போதும், வலியால் அரற்றிக் கொண்டிருந்தாள். சிகிச்சைக்காக கொடுத்திருந்த மயக்க மருந்துகூட, அவளுக்கு முழுதான உறக்கத்தைக் கொடுக்கவில்லை.

மெல்ல அவள் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லும் வரை அவனால் அங்கிருந்து நகர முடியவில்லை.

‘இவற்றையெல்லாம் சஹானாவிடம் மனம்விட்டுச் சொல்லவேண்டும். தனது செயலுக்கான காரணத்தை புரிந்து கொண்டு ஆறுதலாகப் பேசுவாள் ‘என்ற நம்பிக்கையுடன் தான் வந்தான்.

ஆனால், சஹானாவின் பேச்சு அவனை முற்றிலுமாக உடைந்து போகச் செய்தது.

வெறுமையான மனத்துடன் அந்த அறையைச் சுற்றிப் பார்த்தான். எவ்வளவுக்கு எவ்வளவு மகிழ்ச்சியில் திளைத்திருந்தானோ, அதைவிட அதிக அளவிற்கு இப்போது மன அழுத்தத்தில் இருந்தான்.

இனிமையாக கழிந்திருக்க வேண்டிய இரவு, அவனுக்குப் பெருமளவு வேதனையை விதைத்தது.

No comments:

Post a Comment