Saturday, December 12, 2015

உறவெனும் புதிய வானில்


அத்தியாயம் - 57

“சஹி! நீ சித்தியாகிட்ட…” போனில் ஒலித்த தமையனின் உற்சாகக் குரலில், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றாள் சஹானா.

“ஹய்யோ! எவ்ளோ சந்தோஷமா இருக்குண்ணா! நம்ம வீட்டுக்குக் குட்டிப் பொண்ணு வந்தாச்சா…!” குதூகலத்துடன் ஒலித்த மனைவியின் குரலில் பட்டென கண்விழித்தான் பிரபு.

கண்களுக்குள் நெருப்புத் துண்டங்களை வைத்ததைப் போல எரிந்தது. மனத்தின் அழுத்தமும், உடலின் அசதியும் அவனைச் சோர்வுறச் செய்திருந்தன.

மனமேயில்லாமல் எழுந்து அமர்ந்தான். தனது மொபைலைத் தேடினான். அதில்தான் சஹானா பேசிக்கொண்டிருக்கிறாள் என்று புரிய, கண்களைக் ஒருமுறை அழுந்த மூடித் திறந்தான்.

“எனக்கு இப்போவே பார்க்கணும் போலயிருக்கு…” சிறுகுழந்தையென ஆர்ப்பரித்த மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

“போங்கண்ணா! நான் அங்கே வந்ததும் குட்டிப் பொண்ணை, உங்க கைல கொடுக்கவே மாட்டேன்…” என்று தன்னிலை மறந்து அண்ணனிடம் செல்லச் சண்டையிட்டாள்.

மைத்துனன், தனது மனைவியிடம் வம்பிழுக்கிறான் என்று புரிய, மெல்லப் புன்னகைத்துக் கொண்டான் பிரபு.

பேசிக்கொண்டே திரும்பியவள் பிரபு எழுந்துவிட்டதை உணர்ந்து, “அண்ணா! அவர் எழுந்துட்டார் கொடுக்கறேன்” என்று போனை அவனிடம் கொடுத்தாள்.

அண்ணனிடம் பேசும் போதிருந்த மலர்ந்த முகமும், குதூகலக் குரலும் தன்னைக் கண்டதும் மறைந்து போனதை, கவலையுடன் பார்த்துக் கொண்டே போனை வாங்கினான்.

போனை ஸ்பீக்கரில் போட்டவன், “வாழ்த்துகள்ப்பா! தாய்மாமா ஆகிட்ட போலிருக்கு… இனி பொறுப்பெல்லாம் அதிகமாகிடும்” என்று சிரித்தவனை, அவனறியாமல் பார்த்தாள் சஹானா.

“வாழ்க்கைல எவ்ளோ பொறுப்பை ஏற்க வேண்டியிருக்குப்பா… ஆனா, சுகமான சுமை மாதிரி சுகமான பொறுப்பு” என்றதை ஆமோதிப்பது போல, “ம்” என்று சொல்லிச் சிரித்தான் பிரபு.

“அப்புறம்… நீ எப்போ நல்ல நியூஸ் சொல்லப்போற?” – ஸ்ரீராம்.

சட்டென நிமிர்ந்து சஹானாவைப் பார்க்க, அவள் தனது கைவிரல்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

பெருமூச்சு விட்டபடி, தலையைக் கோதிக்கொண்டான்.

நிலைமை புரியாமல், “ஏம்ப்பா வெட்கப்படுறியா என்ன?” என்று ஸ்ரீராம் கேலி பேசினான்.

“நல்ல் விஷயம்னா உன்கிட்ட சொல்லாமலா…” என மழுப்பலாகச் சிரித்தான் பிரபு.

சிறிதுநேரம் இருவரும் வெளிப்படையாக பேசிச் சிரித்துக் கொள்வதை ஓரக் கண்ணால் ரசித்துப் பார்த்தவள் தனது மனப்பெட்டகத்தில் சேகரித்துக் கொண்டாள்.

“உங்கண்ணன் உன்கிட்ட பேசணுமாம்” என்று ஸ்பீக்கரை ஆஃப் செய்துவிட்டு, அவளிடம் கொடுத்தான்.

“சொல்லுங்கண்ணா!” என்றாள்.

“எப்போ கிளம்பி வரீங்க சஹி?”

“மேக்ஸிமம் நாளைக்குக் கிளம்பிடுவேன். தட்கால்லதான் டிக்கெட் புக் பண்ணணும்…” என்றாள்.

போனில் பதில் சொல்லிக் கொண்டிருந்த மனைவியை, நெற்றிச் சுருங்கப் பார்த்தான் பிரபு.

“என்னது நீ மட்டுமா வர்ற…?”

“ஆமாண்ணா! அவருக்கு இங்கே நிறைய முக்கியமான வேலைகள் இருக்கு. அத்தையும், மாமாவும் பேர் வைக்கற ஃபங்ஷனோட வருவாங்க. அதனால, நான் மட்டும்தான் வருவேன்…” என்றாள்.

“சரிம்மா! நீ பாரு… பத்திரமா வா. எந்த ட்ரெயின்னு சொல்லு நான் வந்து ரிசீவ் பண்ணிக்கிறேன்…” என்றான் அக்கரையுடன்.

“சரிண்ணா! அக்காவை உடம்பைப் பார்த்துக்கச் சொல்லுங்க. அப்புறம், நான் தனியா வரேன்னு அம்மாவுக்கும், அத்தைக்கும் தெரியவேணாம்” என்றாள்.

“சரிடா…” என்றவன் போனை வைத்தான்.

போனை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டுத் திருமியவளை, அழைத்தான் பிரபு.

பதில் சொல்லாமல் அவனைப் பார்த்தாள்.

“தனியாகவா போகப் போற…”

“ஆமாம்” என்றாள்.

“எப்…போ ரிட்டர்ன்?”

கேட்கும் போதே அவனது குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது.

அதை உணர்ந்த போதும், “தெரியாது…” என்றாள்.

அவளை நெருங்கி வந்தவன், “போகறதுன்னு முடிவே பண்ணிட்டியா?” உணர்ச்சிகளற்ற குரலில் கேட்டான்.

“போய்த்தானே ஆகணும். நிலைமை அப்படி இருக்கே…”

பொதுவாக அவள் கேட்ட கேள்விக்கு, அவளும் மையமாக பதிலளித்தாள்.

“என்னை ஏன்னு ஒரு வார்த்தை கேட்கணும்னு உனக்குத் தோணவே இல்லையா?”

“நானே நேரடியா பார்த்த விஷயத்தை, புரிஞ்சிக்க முடியாத முட்டாள் இல்லையே நான்…”

“இவ்ளோதானா நீ என்னைப் புரிஞ்சிகிட்டது?” ஆழ்ந்த குரலில் வருத்தத்தை உள்ளடக்கிக் கொண்டு கேட்டான்.

“உங்களை ரொம்ப நல்லா புரிஞ்சிகிட்டதால தான் இந்த முடிவு. இதுல யாருக்காகவும் நான் காம்ப்ரமைஸ் ஆகமாட்டேன்…” என்று தனது முடிவை உறுதியாகத் தெரிவித்தாள்.

“அப்பா, அம்மாவைக் கொஞ்சம்…”

அவன் முடிக்கும் முன்பே, “அவங்க என்னைக் கண்டிப்பா புரிஞ்சிக்குவாங்க…” என்றாள்.

அதற்குமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதைப் போல, அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.

இதயத்தைத் துளைத்த அவனது பார்வையை எதிர்கொள்ளத் தடுமாறியவள், “நா..ன்… என..க்..கு வேலையிருக்கு…” என்றவள், அறையிலிருந்து வெளியேறினாள்.

**********

கையில் சிறு தோள் பையும், கைப்பையுமாக தனது அறையியிருந்து வெளியே வந்த சஹானாவிடமிருந்து தோள் பையை வாங்கிக் கொண்டான் பிரபு.

“சஹி! ஒரேயொரு முறை எனக்காக கொஞ்சம் யோசிக்கக் கூடாதா…” என்றான்.

கலங்கிய விழிகளை மறைத்துக் கொண்டு, “உங்களுக்காகன்னு யோசிச்சதால தான் இன்னைக்கு இந்த முடிவை எடுத்திருக்கேன்…” என்றாள்.

இப்போதாவது தனது கண்களை நேராகச் சந்திக்கமாட்டாளா என அவன் ஏங்க, அவளோ அவனது தோளில் சாய்ந்து கொள்ளத் துடித்த மனத்தை வலுக்கட்டாயமாக திசைத் திருப்ப முயன்றுகொண்டிருந்தாள்.

‘இன்னும் சிறிதுநேரம் இங்கிருந்தால் தனது கொள்கையைக் கைவிட்டுவிடுவோம் என்று பயமாக இருந்தது. இல்லை… இதிலிருந்து நிலை பிறழ்ந்துவிட்டாலும், தனது வாழ்க்கை முழுமைக்கும் இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்’ என்ற நினைப்புடன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டாள்.

“நேரமாகுது… கிளம்பலாம்” என்றவள் அவனது பதிலுக்குக் காத்திருக்காமல் நடந்தாள்.

மாடி வராண்டாவிலேயே நின்றிருந்த தேவி, சஹானா வெளியே வந்ததும் ஓடிவந்து அணைத்துக் கொண்டாள்.

விஷயம் இன்னதென்று அவள் அறியாத போதும், இருநாள்களாக வீட்டினரின் நடவடிக்கையைக் கண்டவளுக்கு, ஏதோ விஷயம் என்ற அளவில் மட்டும் புரிந்திருந்தது.

“அண்ணி! சீக்கிரம் வந்திடுங்க. யார் நினைக்கறாங்களோ இல்லையோ, நான் உங்களை ரொம்பவேஎ மிஸ் பண்ணுவேன்…” என்ற நாத்தனாரை பரிவுடன் அணைத்துக் கொண்டாள் சஹானா.

அவளைச் சமாதானப்படுத்திவிட்டு ஹாலுக்கு வந்தவள், “நான் கிளம்பறேன் மாமா! உங்க ஹெல்த்தை பார்த்துக்கோங்க…” என்று அவரது கால்களில் விழுந்தாள்.

“உன் நல்லமனசுக்கு நீ நல்லா இருப்பம்மா!” என்றார் புருஷோத்தமன்.
பெரியவர்கள் இருவரையும் தான் அளவிற்கதிகமாக வருந்த வைக்கிறோம் என்று புரிந்த போதும், வேறுவழியில்லாமல் அமைதியாக கிளம்பினாள்.

கடவுளுக்கு முன்பாக கலங்கிய விழிகளுடன் அமர்ந்திருந்த மாமியாரின் அருகில் சென்று அமர்ந்தாள்.

கௌரியம்மாவிற்கு விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

இளக முயன்ற மனத்தை சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்தாள்.

“அத்தை! நான் கிளம்பறேன்…” என்றாள்.

கண்களை மூடி ஆழமூச்செடுத்தவர், “அம்மாடி! நீ அவசரப்படுறியோன்னு எனக்குத் தோணுது. இன்னமும் என் பிள்ளைக்காக பரிஞ்சி பேசறேன்னு நினைக்காதேம்மா… உன் வாழ்க்கை மேலேயும் எனக்கு அக்கறை இருக்கும்மா…” என்ற மாமியாரின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

“அத்தை! இது என்னோட வாழ்க்கை. யாருக்காகவும் என்னோட சந்தோஷத்தையும், உங்க மகனையும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்திட மாட்டேன்” என்று தழுதழுத்தாள்.

அவளது பேச்சைக் கேட்ட கௌரியம்மா, திக்குமுக்காடிப் போனார்.

சந்தோஷத்துடன் சஹி என்றவரது வாயைப் பொத்தினாள்.

“ப்ளீஸ் அத்தை! எனக்காக… இதை வெளிக்காட்டிக்காதீங்க…” கெஞ்சலாகச் சொன்னவள், “அவரைப் பார்த்துக்கோங்க அத்தை! இப்பகூட சொல்லியிருக்க மாட்டேன். எனக்கே மனசு கேட்கல. என் முடிவு மாறிடறதுக்கு முன்னால நான் கிளம்பறேன்…” என்று எழுந்தாள்.

“நீ சீக்கிரமே உன் வீட்டுக்குத் திரும்பி வந்து சந்தோஷமா வாழணும்மா…” என்றவர் மனநிறைவுடன் அவளது நெற்றியில் குங்குமத்தை இட்டார்.

*********

காரில் இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

கார் எக்மோர் செல்லும் சாலைக்குத் திரும்பும் முன்பாக, சஹானா அங்கு நிலவிய மௌனத்தை உடைத்தாள்.

சிக்னலில் காரை நிறுத்தியிருந்த பிரபு தான் கேட்டது சரிதானா என்பதைப் போல திகைப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

புருவச் சுழிப்புடன், “என்னது?” என்றான்.

“நான் ஜோஷிதாவைப் பார்க்கணும்” என்றாள் நிதானமாக.

“உனக்கென்ன பைத்தியமா…? அவளைப் பார்க்கணுங்கற…” என்றான் கோபத்துடன்.

“ஏன் நீங்க போய்ப் பார்க்கலையா?” பட்டென்று கேட்டாள்.

“அதுக்கு இப்ப என்ன அவசியம் வந்தது…?”

“அநாவசியமா நான் எந்த வேலையும் செய்யமாட்டேன். உங்களால முடியலன்னா, நான் ஆட்டோ பிடிச்சி போய்க்கிறேன்…” என்று கதவைத் திறந்து இறங்க முயன்றாள்.

“ஏய்! சிக்னல்ல கதவைத் திறந்து இறங்கற… இப்போ நீ அவளைப் பார்க்கணும் அதானே…” என்றவன் சிக்னல் விழுந்ததும் காரை கிளப்பினான்.

ஹாஸ்பிட்டலின் வாகன நிறுத்தத்தில் காரை நிறுத்தினான்.

ஸ்டியரிங்க அழுந்த பிடித்தபடி, “கண்டிப்பா அவளைப் பார்க்கணுமா?” என்றான்.

அவன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல், “நீங்க வரவேணாம். நான் மட்டும் போய் பார்த்துட்டு வரேன்” என்றபடி காரிலிருந்து இறங்கினாள்.

எரிச்சலுடன் அவனும் இறங்கினான்.

“சஹானா! அவள் உன்னை…”

“என்ன… கழுத்துல கத்தி வச்சிடுவாளா?” என்றாள் கோபத்துடன்.

அவன் தலைவிதியே என்பதைப் போல அவளைப் பார்த்தாள்.

“கவலைப்படாதீங்க. அவளைக் கொலைகாரியாலாம் ஆக்கிடமாட்டேன்” என்றவளை முறைத்தான்.

‘இவளுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது. அவளோட புத்தி தெரியாமல் இப்படி நடந்துக்கறாளே… ஏற்கெனவே அவள் பாம்பா கொத்துவா… இவள் தாங்குவாளா?’ என்று மனைவிக்காக வருத்தப்பட்டான்.

“ரூம் நம்பர் சொல்லுங்க…” என்றாள்.

நம்பரைச் சொன்னவன், “ஃபர்ஸ்ட் ப்ளோர். இந்த கடைசி ரூம்” என்று எதிரிலிருந்த கட்டிடத்தில் அடையாளம் காட்டினான்.

“ம், பத்து நிமிஷத்துல நானே வந்திடுறேன்” என்றவள் விடுவிடுவென நடந்தாள்.

காலையிலிருந்து பிரபுவை எதிர்பார்த்து காத்திருந்த ஜோஷிதாவிற்கு, ஏமாற்றமே மிஞ்சியது. ட்டதட்ட இருபது முறையாவது அவனுக்குப் போன் செய்திருப்பாள். அவன் போனை எடுக்கவே இல்லை.

கடைசியாக ஒருவழியாக போனை எடுத்தவன், ‘தனக்கு வேலை இருப்பதாகவும், முடிந்தால் வருகிறேன்’ என்றவன் அவள் பேச சந்தர்ப்பம் அளிக்காமல், போனை அணைத்து விட்டான்.

எரிச்சலுடன் போனை வைத்தவளுக்குக் கோபத்தில் என்ன செய்வதென்றே புரியவில்லை.

‘தான் இங்கே ஒற்றை ஆளாக அடைந்து கிடக்கிறேன். அவனுக்கு மனைவியுடன் காதல் செய்ய நேரமிருக்கிறது இங்கே வர முடியவில்லையாம்’ என்று ஆத்திரமாக வந்தது.

அவள் பிரபுவிற்குக் குறிவைத்துத் தான் அப்படி ஒரு ஏற்பாட்டில் ஈடுபட்டாள். மதனிடம் கெஞ்சி, கூத்தாடி அவனை நடிக்க வைத்தாள். பிரபு அந்த ஹாலின் அருகில் வந்ததைக் கவனித்தவள் அவனை உள்ளே வரவைக்க அவசரமாக யோசித்து அருகிலிருந்த கூல்டிரிங்க்ஸ் பாட்டிலை உடைத்தாள்.

அவளது எண்ணத்தைப் போலவே பிரபு அங்கே சென்றான். ஆனால், கூடவே சூரஜ்ஜும் இருந்ததை அவள் கவனிக்கவே இல்லை. இருவரும் சேர்ந்து வந்தது அவளுக்குச் சற்று அதிர்ச்சி என்றாலும், அதுவும் நல்லதற்கே என்று நினைத்துக் கொண்டாள்.

இதில் அவளுக்கு மேலும் ஒரு சலுகையாக சஹானாவும் அங்கே வந்ததை அவளே எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டம் இன்று தன் பக்கம் இருக்கிறது. தனது வேலையும் இதனால் சுலபமாக முடியும் சாத்தியக்கூறுகள் இருப்பதை உணர்ந்து, சந்தோஷத்தில் அவளது மனம் குதியாட்டம் போட்டது.

ஆரம்பத்தில் பிரபுவை தன்மீது பரிதாபம் கொள்ள வைப்பது மட்டும்தான் அவளது எண்ணமாக இருந்தது. சஹானா அங்கே வந்தபின்பே, ‘பிரபுவின் மீது தனக்கிருக்கும் உரிமையை அவளுக்கு உணர்த்த வேண்டும்’ என்ற எண்ணம் தோன்றியது.

அவனது மனம் வலிக்கப் பேசியவள், சட்டென கையிலிருந்த பாட்டிலால் கையைக் கிழித்துக் கொண்டாள். ஏற்கெனவே, குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருந்தவன், தனது உயிரைக் காப்பாற்ற முயல்வான் என்று நினைத்ததைப் போலவே அவனும் ஓடிவந்தான்.

வலியால் துடிப்பவளைப் போல அவனை அணைத்துக் கொண்டாள். இமைக்க மறந்து சஹானா பார்த்த பார்வையை அவளால் இப்போது கூட மறக்க முடியவில்லை.

கதவைத் தட்டும் சப்தம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தவள், அங்கே சஹானாவைக் கண்டதும் திடுக்கிட்டுப் போனாள்.

‘இவள் எங்கே இங்கே வந்தாள்? ஒருவேளை என் கணவனை விட்டுவிடு என்று கெஞ்சவா… இல்லை மிரட்டவா…? இவள் மிரட்டினால் பணிந்துவிடுவாளா இந்த ஜோஷிதா! என்னை அத்தனை இளப்பமாக நினைத்துவிட்டாளா என்ன?’ என்று மனத்தில் எழுந்த நினைவுகளை தலையை உலுக்கி ஒதுக்கி வைத்தாள்.

நினைத்ததை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அடடே! மிசஸ் சஹானா பிரபு! வாங்க வாங்க… உண்மையைச் சொல்லட்டுமா உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றாள் எகத்தாளத்துடன்.

“ஹய்யோ! உங்களை உபசரிக்க முடியாத நிலைல இருக்கும் போது வந்திருக்கீங்களே மிசஸ். பிரபு!”

சஹானா அமைதியாக நின்றிருந்தாள்.

“சரி விடுங்க… என்ன இவ்வளவு தூரம் என்னைப் பார்க்க வந்திருக்கீங்க…? ஏதாவது விசேஷமா…?” என்றவள் கிண்டலாகப் பார்த்தாள்.

அதற்கும் அவள் அமைதியாகவே இருந்தாள்.

“சே! மறந்துட்டேன் பாருங்க. நீங்களே உங்க ஹஸ்பண்ட் எப்போ கைநழுவிப் போயிடுவாரோன்னு கவலைல இருப்பீங்க… இதுல நான் வேற வெந்த புண்ணுல ஆசிடை ஊத்தறா மாதிரி பேசறேன். என்ன பண்றது… உங்களைப் பார்த்தா இப்படியெல்லாம் பேசத் தோணுது.

சரி, வந்த விஷயத்தைச் சொல்லுங்க. நீங்க இப்படி அமைதியா இருந்தா நான் என்னன்னு நினைக்கறது. நானும் தனியா இருக்கேன் வெட்டுவெட்டுன்னு இருக்கு. கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்… ஆனா ஒரு கண்டிஷன்… என் கணவரை விட்டு விலகிப் போயிடுன்னு மட்டும் பேசக்கூடாது சொல்லிட்டேன்…” என்றாள்.

அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்த சஹானாவிற்கு சப்தம் போட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது.

இதழ்கடையோரம் மலர்ந்த முறுவலுடன், “சேச்சே! நான் அப்படிச் சொல்வேனா? முடிஞ்சா நெருங்கிப் பாருன்னு சொல்லத்தானே வந்திருக்கேன்…” என்றவள் கட்டிலுக்கு எதிரிலிருந்த சோஃபாவில் சென்று அமர்ந்தாள்.

ஜோஷிதா கண்கள் இடுங்க அவளைப் பார்த்தாள்.

“என்ன உளர்ற?” என்றாள் கோபத்துடன்.

“பார்த்தியா… நீ பேசினது உளறல்னு உனக்கே தெரிஞ்சிருக்கு. முதல்ல கொஞ்சம் தண்ணி குடிச்சிக்கோ ஜோஷிதா! இவ்வளவு நேரம் மூச்சுவிடாம பேசினதுல தொண்டை காய்ந்து இருக்கும்…” என்றாள்.

“ஏய்! கொழுப்பா…? எதுக்கு இங்கே வந்த…? மிரட்டனும்னு நினைச்சி வந்தீன்னா… அதை மறந்திடு…” என்றாள்.

“நீ என்னை சரியாவே புரிஞ்சிக்கல. நான் யார்கூடவாவது மோதணும்னு நினைச்சா எனக்குச் சமமானவங்ககூடத் தான் மோதுவேன். பிஸிக்கலி, அண்ட் மெண்ட்டலி…” என்று நிறுத்தினாள்.

உறுத்துப் பார்த்த ஜோஷிதா, “என்னைப் பைத்தியம்னு சொல்றியா?” என்றாள் ஆத்திரத்துடன்.

“பார்த்தியா… ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுன்னு சொல்றது சரியா இருக்கு. நான் சொல்ல வந்ததை நீ புரிஞ்சிக்கவே இல்ல… அதனால தான் அன்னைக்கு நடிக்கிறேன் பேர்வழின்னு நல்லா சொதப்பி வச்சிருக்க…

புரியலையா… நீ நடிச்சதை நானே நம்பல. பிரபு எப்படி நம்புவார்? நான் கொஞ்சம் உன் விஷயத்துல தெளிவா இருந்ததால புரிஞ்சிகிட்டேன். பாவம் பிரபு உணர்ச்சி வசப்பட்டு இருந்ததால உன்னோட சொதப்பலெல்லாம் அவருக்குத் தெரியாம இருக்கு.

அவருக்குத் தெரியாம இருக்கற வரைக்கும் தான் உனக்கு நல்ல நேரம். அவர் யோசிச்சி புரிஞ்சிகிட்டா… உன் நிலைமை என்னாகும். ஆனா ஒண்ணு நிச்சயமா நான் உன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் ஜோஷிதா. நீ என்னைத் தாராளமா நம்பலாம்.”

குரலில் ஏற்ற இறக்கத்துடன், முகத்தில் பாவனையுடன் அவள் சொல்லச் சொல்ல ஜோஷிதாவின் முகம், எதையோ தின்ற எதுவோ போல மாறியது.
ஆத்திரத்தில் உதடு துடிக்க, “சஹானா உன்னை…” என்றவளால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.

“உன்னால, என்னை எதுவுமே செய்யமுடியாது ஜோஷிதா! உனக்கு ஒரு மாசம் டைம் இருக்கு. நான் இன்னைக்கு ஊருக்குப் போறேன். என் பிரபு மேல அவநம்பிக்கையோட போறேன்னு நினைச்சிக்காதே. அவர்மேல இருக்க காதலால, நிழலையும், நிஜத்தையும் அவர் புரிஞ்சிக்கணும்னு போறேன்.

முடிஞ்சா பிரபுவை நெருங்கிப் பாரு. உனக்குச் சாமர்த்தியம் இருந்தா உன்னோட வாழ்க்கையைக் காப்பாத்திக்கோ. இதுதான் நான் உன்னைப் பார்க்கறது கடைசி. நான் திரும்பி வரும் போது நீ எங்க வாழ்க்கைல இருந்து முழுசா விலகிப் போயிருப்ப…” என்றவள் வாசலை நோக்கி நடந்தாள்.

கதவைத் திறக்கும் முன், நின்று திரும்பிப் பார்த்தவள், “உன்னோட போன்ல இப்போ ரெக்கார்ட் பண்ணியே அதையெல்லாம் அழிச்சிடு. இல்லனா அதைக் கேட்டுக் கேட்டே உனக்கு பிபி ஏறிடப் போகுது” என்றவள் நிமிர்ந்த நடையுடன் அறையிலிருந்து வெளியேறினாள்.

No comments:

Post a Comment