Tuesday, December 15, 2015

உறவெனும் புதிய வானில்


அத்தியாயம் - 58

வெளியே வந்த சஹானா, கைகளைப் பின்னால் கோர்த்துக் கொண்டு வராண்டாவில் நடந்து கொண்டிருந்த பிரபுவைக் கண்டதும், அப்படியே நின்றாள்.

விரல்களை மடக்கியும், விரைத்த முதுகையும் அவனது நிதானமில்லாத நடையைக் கண்டதும் அருகிலிருந்த இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

கணவனின் அக்கறையில் மனம் நெகிழ்ந்து போனது. சந்தோஷத்தில் காதுகள் அடைக்க, இமைகள் அவளாது உத்தரவின்றி கண்ணீரைச் சொரிந்தன.

பத்து வினாடிகள் தான் அதற்குள் உணர்வுகளின் தாக்கத்திலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டவளாக, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, வேக நடையுடன் பிரபுவைக் கடந்து சென்றாள்.

படிகளில் மளமளவென இறங்கியவளுடன் அவனும் இணைந்து கொள்ள, அப்போதுதான் அவனைப் பார்ப்பதைப் போல வியப்புடன் பார்த்தாள்.

“உங்களை வரவேணான்னு தானே சொன்னேன்…” குரலில் சற்று காரத்தைக் கூட்டிக் கொண்டு சொன்னாள்.

எதுவும் சொல்லாமல் காரின் கதவைத் திறந்துவிட்டான்.

அவள் விடாமல், “என்ன அக்கறையா?” என்றாள்.

நின்று அவளைப் பார்த்தவன், “உன்மேல எனக்கிருக்குற ரெஸ்பான்சிபிலிட்டியையும் மறுக்க முடியுமா உன்னால…” காட்டாமாகக் கேட்டுவிட்டு காரில் அமர்ந்தான்.

‘இதைவிட தன்மீதிருக்கும் காதலை அவனால் எப்படிச் சொல்லமுடியும்?’
அவனை இறுக அணைத்துக் கொண்டு அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு. தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தாள்.

அவனருகில் அமரவும், பேசவுமே பயமாக இருந்தது. ‘தனது உறுதியெல்லாம் ரயிலேறுவதற்குள் முற்றிலுமாக உடைந்துவிடுமோ’ என்று பயமாக இருந்தது.
ஜோஷிதாவிடம் சவால் விட்டபோது இருந்த மனத்தைரியமெல்லாம், இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது.

கட்டளைக்கு அடிபணியாத இதயம் கூட, அன்புக்குப் பணிந்துவிடும். அப்படியொரு நிலையில் தான் சஹானா தவித்துக் கொண்டிருந்தாள்.

“உட்கார்றியா… நேரமாகுது” என்று குரல் கொடுத்தான்.

‘கடவுளே! ட்ரெயின் கிளம்பற வரைக்கும் என்னைக் காட்டிக் கொடுக்கறா மாதிரி எந்தச் சூழ்நிலையையும் ஏற்படுத்திடாதே…’ மனத்திற்குள் வேண்டிக்கொண்டவள் படபடத்த நெஞ்சத்துடன் காரில் அமர்ந்தாள்.

கடுகடுவென்ற முகத்துடன் காரைக் கிளப்பினான் பிரபு.

அவ்வப்போது ஓரக்கண்ணால் கணவனின் முகத்தைப் பார்த்து மனத்திற்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

‘கோபம் வந்தா கடுகடுன்னு இருக்க வேண்டியது. கொஞ்சம் சாதாரணமா முகத்தை வச்சிகிட்டா என்னவாம்…’ என்று மனத்திற்குள் அவனைச் செல்லம் கொஞ்சிக் கொண்டாள்.

இன்னும் சிறிதுநேரத்தில் அவனைப் பிரியவேண்டுமே என்ற நினைப்பு தோன்றியதுமே நெஞ்சை அடைத்தது அவளுக்கு.

அவள் தலையைச் சாய்ப்பது போல பார்த்தவள், கண்களின் வழியாக அவனை இதயத்திற்குள் நிறைத்துக் கொண்டிருக்கும் போதே, சட்டென அவன் அவளைத் திரும்பிப் பார்க்கவும், செய்வதறியாமல் திருதிருவென விழித்தாள்.

அவளை வித்தியாசமாகப் பார்த்தவன் சாலையில் பார்வையைப் பதித்தபடி, “இன்னும் டைம் இருக்கே… ஒரு காஃபி சாப்பிடலாமா?” எனக் கேட்டான்.

“ஓ! சாப்பிடலாமே…” அதே வேகத்தில் பதில் சொன்னவளை நிதானமாகப் பார்த்தான்.

எதுவுமே சொல்லாமல் காரை காஃபிடேயில் நிறுத்தினான்.

சஹானாவிற்கு அவனைப் பார்க்கும் துணிவில்லாமல் மௌனமாக காஃபியைப் பருக, பிரபு அவளையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.

காரில் ஏறி பத்து நிமிடத்திற்குப் பிறகே, தாங்கள் சென்றுகொண்டிருப்பது இரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியல்ல என்று அவளுக்குத் தெரிந்தது.

“நாம தப்பான ரூட்ல போறோம். ஆப்போஸிட் ரூட்ல போகணும்…” என்றாள் வேகமாக.

“என்னைப் பார்த்தா வழி தெரியாத முட்டாளா தெரியுதா உனக்கு…”
அவனை முறைத்தவள், “நீங்க வெளியே போக வேண்டிய வேலை இருக்கலாம் அதுக்காக… என்னையும் கூடவே கூட்டிட்டுப் போகணுமா? என்னை ஸ்டேஷன்ல விட்டுட்டு நீங்க கிளம்புங்க…” என்றாள்.

எரிச்சலுடன் மூச்சை வெளியேற்றியவன், “கொஞ்சம் வாயை மூடுறியா. நாம ரெண்டு பேரும்தான் ஊருக்குப் போறோம். புரிஞ்சிதா” என்றான்.

சஹானாவிற்கு தூக்கி வாரிப்போட்டது.

‘அச்சச்சோ இவனும் வருகிறானா… நானே எந்தநேரம் மாட்டப் போறேன்னு பயந்துட்டு இருக்கேன். இதுல இது வேறயா… சஹானா! தொலைஞ்ச நீ’ மனத்திற்குள் புலம்பிக் கொண்டாள்.

அவளது முகம் போனபோக்கைக் கண்டு, “எதுக்கு இப்படி ஓவரா ரியாக்ட் பண்ற?” என்றான்.

“நீ..ங்க எதுக்கு என்னோட வரீங்க?” ஏரக்குறைய கத்தினாள் அவள்.

“நான் ஒண்ணும் உன்கூட வரல… ரெண்டு பேரும் ஒரே இடத்துக்குப் போறோம்… அதான் பேச்சுத் துணைக்கு உன்னையும் கூட கூட்டிட்டுப் போறேன்” என்றான்.

“என் ட்ரெயின் டிக்கட்…”

“இந்நேரம் தேவி உன் டிக்கட்டை கேன்சல் பண்ணியிருப்பா…” என்றவன் காரை சூப்பர் மார்க்கெட்டின் அருகில் நிறுத்தினான்.

கைப்பையிலிருந்த செல்போனை எடுத்துப் பார்த்தாள். டிக்கெட் கேன்சல் செய்ததற்கான குறுஞ்செய்தி, அரைமணி நேரத்திற்கு முன்பே வந்திருந்து தெரிந்தது.

தான் எந்தமாதிரியான மனநிலையில் இருக்கிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.

வேகமாக வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்தாள். நினைத்தது போலவே கௌரியம்மாவே போனை எடுத்தார்.

“அத்தை! இவரும் என்னோட ஊருக்கு வரேங்கறார். இப்ப என்ன செய்றது? நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்குப் புரியுதுதானே…” என்று படபடத்தாள்.

“நான் என்ன சஹி செய்வேன்! கிளம்பற நேரம்தான் என்கிட்ட சொல்றான். அவனை எதிர்ல வச்சிகிட்டு நான் உன்கிட்ட எப்படி சொல்றது? எவ்வளவோ விஷயங்களை சமாளிச்ச… இவனைச் சமாளிக்கறதா பெரிசு.”

மருமகளுக்கு ஆதரவாகப் பேசுவதாகத் தெரிந்தாலும், பூரிப்பில் மலர்ந்த சிரிப்பை மறைத்துக் கொண்டு பேசுகிறார் என்று அவளுக்குப் புரிந்தது.

“நீங்க என்னைக் கிண்டல் பண்றீங்களா அத்தை!” கேட்டவளுக்குக் குரல் தழுதழுத்தது.

“சஹி! முடிஞ்சவரைக்கும் மனசை வெளிப்படுத்தாம இருக்க முயற்சி பண்ணு. அப்படியே அவனுக்குத் தெரிஞ்சிட்டாலும் என்ன? உன்னைத் தனியா அனுப்ப விருப்பமில்லாம தான், இருக்கற வேலையெல்லாம் விட்டுட்டு உன்னோட வர்றான்.

இதுக்கு மேல அவனோட மனசுல நீதான் இருக்கறங்கறதைச் சொல்லித் தெரியணுமா? உனக்காக, என்கிட்டயே பரிஞ்சி பேசினவன் அவன். புதுசா எதையும் நான் சொல்லப் போறதில்ல…” என்றார்.

“சரிங்கத்தை வைக்கிறேன்…” என்று போனை அணைத்தாள்.

இரண்டு மூன்று கவர்களுடன் வந்தவன் அவற்றை டிக்கியில் வைத்துவிட்டு காரில் அமர்ந்தான்.

“அம்மாகிட்ட என்கொயரி முடிஞ்சதா?” என்றவனை நிர்மலமான முகத்துடன் பார்த்தாள்.

“நீ நினைக்கிறா மாதிரி இது திடீர்னு எடுத்த முடிவில்ல… ஸ்ரீகிட்ட நீ பேசினதைக் கேட்டதுமே எடுத்தது. அப்பவே சொல்லியிருந்தா நீ ஏடாகூடமா ஏதாவது பேசுவ. அதான் சொல்லல…” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தவன், காரைக் கிளப்பினான்.

அதன்பிறகு அவள் எதற்காகவும் வாயைத் திறக்கவே இல்லை.
தாம்பரத்தில் ஒரு ஹோட்டலில் நிறுத்தியவன், “மணி எட்டாகுது. இங்கேயே டின்னரை முடிச்சிக்கலாம். இதைவிட்டா அன்டைம் ஆகிடும், நல்ல ஹோட்டல்ஸ் இருக்காது…” என்றவனுடன் இறங்கிச் சென்றாள்.

இருவருமே மிதமான உணவை உட்கொண்டு மீண்டும் பயணத்தைத் துவங்கினர்.

சிட்டியைத் தாண்டி தேசிய நெடுஞ்சாலையின் சென்றுகொண்டிருந்த போது ஓரிடத்தில் வண்டியை நிறுத்தியவன், ‘இங்கே மசாலா பால் நல்லாயிருக்கும்’ என்று ஆளுக்கொன்று வாங்கி வந்தான்.

மிதமான குளிருக்கு அது இதமாகவே இருந்தது.

வண்டியைக் கிளப்பும் போது, “நீ தூங்கறதுன்னா சாய்ந்து தூங்கு” என்றான் அக்கறையுடன்.

“நீங்களும் சேர்ந்து தூங்கறதுக்கா…” என்றாள் வெடுக்கென்று.

அவனது அக்கறையில், மெல்ல மெல்லத் தன்னிலையை இழந்துகொண்டிருந்தாள் சஹானா. அவனது அருகாமையை இரசித்தபடி, அவனது தோளில் சாய்ந்து கொள்ள துடித்த இதயத்தை அடக்க, இப்படி ஏதாவது பேச வேண்டியிருந்தது அவளுக்கு.

‘ம்ஹும்’ என்பதைப் போலத் தலையை அசைத்துவிட்டுக் காரைக் கிளப்பினான்.

இருவருக்குமிடையில் நிலவிய மௌனத்தால் தன்னைப் பந்தாடிய எண்ணங்களை புறந்தள்ள, ஸ்டீரியோவில் பாடலை ஓலிக்கவிட்டாள்.

இசைக்கு வசப்படுத்தும் சக்தி உண்டு என்பதற்கு ஏற்ப, இருவருமே தங்களை இசையில் மூழ்கடித்துக் கொண்டனர்.

ஒருமணி நேரம் கடந்ததே தெரியவில்லை. கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க, ரேடியோ சமிக்ஜை (சிக்னல்) சரிவர கிடைக்காமல் இரைய ஆரம்பிக்க, பிரபு வேறு அலைவரிசையை மாற்றினான்.

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஓ... நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ…

ஆரம்பத்தில் ஊன்றி கவனிக்காத இருவரும், பாடலின் அர்த்தம் விளங்க திகைத்துப் போயினர்.

தங்களது மனத்தை படம்பிடித்துக் காட்டுவதைப் போலிருந்த பாடலைக் கேட்டதும் பிரபு காரை சட்டென இடது பக்கமாக ஒதுக்கி நிறுத்தினான்.

அவர்களுக்குச் சற்று பின்னால் வந்துகொண்டிருந்த மினி வேன் ஒன்று, இவர்களது காரின் அருகில் வந்து நின்றது. இண்டிகேட்டரைக் கூடப் போடாமல் வண்டியை நிறுத்தியதற்காக, வேனின் டிரைவர் இவனைத் திட்டிவிட்டுச் சென்றதைக்கூட கவனிக்கும் மனநிலையில் அவன் இல்லை.

தயக்கத்துடன் சஹானாவின் முகத்தைப் பார்த்தான். அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்து வந்த வரிகள், அவளது உள்ளத்திலிருப்பதைச் சொல்வதைப் போலிருந்தன.

“ரோஜாப் பூவை... ரோஜாப் பூவை
உள்காயம் செய்தால் நியாயமா?
பேசிப் பேசி என் ஊடல் என்ன தீருமா?”

ஒவ்வொரு வரியைக் கேட்கக் கேட்க, அவளுக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

“நிலாவிலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே”

அவனது பார்வையும் மனத்தின் அழுத்தமும் கைகோர்க்க, குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

இதை எதிர்பார்க்காத பிரபு, செய்வதறியாமல் தவித்துப் போனான்.

அவளது கண்ணீரைத் துடைக்க மனம் பரபரத்தது.

ஆயினும், ‘எதுவும் செய்ய முடியாதபடி தனது கையைக் கட்டிப் போட்டிருக்கிறாளே!’ என்று நொந்துகொண்டான்.

ரேடியோவை நிறுத்தியவன், “சாரி சஹானா! அழாதே ப்ளீஸ்…” என்றான்.
கெஞ்சும் குரலில் அவன் கேட்டும், அவளால் சமாதானமாக முடியவில்லை.
அழுகை மட்டுபட்டிருந்த போதும், கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை.

No comments:

Post a Comment